அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 பிப்ரவரி, 2020

முதலில் ‘இது’! அப்புறம் ‘அது’!!

இருதயம் சீராக இயங்கும்வரைதான் அணுக்களால் ஆன உடம்புடன் நம்மால் வாழ்ந்திட முடியும்.  இருதயம் செயலிழந்தால், அணுக்களால் ஆன உடம்பும் அழிகிறது. உண்டு உறங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து, இன்பதுன்பங்களை அனுபவித்து வாழ்ந்த நாம் அழிந்துபோகிறோம். 

இந்த உடம்பு இருக்கும்வரை ‘நான்’ என்னும் உணர்வு நமக்கு இருக்கிறது.

உடம்பு அழியும்போது அந்த ‘நான்’ என்னும் உணர்வும் அழிந்துபோகிறது. ஆக.....

உடம்பு இல்லையேல், ‘நான்’ இல்லை; நாமும் இல்லை; ஞானிகளும் இல்லை; அவதாரங்களும் இல்லை; மேதைகளும் இல்லை.

செத்த பிறகு, மிச்சம் மீதி என்று எதுவுமே மிஞ்சாமல் முற்றாக அழிந்துபோவதை விரும்பாத மனித மனம், உடம்பு அழிந்தாலும், அதனுள்ளே அழியாத ஒன்று இருப்பதாக நம்பியது. அதற்கு ‘உயிர்’ என்று பெயரிட்டது. [ஆன்மிகவாதிகள் அதை ‘ஆன்மா’ என்கிறார்கள். இங்கு இது குறித்து ஆராய்வது நம் நோக்கமல்ல].

நம் உடம்போடு தொடர்புபடுத்தப்படும் இந்த உயிர் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதே மனிதகுலத்தின் இப்போதைய தேவை; இன்றியமையாத் தேவையும் ஆகும்.

உயிர் என்ற ஒன்று இல்லையெனின், நமக்கு வாய்த்த அற்ப ஆயுளைக் கடவுளின் உதவி இல்லாமலே கழித்துவிட முடியும். செத்தொழிந்த பிறகு அவர் நமக்குத் தேவையற்றவர் ஆகிறார். எனவே, உயிர் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அனைத்தையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளைப் பற்றி ஆராயலாம். 

உயிர் பற்றிய ஆராய்ச்சியைப் புறக்கணித்து.....

கடவுள் குறித்து விவாதித்தும், சண்டையிட்டும், போர் செய்தும்  நமக்கு வாய்த்த மிக மிக மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பது அடிமுட்டாள்தனம் ஆகும்.
=======================================================================