கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

திங்கள், 5 மார்ச், 2012

கடவுளைக் காக்கும் தாய்க்குலம்! [சிறுகதை]                          கடவுளைக் காக்கும் தாய்க்குலம்! [சிறுகதை]


ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.


அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.


ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான
மதுரைக்கு மாறுதல் பெற்றார்.


பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.


பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.


“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ நோய்வாய்ப்பட்டிருந்தே. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால, ஒரு சில வருசங்களில் நீ இறந்துடுவேன்னு டாக்டர்கள் சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. நீ சாவை எப்படி ஜெயிச்சே?”-ராசுவின் குரலில் ஏராள ஆர்வம்.


“சாவை விரட்டியடிக்கணும்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். படிப்படியா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப் பட்டாங்க” என்றான் அறிவழகன்.


அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.


அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.


“உன் மகனுக்கு நோய் எப்படிக் குணமாச்சு?” 


“அஞ்சு வருசமா நான் போகாத கோயில் இல்ல. வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- அறிவழகனின் அம்மா குரலின் ஏகப்பட்ட உருக்கம்!


“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு அஞ்சு வருச அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல?” என்று கேட்டான் அறிவழகன்.


“இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா”. அவசரமாக அவன் வாய் பொத்தினார் அம்மா.


*********************************************************************************