சனி, 29 பிப்ரவரி, 2020

எழுத்தாளர் சுஜாதாவின் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பற்று!


மறைந்த எழுத்தாளர் சுஜாதா, எளிய தமிழில் சலிப்புத் தட்டாத நடையில் அறிவியல் செய்திகளைத் தந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மீது அளவிறந்த பற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அவர் என்பதை அறியாதவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக இப்பதிவு. 

'உயிர்மை பதிப்பகம்’ வெளியிட்ட, ‘சுஜாதாவின் பதில்கள்’ என்னும் நூலிலிருந்து சில கேள்விகளும் அவற்றிற்கான சுஜாதாவின் பதில்களும்:

வெ.வாசுதேவன், சேலம்.
தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது.

ந.ச.மணிமாறன், திருவண்ணாமலை.
தேவாரப் பாடல்களைப் பாடி நம்முடைய துன்பத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடலாம் என்று முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கூறியிருப்பது பற்றி?

திருமதி நம்பி ஆரூரன் கூறுவது நம்பிக்கையின் பாற்பட்டது. விடுபட முடிகிறதோ இல்லையோ, துன்பத்தையும் நோயையும் மறக்கச் செய்யும் ‘இனிமை’ பழந்தமிழ்ப் பாடல்களில் உண்டு. பெரியாழ்வாரின் ‘நெய்க்குடத்தை’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் பலர் வியாதிகளையும் துன்பங்களையும் தடுத்திருக்கின்றன.


எஸ்.அகிலா, தென்கடப்பந்தாங்கல்.
ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா?

அப்படியும் ஒரு கதை. உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.


கே.எல்.சுபாகனி, மதுரை.
உலக இலக்கியங்களில் தலை சிறந்தது எதுங்க?

எனக்குத் தெரிந்தவரை திருக்குறளுங்க.


ரெவீ, சென்னை.
கம்ப்யூட்டர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தமிழ்படுத்துவது தமிழரை ஒரு வட்டத்திற்குள் சுருக்கும் முயற்சியாகத் தெரியவில்லையா உங்களுக்கு? எனில், உலக அரங்கில் நம்மால் எவ்விதம் முன்னேற முடியும்?

இதே கேள்வியை ஜப்பானியரும் சைனாக்காரரும் கேட்பதில்லை. அவர்கள் கம்ப்யூட்டர் படிப்பதெல்லாம் அவரவர் தாய்மொழியில்தான். இன்று ‘சிலிக்கன் வேலி’யில் இந்தியர்களைவிடச் சைனாக்காரர்கள் அதிகம். உலக அரங்கில் முன்னேறுவதையும் தாய்மொழியில் கற்பதையும் போட்டுக் குழப்பாதீர்கள். நம் தாய்மொழியில் முறையாகக் கற்றுச் சாதனைகள் புரிந்தால், வெள்ளைக்காரர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தமிழ் கற்றுக்கொள்வார்கள்.

ஜெயாசரண், இராமநாதபுரம்.
கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி தமிழ் என்கிறார்களே, அது எப்படி?

எழுத்துகள் குறைவு. ஒத்தாட்சரம், சம்யுக்தாட்சரம் என்று கூட்டெழுத்துகள் இல்லாமல் நேராக எழுதப்படும் மொழி. வரிவடிவ எளிமை. வட்டங்களும் சதுரங்களும் கொண்டது. குழப்பங்கள் அதிகம் இல்லை. இதனால், கணிப்பொறியால் பிழை திருத்துவதும் அடையாளம் காண்பதும், அதனுள் தமிழை உள்ளிடுவதும் சுலபம்.

சி.எஸ். சரவணகுமார், வேம்படிதாளம்.
வங்காள, மலையாள இலக்கியங்கள் வளர்ந்தது போல் தமிழ் இலக்கியங்கள் வளராதது ஏன்?

படிக்காமல் சொல்கிறீர்கள்.

அய்யை சி.முருகேசன், கடவூர்.
ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குறளிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன்?

தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான். உலகப் பொதுமறை அது. அனைத்து மொழியினருக்குமான பொதுச் சொத்து. மொழி கடந்த மனித நீதி.
========================================================================

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும்...எப்போது?



மனிதர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கண்டுபிடித்துச் சொல்லும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால், ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும். 

முயன்றால் முடியும்!
=======================================================================




செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

‘உயிருக்கு உருவம் உண்டு’...சத்குரு[?!] ஜக்கி வாசுதேவ்!

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/uyir-udalukku-serum-vazhi-kalpanath -இது ஜக்கி தன் தத்துவப் போதனைகளைப் பதிவு செய்யும் தளம்.

பல்வேறு தலைப்புகளில் அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறார்.

தளத்தின் ‘தேடல்’ பகுதியில், ‘உயிர்’ என்று தட்டச்சு செய்தால், அது குறித்த அவரின் எண்ணங்கள் பல தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருப்பதைக் காண இயலும்.

உடம்புக்குள் உயிர் புகும் வழிமுறை குறித்தும் ஒரு தலைப்பில் விவரித்திருக்கிறார் ஜக்கி. அதன் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

#கல்பா என்றால் படைப்பு. முழுக் கர்ப்பக் காலத்திற்குப் பின் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களுள் ஒரு பகுதி மட்டும் முழுதாக வளர்ந்திருக்காது. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது தலையின் மேல்பகுதி.

பிறப்பின்போது அப்பகுதி முழுவதுமாக வளர்ந்திருக்காது. ஏனென்றால், அந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் உங்கள் உடலுக்குள் நுழைகிறது. நீங்கள் உயிரை உருவாக்கவில்லை, உயிருக்கு ஓர் இருப்பிடத்தைத்தான் அளிக்கிறீர்கள். நீங்கள் உயிருக்கான பாத்திரத்தை, கோப்பையை உருவாக்குகிறீர்கள். அதற்குள் உயிர் தானாகத்தான் நுழையமுடியும். அந்த இடத்தின் வழியாகத்தான் உயிர் நுழைகிறது. அதனால்தான், அது முழுமையாக வளர்ந்திருக்கவில்லை#

‘ஒரு மனிதனுக்கு இறப்பு நிகழும்போது அவனுடைய உடம்பு மட்டுமே அழிகிறது. உயிர் அதிலிருந்து வெளியேறிவிடுகிறது’ என்னும் ஆன்மிகவாதிகளின் பரப்புரைக்கு எதிர்வினையாக, ‘உடம்பு அழியும்போது உயிர் அழிவின்றி வெளியேறுகிறது என்றால், அது உடம்புக்குள் எப்போது எப்படி நுழைந்தது?’ என்று கேட்டார்கள் பகுத்தறிவாளர்கள்.

அந்தக் கேள்விக்குத்தான் இப்படியானதொரு பதிலைத் தந்திருக்கிறார் ஜக்கி. [கருவைச் சுமந்திருக்கிற தாயின் உடம்புக்குள் நுழைந்த பின்னர்தான் கருவிலுள்ள குழந்தைக்குள் உயிர் நுழைந்திட முடியும். தாயின் உடம்பிலுள்ள பல துவாரங்களில் எந்தத் துவாரத்தின் வழியாக அது நுழைந்தது என்பது பற்றி விளக்கம் தர மறந்துவிட்டார் அல்லது தவிர்த்துவிட்டார் இவர்].

இவருடைய கருத்தின்படி, குழந்தையின் உடம்பிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக உயிர் நுழைகிறது. இதன் மூலம், உயிருக்கு உருவம் உண்டு என்பது அறியப்படுகிறது. 

உயிர் உருவமற்றது, அதாவது அருவமானது எனின், நுழைவு வழி ஏதும் இல்லாமலே அதனால் குழந்தையின் உடம்புக்குள் ஊடுருவி அதனுள் தங்கிவிட முடியும்[இவை எல்லாமே அனுமானங்கள்தான். அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட கருத்துருக்கள் அல்ல..

ஆக, ஜக்கி வாசுதேவின் கருத்துரையின்படி உயிருக்கு உருவம் உண்டு என்றாகிறது.

அது உண்மையாயின், உயிரின் உருவம் குறித்துத் தெளிவானதொரு விளக்கவுரை தருவாரா ஜக்கி வாசுதேவன்?

உயிர் குறித்து நான் எழுதிய[2016இல்] ஒரு பதிவு:
https://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_8.html
=======================================================================
அறிவியல் ரீதியாகத் தான் சொல்லும் கருத்துகள் சரியானவைதானா என்பது பற்றிக் கிஞ்சித்தும் கலைப்படாமல் எழுதித் தள்ளுகிறார் இவர். இவர் சொல்வனவெல்லாம் சரியானவைதானா என்று இவரின் பக்த கோடிகளும் சிந்திப்பதில்லை. காரணம், அவர்கள் பக்தர்கள் அல்ல; பித்தர்கள்.

ஜக்கியின் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!! 

திங்கள், 24 பிப்ரவரி, 2020

முதலில் ‘இது’! அப்புறம் ‘அது’!!

இருதயம் சீராக இயங்கும்வரைதான் அணுக்களால் ஆன உடம்புடன் நம்மால் வாழ்ந்திட முடியும்.  இருதயம் செயலிழந்தால், அணுக்களால் ஆன உடம்பும் அழிகிறது. உண்டு உறங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து, இன்பதுன்பங்களை அனுபவித்து வாழ்ந்த நாம் அழிந்துபோகிறோம். 

இந்த உடம்பு இருக்கும்வரை ‘நான்’ என்னும் உணர்வு நமக்கு இருக்கிறது.

உடம்பு அழியும்போது அந்த ‘நான்’ என்னும் உணர்வும் அழிந்துபோகிறது. ஆக.....

உடம்பு இல்லையேல், ‘நான்’ இல்லை; நாமும் இல்லை; ஞானிகளும் இல்லை; அவதாரங்களும் இல்லை; மேதைகளும் இல்லை.

செத்த பிறகு, மிச்சம் மீதி என்று எதுவுமே மிஞ்சாமல் முற்றாக அழிந்துபோவதை விரும்பாத மனித மனம், உடம்பு அழிந்தாலும், அதனுள்ளே அழியாத ஒன்று இருப்பதாக நம்பியது. அதற்கு ‘உயிர்’ என்று பெயரிட்டது. [ஆன்மிகவாதிகள் அதை ‘ஆன்மா’ என்கிறார்கள். இங்கு இது குறித்து ஆராய்வது நம் நோக்கமல்ல].

நம் உடம்போடு தொடர்புபடுத்தப்படும் இந்த உயிர் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதே மனிதகுலத்தின் இப்போதைய தேவை; இன்றியமையாத் தேவையும் ஆகும்.

உயிர் என்ற ஒன்று இல்லையெனின், நமக்கு வாய்த்த அற்ப ஆயுளைக் கடவுளின் உதவி இல்லாமலே கழித்துவிட முடியும். செத்தொழிந்த பிறகு அவர் நமக்குத் தேவையற்றவர் ஆகிறார். எனவே, உயிர் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அனைத்தையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளைப் பற்றி ஆராயலாம். 

உயிர் பற்றிய ஆராய்ச்சியைப் புறக்கணித்து.....

கடவுள் குறித்து விவாதித்தும், சண்டையிட்டும், போர் செய்தும்  நமக்கு வாய்த்த மிக மிக மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பது அடிமுட்டாள்தனம் ஆகும்.
=======================================================================

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

விகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது?!

’சாய்பாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயங்களை உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்’ என்று பல வாரங்களுக்கு முன்பே தன் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆனந்த விகடன்.

வாசகர்கள் எழுதியனுப்ப, அவற்றை வாரந்தோறும் வெளியிட்டது; வெளியிடுகிறது.

‘வெறும் பச்சை மண் குடத்தில் நீர் எடுத்துச் செடிகளுக்கு நீர் வார்த்தார் பாபா’ என்று ஒரு வாசகர் கதை விட்டிருந்தார்[இது குறித்து நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன் https://kadavulinkadavul.blogspot.com/2019/11/blog-post_12.html ].

பின்னர் நான் வாசித்த [அதிசய] நிகழ்வுகள் எல்லாம் கற்பனைக் கதைகளாகவே இருந்தன.

சினிமாப் பித்துப் பிடித்து அலைந்த ஒரு மாணவர், 05 அரியர்ஸ் பேப்பர் எழுதித் தேர்ச்சி பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் சாய்பாபாவைச் சரண் அடைந்தாராம்; இரவில் விழுந்து விழுந்து படித்தாராம். வினாத்தாளில் இவர் படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தனவாம். இது.....

பாபாவின் அருளால் இது நடந்தது[இப்படிக் கதைகள் எழுதி எழுதியே, மனிதராகப் பிறந்து, மனிதராக வாழ்ந்து மனிதராகவே செத்தொழிந்த பலரைக் கடவுளின் அவதாரம் ஆக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்] என்று புளகாங்கிதப்படுகிறார் கதிரேசன் என்னும் அந்த மாணவர். 

இப்படிப் பொய்யுரைக்காமல், விடிய விடிய விழுந்து விழுந்து படித்தேன். எனக்கான ஒரு நல்ல வாய்ப்பாக நான் படித்த[எதிர்பார்த்த] கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன என்று சொல்லியிருந்தால் அது ஏற்கத்தக்கது. இது விகடனுக்குப் புரியாமல் போனது ஏன்?! 

அடுக்குமாடி வீட்டுக்காக ஒருவர் ஒப்பந்தம் போட்டாராம். ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லையாம். இவர் சாயிபாபாவைச் சரணடைந்தாராம். அவருடைய கருணையால் பழைய ஒப்பந்ததாரருக்குப் பதிலாக வேறொருவர் பொறுப்பேற்கவே இவரின் பிரச்சினை தீர்ந்ததாம்.

காலந்தோறும், நம் மக்கள் கணக்கு வழக்கில்லாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார் பாபா? 

அறியாமையின் காரணமாக, தற்செயலாக நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை, பாபா நிகழ்த்திய அதிசயங்களாக நினைக்கும் எவரோ சிலர் சொல்வதை விகடன் நம்புகிறதே, அது எப்படி?

‘என் அத்தை மகளை ரத்தப் புற்று நோய் தாக்கியது. என் அத்தை யார் சொல்லியும் மருத்துவமனையில் சேர்க்காமல், மகளுடன் சீரடி சென்று சாய்பாபாவை வழிபட்டார். நோய் குணமானது.’

‘கடந்த மாதம் எனக்குச்

சனி, 22 பிப்ரவரி, 2020

மூடர்களும் ஊடகக்காரர்களும்!

எங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்குப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்’ என்று செய்தி  சொல்லி/ வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையை அல்லது, தொ.கா.வின் பார்வையாளர்களை அதிகரிக்க முயல்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வேப்பங்காயைப் பறித்தால் பால் சிந்துவதைக் கண்கூடாகக் காணலாம். அந்தப் பால்தான் அதிக அளவில் ஊறும்போது மரத்தின் கிளையிலும் அடிமரத்திலும் வெளிப்பட்டு வழிகிறது.

இது தெரிந்திருந்தும், வேப்ப மரத்தில் பால் வடிவது ஓர் அதிசயம் என்பதாகச் செய்தி வெளிட்டு, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் தடுக்கிறார்கள் ஊடகவியலார். மூடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தால் இவர்களின் காட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும்!

“வேப்ப மரத்தில் பால் வடியாமல் தேனா வடியும் முட்டாள்களே?” என்று கேட்டு இவர்களைச் சாடுவதற்கு இங்கு யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அரசும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

ஊடகங்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரத் தேவையாக இருப்பதுதான்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

‘காமத்திலிருந்து தியானத்திற்கு!’

கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் சிலர் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]

எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு என்று தான் வழிபடும் சாமியிடம் புலன்களை வருத்திப் புலம்புவது தியானமா?

தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச்  சொன்னவர் எவருமில்லை.

முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.

மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான்  தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். சத்குரு ஜக்கி வாசுதேவ்களும் ரஜனீஷ்[“உடலுறவின்போது பெறும் இன்பத்தின் கால அளவைத் தியானத்தின் மூலம் நீட்டிக்க முடியும்”] என்னும் செக்ஸ் சாமியார்களும் தேவையில்லை. இவர்கள் சொல்லும் தியானத்திற்குப் பதிலாக.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.’

‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’

‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’

‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.

’தியானம்’ குறித்த மிகப் பல செய்திகளை உள்ளடக்கியது ‘காமத்திலிருந்து தியானத்திற்கு’ என்னும் இந்த நூல். இதை[34ஆவது நூல்] இன்று[20.02.2010] அமேசான் கிண்டிலில் இணைத்துள்ளேன்.





புதன், 19 பிப்ரவரி, 2020

இது அடாவடித்தனம்! அக்கிரமம்!! அநியாயம்!!!

//செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட, சுமார் ‘22 மடங்கு’ கூடுதலாக, சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது// -இது, 18.02.2020இல் வெளியான ‘இந்து தமிழ்’ நாளிதழ்ச் செய்தி.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சில நூறு பேர்கள் பேசுகிற மொழி சமஸ்கிருதம். எந்தவொரு மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும் இது இல்லை; அறிவியல் வளர்ச்சிக்குக் கிஞ்சித்தும் பங்களிப்புச் செய்யாத மொழி. இதை வளர்ப்பதாகச் சொல்லி இந்த நிதியாண்டில்[1919 - 20] ரூ231.15 கோடி ஒதுக்கியுள்ளார்கள். 

காலங்காலமாய் நாட்டை ஆண்ட மன்னர்களைத் தம் வசப்படுத்தி, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று அவர்களையெல்லாம் நம்ப வைத்து, அதை வளர்த்து, தாமும் வளர்ந்து, கோயில்களின் வழிபாட்டு மொழியாகவும் ஆக்கியவர்கள் மகா புத்திசாலிகள்.

அன்றெல்லாம் ஆளும் மன்னர்களைத் தம் அடிமைகளாக்கி வைத்திருந்த ‘அவர்கள்’ இன்றைக்கெல்லாம் ஆளுவோரைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பது சிந்திக்கத் தக்கது. 

இது போன்ற, ‘சமஸ்கிருத வளர்ச்சி’குறித்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? 

இந்த நாட்டை ஆளுகிற பிரதமர் மோடி அவர்களும், அமைச்சர் ..... அவர்களும் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தம் தாய்மொழியைக்கூடப் புறக்கணித்து சமஸ்கிருத வளர்ச்சியில் இவர்கள் மிகுந்த அக்கறை காட்டுவது புரிந்துகொள்ள இயலாத புதிராக உள்ளது.

‘மற்ற செம்மொழிகளைக் காட்டிலும் சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி வெளியாகிச் பல மணி நேரம் ஆன பிறகும், பிற மொழி பேசும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த நிதியாண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

2017 - 18..........ரூ198.31 கோடி.
2018 - 19..........ரூ214.38 கோடி

கோடி கோடியாக நிதி ஒதுக்கி வளர்க்கிறார்களே, இந்தத் தெய்வீக பாஷை வளர்ந்ததா?

இதன் வளர்ச்சி நம் நாட்டு வளர்ச்சிக்கு எவ்வகையிலெல்லாம் பயன்பட்டது?

எவரேனும் போதிய ஆதாரங்களுடன் புள்ளிவிவரம் தருவார்களா?
=======================================================================


வியாழன், 13 பிப்ரவரி, 2020

அற்ப ஆயுளில் ‘கற்பு’ !!!

தமிழரின் பொற்காலம் எனப்படும் சங்க காலம் முதல் அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நூற்றாண்டுவரை, போற்றுதலுக்குரிய ஒழுக்க நெறி என்று நம்மவரால் வலியுறுத்தப்பட்ட ‘கற்பு’ குறித்துப் பேசும் நூல் இது[‘கற்பின் கதையும் கதியும்’].

தலைப்பைச் சொடுக்கி, நூலின் ‘முன்மாதிரி’[Sample]யாகவுள்ள சில பத்திகளையேனும் வாசியுங்கள். அமேசானின் சந்தாதாரராயின் முழு நூலையும் இலவசமாகப் படிக்க இயலும்.


புதன், 12 பிப்ரவரி, 2020

நாத்திகர்கள் சிறுபான்மையினர் அல்லர்!!!

நாத்திகர்களைப் பிற மதத்தவரைக் காட்டிலும் இந்து மத வெறியர்களே மிகக் கடுமையாகச் சாடுகிறார்கள்; தாக்குதல் நடத்துகிறார்கள். காரணம், ‘அவர்கள்[நாத்திகர்கள்] மிகச் சிறுபான்மையினர்; எதிர்த்தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையற்றவர்கள்’ என்று அவர்கள் நம்புவதுதான்.

உண்மை நிலவரம் முற்றிலும் மாறானது.

இது குறித்ததொரு புள்ளிவிவரத்தை உலக அளவிலான இரண்டு ஆய்வு நிறுவனங்கள்[பியூ பாரம், வோர்ல்டோமீட்டர்] வெளியிட்டுள்ளன.

அப்புள்ளிவிவரத்தின்படி, உலகில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அறியத்தக்கது.

நன்றி: ‘தினத்தந்தி’ நாளிதழ்[சில நாட்கள் முன்பு வெளியானது]

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நடிகர் ரஜினி ஒரு ‘மகத்தான’ மனிதரா?

நடிகர் ரஜினியால்தான் தமிழ்நாடு ‘சுபிட்சம்’ பெற முடியும் என்று நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிற தமிழருவி மணியன், அவர் மீதான தன் நம்பிக்கையை, ‘ராணி’[09.02.2020] வார இதழுக்கு வழங்கிய கருத்துரையில், ‘ரஜினியே தனது நம்பிக்கை நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டதோடு.....

‘அவர்[ரஜினி] ஒரு மகத்தான மனிதர்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

ரஜினி ஒரு நல்ல நடிகர் என்பது நமக்குத் தெரியும். அவர் பின்பற்றும் ஆன்மிகம் பற்றியோ, அரசியல்வாதி ஆவது குறித்தோ மணியனிடம் நாம் விளக்கம் ஏதும் கேட்க விரும்பவில்லை. கேட்க விரும்புவது.....

அவரை மகத்தான மனிதர் என்கிறாரே, ‘ரஜினி மகத்தான மனிதர் ஆனது எப்படி?’ என்பது பற்றி விரிவானதொரு அறிக்கை வெளியிடுவாரா?

அது தவிர, ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்குகிற இவர், ‘தமிழருவி மணியன் ஒரு உத்தமன்; யோக்கியன்’ என்று மக்களிடம் சான்றிதழ் பெறுதல் வேண்டும். 

பெறுவாரா? எப்போது?

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

‘அவர்கள்’ அதிபுத்திசாலிகள்! நாம் அடிமுட்டாள்கள்!!

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ் இடம்பெற்ற நாளிலிருந்து ‘அவர்களில்’ சிலருக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.  தம் ஆற்றாமையை நாளிதழ்களில், கட்டுரைகள் எழுதியும்  ஆசிரியருக்குக் கடிதங்கள் வரைந்தும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சமஸ்கிருதம்  சிவபிரான் பயன்படுத்திய மொழியாம்[தமிழ், அரக்கர்கள் பயன்படுத்திய மொழியோ?!] ஆகமங்கள் இறைவழிபாட்டுக்கென்றே இறைவன் உணர்த்தியதாம்!!! -அவர்களில் ஒருவர் இப்படிப் 'புருடா’ விட்டிருக்கிறார்!!!

தினமணி நாளிதழில் வெளியான அது தொடர்பான கடிதம்:

காலங்காலமாய், அவர்கள் பரப்புரை செய்த ஏராள பொய்க்கதைகளை ஏற்று வாழ்ந்தார்கள் பெரும்பான்மைத் தமிழர்கள். இன்றளவும் அந்தத் தமிழர்களின் எண்ணிக்கை குறையாமலிருப்பதே இம்மாதிரிக் கடிதங்களை ஸத்தியமூர்த்திகள் எழுதிக்கொண்டிருப்பதற்குக் காரணம் ஆகும்.

கீழே காண்பது மேற்கண்ட கடிதத்திற்குப் ‘பதிலடி’ தருவதாக அமைந்துள்ளது.

புலவர் ச.மு.விமலானந்தன் அவர்களுக்கு நம் நன்றி.

சனி, 8 பிப்ரவரி, 2020

கடவுளும் ‘காப்பி - பேஸ்ட்’டும்!!!

அண்டவெளியிலுள்ள[பூமி உட்பட] பொருள்களிலோ உயிர்களிலோ ஒன்றைப் போல் இன்னொன்று[அணுவளவும் மாற்றம் இல்லாமல்] இருந்ததில்லை; இருந்துகொண்டிருக்கவுமில்லை' என்று விஞ்ஞானிகள் சொல்வதாக ஆய்வியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கு மூலமாக விளங்குகிற கோடி கோடி கோடானுகோடியோ கோடி 'அணுத்திரள்'களிலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை என்கிறார்கள்.

புதிது புதிதாக அணுக்களும் பொருள்களும் உயிர்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதாவது, பழையன கழிந்து புதியன புகுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தோன்றிக்கொண்டிருக்கிற எந்த ஒன்றும், தோன்றி மறைந்த இன்னொன்றைப் போல இல்லை என்பது மிகப் பெரிய விந்தை.

இந்த விந்தை தன்னிச்சையாய் நிகழ்கிறதா அல்லது நிகழ்த்தப்படுகிறதா?

நிகழ்கிறது எனின் அது இயற்கை. நிகழ்த்தப்படுகிறது எனின் அது கடவுள்[கடவுள் தோன்றியது எப்படி? படைப்பாற்றல் அவருக்கு எப்படி வாய்த்தது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை பகர்ந்தவர் எவருமிலர்] எனப்படுபவரின் சாகசமாக இருக்கக்கூடும்.

ஒன்றைப் போல இன்னொன்று உருவாதல் என்னும் நிகழ்வு, கடந்த காலங்களில் இல்லை[???]; நிகழ்காலத்திலும் இல்லை.

நிகழ்வுகள் என்பது இனியும் கால வரம்பற்றுத் தொடரவிருப்பது. அதாவது, பொருள்களும் உயிர்களும், 'வெளி' உள்ளளவும் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கக்கூடும்.

நம் கேள்வி: எதிர்காலத்திலேனும் அச்சு அசலாக ஒன்று போல்  இன்னொன்று [தன்னிச்சையாகத்] தோன்றுமா? அல்லது, கடவுள் எனப்படுபவர் தோற்றுவிப்பாரா?

குறிப்பாக.....

ஒரு திருவள்ளுவரைப் போல் இன்னொரு திருவள்ளுவரும் பெரியாரைப் போல் இன்னொரு பெரியாரும் தோன்றுவார்களா, தோற்றுவிக்கப்படுவார்களா?

'பசி'பரமசிவம் போல்[ஹி...ஹி...ஹி...] இன்னொரு 'பசி'பரமசிவம் தோன்றுவாரா, தோற்றுவிக்கப்படுவாரா?!

எப்போது?

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

சதையும் கதையும் 3: ‘காமத்தீ’!

காரிருளில் புதையுண்டு கிடக்கிறது அந்தப் பெரிய தென்னந்தோப்பு. ஆடிக்காற்றில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் சலசலப்பு. ஆந்தைகளின் அலறல். திட நெஞ்சிலும் திகிலூட்டவல்ல கோட்டானின் குரல். நடுநிசியின் பிடியிலிருந்து மெல்ல நழுவிக்கொண்டிருந்தது நேரம்.

தோப்பின் நடுவில் தென்னங்கீற்றால் வேயப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடந்தது ஒரு குடிசை. இரண்டு மனித உருவங்கள் அந்தக் குடிசையை நோக்கி நடந்துகொண்டிருந்தன.

“கந்தா...”

“சொல்லுங்க எசமா.”

“நான் அவளோட ‘இருக்க’ வர்றேன்னு அவகிட்ட சொல்லுடா.”

“சொல்லுறேனுங்க. ஆனா, கிழவனும் அந்தக் குட்டியோட இருப்பானுங்களே?”

“நான் அவனைச் சரிகட்டிட்டேன். நான் வரச்சொன்னேன்னு சொல்லு. வெளியே வந்துடுவான்.”

“கெழவனுக்குப் பெத்த பாசம் இருக்குமுங்களே?”

“காத்தம்மா சின்ன வயசிலேயே பெத்தவங்களை இழந்ததும், தூரத்துச் சொந்தமான கிழவன் அவளை வளர்த்து ஆளாக்கினதும் உனக்குத் தெரியாதா? நான் வரச்சொன்னேன்னு சொல்லு, வந்துடுவான்.”

“ஏற்கனவே ரெண்டு தடவை முயற்சி பண்ணுனீங்க. அவ இடம் குடுக்கலீங்களே?

“இந்தத் தடவை ஒரு முடிவோடதான் வந்திருக்கேன். நான் குடிசைக்குள் போனதும் தட்டிக்கதவை வெளியே பூட்டிடு. சம்மதிப்பான்னு நினைக்கிறேன். பிகு பண்ணினா பலவந்தம்தான்” என்று திடமான தன் முடிவைச் சொன்னார் தோப்பின் உரிமையாளரும் ஊர்ப் பெரியதனக்காரருமான பெரியசாமி.
அவர் எதிர்பார்த்தது நடந்தது.

கந்தனின் குரல் கேட்ட மறு வினாடியே, காத்தம்மாவின், “போகாதே தாத்தா. எனக்குப் பயமா இருக்கு” என்ற கெஞ்சலைப் புறக்கணித்து வெளியேறினான் கிழவன்.

பெரியதனக்காரர்  பெரியசாமி குடிசையில் நுழைந்ததும் அதை வெளியே பூட்டினான் கந்தன்.

"காத்தம்மா...” -குரலில் தேனொழுகச் சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி, ஆரத் தழுவ முற்பட்டார் பெரியதனக்காரர்.

“ரொம்பத்தான் அவசரமோ?” என்று கேட்டுக்கொண்டே சற்றுப் பின்னோக்கி நகர்ந்த காத்தம்மா, தட்டிக் கதவை நெருங்கினாள்; இருட்டில் எதையோ தேடினாள்.

“கதவைத் திறந்துட்டு வெளியே ஓடிடலாம்னு பார்க்கிறியா? அது நடக்காது. நீ இப்படிச் செய்வீன்னு தெரியும். நான் உள்ளே நுழைஞ்சதும் கந்தன் வெளியே பூட்டிட்டான்” -சிரித்தார் பெரியசாமி.

“நான் ஓட நினைக்கல.” -தொடர்ந்து எதையோ தேடினாள் காத்தம்மா.
“என்ன தேடுறே?”

“இருட்டா இருக்கே. லாந்தரைப் பத்த வைக்கலாம்னு தீப்பெட்டி தேடுறேன்.” -சொல்லிக்கொண்டே ஒரு பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையைத் தட்டிக் கதவின் மீது இறைத்தாள்.

“என்ன அது சீமெண்ணை நாத்தம்?”

“கை பட்டுப் பாட்டில் எண்ணை கீழே கொட்டிடிச்சு.” -சொல்லிக்கொண்டே தீக்குச்சியை உரசித் தட்டிக்கதவின் மீது வீசினாள் காத்தம்மா.

‘குப்’பென்று பற்றிய தீ தட்டியை எரித்துக்கொண்டே ஏனைய இடங்களுக்கும் பரவியது.

கடும் அதிர்ச்சிக்குள்ளான பெரியசாமி, அலறினார்.

சுழன்று சூழ்ந்து பரவிக்கொண்டிருந்த பெரு நெருப்பிலிருந்து தப்பிக்க வழிய்ல்லை என்பதைப் புரிந்துகொண்ட அவர், “என்னோட நீயும் இந்த நெருப்புக்கு இரையாகப்போறதை மறந்துட்டியா?” என்று பதறியவாறு சொன்னார்.

“மறக்கல. நீ என்னைத் தழுவினா அதனால உண்டாகிற களங்கத்தைக் கழுவத்தான் குடிசைக்கு நெருப்பு வெச்சேன்” என்று கூறிச் சிரித்த காத்தம்மாவின் வெறிச் சிரிப்பு அந்த ராத்திரி நேரத்தில் அந்தப் பெரிய தோப்பையே அதிரவைத்தது; காற்றில் கலந்து நெடுந்தொலைவுக்குப் பரவியது.
========================================================================

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுள் மறுப்பாளர்கள் இந்துமதத்தை மட்டும் சாடுவது ஏன்?

பெரியார் குறித்த, நடிகர் ரஜினியின் மெய்யும்[சாமி படங்கள் செருப்பால் அடிக்கப்பட்டது] பொய்யும்[படங்கள் அம்மணக் கோலத்தில் இருந்ததாகச் சொல்வது]  கலந்த உரை தொடர்பாகக் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று. 

இப்பிரச்சினை குறித்து, நாடறிந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளருமான கொளத்தூர் மணி அவர்கள் ஆனந்த விகடன்[6.2.2020] வார இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

கேள்வி:
இந்துமதத்தை  மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஆபாசங்களையும் இது போல் விமர்சிப்பதில்லையே, பயமா? 

கொளத்தூர் மணி அவர்களின் பதில்:
நன்றி: விகடன்

சுத்தம் என்ன விலை[இந்துக் கோயில்களில்]?

தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இருக்கும் சுத்தம் இந்துக் கோயில்களில் பேணப்படுகிறதா? இந்துக்களின் வழிபாட்டு முறையே அசுத்தமாக இருக்கும்போது, கோயில்கள் மட்டும் எப்படி சுத்தமாக இருக்க முடியும்?
அங்கப் பிரதட்சணம் செய்கிறோம் என்று கோயில் முழுக்க தண்ணீர் ஊற்றுகிறார்கள். தேங்காய், பூசணிக்காயை கோயில் வாசலில் உடைத்து குப்பையாக்குகிறார்கள். அபிஷேகம் செய்கிறோம் என்று பால், மஞ்சள், இளநீர், தேன், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், தயிர், விபூதி, குங்குமம், நெய் ஆகியவற்றை சிலைகளின் மீது கொட்டுகிறார்கள். அபிஷேகத்திற்குப் பின் இதே பொருட்கள் குப்பையாக கோயிலின் பின்புறம் சேர்கின்றன. பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, இலையை அப்படியே கோயில் சுவருக்கு வெளியே எறிகிறார்கள்.
கோயிலில் தரப்படும் விபூதி, சந்தனத்தைப் பூசியதுபோக, சுவர்களில் தேய்க்கவோ, பிரகாரத் தூண்களின் கீழ்ப்புறத்தில் கொட்டவோ செய்கிறார்கள். தமிழர்களின் கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற சாட்சியமாக இருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சுவரிலும் இப்படித்தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
கோயில்களில் பொங்கல் வைத்துவிட்டு, கற்களையும், கரித்துண்டுகளையும் குப்பையாகப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். அன்னதானம் போட்டுவிட்டு, எச்சில் இலைகளைக் கோயில் சொத்தாக விட்டுச் செல்கிறார்கள். சட்டி விளக்கு, எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறோம் என கோயில் பிரகாரங்களில் எண்ணெய் கொட்டுகிறார்கள். விளக்கு ஏற்றிய கையோடு, நம் கடமை முடிந்துவிட்டது எனக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவற்றை அகற்றும் வேலை அடுத்தவர் தலையில்தான் விழுகிறது. தீர்த்தமாடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்டக் கோயிலைச் சுற்றி வருகிறார்கள்.
மிகவும் சுத்தமாக இருக்கும் தேவாலயங்களில் (இந்துக்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் RC தேவலாயங்களை நான் குறிப்பிடவில்லை) செருப்பு அணிந்து போக முடிகிறது. ஆனால் அசுத்தமாக இருக்கும் இந்துக் கோயில்களில் செருப்பு அணியாமல்தான் போக முடியும். இந்துக்களின் புகழ் பெற்ற கோயில்களான இராமேஸ்வரம், சபரிமலைக்குள் ஓர் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணியை செருப்பில்லாமல் போகச் சொன்னால், அவர் என்னவிதமான அருவெறுப்புக்கு உள்ளாவர் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
வழிபாட்டு முறை இப்படி இருந்தால் கோயில் எப்படி சுத்தமாக இருக்கும்? இன்னொரு முக்கிய காரணம், பொது இடங்களை சுத்தப்படுத்தும் வேலை சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற சாதியினர் சுத்தத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொள்கின்றனர்.
புனிதமாக நினைக்கும் கோயிலையே இந்த இலட்சணத்தில்தான் பராமரிக்கிறார்கள் என்றால், மற்ற இடங்கள் சுத்தமற்று இருப்பது பற்றிச் சொல்ல  வேண்டுமா?============================================================================
நன்றி: கீற்று நந்தன்[keetru.com ஆசிரியர்]

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தமிழைப் போற்றும் நீதிபதியைப் பாராட்டுகிறோம்!

தஞ்சைப் பெரிய கோயிலில் 05.02.2000இல் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்வுள்ள நிலையில்,.....

“குடமுழுக்கில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்” என்று தமிழ் விடுதலைக் கொற்றத்தின் மாநிலத் தலைவர் வியனரசுவும், தங்கராஜ் என்னும் தமிழ்ப் பற்றாளரும் ராஜராஜ சோழன் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், தஞ்சை குற்றவியல் நீதிமன்றம் 1இன் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தினர். பின்னர் நடந்ததை வியனரசு கூறுகிறார்:
#சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயன்றதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும்,  மறியல் செய்ததாகவும் எங்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தினார்கள் காவல்துறையினர்; 15 நாட்கள் எங்களைக் காவலில் வைக்க வேண்டும் என்றார்கள்.

'நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் ஏன் போராட்டம் நடத்தினீர்கள்?' என்று நீதிபதி கேட்டார்.

'குடமுழுக்கு முழுமையாகத் தமிழில் மட்டுமே நடத்தபட வேண்டும் என்பதற்காகத்தான்' என்றோம்.

'குடமுழுக்கு முடியும்வரை போராட்டம் நடத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள்' என்றார். கொடுத்தோம். நீதிபதி தம் பொறுப்பில் எங்களை ஜாமீனில் அனுப்பினார்.

அத்துடன், 'தமிழ்மொழிக்காகத்தானே போராட்டம் நடத்துறாங்க; முழக்கம் செய்யுறாங்க. இதற்கெல்லாமா 15 நாட்கள் ரிமாண்ட் செய்வது?' என்று காவல்துறையினரை நீதிபதி கடிந்துகொண்டார்.’#

நம் தாய்மொழியாம் தமிழுக்கு மரியாதை செலுத்திய நீதிபதி அவர்களை மிக்க மகிழ்வுடன் பாராட்டுகிறோம்.

தாய்த் தமிழுக்காகப் போராடிய தலைவர் வியனரசு, தங்கராஜ் ஆகியோருக்கும், செய்தி வெளியிட்ட விகடனுக்கும்[vikatan.com], இதைப் பதிவிட்ட கே.குணசீலன் அவர்களுக்கும் நம் நன்றிகள்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

சதையும் கதையும் - 2: ‘ஓவியனின் கண்ணீரில் காவியம்!’

சற்றே நீண்ட சிறுகதை. வாசித்து முடிக்கக் கொஞ்சம் பொறுமை தேவை. நீங்கள் கதைப் பிரியராக... வெறியராக இருந்தால் தயங்காமல் கதையில் நுழையலாம்!
வயதுக்கு ஒவ்வாத செயலில்தான் நான் ஈடுபட்டிருந்தேன். ஒரு பெரிய அறையின் குறுக்கே தடுப்பாக வைக்கப்பட்டிருந்த ‘கார்டு போர்டு’ அட்டையில் இடம்பெற்றிருந்த சிறிய துவாரத்தில் விழியைப் பொருத்தி அடுத்த அறையில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

புத்தம் புதிய இளம் ஜோடி. படுக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். தூரிகையும் கையுமாக நின்றிருந்தான் அவன். அருகே ஓவியப் பலகையும் வண்ணக் கலவையும் இருந்தன.

அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவன் திடீரென அவளின் கரம் ஒன்றைப் பற்றி எடுத்து முத்தமாரி பொழிந்துவிட்டு, “எழுந்திருடா. உனக்குத்தான் மல்லிகைப்பூன்னா கொள்ளை ஆசையாச்சே. வாங்கிவந்திருக்கேன். எழுந்து நின்னு வெச்சிக்கோடா” என்று கொஞ்சுமொழி பேசிக் குழைந்தான்.

அவள்...அந்த அழகி சிணுங்கினாள். “ஊஹூம்...தலை ரொம் வலிக்குது. இப்போ வேண்டாங்க. வேணுன்னா நீங்களே வெச்சிவுடுங்க” என்று படுத்த கோலத்திலேயே பின்மண்டையைக் காட்டினாள்.

அவன் முகம் சூம்பியது. “என் ரசனையை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? எழுந்து நின்னு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, தலையைச் சாய்ச்சிகிட்டு மல்லிகைச் சரத்தைக் கூந்தலில் சொருகிக்கொள்ளும் காட்சியிருக்கே, அப்பப்பா, அஜந்தா ஓவியம் தோத்துடும். ஒரே ஒரு படம் மட்டும் வரைஞ்சிக்கிறேன். எழுந்திருடா. பிளீஸ்.....” என்று கெஞ்சியவாறு தூரிகையை ஒரு புறம் வைத்துவிட்டு அவளின் இடையில் கைகளை நுழைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டினான்.

அவனுடைய குழைவான பேச்சும் செய்கைகளும் என் இளைமைக்கால அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவந்தன.

செல்லமாக ஆண்பிள்ளைகளை அழைப்பது போல, “வாடா..போடா” என்றுதான் நானும் என் மனைவியை அழைப்பேன். இவனைப் போல்தான் நானும் அவளைப் படங்கள் வரை விதம் விதமாகப் ‘போஸ்’ கொடுக்கச் சொல்வேன். ஓவியக் கலைஞனான என் தொல்லை பொறுக்காமல் அவள் மூக்கால் அழும்போது அவளைச் சிரிக்க வைக்க இப்படித்தான் கிச்சுக் கிச்சு மூட்டுவேன்.

சுமதி, என் மனைவியும் இவளைப் போலவே பேரழகிதான். எளிதில் என் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்க மாட்டாள். “இந்த உணர்ச்சியை வெளிப்படுத்திச் சிரி; அந்தப் பாவத்தைக் காட்டிப் புன்னகை செய்” என்றெல்லாம் நான் படுத்தும் பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒப்பாரி வைப்பாள். உன்னதப் படைப்புகளுக்காக அவளின் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவதற்குக்கூட நான் தயங்கியதில்லை.

இதற்கு மேலும் பழைய சம்பவங்களில் என் சிந்தையைப் படரவிட என் மனம் தயங்கியது. காரணம், கலைக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டதாக பெருமிதத்துடன் வாழ்ந்ததன் விளைவு, குடும்பத்தைத் துறந்து, ஊர் துறந்து ஓடும் நிலைக்கு நான் ஆளாகிவிட்டதுதான்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட விரும்பி மீண்டும் துவாரத்தில் என் பார்வையைச் செலுத்தினேன்.

இப்போது நான் அங்கு கண்ட காட்சி எனக்கு உவகையை ஊட்டவில்லை. நான் நினைத்தது போல நின்ற கோலத்தில் கூந்தலில் பூச்சூட்டிக்கொண்டு அந்தப்பெண் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. அவன் அவளைப் பார்த்து ஓவியம் வரைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக.....

முகத்தில் சலிப்பைத் தேங்கவிட்டிருந்த அவள், “இன்னிக்கிப் பெங்களூரைச் சுத்தினதில் ரொம்பவே களைப்பா இருக்கு. காலெல்லாம் கடுகடுன்னு வலிக்குது. ஓவியத்தை நாளைக்கு வரையலாங்க” என்று சொல்லி, படுக்கையில் குப்புறக் கவிழ்ந்தாள்.

அவனோ கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. சட்டென அவளின் கால்மாட்டில் அமர்ந்து கால்களை அமுக்கிவிடத் தொடங்கினான்.
என்னுள் லேசான அதிர்ச்சி. எனக்குள்ள குணங்கள் இவனுக்கும் இருக்கிறதே. ஒரு வேளை.....

அவனுக்குகூட...அவன்தான்  என் மனைவி பெற்ற பிள்ளை -அவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். தோற்றத்திலும் செயலிலும் என்னைப் பிரதிபலிக்கும் இவன் என் மகனாக இருப்பானோ? அவன்தான் இவனோ?
என் மனதில் கலக்கம்; ஒருவித நடுக்கம். அந்த நாள்...அந்தச் சம்பவம்...பெருந் துயரமாக உருவெடுத்து என் உள்மனதை உறுத்தியது. படுக்கையில் மல்லாந்து சாய்ந்தேன். மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப் போலவே, என் சிந்தனையும் அந்தச் சோக அனுபவத்தைச் சுற்றியே சுழலத் தொடங்கியது.

அப்பொழுது மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் எனக்கு வேலை. ‘மலர்’ தயாரிப்பு சம்பந்தமாக ஒரு நாள் இரவு நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.

“சுமதி, இன்னிக்கி வீடு திரும்ப நேரமாகும். அலுவலகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம். என்னை எதிர்பார்க்காம சாப்பிட்டுப் படுத்துடு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன்.

எதிர்பாராத வேறு அலுவல் காரணமாக, பத்திரிகை ஆசிரியர் அலுவலகம் வரவில்லை. இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய பணி அது என்பதால் நானும் வீடு திரும்ப நேரிட்டது.

வீடு உள்ளே தாளிடப்பட்டிருந்தது. வழக்கமாகக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கதவைத் திறக்கும் என்னவள் நீண்ட நேரத் தாமதத்துக்குப் பிறகே கதவைத் திறந்தாள். அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைவிடப் பேரதிர்ச்சியும் காத்திருந்தது.

சுமதியைத் தொடர்ந்து உள்ளே நான் நுழையும்போது, இருட்டில் சுவர் ஓரம் பதுங்கிப் பதுங்கி முகம் மறைத்த ஓர் உருவம் வெளியேறியது கண்டு நிலைகுலைந்தேன்.

விளக்கைப் போட்டேன். சுமதி முக்காடிட்டுப் படுக்கையில் சரிந்தாள். படுக்கையை ஒட்டிக் கீழே கிடந்த சில சிகரெட் துண்டுகள் எனக்கு என்னவள் செய்த துரோகத்தை உறுதிப்படுத்தின.

நான் ஆவேசம் கொண்டு துரோகம் இழைத்த என்னவளை அடித்து நொறுக்கவில்லை; கழுத்தை நெறித்துக் கொன்றுபோடவும் இல்லை. காரணம், ஓர் ஓவியனுக்குரிய மிக மென்மையான குணங்கள் என்னுள் இரண்டறக் கலந்திருந்ததுதான்.

பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் சிந்திக்கும் அறிவை நான் இழந்துவிடவில்லை. ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவாக, சராசரிப் பெண்ணான சுமதியை ‘அது’ விசயத்தில், ‘இது போதும்’ என்று அவள் நினைக்கும் அளவுக்குக்கூட திருப்தி படுத்தாத தவற்றை என்னால் உணர முடிந்தது. 

அவளின் புற அழகைச் சுவைக்கும் ரசிகனாக வாழ்ந்தேனே தவிர, அவளுக்குள் அடங்கிக் கிடந்த அளவிறந்த தாப உணர்ச்சிகளை அறிந்துகொள்ள முயன்றதே இல்லை. ஆகவே, அவளைத் தண்டிக்கும் உரிமை எனக்கில்லை என்பதையும் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனாலும், சாக்கடையில் விழுந்துவிட்ட மலரைச் சட்டையில் சொருக்கிக்கொள்ளவும் நான் தயாராக இல்லை.

விரக்தி முழுமையாக என் நெஞ்சை ஆக்கிரமிக்க, மனைவியையும் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையையும் துறந்து சென்னையில் குடியேறினேன்.
கவலையை மறக்க ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டேன். சில ஆண்டுகளில் நாடறிந்த ஓவியனும் ஆனேன்.

கட்டியவளைப் பிரிந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் குடும்ப நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைக் கண்டதும், “மகிழ்ச்சி...பாராட்டுகள்” என்று கை குலுக்கினார்.

“எதற்கு?” என்றேன் புரியாமல்.

“உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்” என்றார் அவர். எங்கள் பிரிவுக்கான உண்மைக் காரணம் அவருக்குத் தெரியாது. ஏன், என்னையும் அவளையும் அந்த மூன்றாம் நபரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

மகிழ்வதற்குப் பதிலாக மனம் கலங்கினேன். பிள்ளை பிறந்திருக்கிறான், அதாவது, நான் தாலி கட்டியவள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறாள். சரிதான். ஆனால், அந்தப் பிள்ளை எனக்கே எனக்குத்தான் பிறந்தான் என்பது என்ன நிச்சயம்?

மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். நிர்ச்சலனமாய் இயங்கிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பிள்ளையை... நான் தாலி கட்டியவள் பெற்ற பிள்ளையைக் காணும் முயற்சியில் நான் ஈடுபடவே இல்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை.
பழையவை பற்றிய சிந்தனையிலிருந்து மீண்டும் விடுபட்டேன். என் எண்ணமெல்லாம் அடுத்த அறை வாலிபனைப் பற்றியே இருந்தது. ஒரு நெருங்கிய நண்பரைச் சந்திக்க பெங்களூர் வந்த இடத்தில் இப்படியான ஓர் அனுபவம் வாய்க்கும் என்று நான் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை.

பக்கத்து அறையில் அவன் பேசுவது கேட்டது.

“சரிடா, நீ ரொம்பத்தான் களைச்சுப் போயிருக்கே. ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கே ஓவியக் கண்காட்சி நடக்குது. பார்த்துட்டு வர்றேன். திரும்பி வர்றதுக்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். வரட்டுமா?”
கதவு சாத்தப்படும் ஓசை. 

மல்லாந்து படுத்துச் சிந்தனையில் ஆழ்ந்தேன். என் நினைப்பை முழுமையாக அவன் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான். 

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. மீண்டும் பக்கத்து அறையில் பேச்சுக்குரல். பெண்ணின் குரலோடு ஓர் ஆணின் குரலும் கேட்டது. செவியைக் கூர் தீட்டினேன்.

“நாங்க இங்க வந்தது உனக்கு எப்படித் தெரிஞ்சுது?” -அவள் ஆவலுடன் கேட்டாள்.

“வியாபார விசயமா வந்து ஒரு வாரம் போல இந்த விடுதியில்தான் தங்கியிருக்கேன். பக்கது அறைதான். நீங்க உள்ளே நுழையும்போதே பார்த்துட்டேன். இப்போ உன் புருசன் வெளியே போறதையும் பார்த்துட்டுத்தான் உன்கூடப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். ஜாலியா உல்லாசப் பயணம் வந்திருப்பீங்க போலிருக்கு” என்றான் அவன்.

“ஜாலியா இருக்கலாம்னுதான் கூட்டிட்டு வந்தாரு. வந்த இடத்தில் போஸ் குடு குடுன்னு உயிரை எடுத்தார். மாட்டேனுட்டேன். ஓவியக் கண்காட்சி நடக்குதாம் பார்த்துட்டு வர்றேன்னு போயிருக்காரு. ஓவியம் ஓவியம்னு பித்துப் பிடிச்சி அலையுறாரு.”

“பித்தும் வெறியும் இருந்தாத்தானே பெரிய ஓவியராப் புகழ் பெற முடியும்?” என்ற அவனின் குரலில் நக்கல் தொனித்தது.

“இப்படிப் பித்துப் பிடிச்சி அலையறவருக்கு எதுக்குக் கல்யாணம்? இவர் தன் அப்பாவை நினைச்சாவது பாடம் கத்துகிட்டிருக்கணும்.”

“நீ யாரைச் சொல்லுறே?”

“இவரைப் பெத்த அப்பா, அதாவது என் மாமனாரைச் சொல்லுறேன். பிரபல ஓவியர் சந்திரமோகனைச் சொல்லுறேன். கட்டிய பெண்டாட்டியைச் சந்தேகப்பட்டதால ஓடிப்போனவர் அவர். நடந்ததை எல்லாம் இவரோட அம்மாவே சொல்லியிருக்காங்க. சரி...சரி...கண்ட கதையைப் பேசி ஏன் நேரத்தை வீணாக்கணும்? போன அந்த ஆள் திரும்பி வர்றதுக்குள்ளே.....”

அதன் பிறகு இருவருக்கும் இடையேயான சல்லாப மொழிகளைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. அறையைச் சாத்திக்கொண்டு ஓவியக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்த இளைஞனைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

கட்டிய மனைவியை யோக்கியமானவள் என்று நம்பி ஏமாந்த அந்தக் ஓவியக்கலைப் பித்தன்  என் மகன்தான்...என் மகனேதான். இனி என்னுடனேயே அவன் வாழ்வான்; வளர்வான்; என்னைப் போலவே புகழ் பெறுவான்.
========================================================================