எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

பாம்பு கடித்தால்..........

1.இறுக்கிக் கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.


3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையக் கூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.


4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்கவும் கூடாது. ஏனெனில், நாம் வேகமாக நடக்கும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், நம் ரத்தத்தில் கலந்துள்ள நஞ்சு விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்தும்.


4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவர் தைரியத்தைக் கைவிடாமல் இருப்பது முக்கியம். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம் என்பது உறுதி.


5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தைவிடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரைப் படுக்கவைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.


6.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும், அவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால், தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காண முடியும். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.


பாம்புக்கடி கிட்னியையும், கண்களையும் உடனடியாகப் பாதிக்கும்; உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.


எனவே, பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கியப் பாகங்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகைப் பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.


பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷம் இல்லாதவை. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள்தான் மிகவும் ஆபத்தானவை.


அவை:


1.நல்ல பாம்பு

2.கட்டு வீரியன்

3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டைப் பாம்பு

5.கரு நாகம்

6. ராஜ நாகம்


http://swamikal.blogspot.com/




காணிக்கைக்குத் தடையும் கண்டிக்கத்தக்க இ.முன்னணிக் கண்டனமும்!!!

கோயில்களில், பக்தர்கள் அர்ச்சனைத் தட்டில் பணம் காணிக்கை போடுவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது. அதைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது செய்தி.

கொஞ்சமேனும் சிந்தித்திருந்தால், கண்டனம் தெரிவிக்காமல் ஸ்டாலினை வாயாரவும் மனமாரவும் அவர்கள் பாராட்டியிருப்பார்கள்.

குறைந்த சம்பளம் வாங்கும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனைத் தட்டு வருமானமும் பறிபோகும் என்பதால் இனி அவர்கள் எப்பாடுபட்டேனும் வேறு வேலை தேடிக்கொள்வார்கள். இ.முன்னணி சிபாரிசு செய்தால் நடுவணரசு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப[எல்லோரும் படித்தவர்கள்]ப் பணி நியமனம் செய்யும் என்று நம்பலாம்.

அர்ச்சகர்களின் பரிதாபப் பொருளாதார நிலை கருதி புதியவர்களும் ‘வேதமந்திரம்’ ஓத முன்வரமாட்டார்கள்.

இந்நிலையில், சாமி கும்பிடப்போகிறவர்கள் அவர்களாகவே, சந்நிதிக்குள் முட்டி மோதி நுழைந்து தப்பும் தவறுமாய்த் தமிழில் பக்திப் பாடல்கள் பாடி அர்ச்சனை செய்யும்போது, தள்ளுமுள்ளும் தரக்குறைவான வாக்குவாதங்களும் ஏற்பட்டு, வழிபாட்டுத்தலம் இடிபாட்டுத்தலமாக மாறிவிடும்.

இதனால், ஸ்டாலின் பொதுமக்களின் சாபத்திற்கு உள்ளாவார்.

இதோடுகூட, தேவபாஷையான சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவது தடைப்படுவதால் கடவுளின் கோபத்திற்கும் அவர் ஆளாவார்.

மக்களின் சாபமும் கடவுளின் கோபமும் ஸ்டாலினின் நிர்வாகத் திறனை வெகுவாகப் பாதிக்கும் என்பதால், அடுக்கடுக்கான பல தவறுகளை அவர் செய்வார். இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரதமர் மோடியும் அமித்ஷும் செயலில் இறங்குவார்கள்.

ஆட்சிக் கலைப்பு அவர்களுக்கு[‘பாஜக’]க்குக் கைவந்த கலை[ஆளும்கட்சி உறுப்பினர்களைத் தம் கட்சிக்கு இழுப்பது] என்பதால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி,  மிக எளிதாகத் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். அப்புறம்.....

அப்புறம் என்ன, இங்கே இந்தித் திணிப்பு, இந்துத்துவத் திணிப்பு போன்ற திணிப்புகளெல்லாம், எந்தவித் தடையும் இல்லாமல் “திணி திணி திணி” என்று துரிதகதியில் நிகழ்த்தப்படும்.

ஆகவே, இந்து முன்னணித் தோழர்களே, ‘தட்டுக் காணிக்கை’ பற்றி இனி மறந்தும் வாய்திறந்து பேசாதீர்!

=========================================================================