எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

நீங்கள் ‘குமுதம்’ ஆசிரியராக இருந்திருந்தால்.....

கீழ் வரும் ’ஒ.ப.கதைகளை’த் தேர்வு செய்திருப்பீர்களா?

நீங்கள் வாசிக்கவிருக்கும் இரண்டு ஒ.ப.கதைகளும் அடியேன் எழுதியவை.

குமுதம் ஆசிரியரால்  அண்மையில் நிராகரிக்கப்பட்டவை!

குமுதம் ஆசிரியர்  பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

மனம் திறந்து உங்கள் முடிவைப் பதிவு செய்யலாம். செய்வீர்களா?

கதை 1:

தலைப்பு:                          விருது

ரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“என்னைக் காப்பாத்துங்க” என்று அவள் அவலக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, அவளுக்கு உதவ எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா. நான் வந்துகொண்டிருந்தபோது, ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியில், நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்திக்கொண்டு போனார்கள். நானூறு கோழைகள் வேடிக்கை பார்த்தார்கள். அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன்.

எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?

ரவுடிகள் இன்னும் ரவுடிகளாகவே இருக்கிறார்கள். கோழைகள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

நான் இவர்களை மட்டுமல்ல, இவர்களைத் திருத்தாத எழுத்துகளை, குறிப்பாக என் எழுத்தையே நான் வெறுக்கிறேன்; விருதுகளையும் வெறுக்கிறேன்.

என்னை மன்னியுங்கள்.

                                     *                                     *                                    *


கதை 2:

தலைப்பு:                            ஏழை மனசு

வேலை நாட்களில் பேருந்துக்குக் காத்திருக்கும்போது அந்தப் பிச்சைக்காரக் கிழவி கண்ணில் படுவதுண்டு.

இறந்துபோன என் பாட்டியின் சாயலில் இருந்ததாலோ என்னவோ, அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சில் இரக்கம் சுரந்துவிடும். சில்லரை இருந்தால் தவறாமல் பிச்சை போடுவேன். போன வாரத்தில் ஒரு ரப்பர் செருப்புக்குப் பணம்கூடக் கொடுத்தேன்.

இன்றும் அவள் என் கண்ணில் பட்டாள்.

இன்று, இரக்கத்திற்குப் பதிலாக, என் மனதில் கோபம் தலை தூக்கியது.

“கிழவி இங்கே வா.” அழைத்தேன்.

வந்தாள்.

“பணம் கொடுத்தேனே, ஏன் செருப்பு வாங்கல?”

”வாங்கிட்டேன் மவராசரே.”

“உன் காலில் செருப்பு இல்லியே?”

”அதுவா? பழைய பஸ் ஸ்டாண்டில் என் புருஷன் பிச்சையெடுக்குது. அதுக்குக் கொடுத்திட்டேன் சாமி” என்றாள் கிழவி.

புருஷன் மீதான கிழவியின் பாசம், என் உடல் முழுக்க லேசான சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

இன்னொரு ஜோடி ரப்பர் செருப்புக்குக் கிழவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் பஸ் ஏறினேன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதில் சற்றே தாமதம் ஏற்படும். மன்னித்திடுக.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000