புதன், 31 ஜனவரி, 2024

இனி, ‘பத்தரை மாற்று’ப் பக்தர்களுக்கு மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதி?

 


நீதிபதி அவர்களின் உத்தரவுப்படி, இந்து அல்லாதவர்களோடு மத நம்பிக்கை இல்லாதவர்களும் பழனி முருகன் கோயிலுக்குள் நுழைந்திட முடியாது என்பது உறுதியாகிறது.

இதன் மூலம் பழனி முருகனை வழிபடச் செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்ட இந்த அறிவிப்பை இந்தியாவிலுள்ள அனைத்து இந்துமதக் கோயில்களிலும் இடம்பெறச் செய்வது கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும்.

அப்படிச் செய்வதால், கோயிலுக்குச் செல்வோர் எண்ணிக்கை மேலும் குறையும்.

கோயில்களைத் தேடிச் செல்வோர் குறைந்துகொண்டே போனால், சாமிகளை நம்பி ஏமாறும் மூடர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும் என்று நம்பலாம்.

எனவே, இவ்வகையிலான ஒரு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

‘கடவுள் நம்பிக்கை உண்டு’ என்று பிற மதத்தவர்களிடம் எழுதி வாங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை என்பது ஆளாலுக்கு வித்தியாசப்படலாம்.

95% கடவுளை நம்புகிறவர்களுக்கிடையே வெறும் 05% நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். அந்த 05 சதவீதத்தினரும், “அடுத்த வீட்டுக்காரனின் பெண்டாட்டி மீது எனக்கு ஆசை. அந்த ஆசையைக் கடவுளே நீதான் நிறைவேற்ற வேண்டும்” என்பது போல் கெட்ட கோரிக்கைகளுடன்  வருபவர்களாக இருக்கலாம்.

எனவே.....

கோயிலுக்கு வருகிற அத்தனைப் பேர்களிடமும், ‘நான் 100% கடவுள் நம்பிக்கை உள்ளவன். கெட்ட எண்ணங்களுக்குக் கொஞ்சமும் இடம் தராமல் 100% தூய மனதுடன் வந்திருக்கிறேன். என்னை[கடவுள் தண்டிப்பார் என்பதால் யாரும் பொய் சொல்லமாட்டார்கள்]க் கோயிலுக்குள் அனுமதியுங்கள்’ என்று எழுதி வாங்க வேண்டும்.

இப்படிச் செய்தால்.....

புனிதமான கோயிலுக்குள் நுழைபவர் எண்ணிக்கை.....

மிக மிக மிக மிக மிக.....க் குறையும்; அல்லது கோயிலைத் தேடி எவரும் செல்லமாட்டார்கள்.

இதன் விளைவாக, கடவுளை நம்பும் முட்டாள்கள் எண்ணிக்கை இந்த நாட்டில் மிக மிக மிகக் குறைவு[பிற மூடநம்பிக்கைகளும் அழிந்தொழியும்]’ என்னும் பெருமிதப்படத்தக்க மிக நல்லதொரு சூழ்நிலை உருவாகும்; நாடு செழிக்கும்!

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அன்பருக்கும், தீர்ப்பு வழங்கிய நிதிபதி அவர்களுக்கும் நம் மனம் நிறைந்த நன்றி!

                                 *   *   *   *   *
***பதாகைப் படம் ‘வினவு’ தளத்திலிருந்து நகல் எடுப்பப்பட்டது. ‘வினவு’க்கு நன்றி.

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இந்தியா > ராமராஜ்ஜியம் > அனுமன் ராஜ்ஜியம்!!!

டந்த 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், அந்தக் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெறாமல், இந்து அமைப்பினர் 108 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றினர்.

அதே கிராமத்தை சேர்ந்த சிலர், “அரசு இடத்தில் தேசியக் கொடி, கன்னட கொடி ஆகியவை தவிர வேறு கொடிகளை ஏற்ற அனுமதி இல்லை என்பதால். அதை அகற்ற வேண்டும்” என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடமும் மண்டியா மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்ததால், அதிகாரிகள் அந்தக் கொடியை அகற்றி, தேசியக் கொடியை ஏற்றினார்கள். 

இதன் விளைவாக, சங்கிகள்[பாஜக, பஜ்ரங்] மாநிலமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது செய்தி[https://www.hindutamil.in/news/india/1190955-tension-over-removal-of-hanuman-flag-cm-siddaramaiah-accuses-bjp-jds-1.html].

‘பாஜக’ பன்னாடைகளுக்கு, மத்தியில் தங்களின் கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்னும் திமிர் ஒருபுறம். நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத ஆணவம் மற்றொரு புறம். 

இந்த இரண்டைவிடவும், இவர்களின் மண்டை முழுவதும் மூளைக்குப் பதிலாகக் களிமண் மட்டுமே உள்ளது என்பது அறியத்தக்கது.

கொஞ்சமேனும் மூளை இருந்திருந்தால்.....

உலகம் தோன்றியதிலிருந்து எப்போதுமே குரங்குகள் ஆறறிவு பெற்றிருந்ததற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்பதை அறிந்திருப்பதோடு, ஆஞ்சநேயன் என்னும் குரங்கு ராமாயணக் கதையில் மனிதனைப் போல் ஆறறிவு பெற்றிருந்ததாக வால்மீகி சொல்லிய கதையை உண்மை என்று நம்பியிருக்கமாட்டார்கள்.

ஊரூருக்குக்கு அதுக்குக் கோயில் எழுப்பிக் கொண்டாடுவதை வழக்கம் ஆக்கியிருக்கமாட்டார்கள்.

இவர்களை இப்படியான ஜத்துக்களாக ஆக்கியவர்கள் நாட்டை ஆளும் ‘பாஜக’ தலைவர்களே என்பதால், அவர்கள் இவர்களுக்குப் புத்தி சொல்லித் திருத்த முயன்றதில்லை.

பக்தியின் பெயரால் மூடர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி, அவர்களின் அமோக ஆதரவால், தொடர்ந்து பத்தாண்டுகள்  ஆட்சியைத் தக்கவைத்த அவர்கள் அடுத்துவரும் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள்.

இவர்களின் நம்பிக்கை பலிக்காமலிருக்க, நாட்டு நலனில் அக்கறையுள்ள கட்சிகளும் சீரிய சிந்தனையாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குரங்கைக் கடவுளாக்கி வழிபடும் முட்டாள்கள் எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதைத் தடுப்பதோடு, இருப்பவர்களைத் திருத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுதல் வேண்டும்.

தவறினால்......

இந்தியா ஆறறிவு மனிதர்களுக்கான நாடாக இல்லாமல், பெருமளவில் ஐந்தறிவுக் குரங்குகள்[முழு மூடர்கள் வாழும் நாடு] உலவும் நாடாக மாறும். இந்தியா என்னும் பெயர் ‘ராம ராஜ்ஜியம்’ என்றோ, ‘அனுமன் ராஜ்ஜியம்’ என்றோ மாறும்.

மாறுவதோடு.....

அடுத்துவரும் கொஞ்சம் ஆண்டுகளில், பெருமளவில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறும்!

திங்கள், 29 ஜனவரி, 2024

103 வயதில் 3ஆம் கல்யாணம்! கில்லாடிக் கிழவனை வாழ்த்துங்கள்!!

//மத்தியப் பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர்; 103 வயதுக் கிழவர்; சுதந்திரப் போராட்ட வீரர். முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் இறந்துவிட்ட நிலையில் 49 வயதே ஆன[இது நடுத்தர வயது. 60ஐக் கடந்தவொரு கிழவியைத் தேர்வு செய்திருக்கலாம்]பிரோஸ் ஜகான்’ என்னும் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்// என்பது இன்று[19.01.2024] தினத்தந்தியில் வெளியான வியப்பூட்டும் செய்தி.

முதுமைப் பருவத்தில் தனக்கு ஓர் உறுதுணை தேவை என்பதால் இந்தப் பெண்ணை மணந்ததாகத் தெரிவித்திருக்கிறார் ஹபீப் நாசர்[ஓராண்டு கழித்து மண நிகழ்வு குறித்த காணொலி[வீடியோ] வெளியாகியிருக்கிறது].


அண்டை அயலார் உற்றார் உறவினர் என்று பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த நிலையில், சிலர் கிழவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். ஆனால், அதனாலெல்லாம் அவர் மனம் சோர்ந்துவிடவில்லையாம்.

 
சிரித்தவர்கள், “கிழவனுக்கு இந்தத் தள்ளாத வயதில் பெண்டாட்டி தேவையா[அது விசயத்தில்]?”என்று நினைத்திருக்கலாம். 

103 வயதுக் கிழவன் ஒரு சிறுமியை வன்புணர்வு செய்ததாக[அரிதாக இது போன்ற அட்டூழியங்கள் நாடெங்கும் நிகழ்ந்துள்ளன], ஊடகச் செய்தியொன்று கடந்த ஆண்டில் வெளியானது நினைவில் உள்ளது. அப்படித் தவறு செய்து அவமானப்படுவதைத் தவிர்க்க, இது போன்ற திருமணம் உதவக்கூடும்.

கிழவரின் இந்தத் திருமணம் தவறா, சரியா என்பதை ஆராய்வது நம் நோக்கமல்ல.

வயது 100ஐக் கடந்துவிட்ட நிலையில், ‘இன்றோ நாளையோ, இன்னும் சில நாட்களிலோ எப்போது நம் உயிர் பிரியும் என்றஞ்சி, போதிய உணவின்றி உறக்கமும் இன்றித் தவியாத் தவிக்கும் கிழவர்கள் நடுவே, மணந்துகொண்டவளை ஊர் அறிய ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துவந்த இந்தக் கிழவனின் தன்னம்பிக்கையும் துணிவும் நம்மை வியக்க வைக்கின்றன.

மரணத்தை நினைத்துச் செத்துச் செத்துப் பிழைக்கும் முதியவர்களிடையே இவர் ஓர் அபூர்வப் பிறவி.

உலகில் 120 வயதைக் கடந்து வாழ்ந்து சாதனை நிகழ்த்தியவர்கள்[அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்களில் சிலர்: ***ஜியான் கால்மன்>பிரெஞ்சு நாட்டவர்>122 ஆண்டுகள் 164 நாட்கள். ***றத நோஸ்>அமெரிக்கா>119 ஆண்டுகள் 97 நாட்கள். ***கேன் தனக்கா>ஜப்பான்>118 ஆண்டுகள் 10 நாட்கள். ***நுபி ரஜிமா>ஜப்பான்>117 ஆண்டுகள் 260 நாட்கள். ***மாறி லூயிஜ்>கனடா> 117 ஆண்டுகள் 230 நாட்கள்] பலர் உள்ளனர்[இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் இருக்கக்கூடும். தேடிக் கண்டறிதல் சாத்தியப்படவில்லை].

‘ஹபிப் நாசர்’ மேற்கண்ட சாதனைகளையெல்லாம் முறியடிக்கும் வகையில் இன்னும் இன்னும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சிறக்க மனதார வாழ்த்துவோம்.

                                          *   *   *   *   *

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

புரியும் கேள்விகள்! புரியாத பதில்கள்!![வாசகரின் ‘பொறுமை’யைச் சோதிக்கும் ‘அறுவை’ப் பதிவு]

2015இல்  181 ‘பார்வை’களை மட்டுமே பெற்றது.

இதன் நோக்கம், மிகக் கடுமையான காரசாரமான விவாதங்களுக்கு வித்திடுவதல்ல, மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சிந்திக்கத் தூண்டுவது.

'சிந்திப்பதால் எதையும் தாங்கும் மன வலிமை கூடும்; நினைவாற்றல் மழுங்காமலிருக்கும்' என்பதை நீங்கள் ஏற்பவர் என்றால் தொடர்ந்து வாசிக்கலாம்.

சிறிது நேரம் வயிற்றுப்பாட்டையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அகன்று அடர்ந்து விரிந்து பரந்து கிடக்கும்  பிரமாண்ட அண்டவெளியையும், அங்கே வகை வகையான வடிவங்களில் சுற்றித் திரியும் வித விதமான கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும், அவ்வப்போது அவை நிகழ்த்தும் மாயாஜாலங்களையும் கண்டு கண்டு, கற்பனையை வளரவிட்டு மகிழாதவர் எவருமிலர் எனலாம்.

அனைத்தையும் ரசித்து இன்புறுவதோடு நில்லாமல்.....

இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது எது, அல்லது எவை, அல்லது எவர், அல்லது எவரெல்லாம்? இவை படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லது படைக்கப்படாமலே ‘என்றென்றும் இருந்துகொண்டே இருப்பதற்கு’ உண்டான அடிப்படை, அல்லது என்றேனும் ஒரு நாள் இவை அனைத்தும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு குறித்தெல்லாம் நாம் எல்லோருமே சிந்தித்திருக்கிறோம்; நம் முன்னோர்கள்  சிந்தித்து அறிவித்த முடிவுகளை மனதில் கொண்டு தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அனைவரும் ஏற்கத்தக்க ‘முடிவு’ மட்டும் எட்டப்படவில்லை.

இந்நிலையில்.....

விண்வெளியில் மறைந்திருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் ஒரு ‘புதிர்’ அல்லது ‘மர்மம்’ குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கு,  உங்கள் அனைவரையும்  தூண்ட வேண்டும் என்னும் பேரார்வம் காரணமாக, உங்கள் முன்னால் சில கேள்விகளைச் சமர்ப்பிக்கிறேன்.

கேள்வி ஒன்று:

விஞ்ஞான ரீதியாக, பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பார்கள். கணிப்புக்கு அப்பாற்பட்டு, காலங்காலமாக, எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாமல்,  எல்லை கடந்த நிலையில் அகன்று விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்தில், 'அது விரிவடைந்துகொண்டே போகிற ஒரு நிலை’ உருவாக வாய்ப்பே இல்லை என்று சொன்னால், அது ஒரு நாள் மெய்ப்பிக்கப்படுகிற ’உண்மை’யாகவும் இருக்கலாம்.

இதே போல, இருக்கிற ஒரு பிரபஞ்சமே எல்லை காண இயலாத பெரும் புதிராக இருக்கையில், 'பிரபஞ்சங்கள் பல’ உள்ளன என்று சொல்வதும் ஏற்கத்தக்க ’உண்மை’ அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இந்த அடிப்படைகளை எல்லாம் சொல்லி, உங்களை நான் தயார் செய்வதன் நோக்கமே அண்ட வெளியில் மறைந்து கிடக்கும் புதிரைக் கண்டறியத்தான்; மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்காகத்தான்.

இனியும் உங்கள் பொறுமையைச் சோதிப்பது அழகல்ல.

வாருங்கள் அந்த மர்ம முடிச்சைத் தேடுவோம்.

முதலில், அதற்கான சூழ்நிலை அமைவது அவசியம்.

தனி அறையில், தனிமையில் கதவை அடைத்துப் படுத்துவிடுங்கள்.

உங்கள் சிந்தனையை அண்டவெளிப் பரப்பில் உலவ விடுங்கள்[இச்செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று எண்ண வேண்டாம்].

நாம் அறிந்த சூரியன், அதைச் சுற்றிவரும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் என அனைத்தையும் அகற்றுங்கள்[கற்பனையில்தான். கற்பனைகள் உண்மைகளைக் கண்டறியக் காரணமாவது உண்டுதானே?].

எண்ணற்ற சூரியக் குடும்பங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் இல்லாமல் செய்யுங்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு புறத்தில், பல கோடி மைல் பரப்பளவில் பெரும் பாறைத் திட்டுகள் இருக்கலாம். அவற்றையும் மறைந்துபோகச் செய்யுங்கள்.

இன்னொரு பெரும் பரப்பு நெருப்புக் கோளமாகவும், மற்றொரு பிரமாண்ட வெளிப் பரப்பு வெள்ளக் காடாகவும் இருக்கக்கூடும். மேலும் ஓர் அண்டவெளிப் பரப்பில், மனதை மயக்கும் மாயாஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருத்தலும் சாத்தியம். இப்படி இன்னும் நம்மால் அறியப்படாத எதுவெல்லாமோ எங்கெல்லாமோ இருக்கவே செய்யலாம். எந்த ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நீங்கள் அகற்றிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். அணுக்களையும் விட்டுவைக்காதீர்கள்.

உங்கள் செயல்பாட்டால், விண்வெளியில், காற்று வெளிச்சம் உட்படப் பஞ்சபூதங்களால் [பூதம்?... ’மூலக்கூறு’ என்று வைத்துக் கொள்வோம்] ஆன எதுவுமே இல்லை என்றாகிறது.

இப்போது, உங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை அண்டவெளியில் உலவ விடுங்கள்.

வெளியில் இப்போது எஞ்சியிருப்பது எது? எது? எது?

இருள்?

அதுவும் அகற்றப்படுகிறது.

இனி, இனம் புரியாத ‘ஏதோ’ ஒருவித வண்ணம் அல்லது ‘ஏதோ ஒன்று’ மிஞ்சியிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். சலிக்காதீர்கள் அதையும் அகற்றுங்கள்.

சிந்தனையாளர்களே, ஆழ்ந்த சிந்தனையின் வசப்பட்ட உங்களிடம் நான் முன்வைக்கும் முதல் கேள்வி.....

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளி, அதாவது, விண்வெளி இப்போது எப்படி இருக்கும்?

ஒளி, ஒலி என்று எதுவும் இல்லாத, பருப்பொருள் நுண்பொருள், அணுக்கள் என்று எப்பொருளும் இல்லாத ‘வெளி’ எப்படியிருக்கும்?

இப்படி எதுவுமே இல்லாமல் ‘வெளி’ என்று ஒன்று இருப்பது சாத்தியமா? ‘வெளி’ என்னும் மூலக்கூறே இல்லை என்று ஆகிறதே? பஞ்ச பூதங்களில் ஒன்று அடிபடுகிறது அல்லவா?

சாத்தியமே என்றால், மனித அறிவால் அதை உணர்ந்து அறிந்து, பிறர் அறிய விளக்கிச் சொல்வது இயலக்கூடிய ஒன்றா?

“ஆம்” என்றால், எப்போது?

“தெரியாது” என்றால், இந்தப் ‘புதிர்’ பற்றிச் சிந்திக்கிற மனிதனால், இதை விடுவிக்க இயலாத நிலை நீடிப்பது ஏன்? ஏன்? ஏன்?

“இல்லை” என்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு ’மர்மத்தை’ அண்ட வெளியில் மறைத்து வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டுவது எது? அல்லது எவை? அல்லது எவர்? அல்லது எவரெல்லாம்?

கேள்வி இரண்டு:

பாமரன் முதன் பகுத்தறிவாளன்[ஆத்திகரோ நாத்திகரோ]வரை, “ஏன்?” என்று கேள்விகள் எழுப்பி, விடை தேடி அலையாதவர் எவருமிலர். அவரவர் வாழும் சூழலைப் பொருத்து, அமையும் வசதிகளைப் பொருத்து எழும் கேள்விகளின் எண்ணிக்கை கூடலாம்; குறையலாம்.

இன்ப நினைவுகளில் திளைக்கும் தருணங்களைவிடவும், துன்பங்களில் சிக்கிச் சீரழிந்து மூச்சுத் திணறும்போது நாம் எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும்.

விடைகளை எளிதில் கண்டுவிடுவதற்கான கேள்விகள் மிக மிகக் குறைவு. எத்தனை தேடியும் விடைகளே கிடைக்காத கேள்விகளின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம்.

முக்கியத்துவம் இல்லாத கேள்விகளுக்கு விடை தெரியாமல் போவதால் நாம்  பாதிக்கப் படுவதில்லை; இழப்பேதுமில்லை. ஆனால், மிகச் சில கேள்விகள் ஆயினும், விடை தெரிந்தே ஆக வேண்டிய அவற்றிற்கு விடைகளைக் கண்டறிய இயலாதபோது நாம் நிலைகுலைந்து போகிறோம்.

கணிப்புக்கும் கணக்கீடுகளுக்கும் கட்டுப்படாத நீ..... நீ.....நீ.....ண்ட, நெடு ஆயுள் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் இந்த உலகத்தில் வாழும் வாய்ப்பு நமக்கு இப்போதுதான்  கிடைத்திருக்கிறது.  பிரபஞ்சத்தின் தொடக்க நாள் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நாம் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? நாம் எங்கேயும் என்னவாகவும் இருந்திடவில்லையா?

விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது  நமக்குத் தெரியும். இந்த இயலாமைக்காக நாம் கவலைப் படுவதும் இல்லை. ஆனால்.....

மரணத்திற்குப் பிறகு என்னவாகப் போகிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை வரும்போது, அதை எண்ணி மனம் வருந்துகிறது; கிடந்து தவிக்கிறது.

‘ஆன்மாவோ, உயிரோ, வேறு எதுவோ, ஏதோ ஒன்று நம் உடம்பில் இடம் கொண்டிருப்பது உண்மை என நம்பினால், நாம் செத்துத்தொலைத்த பிறகு, அதன் கதி என்ன? எங்கெல்லாம் அலைந்து திரியும்? எதில் எதிலெல்லாம் அடைக்கலம் புகுந்து அல்லல்படும்? இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?’ என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி, தெளிவு பெற வழியின்றி மனம் பாடாய்ப்படுவது உண்மை.

’உடம்பில் ஆன்மா, ஆவி, உயிர் என்று எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. மண்டைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் ‘மூளை’யே எல்லாம்’ என்னும் முடிவுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டால்.....

உடம்போடு சேர்த்து இந்த மூளையும் அழிந்த பிறகு[மரணத்திற்குப் பின்] நாம் முற்றிலும் இல்லாமல் போகிறோம். ஆனால், இடைவிடாத மாற்றங்களைச் சந்தித்தாலும், பிரபஞ்சமும் பொருள்களும் இயக்கங்களும் இருந்துகொண்டே இருக்குமே. நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப்போவதில்லை என எண்ணும்போது நம் நெஞ்சு வேதனையில் சிக்குண்டு தவியாய்த் தவிப்பது உண்மைதானே?

சிந்திக்க வைக்கும் ஆறாவது அறிவு நமக்குத் தரப்படாமல், மற்ற உயிரினங்களைப் போல, வாழ்ந்து முடித்தோ முடிக்காமலோ செத்தொழியும்படிப் படைக்கப்பட்டிருக்கலாமே?

அவ்வாறின்றி, அல்லலுற்றுத் தவிக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிய அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் மனம் போனபடியெல்லாம் ஏசுகிறேன்; நினைத்த போதெல்லாம் திட்டித் தீர்க்கிறேன்.

சிந்தனையாளர்களே,

உங்களுடைய எதிர்வினை என்ன?

கேள்வி மூன்று:

மேற்கண்டன போல, நமக்கு விடை தெரியாத கேள்விகள் எத்தனை எத்தனையோ உள்ளன.

தெரியாவிட்டால் போகிறது என்ற அலட்சியப் போக்குடன் நம்மால் அமைதியுடன் காலம் கடத்த முடிகிறதா?  

இல்லைதானே?

“ஏன்? ஏன்? ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுக்கும் திறனுடன்  படைக்கப் பட்டிடுக்கிறோம் நாம். ஆனால், எத்தனை சிந்தித்தாலும் சில உயிர்நாடிக் கேள்விகளுக்கு நம்மால் விடை காணவே முடியாது என்ற ’புரிதல்’ நமக்கு இருக்கிறது. 

கேள்விகள் எழுப்புவதற்கான ‘அறிவு’ இருந்தும், ‘விடை காணும் திறன்’ இல்லாத ஓர் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கிய அந்த அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான்  நிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்; மனத்தளவில் அவ்வப்போது கடின வார்த்தைகளால் சாடிக்கொண்டே இருக்கிறேன்.

நீங்கள்?
*** புதுப்பிக்கப்பட்ட பழைய பதிவு

‘பிரியா விடை’யும் இறப்பவருக்கு இருப்பவர் அளிக்கும் ஆறுதல் பரிசுகளும்!!!

இறக்கவிருப்பவர் நம் உறவினராகவோ, வேறு துணை இல்லாத  உற்ற நண்பராகவோ இருந்தால், அவரின் உடல் நோவைச் சற்றேனும் குறைக்கவும், மன வலியையும் மரண பயத்தையும் ஓரளவுக்கேனும் தணிக்கவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

*அறை விளக்கைச் சற்றே மங்கலாக ஒளிரவிட்டு மனதுக்கு இதமான சூழலை உருவாக்கலாம்.

*அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருப்பது, பிரிவை எதிர்கொள்ளவிருக்கும் அந்த நேரத்தில் அவருக்கும் நமக்கும் ஆறுதல் அளிப்பதாக அமையும்.

*பிரியாவிடை பெறும் அந்தக் கணங்களில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் அவசியம் என்பதால், அதிக அளவில் கூட்டம் சேரவிடாமல், அவரின் அன்புக்குரிய சிலரை மட்டும் அறைக்குள் அனுமதிப்பது நல்லது.

*அவருடைய செவிப்புலன் நல்ல நிலையில் இருந்தால், அவருக்கு மிக விருப்பமான பாடல்களைக் குறைந்த தொனியில் ஒலிக்கவிடலாம்; அவர் மிக விரும்பும் நூலிலிருந்து சில பகுதிகளைப் படிக்கலாம்.

*அவர் உரையாடும் நிலையில் இருந்தால், அவருக்கு என்ன தேவை என்று கேட்பதன் மூலம் அவர் மீதான நம் பாசத்தை உணரச் செய்யமுடியும்.

*அவர் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பது, அந்தத் துயரம் மிகுந்த நேரத்திலும் அவருக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்து ஆறுதல் பெற உதவும்.

*தேவைப்பட்டால், குறைந்த அளவில் அவருக்கு மிகப் பிடித்தமான உணவைத் திரவ வடிவில் அருந்தச் செய்யலாம்.


*தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் அவர் இருந்தால் அந்நிலையிலேயே இருக்க விடுவது நல்லது. பாச மிகுதியால் பேச்சுக்கொடுப்பது மரண வலி அதிகரிக்க வழிவகுக்கும்.


*அவர் நம்மைப் பிரியவிருக்கும் இறுதி வினாடிகளில்.....


இரத்த அழுத்தம் குறையும். சுவாசம் ஏறுமாறாக இருக்கும்; இதயத் துடிப்பும் குறையும்; வெப்பநிலை தணிந்து உடம்பெங்கும் குளிர்ச்சி பரவும்.

 
எனவே, 

*நம்மிடமிருந்து அவர் ‘பிரியாவிடை’ பெறும் தருணம் அது என்பதைப் புரிந்துகொண்டு, சில வினாடியாயினும் அவரைப் பிரியாமலிருப்பது மிக மிக முக்கியம்.

மேற்குறிப்பிட்ட செயல்களை மனம் கோணாமல் செய்து முடிப்பதால், இறப்பவர் அனுபவிக்கும் மரண வலி சற்றே குறைய வாய்ப்புள்ளது; இருப்பவரும் ஓரளவு மன அமைதி பெறலாம்.

                                               *   *   *   *   *
***தளங்கள் சிலவற்றில் பொறுக்கிச் சேர்த்த கருத்துகளுடன் என் பரிந்துரைகளையும் இணைத்து வடிவமைத்த பதிவு இது.

சனி, 27 ஜனவரி, 2024

பெரிய பெரிய மதங்களும் பெரும் பேரழிவுகளும்!!!

ந்தத் தளத்தில் வெளியான இடுகைகளில் ஆங்காங்கே, ‘மதங்களால் அதிக அளவில் தீமைகளே விளைகின்றன[நன்மைகள் மிகவும் குறைவு]' என்னும் கருத்தாக்கம் வலியுறுத்தப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.

‘கோரா’வில் சற்று முன்னர் வலம்வந்தபோது, வாசிக்க நேர்ந்த சில அன்பர்களின் பதிலுரைகள்[‘கேள்வி-பதில்’] மனதைக் கவர்ந்தன.

அவற்றை இங்குப் பகிர்ந்துள்ளேன்.

                                         *   *   *   *   *

தேவேந்திரன்

மதம் இல்லாத உலகம் என்னவாகத் தோற்றமளிக்கும்?

சமணர் கழுவேற்றங்கள் நடந்திருக்கமாட்டா.

சிலுவைப் போர்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை..

இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு அவசியமிருந்திருக்காது.

இலங்கைக்குள் யுத்தம் நடந்து, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டிரார்.

பாகிஸ்தான் உருவாகியிருக்காது.

கோட்சே காந்தியைச் சுட்டிருக்கமாட்டான்.

வார்ணாசிரமம் தழைத்தோங்கி, மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப்பட்டு, கடும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிரார்.

பெரியார் இராமசாமி, பெரியார் ஆகியிருக்கமாட்டார்.

பாபர் மசூதி இருந்திருக்காது,

பாஜகவும் இருந்திருக்காது.

மொத்தத்தில்,

புனிதம் என்ற சொல்லே இருந்திருக்காது.

மனிதம் இன்னும் மிகுந்திருக்கும்.

* * * * *

மார்செலோ எலியாஸ் டெல் வாலே

மதம் மனிதர் குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலா?

ஆம், மதம் மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறைந்தபட்சம், இது தனி மனிதச் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மதம், வரலாற்று ரீதியாக, மக்களுக்குப் பெரும்பாலும் உதவியாக இருந்ததில்லை; மதவாதிகளின் சுயநலத்திற்காக அது எப்போதும் சேவை செய்கிறது. இது கட்டுப்பாடு, கையாளுதல் மற்றும் அந்நியப்படுத்துதல் ஆகியவற்றிற்கான கருவியாகும்.

* * * * *

Chandrasenan C G:

மதங்கள்... விளைவுகள்?

மதம் மனிதர்களுக்கு இடையே தீராத பகைமையையும் கொலை வெறியையும் வளர்த்ததுதான் மிச்சம். மதவெறியால் மனிதர்கள் லட்சக்கணக்கில் இறந்ததற்குச் சரித்திரம் சாட்சியாகும். நடுக்கிழக்கில் இருந்து வந்த அந்த இரண்டு மதத்தவரும் மனித இனத்தைச் சீரழிக்காமல் ஓயமாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்துக் கணிப்பு. 1.இயற்கைச் சீற்றங்கள் 2.யுத்தங்கள் 3.மதங்கள் ஆகியவற்றால் பெரும் பேரழிவுகள் நிகழ வாய்ப்புள்ளது.

மதம் சார்ந்தவர்கள் குற்றங்கள் புரிவதில்லை, அல்லது அதைக் குறைவாகச் செய்கிறார்கள் என்பதெல்லாம் பொய். சொல்லப்போனால், தங்களின் கடவுள்களையே உறுதுணையாகக்கொண்டு அதிக அளவில் அதைச் செய்கிறார்கள் என்று சொல்லலாம். மனிதர்களைச் சட்டங்கள்&தண்டனைகள் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்பது அறியத்தக்கது..... Yes, strong governance and rule of law alone solution for every thing.

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வாழ்ந்து தொலைப்பவன்களும் வாழப் பணித்தவனும்!!!

வாழ்ந்து சாகும்வரை, ஆசை, பாசம், நேசம், பூசல், பொறாமை, காதல், காமம் என்று பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறோம்.

உடம்பை வளர்க்கவும், பாதுகாக்கவும், உணர்ச்சிகளுக்குத் தீனி போடவும்  காலமெல்லாம் போராடுகிறோம். அந்தப் போராட்டம் இறுதி மூச்சுவரை தொடர்கிறது.

எத்தனைப் போராடினாலும் நாம் அனுபவிக்கும் இன்பம் மிகக் குறைவு; துன்பங்களோ ஏராளம்.

இன்பதுன்பங்களால் ஆன இந்த வாழ்க்கை நாம் விரும்பிப் பெற்றதல்ல; நம்மினும் மேலான சக்தி உண்டு என்கிறார்களே, அதனிடமோ, வேறு எதனிடமோ வேண்டுதல் வைத்துப் பெற்றதும் அல்ல.

இம்மண்ணில் 'பிறந்து வாழ்தல்’ என்பது நம் மீது வலிந்து திணிக்கப்பட்டது.

திணிக்கப்பட்டதுதான். சந்தேகமே வேண்டாம்.

திணித்தது நம்மினும் மேலானது என்று சொல்லப்படும் அந்தச்  சக்திதானா?

அந்தச் சக்தியைத்தான் கடவுள் என்கிறார்களா?

பிறந்து வளர்ந்து, வறுமை, நோய்மை, பகைமை, இயற்கைப் பேரிடர்கள் என்றிவற்றை எதிர்த்துப் போராடி வாழ்ந்து, கொஞ்சம் இன்பங்களையும், அவற்றினும் பல மடங்குத் துன்பங்களையும் அனுபவித்துச் சாகும் வகையில் நம்மைப் படைத்தவன் அவன்தானா?[அறிந்தவர் எவருமில்லை]

“ஆம்” என்றால்.....

அவன் அயோக்கியன்! 

அந்த அயோக்கியனைக் கருணை வடிவானவன் என்று சொன்னவர்கள்/சொல்பவர்கள்.....

மன்னியுங்கள், அவர்கள் அறிவிலிகள் என்பது என் எண்ணம். 

அவனை வழிபட்டால் துன்பங்கள் அகலும்; இன்பங்கள் பெருகும்; செத்தொழிந்த பிறகு ‘நற்கதி’ வாய்க்கும் என்றவர்கள்/என்பவர்கள், ‘மனிதர்கள் அத்தனை பேரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, நல்லுறவை வளர்த்தால் மட்டுமே வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும்’ என்பதை அறியாத அடிமுட்டாள்கள் என்கிறேன் நான்.

நீங்கள்?

வியாழன், 25 ஜனவரி, 2024

கற்சிலையும் ‘பிராணப் பிரதிஷ்டை’யும் வஞ்சக நெஞ்ச மனிதர்களும்!!!

22.01.2024வரை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்து கற்சிலைக்குள் தெய்வீகத்தன்மையை ஏற்றும் மந்திரம் பிராமணர்களுக்கு மட்டுதான் தெரிந்திருந்தது. அதாவது, கடவுள் அவர்களுக்கு மட்டும்தான் கற்றுக்கொடுத்திருந்தார்.

22.01.2024ஆம் நாளில்தான் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றும் பேற்றினைச் சூத்திரரான நரேந்திர மோடிக்கும் அவர் அருள்பாலித்திருக்கிறார் என்பதை உலகம் அறிந்தது.

பிராணப் பிரதிஷ்டை மூலம் வெறும் கற்சிலைக்குள் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி, அதைத் தெய்வமாக்க முடியும் என்றால், ஆறறிவு படைத்த மனிதர்களையும் தெய்வீகக் குணம் பெற்ற மனிதத் தெய்வங்களாக மாற்ற முடியும் என்பது உறுதி.

பொறாமை, சூது, வாது, வஞ்சகம், குரோதம், வன்கொடுமை செய்தல் போன்ற பல கெட்ட குணங்களின் வாழிடமாக உள்ள மனிதர்களையும், மேற்படிப் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி இவ்வுலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்குள்ளும் பிராமணர்கள் தெவீகத்தைப்  புகுத்தியிருக்கலாம்.

அவர்கள் அதைச் செய்திருந்தால்.....

ஒட்டுமொத்த உலகமும் சொர்க்கப்புரியாக மாறியிருக்கும்.

பிராமணர்கள் அதைச் செய்யாதது ஏன்?

கடவுளின் பிரதிநிதிகளான[பிராணப் பிரதிஷ்டை மந்திரம் கற்றவர்கள், தங்களுக்குள் தெய்வீகத் தன்மையை ஏற்றிக்கொள்ளக் கூடாது என்பது கடவுள் விதித்துள்ள நிபந்தனை] தங்களைக் காட்டிலும் மேம்பட்ட நிலையைச் சூத்திரர்கள் பெறுதல் கூடாது என்ற பொறாமைக் குணம் அதற்கான காரணம் ஆகும்.

நரேந்திர மோடி பிராமணன் அல்ல; ஒரிஜினல் சூத்திர இனத்தவர் ஆவார்.

பிராமணர்களுக்கு உள்ள பொறாமைக் குணம் சூத்திரரான மோடிக்குக் கொஞ்சமும் இல்லை என்று நம்பலாம்.

இந்த நம்பிக்கையுடன், கடவுளின் பிரதிநிதியான மோடி அவர்களிடம் நாம் மிகு பணிவுடன் வைக்கும் வேண்டுகோள்:

“இந்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களின் முழு நம்பிக்கைக்குரிய அமைச்சரிடம் ஒப்படையுங்கள்; நாள்தோறும், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் உடம்புகளுக்குள் ‘பிராணப் பிரதிஷ்டை’ மந்திரத்தை ஓதி ஓதி ஓதி... அவர்கள் அத்தனைப் பேரையும் தெவீகத் தன்மை பெற்றவர்களாக மாற்றுங்கள்.”

வாழ்க மோடி! வளர்க அவரால் தெவீகத் தன்மை பெறுவோர் எண்ணிக்கை!!

ஊடக மூடன்கள்!!!

யோத்தியில், கோடானுகோடி செலவில் கோயில் கட்டி, ‘பிராண பிரதிஷ்டை செய்து, கற்சிலைக்கு[பால ராமன்] உயிர் கொடுத்தார்[22.01.2024[என்று சொல்லப்படுவது] பிரதமர் மோடி என்பது உலகறிந்த செய்தி.

23.01.2024ஆம் நாள் இந்தக் கோயிலைப் பார்வையிட[பெரும்பான்மையோர் கோயிலை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்] பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது.....

ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, கருவறைக்குள் இருக்கும் பால ராமரை நோக்கிச் சென்றது. காவலர்கள் வரவே, எந்தப் பிரச்சினையும் செய்யாமல் அது கிழக்கு வாசல் வழியாக வெளியேறியது என்பது ஊடகங்கள் பலவற்றில் வெளியான செய்தி.

ராமனின் ஆகச் சிறந்த பக்தனான ஆஞ்சநேயன்[ராமாயணக் கதை>கதைதான்], அவன் பரம்பரையைச் சார்ந்த குரங்கு வடிவில் ராமனைத் தரிசிக்க வந்தான் என்கிறான்கள் ஊடகக்காரன்கள்[‘ராமரைக் காண வந்த குரங்கு! அயோத்தியில் பரபரப்பு’ என்றே தலைப்பு கொடுத்துச் செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்].

[வாழைப் பழம் என்றால் குரங்குக்கு உயிர். மனிதர் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில்கூட, கொஞ்சமும் அஞ்சாமல், ஒருவர் பழம் வைத்திருந்தால் அதைத் தட்டிச் செல்லும் துணிவு இந்தக் குரங்குகளுக்கு உண்டு என்பது நாம் அறிந்ததே].

ராமன் சிலையின் முன்னால் குவிந்து கிடந்த வாழைப்பழ வாசனையால் ஈர்க்கப்பட்டு அங்கு வந்திருக்க வேண்டும் இந்தக் குரங்கு.

இந்த மிகச் சாதாரண உண்மையைக்கூட அறிந்திராத ஊடக முட்டாள்கள் மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டிருக்கிறான்கள்.

வால்மீகியின் ‘ராமாயணம்’ என்னும் நூறு சதவீதம் கற்பனைக் கதையில் இடம்பெற்ற ஆஞ்சநேயன் என்னும் குரங்கைக் கடவுளாக நம்பவைத்து, லட்சக்கணக்கான[கோடிக்கணக்கான?] மக்களை மூடர்கள் ஆக்கியது போதாதென்று, இப்படியான பொய்களை[குரங்கு, ராமனைக் காண வந்தது]ப் பரப்புவதன் மூலம், மூடர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையே தொழிலாகக்கொண்டு பிழைப்பு நடத்துபவர்கள்[பெரிய கூட்டமே உள்ளது] இவர்கள்.

இவர்களை நம்மைப் போன்ற சாமானியர்கள் கண்டித்தால் போதாது; பொதுமக்கள் கண்டிக்க வேண்டும். தேவைப்பட்டால், கடும் போராட்டங்களிலும் ஈடுபடுதல் மிக மிக அவசியம்.

                                          *   *   *   *   *

https://m.dinamalar.com/detail.php?id=3533877

https://www.puthiyathalaimurai.com/india/a-monkey-suddenly-entered-of-ayodhya-ram-temple

https://tamil.abplive.com/news/india/monkey-enters-ayodhya-ram-temple-sanctum-sanctorum-devotees-see-hanuman-symbolism-163621

https://mediyaan.com/hanuman-came-to-visit-lord-rama-in-ayodhya/

https://www.dinamani.com/india/2024/jan/24/monkey-enters-ram-temple-sanctum-sanctorum-4144343.html

https://tamil.oneindia.com/news/india/hanuman-entry-monkey-entered-ram-mandirs-sanctum-sanctorum-says-shri-ram-janmbhoomi-teerth-kshet-576973.html

https://www.youtube.com/watch?v=fEk-re5hPQk

புதன், 24 ஜனவரி, 2024

பட்டினியில் பரிதவிப்பு! பக்தியில் முதலிடம்!! ஜெய் ஸ்ரீராம்!!! ஜெய் ஜெய் மோடி!!!!

வ்வொரு நாட்டிலும் பட்டினி அளவு எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டுள்ளது.

125 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 111ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது என்பதால், இங்குப் பட்டினியின் அளவு தீவிரமாக உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


இது நமக்கு அளவில்லாத வருத்தத்தைத் தருவதோடு, அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102ஆவது இடத்தையும், வங்காளதேசம் 81ஆவது இடத்தையும், நேபாளம் 69ஆவது இடத்தையும், இலங்கை 60ஆவது இடத்தையும்[நம்மைவிடக் குறைவு] பெற்றுள்ளன என்பதை அறியும்போது பெருத்த அவமானத்திற்கும் உள்ளாகிறோம்.



‘இப்படி அவமானப்பட்டுக் கிடக்கும் அவல நிலையில்தான் 1800 கோடி ரூபாய் செலவில் அயோத்தி ராமர் கோயில். அதற்கு 25 லட்சம் செலவில்[2100 கிலோ] மகா மகா மகாப் பெரிய மணி; கோடி கோடி செலவில் 101 கிலோ தங்கத்தில் கதவுகள்; 400கிலோ பூட்டு; 108 அடி உயர அகர்பத்தி,  குவியல் குவியலாய்ப் பொன் வெள்ளி வைர நகைகள் என்று மானாவாரியாய்ச் செலவு செய்து, கூடிக் கும்மாளம் அடித்திருக்கிறோம்’ என்று நம் பகை நாடுகள் எள்ளி நகையாடுகின்றன.

நாம்.....


இந்தியர்கள். நம்மை இப்படியான ஒரு பரிதாப நிலைக்கு உள்ளாக்கிய பிரதமர் மோடி கடும் கண்டனத்திற்கு உரியவரா?


ஊஹூம்.....  அவருக்குக் கண்டனம் தெரிவிப்பவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.


மேற்கண்ட வகைகளில் கோடி கோடியாய்ச் செலவு செய்து கோயில் கட்டி, அங்கே பால ராமரைப் ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்தார் மோடி என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை.


காரணம்.....


மக்கள் வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியால் பரிதவிக்கும் 125 நாடுகள் பட்டியலில் 111ஆவது இடம் பெற்றுள்ள நம் புண்ணிய ‘பாரத்[இந்தியா]ஐ, வெகு விரைவில் அப்பட்டியலிலிருந்தே அகற்றி, முன்னேறிய நாடுகள் பட்டியலில் முதல்[நம்பர் 1] இடத்தில் இடம்பெறச் செய்வார் பால ராமர் என்பதே!


ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஜெய் ஜெய் நரேந்திர மோடி!!


                                     *   *   *   *   *

https://www.dailythanthi.com/News/India/global-hunger-index-india-is-ranked-111-1071728