கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

அவர்கள் புத்திசாலிகள்! நாம்.....?!

'கோயில்களைக் கட்டியவர்கள் மனிதர்கள். நான்கு வாசல்கள் வைத்து, அவற்றிற்குப் பிரமாண்டக் கதவுகளை நிறுவி, ஒரு கதவை ஆண்டு முழுக்க அடைத்துவைத்து ஒரு நாள் மட்டும் திறந்துவிட்டு, அதில் புகுந்து வெளியேறினால் செத்த பிறகு சொர்க்கம் போகலாம்' என்று கதைகட்டியவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் புத்திசாலிகள். நம்புகிறவர்கள்?
#வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்

மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளைப் பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது# -இது இன்றைய செய்தி[www.dinamalar.com/news_detail.asp?id=1928597

இது குறித்த கதை.....

//ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். 

சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. 

நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.

இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள் ஆகும். 

தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. 

பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன//

இது கதை. கதை மட்டுமே.

மிக மிக மிகப் பெரும்பாலான மக்கள் படிப்பறிவும் சிந்திக்கும் திறனுமின்றி வாழ்நாளைக் கடத்திய காலத்தில், படித்த சூட்சும புத்தி வாய்ந்த சில சுயநலவாதிகளால் கட்டிவிடப்பட்ட கதை இது.

காலங்காலமாய் ஊடகங்களின் துணையோடு செய்த பரப்புரையால், கல்வியறிவு இல்லாதவர் மட்டுமின்றி கற்றோரும் இக்கதையை நம்பும் நிலை உருவானது.

அனைத்தையும் படைத்தவர் கடவுளேயாதலால் அசுரர்களையும் அவரே படைத்தாரா? நிகரற்ற பேராற்றல் கொண்ட அவரை அசுரர்கள் எதிர்த்துப் போரிடுதல் சாத்தியமானது எப்படி? அரக்கர்களே வேண்டிக்கொண்டார்களா? என்னய்யா கதை இது? எதற்குக் காதில் பூச்சுற்றும் இந்த வேலை?

பிரம்மாவும் ஒரு கடவுளே[திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றியவர்] எனும்போது கர்வம் எனும் இழிகுணத்திற்கு அவர் உள்ளானது எப்படி?

வடக்கு வாசலில் நுழைந்து வெளியேறினால் சொர்க்கம் போகலாம் என்றால், அசுர குணம் படைத்த அத்தனை அயோக்கியர்களும் சொர்க்கத்தில் நுழையலாமே,  'பாவம் தவிர்; புண்ணியம் செய்' எனும் போதனையெல்லாம் எதற்கு?

அதென்ன ஆண்டிற்கு ஒரே ஒரு நாள் மட்டும் வைகுண்ட வாசல் திறப்பு? ஆண்டு முழுதும் திறந்து வைத்தால் சொர்க்கம் தன் கொள்ளளவை எட்டிவிடுமா? 

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

செத்தொழிந்தவுடன் மனிதர்களின் பூதவுடல் அழிந்துவிடுவதால், ஆவி வடிவில் சொர்க்க பூமியில் நுழைகிறார்களா? "ஆம்" என்றால், ஆவி வடிவிலேயே அங்கு உலாவும் பிற ஆவி மனிதர்களைக் காண முடியுமா? உரையாடுவது சாத்தியமா? ஐம்புலன்களையும் இழந்துவிட்ட நிலையில் அங்கு ஆவிகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம். கேட்பவரை, 'இவன் நாத்திகன்; அயோக்கியன்; பொய்யன்' என்றெல்லாம் திட்டித்தீர்க்காமல் மனம் திறந்து பதில் சொல்வார் யார்?
********************************************************************************************************************
வியாழன், 28 டிசம்பர், 2017

'சூப்பர் ஸ்டார்' ரஜினியிடம் ஒரு கேள்வி!

'ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்' என்பது இன்றைய நாளிதழ்ச்[தினத்தந்தி, 28.12.2017] செய்தி.
'ரஜினி ஒருகட்சி தொடங்க வேண்டும். தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்' என்பது அவருடைய ரசிகர்களின் நீண்ட கால ஆசை.

"தலைவா வா!... தலைமை ஏற்க நீ வா!!" என்று மனம் சலிக்காமல் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

ரஜினியோ, "போர் தொடங்கட்டும்", "ஆண்டவன் கட்டளையிடட்டும்", "காலம் கனிய வேண்டும்; வியூகம் வகுக்க வேண்டும்" என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் காலம் கடத்தினார். 

பொறுமை இழந்த ரசிகர்கள், "சூப்பர் ஸ்டார் வாழ்க! தன்னேரில்லாத தலைவன் வாழ்க!!" என்றெல்லாம் அவ்வப்போது முழக்கமிட்டு, ரஜினியின் மனதில் பதவி ஆசையைத் தூண்டிவிட முயன்றார்கள். முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

நேற்று[28.12.2017] தம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை ரஜினி தொடங்கி வைத்தபோது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரண்டு, "சூப்பர் ஸ்டார் வாழ்க! தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று முழக்கமிட்டு, ரஜினி இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் ஓர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்னும் தங்களின் ஆழ்மன விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் உச்சமாக, பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

இருமுடி சுமந்து சென்று சபரிமலை ஐயப்ப சுவாமியை வழிபடவிருந்த ஒரு ஐயப்ப பக்தர்[கடவுள்களை மட்டுமே வணங்கி வழிபடவேண்டியவர்] ரஜினி என்னும் மனிதரைப் பலமுறை வலம்வந்து வணங்கி வழிபட்டிருக்கிறார்.

ரஜினி நாத்திகரல்ல; சிறந்த கடவுள் பக்தர். இச்செயலை அவர் கண்டித்திருக்க வேண்டும். செய்தாரில்லை[ஐயப்ப பக்தர்களும் கண்டித்ததாகத் தெரியவில்லை]. ஏன்?!
=====================================================================================


சாமி சரணம்! ரஜினி.....

'ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்' என்பது இன்றைய நாளிதழ்ச்[தினத்தந்தி, 28.12.2017] செய்தி.
'ரஜினி ஒருகட்சி தொடங்க வேண்டும். தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்' என்பது அவருடைய ரசிகர்களின் நீண்ட கால ஆசை.

"தலைவா வா!... தலைமை ஏற்க நீ வா!!" என்று மனம் சலிக்காமல் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

ரஜினியோ, "போர் தொடங்கட்டும்", "ஆண்டவன் கட்டளையிடட்டும்", "காலம் கனிய வேண்டும்; வியூகம் வகுக்க வேண்டும்" என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் காலம் கடத்தினார். 

பொறுமை இழந்த ரசிகர்கள், "சூப்பர் ஸ்டார் வாழ்க! தன்னேரில்லாத தலைவன் வாழ்க!!" என்றெல்லாம் அவ்வப்போது முழக்கமிட்டு, ரஜினியின் மனதில் பதவி ஆசையைத் தூண்டிவிட முயன்றார்கள். முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

நேற்று[28.12.2017] தம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை ரஜினி தொடங்கி வைத்தபோது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் திரண்டு, "சூப்பர் ஸ்டார் வாழ்க! தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் வாழ்க!!" என்று முழக்கமிட்டு, ரஜினி இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் ஓர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்னும் தங்களின் ஆழ்மன விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் உச்சமாக, பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தைப் பல தடவை சுற்றிவந்து கும்பிட்டு, "நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு கூடியிருந்த ஏராள ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

இருமுடி சுமந்து சென்று சபரிமலை ஐயப்ப சுவாமியை வழிபடவிருந்த ஒரு ஐயப்ப பக்தர்[கடவுள்களை மட்டுமே வணங்கி வழிபடவேண்டியவர்] ரஜினி என்னும் மனிதரைப் பலமுறை வலம்வந்து வணங்கி வழிபட்டிருக்கிறார்.

ரஜினி நாத்திகரல்ல; சிறந்த கடவுள் பக்தர். இச்செயலை அவர் கண்டித்திருக்க வேண்டும். செய்தாரில்லை[ஐயப்ப பக்தர்களும் கண்டித்ததாகத் தெரியவில்லை]. ஏன்?!
=====================================================================================

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

'இது'தான் அது! 'அது'தான் இது!!

'உறக்கம்’ என்பது ‘தற்காலிக’ மரணம்; மரணம் என்பது ‘நிரந்தர’ உறக்கம் என்கிறது அறிவியல். ஆன்மிகவாதிகளோ, மரணம்  ஒரு தற்காலிக உறக்கம்தான் என்கிறார்கள். எது சரி?
நாம் உறங்கும்போதுகூட, நம் மூளை உறங்குவதில்லை. அது, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். [now it's known that, according to the Harvard Medical School, the brain is always in an active state whether the body is sleeping or awake (specific groups of brain structures control the body's functions at different times).] 

ஆயினும், உறக்கத்தின் தேவை என்ன என்பதுபற்றி அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை[’Yet even experts who've dedicated their lives to the science of sleep confess they don't really understand why we sleep or why we seem to need it so badly’ -CANADA.com]

இருப்பினும், உறக்கம் பற்றிய ஆய்வுகளும், கண்டறிதல்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

'வேகமான விழி அசைவையும் [REM], அவ்வாறான அசைவு இன்மையையும் [NonREM] அடிப்படையாகக்கொண்டு, உறக்க நிலையை ஐந்தாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்' 

ஐந்தில், மூன்றையும் நான்காவதையும் மட்டும் கவனத்தில் கொள்வோம். அவற்றின் மூலம் நாம் அறியும் ஓர் நிலை.....

ஆழ்ந்த உறக்கம். [Deep Sleep]

இந்நிலை உறக்கத்தில்தான், நம் உடம்பின் தசைகளும் திசுக்களும் சீர் செய்யப்படுகின்றன. அழிந்த செல்கள் அகற்றப்படுகின்றன. மேலும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கீழே உள்ள மேற்கோளைப் படியுங்கள்.

‘Growth hormone for muscle building and weight loss and chemicals essential to the immune system are secreted during sleep, and sleep gives the body a chance to repair muscle and tissues and replace ageing and dead cells.  Sleep also gives the brain a chance to organize and archive memories.  Furthermore, sleep lowers our energy consumption, so we do not need to eat as much.’[கூகிள் உதவி]

`if you don't sleep for a very long time, you will die.’

மேற்குறிப்பிட்ட இந்த உறக்க நிலையைத்தான், ’தற்காலிக மரணம்’ என்கிறார்கள

உறக்கம் என்பது தற்காலிக மரணமா என்பது குறித்து, மாறுபட்ட பல கருத்துகள் இருப்பினும்..........

நம் ஞாபகப்படுத்தலைத் [memory] தூண்டுகிற  நியூரான்கள் செயல்படாமல் அமைதி காக்கும்போது அல்லது, அவற்றின் இணைப்பு துண்டிக்கப்படுகிறபோது, நாம் உறக்கத்தைத் தழுவுகிறோம் என்கிறது விஞ்ஞானம்.

[இணைப்பு துண்டிக்கப்பட்ட கால இடைவெளியில் அவை தம்மைப் [recharge] புதுப்பித்துக் கொண்டு சுறுசுறுப்பாய் செயல்படுகின்றன. ஒரு காலக் கட்டத்தில், புதுப்பித்தல் இயலாமல் போய் அழிந்து போகின்றன]

Some neurons, such as the histaminergic neurons of the posterior hypothalamus , become active as soon as a person is awake but are completely silent during REM sleep. They are therefore described as “wake-on” or “REM-off”. 

உறக்க நிலை பற்றி, அறிவியலறிஞர்கள் தரும் செய்திகள் இன்னும் இன்னும் நிறைய உள்ளன.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, உறக்க நிலையில், நாம் நினைவுபடுத்துவதை அல்லது சிந்திப்பதை முற்றிலுமாய் இழக்கிறோம் என்பதே.

அத்தகைய ஒரு நிலையை, ‘வெற்று நிலை’ அல்லது ஏதும் ’அறியா நிலை’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

எனவே, ஆழ்ந்த உறக்க நிலையில், அல்லது, தற்காலிக மரணத்தில் நாம் அடைவது இந்த ஏதுமற்ற வெறுமை நிலைதான்.

இந்நிலையில், இன்பம் துன்பம் என்று நாம் எதையுமே பெறுவதோ உணர்வதோ இல்லை.

நாம் நிரந்தர மரணத்தைச் சந்திக்கிற போதும் இதே வெறுமை நிலைதான் நீடிக்கிறது.

மரணத்தைத் தழுவுகிறபோது, ஆன்மா, ஆவி என்று ஏதோ ஒன்று வெளியேறுவதற்கான சாத்தியமே இல்லை என்பது உறுதிப்படுகிறது.

அவ்வாறு, உடம்பில் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்திருக்குமாயின், நாம் உறக்கதில் ஆழ்கிறபோது அதுவும் உறங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்வி தவிர்க்க இயலாதது.

உறங்கும்போது, ஆன்மா, தன்னிச்சையாக எங்கெல்லாமோ அலைந்து திரும்புகிறது என்பதெல்லாம் கலப்படமில்லாத கற்பனையாகும்.

தற்காலிக மரணமான உறக்கத்தின் போது நாம் அடைகிற வெறுமை நிலையைத்தான் மரணத்தின்போதும் [அனைத்து செல்களும் அழிந்துவிட்ட நிலை] அடைகிறோம். அத்துடன் முடிந்துபோனது நம் பிறவிப் பயன்.

இப்பதிவின் மூலம் நான் வழங்க விரும்பும் செய்தி இதுதான்..........

"செத்த பிறகும், ஆன்மாவாய் அலைந்து திரிந்து, பிறவிகள் எடுத்து, இன்பதுன்பங்கள் அனுபவித்து, இறைவனை வழிபட்டுப் பாவங்கள் நீங்கியபின் வீடுபேறு எய்துகிறோம்” என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனை; பொய்யுரை என்பதை அறிக.
=====================================================================================
வெள்ளி, 22 டிசம்பர், 2017

'திருநங்கைகள்'.....சில திகைப்பூட்டும் செய்திகள்!

ஆனந்தவிகடனின் வெளியீடான 'ஜீன் ஆச்சரியம்' வாசித்தவர்கள் இப்பதிவைப் புறக்கணித்திடுக. அந்நூலிலிருந்து கொஞ்சம் தகவல்களைத் திரட்டிப் பதிவாக்கி வெளியிட்டிருக்கிறேன். விகடனுக்கு நன்றி.
லிகள் எனப்படும் திருநங்கைகள், பிறக்கும்போதே ஒருபுறம் ஆணின் விந்தகமும் மறுபுறம் பெண்ணின் அண்டகமும் உடையவர்களாகப் பிறக்கிறார்கள்.

வெளித் தோற்றத்தில், இயல்பான ஆண் அல்லது பெண் உருவத்தில் காணப்பட்டாலும், இவர்களுக்கு ஆண் பெண் ஆகிய இருவகைப் பிறப்பு உறுப்புகளுமே ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படும்[விலங்கினங்களில் மிகவும் சகஜமாக[?] இந்த நிலை காணப்படுகிறது. ஊர்வனவற்றுள் மண் புழுக்கள் இப்படிப்பட்ட{True hermaphrodite} இனம்தான். 

இடைப்பட்ட இந்த இனத்தவர்களுக்கு, ஆணுறுப்பும் இரு விதைக்காய்களும் மிகவும் சிறுத்துக் காணப்படும். பெண்ணாக மாற விரும்புவோர், அறுவைச் சிகிச்சை மூலம் இவற்றை முற்றிலும் அகற்றிவிடுகிறார்கள். வலிந்து, பெண்ணுக்கான செக்ஸ் ஹார்மோன்களைச் செலுத்திக்கொள்பவர்களும் உண்டு. இதன் மூலம் இவர்களின் மார்பகம் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

மேலும் சிலர், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களிடம் சென்று பெண் உறுப்பை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. ஆனாலும், உள்ளுறுப்பான அண்டகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்கிறார்கள்.

மிக அபூர்வமாக, பெண்ணாகப் பிறந்து பிறகு தாடி - மீசையோடு 'பக்கா'வாக ஆண்களின் தோற்றத்தைப் பெற்றுவிடுபவர்களும் உளர். அட்ரினல் சுரப்பியில் உண்டாகும் கட்டிகளோ அண்டகத்தில் ஏற்படும் கட்டிகளோ பெண் ஹார்மோன்களின் சுரப்பி வற்றிப்போகக் காரணமாக அமைகின்றன. மாறாக, ஆண்ட்ரோஜன்கள் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. முறையாகப் பரிசோதித்து அந்தக் கட்டிகளை அகற்றிவிட்டால் தாடி - மீசையெல்லாம் மாயமாக மறைந்துவிடும். இயல்பான பெண்களாக மாறிவிட வாய்ப்புள்ளது.

மத்திய அமெரிக்காவின் ஒரு மாகாணமான ஒக்லஹாமாவில் ஓர் அழகான குழந்தை பிறந்தது. இது வளர்ந்து, 42 ஆவது வயதில் ஏதோ சிறு பிரச்சினை என்று மருத்துவரிடம் போனாள்[ன்?]. மருத்துவர் பரிசோதித்தபோது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

முழுமையாக வளர்ச்சியடைந்த ஆண், பெண் இரண்டு பேருடைய பிறப்பு உறுப்புகளும் அவளி[னி]டம் காணப்பட்டன. ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய மார்பக வளர்ச்சியும் இருந்தது.

இந்த நபரை ஆண் என்பதா, பெண் என்பதா?

இப்படி நேர்வதன் காரணம்.....

செக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் குளறுபடிகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆண்களுக்கானது 'xy' குரோமோசோம்கள். மேற்கண்ட அவனு[ளு]க்கு கூடுதலாக x குரோமோசோம் இருந்ததாம். அதாவது, 'xxy' ஆக.

இப்படிக் கூடுதலாக ஒர் 'x' உள்ளவர்களுக்குத் திருமணம் கூடாது என்கிறார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்கும் மன நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள்தானாம்.

உயரமாக இருக்கும் ஆண் குற்றவாளிகளின் செக்ஸ் குரோமோசோம்களை ஆராய்ந்ததில் இவர்களில் பெரும்பான்மையோருக்கு 'xyy' இருந்ததாம். கூடுதலாக ஒரு 'y' குரோமோசோம்.

செக்ஸ் குரோமோசோம்களில் இப்படி இன்னும் நிறைக் குளறுபடிகள் உள்ளனவாம்.

சில பெண்கள் 'எடுப்பான' தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால், இவர்களின் உடல் செல்களெங்கும் xx க்குப் பதிலாக xy தான்[ஆண்களின் குரோமோசோம்கள்] காணப்படும்.

இவர்களின் அடிவயிற்றுப் பகுதியின் உள்ளே விந்தகமும் காணப்படும். இதை இவர்கள் குடலிறக்கம் என்று தவறாகப் புரிந்துகொண்டு அறுவைச் சிகிச்சைக்குப் போனால், விந்தகம் இருப்பதை அறிவார்கள். இயல்பாகப் 'பெண்ணுறுப்பு' இருந்தாலும் இவர்களால் கருத்தரிக்க இயலாது.

இவர்கள் எல்லாம் அலிகளா என்றால், இல்லை என்பதே பதில். கரு வளர்ச்சியின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். [இக்குளறுபடிகள் குறித்து இன்னும் சொல்லலாம். பதிவு மிக விரியும் என்பதால் தவிர்க்கப்படுகிறது].

திருநங்கைகள் குறித்து மேலும் கொஞ்சம் செய்திகள்:

இவர்களை இரு வகையினராகப் பிரித்திருக்கிறார்கள்.

முதலாம் வகையினர், பிறக்கும்போதே ஆண்களாகப் பிறந்துவிட்டாலும் சிறு வயது முதலே பெண்களின் உடைகளை அணிவதிலும் பெண்களைப் போல அலங்கரித்துக்கொள்வதிலும் நாட்டம் உடையவர்கள். இவர்களில் பலர் மருத்துவமனைகளுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணுறுப்பை நீக்கிக்கொள்கிறார்கள். 'டுபாக்கூர்' மருத்துவர்களை நாடிச் சென்று ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உளர்.

இரண்டாம் வகையினர், பிறக்கும்போது ஆண்களாகப் பிறந்தாலும் மிகச் சிறு வயது முதற்கொண்டு ஆண்களுக்கான செக்ஸ் சுரப்பி சரிவரச் சுரக்காததால் பெண் சாயலுடன் வளர்ந்து பின்னர் [அறுவை இல்லாமலே] முழுமையான திருநங்கைகளாக ஆகிவிடுபவர்கள்.

இந்த இருவகைத் திருநங்கைகளும் அடிப்படையில் ஆண்களே[Biological Males] என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

ஆக.....

எல்லாம்வல்ல கடவுளின் படைப்பில்தான் எத்தனை எத்தனை குளறுபடிகள்!!!

["எதை எழுதினாலும் சுத்தி வளைச்சி கடவுளைக் குறை சொல்வதே உனக்கு வழக்கமாப் போச்சு" என்று என்னை ஏசுகிறீர்களா?

என்ன செய்ய, சின்ன வயசிலிருந்தே இப்படியொரு சின்னப்புத்தியோட வளர்ந்துட்டேன்! ஹி...ஹி...ஹி!!]
=====================================================================================


செவ்வாய், 19 டிசம்பர், 2017

தெய்வீகக் காமம்!!

அவனும் அவளும் உயிருக்குயிராய்க் காதலித்தார்கள்.

இருவர் வீட்டிலும் எதிர்ப்பு; கண்டிப்பு; கொலை மிரட்டல்!

"விஷம் குடித்துச் செத்துப் போகலாம்” என்றாள் அவள்.

"என்னுடைய முடிவும் அதுதான்” என்றான் அவன்.

நகரின் ஒதுக்குப் புறமான ஒரு விடுதியைத் தேடிப் போய் அறை எடுத்துத் தங்கினார்கள்.

“அடுத்த பிறவியிலாவது எங்களை இணைத்து வை ஆண்டவனே” என்று இருவரும் கண்ணீர் விட்டுக் கடவுளை வேண்டிக்கொண்டார்கள்.

சாவதற்கு முன் அவன் அவளை ஆசை தீரப் பார்த்தான்; அவளும் பார்த்தாள்.

ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக்கொண்டே இருந்தார்கள்.

இருவர் கண்களிலும் வற்றாத அருவியாய்க் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

அவள் கண்ணீரை இவனும் இவன் கண்ணீரை அவளும் துடைத்தபோது இருவருக்குமே மேனி சிலிர்த்தது. தணியாத தாபத்துடன் இறுக அணைத்துக்கொண்டார்கள்.

வெறி கொண்டு அழுத்தமான முத்தங்களைப் பரிமாறினார்கள்.

உருண்டார்கள்; புரண்டார்கள்.

ஈருடல் ஓருடல் ஆயிற்று. திட்டமிடல் இன்றியே 'புணர்ச்சி’ இன்பம் துய்த்தார்கள்; 'எல்லாமே’ ஒரு சில நிமிடங்கள்தான். இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.

மவுனம் சுமந்தார்கள்.

"இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெத்து வளர்த்தவங்களை வெறுத்தாய்? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்?  காதல் காதல்னு நாயாய் அலைந்தாய்?” என்று அவன் மனசாட்சி கேள்விகள் கேட்டு அவனை வாட்டி வதைத்தது.

அவள் பக்கம் திரும்பி, குனிந்த தலையுடன், "என்னை மன்னிச்சுடு” என்றான்.

“ஏன்? எதற்கு?” என்றெல்லாம் அவள் கேள்வி எழுப்பவில்லை.

அவளுக்குத் தெரிந்திருந்தது, ‘அந்தச் சில நிமிடங்கள்’ கழிந்ததும், அவன் தன் மீது கொண்டிருந்த காதல் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று.

"வா போகலாம்” என்று எழுந்து நடந்தான் அவன். அவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.

விடுதியை விட்டு வெளியேறியதும், இருவரும் வேறு வேறு திசையில் நடந்தார்கள்.

அவர்கள் வாங்கிவந்திருந்த விஷப்புட்டி திறக்கப்படாமலே, அவர்கள் தங்கியிருந்த அறையின் ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடந்தது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15.03.2013ஆம் ஆண்டு இதே தளத்தில் வெளியானது. அடியேனின் ஆக்கம்!

சனி, 16 டிசம்பர், 2017

'கைவிடும்' கடவுள்களும் 'கை கொடுக்கும்' மனிதர்களும்!!

"ஊசி போட்டுக் கொன்னுடுங்க" என்று கெஞ்சுறாங்கன்னா அந்த வலி எவ்வளவு கொடுமையா இருக்கணும். இவங்களுக்கும் இவங்களைப் போன்றவங்களுக்கும் எந்தவொரு கடவுளும் உதவுவதில்லை. மனிதாபிமானம் உள்ள சில மனுசங்கதான் உதவுறாங்க. ஆதாரம் கீழே. அவசியம் வாசியுங்கள்.
ரோடு நகரில் கங்காபுரத்திலுள்ள 'இமயம்' காப்பகம்.

இனிமேலும் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடியாதவர்கள் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான 'காப்பகம்' இது.

சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் செயலிழந்தவர்கள், தீவிரப் புற்றுநோயாளிகள் என்று இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு மாதிரி. ஆனால், இவர்கள் அனுபவிக்கும் வலி ஒன்றே. அது மரண வலி.

2006இல் இந்த 'இமயம்' காப்பகத்தைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவரான டாக்டர் அபுல்கசன் சொல்கிறார்:

"பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே பொது வேலைன்னா ஓடிப்போய் முதல் ஆளா நிற்கிற பழக்கம் எனக்கு உண்டு. மற்ற உதவிகளைக் காட்டிலும், சமூகத்தின் பார்வையிலே இருந்து ஒதுக்குப்புறமா இருக்கிற இடத்திலே செய்கிற உதவி முக்கியம்னு எனக்குத் தோன்றியது.

அன்னை தெரசாவோட சந்திப்பில், பொது மக்கள் கண்டுகொள்ளாத ஒரு உலகம் இருப்பதை நான் உணர்ந்தேன். கல்கத்தாவில் அவங்களோட காப்பகத்தையும் அங்கிருந்த நோயாளிகளையும் பார்த்தப்போ மனசு குலைஞ்சு போயிடிச்சு.

2006இல் இமயம் காப்பகத்தைத் தொடங்கினோம். அப்போது குடியரசுத் தலைவரா இருந்த அப்துல்கலாம்தான் தொடங்கி வைத்தார்.

பதினொரு வருசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க இங்கே தங்கியிருந்திருக்காங்க. 900 பேருக்கு மேல் இங்கேயே இறந்துவிட அவங்களுக்கு எல்லாக் காரியமும் செய்திருக்கோம். நான் மட்டுமல்லாது ராஜா, சுகுமார் போன்ற நண்பர்களும் மருத்துவத் துறை சார்ந்த நண்பர்களும் நிறையவே உதவினார்கள்.

பொதுவா, பொது மக்களால் கைவிடப்படுகிற நோயாளிகளுக்குத்தான் இது புகலிடமாக இருக்கு. புற்று நோயாளிகளே அதிகம். வயசு பேதமெல்லாம் இல்லை.

இங்கு தொற்று நோயாளிகள் இல்லை. ஆனா, நோயாளிகளின் சொந்தக்காரங்களில் சில பேர் உள்ளேகூட வராம வாசலில் நின்னு விசாரிச்சிட்டுப் போயிடுவாங்க. 

இங்கே உள்ளவங்க அனுபவிக்கிறது நம்ம கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வலி. 'ஊசி போட்டுக் கொன்னுடுங்கன்னு கெஞ்சுறாங்கன்னா அந்த வலி எவ்வளவு கொடுமையா இருக்கணும்? ஒரு சாதாரண வலி மாத்திரை அல்லது ஊசி இவங்களுக்குச் சில மணி நேரமாவது நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். இம்மாதிரியான மருந்துகள் இருப்பதே நம்மவரில் பலருக்குத் தெரியாது. இது எத்தனை பெரிய கொடுமை.

நாம நல்லா இருக்கோம். நமக்கு எல்லாம் நல்லதே நடக்குறது என்பதாலேயே ஒட்டுமொத்த உலகமும் நல்லா இருக்கிறதா ஆயிடாது. இவங்க படுற கஷ்டத்தை நாம படுறதா கற்பனை செய்து பார்க்கணும். மேலை நாடுகளைப் பத்தி நிறையப் பேசுற நாம, 'மரண வலி தணிப்புச் சிகிச்சை'[paalliative care] தொடர்பாகவும் யோசிக்கணும். இந்த விசயத்துல நம் அரசாங்கமும் மக்களும் செய்ய வேண்டியது ஏராளம்."

இங்கு பணியாற்றுகிற முருகன் - பூங்கொடி தம்பதியர் சொல்கிறார்கள்[இவர்களின் பிள்ளைகளும் இங்கேதான் வளர்கிறார்கள்]:

"வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கன்னத்தின் ஒரு பக்கத்தில் ஓட்டை விழுந்துடும். மறு பக்கம் வழியா சாப்பிடக் கொடுக்கணும். ஒரு துணுக்கு அந்தப் பக்கம் பட்டுட்டாலும் கதறிடுவாங்க.

மார்பகப் புற்றுநோய் வந்தவங்களுக்கு நெஞ்சுப் பகுதி குழி ஆயிடும். அதைத் தினமும் சுத்தம் செய்யணும். ஒரு நாள் சுத்தம் செய்யலேன்னாலும் புழு வந்துடும். வலியைத் தாங்கவே முடியாது. ஊசி போட்டுக் கொன்னுடுங்கன்னு அலறுவாங்க.

சொந்தக்காரங்க இங்கேயே தங்கியிருந்து நோயாளிகளைக் கவனிச்சுக்கலாம். அதுக்கான வசதிகள் இங்கே இருக்கு. ஆனா, பெரும்பாலும் யாரும் வந்து தங்கறதில்லை.  உச்சபட்ச சகிப்புத்தன்மையும் கருணையும் தேவைப்படுற சேவை இது. நம்மில் எத்தனை பேருக்கு இந்தச் சேவை மனப்பான்மை இருக்கு?"

ஒரு நோயாளிப் பெரியவர் சொல்கிறார்:

"சொந்தபந்தங்கள் எல்லாம் கைவிட்டவங்களின் கஷ்டங்களையெல்லாம் இங்க சேவை செய்யுறவங்க தாங்கிக்கிறாங்க. இவங்க யார் பெத்த பிள்ளகளோ?" 

இவர் துணியால் மூடியிருந்த வயற்றைக் காட்டுகிறார். அங்கே பெரிய பள்ளம்.

[வெற்றுக் கடவுள் சிலைகளுக்குச் சரம் சரமாய்த் தங்க வைர நகைகள் பூட்டி, நாள் தவறாமல் வேளை தவறாமல் அபிசேக ஆராதனைகள் எல்லாம் செய்து, விசேட நாட்களில் புனித நீராட்டு விழா, கல்யாண வைபோக விழா, வீதி உலா எல்லாம் நடத்திக் கோடி கோடி கோடிகளை வீணடித்து, "எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா!"  என்று கூச்சலிட்டுக் குதூகலிக்கும் பக்தகோடிகளும், என்னைப் போன்ற ஏராள முழுச் சுயநலவாதிகளும் ஆழ்ந்து சிந்தித்தற்குரிய நேரம் இது].
=====================================================================================
நன்றி: 'தி இந்து' 15.12.2017.வியாழன், 14 டிசம்பர், 2017

கடவுளும் 'காப்பி - பேஸ்ட்'டும்!!!

ண்டவெளியிலுள்ள[பூமி உட்பட] பொருள்களிலோ உயிர்களிலோ ஒன்றைப் போல் இன்னொன்று இருந்ததில்லை; இருந்துகொண்டிருக்கவுமில்லை' என்று விஞ்ஞானிகள் சொல்வதாக ஆய்வியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கு மூலமாக விளங்குகிற கோடி கோடி கோடானுகோடியோ கோடி 'அணுத்திரள்'களிலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை என்கிறார்கள்.

புதிது புதிதாக அணுக்களும் பொருள்களும் உயிர்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதாவது, பழையன கழிந்து புதியன புகுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தோன்றிக்கொண்டிருக்கிற எந்த ஒன்றும், தோன்றி மறைந்த இன்னொன்றைப் போல இல்லை என்பது மிகப் பெரிய விந்தை.

இந்த விந்தை தன்னிச்சையாய் நிகழ்கிறதா அல்லது நிகழ்த்தப்படுகிறதா?

நிகழ்கிறது எனின் அது இயற்கை. நிகழ்த்தப்படுகிறது எனின் அது கடவுள்[கடவுள் தோன்றியது எப்படி? படைப்பாற்றல் அவருக்கு எப்படி வாய்த்தது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை பகர்ந்தவர் எவருமிலர்] எனப்படுபவரின் சாகசமாக இருக்கக்கூடும்.

ஒன்றைப் போல இன்னொன்று உருவாதல் என்னும் நிகழ்வு, கடந்த காலங்களில் இல்லை[???]; நிகழ்காலத்திலும் இல்லை.

நிகழ்வுகள் என்பது இனியும் கால வரம்பற்றுத் தொடரவிருப்பது. அதாவது, பொருள்களும் உயிர்களும், 'வெளி' உள்ளளவும் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கக்கூடும்.

நம் கேள்வி: எதிர்காலத்திலேனும் அச்சு அசலாக ஒன்று போல்  இன்னொன்று [தன்னிச்சையாகத்] தோன்றுமா? அல்லது, கடவுள் எனப்படுபவர் தோற்றுவிப்பாரா?

குறிப்பாக.....

ஒரு திருவள்ளுவரைப் போல் இன்னொரு திருவள்ளுவரும் பெரியாரைப் போல் இன்னொரு பெரியாரும் தோன்றுவார்களா, தோற்றுவிக்கப்படுவார்களா?

'பசி'பரமசிவம் போல்[ஹி...ஹி...ஹி...] இன்னொரு 'பசி'பரமசிவம் தோன்றுவாரா, தோற்றுவிக்கப்படுவாரா?!

எப்போது?
_____________________________________________________________________________________

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடவுள்...கடவுள்...கடவுள்! யாரய்யா கடவுள்?

#தஞ்சாவூருக்குப் போகும் வழியில், கரூர் 'பைபாஸ்'இல் மதிய உணவுக்காக ஒரு விடுதியின் முன் காரை நிறுத்தியபோது அவரைக் கண்டேன்.

அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். கையில் 'சிக்னல் ஸ்டிக் லைட்'டும் வாயில் விசிலுமாய், நெடுஞ்சாலையில் வாகனங்களில் போவோரைச் சாப்பிட அழைத்துக்கொண்டிருந்தார்.

வயோதிகம் காரணமாகவோ நின்றுகொண்டே இருப்பதன் காரணமாகவோ வலி தாளாமல் கால் மாற்றித் தவித்துக்கொண்டிருந்தார்.

உணவுண்டு வந்தபோதும் அவரிடத்தில் மாற்றத்தைக் காண இயலவில்லை. கால் மாற்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.

என் மனதில் இரக்கம் சுரக்க, அவரை அணுகி மதிப்புள்ள ஒற்றைத் தாளை நீட்டினேன். வாங்க மறுத்துவிட்டார்.

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

"பேரு என்னங்க ஐயா?"

"முருகேசனுங்க."

"ஊரு?"

"தஞ்சாவூர்ப் பக்கம்" என்றவர் தொடர்ந்து சொன்னார்: "தொழில் விவசாயம். பொழப்புக்கு வேறே வழி இல்ல. ஒரு பொண்ணு ஒரு பையன். மழை இல்லாம விவசாயம் படுத்துப்போச்சு. கடன் ஒடன் வாங்கி என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். பலனில்லை. கடனை அடைக்க முடியல. கடவுளும் கண் திறக்கல.....

.....இதுக்கு மேல தாளாதுன்னு நிலத்தை வித்துக் கடனெல்லாம் அடைச்சுட்டு மிச்சப் பணத்தில் பொண்ணுக்குக் கல்யாணத்தைப் பண்ணினேன்.....

.....பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல. இங்க வந்து வேலைக்குச் சேர்ந்தேன். மூனு வேளைச் சாப்பாடு. தங்க இடம். மாசம் 7500 ரூபா சம்பளம். சிக்கனமா செலவு பண்ணினதில் பையனை எஞ்சினீயரிங்க் படிக்க வைக்க முடிஞ்சுது. கோயம்புத்தூரில் வேலையில் சேர்ந்துட்டான்....."

நான் குறுக்கிட்டேன்; "ரொம்பச் சந்தோசம் பெரியவரே. கடவுள் புண்ணியத்தால உங்களுக்கு நல்லது நடந்திருக்கு" என்றேன்.

நான் சொல்லி முடித்தபோது, ஓட்டல் பையன் வந்து பெரியவரிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனான்.

பெரியவர் முகம் மலர்ந்ததோடு என்னைப் பார்த்துப் பேசலானார். "என்ன சொன்னீங்க? கடவுளால நல்லது நடந்ததா? அவர் யாருங்க கடவுள்? அவர் கொடுமைக்காரருங்க. அவர் நல்லவரா இருந்தா என்னைக் கடனாளியாக்கி, இப்படிக் கால்கடுக்க நாளெல்லாம் நிக்க வைப்பாரா? இப்படியொரு கடவுள் எனக்குத் தேவையில்லீங்க. என்னைப் பொருத்தவரைக்கு...."

சற்றே நிறுத்துப் பெருமூச்செறிந்தவர், "என்னைப் பொருத்தவரைக்கும் மனுசங்கதாங்க கடவுள். 'பேசாம எங்ககூட இருந்துடுங்க. கூழோ கஞ்சியோ இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிடலாம்'னு சொன்ன என் மாப்பிளை எனக்குக் கடவுள். 'நான் பரவாயில்லாம சம்பாதிக்கிறேன். இனி நீ ஓட்டல் வேலைக்குப் போக வேண்டாம்'னு சொன்ன என் மகன் எனக்குக் கடவுள். என்னை நம்பிக் கடன் கொடுத்தவங்க எனக்குக் கடவுள். எனக்குக் கால் வலிக்குமேன்னு கொஞ்ச நேரம் உட்காரச் சொன்ன இந்த ஓட்டல் முதலாளி எனக்குக் கடவுள். எனக்காகப் பரிதாபப்பட்டுப் பணம் கொடுத்த நீங்க எனக்குக் கடவுள். இன்னும் சொல்லப்போனா நல்ல மனசு உள்ள மனுசங்க எல்லாருமே கடவுள்தாங்க" என்றார் நெகிழ்ந்த குரலில்.

பெரியவர் முருகேசனிடம் தலை குனிந்து வணங்கி விடை பெற்றேன்#
=====================================================================================
தன் அனுபவக் கதையை, 'பாக்யா' வார இதழ்[டிசம்பர் 15 _ 21, 2017] மூலம் பகிர்ந்துகொண்ட 'ஜெயராமன் வேணு' அவர்களுக்கு நன்றி.

ஆசிரியரின் அனுமதியின்றிச் சற்றே சுருக்கி வெளியிடப்பட்டது. 

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

பக்தகோடிகளும் கோடீஸ்வரக் கடவுள்களும்!!

கடவுளைக் கற்பித்தவர்கள் மகா...மகா...மகா புத்திசாலிகள். ஒட்டுமொத்த அறிவுக்கும் ஆற்றலுக்கும் நல்ல குணங்களுக்கும் அவரே பிறப்பிடமும் இருப்பிடமும் ஆவார் என்று சொல்லிவைத்தார்கள்; தொடர் பரப்புரைகள் மூலம் மக்களை நம்ப வைத்தார்கள். அந்த நம்பிக்கைக்குக் கொஞ்சமும் பங்கம் நேராமல் பாதுகாத்து வருபவர்கள் ஆன்மிகவாதிகள். 

கடவுள் கருணை வடிவானவர் என்று சொல்லிக்கொண்டே, அவரைப் பழித்தால் தண்டிப்பார் என்பதான பீதியையும் மக்களின் அடிமனங்களில் ஆழமாகப் பதித்துவிட்டார்கள் இந்த ஆன்மிகப் பெருந்தகைகள். விளைவு.....

கடவுளிடம் கோரிக்கை வைத்து அது நிறைவேறவில்லை என்றாலும் "ஒழிக" முழக்கங்களைப் பக்தர்கள் ஒருபோதும் எழுப்புவதில்லை; அவரை நிந்திப்பதும் இல்லை.

'விதி, தலை எழுத்து, முற்பிறப்பில் செய்த பாவம்' போன்றவற்றைக் காரணங்களாக்கித் தமக்குத்தாமே பழி சுமத்திக்கொள்ள இவர்கள் தயங்குவதில்லை.

பலமுறை கோரிக்கை வைத்தும் குறை நிவர்த்திக்கப்படாதபோதும், கோரிக்கை வைப்பதை இவர்கள் தவிர்ப்பதில்லை; கடவுள் நம்பிக்கையைக் கைவிடுவதும் இல்லை. பதிலாக.....

ஒரு கடவுள் கண் திறக்கவில்லை என்றால் இன்னொரு கடவுளைத் தேடிப்போவது இவர்களின் பரம்பரைப் பழக்கமாக உள்ளது.

விதம் விதமாய்க் காணிக்கை செலுத்தியோ['லஞ்சம் கொடுத்து' என்று எழுத நினைத்துத் தவிர்த்தேன். தலைக்கு விலை வைப்பார்களே என்ற பயம்!] காலங் கருதாமல் துதி பாடியோ அவர்களைத் திருப்திபடுத்துவார்கள்.

பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, முடி இறக்குவது; லட்சார்ச்சனையோ கோடியார்ச்சனையோ செய்வது; அன்னதானம் வழங்குவது; உண்டியலில் கட்டுக்கட்டாகப் பணமும் கொத்துக்கொத்தாகத் தங்க நகைகளும் கொட்டுவது என்றிவ்வாறு கடவுளை மனம் இளகச் செய்வதற்கு விதம் விதமாய், வகை வகையாய் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் புத்திசாலிப் பக்தர்கள்.

மேற்கண்டவற்றில் சிலவற்றையோ பலவற்றையோ கையாண்டும் கடவுள்கள் கண் திறக்கவில்லையெனின் முக்கால நிகழ்வுகளையும் கணித்துச் சொல்கிற ஜோதிட ஞானிகளைத் தேடிப் போகிறார்கள். அவர்களின் அறிவுரைக்கிணங்க, எச்சிலையில் உருளுகிறார்கள்; அன்னதானம் ஆடை தானம் எல்லாம் செய்கிறார்கள்; நவக்கிரகம் சுற்றுகிறார்கள்; சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றுகிறார்கள்; பகவானின் அருட்பார்வைக்காகக் காத்திருக்கிறார்கள்.

வைத்த கோரிக்கைகளில் ஒன்று நிறைவேறிவிட்டால் போதும்[ஒன்பது ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது என்று சிந்திப்பதில்லை], "கடவுளின் கருணையே கருணை!" என்று மெய் சிலிர்க்கிறார்கள்; ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்கள். 

குடம் குடமாய்ப் பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தனாபிஷேகம் என்று அபிஷேக மழை பொழிந்து கடவுளைக் குளிப்பாட்டுகிறார்கள்; மனம் குளிரச் செய்கிறார்கள்; போகும் இடமெல்லாம் அவனின்  புகழ்பாடுவதே இவர்களின் தொழில் ஆகிறது.

இப்படி ஊருக்கு ஒருவர் செய்கிறபோது அந்தக் கடவுள் பிரபலம் ஆகிறார். நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை அநியாயத்துக்குக் கூடிக்கொண்டே போகிறது. காணிக்கை என்ற பெயரில் கணக்குவழக்கில்லாமல் செல்வம் குவிகிறது.
அப்புறம் என்ன, இவர்களால் கொண்டாடப்பட்டவர் எளிய ஏழைக் கடவுளாக இருந்திருப்பினும் கோடீஸ்வரக் கடவுள் ஆகிறார்.

ஆக.....

சீந்துவாரற்றுக் கிடக்கும் ஒரு கடவுள் மக்களிடையே 'சக்தியுள்ள சாமி' என்று பெயரெடுப்பதும், கோடி கோடி கோடியாய்ப் பணம் குவிப்பதும் இந்த வகையில்தான்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளி, 8 டிசம்பர், 2017

'அது' படுத்தும் பாடு!!.....சிறுகதை.

கடவுள் என்றில்லை, 'காம இச்சைக்குக்'கூட ஏழை என்றால் இளக்காரம்தான். பணக்காரர்களைக் காட்டிலும் ஏழைகளையே அது அதிகம் படுத்துகிறது!
கலெல்லாம் கூலிக்கு உழைத்துக் களைத்துப் போனதால், சூடாக நாலுருண்டைக் ’களி’ உள்ளே போனவுடன் அடித்துப் போட்டாற் போல தூங்கிப் போனான் செல்லப்பன். விடிவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் உறக்கம் கலைந்தும் கலையாத நிலையில் ‘பொம்பளை’ நினைப்பு வரவே, கைகளை நீளவிட்டுப் பக்கவாட்டில் தடவினான்; பரவலாகத் துழாவினான்.

வெள்ளச்சியின் கட்டுடலுக்குப் பதிலாக, ஒரு துண்டுக் காகிதம் மட்டுமே அவன் கையில் சிறைபட்டது.

தரையோடு தரையாகக் குந்தியிருந்த குடிசையிலிருந்து வெளியேறி, பக்கத்துக் குடிசைப் பழனியைக் கூப்பிட்டுத் துண்டுச் சீட்டைக் கொடுத்து, "படிடா" என்றான்.

‘என்னத் தோட [தேட] வாண்டாம்’ என்று எழதியிருந்ததைப் படித்துக் காட்டினான் பழனி. தனக்குத் தெரிந்த தமிழில், தன் செயல்பாட்டைப் புரிய வைத்திருந்தாள் வெள்ளச்சி.

“இதோ பாருண்ணா, அவ கோழி கேவறாப்பல கேவிகிட்டுத் திரியறா. நீ இல்லாதப்போ, சுருட்டையன்கிட்ட இளிச்சி இளிச்சிப் பேசுறான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேன். நீ கண்டுக்கல. அவனை இழுத்துட்டு ஓடிட்டா பார்த்தியா” -அங்கலாய்த்தான் பழனி.

“ஏமாந்துட்டேன்” -பதறினான் செல்லப்பன்.

“ஈரோட்டில் ஒரு செருப்புக் கடையில் வேலைக்குச் சேருறதா சுருட்டையன் யார் கிட்டயோ நாலு நாள் முந்தி சொல்லிட்டிருந்தான். வெள்ளச்சியோட அவன் அங்கதான் போவான். இப்பவே சைக்கிளை எடுத்துட்டுப் பஸ் ஸ்டாண்டுக்குப் போ. ரெண்டு பேரும் பஸ் ஏறாம இருந்தா கையும்களவுமா பிடிச்சுடலாம்" என்றான் பழனி.

நிலையத்தில் நுழைந்தபோது ஈரோடு செல்லும் பேருந்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டான் செல்லப்பன்.

பேருந்துப் படியருகே நின்றுகொண்டிருந்த வெள்ளச்சியும் அவன் கண்ணில் பட்டாள். கொஞ்சம் தள்ளி சுருட்டையன் நின்றுகொண்டிருந்தான்.

பாய்ந்து சென்று வெள்ளச்சியின் கூந்தல பற்றினான்; அவள் கன்னத்தில் அறைந்தான்.

நிலை குலைந்த வெள்ளச்சி, சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு, “இதோ பாருய்யா, உன்னோட பொளப்பு  நடத்த எனக்கு இஷ்டமில்ல. என்னை அடிக்காதே, வுட்டுடு? என்றாள்.

“அவ்வளவு சுளுவா வுட்டுடுவேனா?” அவனின் தாக்குதல் தொடர்ந்தது.

“ஓ...” என ஓலமிட்டுப் புலம்பத் தொடங்கினாள் வெள்ளச்சி.

“அய்யோ...என்னை அடிச்சிக் கொல்றானே...கேட்பாரில்லையா? இவன் வூட்ல எருக்கு முளைக்க...வயத்தில் புத்து முளைக்க...”

முன்னறிவிப்பில்லாத இந்த நாடகத்தைப் பார்க்கக் கூடியிருந்த கும்பலில் ஒருவர், “ஏம்மா, இந்த ஆளு யாரு? உன் புருஷனா?" என்றார்.

“யாரு இவனா என் புருஷன்? இவன் பொண்டாட்டி செத்துப் போயி மூனு மாசம் ஆவுது. 'உன்னை வெச்சிப் பொழைச்சிக்கிறேன் வா’ன்னு கூப்பிட்டான். வந்தேன். ஆறு மாசம் இருந்தேன், இப்போ இஷ்டமில்லே போறேன்னு சொன்னா கை நீட்டி .....”

இடை மறித்தான் செல்லப்பன். “நீ எங்கே வேணுன்னாலும் போடி. எவனை வேணுன்னாலும் கூட்டிகிட்டு ஓடுடீ ஓடுகாலி. அதுக்கு முன்னால, மருவாதையா கணக்கைத் தீர்த்துட்டுப் போ. இல்லே...வெட்டிப் போடுவேன்...வெட்டி...”

வெள்ளச்சி செல்லப்பனை ஏளனமாகப் பார்த்தாள். கேட்டாள்: “என்னய்யா கணக்கு? ஐயாயிரம் பத்தாயிரம்னு என்கிட்டே  குடுத்து வெச்சியா?”

"உன் மொகறக்கட்டைக்கு எவன் அவ்வளவு பணம் அவுப்பான்?  உன்னைக் கூட்டியாந்தப்போ, புதுத் துணிமணி எடுத்துக் குடுத்தேன்; புதுச் செருப்பு வாங்கித் தந்தேன். மறந்து போச்சா?"

“சும்மாவா எடுத்துக் குடுத்தே? பொழுது சாஞ்சா முந்தானை விரிச்சிப் படுக்கலே?"

“கூலி வேலைக்குப் போன உன்னை உட்கார வெச்சிக் கஞ்சி ஊத்துனதும் கட்டிக்கத் துணிமணி எடுத்துக் குடுத்ததும் சினிமாவுக்குக் கூட்டிப் போனதும் அப்பப்போ கைச் செலவுக்குப் பணம் குடுத்ததும்...எல்லாம் அதுக்கே சரியாப் போச்சின்னு சொல்றியாடி?”

“ஆமா” -வெள்ளச்சி சிலிர்த்து நின்றாள்.

“சரி போகட்டும். ரெண்டு காலிலும் வெள்ளிக் கொலுசு போட்டிருக்கியே, அது நான் வாங்கிக் குடுத்தது. அதுவும் இந்தக் கணக்கில் சேருதா?”

வெள்ளச்சிக்கு ஏனோ பேச்சு எழவில்லை. குரலில் சுருதி குறையச் சொன்னாள்: “உன்னோட பெரிய எளவாப் போச்சு. இப்படி ஒன்னொன்னுக்கும் கணக்குப் போடுவீன்னு தெரிஞ்சிருந்தா உன்னோட வந்திருக்க மாட்டேன்”என்றவள், கொலுசுகளைக் கழற்றிச் செல்லப்பனிடம் தந்துவிட்டுச் சொன்னாள்: "உனக்கும் எனக்கும் இனிமே எந்தத் தொடுப்பும் இல்ல. ஞாபகம் வெச்சுக்கோ.”

வெளிறிய முகத்துடன் தனக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த சுருட்டையனிடம், ”வாய்யா போலாம்” என்று அவன் கரம் பற்றி, நகரத் தொடங்கிய ஈரோடு பேருந்தில் ஏறினாள்.

“ஏம்ப்பா, போட்ட கொலுசைப் பிடுங்கிட்டியே. இதை வெச்சிக் கோட்டையா கட்டிடப் போறே?” என்று செல்லப்பனிடம் கேட்டார் ஒரு பெரியவர்.

“கோட்டை கட்டப் போறது ஒன்னுமில்ல. நாளக்கி, இன்னொருத்தியைக் கூட்டியாந்தா அவளுக்குப் போட்டுவிடலாமே” என்றான் செல்லப்பன்!
#####################################################################################


செவ்வாய், 5 டிசம்பர், 2017

கடவுளுக்குக் கண்கள் எத்தனை?[சின்னஞ்சிறு குறுங்கதை]

சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் தங்கராசு, கூலித் தொழிலாளி.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த தம் பிள்ளையைப் பார்த்துவிட்டு, சிகிச்சையளித்த மருத்துவரையும் சந்தித்த பின்னர்  தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி, தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு; "என் ரெண்டு வயசுப் பெண் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவியிருக்கார். நீங்க சொன்னா கடவுள் கேட்பாரு. தயவு பண்ணி என் குழந்தையைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.”

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

********************************************************************************************************************
இது 'பசி'பரமசிவத்தின் படைப்பு! 26.07.2011இல் எழுதியது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மதம் கடந்த ஒரு 'பெருந்தகை'யின் மரண உரை!

#என் தன்[சுய]நினைவோடு எழுதும் கடிதம் இது. எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழ்நிலையில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது.

என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால், எனக்கு நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை.

இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பின் மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது. மக்களுக்கு முழுமையாக உரித்தாக்கும் வண்ணமே என் சிந்தனையும் செயலும் அமைய வேண்டும் என்று விரும்பிய போதிலும், அதை முழுமையாக்க முடியாத குறை என் மனத்தில் உண்டு.

இறப்பு உடலின் செயல்களை நிறுத்துகிறது. எனினும், என் உடல் இறப்புக்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், என் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க என் குடும்ப உறுப்பினர்களும் தோழர்களும் ஆவன செய்ய வேண்டுகிறேன். அப்படி வழங்குவது என்னை, என் வாழ்க்கையை என் விருப்பப்படி அர்த்தப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த நான் இவ்வாறு விருப்பம் எழுதி வைப்பது சரியா என்று என் உறவினர்களும் இஸ்லாமிய நண்பர்களும் கருதலாம். 

மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்; மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்.

உறுப்புக் கொடையும் உடற்கொடையும் மானுடத்துக்குச் செய்யும் உதவி என்று கருதுகிறேன். எத்தனை முஸ்லிம் மாணவ மாணவியர் மருத்துவம் பயில்கின்றனர். உடற்கூறு சோதனையின்றிப் பயிலும் மருத்துவக் கல்வி நிறைவு பெறுமா? எனவே, சமயம் சார்ந்தவர்கள்கூட இக்கொடைகளைத் தயங்காமல் வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாழ்வது இனிமையானது - போராட்டங்களோடும் புன்னகையோடும் இறப்பது நிறைவானது.

                                                                                                                    அன்புடன்,
                                                                                             இன்குலாப்[செகசீ.சாகுல் அமீது]
முதுமை முற்றுகையிட்டபோது, நீரிழிவால் ஒரு கால் நீக்கப்பட்ட நிலையில் கவிஞர் 'இன்குலாப்'[மறைவதற்கு முன்பு] எழுதிய கடிதம் இது.

சாவுக்கு அஞ்சியும், செத்த பிறகு என்ன ஆவோம் என்று புலம்பிக் கலங்கியும், தாடிமுடி வளர்த்த சாமியார்களையும் போலி ஞானியார்களையும் சரணடைகிற  மாந்தருக்கிடையே, மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்ற கவிஞர் இன்குலாப்பின் மனப்பக்குவம் நம்மால் என்றென்றும் நினைவுகூரத்தக்கது; [சாதி]மதம் கடந்து வாழ்ந்த அவரின் மனித நேயம் எக்காலத்தும் போற்றத்தக்கது.

கவிஞர் இன்குலாப்: முந்தைய பதிவுகள்:
http://kadavulinkadavul.blogspot.com/2014/01/blog-post_29.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/12/blog-post_9.html
=====================================================================================
இந்த ஆண்டில்[2017] இக்கடிதத்தை[கவிஞர் 07.02.09இல் எழுதியது] வெளியிட்ட கவிஞர் இன்குலாப் அவர்களின் மகள் 'ஆமினா பர்வினா' அவர்களுக்கும், கவிஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் 'நினைவுகூர்தல்' கட்டுரை வழங்கிய மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கும், வெளியிட்ட 'தி இந்து[03.12.2017]வுக்கும் நம் மனம் நிறைந்த நன்றிகள்.வெள்ளி, 1 டிசம்பர், 2017

அந்தக்கால விகடனின் 'அசத்தல்' ஒரு பக்கக் கதை!

இது பழைய, கையடக்க விகடனில் [14.04.1985]  வெளியான ‘தரமான’ ஒரு பக்கக் கதை. அரியதொரு படைப்பு. தவறாமல் படியுங்கள்.
லமரத்தடியில் ஒட்டுமொத்த சோமனூரும் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார் ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான்: "ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்ட சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான் முனியப்பன்.

ருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார். அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்.

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!

-இது முல்லை வசந்தனின் படைப்பு.
********************************************************************************************************************