வெள்ளி, 29 டிசம்பர், 2017

அவர்கள் புத்திசாலிகள்! நாம்.....?!

'கோயில்களைக் கட்டியவர்கள் மனிதர்கள். நான்கு வாசல்கள் வைத்து, அவற்றிற்குப் பிரமாண்டக் கதவுகளை நிறுவி, ஒரு கதவை ஆண்டு முழுக்க அடைத்துவைத்து ஒரு நாள் மட்டும் திறந்துவிட்டு, அதில் புகுந்து வெளியேறினால் செத்த பிறகு சொர்க்கம் போகலாம்' என்று கதைகட்டியவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் புத்திசாலிகள். நம்புகிறவர்கள்?
#வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்

மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளைப் பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது# -இது இன்றைய செய்தி[www.dinamalar.com/news_detail.asp?id=1928597

இது குறித்த கதை.....

//ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். 

சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. 

நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.

இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள் ஆகும். 

தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. 

பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன//

இது கதை. கதை மட்டுமே.

மிக மிக மிகப் பெரும்பாலான மக்கள் படிப்பறிவும் சிந்திக்கும் திறனுமின்றி வாழ்நாளைக் கடத்திய காலத்தில், படித்த சூட்சும புத்தி வாய்ந்த சில சுயநலவாதிகளால் கட்டிவிடப்பட்ட கதை இது.

காலங்காலமாய் ஊடகங்களின் துணையோடு செய்த பரப்புரையால், கல்வியறிவு இல்லாதவர் மட்டுமின்றி கற்றோரும் இக்கதையை நம்பும் நிலை உருவானது.

அனைத்தையும் படைத்தவர் கடவுளேயாதலால் அசுரர்களையும் அவரே படைத்தாரா? நிகரற்ற பேராற்றல் கொண்ட அவரை அசுரர்கள் எதிர்த்துப் போரிடுதல் சாத்தியமானது எப்படி? அரக்கர்களே வேண்டிக்கொண்டார்களா? என்னய்யா கதை இது? எதற்குக் காதில் பூச்சுற்றும் இந்த வேலை?

பிரம்மாவும் ஒரு கடவுளே[திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றியவர்] எனும்போது கர்வம் எனும் இழிகுணத்திற்கு அவர் உள்ளானது எப்படி?

வடக்கு வாசலில் நுழைந்து வெளியேறினால் சொர்க்கம் போகலாம் என்றால், அசுர குணம் படைத்த அத்தனை அயோக்கியர்களும் சொர்க்கத்தில் நுழையலாமே,  'பாவம் தவிர்; புண்ணியம் செய்' எனும் போதனையெல்லாம் எதற்கு?

அதென்ன ஆண்டிற்கு ஒரே ஒரு நாள் மட்டும் வைகுண்ட வாசல் திறப்பு? ஆண்டு முழுதும் திறந்து வைத்தால் சொர்க்கம் தன் கொள்ளளவை எட்டிவிடுமா? 

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

செத்தொழிந்தவுடன் மனிதர்களின் பூதவுடல் அழிந்துவிடுவதால், ஆவி வடிவில் சொர்க்க பூமியில் நுழைகிறார்களா? "ஆம்" என்றால், ஆவி வடிவிலேயே அங்கு உலாவும் பிற ஆவி மனிதர்களைக் காண முடியுமா? உரையாடுவது சாத்தியமா? ஐம்புலன்களையும் இழந்துவிட்ட நிலையில் அங்கு ஆவிகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம். கேட்பவரை, 'இவன் நாத்திகன்; அயோக்கியன்; பொய்யன்' என்றெல்லாம் திட்டித்தீர்க்காமல் மனம் திறந்து பதில் சொல்வார் யார்?
********************************************************************************************************************