திங்கள், 1 ஜனவரி, 2018

ஆங்கில 'அடிமை'களுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுதாபங்கள்!!!

நாமக்கல் நகரில், இன்றைய[01.01.2018] காலைப் பொழுதில் ஒரு மணி நேரம்போல் தெருத்தெருவாகச் சுற்றி வந்தபோது, வண்ண வண்ணக் கோலங்களுடன் 'Happy New Year' என்னும் ஆங்கில வாசகங்களை மட்டுமே காண முடிந்தது[பொங்கல் திருநாளில் 'Happy Pongal' என்று எழுதுகிறார்கள். அரிதாகச் சிலர், 'பொங்கல் வாழ்த்து' என்று எழுதுகிறார்கள்].

'புத்தாண்டு வாழ்த்துகள்' தென்பட்டால் படம் எடுத்துப் பதிவில் இணைத்திட நினைத்திருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

ஆங்கிலத்தில் நான்கு வரிகள் பிழையில்லாமல் எழுதவோ, ஓரிரு மணித்துளிகள் பேசவோ[பெரும்பாலோர்] இயலாது எனினும் ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதிப் பெருமிதப்படுகிறார்கள் நம் தமிழ்க்குடிப் பெண்கள்.

ஆடவர்கள் எப்படி?

எனக்குப் 'பேசி'யில் புத்தாண்டு வாழ்த்துரைத்த பத்துப்பேரில் ஒருவர் மட்டுமே "புத்தாண்டு வாழ்த்துகள்" என்றார். நானும் பதிலுக்கு அவரைத் தமிழில் வாழ்த்தினேன். எஞ்சிய ஒன்பது நண்பர்களுக்கு[இனி அவர்கள் பகைவர்கள்தான்] அனுதாபம் தெரிவித்தேன்.

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாளில் 'Happy New Year' என்று எழுதிக் கோலமிட்ட, தமிழ்நாட்டின்  அனைத்து[தமிழகம் முழுதும் இதே நிலைதான் என்பது என் நம்பிக்கை] தமிழ்க் கண்மணிகளுக்கு என் நெஞ்சு நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் யாரேனும் எழுதியிருந்தால்[?] அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.

நல்ல நாளும் அதுவுமாக இப்படி அல்பத்தனமாய் ஒரு பதிவை வெளியிடுகிறாயே என்று கேட்கிறீர்களா?

என் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதற்குப் பெயர் அல்பத்தனம் என்றால் நான் மறுக்கப்போவதில்லை.

நன்றி.