திங்கள், 31 ஜனவரி, 2022

'இ.வலையில்' விழும் கணவர்களும், 'சைபர் விதவை'களாகும் மனைவிகளும்!!!

"ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதைத் தாங்கிக்கொள்ளவே இயலாது" என்று கண்ணீர் விடுகிறார்  ஒரு பெண்[பெயரும் ஊரும் தவிர்க்கப்படுகின்றன].

சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி, ‘‘எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ விதங்களில் எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கணவருடன் ஒரே வீட்டிற்குள் வசித்தாலும், (இணையத்தால்)நான் விதவையைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று கண்கலங்கிக் கண்ணீர் வடிக்கிறார்.

"வீட்டிற்கு வந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறார். பின்பு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு நானும் ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அப்படியாவது கணவரோடு பேச்சுத் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவரைக் கண்காணிக்க நான் அப்படிச் செய்வதாகக் கூறி நிராகரித்துவிட்டார்" என்று புலம்புகிறார்  நிறையப் படித்துப் பட்டங்கள் பெற்ற ஒரு நடுத்தர நகர்ப்புறப் பெண்.

"கணவரிடம் இருந்து எனக்கு மனோரீதியான பங்களிப்போ, உடல்ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை; கிடைத்தாலும் சில நேரங்களில் அது பெயரளவுக்கே கிடைக்கிறது" என்கிறார் தன்னவரைக் காதலித்துக் கல்யாணம் செய்த  ஒரு குடும்பத் தலைவி.

"ஓரு நாள் இரவு அவர் லேப்டாப்புடன் இருந்த அறைக்குள் நான் திடீரென்று சென்றுவிட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. அவர் ஹெட்செட் மாட்டியிருந்தார். மைக்ரோபோனில் மிக மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வீடியோ சாட்டிங்கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்கிரீனில் ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள். நான் பின்னால் நிற்பதைப் பார்த்ததும் அவர் திடுக்கிட்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உடலைத் துணியால் போர்த்துக்கொண்டு குதித்து எழுந்தார். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தபோது இந்த உலகமே நொறுங்கி என் தலையில் விழுவதுபோல் இருந்தது" என்று சொல்லிக் குமுறிக் குமுறி அழுதார்  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி. 

இவர்களைப் போன்று குமுறும் பெண்கள் இன்றளவில் நிறைய நிறைய நிறையவே இருக்கிறார்களாம்.

இந்த எண்ணிக்கை கிடு கிடு கிடுவென அதிகரிக்கவும் செய்கிறதாம்.

ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தும், கணவர்களால் 'அது விசயத்தில் முற்றிலுமாய்ப் புறக்கணிக்கப்பட்ட அபலைகளாக, விதவைகளைப் போல் வாழும் பரிதாபத்துக்குரிய பெண்களைத்தான், 'சைபர் விதவைகள்' என்று குறிப்பிட்டு, விரிவானதொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது 'தினத்தந்தி'.

'கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விவாகரத்துகளைக் கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு, ஆண்கள் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடப்பது காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்குத் தொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. சகித்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீதக் கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.....

'இன்றைய நடுத்தர வயதுக்காரர்களின் இரவு உலகம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ, பேருந்து, ரெயிலில் கிடைக்கும் தோழமையோ சமூகவலைத்தளங்கள் வழியாகப் பலரது இரவு நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அதில் சிக்கிக்கொள்ளும் ஆண்கள் அருகில் இருக்கும் தங்கள் மனைவிகளின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை.....

'அடுத்தவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்குப் பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன. போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டிலும் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸூக்கும் துணைபுரிகின்றன. தடம்மாறிச் செல்லும் இத்தகைய ஆண்களைச் சகித்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் பொருந்திப்போய்க் கொண்டிருக்கிறார்கள்; வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு தனித்தீவில் இருப்பதுபோல் ஏராளமான 'சைபர் விதவைகள்' வாழ்ந்து வருகிறார்கள்.....'

என்றிவ்வாறெல்லாம், குடும்பப் பெண்களின் அவல நிலை குறித்து வெகுவாகக் கவலைப்பட்டு மனம் குமுறியிருக்கிறது தினத்தந்தி.

விரிவடைதலைத் தவிர்க்க இத்துடன் நிறைவு செய்யப்படுகிறது இந்தப் பதிவு. தந்தியின் முழுக் கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்கலாம்.


=========================================================================

*தினத்தந்தி இதழுக்கு நம் நன்றி. வருகைபுரிந்து, பதிவை முழுமையாகப் படித்துமுடித்த உங்களுக்கும்தான்!

நன்றி... நன்றி!



இறப்புக்குப் பிறகு 'விருது' தருவது விரும்பத்தக்கதா?

இந்த மூதாட்டி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த 90 வயதான பாடகி சந்தியா முகர்ஜி.
 
தனக்கு நடுவணரசு அறிவித்த 'பத்மஸ்ரீ' விருதை வாங்க மறுத்துள்ளார் இவர். 
இது குறித்து இவருடைய மகள் சவுமி சென்குப்தா கூறுகையில், "மத்திய அரசு அதிகாரி தொலைபேசியில் அழைத்து விருது குறித்துத் தெரிவித்தார். அதை ஏற்க என் தாய் சந்தியா மறுத்துவிட்டார்" என்றார். 

சந்தியா முகர்ஜியின் மகள் சவுமி சென்குப்தா கூறும் காரணம்.....

"இவரைப்போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்மஸ்ரீ வழங்குவது அவமானகரமானது."

*   *   *   *   *

இந்தப் பெண்ணின் உள்ளக் குமுறலை, பரிசுக்கான தேர்வுக் குழுவினர் பரிசீலனைக்கு ஏற்பது அவசியம் என்றே தோன்றுகிறது.

என்னதான் மனதிடத்தை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவில் அரவணைத்துக்கொள்ளக் காத்திருக்கும் மரணம் அவ்வப்போது நினைவுக்கு வரும் என்பதால், 90 விழுக்காடு பற்றற்ற மனநிலையிலேயே இருப்பார்கள் இந்த வயதுக்காரர்கள். இவர்களைப் பொருத்தவரை பாராட்டுகளும் பரிசுகளும் விருதுகளும் வெகு அற்பமானவைதான்.

உலக அளவில் பேரறிஞராகப் போற்றப்பட்ட அறிஞர் 'பெர்னார்டுஷா'வுக்கு 'நோபல்' பரிசு  அறிவிக்கப்பட்டபோது, முதுமை எய்தியிருந்த அவர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, "வெள்ளத்தில் சிக்கிப் போராடியபோது கண்டுகொள்ளாமல், கரையேறிய பிறகு ஒருவருக்குக் கைகொடுப்பது போல இருக்கிறது இது" என்னும் பொருள்பட அவர் சொன்னதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது[தன் மனைவியின் வற்புறுத்தலால் அப்பரிசை ஏற்றார் என்பது கூடுதல் செய்தி].

மிகவும் வயதானவர்களுக்குப் பரிசு கொடுப்பது போலவே, இறந்துவிட்ட சாதனையாளர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்குவதும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது[இவர்களின் வாரிசுகளுக்குக் கணிசமான அளவிலான பணப்பயன் தவிர வேறு என்ன பயன் கிடைக்கிறது என்று தெரியவில்லை].

மரணமடைந்த விருதுக்காரர், தன் வாரிசு தனக்காக விருது பெறும் காட்சியை ஆன்மா உருவில் வந்திருந்து கண்டு மகிழ்வார் என்று நம்புகிறார்களோ!?

ஹி...ஹி...ஹி!!!

==========================================================================

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

'ஒன்னு'க்கு இருந்ததால் அடி உதை! 'ரெண்டு'க்கு இருந்திருந்தால்...?!

#மத்தியப்பிரதேசத்தின் 'ராட்லம்' மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் ஒரு நபர் சிறுநீர் கழித்தாராம். அதைக் கண்ட மற்றொரு நபர் வாய்க்குவந்தபடியெல்லாம் முதலாமவரைத் திட்டியதோடு, 'அடி உதை' என்று தாக்குதலும் நடத்தினாராம். இது, சில மணி நேரங்களுக்கு முன்னரான 'தினத்தந்தி'ச் செய்தி# என்று செய்தி வெளியிட்டிருக்கிறது 'bbc' [https://www.bbc.com/tamil/india-60186972]

தொடரும் செய்தி:

#அந்த நபர் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரியும், தாக்குதல் நடத்தியவர் நிறுத்தவில்லை. 

இதுதொடர்பான வீடியோ[அடி உதை, கட்டியணைத்தல் கடத்தல்னு நாட்டில் எது நடந்தாலும் சுட்டெடுத்து, சுடச்சுட ஊடகங்களுக்குச் செய்தி அனுப்புறதுக்கென்றே கேமராவும் கையுமா அலையுறானுங்கய்யா]  சமூக வலைத்தளங்களில் பரவியது. 

அதைத் தொடர்ந்து, தாக்கப்பட்டவர் யார் என்று காவல்துறையினர் தேடினர். அதில் ஒன்னுக்கு இருந்து உதை வாங்கிய நபர் பெயர் 'சைபுதீன் பாட்லிவாலா' என்று தெரியவந்தது. அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 'வீரேந்திர ரதோட்' என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள்#

பசுவுக்கு எதிரே ஒன்னுக்கு இருந்ததுக்கா அடிப்பாங்க? 'அவரு பசு பார்க்கிறமாதிரி குஞ்சை['குஞ்சு' என்னும் சொல் தலைமயிரையும் குறிக்கும்]க் காட்டிகிட்டு ஒன்னுக்கு இருந்தார். இந்த அசிங்கத்தைப் பார்க்க விரும்பாத பசு வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் அந்த மற்றொரு நபர் இவரைத் தாக்கினார்' என்று ஒரு 'தினப் புளுகு' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது என்பது செவிவழிச் செய்தி.

அது உண்மையோ பொய்யோ, சிறுநீர் கழித்தவரை மற்றொருவர் தாக்கினார் என்பது உண்மைச் செய்திதான்.

முன்பெல்லாம், மாட்டுக்கறி தின்பவர்களைத் தாக்கினார்கள் மத வெறியர்கள். ஆட்சியாளர்களால் உரிய முறையில் தண்டிக்கப்படாததால், இப்போது சிறுநீர் கழிப்பவர்களைத் தாக்கும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக, சைபுதீன் போன்றவர்களின் நிழல் பசுவின் மீது பட்டாலே தாக்குதல் நடத்துவார்களோ?

பசு என்னும் ஒரு பிராணியைத் தாங்கள் வழிபடும் கடவுளின் வாகனமாக்கி யாரோ எப்போதோ எழுதிவைத்த கதையும், அது உண்மை என்று பின்னர் வந்தவர்கள் தொடர்ந்து செய்த பரப்புரையும்தான், இம்மாதிரியான மூடத்தனங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன எனலாம்.

பசு மாடுகள் மனிதருக்குப் பால் மட்டுமே கொடுக்கின்றன. ஆடுகளும் கோழிகளும் இன்னும் சில உயிரினங்களும் அவர்களுக்குத் தம் முழு உடலையே உணவாக்கும் தியாகத்தைச் செய்கின்றன[பசு இறைச்சியை உண்ணாதவர்கள் இன்றும் கணிசமாக உள்ளனர்].

அவற்றையெல்லாம் புறக்கணித்து, பசுக்களை மட்டும் புனிதமானவை என்று இவர்கள் போற்றுவது எவ்வாறு என்று புரியவில்லை.

'புனிதம்' குறித்துப் புரியும்படியாக விவரித்துச் சொல்லி, இவர்களைத் திருத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மதவாதிகளோ ஆட்சியாளர்களோ தயாராக இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்! 

==========================================================================

 

சனி, 29 ஜனவரி, 2022

'ஆபாசக் காணொலிகள்'... அரசின் ஆணையும் இணையக் கொள்ளையரும்!!

இணைய வரவால் மக்கள் ஏராள நன்மைகளைப் பெறும் அதே வேளையில், அது வெகு தாராளமாக வாரி வழங்கும் ஆபாசப் படங்களும் 'காணொலி'களும் பலவிதக் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை வருத்தும் செய்தியாகும்.

படம் எடுப்பவர்களும், உதவியாளர்களும், படங்களை விற்றோ விநியோகித்தோ பணம் பண்ணுபவர்களும், நண்பர்களுடன் பகிர்பவர்களும், பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பவர்களும் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்று மைய அரசு சில ஆண்டுகளுக்கு[2017?] முன்பே அறிவித்தது ஊடகங்களில் வெளியான தகவல்.

அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

இங்கே குறிப்பிடத்தக்க ஒரு சோகம்[?] 'பலான படங்களைப் பார்ப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள்' என்பது ஒரு செய்தியாக்கப்பட்டதே.

பாலுணர்வு உந்துதலுக்கான வடிகாலாக எண்ணிப் பலான படங்கள் பார்ப்பதை வழக்கப்படுத்தியவர்கள் உள்ளனர். அவர்களின் நிலை கவலைக்குரியது என்று கருத்துத் தெரிவித்த ஊடகக்காரர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் உரையாடி, விளக்கம் கேட்டு அதைச் செய்தியாகவும் வெளியிட்டார்கள்.

அண்மைக் காலங்களில், பலான காணொலிப் பயனாளர்களின் கணினிகளுக்கு, அரசாங்கமே அனுப்பியது போன்ற போலியான எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பி அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் சில கணினி நுட்பம் தெரிந்த நபர்கள் ஈடுபடுகிறார்களாம்https://youtu.be/d2fgD0jL3P4?t=44. 'இவர்களிடம் ஏமாற வேண்டாம்' என்று கணினிப் பயனர்களை எச்சரிக்கும் ஒரு காணொலி இன்று என் கண்ணில் பட்டது.

அதைப் பகிர்வது கணினியாளர்கள் பலருக்கும் பயனுடையதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

இதனோடு தொடர்புடைய பழையதொரு காணொலி[காவல்துறை அதிகாரியின் பேட்டி]க்கான இணைப்பையும் தந்துள்ளேன்.

வருகைக்கு நன்றி.


https://youtu.be/Xwek2yWjZEM  -காவல்துறை அதிகாரியின் பேட்டி

வெள்ளி, 28 ஜனவரி, 2022

'அது'வே மனித குலத்தின் பொற்காலம்!!!

முன்னெச்சரிக்கை! 'பொறுமை கடலினும் பெரிது' என்னும் முன்னோர் மொழியை மனதில் இருத்தி வாசிப்பைத் தொடருங்கள்.

னிதன் 100% விலங்காக வாழ்ந்தவரை அவனுக்குக் கடவுள் குறித்தான சிந்தனை எல்லாம் இல்லை.

உணவும் உடலுறவும் மட்டுமே அவனுடைய முக்கியத் தேவைகளாக இருந்தன. இந்த இரண்டிற்காகவும் சக மனிதர்களுடன் போராட வேண்டியிருந்தது.

அந்தப் போராட்டத்தில் பலவீனமானவன் பலசாலியிடம் பொருளும் பெண்ணுமாகிய தனக்குரிய உடைமைகளை இழந்ததோடு, தன் உயிரையும் இழக்கும் நிலை உருவாகும்போது, அவனின் தாள் பணிந்து தன் மீதான தாக்குதலைக் கைவிடும்படிக் கெஞ்சினான்[மொழி தோன்றாதபோது சைகையில்]சிந்திக்கும் அறிவைப் பெற்ற பின்னரும் இந்நிலை தொடர்ந்தது.

பலசாலி, சில நேரங்களில் மனம் இரங்கி அவனை உயிர் பிழைத்திருக்க அனுமதித்திருப்பான்; கொல்லவும் செய்திருப்பான்.

இவ்வகையில், பலசாலிகளிடம் பலவீனமானவர்கள் பணிவு காட்டியும் துதிபாடியும் வாழும் நிலை உருவானது.

காலப்போக்கில், சிந்திக்கும் திறன் படிப்படியாக அதிகரித்துவந்த நிலையில், இடிமின்னல், கடும் மழை, புயல் போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அவற்றிடமும் கெஞ்சிக் கூத்தாடினால் பலன் கிடைக்கும் என்று மனிதர்கள் நம்பினார்கள்; செயல்படுத்தினார்கள்.

முன்னெச்சரிக்கையாக, அவற்றால் தீங்கு விளையாத நேரங்களிலும் அவற்றிற்கு, வருண பகவான், அக்கினி தேவன், வாயு பகவான் என்றெல்லாம் பெயர்கள் சூட்டிக் கடவுள்களாக்கி வழிபடுவதை வழக்கமாக்கினார்கள். அதாவது, கடவுள் வழிபாடு நிரந்தரமான ஒரு சமூகச் சடங்காகிப்போனது.

சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்துவந்த நிலையில், இவையெல்லாம் தங்களுக்கு நன்மை பயப்பதோடு, தீங்கும் இழைப்பவை என்று எண்ணினார்கள் மனிதர்கள்;  அனைத்திற்கும் மேலான ஒரு 'சக்தி' இருப்பதாகவும் நினைத்தார்கள்.

அதை ஒரு 'சக்தி' என்று சொல்வதில் திருப்தி அடையாமல் அதற்குச் சிந்திக்கும் திறனும், அனைத்தையும் படைத்து இயக்குகிற பேரறிவும் இருப்பதாகக் கருதிக் 'கடவுள்' என்று பெயர் சூட்டினார்கள்.

படைப்பில் நல்லவையும் கெட்டவையும் கலந்திருப்பதால், மேம்பட்ட சக்தியாகிய அந்தக் கடவுளும் இவ்விரண்டின் 'இருப்பிடமாக' இருத்தல் வேண்டும் என்று ஆராய்ந்து கண்டறியத் தவறியதால், கடவுள் கருணை வடிவானவர் என்ற ஒரு 'முடிவை' மட்டுமே தேர்வு செய்தார்கள்.

அவருக்குக் கோயில்கள் எழுப்பி விழாக்கள் நடத்தி மகிழ்விப்பதன் மூலம்  தங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று முழுமையாக நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை உலகின்  பலதரப்பட்ட மக்கள் குழுக்களிடமும் பரவியிருந்தது. தாம் நம்பிய கடவுள்களுக்குத் தத்தம் விருப்பத்திற்கிணங்க பெயர் சூட்டிக்கொண்டன அக்குழுக்கள்.

குழுக்கள் அனைத்தும் தத்தம் கடவுளையும், அவரை வழிபடும் நெறிமுறைகளையும் பிற குழுக்களுக்கும் பரப்புவதில் ஆர்வம் கொண்டன[அது வெறியாகவும் மாறியதுண்டு]; அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டன. 

இதற்கு மதங்கள் பயன்பட்டன[தனி மனிதர்களின் கடவுள் அல்லது படைப்பு குறித்த கொள்கைகளே காலப்போக்கில் மதங்களாக உருவெடுத்தன].

மேற்கண்ட உண்மைகளை உலகோர் அனைவரும் உணர்ந்து சிந்திக்கும் காலம் வரும்போது, அனைத்து மதங்களும் மறைந்துபோகும். அனைத்துக் கடவுள்களும் காணாமல் போவார்கள்; அல்லது, தேவையற்றவர்களாக ஆவார்கள்.

அத்தகையதொரு காலம் வருமா?

வரும். 

வரும்போது, கடவுள்களையும் மதங்களையும்[இவற்றால் மக்கள் பெற்ற தீமைகளோடு ஒப்பிட்டால் நன்மைகள் மிகவும் குறைவு] நம்பியதால், ஏராள மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழும் நிலை முற்றிலுமாய் அழிந்தொழிந்து, மனிதர்கள் மனிதர்களுக்காகவும் பிற உயிரினங்களின் நலன்களுக்காகவும் மட்டுமே தங்களின் ஆறறிவைப் பயன்படுத்துவார்கள். 

அதுவே மனித குலத்தின் பொற்காலம் ஆகும்!

==========================================================================


வியாழன், 27 ஜனவரி, 2022

'ஸ்காட்லாந்து'வின் கொள்ளை அழகை அள்ளி வழங்கும் தமிழ்ப் பெண்!!!

"அழகான இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் மனசுக்குள் உற்சாகம் பிறக்குது" -தன் மகிழ்வுந்துப் பயணத்தின்போது, கவின்மிகு ஸ்காட்லாந்தின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இப்படிச் சொல்பவர், அந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் பெண்.

காரில் பயணித்துக்கொண்டே, சாலையின் இருபுறமும் சாரி சாரியாய் அணிவகுத்துக் காட்சியளிக்கும் பல்வகைப் பச்சைப்பசேல்  தாவரங்களையும், இறுமாந்து நிற்கும் மரங்களையும், பிரமாண்ட மலைகளையும் தன் மழலை கலந்த ஈழத்துக் கொஞ்சு தமிழில் வர்ணிக்கிறார் அவர்.

காணும் காட்சிகளெல்லாம் நம் கண்களுக்கு விருந்தாக, அந்த வர்ணனை நம் காதுகளுக்கான விருந்தாக அமைகிறது.

அழகுக் காட்சிகளில் லயித்துப்போய் அவர் அமைதி காக்கும்போதெல்லாம் ஒலிக்கும் இனிமையான பின்னணி இசை நம் நெஞ்சுக்கு இதமளிக்கிறது. 

இவ்வாறு, நாம் இருந்த இடத்தில் இருந்தவாறே, ஸ்காட்லாந்தின் அழகை ஆசைதிர ரசித்து மகிழும் அனுபவத்தை அளிக்கிறது அவர் வெளியிட்டுள்ள காணொலி. அவர்?

'என் பக்கம்' என்னும் வலைப்பக்கத்தின் உரிமையாளரும் சக பதிவருமான 'அதிரா' அவர்கள்.

அவருக்கு நம் நன்றி.

அவரின் 'Driving To Inverness City| Scotland 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 | Beautiful Sceneries' என்னும் youtube காணொலி கீழே. 

புதன், 26 ஜனவரி, 2022

கொஞ்சம் சிரித்து நிறைய அழலாம்!

//ஸ்விட்சர்லாந்தில், பாலியல் வன்புணர்வு வழக்கில் தீர்ப்பளித்துள்ள பெண் நீதிபதி ஒருவர், "குற்றவாளி 11 நிமிடம் மட்டும்தான் பாலியல் வன்புணர்வு செய்தார்" எனக் கூறி[எவ்வளவு நேரம் புணர்ந்தால் அதிகபட்சத் தண்டனை என்பதைச் சொல்லியிருக்கலாம். ஹி... ஹி... ஹி!!!] அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்திருக்கிறார். அவரின் தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்பினர் போராடி வருகின்றனர்//

இது செய்தி. 

இதை வாசித்ததும் சிரிக்கத் தோன்றுகிறதா? வாய்விட்டு நிறையவே சிரித்துவிடுங்கள். அடுத்து வருபவை கண்ணீர் சிந்தி அழவைக்கும் சோகச் செய்திகள்[ஆறுதல் அளிக்கும், நீதிபதிகளின் நல்ல தீர்ப்புகள் உட்பட].

                                         *   *   *   *   *

இந்தியாவில்.....

*ஒவ்வொரு 155 நிமிடங்களுக்குள் 16 வயதுக்குக் கீழுள்ள சிறுமி ஒருவரும், ஒவ்வொரு 13 மணி நேரங்களுக்குள் 10 வயதுக்குக் கீழுள்ள ஒரு சிறுமியும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர்.

*2015ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வன்புணர்வாளர்களால் சீரழித்துச்  சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

*அரசால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்துகொண்ட 53.22 சதவீதக் குழந்தைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

*குழந்தைகளைப் பலாத்காரம் செய்வோரில் 50 சதவீதத்தினர் அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் அல்லது, நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பராமரிப்போராக உள்ளனர்.

*'பள்ளிக்குச் செல்லும் மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்' -இது, கடந்த வாரம் 'மும்பை'யில் நடந்த கொடூரம்.

*ஏற்கனவே வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியை, மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வதாகப் பெற்றோரை நம்பவைத்து, சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று சீரழித்தார் ஒரு காவல்துறை அதிகாரி. இது, தில்லியில் நடந்தது.

*பெற்றோர்கள், சிறுமிகளைச்  சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடி, அவர்களுக்குப்  பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதது, சிறுமியர் அதிக அளவில் வன்புணர்வு செய்யப்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று.

*'பாலுறவு விழைவுக்காக ஓர் ஆண் ஒரு பெண்ணின் எந்தவோர் உடல் பாகத்தைப் பயன்படுத்தினாலும், அது நுழைத்தல் செயலாக இல்லாமல் இருந்தாலும் (Non- penetrative), இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி அது பாலியல் வன்புணர்வாகவே(Rape) கருதப்படும்' என்று கேரள உயர்நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

*'பாதிக்கப்படும் குழந்தை சொல்லும் ஒரு சாட்சியத்தை வைத்து மட்டும் வன்முறையாளரைக் குற்றவாளி என்று நிரூபிக்கமுடியும்.' -இதுவும் ஒரு நீதிமன்றத் தீர்ப்புதான்.

==========================================================================

*****இணையத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பு இது. திரட்டியவற்றில் கணிசமானவை பலரும் அறிந்திருக்கக்கூடும் என்பதால் நீக்கப்பட்டன.

==========================================================================

குறிப்பு:

பேசியில்[phone] இடுகையை வாசிப்பவர்கள், முகப்புப் பக்கத்தை(முழுப் பக்கம்) அணுக, இடுகையின் கீழ் உள்ள 'வலையில் காட்டு' என்னும் இணைச் சொற்களை அழுத்துதல்[கிளிக்] வேண்டும்.


செவ்வாய், 25 ஜனவரி, 2022

அடடா பாவம் அந்தப் 'பெண் ரோபோ'[Robot]!!!

ஆஸ்திரியாவின் லின்ஸில் நடந்த 'ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா' விழாவில், 3000 பவுண்டுகள் மதிப்புடைய  'சமந்தா' என்று பெயர் சூட்டப்பட்ட பாலியல் ரோபோ காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததுhttps://www.bbc.com/tamil/global-41454006

நுண்ணறிவு கொண்ட இந்தப் பொம்மை ரோபோ, நாம் பேசினால் பதிலளிக்கும். நாம் அதன் மார்பையோ இடுப்பையோ[ஒருசேர இரண்டையுமோ] தொட்டால் கிறங்கிய குரலில் முனகுமாம்.

இதற்கான வரவேற்பு அபிரிதமாக உள்ளதாம்.

இணையத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் 40 சதவிகிதம் ஆண்கள் "இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தப் பாலியல் ரோபோவை வாங்குவோம்" என்று சபதம் எடுத்திருக்கிறார்களாம்[உலக அளவில் மாப்பிள்ளை கிடைக்காமல் கன்னிப்பெண்கள் காத்திருக்கும் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது].

ஆனாலும், கண்காட்சிக்கு வந்த ஆண்கள்[வயது வித்தியாசம் இல்லாமல்?!] இந்த ரோபோ குட்டியை ரொம்பவே படுத்திவிட்டார்களாம்.

சில காமாந்தகர்கள் கண்டபடி சீண்டியதால் அவளின் ஒரு கை துண்டானதோடு, இன்னொரு கையின் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டனவாம்.

ரோபோவின் வடிவமைப்பாளர் செர்ஜியோ சாண்டோஸ், "இதற்கான தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டாமல், உறுப்புகளைச் சேதப்படுத்தியதோடு ரோபோவை ரொம்பவே அழுக்கடையச் செய்துவிட்டார்கள். இவர்கள் மிக மோசமான காட்டுமிராண்டிகள்" என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

எது எப்படியோ,

இந்தப் புதிய பாலியல் ரோபோக்கள் பாலியல் தொழிலுக்கு மாற்றாகக்கூட வருங்காலத்தில் இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்களும், பாலியல் நிபுணர்களும் கூறுகிறார்களாம். இந்த ரோபோக்கள் பாலியல் நோய்களையும், பாலியல் தேவைகளுக்காகப் பெண்கள் கடத்தப்படுவதையும் குறைக்கும் என்றும் அவர்கள் வாதிடுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஐரோப்பாவின் பார்சிலோனப் பகுதியில் ஐரோப்பாவின் முதல் பாலியல் - ரோபோ விபச்சார விடுதி திறக்கப்பட்டது. அந்த விடுதிக்கான இணையத்தில், "அதன் பாவனையிலும், உணர்விலும் உண்மையானது போல இருக்கும் இந்தப் பெண் குட்டிப்பொம்மை, உங்களது கற்பனைகளையும் கனவுகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும்" என்று குறிப்பிட்டு இருந்தது. 30 நிமிடங்கள் இந்த ரோபோக்களுடன் செலவு செய்ய 60 ஈரோக்கள்(70 பவுண்டுகள்) நிர்ணயத்து இருக்கிறார்களாம்[இது அவ்வளவு பெரிய தொகையா என்ன?!]. 

இதைப் போலவே, டப்ளினில் ஜூலை மாதம் திறக்கப்பட்ட ஒரு பாலியல் பொம்மை விபச்சார விடுதி, ஒரு மணி நேரத்துக்கு 100 ஈரோக்கள்(88 பவுண்டுகள்) நிர்ணயித்து இருந்தது என்பதும் செய்தி.

==========================================================================

குறிப்பு:

1 அக்டோபர் 2017இல் வெளியான இந்த நற்செய்தியை ஆடவர் உலகம் வாசித்தறிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இதை வாசிக்காத அடியேனைப் போன்ற[நான் இன்றுதான் வாசித்தேன்] அப்பாவிகளின் நலன் கருதி இது பதிவாக்கப்பட்டுள்ளது! 


திங்கள், 24 ஜனவரி, 2022

காலஞ்சென்ற 'கடவுள்' புட்டப்பர்த்தி சத்திய சாயிபாபா!!!

['பகவான்' பாபாவின் முதுமைப் பருவம்]
சராசரி மனிதர்களைப் போலவே, உண்டு உறங்கி வாழும் சாதாரண மனிதர்கள் மகான்கள் ஆக்கப்பட்டுக் கடவுள் எனப்படுபவருக்கு இணையாகப் போற்றி வழிபடப்படும் அதிசயம் இந்த மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது[தன்னலமற்ற பொதுப்பணிகளால் சிறந்த மனிதர்களாகப் போற்றப்படுவது வேறு].

இந்த அதிசயத்தை நிகழ்த்துபவர்கள், நம் மக்களில் பெரும்பான்மையினராக உள்ள பக்தர்கள்[இப்படியான ஒரு பக்தர் பரம்பரை உருவாகக் காரணமானவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த மிக நுணுக்கமானதும் விரிவானதும் ஆன  ஆய்வு மிகவும் தேவையான ஒன்று.]

இந்த நம் பக்தர்களைத் திருத்துவது, கடலில் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு, அதன் வாசனையை நுகர முயற்சிப்பதற்கு ஒப்பானதாகும்.

உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களால் கடவுளாகக் கொண்டாடப்பட்டவர் புட்டபர்த்தி சத்திய சாயிபாபா என்பவர். இவரின் சர்ச்சைக்குரிய வாழ்க்கையின் பொதுவான பல நிகழ்வுகளைப் பலரும் அறிந்திருக்கலாம். குறிப்பிடத்தக்க, கொஞ்சம் தகவல்கள் மட்டும் பக்தர்களின் சிந்தனைக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.

                                           *   *   *   *   *

*சத்ய சாய்பாபா மற்றும் இவரது ஆசிரமம் மீது பலமுறை எதிர்மறை விமர்சனங்களும், குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன. ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்ற புகார்களும் பதிவாகியுள்ளன.

*அக்டோபர் 20, 1940இல் தன் 14ஆவது வயதில், தன்னை ஷீர்டி சாய்பாபாவின் மறுபிறவி என அறிவித்துக் கொண்டார் சத்யநாராயண ராஜு என்னும் இயற்பெயர் கொண்ட புட்டப்பர்த்தி சாயிபாபா. அவ்வப்போது இதை நினைவுகூர்வது இவரின் வழக்கம்.

*மேஜிக் வேலைகள் செய்வதில் திறமை பெற்றவர் இவர். இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

*இந்தியாவின் பழம்பெரும் மேஜிக் கலைஞரான பி.சி. சர்கார், "சத்யநாராயண ராஜுவும்[புட்டப்பர்த்தி சாயிபாபா]], நானும்  ஒன்றாகத்தான் மேஜிக் கற்றோம் என்றும் கூறியுள்ளார்.

*ஒரு புறம் சர்ச்சைகள் அதிகரித்தாலும், மறுபுறம் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார் சத்ய சாய்பாபா. முக்கியமாக, புட்டப்பர்த்திப் பொது மருத்தவமனையில் தொடங்கி, அதைச் சத்ய சாய் மருத்துவ ஆராய்ச்சி மையமாக வளர்த்து, ஒரு சிறந்த மருத்துவ உதவி செய்யும் மையமாக மாற்றினார் என்பது வியந்து பாராட்டத்தக்கது.

*84 வயதான சாயிபாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக 'அருள்மிகு சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை'யில் 2011 மார்ச் 28ஆம் தேதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். 

இவரது உயிர் பிழைப்பிற்காகப் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்துவந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு இவரது உயிர் பிரிந்தது.

*இவர் இறந்த அன்று (ஏப்ரல் 24, 2011) பூட்டப்பட்ட இவரது தனியறையான 'யசுர் வேத மந்திரம்' சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்துச் சூன் 16, 2011 அன்று திறக்கப்பட்டது. அவ்வறையில் பெரும்பாலும் பணமும் நகையும் கணினிகளுமே இருந்தன. இவையனைத்தும் இவரது கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களைக்கொண்டு தனியே கணக்கெடுத்துப் பிரிக்கப்பட்டுப் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன.

==========================================================================

உதவி:

Wikipedia, https://www.tamilvbc.com/?p=9115


ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இந்துமத அழிவிற்கு இனி எதிரிகள் தேவையில்லை!!!

#இந்துக் கோவில்கள் பலவற்றிலும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே[எனக்குத் தெரியாதய்யா!]. அப்படி நீங்கள் கொஞ்சமும் யோசித்துப் பார்க்காத மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகைக் கோவில் பற்றித்தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு சிவன் கோவிலுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகைக் கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது; ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் மட்டுமல்ல, இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது.

இந்தக் குகை மற்றக் குகைகளைப் போல அல்ல; தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இந்தத் தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். குறிப்பாக, மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இந்தக் குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம்.

சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத்தான் இந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு யுகம் முடிவடையும்போதும், ஒவ்வொரு தூணாகக் கீழே விழும் என்பதுதான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்துவிட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த நான்காம் தூண்தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். ந்தத் தூண்தான் இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்தத் தூண் விழும் நாள்தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம். அதாவது உலகம் அழியும் நாள்[https://tamil.samayam.com/religion/temples/kaliyuga-suspense-the-mysterious-kedareshwar-cave-temple-in-tamil/articleshow/72477236.cms?story=2]#

                                      *   *   *   *   *

ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மண்டபத்தின் தூண்கள் காலப்போக்கில் சிதைந்து அழிந்துவிடுவது என்பது இயற்கையான நிகழ்வு. இந்த நியதியின்படிதான் மூன்று தூண்கள் உடைந்து சிதறியிருக்கின்றன.

நான்காவது தூணின் நிலைப்பாட்டைப் பழம்பொருட்கள் குறித்த அறிவியல் ஆய்வாளர்களால் மிக எளிதில் கணித்துவிட முடியும். கலியுகம் முடியும்போது உடையும் என்பது அப்பட்டமான பொய்.

இந்தச் சிதைந்த தூண்களைப் படம் பிடித்துப் பதிவு செய்து ஊடகச் செய்தியாக்கியதோடு, நான்காவது தூண்தான் பிரபஞ்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்று 'புருடா' விடுவது பொறுத்துக்கொள்ளவே இயலாத பொல்லாங்குத்தனம்.

இந்துமதத்தை அழித்தொழிப்பதற்கு எதிரிகள் வேண்டாம். அதைச் செய்வதற்குத்தான், வரிந்துகட்டிக்கொண்டு இம்மாதிரியான பல கும்பல்கள்  களமிறங்கியிருக்கின்றன.

கலியுக முடிவில் எஞ்சியிருக்கும் இந்த ஒற்றைத் தூண் தானாக உடைவது இருக்கட்டும், தற்செயலாக இடிமின்னல் தாக்கியோ, நிலநடுக்கம் காரணமாகவோ இந்தத் தூண் உடைந்து நொறுங்கி விழுந்தாலும் இந்த உலகம் அழியுமா?

ஏற்கனவே, சொன்னதைத்தான் மீண்டும் சொல்கிறோம், உடம்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் மட்டுமல்ல,  மனதுக்கு ஊறு விளைவிப்பவர்களும் தண்டிக்கப்படுதற்குரிய குற்றவாளிகளே.

இம்மாதிரிப் பொய்க் கதைகளை இட்டுக்கட்டுபவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீதும், பரப்புபவர்கள் மீதும் நாட்டை ஆளுகிறவர்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!

==========================================================================


சனி, 22 ஜனவரி, 2022

கை மேல் பலன்![பக்திக் கதை]

கொரோனா இரண்டாம் அலையின் தொடக்கத்தில் குமரேசனுக்குக் கொரோனா தொற்றியது. கோவை மருத்துவமனை ஒன்றில் பத்து நாட்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.

நாடெங்கும் தொற்றின் வேகம் குறைந்த நிலையில், அவன் மனைவி அன்புமலர், "நீங்க சீக்கிரம் குணமாகித் திரும்பணும்னு நம் குலதெய்வத்தை நேர்ந்துகிட்டேன். நாளை கோயிலுக்குப் போய், நேர்ந்துகிட்டபடி உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டுட்டு வந்துடலாம். இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னாலும் எனக்காக வரணும்" என்றாள்.

"வர்றேன். அதுக்கு முன்னாடி உங்கிட்டே கொஞ்சம் பேசணும்."

"நேர்த்திக்கடன் விசயமாத்தானே? பேசுங்க." -சிக்கனமாய்க் கொஞ்சம் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கணவனின் முகம் பார்த்துக் காத்திருந்தாள் அன்புமலர்.

"நாம் உண்டியலில் காணிக்கை செலுத்தும் விவரம் சாமிக்குப் போய்ச் சேரும்னு நினைக்கிறியா?"

"எல்லாம் நம்பிக்கைதான். எந்த அடிப்படையில் நீ நம்புறேன்னு கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது."

"சாமிக்காக உண்டியலில் போடுற ரூபாயை மனுசங்கதான் எண்ணி எடுத்துட்டுப் போய் வங்கியில் போடுறாங்க. சில பணக்காரச் சாமி கோயில்களில், பக்தர்களுக்கு உணவு கொடுக்கிறது, மருத்துவமனை கட்டியோ கல்வி நிறுவனங்களை உருவாக்கியோ மக்களுக்கு உதவி செய்யுறதுன்னு நல்ல காரியங்களும் செய்யுறாங்க. இதைச் செய்யுறவங்க, அவ்வளவு உண்டியல் பணத்தையும் நல்ல வழியில்தான் செலவு பண்ணுறாங்கன்னு எப்படி நம்புறது? தப்பான வழிகளில் செலவு பண்ணுற சுயநலவாதிகளும் இருக்கலாம் இல்லையா?" -கேட்டான் குமரேசன்.

"இருக்கலாம். நல்லதே நடக்கும்கிற நம்பிக்கையில்தான் உண்டியலில் பணம் போடுறோம்" என்றாள் அன்புமலர்.

"இந்த நம்பிக்கைதான் பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் செய்யத் தூண்டுது. அதிருக்கட்டும். ஏழைபாழைகளுக்குத் தர்மம் பண்ணினா புண்ணியம் கிடைக்கும்கிறதும் இப்படியான ஒரு நம்பிக்கைதான். நீ நம்புறியா?"

"நம்புறேங்க."

"சாமியைக் கும்பிடுறதால கிடைக்கிற புண்ணியம், பார்வையிழப்பு, கைகால் முடக்கம், நிராதரவான நிலை, முதுமை போன்ற காரணங்களால் பிச்சை எடுக்கிறவங்களுக்கு உதவுறதாலயும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"தாராளமா."

"நல்லது. நாம் நினக்கிற மாதிரியான பிச்சைக்காரங்களைத் தேடிக் கண்டுபிடிச்சி, இந்த ஆயிரம் ரூபாயைப் பகிர்ந்து கொடுத்தா 'மவராசர் நீங்க நல்லா இருக்கணும்'னோ, 'தீர்க்காயுசா இருங்கோ'ன்னோ, 'உங்க தலைமுறை தழைக்கட்டும்'னோ மனசார வாழ்த்துவாங்க. இம்மாதிரியான வாழ்த்தை நாம் காதாரக் கேட்போம்; வாழ்த்துறவங்களைக் கண்ணாரப் பார்ப்போம்.....

.....இப்படிக் கேட்டும் பார்த்தும் அடையுற சந்தோசம் உண்டியலில் பணம் போடுறதில் கிடைக்காது. நேர்ந்துகொண்டபடி உண்டியலில் பணம் போடலைன்னு சாமி கோபித்துக்கொள்ளாது. அதனால....."

குறுக்கிட்ட அன்புமலர், "நல்ல யோசனை. நாளைக்கே நடத்தி முடிச்சுடுவோம்" என்றாள். அவள் மனப்பூர்வமாகத்தான் இப்படிச் சொன்னாள் என்பதை அவளின் முகத்தில் பரவியிருந்த மலர்ச்சி உறுதிப்படுத்தியது.

==========================================================================


வெள்ளி, 21 ஜனவரி, 2022

திருந்துங்கள்; திருத்துவது அப்புறம்!

ரு சாமிக்கு ரெண்டு மனைவிமார்கள். ரெண்டு பேரும் எப்பவும் அவர்கூடவே இருப்பாங்க.

அப்படி இருந்தும் அவர்களின் முன்னிலையிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறதில் அதிக நேரம் செலவழிச்சாராம் அவர்.

ரெண்டு பேரும் கடும்  கோபத்துக்கு உள்ளானாங்க.

பொதுவா, மனித இனத்தில், பெண்டாட்டிமார்களுக்குக் கோபம் வந்தா என்ன செய்வாங்க?

கணவன்கிட்டே முகம் காட்டிப் பேசமாட்டாங்க. அவர் ரொம்பப் பிரியமா நெருங்கி நெருங்கிப் பேசினாலும், இவங்க பிகு பண்ணிட்டு விலகி விலகிப் போவாங்க. அந்தி சாய்ந்த அப்புறமும் அண்டவிடமாட்டாங்க. இதுக்குப் பேரு 'ஊடல்'னு இலக்கியங்கள் சொல்லுது.

மனுசப் பொம்மணாட்டிகள் மட்டுமில்ல, கல்யாணம் ஆன பெண் கடவுள்களும்கூடப் புருஷக் கடவுள்களோடு ஊடல் கொண்டு விலகி விலகிப் போறதுண்டு.

அந்த வகையில்தான், மேற்கண்ட ரெண்டு பெண் சாமிகளும் கணவனோடு ஊடி, அவரைவிட்டு விலகி விலகி விலகிப் போனாங்களாம்.

கணவன் சாமி, சமாதானம் பண்ணி ரெண்டு பேரையும் தனக்கான இருப்பிடத்துக்கு அழைச்சுட்டுப் போனாராம்.

இந்தச் சுவாரசியமான ஊடல் நிகழ்ச்சி எந்த யுகத்தில் நடந்ததுன்னு கேட்க நினைக்கிறீங்கதானே?

தப்பு. சிந்தனையை நெடு நெடுந் தொலைவுக்கு நீளவிட்டுட்டீங்க.

இது நடந்தது, ரெண்டு நாள் முன்பு நம்ம திருப்பதி ஏழுமலையான் கோயிலில்[நாளிதழ்ச் செய்தி].

நீங்க கேட்பீங்களோ இல்லையோ, "எப்பவோ நடந்ததாகச் சொல்லப்படுற இந்தப் புராணக் கதை நிகழ்ச்சியை இப்போதும்[ஆண்டு தவறாமல்] விழாவாக[உற்சவம்] நடத்துறதில் என்ன பயன்?" என்று கேட்கத் தோன்றுகிறது அடியேனுக்கு. 

பயன்.....

"சாமிகளே ரெண்டு மூனுன்னு கல்யாணம் கட்டிக்குதுக. அற்ப மனுசப் பிறவிகளான நாமும் அப்படிக் கட்டிக்கிறதில் தப்பென்ன?"ன்னு ஒருத்தன் கேட்பான்.

"நான் நாலு கட்டிக்குவேன்"னு இன்னொருத்தன் அடம்பிடிப்பான். வசதியுள்ளவன் எத்தனையும் கட்டிக்கலாம்னு வேறொருத்தன் வாதம் பண்ணுவான்.

நாம் ஆச்சரியப்பட்டுக் கேட்க நினைப்பது.....

ஊடல் கதைகளையெல்லாம் உற்சவம் ஆக்குகிறவர்கள், விரும்பத்தகாத 'ஒரு மாதிரி'யான புராணக்  கதைகளுக்கும் உற்சவம் நடத்திப் புத்துயிர் ஊட்டுவார்களோ?

'நந்தனார் கதை'[சைவ சமயக் கதை] போல, பக்தியைப் போதித்து, ஓரளவுக்கேனும் பகுத்தறிவையும் வளர்க்கிற கதைகளே புராணங்களில் இல்லையா?

தேடிக் கண்டறிந்து, உரிய முறையில் வடிவமைத்து விழா எடுக்கலாமே?

இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தால், "நீ நாத்திகன். இது விசயத்தில் தலையிட உனக்கு யோக்கியதை இல்லை" என்று கடுமையாகச் சாடுவதோடு, "இஸ்லாம் மதத்தில் இம்மாதிரிக் கதைகள் இல்லையா? கிறித்தவ மதத்தில் இல்லையா? அவர்களிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் உனக்கு ஏன் இல்லை?" என்று எதிர்க்கணை தொடுப்பார்கள்.

நம் பதில்.....

"நீங்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுபவர்கள், இப்போதும் இந்துக்களாக இருக்கிற எம்போன்றவர்களின் வாரிசுகளும் சொந்தபந்தங்களும்தான். எனவே, நீங்கள் முதலில் திருந்துங்கள். அவர்கள் தவறு செய்தால் திருத்துவதற்கு அவர்களுக்குள்ளேயே ஆட்கள் தோன்றுவார்கள்" என்பதுதான்.

==========================================================================


வியாழன், 20 ஜனவரி, 2022

இவர்கள் 'அண்ட'ப் புளுகர்கள்!!!

ண்டம் என்றால் வானம் அல்லது, ஆகாயம் என்று பொருள்.

'நல்ல நேரம்', கெட்ட நேரம்' போன்றவற்றோடு நம் மக்களின் எதிர்காலம் பற்றியும் ஜோதிடர்கள் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறார்கள் என்று காலங்காலமாய் நம்பப்படுகிறது.

இந்த ஜோதிடர்கள், அண்டத்தில் உலவும் கோள்களின் நிலைப்பாட்டை வைத்துத்தான் பலன்களைக் கணிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிற 09 கோள்களில் 'சூரியன்' ஒரு கோள் அல்ல; நட்சத்திரம்தான் என்று அறிவியல் படித்தவர்கள் சுட்டிக்காட்டியதை இவர்கள் அலட்சியம் செய்தார்கள். 

சூரியன் ஒரு நட்சத்திரமோ கிரகமோ, அதையும் கணக்கில் கொண்டுதான் முன்னோர்கள் பலன்களைக் கணித்தார்கள் என்று சமாளித்தார்கள். ஜோதிடப் பித்தர்களும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களின் பட்டியலில் ராகு, கேது என்னும் பெயர்களில் இரண்டு பாம்புக் கிரகங்களையும் சேர்த்துள்ளார்கள்.

அப்படியான இரண்டு கோள்கள் அண்டத்திலேயே இல்லை என்று அறிந்தவர்கள் சொன்னபோது, அவை நிழல் கிரகங்கள் என்று மழுப்பினார்கள்.

இவர்கள் சொல்வது போல் நிழல் கிரகங்கள் அண்டத்தில் உலவுகின்றனவா என்னும் கேள்விக்கு, அழுத்தம் திருத்தமாக அறிவியலாளர் சொல்லும் பதில்.....

//அமாவாசை தினத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில், ஒரு நேர்க்கோட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் சூரியன் மறைக்கப்படுகிறது. வேறு எந்தவொரு கோளும் அங்கே நிலைபெறவும் இல்லை; இயங்கிக்கொண்டிருக்கவும் இல்லை.

இதே போல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்தால், பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மறைக்கப்படும். அவ்வளவுதான்

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும், பாம்பு விழுங்குகிறது, துப்புகிறது[கிரகணம்] என்று கதையளப்பதற்கோ, நிழல் வடிவில் ஏதோ இரண்டு கோள்கள் சுற்றுகின்றன என்று புளுகுவதற்கோ வாய்ப்பே இல்லை//[கலைப்பித்தனின் 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், சென்னை].

அறிவியல் ஆதாரங்களுக்கிணங்க, 09 கோள்கள் இருப்பதாகச் சொல்லி, 06 கோள்களை[சூரியன், ராகு, கேது ஆகியவை நீங்கலாக] மட்டும் கணக்கில் கொண்டு பலன்களைக் கணிப்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை ஆகும்.

படிப்பறிவு உள்ளவர்களாயினும் இல்லாதவர்களாயினும் ஜோதிடப் பொய்யர்களை நம்பிப் பணத்தை இழப்பதோடு, அறிவையும் முடமாக்குபவர்கள் இங்கு நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் திருந்துவது எப்போது?

இவர்களைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எப்போதேனும் மேற்கொள்ளுமா?

எளிதில் விடை காண இயலாத கேள்விகள் இவை.

==========================================================================

புதன், 19 ஜனவரி, 2022

தண்டனைக்குரியவர் 'தலை வெட்டும்' பூசாரி மட்டுமல்ல!!!

#ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வலசப்பள்ளியில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற சங்கராந்தி விழாவின்போது நேர்த்திக்கடனாக ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆடு ஒன்றை நேர்த்திக்கடனாகச் செலுத்த வந்தார். அவர் தன்னுடைய ஆட்டைத் தலையைக் குனிந்தபடி பிடித்திருந்தபோது, குடிபோதையில் ஆடுகளை வெட்டிவந்த பூசாரி, ஆட்டுக்குப் பதிலாக அதைப் பிடித்திருந்த சுரேஷின் கழுத்தை அரிவாளால் வெட்டினார். இதில் சுரேஷின் கழுத்து வெட்டுண்டது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த சுரேஷை மீட்டு, ஊர்மக்கள், மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்துபோன சுரேஷுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்# இது, நேற்றைய 'மாலை மலர்'ச் செய்தி.  [https://www.maalaimalar.com/news/topnews/2022/01/18145445/3401996/Drunk-man-slaughters-human-instead-of-goat-during.vpf     ஜனவரி 18, 2022].

                                           *   *   *   *   *

பூசாரி கைது செய்யப்பட்டது சரியே. ஆயினும், ஓர் உள்மன உறுத்தல்.

இந்த நிகழ்வில் பூசாரி மட்டுமே குற்றவாளியா?

"அல்ல" என்பதே என் எண்ணம். இந்தக் குற்றத்தில் நம் முன்னோடிகள் பலருக்கும் பங்குண்டு.

கடவுள் இருப்பதாக முதன் முதலில் கற்பனை செய்து சொன்னவர் முதல் குற்றவாளி.

அவரால் கற்பிக்கப்பட்ட கடவுளை, தொடர் பரப்புரையின் மூலம் மக்களைச் சென்றடையச் செய்தவர்கள் அவரின் வழிவந்த குற்றவாளிகள்.

கடவுளை மறுத்துப் பேசியவர்களிடம் கடுமையாக வாதம் புரிந்து, கடவுள் நம்பிக்கையை அழிந்துவிடாமல் காத்தவர்கள் அடுத்தடுத்து வந்த பரம்பரைக் குற்றவாளிகள்.

காலப்போக்கில், விதம் விதமான கடவுள்களைப் படைத்து, அவர்கள் அத்தனை பேருக்கும் கோயில்கள் கட்டி விழாக்கள் எடுக்குமாறு மக்களைத் தூண்டியவர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான்.

ஆடு, மாடு, கோழி, பன்றி, எருமை என்று வேறு வேறான, ஏதுமறியா உயிர்களைப் பலி கொடுத்தால் நினைத்தது நிறைவேறும் என்று நம்ப வைத்தவர்கள் கடும் தண்டனைக்குரிய குற்றவாளிகளே.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கொடூரக் கொலைச் செயலுக்கென்றே கோயில் தோறும் பூசாரிகளை நியமனம் செய்தவர்கள்  குரூரமான தண்டனைக்குரிய குற்றவாளிகள்.

தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொலைபாதகச் செயலை ஒருபோதும் தடுக்க முன்வராதவர்களும், பெரும்பான்மையோரால் நம்பப்படுபவர்களுமான [அசைவக்]கடவுள்களும் குற்றம் புரிந்தவர்களே.

ஆடுகளை ஐம்பது, நூறு, இருநூறு என்று சளைக்காமல் வெட்டித் தள்ளுவதால் ஏற்படும் மன உளைச்சலைத் தணிப்பதற்காகத் தண்ணியடித்துப் போதை ஏற்றிக்கொள்ளும் பூசாரிகளை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயம் அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இனியேனும் இம்மாதிரிக் குற்றச் செயல்கள் நடைபெறாமலிருக்க, மக்கள் ஆழ்ந்து சிந்திக்கப் பழகுதல் மிக மிக மிக அவசியம்.

சிந்திப்பார்களா?

==========================================================================

செவ்வாய், 18 ஜனவரி, 2022

பதின்பருவப் பையன்களும் அப்பாவி அம்மாக்களும்!!

ரிய வயதில் கல்யாணம் ஆகியிருந்தால் பெரிய குடும்பஸ்தன் ஆகியிருப்பான் குழந்தைசாமி. அம்மாவுக்கும் அவனுக்குமான அன்றாடச் செலவுக்கே வருமானம் கட்டுபடி ஆகாத நிலையில் கல்யாண நினைப்பு அவனுக்கு எப்படி வரும்? 

வெறும் பட்டதாரியான அவன், மேற்படிப்பெல்லாம் படித்து, "நல்ல சம்பளத்தில் வேலை தேடிக்கொண்ட பிறகுதான் கல்யாணம்" என்று சபதம் எடுத்திருந்தான்.

சபதம் எடுத்திருந்தானே தவிர, சபலங்களைக் கட்டுப்படுத்தும் வகையறியாத காரணத்தால், வரக்கூடாத 'அந்த' நினைப்பு கண்ட கண்ட நேரத்தில் வந்து அவனைப் பாடாய்ப்படுத்தியது.

'அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவது எப்படின்னு புத்தகம் எழுதறானுக; யூடியூபில் காணொலி இணைச்சி ஆலோசனை வழங்குறானுக. ஆனா, எவனும் இந்தக் காமப் பிசாசை அண்டவிடாம தடுக்க  உருப்படியா யோசனை சொன்னதில்லை. கசமாலங்கள்' என்று அறிமுகம் இல்லாத ஆட்களையெல்லாம் மனம்போனபடி திட்டித் தீர்த்தான்.

பொதுநூலகத்தில் வேறு எதையோ தேடியபோது காந்தியடிகள் எழுதிய 'பிரமச்சரியம்' என்னும் நூல் கண்ணில் பட்டது. எடுத்துவந்தான்; படித்தான்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் காந்தி சொல்லியிருந்த வழிமுறைகளைக் கையாள்வதென்று உறுதி பூண்டான்.

அதிகாலையிலும், உறங்கச் செல்வதற்கு முன்னரும் தியானம் செய்தான். அதில் அவன் அறிந்துவைத்திருந்த அத்தனைக் கடவுள்களும் வந்துபோனார்கள்.

அடிமனதில் பதுங்கியிருந்த 'அந்த நினைப்பு' தலைதூக்கும்போதெல்லாம், நாடிநரம்புகளில் ஊடுருவியிருந்த 'தினவு' அடங்கும்வரை வேர்க்க விறுவிறுக்க ஓடினான்.

குளுகுளு நீரில் மட்டுமே குளித்தான்.

இவ்வாறு, காந்தி சொல்லியிருந்த வழிமுறைகளைக் கையாள்வதோடு குழந்தைசாமி திருப்தியடையவில்லை.

காந்தியின் உருவத்தைக் கையில் பச்சை குத்தினான். கூடவே, பிரமச்சரியக் கடவுளான ஆஞ்சநேயரின் அருள்பாலிக்கும் கோலத்தையும் பதிவு செய்தான்.

"ஆஞ்சநேயரைப் பச்சை குத்தியிருக்கே. அந்த அநுமார் சாமிதான் உனக்கு நல்ல புத்தியைக் குடுத்திருக்கு" என்று அவனின் கன்னம் வருடி அம்மா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, பதில் சொல்லும் வகையறியாது அசடு வழிந்தான் முன்னாள் நாத்திகனான குழந்தைசாமி.

என்ன செய்தும் அந்த உணர்ச்சியை அவனால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவ்வப்போது, அண்டை வீட்டுக் குமரிகள் நைட்டியில் நடமாடும் காட்சி சன்னல் வழியாகக் கண்ணில் பட்டதால், கட்டுக்குள் இருந்த காம உணர்ச்சி கட்டவிழ்த்துக்கொண்டு குத்தாட்டம் போடத் தொடங்கியது.

ஓர் இரவு முழுக்க யோசித்தான் குழந்தைசாமி. 

தூங்கி விழித்ததும் முதல் வேலையாக, எப்போதும் திறந்தே இருக்கும் சன்னல் கதவுகளை இழுத்து மூடி, நிறைய ஆணிகள் அடித்தான்.

என்னதான் சன்னலை இழுத்துச் சாத்தினாலும், கண்ணயர நினைத்துக் கண் மூடும்போதெல்லாம் அந்த அழகு ராணிகள் அவனின் கண் முன்னால் வரிசை கட்டி நின்று கண் சிமிட்டிக் கமுக்கமாய்ச் சிரித்து அவனை உசுப்பேற்றினார்கள்.

உறக்கம் தடைப்படுவதோடு, உடம்பெங்கும் பரவும் சூட்டைத் தணிப்பதற்காக, அர்த்த ராத்திரி என்றுகூடப் பாராமல், குளியலறைக்குச் சென்று நேரம் போவது தெரியாமல் குளிர்ந்த நீரில் குளித்தான் குழந்தைசாமி.

இந்த நடுநிசி நீராடல் தொடரவே, அதுவும் ஆணியடிக்கப்பட்ட சன்னல் கதவுகளும் குழந்தைசாமியின் அம்மாவை வெகுவாக மிரளச் செய்தன.

"என் புள்ளைக்கு யாரோ பில்லிசூனியம் வைச்சுட்டாங்க" என்று அக்கம்பக்கத்தாரிடம் புலம்ப ஆரம்பித்தார்.

யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில், ஒரு மாந்திரீகனைக் கூட்டிவந்து குழந்தைசாமியின் கையில் மந்திரித்த கறுப்புக் கயிற்றைக் கட்டச் செய்தார்.

பாவம் குழந்தைசாமி, காம இச்சையைக் கட்டுப்படுத்துவதில் சற்றே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் அம்மாவின் தவறான புரிதல் அவனைக் கவலைக்குள்ளாக்கியது.

"அம்மா ரொம்பவே அப்பாவி. எத்தனைப் பொய் சொன்னாலும் நம்பிடும். சமாளிச்சுடலாம்" என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளவும் செய்தான்!

==========================================================================


திங்கள், 17 ஜனவரி, 2022

எங்கே அந்த 'மரணபயம்'?![சிறுகதை]

யது ஆக ஆக 'மரணபயம்' அதிகரித்துக்கொண்டிருப்பதை அடிக்கடி உணர்ந்தார் சதாசிவம். அது, அவரின் எழுபதாவது வயதில் உச்சத்தைத் தொட்டுவிட்டிருந்ததை அறிந்து மனம் கலங்கினார்.

ஓய்வு பெறுவதற்கு முன்பு, அன்றாட அலுவலகப் பணியும், குறையாத  குடும்பக் கவலைகளும் அதன் தாக்குதலை வெகுவாகக் குறைத்திருந்தன.

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகி, குடும்பிகளாகவும் ஆகி, அவரவர் சுமையை அவரவரே தாங்கி வாழ ஆரம்பித்தபோது இவரும் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அன்றிலிருந்து, எப்போதாவது வந்துபோய்க்கொண்டிருந்த 'மரணபயம்' அடிக்கடி அவரின் அனுமதி இல்லாமலே மூளையின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டு பயமுறுத்தத் தொடங்கியது.

சதாசிவம் அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தார்; மரணபயத்தைப் போக்குமாறு மனம் உருக இறைவனைப் பிரார்த்தித்தார்.

காலை மாலை என்றில்லாமல் இரவில் உறக்கம் வராமல் தவித்தபோதெல்லாம் தியானத்தில் மூழ்கினார். 

நண்பர்களைச் சந்தித்தார்; நூலகம் செல்வதை வழக்கமாக்கினார்.

பேரப் பிள்ளைகள் பள்ளிகளுக்கும், மகனும் மருமகளும் அலுவலகங்களுக்கும் சென்ற பிறகு நெடுநேரம் தொ.கா. பார்த்தார்.

என்ன செய்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சரிந்து கிடந்தபோதும், இரவில் உறங்க நினைத்துப் படுக்கையில் கண்மூடும்போதும், வழக்கத்தைவிடவும் ஆக்ரோசமாகச் சதாசிவத்தின் நினைவகத்தைத் தாக்கி உறங்க விடாமல் இடையூறு செய்தது மரணபயம்.

'அந்திமக் காலத்தில் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமே இல்லை; அதன் தாக்கத்தைக் குறைப்பதும்கூட அத்தனை எளிதல்ல. சாகும்வரை பயந்து பயந்தே வாழ்ந்து தொலைப்போம்' என்று முடிவெடுத்திருந்த அவர், வழக்கம்போல அன்று உறங்கச் சென்றார். 

கண்மூடி, தியானத்தில் ஆழ்ந்துவிட முயன்றபோது, அவருடைய மருமகள் அவளின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. பேச்சின் நடு நடுவே 'கிழம்' என்னும் வார்த்தை வதைபடுவதைக் கேட்டறிந்து, தன் அறைக் கதவின் சாவித் துவாரத்தில் காதைப் பதித்தார்.

"விடிகாலையில் எழுந்திரிச்சி, சமையலை முடிச்ச கையோடு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, அவருக்கும் மதிய உணவு கொடுத்து அனுப்பிட்டு, இந்தக் கிழத்துக்குச் சாப்பாடு பரிமாறித் தின்னு முடிக்கிறவரை காத்திருந்து, குளிச்சி உடையுடுத்துட்டுச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஆபீசுக்குக் கிளம்புறேன்.....

கிழத்துக்குப் பளிச்சின்னு விடிஞ்சதும் ஸ்ட்ராங்கா காப்பி போட்டுக் கொடுத்துடணும். இது அவுத்துப்போடுற அழுக்குத் துணிகளையும் துவைச்சிக் காயப்போட்டு மடிச்சி வைக்கணும். எல்லாம் உன் மருமகன் போட்ட உத்தரவு. இந்தக் கிழவன் சுடுகாடு  போனாத்தான் எனக்கும் கொஞ்சம் விடிவு பிறக்கும்....." 

மருமகள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

சதாசிவம் படுக்கையில் சாய்ந்தார்; தியானத்தைத் தொடரவில்லை. அதன் தேவையை அவர் அறவே மறந்திருந்தார்.

மருமகளின் பேச்சு விடியற்காலைவரை அவருடைய செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது; சற்றே உறங்கி எழுந்த பிறகும் செவிப்புலனைத் தாக்கி அதிரவைத்துக் கொண்டிருந்தது.

பேரப் பிள்ளைகள் பள்ளிகளுக்கும், மகனும் மருமகளும் அலுவலகங்களுக்கும் புறப்பட்டுப் போகும்வரை காத்திருந்தார் சதாசிவம். சம்பந்திக்காரியும் விடைபெற்றுக் கிளம்பிப்போனது அவருக்குத் திருப்தியளித்தது.

வீட்டின் கதவைத் தாளிட்டுவிட்டு, கயிறு தேடியெடுத்து, மின்விசிறியில் சுருக்கு வைத்துத் தொங்கினார்.

நீண்ட நாட்களாக அவரை மிரட்டி நிம்மதி இழந்து தவிக்கச் செய்த 'மரணபயம்' போன இடம் தெரியவில்லை!

==========================================================================


ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பெரியார் சொன்னதும் சிறியேன் சொல்வதும்!{குறும்[புப்]பதிவு}

பெரியாரை ஒருவர் சந்தித்தார்.

"கடவுள் இல்லை... இல்லை... இல்லவே இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க. உண்மையில் கடவுள் இருக்கிறார்னு தெரிஞ்சா என்ன சொல்வீங்க?" என்று அதிரடியாக ஒரு கேள்வியையும் கேட்டுவைத்தார்.

'கடவுள் இல்லேன்னு எவ்வளவோ எழுதியும் பேசியும் இருக்கேன். திருந்தாத ஜென்மங்கள் இன்னமும் இருக்கே'ன்னு பெரியார் மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும், 'கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்' என்று அவரிடம் சொன்னதாக ஏடுகளில் அன்று செய்தி வெளியானது.

இப்படியானதொரு கேள்வியைச் சிறியேன்['பசி'பரமசிவம்] ஆகிய என்னிடம் ஒருவர் கேட்டிருந்தால்.....

"நானொருவன்[கடவுள்] இருப்பது உண்மைதான் என்று கடவுளே மனிதர்களைச் சந்தித்துச் சொன்னாலொழிய, அவர் இருப்பதை யாராலும் நிரூபிக்க முடியாது. இப்போ 'கடவுள் இருக்கார்'னு சொல்லுறீங்க என்றால், நீங்க மனிதரல்ல; நிச்சயம் கடவுளாகத்தான் இருக்கணும்" என்று சொல்லி, நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்திருப்பேன்.

கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர்.....

'ஓ... ஒரு முழு மெண்டல்கிட்டே வசமா மாட்டிகிட்டமே'ன்னு பயந்து நடுங்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்திருப்பார் என்பது என் அனுமானம்! 

என் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறீர்கள்தானே?

ஹி... ஹி... ஹி!!!

===============================================================


சனி, 15 ஜனவரி, 2022

அணுக்களால் ஆன மனிதன் ஆறறிவு பெற்றது எப்படி?!?!

'மனித உடம்பு 30,000,000,000,000 அணுக்களால்[30 trillion] ஆனது' என்கிறது அறிவியல். ஒவ்வொரு வினாடியிலும் கோடிக்கணக்கான உயிரணுக்கள் பிறக்கின்றன; அதே எண்ணிக்கையில் மடியவும் செய்கின்றன.

மரபணு, எலும்பணு, ரத்த அணு, தசை அணு, நரம்பணு, கொழுப்பணு என்று ஏறத்தாழ 200 வகையான அணுக்கள் மனித உடம்பில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

  • ஒவ்வொரு வகை அணுக்களும் ஒன்றாக இணைந்து[குழு சேர்தல்], மேற்கண்டவற்றையும், பிற உறுப்புகளையும் உருவாக்கும் பணிகளைச் செய்கின்றன[..... Different tissues then combine and form specific organs].

நாம் எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களைச் சிந்திக்கிறோமாம்.  சிந்திக்க வைப்பது மூளையாகும்.

மூளை என்று பொதுவாகச் சொல்வதைக் காட்டிலும், மூளையிலுள்ள அணுக்கள் இணைந்து சிந்திக்க வைக்கின்றன என்பதே சரியாக இருக்கும்.

இங்கே ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகும். அது.....

குழு சேராத நிலையில், தனித்தனியாக இயங்கும் அணுக்களுக்குச் சிந்திக்கும் திறன் உள்ளதா?

"இல்லை" என்பதே சரியான பதிலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை[தவறு எனின் இந்தப் பதிவு முற்றிலுமாய்ப் புறக்கணிக்கத்தக்கது]. ஆனால், அவை குழுவாக இணையும்போது சிந்திக்கும் திறன் உருவாகிறது.

இது வியக்கத்தக்க நிகழ்வாகும். 

இது எப்படிச் சாத்தியமாகிறது?

இந்நாள்வரை அறிவியலாளரால் இதற்கு விடை காண இயலவில்லை.

'விடை கிடைக்கும்போது கிடைக்கட்டும்' என்று தொடர்ந்து அவர்கள்[அயல்நாட்டு விஞ்ஞானிகள்] ஆய்வு நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்றேனும் ஒரு நாள் கிடைக்கக்கூடும். அதுவரை நாம்.....

வழக்கம்போல,  சாமி சிலைகளுக்குத் தங்கக் கிரீடம் சூட்டிச் சரம் சரமாய் நகைகள் பூட்டித் தெருத்தெருவாய்ப் பவனி வருவதிலும், ஆறுகளுக்குக் கொண்டுசென்று குளிப்பாட்டுவதிலும், ஆண்டு தவறாமல் கல்யாணம் ஆன சாமிகளுக்கு மீண்டும் கல்யாணம் கட்டிக் குதூகளிப்பதிலும், பால் வடியும் வேப்ப மரங்களுக்குப் பாவாடை கட்டிக் குங்குமம் பூசிக் கும்பிடுவதிலும், புற்றுகளுக்குப் பால் வார்த்துப் பாம்புகளைக் கடவுளாக்கி வழிபடுவதிலும் இப்படியாக இன்னும் பல ஆன்மிகரீதியான கடமைகளை ஆற்றுவதில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்போம்.

நாமல்லவோ புத்திசாலிகள்!!!
============================================================================
குறிப்பு: 'பரிணாம வளர்ச்சி'யால் மனிதன் ஆறறிவு பெற்றான் என்பது என் மரமண்டைக்குப் புரியாதது, இப்பதிவு உருவானதற்கான முக்கியக் காரணம் ஆகும்!

வெள்ளி, 14 ஜனவரி, 2022

வாருங்கள், அந்த அறிவுஜீவி அழகியைத் தேடுவோம்!!!

டாக்டர் 'ராபர்ட் கிரகாம்' என்பவர் 1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவிலுள்ள 'கலிபோர்னியா'வில் 'உயிரணு வங்கி'யை உருவாக்கினார் என்பது உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பழைய செய்தி.

உயிரணுக்கள் கெட்டுப்போகாமலும் அழிந்துவிடாமலும் இருக்க அவர் திரவ ஹைட்ரஜனைப் பயன்படுத்தினாராம்.

அந்த உயிரணு வங்கியில் பல்துறை அறிஞர்களின் உயிரணுக்களைச் சேமிப்பதன்[தானம் அளிப்பவர் இறந்து 100 ஆண்டுகள் ஆனாலும் உயிரணு கெடாமலிருக்கும்] மூலம், அறிவுக்கூர்மை உள்ள குழந்தைகளை எதிர்காலத்தில் உருவாக்கிட முடியும் என்பது அவரின் நம்பிக்கை.

உயிரணு வங்கி உருவாக்கப்பட்ட செய்தியறிந்து, நோபல் பரிசு பெற்றவர்களும், உலகப் புகழ் பெற்ற அறிஞர்களும் தங்களின் உயிரணுக்களை அனுப்பியுதவினார்கள். 

அவை சேமித்து வைக்கப்பட்டன.

டாக்டர் ராபர்ட் கிரகாம், ஒரு சோதனை முயற்சியாக, அறிவுக்கூர்மை வாய்ந்த ஒரு பெண்ணை, நோபல் பரிசு பெற்ற ஒருவரின் உயிரணுக்கள் மூலம் கருத்தரிக்கச் செய்தார்.

அந்தப் பெண்ணுக்கு, 1983 ஏப்ரல் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அது, 4 கிலோகிராம் எடையுடனும், நல்ல உடல்நலத்துடன் இருந்ததாம்.

6 வயதான அந்தக் குட்டிப் பெண் பேரறிவும் பேரழகும் வாய்க்கப்பெற்றவளாக இருக்கிறாள் என்பது 1990 ஆம் ஆண்டுச் செய்தி.

இப்போது அவளுக்கு 37 வயது[நடுத்தர வயதில்தான் பெண்களின் அறிவாற்றலும் கவர்ச்சியும் உச்சத்தைத் தொடுகிறதாம்!].

அறிவும் அழகும் பன்மடங்கு வளர்ச்சி பெற்று ஆகச் சிறந்த அறிவுஜீவியாக அவள் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும் என்றெண்ணியதால், அவளை ஒரு முறையேனும் பார்த்து மகிழ்ந்திட வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது அடியேனுக்கு.

இணையத்தில் அவளைத் தேடினேன்; பல முறை தேடினேன். ஏமாற்றமே மிஞ்சியது.

நீங்களும் தேடுங்கள். அவளின் புகைப்படத்தைப் பார்க்கவோ, இருப்பிடத்தை அறியவோ இயலுமாயின் தவறாமல் ஒரு பதிவு எழுதிப் பகிருங்கள்; பதிவர்களின் பாராட்டைப் பெற்றிடுங்கள்!
==========================================================================
நன்றி: 
'மணிமேகலைப் பிரசுரம்['விஞ்ஞான விந்தைகள்'], தியாகராய நகர், சென்னை.


வியாழன், 13 ஜனவரி, 2022

'காந்தியின் ஆயுள்'... ஜோதிடக் கணிப்பும் காலனின் கணக்கும்!!

இதுதான் காந்தியடிகளின் ஜாதகம்.

அடிகள் உயிர்வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, ஜோதிடக்கலை வித்தகர் திருத்தணி வி.கே.கிருஷ்ணமாச்சாரி என்பவர், 'பாரததேவி' என்னும் ஜோதிட இதழில்[15.08.1947] எழுதியது:

'காந்தியடிகள் பிறந்தது சிம்ஹ[சிம்மம்] லக்கினம்; மக நட்சத்திரம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு[ஜனித்தல்-பிறத்தல்] தீர்க்காயுசு யோகம் உண்டு.

மேலும், ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும், அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குருபகவான் தசம கேந்திரத்தில் நின்று, லக்னாதிபதியான சூரியனையும் ஆயுஷ்காரகனான சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷம் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு[காந்தியே ஒருமுறை "நான் 120 ஆண்டுகள் வாழ்வேன்" என்று சொல்லியிருக்கிறார். அதை வைத்து அடித்துவிட்டிருக்கிறார் ஜோதிடர்].

முன்காலத்தில், தபஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ வலிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக[???] நமது புராணங்கள் சொல்லுகின்றன.

அவர்களின் வழியில், மகாத்மாவும் தன் ஆயுளை விருத்தி செய்துகொண்டுள்ளதால் அவர் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பார் என்பது எனது திடமான அபிப்ராயம்.'

மேற்கண்டது ஜோதிடரின் கணிப்பு. நடந்தது என்ன?

02.10.1869இல் பிறந்த காந்தியடிகள் 30.01.1948இல் மதவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படியொரு கோர மரணம் மகாத்மாவுக்கு நேரும் என்பதை இந்த ஜோதிடரால் கணிக்க முடியாமல்போனது ஏன்?[இவர் கணித்தது 120 ஆண்டுகள்; காந்தி வாழ்ந்தது எழுபத்தெட்டரை ஆண்டுகள் மட்டுமே].

"காலதேவனின் கணக்கு  வேறாக இருக்கையில், அற்ப ஜோதிடனின் கணிப்பு பலிக்குமா என்ன?" என்று கூறிச் சமாளித்திருப்பாரோ கிருஷ்ணமாச்சாரியார்?!

==========================================================================

ஆதார நூல்:

'காந்தியாருடன் நாத்திகப் பெரியார் 'கோரா' சந்திப்பு'; குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர். டிசம்பர் 1989.