சனி, 29 பிப்ரவரி, 2020

எழுத்தாளர் சுஜாதாவின் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பற்று!


மறைந்த எழுத்தாளர் சுஜாதா, எளிய தமிழில் சலிப்புத் தட்டாத நடையில் அறிவியல் செய்திகளைத் தந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மீது அளவிறந்த பற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் அவர் என்பதை அறியாதவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக இப்பதிவு. 



'உயிர்மை பதிப்பகம்’ வெளியிட்ட, ‘சுஜாதாவின் பதில்கள்’ என்னும் நூலிலிருந்து சில கேள்விகளும் அவற்றிற்கான சுஜாதாவின் பதில்களும்:

வெ.வாசுதேவன், சேலம்.
தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது.


ந.ச.மணிமாறன், திருவண்ணாமலை.
தேவாரப் பாடல்களைப் பாடி நம்முடைய துன்பத்தில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடலாம் என்று முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கூறியிருப்பது பற்றி?

திருமதி நம்பி ஆரூரன் கூறுவது நம்பிக்கையின் பாற்பட்டது. விடுபட முடிகிறதோ இல்லையோ, துன்பத்தையும் நோயையும் மறக்கச் செய்யும் ‘இனிமை’ பழந்தமிழ்ப் பாடல்களில் உண்டு. பெரியாழ்வாரின் ‘நெய்க்குடத்தை’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் பலர் வியாதிகளையும் துன்பங்களையும் தடுத்திருக்கின்றன.


எஸ்.அகிலா, தென்கடப்பந்தாங்கல்.
ஔவை, திருவள்ளுவர், கபிலர் என்போர் உடன் பிறந்தவர்களா?

அப்படியும் ஒரு கதை. உண்மையில் அவர்கள் தமிழுடன் பிறந்தவர்கள்.


கே.எல்.சுபாகனி, மதுரை.
உலக இலக்கியங்களில் தலை சிறந்தது எதுங்க?

எனக்குத் தெரிந்தவரை திருக்குறளுங்க.


ரெவீ, சென்னை.
கம்ப்யூட்டர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தமிழ்படுத்துவது தமிழரை ஒரு வட்டத்திற்குள் சுருக்கும் முயற்சியாகத் தெரியவில்லையா உங்களுக்கு? எனில், உலக அரங்கில் நம்மால் எவ்விதம் முன்னேற முடியும்?

இதே கேள்வியை ஜப்பானியரும் சைனாக்காரரும் கேட்பதில்லை. அவர்கள் கம்ப்யூட்டர் படிப்பதெல்லாம் அவரவர் தாய்மொழியில்தான். இன்று ‘சிலிக்கன் வேலி’யில் இந்தியர்களைவிடச் சைனாக்காரர்கள் அதிகம். உலக அரங்கில் முன்னேறுவதையும் தாய்மொழியில் கற்பதையும் போட்டுக் குழப்பாதீர்கள். நம் தாய்மொழியில் முறையாகக் கற்றுச் சாதனைகள் புரிந்தால், வெள்ளைக்காரர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தமிழ் கற்றுக்கொள்வார்கள்.

ஜெயாசரண், இராமநாதபுரம்.
கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி தமிழ் என்கிறார்களே, அது எப்படி?

எழுத்துகள் குறைவு. ஒத்தாட்சரம், சம்யுக்தாட்சரம் என்று கூட்டெழுத்துகள் இல்லாமல் நேராக எழுதப்படும் மொழி. வரிவடிவ எளிமை. வட்டங்களும் சதுரங்களும் கொண்டது. குழப்பங்கள் அதிகம் இல்லை. இதனால், கணிப்பொறியால் பிழை திருத்துவதும் அடையாளம் காண்பதும், அதனுள் தமிழை உள்ளிடுவதும் சுலபம்.

சி.எஸ். சரவணகுமார், வேம்படிதாளம்.
வங்காள, மலையாள இலக்கியங்கள் வளர்ந்தது போல் தமிழ் இலக்கியங்கள் வளராதது ஏன்?

படிக்காமல் சொல்கிறீர்கள்.

அய்யை சி.முருகேசன், கடவூர்.
ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களில் எந்த ஒரு குறளிலும் “தமிழ்” என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தாதது ஏன்?

தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தினாலும் தமிழ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத காரணம், திருக்குறள் தமிழ் பேசும் தமிழர்களுக்கான நீதிகளை மட்டும் சொல்வதல்ல என்பதுதான். உலகப் பொதுமறை அது. அனைத்து மொழியினருக்குமான பொதுச் சொத்து. மொழி கடந்த மனித நீதி.
========================================================================

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும்...எப்போது?



மனிதர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கண்டுபிடித்துச் சொல்லும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டால், ஒட்டுமொத்த மனிதகுலமும் திருந்தும். 

முயன்றால் முடியும்!
=======================================================================




வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.

கேள்விகள், தொடர்புடையவர்களுக்குப் புரிந்தால் போதும். பதில்கள் அவசியமில்லை!

கேள்வி ஒன்று:
பதிவுகள் எழுதித் தமிழுக்குச் சேவை செய்துவரும் பதிவர்களில் கணிசமானவர்களின் ‘வலைப்பக்கத் தலைப்பு’ தமிழில் இல்லை! இவர்கள் தமிழில் எழுதும் பதிவுகளைத் தமிழ் அறிந்தவர்கள்தானே வாசிக்கிறார்கள். அப்புறம் எதற்கு ஆங்கிலத்தில் தலைப்பு?

இரண்டு:
பல பதிவர்களின் பெயர்களும்[45% ?!!!] ஆங்கிலத்தில்தான் உள்ளன. அறிவுஜீவிகளான பதிவர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப்படைக்கிறதா? ‘இதனாலெல்லாம் தமிழ் அழிந்துவிடாது; அதன் பெருமை நலிந்துவிடாது’ என்று நினைத்துத் தமிழை அலட்சியப்படுத்துகிறார்களா? உண்மை நிலை என்ன?

மூன்று:
பதிவு எழுதி முடித்த பின்னர், ஓரிரு முறையேனும் அதைத் திரும்ப வாசித்துப் பிழை நீக்குதல் அவசியம்[பலமுறை முயன்றாலும் அனைத்துப் பிழைகளையும் நீக்குவது என்பது சாத்தியம் இல்லாமல் போகலாம்]. பதிவர்களில் சிலருக்கு அப்படியொரு பழக்கமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனாலெல்லாம் தமிழின் கட்டமைப்பு சீர்குலைந்துவிடாது என்று அவர்கள் எண்ணுகிறார்களா?

நான்கு:
சற்றே முயன்றால் தமிழாக்கம் செய்துவிடக்கூடிய ஆங்கிலச் சொற்களைக்கூட, தமிழ் எழுத்துகளில் எழுதுகிறார்கள்[நானும் விதிவிலக்கல்லேன். வாசகரைக் கவரவும், எளிதாகப் பொருள் புரியவும் எப்போதாவது இத்தவற்றைச் செய்வதுண்டு. எ-டு: ‘சென்னை வெள்ளமும் செக்ஸ் தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்’]; காரணம், இயலாமையா, சோம்பல் குணமா?

ஐந்து:
தேடுபொறிகளிலும் சமூக வலைத்ததளங்களிலும் தமிழும் ஒரு பயன்பாட்டு மொழியாக அறிந்தேற்புச் செய்யப்பட்டுள்ளதோடு, அவை பெருமளவு தமிழிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  தமிழைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்காவிடின், எதிர்காலத்தில் அது நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதைப் அனைத்துப் பதிவர்களும் அறிவார்கள். எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் தமிழுக்கு முன்னுரிமை தருகிறார்களா நம் பதிவர்கள்?


என் தளத்தில் தமிழ்..........

எல்லா Google சேவைகளுக்கும் ஒரே Google கணக்கு
============================================================================================================
டிசம்பர், 2015இல் வெளியிட்டது



தங்களின் வருகைக்கு நன்றி.

புதன், 26 பிப்ரவரி, 2020

46 சொற்களில் ஒரு ‘சுருக்’ சிரிப்புக் கதை!

நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நான் ‘விரதம்’ இருக்கும் நாள்.”
========================================================================
இது, தாளித்த பழைய சோறு!
========================================================================


செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

‘உயிருக்கு உருவம் உண்டு’...சத்குரு[?!] ஜக்கி வாசுதேவ்!

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/uyir-udalukku-serum-vazhi-kalpanath -இது ஜக்கி தன் தத்துவப் போதனைகளைப் பதிவு செய்யும் தளம்.
பல்வேறு தலைப்புகளில் அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறார்.

தளத்தின் ‘தேடல்’ பகுதியில், ‘உயிர்’ என்று தட்டச்சு செய்தால், அது குறித்த அவரின் எண்ணங்கள் பல தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருப்பதைக் காண இயலும்.

உடம்புக்குள் உயிர் புகும் வழிமுறை குறித்தும் ஒரு தலைப்பில் விவரித்திருக்கிறார் ஜக்கி. அதன் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

#கல்பா என்றால் படைப்பு. முழுக் கர்ப்பக் காலத்திற்குப் பின் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களுள் ஒரு பகுதி மட்டும் முழுதாக வளர்ந்திருக்காது. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது தலையின் மேல்பகுதி.

பிறப்பின்போது அப்பகுதி முழுவதுமாக வளர்ந்திருக்காது. ஏனென்றால், அந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் உங்கள் உடலுக்குள் நுழைகிறது. நீங்கள் உயிரை உருவாக்கவில்லை, உயிருக்கு ஓர் இருப்பிடத்தைத்தான் அளிக்கிறீர்கள். நீங்கள் உயிருக்கான பாத்திரத்தை, கோப்பையை உருவாக்குகிறீர்கள். அதற்குள் உயிர் தானாகத்தான் நுழையமுடியும். அந்த இடத்தின் வழியாகத்தான் உயிர் நுழைகிறது. அதனால்தான், அது முழுமையாக வளர்ந்திருக்கவில்லை#

‘ஒரு மனிதனுக்கு இறப்பு நிகழும்போது அவனுடைய உடம்பு மட்டுமே அழிகிறது. உயிர் அதிலிருந்து வெளியேறிவிடுகிறது’ என்னும் ஆன்மிகவாதிகளின் பரப்புரைக்கு எதிர்வினையாக, ‘உடம்பு அழியும்போது உயிர் அழிவின்றி வெளியேறுகிறது என்றால், அது உடம்புக்குள் எப்போது எப்படி நுழைந்தது?’ என்று கேட்டார்கள் பகுத்தறிவாளர்கள்.

அந்தக் கேள்விக்குத்தான் இப்படியானதொரு பதிலைத் தந்திருக்கிறார் ஜக்கி. [கருவைச் சுமந்திருக்கிற தாயின் உடம்புக்குள் நுழைந்த பின்னர்தான் கருவிலுள்ள குழந்தைக்குள் உயிர் நுழைந்திட முடியும். தாயின் உடம்பிலுள்ள பல துவாரங்களில் எந்தத் துவாரத்தின் வழியாக அது நுழைந்தது என்பது பற்றி விளக்கம் தர மறந்துவிட்டார் அல்லது தவிர்த்துவிட்டார் இவர்].

இவருடைய கருத்தின்படி, குழந்தையின் உடம்பிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக உயிர் நுழைகிறது. இதன் மூலம், உயிருக்கு உருவம் உண்டு என்பது அறியப்படுகிறது. 

உயிர் உருவமற்றது, அதாவது அருவமானது எனின், நுழைவு வழி ஏதும் இல்லாமலே அதனால் குழந்தையின் உடம்புக்குள் ஊடுருவி அதனுள் தங்கிவிட முடியும்[இவை எல்லாமே அனுமானங்கள்தான். அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட கருத்துருக்கள் அல்ல..

ஆக, ஜக்கி வாசுதேவின் கருத்துரையின்படி உயிருக்கு உருவம் உண்டு என்றாகிறது.

அது உண்மையாயின், உயிரின் உருவம் குறித்துத் தெளிவானதொரு விளக்கவுரை தருவாரா ஜக்கி வாசுதேவன்?

உயிர் குறித்து நான் எழுதிய[2016இல்] ஒரு பதிவு:
https://kadavulinkadavul.blogspot.com/2016/09/blog-post_8.html
=======================================================================
அறிவியல் ரீதியாகத் தான் சொல்லும் கருத்துகள் சரியானவைதானா என்பது பற்றிக் கிஞ்சித்தும் கலைப்படாமல் எழுதித் தள்ளுகிறார் இவர். இவர் சொல்வனவெல்லாம் சரியானவைதானா என்று இவரின் பக்த கோடிகளும் சிந்திப்பதில்லை. காரணம், அவர்கள் பக்தர்கள் அல்ல; பித்தர்கள்.

ஜக்கியின் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!! 

திங்கள், 24 பிப்ரவரி, 2020

முதலில் ‘இது’! அப்புறம் ‘அது’!!

இருதயம் சீராக இயங்கும்வரைதான் அணுக்களால் ஆன உடம்புடன் நம்மால் வாழ்ந்திட முடியும்.  இருதயம் செயலிழந்தால், அணுக்களால் ஆன உடம்பும் அழிகிறது. உண்டு உறங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து, இன்பதுன்பங்களை அனுபவித்து வாழ்ந்த நாம் அழிந்துபோகிறோம். 

இந்த உடம்பு இருக்கும்வரை ‘நான்’ என்னும் உணர்வு நமக்கு இருக்கிறது.

உடம்பு அழியும்போது அந்த ‘நான்’ என்னும் உணர்வும் அழிந்துபோகிறது. ஆக.....

உடம்பு இல்லையேல், ‘நான்’ இல்லை; நாமும் இல்லை; ஞானிகளும் இல்லை; அவதாரங்களும் இல்லை; மேதைகளும் இல்லை.

செத்த பிறகு, மிச்சம் மீதி என்று எதுவுமே மிஞ்சாமல் முற்றாக அழிந்துபோவதை விரும்பாத மனித மனம், உடம்பு அழிந்தாலும், அதனுள்ளே அழியாத ஒன்று இருப்பதாக நம்பியது. அதற்கு ‘உயிர்’ என்று பெயரிட்டது. [ஆன்மிகவாதிகள் அதை ‘ஆன்மா’ என்கிறார்கள். இங்கு இது குறித்து ஆராய்வது நம் நோக்கமல்ல].

நம் உடம்போடு தொடர்புபடுத்தப்படும் இந்த உயிர் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதே மனிதகுலத்தின் இப்போதைய தேவை; இன்றியமையாத் தேவையும் ஆகும்.

உயிர் என்ற ஒன்று இல்லையெனின், நமக்கு வாய்த்த அற்ப ஆயுளைக் கடவுளின் உதவி இல்லாமலே கழித்துவிட முடியும். செத்தொழிந்த பிறகு அவர் நமக்குத் தேவையற்றவர் ஆகிறார். எனவே, உயிர் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அனைத்தையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளைப் பற்றி ஆராயலாம். 

உயிர் பற்றிய ஆராய்ச்சியைப் புறக்கணித்து.....

கடவுள் குறித்து விவாதித்தும், சண்டையிட்டும், போர் செய்தும்  நமக்கு வாய்த்த மிக மிக மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பது அடிமுட்டாள்தனம் ஆகும்.
=======================================================================












ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

விகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது?!

’சாய்பாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயங்களை உங்கள் புகைப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்’ என்று பல வாரங்களுக்கு முன்பே தன் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆனந்த விகடன்.

வாசகர்கள் எழுதியனுப்ப, அவற்றை வாரந்தோறும் வெளியிட்டது; வெளியிடுகிறது.

‘வெறும் பச்சை மண் குடத்தில் நீர் எடுத்துச் செடிகளுக்கு நீர் வார்த்தார் பாபா’ என்று ஒரு வாசகர் கதை விட்டிருந்தார்[இது குறித்து நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன் https://kadavulinkadavul.blogspot.com/2019/11/blog-post_12.html ].

பின்னர் நான் வாசித்த [அதிசய] நிகழ்வுகள் எல்லாம் கற்பனைக் கதைகளாகவே இருந்தன.

சினிமாப் பித்துப் பிடித்து அலைந்த ஒரு மாணவர், 05 அரியர்ஸ் பேப்பர் எழுதித் தேர்ச்சி பெற வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் சாய்பாபாவைச் சரண் அடைந்தாராம்; இரவில் விழுந்து விழுந்து படித்தாராம். வினாத்தாளில் இவர் படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தனவாம். இது.....

பாபாவின் அருளால் இது நடந்தது[இப்படிக் கதைகள் எழுதி எழுதியே, மனிதராகப் பிறந்து, மனிதராக வாழ்ந்து மனிதராகவே செத்தொழிந்த பலரைக் கடவுளின் அவதாரம் ஆக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்] என்று புளகாங்கிதப்படுகிறார் கதிரேசன் என்னும் அந்த மாணவர். 

இப்படிப் பொய்யுரைக்காமல், விடிய விடிய விழுந்து விழுந்து படித்தேன். எனக்கான ஒரு நல்ல வாய்ப்பாக நான் படித்த[எதிர்பார்த்த] கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன என்று சொல்லியிருந்தால் அது ஏற்கத்தக்கது. இது விகடனுக்குப் புரியாமல் போனது ஏன்?! 

அடுக்குமாடி வீட்டுக்காக ஒருவர் ஒப்பந்தம் போட்டாராம். ஒப்பந்ததாரர் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லையாம். இவர் சாயிபாபாவைச் சரணடைந்தாராம். அவருடைய கருணையால் பழைய ஒப்பந்ததாரருக்குப் பதிலாக வேறொருவர் பொறுப்பேற்கவே இவரின் பிரச்சினை தீர்ந்ததாம்.

காலந்தோறும், நம் மக்கள் கணக்கு வழக்கில்லாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறார் பாபா? 

அறியாமையின் காரணமாக, தற்செயலாக நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை, பாபா நிகழ்த்திய அதிசயங்களாக நினைக்கும் எவரோ சிலர் சொல்வதை விகடன் நம்புகிறதே, அது எப்படி?

‘என் அத்தை மகளை ரத்தப் புற்று நோய் தாக்கியது. என் அத்தை யார் சொல்லியும் மருத்துவமனையில் சேர்க்காமல், மகளுடன் சீரடி சென்று சாய்பாபாவை வழிபட்டார். நோய் குணமானது.’

‘கடந்த மாதம் எனக்குச்

சனி, 22 பிப்ரவரி, 2020

மூடர்களும் ஊடகக்காரர்களும்!

எங்கேனும் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிந்தால், ‘இன்ன ஊரில் வேப்ப மரத்தில் பால் வடிகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி, மரத்துக்குப் பூஜை செய்து வழிபடுகிறார்கள்’ என்று செய்தி  சொல்லி/ வெளியிட்டுப் பத்திரிகையின் விற்பனையை அல்லது, தொ.கா.வின் பார்வையாளர்களை அதிகரிக்க முயல்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வேப்பங்காயைப் பறித்தால் பால் சிந்துவதைக் கண்கூடாகக் காணலாம். அந்தப் பால்தான் அதிக அளவில் ஊறும்போது மரத்தின் கிளையிலும் அடிமரத்திலும் வெளிப்பட்டு வழிகிறது.

இது தெரிந்திருந்தும், வேப்ப மரத்தில் பால் வடிவது ஓர் அதிசயம் என்பதாகச் செய்தி வெளிட்டு, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் தடுக்கிறார்கள் ஊடகவியலார். மூடர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருந்தால் இவர்களின் காட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும்!

“வேப்ப மரத்தில் பால் வடியாமல் தேனா வடியும் முட்டாள்களே?” என்று கேட்டு இவர்களைச் சாடுவதற்கு இங்கு யாரும் இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அரசும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

ஊடகங்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரத் தேவையாக இருப்பதுதான்!
========================================================================



வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

‘காமத்திலிருந்து தியானத்திற்கு!’

கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் சிலர் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]

எனக்கு இதைக் கொடு; அதைக் கொடு என்று தான் வழிபடும் சாமியிடம் புலன்களை வருத்திப் புலம்புவது தியானமா?

தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச்  சொன்னவர் எவருமில்லை.

முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.

மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான்  தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். சத்குரு ஜக்கி வாசுதேவ்களும் ரஜனீஷ்[“உடலுறவின்போது பெறும் இன்பத்தின் கால அளவைத் தியானத்தின் மூலம் நீட்டிக்க முடியும்”] என்னும் செக்ஸ் சாமியார்களும் தேவையில்லை. இவர்கள் சொல்லும் தியானத்திற்குப் பதிலாக.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.’

‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’

‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’

‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.

’தியானம்’ குறித்த மிகப் பல செய்திகளை உள்ளடக்கியது ‘காமத்திலிருந்து தியானத்திற்கு’ என்னும் இந்த நூல். இதை[34ஆவது நூல்] இன்று[20.02.2010] அமேசான் கிண்டிலில் இணைத்துள்ளேன்.





புதன், 19 பிப்ரவரி, 2020

இது அடாவடித்தனம்! அக்கிரமம்!! அநியாயம்!!!

//செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட, சுமார் ‘22 மடங்கு’ கூடுதலாக, சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது// -இது, 18.02.2020இல் வெளியான ‘இந்து தமிழ்’ நாளிதழ்ச் செய்தி.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சில நூறு பேர்கள் பேசுகிற மொழி சமஸ்கிருதம். எந்தவொரு மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும் இது இல்லை; அறிவியல் வளர்ச்சிக்குக் கிஞ்சித்தும் பங்களிப்புச் செய்யாத மொழி. இதை வளர்ப்பதாகச் சொல்லி இந்த நிதியாண்டில்[1919 - 20] ரூ231.15 கோடி ஒதுக்கியுள்ளார்கள். 

காலங்காலமாய் நாட்டை ஆண்ட மன்னர்களைத் தம் வசப்படுத்தி, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று அவர்களையெல்லாம் நம்ப வைத்து, அதை வளர்த்து, தாமும் வளர்ந்து, கோயில்களின் வழிபாட்டு மொழியாகவும் ஆக்கியவர்கள் மகா புத்திசாலிகள்.

அன்றெல்லாம் ஆளும் மன்னர்களைத் தம் அடிமைகளாக்கி வைத்திருந்த ‘அவர்கள்’ இன்றைக்கெல்லாம் ஆளுவோரைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பது சிந்திக்கத் தக்கது. 

இது போன்ற, ‘சமஸ்கிருத வளர்ச்சி’குறித்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? 

இந்த நாட்டை ஆளுகிற பிரதமர் மோடி அவர்களும், அமைச்சர் ..... அவர்களும் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தம் தாய்மொழியைக்கூடப் புறக்கணித்து சமஸ்கிருத வளர்ச்சியில் இவர்கள் மிகுந்த அக்கறை காட்டுவது புரிந்துகொள்ள இயலாத புதிராக உள்ளது.

‘மற்ற செம்மொழிகளைக் காட்டிலும் சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி வெளியாகிச் பல மணி நேரம் ஆன பிறகும், பிற மொழி பேசும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த நிதியாண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

2017 - 18..........ரூ198.31 கோடி.
2018 - 19..........ரூ214.38 கோடி

கோடி கோடியாக நிதி ஒதுக்கி வளர்க்கிறார்களே, இந்தத் தெய்வீக பாஷை வளர்ந்ததா?

இதன் வளர்ச்சி நம் நாட்டு வளர்ச்சிக்கு எவ்வகையிலெல்லாம் பயன்பட்டது?

எவரேனும் போதிய ஆதாரங்களுடன் புள்ளிவிவரம் தருவார்களா?
=======================================================================


செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

'அது’ விசயத்தில் பலவீனமானவர்களுக்கு.....

‘தோசம்’ இல்லாத ஜாதகம் இல்லை[பெரும்பாலும்] என்பார்கள் சோதிடர்கள். அவர்களின் கணிப்பின்படி நம்மைப் பாதிக்கும் தோசங்கள் மிகப் பலவாக உள்ளன.
ராகு-கேது தோசம், சர்ப்ப தோசம், செவ்வாய் தோசம், சனி தோசம், பித்ரு தோசம் என்று வெகுவாக நீளுகிறது இந்தத் தோசங்களின் பட்டியல்.

நமக்கான தோசத்தைக் கணித்துச் சொல்வதோடு அதற்கான பரிகாரத்தையும் சொல்லி நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள் சோதிடர்கள்.

தோசங்களால் விளையும் தீங்குகள் மிகப் பல.

எடுத்துக்காட்டாகச் சில:

சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்களாம்[இதுக்கு ஜோதிடம் பார்க்கணுமா என்ன!]. ரகசிய உறவுகளுக்கும் கள்ளக்காதல்களுக்கும் இவர்கள் சித்தமாகிவிடுவார்களாம். இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தியை மீட்க வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

இதற்கு என்ன பரிகாரம்? ராகு, கேதுக்களை வழிபட்டால் போதுமாம்[அப்பாடா, கவலை தீர்ந்தது].

சந்திரனும் சுக்கிரனும் சேர்க்கை[?!] கொள்வதான ஜாதகப்பலன் கொண்ட பெண்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள். ஏனென்றால், இவர்களை மிக எளிதாக வசியம் செய்துவிட முடியுமாம். வளைத்துப்போட முயலும் ஆடவர்களிடமிருந்து அவர்களால் தப்ப முடியுமா?

முடியும். நெற்றியில் குங்குமம்[நாள் தவறாமல் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்கள் புத்திசாலிகளோ!] வைத்துக்கொண்டால் போதும் என்கிறார்கள் சோதிடக்கலை வல்லுநர்கள். சிவப்பு நிறம் அதிக அலைநீளம்[?] கொண்டதாம்.

உங்களுக்கு ராகு-கேது தோசம் இருந்தா, ஒரு நடை திருப்பாம்புரம்[கும்பகோணம் பக்கம்] போகும்படி பரிந்துரைக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.

‘பிதுர் தோசம்’[பித்ரு தோசம்னும் சொல்வாங்க] பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வயதான பெற்றோர்களை உபசரிக்கத் தவறினால் வரும் தோசம் இது. இதற்கும் பரிகாரம் உண்டு. மகாளய பட்சத்தின்[அமாவாசை] 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்தத் தர்ப்பணத்தைப் பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தோசம் நீங்கும் என்கிறதாம் சாஸ்திரம்.

தோசம் மிகக் கடுமையாக இருந்தால் இராமேசுவரம் சென்று ‘திலா ஹோமம்’[?] செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை வேதம் கற்ற பண்டிதர்களால்தான் செய்ய முடியும் என்கிறார்கள்.

சனி தோசம் ரொம்பவே பொல்லாதது என்கிறார்கள் ஜோதிடக்கலை ஏந்தல்கள். பரிகாரம் தேட மிகவும் சிரமப்பட வேண்டும். கீழே ஒரு பட்டியல[எந்தவித ஆதாரமும் இல்லாதது] காத்திருக்கிறது.

சனி தோசம் நீங்க.....

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2.சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

3.கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்குத் தொடர்ந்து அர்ச்சனை செய்யவும்.

4.வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5.சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது[மற்ற நாட்களில் எவ்வளவும் வெட்டலாம்].

6.சனிக்கிழமைதோறும் நல்லெண்ணைக் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7.ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. கோமாதா பூஜை செய்யணும்

பட்டியல் நீளுகிறது.

பிரமஹத்தி தோசம் தெரியும்தானே?

பிராமணனைக் கொன்றால் வருவது. அதென்ன பிரமஹத்தி?

திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து  முழங்கால் மேல்  முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.

இந்தத் தோசம் நீங்க.....

பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை  செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றிக் குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் எல்லாம் பிரம்மஹெத்தியிடம் போய்ச் சேர்கின்றனவாம்.

நீங்கள் சோதிடத்தை நம்பாதவர் எனின், மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் உங்களை வெகுவாகச் சினம் கொள்ளச் செய்திருக்கும்.

31.08.2017 நாளிட்ட ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பாக, 12 ராசிகளுக்கான பலன்களும் தோசங்களும் பரிகாரங்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பலன்களையும் தோசங்களையும் ஒதுக்கி, பரிகாரங்களை மட்டும் கீழே தந்திருக்கிறேன். அவற்றை வாசித்தால் உங்களின் சினம் சற்றே தணியும் என்பது என் நம்பிக்கை.

12 ராசிகளுக்கான பரிகாரங்கள்:
மேசம்: வேர்க்கடலை தானம் [மக்களுக்குச் செய்தல்].
ரிசபம்: பச்சரிசி தானம்.
மிதுனம்: ரோஸ் நிறத் துணிகள்.
கடகம்: துவரம் பருப்பு.
சிம்மம்: கோதுமை.
கன்னி: கண் தானம்.
துலாம்: ஊனமுற்றோருக்கு உதவி.
விருச்சிகம்: திருநங்கைகளுக்கு உதவி.
தனுசு: புற்றுநோயாளிகளுக்கு உதவி.
மகரம்: ரத்ததானம்.
கும்பம்: ஆதரவற்ற முதியோருக்கு உதவி.
மீனம்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி.

இல்லாத தோசங்களைப் பட்டியலிட்டு, தொலைதூரக் கோயில்களுக்குச் சென்று, கற்பனையான சனி முதலான சாமிகளுக்கு நெய் விளக்கு ஏற்று, நல்லெண்ணெய் விளக்கேற்று, தர்ப்பணம் பண்ணு, ஹோமம் நடத்து, வடைமாலை சாத்து என்றிப்படிப் பொழுதையும் பணத்தையும் வீணடிக்கத் தூண்டும் சோதிடர்களுக்கிடையே.....

கண் தானம் செய், உணவுப் பொருள்களைத் தானம் செய், ஊனமுற்றோருக்கு உதவு, ரத்ததானம் செய் என்றெல்லாம் மக்களுக்கு நல்லன செய்யத் தூண்டுகிற ஒரு சோதிடரைக் கொஞ்சமே கொஞ்சமேனும் பாராட்டலாம்தானே?
======================================================================
சோதிடக் கருத்துகளுக்கான ஆதாரங்கள் உள்ளன; தரப்படவில்லை. இப்பதிவு 06.09.2016இல் எழுதியது.