செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

‘உயிருக்கு உருவம் உண்டு’...சத்குரு[?!] ஜக்கி வாசுதேவ்!

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/uyir-udalukku-serum-vazhi-kalpanath -இது ஜக்கி தன் தத்துவப் போதனைகளைப் பதிவு செய்யும் தளம்.
பல்வேறு தலைப்புகளில் அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறார்.

தளத்தின் ‘தேடல்’ பகுதியில், ‘உயிர்’ என்று தட்டச்சு செய்தால், அது குறித்த அவரின் எண்ணங்கள் பல தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருப்பதைக் காண இயலும்.

உடம்புக்குள் உயிர் புகும் வழிமுறை குறித்தும் ஒரு தலைப்பில் விவரித்திருக்கிறார் ஜக்கி. அதன் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

#கல்பா என்றால் படைப்பு. முழுக் கர்ப்பக் காலத்திற்குப் பின் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களுள் ஒரு பகுதி மட்டும் முழுதாக வளர்ந்திருக்காது. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது தலையின் மேல்பகுதி.

பிறப்பின்போது அப்பகுதி முழுவதுமாக வளர்ந்திருக்காது. ஏனென்றால், அந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் உங்கள் உடலுக்குள் நுழைகிறது. நீங்கள் உயிரை உருவாக்கவில்லை, உயிருக்கு ஓர் இருப்பிடத்தைத்தான் அளிக்கிறீர்கள். நீங்கள் உயிருக்கான பாத்திரத்தை, கோப்பையை உருவாக்குகிறீர்கள். அதற்குள் உயிர் தானாகத்தான் நுழையமுடியும். அந்த இடத்தின் வழியாகத்தான் உயிர் நுழைகிறது. அதனால்தான், அது முழுமையாக வளர்ந்திருக்கவில்லை#

‘ஒரு மனிதனுக்கு இறப்பு நிகழும்போது அவனுடைய உடம்பு மட்டுமே அழிகிறது. உயிர் அதிலிருந்து வெளியேறிவிடுகிறது’ என்னும் ஆன்மிகவாதிகளின் பரப்புரைக்கு எதிர்வினையாக, ‘உடம்பு அழியும்போது உயிர் அழிவின்றி வெளியேறுகிறது என்றால், அது உடம்புக்குள் எப்போது எப்படி நுழைந்தது?’ என்று கேட்டார்கள் பகுத்தறிவாளர்கள்.

அந்தக் கேள்விக்குத்தான் இப்படியானதொரு பதிலைத் தந்திருக்கிறார் ஜக்கி. [கருவைச் சுமந்திருக்கிற தாயின் உடம்புக்குள் நுழைந்த பின்னர்தான் கருவிலுள்ள குழந்தைக்குள் உயிர் நுழைந்திட முடியும். தாயின் உடம்பிலுள்ள பல துவாரங்களில் எந்தத் துவாரத்தின் வழியாக அது நுழைந்தது என்பது பற்றி விளக்கம் தர மறந்துவிட்டார் அல்லது தவிர்த்துவிட்டார் இவர்].

இவருடைய கருத்தின்படி, குழந்தையின் உடம்பிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக உயிர் நுழைகிறது. இதன் மூலம், உயிருக்கு உருவம் உண்டு என்பது அறியப்படுகிறது. 

உயிர் உருவமற்றது, அதாவது அருவமானது எனின், நுழைவு வழி ஏதும் இல்லாமலே அதனால் குழந்தையின் உடம்புக்குள் ஊடுருவி அதனுள் தங்கிவிட முடியும்[இவை எல்லாமே அனுமானங்கள்தான். அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட கருத்துருக்கள் அல்ல..

ஆக, ஜக்கி வாசுதேவின் கருத்துரையின்படி உயிருக்கு உருவம் உண்டு என்றாகிறது.

அது உண்மையாயின், உயிரின் உருவம் குறித்துத் தெளிவானதொரு விளக்கவுரை தருவாரா ஜக்கி வாசுதேவன்?

உயிர் குறித்து நான் எழுதிய[2016இல்] ஒரு பதிவு:
https://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_8.html
=======================================================================
அறிவியல் ரீதியாகத் தான் சொல்லும் கருத்துகள் சரியானவைதானா என்பது பற்றிக் கிஞ்சித்தும் கலைப்படாமல் எழுதித் தள்ளுகிறார் இவர். இவர் சொல்வனவெல்லாம் சரியானவைதானா என்று இவரின் பக்த கோடிகளும் சிந்திப்பதில்லை. காரணம், அவர்கள் பக்தர்கள் அல்ல; பித்தர்கள்.

ஜக்கியின் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!!