''ஜோதிட சிம்மம் சுந்தரேசன்தானே?[பெயர் மாற்றப்பட்டுள்ளது]''
''ஆமா. நீங்க யாரு?''
''நான் சேலத்திலிருந்து குப்புசாமி பேசுறேன்.''
''சொல்லுங்க.''
''உங்களண்ட ஜோசியம் பார்க்க வரணும். நேரம் ஒதுக்க முடியுமா?''
''மன்னிக்கணும். இன்னும் ஆறு மாசத்துக்கு என்னால அப்பாய்ன்மெண்ட் தரமுடியாது.''
''தயவு பண்ணுங்கய்யா. நாங்க பத்துப்பேர் சேர்ந்து பத்து வருசத்துக்கு முந்தி 'சமதர்ம ஜனநாயக் கட்சி'[ஏதேனும் கட்சி இருந்தால் மன்னித்திடுக] ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் பத்துப்பேர்தான் உறுப்பினரா இருக்கோம். ரொம்பக் கவலையா இருக்கு. அதனாலதான் இதோட எதிர்காலத்தை நீங்க கணிச்சிச் சொல்லணும்னு வேண்டிக்கிறேன்.''
''பத்துப்பேர் உள்ள ஒரு அரசியல் கட்சிக்குப் பலன் சொல்லணுமா? விளையாடாதீங்க. ஃபோனை வையுங்க.''
''கொஞ்சம் பொறுங்க ஜோதிடரே. பா.ஜ.க., காங்கிரஸ்னு பெத்த பெரிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஜோசியம் சொல்லுற நீங்க எங்க சின்னக் கட்சிக்கெல்லாம் சொல்ல மாட்டீங்களா?''
''என்ன சொல்லுறீங்க?''
''ராகுலின் ஜாதகப்படி அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லேன்னாலும், அவர் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இப்போ நல்ல நேரம்கிறதால அவர் ஆட்சியைக் கைப்பற்றுவார்னு சொல்லியிருக்கீங்க. பா.ஜ.க.வுக்கு இப்போ நல்ல நேரம் இல்லேன்னும் சொல்லியிருக்கீங்க. இது முந்தா நாள் பத்திரிகைச் செய்தி.''
''அது வந்து... அந்தக் கட்சிகளோட ராசியை வைத்துக் கணிச்சிச் சொன்னேன்.''
''மனுசங்களுக்குப் பிறந்த நேரத்தைக்கொண்டு ராசி, நட்சத்திரம்னு கணக்குப் போட்டு, நல்ல நேரம் கெட்ட நேரம்னு அடிச்சி விடுறீங்க. கட்சிகளுக்கெல்லாமும் பிறந்த நேரம் இருக்கா? கட்சியை ஆரம்பிச்சவங்க அது ஆரம்பிக்கப்பட்ட நேரத்தைப் பதிவு பண்ணியிருக்காங்களா? அப்படியே பதிவு பண்ணியிருந்தாலும் அதுதான் கட்சி பிறந்த நேரம்னு சொல்லிப் படிச்சவன் படிக்காதவன்னு அத்தனை பேரையும் முட்டாள் ஆக்குறீங்களே, உங்களைக் கண்டிப்பாரில்லையா? தண்டிப்பாரில்லையா?''
பேசி முடித்து ஜோதிடரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் குப்புசாமி.
பேசிகளுக்கிடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது!

