எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

காத்திருப்போம்..... கடவுள் வருவார்!!!

டவுள் என்று ஒருவர் இருந்தால்.....

என்றேனும் ஒரு நாள் நேரில் தோன்றுவாரா?

தோன்றினால் நாம் அவரை நம்புவோமா? மாட்டோம். ஏனென்றால்.....

மனித உருவில் அவர் தோன்றினால், அந்த உருவை மனிதன் என்றுதான் நினைப்போம். கடவுள் என்று நம்ப மாட்டோம்.

ஆடு ஆடுதான். மாடு மாடுதான். புழு, பூச்சி, மரம், மட்டை, காற்று, வெப்பம் என்று எதுவானாலும் அது அதுவாகத்தான் நினைக்கப்படும். அது கடவுளே என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்தாலும் எவரும் நம்பப் போவதில்லை.

ஒரு வகையில், பேய், பிசாசு, ஆவி போன்றவைகளை நம்புவதும் கடவுளை நம்புவதும் ஒன்றுதான்.

பேய் அடித்ததாகச் சொல்கிறார்கள். நம்புவது எப்படி?

கை என்னும் உறுப்பு[புலன்] இல்லாமல் பேய் நம்மை அடிப்பது எவ்வாறு சாத்தியம்?

ஆவி பேசும் என்கிறார்கள். அது பேசுவதற்கு வாய் என்னும் புலன் வேண்டுமே! மீடியேட்டர்களின் கையை நகர்த்தி, எழுத்துகளைத் தொடச் செய்து கேள்விக்குப் பதில் தருவதாகக் கூறுவது ஊரை ஏமாற்றும் வேலை.

ஆவி என்றால் என்ன?

நீராவி போல் இருக்குமா? நிழல் உருவமா? உரசும் காற்று போலவா?

யார் படமெடுத்துக் காட்டி நிரூபித்தது?

தெளிவில்லாத நிழல் வடிவங்களையும், வெண்மையான புகைப் படலங்களையும் படமெடுத்து ஊடகங்களில் வெளியிட்டு, ஆவியின் வடிவம் என்று சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பில் கண்டது போன்ற படங்களைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு சுயமாக உருவாக்குதலும் நடக்கிறது. இதில், சிறுமியின் முகம்[படமாகவும் இருக்கலாம்] தெளிவாகத் தெரிகிறது. இதை ஆவி என்றோ பேய் பிசாசின் மறு வடிவம் என்றோ நம்புவதற்கான வாய்ப்பே இல்லை.

ஐம்புலன்களில் ஒன்றோ பலவோ இல்லாமல், ஆவியோ பூதமோ எதுவுமோ இயங்குவது நடவாத செயல்.

கடவுளும் அப்படித்தான். புலன்கள் இல்லாமல் இயங்க முடியாது. மூளை இல்லாமல் அல்லது, அது போன்ற ஏதோ ஒன்று இல்லாமல் அவரால் சிந்திக்கவும் இயலாது.

ஆனாலும்.....

அன்றுதொட்டு இன்றுவரை, ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களும் மதவாதிகளும் கடவுள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால், தனக்கே தனக்கான ஓர் உருவில் மனிதர்களின் முன்னால் தோன்றி அவர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவும்கூடும்.

நாம் காத்திருப்போம்.

ஒட்டுமொத்த மனித இனமும் காத்திருக்கலாம்!