செவ்வாய், 18 டிசம்பர், 2012

நீங்கள் ‘குமுதம்’ ஆசிரியராக இருந்திருந்தால்.....

கீழ் வரும் ’ஒ.ப.கதைகளை’த் தேர்வு செய்திருப்பீர்களா?

நீங்கள் வாசிக்கவிருக்கும் இரண்டு ஒ.ப.கதைகளும் அடியேன் எழுதியவை.

குமுதம் ஆசிரியரால்  அண்மையில் நிராகரிக்கப்பட்டவை!

குமுதம் ஆசிரியர்  பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

மனம் திறந்து உங்கள் முடிவைப் பதிவு செய்யலாம். செய்வீர்களா?

கதை 1:

தலைப்பு:                          விருது

ரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“என்னைக் காப்பாத்துங்க” என்று அவள் அவலக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, அவளுக்கு உதவ எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா. நான் வந்துகொண்டிருந்தபோது, ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியில், நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்திக்கொண்டு போனார்கள். நானூறு கோழைகள் வேடிக்கை பார்த்தார்கள். அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன்.

எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?

ரவுடிகள் இன்னும் ரவுடிகளாகவே இருக்கிறார்கள். கோழைகள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

நான் இவர்களை மட்டுமல்ல, இவர்களைத் திருத்தாத எழுத்துகளை, குறிப்பாக என் எழுத்தையே நான் வெறுக்கிறேன்; விருதுகளையும் வெறுக்கிறேன்.

என்னை மன்னியுங்கள்.

                                     *                                     *                                    *


கதை 2:

தலைப்பு:                            ஏழை மனசு

வேலை நாட்களில் பேருந்துக்குக் காத்திருக்கும்போது அந்தப் பிச்சைக்காரக் கிழவி கண்ணில் படுவதுண்டு.

இறந்துபோன என் பாட்டியின் சாயலில் இருந்ததாலோ என்னவோ, அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சில் இரக்கம் சுரந்துவிடும். சில்லரை இருந்தால் தவறாமல் பிச்சை போடுவேன். போன வாரத்தில் ஒரு ரப்பர் செருப்புக்குப் பணம்கூடக் கொடுத்தேன்.

இன்றும் அவள் என் கண்ணில் பட்டாள்.

இன்று, இரக்கத்திற்குப் பதிலாக, என் மனதில் கோபம் தலை தூக்கியது.

“கிழவி இங்கே வா.” அழைத்தேன்.

வந்தாள்.

“பணம் கொடுத்தேனே, ஏன் செருப்பு வாங்கல?”

”வாங்கிட்டேன் மவராசரே.”

“உன் காலில் செருப்பு இல்லியே?”

”அதுவா? பழைய பஸ் ஸ்டாண்டில் என் புருஷன் பிச்சையெடுக்குது. அதுக்குக் கொடுத்திட்டேன் சாமி” என்றாள் கிழவி.

புருஷன் மீதான கிழவியின் பாசம், என் உடல் முழுக்க லேசான சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

இன்னொரு ஜோடி ரப்பர் செருப்புக்குக் கிழவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் பஸ் ஏறினேன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதில் சற்றே தாமதம் ஏற்படும். மன்னித்திடுக.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





14 கருத்துகள்:

  1. இரண்டு கதைகளும் மிக நன்றாக இருந்தன.பிரசுரிக்கத் தகுதியானவையே!

    பதிலளிநீக்கு
  2. இது குமுதம் இதழில் பிரசுரிக்க கொஞ்சம்கூட தகுதி இல்லாத கதை..
    ஒரு ஆபாச பத்திரிக்கைக்கு அருவருப்பான நடிகைகளின் அந்தரங்க கதைகளை அனுப்பி வைக்காமல் இது போன்ற கதைகளை அனுப்பிவைத்தால் திருப்பி அனுப்பாமல் வேறு என்னதான் செய்வார்கள்?

    பதிலளிநீக்கு
  3. இரண்டும் அருமையான கதைகள். 100% worthy to be published.

    பதிலளிநீக்கு
  4. நீங்க குமுதத்துலதான் உங்க கதை வரணும்னு ஏன் ஆசைப் படறிங்க?

    பதிலளிநீக்கு
  5. marmayogie,

    குமுதம் இதழில் பிரசுரிக்கத் தகுதியில்லாத கதை என்று சொல்லி, என் படைப்புகளின் தரத்தை மிகவும் உயர்த்தியிருக்கிறீர்கள்.

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

  6. நன்றி LATEST APPS.

    தங்ளின் வருகைக்கும், வழங்கிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //குமுதத்தில்தான் உங்க கதை வரணும்னு ஏன் ஆசைப் படுறீங்க?//

    விற்பனையில் நம்பர் 1 என்ற வகையில் அதில் கதை வரவில்லையே என்று வருந்துவது தவறுதான்.

    தங்கள் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நிலாமகள்.

    பதிலளிநீக்கு
  8. Hi,

    The first story doesn't really create an impression of a story at all. So you cannot guarantee it to qualify for publishing.
    Moreover it is clear that the writer neethivaanan also didn't try to help that girl and simply crossed the place by justing watching everything. He doesn't have the right to blame others.

    Second story is simple yet good.
    It is surely worth publishing anyways.
    But it still lacks something. There should be a strong reason mentioned by the old lady.
    for eg, "in old bus stand the roads are very bad"
    You can even add something like this. "thats why my husband asked me to be here and he went there" etc...
    The first point shows the love the old lady has on her husband. When u add the second point also, it shows how they care for each other.

    Whenever we write something, it should touch the reader's heart and for that there should be an element of feeling. The feeling can be anything, surprise, sadness, love, care, affection, success, talent etc...

    Plain incidents create a plain report and not a good/impressive story.

    Hope you understand that i wrote this comment in goodwill, not as a bad criticism.

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி இளவரசி.

    இரண்டு கதைகளையும் நடுநிலை பிறழாமல் விமர்சித்திருக்கிறீர்கள்.

    “வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நானும் ஒரு கோழைதான்”என்று நீதிவாணனைச் சொல்ல வைத்திருக்கலாம்.

    நினைத்தேன்; எழுதத் தவறிவிட்டேன்.

    கோழைக் குணமுள்ள மக்களை வெறுப்பதோடு ,அவர் தன் எழுத்தையும் வெறுப்பதாக நான் சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா?

    சமுதாயத்தில் மாற்றங்களை நிகழ்த்தாத எழுத்துக்களால் பயன் ஏதுமில்லை; விருதுகள் வழங்குவதும் வீண் வேலை என்று சொல்வதுதான் இக்கதைகள் படைக்கப்பட்டதன் நோக்கம். அதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    பிரசுரத்துக்கு ஏற்ற கதை என்று நான் சொல்லவில்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள். நல்ல கதைகள் என்று நான் நம்பினேன்; பதிவிட்டேன். அவ்வளவுதான்.

    பின்னூட்டம் எழுதியவர்களில் பெரும்பாலோர் கதைகளைப் பாராட்டியிருக்கிறார்கள். எவ்வகையில் என்பது எனக்குத் தெரியாது.

    ‘ஏழை மனசு’ பிரசுரத்துக்கு ஏற்றது என்கிறீர்கள். மகிழ்ச்சி.

    கிழவனும் கிழவியும் பிச்சைக்காரர்கள்.வெறுங்காலுடன் திரிவது சாத்தியமே. அவ்ர்களுக்குச் செருப்பு தேவை. சாலை பற்றியெல்லாம் குறிப்பிட வேண்டுமா என்ன?

    இவை ஒரு பக்கக் கதைகள். ஆசாபாசங்கள் பற்றியெல்லாம் விவரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

    கதைகளில், குமுதம் ஆசிரியர் குறைகள் கண்டதால்தான் பிரசுரிக்கவில்லை என்று நினைக்கிறேன். காரணம்......

    குமுதத்தில் 20 க்கும் மேலான என் கதைகள் வெளியாகியுள்ளன.

    என் வலைத்தளத்திற்கு வருகை புரிந்து, கதைகளை ஆழ்ந்து படித்து, கருத்துகள் வழங்கியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    மீண்டும் நன்றி இளவரசி.

    பதிலளிநீக்கு
  10. //nice stories//

    தங்களின் பாராட்டுரைக்கு என் மனம் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு