திங்கள், 28 பிப்ரவரி, 2022

நீ நடிகை! நான் உன் ரசிகன்... என்றென்றும்!!

இந்தக் கவிதை இரவல் சரக்குதான். 23.06 94 இல் வெளியான 'மாலைமதி'யில் இடம்பெற்றது. கொஞ்சம் சுருக்கி, கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன், தலைப்பு உட்பட.

கவிதை படைத்த கவிஞர் மணிசேகரன் அவர்களுக்கு என் நன்றி.


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

ஜக்கியின் மந்திர சக்தி!!!

'கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா[கூத்து] வரும் மார்ச் 1ஆம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளைப் பெறும் விதமாக, சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன'   -இப்படியொரு அறிவிப்பு, தொடர்ந்து ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படுகிறதுhttps://www.maalaimalar.com/amp/news/topnews/2022/02/24215902/3515330/Mahashivratri-Celebrations-at-Isha-on-March-1.vpf; ஜக்கி வாசுதேவ் இது குறித்த 'காணொலி'யும் வெளியிட்டுள்ளார்.

'மிஸ்டு கால்' கொடுத்தால், ருத்ராட்சத்துடன் சேர்த்துத் தியானலிங்கத்தில் வைத்துச் சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுமாம்.

'ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் சமநிலை பெற முடியும். ஆரா தூய்மை பெறும்[?]. எதிர்மறைச் சக்திகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்' என்கிறார் ஜக்கி.

'மனதளவில் சமநிலை' என்கிறார். அதென்ன சமநிலை? எத்தனை பேருக்குப் புரியும்?

மனம் தூய்மை பெறுமாம். எதிர்மறைச் சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாம். 

எதிர்மறைச் சக்தி என்றால் என்ன?

கெட்ட எண்ணங்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றலா? இதையும் எளிதாகப் புரியும் வகையில் சொல்லியிருக்கலாமே?

உருத்திராட்சம்  அணிவது அப்புறம். இப்போதைய நம் கேள்வி.....

பல ஆண்டுகளாக, ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்களைக் கூட்டி வைத்துத் 'தியானம்' செய்யக் கற்றுக்கொடுத்தாரே ஜக்கி, அந்தத் தியானத்தால், மனம் சமநிலை பெறுவது, தூய்மை பெறுவது, தீய சக்தியை அண்டவிடாமல் தடுப்பது ஆகிய பயன்களையெல்லாம் பெற முடியவில்லையா?

"முடிந்தது" என்றால், புதிதாக இந்த உருத்திராட்ச வினியோகம் எதற்கு?

இந்த உருத்ராட்சம், விபூதி, அபய சூத்ரா[ஜக்கியின் கண்டுபிடிப்பு?] ஆகியனவெல்லாம் ஜக்கியால் சக்தி ஊட்டப்பட்டனவாம்?

இந்தச் சக்தியை இவர் எங்கிருந்து பெற்றார்?

உடல் நோய்களாலும் மனநோய்களாலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக அணுகி தன்னுடைய இந்தச் சக்தியைப் பயன்படுத்தி இதுவரை எத்தனை பேரைக் குணப்படுத்தியிருக்கிறார்?

குணப்படுத்தியிருந்தால், இந்த உருத்திராட்சம், விபூதி, அபய சூத்ரா எல்லாம் எதற்கு?

உருத்திராட்சம் முதலானவற்றில் மந்திர சக்தியை ஏற்றத் தெரிந்த ஜக்கி, அதே மந்திர சக்தியைக் காற்றில் கலக்கச் செய்தால் உலக மக்கள் அத்தனை பேரும் பயன் பெறுவார்களே.

செய்வாரா?

காசு வாங்கிக்கொண்டு, மக்களின் குறைகளைப் போக்குவதாகச் சொல்லித் 'தாயத்து' விற்கும் மந்திர தந்திரவாதிகளை நாம் அறிவோம். பேருந்து நிலையங்களில் 'அதிர்ஷ்ட நரிக்கொம்பு' விற்கிற நரிக்குறவர்களை நாம் அறிவோம். இவர்கள் மூடநம்பிக்கையை விற்பவர்கள்.

காசு வாங்காமல் இதே மூடநம்பிக்கையை, இலவசமாக வேறு வேறு பெயர்களில் வழங்க இருக்கிறார் ஜக்கி.

விழிப்புடன் தற்காத்துக்கொள்வதும், இவரின் தந்திரத்தில் சிக்கிச் சீரழிவதும் அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது!

==========================================================================


சனி, 26 பிப்ரவரி, 2022

கடவுள் 'அவர்களுக்கு' மட்டுமே சொந்தமானவரா?!?!

#பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

இந்நிலையில், "கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின் உயிரைப் பறித்துவிடும். ஆகையால், வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்லுங்கள்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்# என்பது அண்மைச் செய்தி. [https://www.hindutamil.in/news/world/712598-avoid-shooting-in-the-air-and-thank-god-instead-mujahid-said-in-a-message-on-twitter.html

தலிபான்களும் பஞ்ஷிர்ப் போராளிகளும் போரிட்டுக்கொள்வதற்கான காரணம் எதுவாகவோ இருந்திடட்டும். மேற்கண்ட செய்திக்கிணங்க, 'பஞ்ஷிர்' மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான போரில் தலிபான்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இருதரப்பினருக்கான மோதலில் ஒருதரப்பார் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாத நிகழ்வு.

இங்கே, தலிபான் வீரர்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். தலிபான் செய்தியாளர், "வானத்தை நோக்கிச் சுடாதீர்கள். தோட்டாக்கள் பாய்ந்து பொதுமக்கள் உயிரிழப்பார்கள். கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு எதற்கு நன்றி?

கொலை ஆயுதங்களில் ஒன்றான துப்பாக்கியைக் கண்டுபிடிப்பதற்கான குரூரப் புத்தியை மனிதர்களுக்குக் கற்றுத் தந்ததற்காகவா?

தலிபான் வீரர்கள் 17 பேரைச் சுட்டார்களே, அப்போது அவர்கள் வைத்த 'குறி' சற்றேனும் பிசகாமல் பார்த்துக்கொண்டாரே அதற்காகவா?[வானத்தை நோக்கிச் சுட்டால் உயிரிழப்பு நேருமா?].

தலிபான் தலைவர்களே,

"அன்றாடம் கடவுளைத் தொழுகிறீர்கள்; எல்லாம் அவன் செயலே என்று எண்ணுகிறீர்கள். இவையெல்லாம் உங்களின் நம்பிக்கை சார்ந்தவை. எவரும் குறை சொல்ல வாய்ப்பில்லை. ஆனால்.....

நீங்கள் நடத்திய... நடத்தும் போர்களில், சக மனிதர்கள்[உங்களுக்கு எதிரிகள் ஆயினும் அவர்களும் கடவுளால்[அப்படி ஒருவர் இருந்தால்] படைக்கப்பட்டவர்களே.

தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களைக் கொல்ல, தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களையே ஏவுவாரா கடவுள்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்தால்கூட இந்த உண்மை புரிந்திருக்கும். 

சிந்திக்கத் தவறியதால்தான்.....

"வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று[மட்டும்] சொல்லாமல், பெற்ற வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்" என்று உங்களின் வீரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

கடவுள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவரா தலிபான் தலைவர்களே?! 
==========================================================================

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

'உயிர்களின் தோற்றம்'... மதங்கள் சொல்லும் மாயாஜாலக் கதைகள்!!!

உயிர்களின் தோற்றம் குறித்த கொள்கைகள் பலவாக உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

'நாம் வாழும் இந்தப் பூமியில் உயிர்கள் தோன்றவில்லை; வேறொரு கோளிலிருந்து இங்கு வந்து பல்கிப் பெருகின' என்பது ஒரு கொள்கை. இதை 'அண்டமூலக் கொள்கை[Cosmozoie] என்கிறார்கள். 

'உயிர்கள் எப்படித் தோன்றின?' என்பதே கேள்வி. வேறொரு கோளிலிருந்து வந்தன என்பதை ஏற்றுக்கொண்டாலும், அங்கே எப்படி அவை தோன்றின என்னும் கேள்விக்கு இது ஏற்புடைய பதில் அல்ல என்பது அறியத்தக்கது.

உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்கள் தோன்றின என்பதும் ஒரு கொள்கை. இதற்குத் 'தான்தோன்றிக் கொள்கை[Spantaneous Generation] என்று பெயர். அழுகும் அல்லது, கெட்டுப்போகும் பொருள்களிலிருந்து ஈக்களும், புழுப்பூச்சிகளும் தோன்றுவதை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறார்கள் இக்கொள்கையாளர்கள். இது அறிவியல் ஆய்வாளர்களால் ஏற்கப்படவில்லை

உயிர்களிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன என்று பிரன்சிஸ்ரெடி[Francies, லூயிபாஸ்டியூர்[Louis Pasteur] முதலானோர் சொல்லியிருக்கிறார்களாம். போதிய தெளிவின்மையால் இக்கொள்கையையும் அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.

சார்லஸ் டார்வின்[Charles Darwin] அறிவித்த 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை அறிவியலாளரால் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கு மாறான கொள்கை எதுவும் இன்றளவும் அறிவிக்கப்படவில்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

அறிவியலுலகம் டார்வின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பினும், மக்களில் பெரும்பான்மையானவர்கள், 'உயிர்களைக் கடவுள் படைத்தார்' என்று மதங்கள் சொன்னதைத்தான் நம்புகிறார்கள்[ஏற்காத மதங்களும் உள்ளன].

கடவுள் உயிர்களைப் படைத்த விதம் குறித்து, உலகின் முன்னணி மதங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் வெகு சுவையானவை. வாசியுங்கள்.

கிறிஸ்தவ மதம்:

முதல் இரண்டு நாட்களில் பகல், இரவு, வானம், பூமி ஆகியவற்றையும்[பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாட்களைக் கணக்கிட்டது எப்படி?!], மூன்றாம் நாளில் புல், பூண்டு, மரஞ்செடிகொடி ஆகியவற்றையும், நான்காம் நாளில் விலங்குகளையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறப்பன ஆகியவற்றையும் படைத்தார் கடவுள் என்கிறது கிறித்தவ மதம்.

ஏழாம் நாளில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

இஸ்லாம் மதம்:

முதல் இரண்டு  நாட்கள்... நீர், காற்று, பூமி.

3ஆம் நாள்... கடல்வாழ் உயிரினம், ஊர்வன முதலானவை.

4ஆம் நாள்... ஜான் என்னும் தேவதை[?]

5, 6ஆம் நாட்களில்... முதல் மனிதன் 'ஆதாம்'; முதல் பெண் 'ஏவாள்'.

இந்து மதம்:

பரமாத்மாவால் படைக்கப்பட்ட 'பிரஹிமா[பிரம்மா]' ஒரு பிரஹ்ம ஆண்டு[16 லட்சம் கோடி ஆண்டுகள்] வரை வாழ்ந்து மானிடர், விலங்கு, பறவை முதலான உயிரினங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படைத்தார்.

படைப்புத் தொழிலை முடித்து, பிரம்மா எவ்வளவு காலம் ஓய்வு எடுத்தார் என்பது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை.

"உணவுக்காகவும் உடலுறவுக்காகவும் அலையோ அலையென்று அலைந்து திரியும் உயிர்களுக்குத்தான் ஓய்வு தேவையென்றால், அளவிடற்கரிய சக்தி படைத்த கடவுளுக்கும் இது தேவையா?" என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.

"தேவைதாங்க. கடவுள் மனிதனுக்கு ஆறாம் அறிவைக் கொடுத்தாரோ இல்லையோ, கணக்குவழக்கில்லாமல் கோயில்களைக் கட்டி வைத்துக்கொண்டு,  வழிபாடு என்னும் பெயரில் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து இவன் படுத்துகிற பாடு கொஞ்சமா என்ன?

ஆகவே, ஓய்வு கடவுளுக்கும் தேவைதான்!

==========================================================================

உதவி: 'கடவுள் படைப்பா உயிர்கள்?', பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

'உக்ரைன் போர்'... ஒரு பகிர்வு!

இன்று பிற்பகலில்[24 Feb, 2022, 3:19 pm] 'இந்து' நாளிதழின் இணைப்பான 'காமதேனு'வில் வெளியான 'உக்ரைன்'அதிபர் 'வொலதிமீர் ஸெலன்ஸ்கி' ரஷ்ய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆற்றிய உரையை எந்தவித மாற்றமும் இன்றிப் பதிவு செய்கிறேன்.

அந்த உரை, ரஷ்ய நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஆனது என்பதால் இந்தப் பகிர்வு.

இந்த உரைச் செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பினும் மீண்டும் ஒருமுறை வாசிப்பதில் தவறேதுமில்லை.

#உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரை தற்போது மிகுந்த கவனம் ஈர்த்திருக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக மட்டுமல்லாமல் ரஷ்ய மக்களுக்குச் சென்றுசேரும் வகையில் இந்த உரையை அவர் நிகழ்த்தியிருக்கிறார். மனித வாழ்வில் போர்கள் ஏற்படுத்தும் பேரழிவுகளை உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது அவரது உரை.

அவரது வார்த்தைகள் இதோ:

“இன்று ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபரை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், மவுனம்தான் பதிலாகக் கிடைத்தது. டோன்பாஸும் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான், நான் ரஷ்ய மக்களுடன் உரையாற்ற விரும்புகிறேன். நான் ஒரு அதிபராக உங்களிடம் (ரஷ்யர்களிடம்) உரையாற்றவில்லை. ஓர் உக்ரைன் குடிமகனாகத்தான் உங்களிடம் பேசுகிறேன்.

2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பொது எல்லை நம் இரு தேசங்களையும் பிரிக்கிறது. அந்த எல்லை அருகில், ஏறத்தாழ 2 லட்சம் போர் வீரர்கள், ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்களுடன் உங்கள் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. அவை இன்னொரு நாட்டின் எல்லைக்குள் முன்னோக்கி நகர உங்கள் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். இந்த நகர்வு, ஐரோப்பா கண்டத்தில் மிகப் பெரிய போரின் தொடக்கமாக அமையக்கூடியது ஆகும்.

ஒரு பனிப்போரோ அல்லது அனல் போரோ அல்லது இரண்டும் கலந்த போரோ எதுவாகினும் சரி, நமக்குப் போர் என்ற ஒன்றே தேவையில்லை என நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், எதிரிப் படையால் நாங்கள் தாக்கப்பட்டால், அவர்கள் எங்கள் நாட்டை எங்களிடமிருந்து கைப்பற்ற முயன்றால், எங்கள் சுதந்திரத்தை, எங்கள் வாழ்வை, எங்கள் குழந்தைகளின் உயிர்களை எடுக்க முயன்றால், நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்வோம். அது தாக்குதல் அல்ல, எங்களைத் தற்காத்துக்கொள்வது. நீங்கள் எங்களைத் தாக்கும்போது நீங்கள் எங்கள் முகங்களைத்தான் பார்ப்பீர்கள். எங்கள் புறமுதுகுகளை அல்ல, எங்கள் முகங்களை!

போர் என்பது ஒரு பேரழிவு. பெரும் விலையைக் கோரும் பேரழிவு. அர்த்தம் பொதிந்த வார்த்தை இது. மக்கள், பணத்தை இழப்பார்கள். கண்ணியத்தை, வாழ்க்கைத் தரத்தை, சுதந்திரத்தை இழப்பார்கள். முக்கியமாக, தங்கள் அன்புக்குரியோரை இழப்பார்கள். ஏன், தங்களையே இழப்பார்கள்!

ரஷ்யாவுக்கு உக்ரைன் ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது என அவர்கள் உங்களிடம் கூறியிருக்கிறார்கள். கடந்த காலத்திலும் அப்படி (நாங்கள்) இருந்ததில்லை. நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும்கூட அப்படி இருக்கப்போவதில்லை. நேட்டோவிடம் நீங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் கோருகிறீர்கள். நாங்களும் பாதுகாப்பு உத்தரவாதத்தைத்தான் கோருகிறோம். உங்களிடமிருந்து, ரஷ்யாவிடமிருந்து உக்ரைனுக்குப் பாதுகாப்பு கோருகிறோம். புடாபெஸ்ட் ஒப்பந்தம் வழங்கிய பிற உத்தரவாதங்களையும் கோருகிறோம்.

ஆனால், உக்ரைனில் அமைதியும், எங்கள் மக்களின் பாதுகாப்பும்தான் எங்கள் முக்கிய இலக்கு. அதற்காக நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும், எந்த வடிவிலும் எந்தத் தளத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் - உங்களுடன்கூட. போர் என்பது எல்லோரிடமிருந்தும் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பறித்துவிடும். யாருக்கும் எந்தவித பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்காது. அதில் மிக மோசமாகத் துயருறுவது யார் தெரியுமா? மக்கள்தான். அந்தச் சூழலை முற்றிலுமாக விரும்பாதவர்கள் யார்? மக்கள்தான். இதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்? மக்களால்தான். அப்படியானவர்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்களா? எனக்கு உறுதியாகத் தெரியும்.

ரஷ்ய தொலைக்காட்சியில் எனது உரையை அவர்கள் (ரஷ்ய அரசு) ஒளிபரப்ப மாட்டார்கள் என எனக்குத் தெரியும். ஆனால், ரஷ்ய மக்கள் இதைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காலம் கடப்பதற்குள் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த இந்த உண்மை அவர்களுக்குத் தெரிய வேண்டும். ஒருவேளை ரஷ்யத் தலைவர்கள் அமைதியை நிலைநாட்ட எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாவிட்டாலும், அவர்கள் உங்களுடன் பேச வருவார்கள். ரஷ்யர்கள் போரை விரும்புகிறார்களா? பதில் தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். ஆனால், அந்தப் பதில் ரஷ்யக் கூட்டமைப்பின் குடிமக்களான உங்களைப் பொறுத்ததுதான்.”#

==========================================================================

நன்றி:

https://kamadenu.hindutamil.in/international/war-is-a-disaster-says-ukraine-president


புதன், 23 பிப்ரவரி, 2022

காற்றுக்குக் கட்டணம் வசூலித்த 'போப்' ஆண்டவர்!!!

'Windmill' எனப்படும் ராட்சதக்  'காற்றாடி' 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாரசீக நாட்டில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால், அப்போது அது பயன்படுத்தப்பட்டது மின்சார உற்பத்திக்காக அல்ல.

காற்றின் சக்தியைப் பயன்படுத்தி மரக் காற்றாடிகளை இயக்கி, அதன் மூலம் கல்லால் ஆன செக்குகளைச்[கல் இயந்திரம்] சுழல வைத்து, கோதுமையை அரைத்து மாவாக்கும் தொழில்நுட்பத்தைப் பாரசீகர்கள் கண்டறிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பாக் கண்டத்திலும் பரவியது.

வெள்ளைக்காரர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்தார்கள்.

இது விசயம் மதக்குருக்களின் கவனத்துக்குச் சென்றது.

'காற்றானது கடவுளின் சொத்து. இதை வைத்து எவரும் தன்னிச்சையாகத் தொழில் செய்தல் கூடாது. தேவாலயங்களுக்கு விண்ணப்பித்து அனுமதி பெறுதல் வேண்டும். நிர்ணயிக்கப்படும் தொகையைக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெற்றிடல் வேண்டும்' என்று அப்போதிருந்த 'மூன்றாம் செலஸ்டின் போப்பாண்டவர் பிரகடனம் செய்தாராம்.

'உரிமம் பெறுவதோடு தேவாலயத்திற்குரிய தானியத்தை முதலில் அரைத்துக் கொடுத்துவிட்டுத்தான் அன்றாடத் தொழிலைத் தொடங்குதல் வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்தாராம்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், இந்தக் காற்றாடிகள்[காற்றாலை] மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.

                                     *   *   *   *   *

அன்று, "காற்று கடவுளின் சொத்து" என்றார் போப்பாண்டவர். "கடவுள் யாருடைய சொத்து?" என்று யாரேனும் கேட்டிருந்தால் காற்றுக்கான கட்டணத்தை அவர் ரத்து செய்திருக்கக்கூடும்!!

ஹி... ஹி...ஹி!!!

==========================================================================

நன்றி:

'ஆனந்த விகடன்'[06.06.99] இதழ்.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

"ரெண்டையும் அறுத்துடு" -கூகுளின் ஆங்கில மொழியாக்கக் கதை!

'Google Translate'  மூலம் ஆங்கில வாசகங்களைத் தமிழாக்கம் செய்கையில், சில[பலவாகவும் இருப்பதுண்டு] இடங்களில் மூலத்துக்கும் மொழியாக்கத்துக்கும் இடையே முரண்பாடுகளையும் தெளிவின்மையையும் காண இயலுகிறது.

ஆர்வம் காரணமாக, என்னுடைய ஒரு சிறுகதையை[5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது] 'Google Translate'இல் பதிவு செய்தேன்[பகுதி பகுதியாக]. மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலத்திலான கதையையும் கீழே தந்துள்ளேன். 

வாய்ப்பு அமைந்தால், கூகுள் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பவர்களோ, அதில் பணி புரிபவர்களோ 'மொழியாக்கக் கருவியில்[மென்பொருள்] உரிய மாற்றங்களைச் செய்தால், அது தமிழர்களாகிய நமக்குப் பெரும் பயன் தருவதாக அமையும் என்பது என் எண்ணம்.
ஜோலார்ப்பேட்டை – ஈரோடு பயணியர் ரயில் வண்டி பொம்மிடி தாண்டி, தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது.

கண்களுக்கு விருந்தாகிக் கண நேரத்தில் காணாமல் போகும் மலை சார்ந்த காடுகளையும் வயல்வெளிகளையும், இருக்கையில் சாய்ந்தவாறு ‘பராக்கு’ப் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, வலது கால் பாதம் ‘நறுக்’ என்று மிதிக்கப்பட்டதால், காலைப் பின்னுக்கு இழுத்ததோடு, திடுக்கிட்டுப் பார்வையை உள்ளுக்கிழுத்தாள்.

முந்தானை சற்றே விலகியிருந்த தன் ஒரு பக்கத்து மார்பகத்தை எதிரே அமர்ந்திருந்த மாதவன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“ஏய்யா என் காலை மிதிச்சே?” என்று கேட்டாள்.

“காத்து வாங்குது. இழுத்து மூடுடி” என்றான் அவன்.

மாராப்பை இழுத்து மூடுவதற்கு மாறாக, அவன் மீது அலட்சியப் பார்வையை வீசிவிட்டு, மீண்டும் இயற்கையழகை ரசிக்கத் தொடங்கினாள் தேவகி.

‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.

வீடு போய்ச் சேர்ந்ததும், “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். டீ கொண்டா” என்று உத்தரவிட்டான் அவன்.

தேனீருடன் வந்த தேவகியின் இன்னொரு கையில் நீண்டதொரு அரிவாளும் இருந்தது.

சொன்னாள்:

“நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்குத் தெரியும். முதலில் நான் சொல்லுறதைக் கேளு. சேலை கட்டுற ஒரு பொம்பள எல்லா நேரமும் இழுத்து இழுத்துப் போர்த்திகிட்டு இருக்க முடியாது. கவனக்குறைவா இருக்கும்போது மாராப்பு விலகத்தான் செய்யும். கட்டுன புருஷனா இருந்தாலும் இதைக் கண்டுக்காம இருக்கணும். அப்படி இருக்க உன்னால முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன இந்த ஒரு வருசத்தில் ஒரு நூறு தடவையாவது “இழுத்து மூடு’’ன்னு சொல்லியிருப்பே. ஒன்னு செய். உன் கையால என்னோட ரெண்டு முலையையும் அறுத்துப் போட்டுடு. அப்புறம் உனக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி கிடைச்சுடும்.”

தேனீர்க் குவளையை ஒரு புறம் வைத்துவிட்டு அரிவாளை மட்டும் நீட்டினாள் தேவகி.

“என்னை மன்னிச்சுடு தேவகி” என்று சொல்ல நினைத்தான் மாதவன். ஆனால், சொல்லவில்லை; ஆழ்ந்த யோசனையுடன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.
                                *     *     *     *     *    

கூகுளின் மொழியாக்கம்:

Jolarpettai - Erode passenger train was speeding past Pommidi.

Devaki, who was staring at the mountainous forests and fields that were disappearing in an instant as a feast for the eyes, leaned back in her seat as her right foot was trampled as 'chopped' and she stared in amazement.

‘Madhavan, who was sitting opposite her one-sided breast which was slightly off the front, noticed that she was staring.

"Hey did you step on my leg?" She asked.

“Wait and buy. Drag and drop” he said.

Instead of dragging Marappa away, Devaki threw an indifferent look at him and started enjoying nature again.

Madhavan beat ‘Naranara’ and bit his teeth

When he went home, he said, "I want to ask you something. Tea Konda.”

Devaki, who came with tea, had a long scythe[அரிவாள்] in her other hand.

“I know what you are asking. First listen to what I have to say. The saree tie can not be pulled and wrapped around a doll all the time. When left unmanaged, they can be left astray and lose the right path. Even if Kattuna Purushana does not see this. You can not be like that. He would have said "pull and close" at least a hundred times in the one year we've been married. Do something. Cut off my awesome nipple with your hand. Then somehow you can find peace for me” she said.

Devaki put the tea cup aside and held out only the scythe.

Madhavan thought to say "Excuse me Devaki". But, do not say; With a deep thought he grabbed his shirt and walked out.

==========================================================================

*****கணிசமான அளவில் பிழைகள் இருப்பினும், கதையின் 'உள்ளடக்கம்' புரியும் வகையில் கூகுளின் ஆங்கில மொழியாக்கம் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.


திங்கள், 21 பிப்ரவரி, 2022

'சானிட்டரி நாப்கின்'... விரும்பத்தகாத விளைவுகள்!

[உறிபஞ்சு]
சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய மருத்துவர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

*சானிட்டரி நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுவதாகவும், மேலும் அதிலுள்ள ஒருவிதத் திரவம் நீண்டநேரத்துக்குப் பெண்களைச் சௌகரியமாக வைத்திருப்பதாகவும், இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன. 

*ஒரு பஞ்சை எடுத்து நீரில் முக்கினால் அதனால் குறிப்பிட்ட அளவு நீரைத்தான் தக்கவைத்துக்கொள்ள முடியும். உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில் பருத்தி பயன்படுத்தப்பட்டால் அதனால் எட்டு மணிநேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லை. 

*நாடெங்கிலும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற சுகாதாரக் கழிவுகள் சரிவரக் கையாளப்படவில்லை என்ற நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்திவிட்டு நேரடியாகக் கழிவறைகளில் வீசுகின்றனர். இந்நிலையில், அவற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதாரச் சீர்கேட்டுக்கு உள்ளாகிறார்கள். 

*பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

*சானிட்டரி நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கறுப்படைதல் என்று பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி, மாதவிடாய்க் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

*மாதவிடாய்க் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னைப் பயன்படுத்துவது மிக அதிகபட்சமாகப் புற்றுநோயைக்கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களைப் பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதார ரீதியாகச் சாத்தியமே இல்லை.

எனவே,

*சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்தியா முழுவதும், தற்போது கிராமப்புறப் பகுதிகளிலும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் துணி அடிப்படையிலான பாரம்பரிய முறையே சிறந்தது என்று சொல்லலாம். அதாவது, வீட்டிலேயே பருத்தியிலான இலகுவான துணிகளைக்கொண்டு தைக்கப்படும் உடையே சிறந்தது. அதை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்படும் துணியின் தரம், தைக்கப்படும் விதம், பயன்படுத்தும் முறை, வெந்நீரால் அலசுவது, வெயிலில் உலர வைப்பது போன்ற படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

*பொதுவாக, சிலிக்கானை அல்லது ரப்பரை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் கப்களை மாதவிடாய்க் காலத்தின்போது பொருத்திக்கொண்டால் அதில் ரத்தம் சேமிக்கப்படும். பிறகு பாதுகாப்பான வழியில் அதை வெளியேற்றிவிட்டு, தயாரிப்பாளரின் அறிவுரையின்படி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

*உறிபஞ்சுகளையும் பயன்படுத்தலாம். செல்லுலோஸ் அல்லது பருத்தியைக் கொண்டோ அல்லது இரண்டையும் சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவைப் பொருத்துப் பல வகையாகச் சந்தைகளில் கிடைக்கின்றன.

மாதவிடாய்க் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் உறிபஞ்சுகள் உட்கிரகித்துகொள்வதால், பெண்களால் எப்போதும் போல இயல்பாகச் செயல்படுவது, நீச்சலடிப்பது, குளிப்பது போன்றவற்றை இதை அணிந்துகொண்டே செய்ய முடியுமென்பது இவற்றின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.

*இவை தவிர, அதிகம் பிரபலமில்லாத மாதவிடாய்க் கால உள்ளாடை(Period Pants), நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய பருத்தியிலான பேடுகள் போன்றவையும் சந்தைகளில் கிடைக்கின்றன என்பது அறியத்தக்கனவாகும்.

==========================================================================

இது குறித்து இன்னும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் கீழ்க்காணும் தளங்களுக்குச் சென்றிடுக.

https://www.bbc.com/tamil/science-46819780

https://www.dinamani.com/health/health-news/2019/jan/17/dangers-of-sanitary-napkins-3078155.html

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

ஒரு சாகசக்காரியிடம் சரணடைந்த சரித்திர நாயகன்!['கவிதை நடை'யில்!]

'உரைநடை' என்பது, சொல்ல விரும்பும் செய்தி அல்லது கருத்துக்கு முக்கியத்துவம் தருவது. கற்பனை, உயர்வுநவிர்ச்சி[மிகைப்படுத்தல்] போன்றவற்றைப் பெருமளவில் தவிர்த்து உள்ளதை உள்ளபடியே முன்வைப்பது. 

கவிதை என்பது உணர்ச்சிக்கு முதலிடம் தருவது. அதன் கருப்பொருள் எதுவானாலும், எதுகை, மோனை, அடுக்குச் சொல், வர்ணனை என்றிவற்றுடன் வாசிப்பவரின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் படைப்பது.

இந்த இரண்டையும் இரண்டறக் கலந்து எழுதுவதைத்தான் 'கவிதை நடை' என்கிறார்கள்.

இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா என்பார்கள். கலைஞர் மு. கருணாநிதியும், திராவிட இயக்கத்தை சார்ந்த வேறு சில எழுத்தாளர்களும் கவிதை நடையில் நாடகங்களும் கட்டுரைகளும் கதைகளும் எழுதித் தமிழ் வளர்த்தார்கள். 'தமிழ்த் தென்றல்' என்று போற்றப்பட்ட திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களும் கவிதை நடையைக் கையாண்டு, 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை விளக்கம்' என்று பல நூல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.

இனி, கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு சுவையான, சுருக்கமான வரலாற்று நிகழ்வு:

#உலகமே வியந்தது அவனது வீரத்தையும் தீரத்தையும்.

ரோமாபுரியின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ரணகள மாவீரன் பெற்ற வெற்றிகள் குறித்தே பேசப்பட்டது. 

ஒட்டுமொத்த உலகமும் புகழ் மகுடம் சூட்டி அவனைப் பாராட்டியது; புகழ்ந்து போற்றியது.

இந்தச் சாதனையாளன் ஒரு சாகசக்காரியுடன் நடந்த போரில் தோற்றான் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவன் தோற்றுத்தான் போனான்.

அவள் சேல் விழியாள்.

மாமன்னர்களையெல்லாம் தன் காலடியில் விழவைத்த மாயவித்தைக்காரி அவள்.

களத்தில் பகைவர்களைச் சிதறடித்த அவன்  அவளின் சிருங்காரச் சிரிப்பில் சிதறிப்போனான்.

களத்தில் எதிரிகளைக் கலங்கடித்த அவனை அந்தக் காரிகை கட்டிலறையில் வீழ்த்தினாள்.

அவளை வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த அவன் அவளின் பாதம் பணிந்தான்.

அவளின் அழகை வியந்து சிந்து பாடினான்.

முடி தரித்த வேந்தர் பலரைப் பிடி சாம்பலாக்கிய அந்த வீரனை, வெற்றியன்றி என்றுமே தோல்வி கண்டிராத தீரனை, காந்தக் கண்களால் கவர்ந்திழுத்து மோகப் படுகுழியில் வீழ்த்தினாள் அந்த மோகனாங்கி.

வலிய முதலையிடம் சிக்குண்ட பெரிய மதயானை ஆனான் அவன்.

இது, ஒரு சாகசக்காரி, தன் சரச சல்லாபத்தால் ஒரு சரித்திர நாயகனை அடிமையாக்கிய கதை.

அவள், எகிப்து நாட்டு எழிலரசி கிளியோபாட்ரா! அவன் ரோம் நாட்டு மாவீரன் ஆண்டனி!

==========================================================================

மூலம்: 'அண்ணா சொன்ன குட்டிக்கதைகள் 100'; பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை.

***நூலின் பக்கங்கள் பலவும் வெகுவாகச் சிதைந்துவிட்டன. கதையில் கணிசமான வரிகளை அனுமானத்தின் மூலம் சரிசெய்ய நேரிட்டது.

தங்களின் வருகைக்கு நன்றி.


சனி, 19 பிப்ரவரி, 2022

பெண்ணினத்தை இழிவுபடுத்தும் 'யோனி பூஜை'!


ஒரு வலைத்தளத்தின்[quora.com] கேள்வி-பதில் பகுதியில், 'யோனியே பிரபஞ்சத்தின் ஆதாரச் சக்தி(சாக்த மரபில்)' என்பதான கருத்துப் பதிவைப் படிக்க நேர்ந்தது.

"உயிர்களின் இனவிருத்திக்கான ஆதாரச் சக்தி யோனியாக இருக்கலாம். பிரபஞ்சத்துக்கே இதுதான் ஆதாரமா?" என்று கேட்கத் தோன்றுகிறதா? வேண்டாம். மேலே படியுங்கள். 

'கேரள தேசத்துப் பகவதி கோவிலில் ஒரு மண்டலம் விரதமிருந்து கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்தியபடி பல கிலோமீட்டர்கள் பயணித்துப் பிச்சை எடுத்துக் கோவிலுக்குச் செல்வது[யோனி பூஜை செய்ய] வழக்கமானது. இவையெல்லாம் தாந்திரீக முறை. ஒரு சாதாரண ஆச்சார இந்துவுக்கு இவையெல்லாம் ஆச்சரியமளிக்கும் விசயம். 

'கன்னி பூஜை', 'யோனி சேவை' ஆகியவை இந்து மதத் தரிசனத்தின் ஒரு பகுதியே' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள்களைக் கற்பித்ததோடு அல்லாமல், ஆணாகவும் பெண்ணாகவும் வகைப்படுத்தி, உயிர்களின் இனப்பெருக்கத்துக்கான ஆண்-பெண் உறுப்புகளை அவர்களுக்கும் பொருத்தி, அவற்றை வழிபடுவது இந்துமதத் தரிசனத்தின் ஒரு பகுதியே என்று மக்களை நம்பச் செய்தார்கள் இந்துமதவாதிகள்; இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிபாடு இந்தப் புண்ணியப் பூமியில் இன்றளவும் தொடர்வது பகுத்தறிவுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

பெண்ணினத்தைக் கேலி செய்யும் விதமாகச் செய்யப்படும் இந்த வழிபாட்டில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

                                             *   *   *   *

தொடர்புடைய செய்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் நீல் பர்வதம் என்னும் மலை மீது அமைந்துள்ளது காமாக்யா ஆலயம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதி வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் அம்பிகைக்கு உருவம் கிடையாது. அதற்கு பதிலாக அங்குள்ள ஒரு பாறையில் பெண்ணுறுப்பான யோனியை உருவமாகச் செய்து அதனை வழிபட்டு வருகின்றனர்[இது தொடர்பான கதை வெகு சுவையானது].

===========================================================================================


வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஆண்களின் அலட்சியமும் குடும்பப் பெண்களின் மனக்குமுறலும்!!!

மணமான பெண்களைப் பொருத்தவரை, குடும்ப வாழ்க்கையில் எத்தனை மனக்குறைகள் இருப்பினும்,  ஒளிவு மறைவு இல்லாமல் அவற்றை அயலாரிடம் பகிர்வதென்பது நேற்றுவரை இங்கு நிகழாத ஒன்று.  'தனியார் நிறுவனம் குடும்பப் பெண்களிடம் நடத்திய பேட்டி' என்று குறிப்பிட்டு, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ள 'மாலை மலர்'[14.02.2022] நாளிதழ், 'இப்போதெல்லாம் இது  நிகழ்கிற ஒன்றுதான்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

பெண்களிடம் பேட்டி கண்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெறாதது[அயல்நாட்டு நிறுவனங்களின் இம்மாதிரிப் பேட்டி நிகழ்வுகளில் நிறுவனங்களின் பெயர் தவறாமல் இடம்பெறும்] குறிப்பிடத்தக்கக் குறை எனினும் பேட்டி சுவை நிறைந்ததாகவே உள்ளது.

குடும்பப் பெண்களிடம் நிறுவனம் முன்வைத்த கேள்வி: "நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?" 

குடும்பத் தலைவிகளின் பதில்கள்:

*"திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." -இப்படிப் பதிலளித்தவர்கள் 22%. 

*"திருமணத்தைப் பற்றி நான் கண்ட கனவுகள் ஈடேறவில்லை."  

*"திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம்." 

*"திருமணத்திற்கு முன்பு எனக்கு இருந்த சுதந்திரத்தை இழந்துவிட்டேன்." -இப்படிச் சொன்னவர்கள் 90%

*"திருமணத்திற்கு முன்புவரை குடும்பத்தாருடன் நிறையப் பயணம் மேற்கொண்டேன். பெற்றோருக்கு முடிந்த உதவிகளைச் செய்தேன். இப்போது என் கணவரும், அவரது குடும்பத்தினருமே என்னுடைய உலகமாக மாறிவிட்டனர். அதனால், எனக்காக நான் வாழ முடியவில்லை." 

*"என் கணவர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை; எதிலும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்; மது அருந்துகிறார்; பொறுப்பாக நடந்துகொள்வதில்லை; பொய் சொல்கிறார்." 

*"திருமணமான புதிதில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார்; பேசும் நேரத்தை இப்போது படிப்படியாகக் குறைத்துவிட்டார்." -இது,  40%  பெண்களின் ஆதங்கம்.

*"ஒரு வருடம் மட்டுமே இவருடனான வாழ்க்கை இனிப்பாக இருந்தது; பின்னர் கசக்க ஆரம்பித்துவிட்டது."

*"ஒரு முறையாவது விவாகரத்துப் பெற்று மணவாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுவிடலாமா என்று யோசித்திருக்கிறேன்." -20% பெண்களின் மனநிலை இது.

*"திருமணத்திற்குப் பின்பு என் பழைய நட்புகளை எல்லாம் இழந்துவிட்டேன். அதனால், அவ்வப்போது அவர் மீது கோபப்படுகிறேன்."

***பெண்களின் இந்த விரும்பத்தகாத குடும்பச் சூழ்நிலைக்கு உளவியல் நிபுணர் சொல்லும் காரணம்.....

"மணவாழ்க்கையில் இணையும் ஆண்-பெண் இருவருமே இருவேறு குடும்பம், சூழல், கலாச்சாரம் போன்றவைகளின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் அனைத்து விசயங்களிலும் ஒத்துப்போவது அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைச் சரியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். தேவைப்பட்டால், அவர்கள் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுதல் வேண்டும்.” 

==========================================================================

நன்றி:

https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2022/02/14132024/3481359/bed-life-problems.vpf  -14.02.2022

வியாழன், 17 பிப்ரவரி, 2022

காவிகளின் கனவும் தமிழன் என்றொரு இனமும்!!

சில நாட்களுக்கு முன்பு "ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியப் பிரதமராக ஆவார்" என்று 'ஓவைசி' பேசினார். அதை எவரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.

பேசியவர் இந்தியக் குடிமகன். அவர் விருப்பத்திற்கிணங்க இந்தியப் பிரதமர் ஆகவிருக்கும் 'ஹிஜாப்' அணிந்த பெண்ணும் இந்தியக் குடிமகளாகவே இருப்பாள் என்பதால்,  அவ்வாறு பேசுவதில் தவறேதும் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

சற்று முன்னர், தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் கர்னாடகா அமைச்சர் 'ஈஸ்வரப்பா' என்பவர், "இந்தியத் தேசியக் கொடியான மூவர்ணக் கொடிக்குப் பதிலாக என்றேனும் ஒரு நாள் 'காவிக் கொடி' பறக்கக்கூடும்" என்று அறிவித்ததை அறிய முடிந்தது.

இச்செய்தி ஏற்கனவே  நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது.

#கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று மாலை பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் தேசியக் கொடிக் கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,  "இது சர்ச்சைக்குரிய விஷயம் கிடையாது" என்று பதில் கூறினார். "கொடிக்கம்பம் என்பது பொதுவானது. அதில் எப்பொழுதும் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படுவது கிடையாது"[தேசியக் கொடியை இறக்கிவிட்டுக் காவிக் கொடி ஏற்றுவது தப்பில்லையா?] என்று பதிலளித்த நிலையில், கன்னட நாடு பிறந்த தினத்தில் கொடிக் கம்பத்தில் கர்நாடகக் கொடியும் ஏற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் நேற்று காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது" என்றார்.

"என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம்"[https://www.malaimurasu.com/posts/india/The-saffron-flag-will-one-day-definitely-become-the-national-flag] என்றும் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்#

இதைச் சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்; யாரும் அவர் தண்டிக்கப்படுதற்குரியவர் என்று சொன்னதாகத் தெரியவில்லை['பஜக' கட்சிக்காரர் என்பதால்?].

இந்த நிலையில் நம் அடிமனதிலும் இம்மாதிரியான ஆசை கிளர்ந்தெழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது.....

"தமிழர்களாகிய எங்களுக்கென்று ஒரு கொடி இருக்கிறது. அது, 'தமிழ்' பேசும் இனத்தவரான எங்களின் கொடி. என்றாவது ஒரு நாள், ஒரு மதத்தின் சின்னமான காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என்றால், எங்கள் இனத்தின் சின்னமான கொடியும் தேசியக் கொடியாக மாறக்கூடும்" என்று சொல்வதற்குத் தமிழர்களுக்கு உரிமை உண்டு" என்பதே.

ஆனால்.....

நாம் அவ்வாறெல்லாம் சொல்ல விரும்பவில்லை; "இனியும் சொல்லத் தூண்டாதீர்கள்" என்று மட்டுமே ஈஸ்வரப்பா போன்ற காவிக் கட்சிக்காரர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

==========================================================================


'கூட்டு நுண்ணறிவு'?!... சூடான சுவையான புதிய செய்தி!

35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல் மனித உயிரியின் மூளை அளவு சுமார் 450 மி.லி.; 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் 500 மி.லி. அளவாக மூளை இருந்தது. 5 லட்சம் ஆண்டுகள் சீரான வேகத்தில் மூளையின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது.10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மூளையின் அளவு 1,000 மி.லி.யை எட்டியது. நவீன மனிதனான ஹோமோ ஸேப்பியன் மூளை 1,350 மி.லி. ஆனது. 

அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளில் மனித மூளையின் அளவு ஏற்ற, இறக்கம் இல்லாமல் நிலையாக இருந்தது. 

ஆனால், இங்கே கவனிக்கத்தக்க முக்கிய மாற்றம் என்னவென்றால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மனித மூளையின் அளவு, சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைய ஆரம்பித்ததுதான். விளைவு.....

இப்போதைய மனிதனின் சராசரி மூளையின் அளவு 1,090 -1,175 மி.லி.; கடந்த காலங்களில் மனித மூளை விரிவடைந்த வேகத்தைக் காட்டிலும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மூளை சுருங்கும் வேகம் ஐம்பது மடங்காக ஆனது.

விலங்கு உலகில் அவற்றின் உடல் எடையுடன் ஒப்பிடுகையில், எடை அதிகமான மூளை கொண்ட விலங்கு மனிதனே. 

திமிங்கிலத்துக்கு 9 கிலோ மூளையும் யானைக்கு 6 கிலோ மூளையும் உள்ளன. மனித மூளையின் எடையோ சுமார் 1.5 கிலோதான்.  

உடல் எடையோடு ஒப்பிட்டால் திமிங்கிலத்தின் உடல் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. யானையின் எடையில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் அதன் மூளையின் எடை. மனிதனுக்கு மட்டும் அவன் எடையில் ஐம்பதில் ஒரு பங்காக மூளை இருக்கிறது.

மனித உடலில், ஆற்றலை அதிக அளவில் செலவு செய்யும் உறுப்பு மூளைதான். உடலின் எடையில் வெறும் இரண்டு சதவீதமே இருந்தாலும் மூளை மட்டும் இருபது சதவீத ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. எனவே, உடல் எடையில் மூளையின் அளவு அதிகரித்தால், அதற்கு ஏற்ப ஆற்றலும் அதிகரிக்க வேண்டும். இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பழுதாகிவிடும்.

பரிணாமத்தில் நேராக நிமிர்ந்து நடந்த ஹோமினின் வகை உயிரினங்களின் மூளை அளவு விரிவடைந்தது. கைகளைப் பயன்படுத்திக் கற்கருவிகளைத் தயாரித்து, உழைப்பைச் செலுத்தி, உணவு உற்பத்தியில் ஈடுபட்டதால், அதிக உணவைப் பெற முடிந்தது. மூளையின் வளர்ச்சிக்குத் தீனியும் போட முடிந்தது. மூளையின் அளவு அதிகரித்தாலும் தாக்குப்பிடிக்க முடிந்தது. 

குழுவாக வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதன் கருவிகளை மட்டுமல்ல, நெருப்பையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தினான். அதன் மூலம் அதிக உணவு கிடைத்து; ஆற்றலையும் பெற முடிந்தது. 

காலங்காலமாக வளர்ச்சி நிலையிலிருந்த மனித மூளை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவிலிருந்து குறைய ஆரம்பித்தது.

ஆற்றலை அதிகம் எடுத்துக்கொள்ளும் மூளையின் அளவு கூடினால், உடலின் மற்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. மூளையின் அளவு சிறியது என்றால் தேவையான திறன் இருக்காது. எனவே, மூளை செலவிடும் ஆற்றலையும் திறனையும் சமன் செய்யும் வகையில் பரிணாமம் அமைகிறது.

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, மனிதன் தனிமரமாக இல்லாமல், சமூகம் எனும் தோப்பில் ஓர் அங்கம் ஆனான்.

தனித்தனியாக வாழ்ந்தால் ஒருவருக்குத் தேவைப்படும் அதே அளவு மூளை, சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் தேவைப்படாது. சமூகத்தில் உள்ள வேலைப் பிரிவினை காரணமாக ஒவ்வொருவரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் பணிகளில் நிபுணத்துவம் பெற்று, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம். எனவே தனித்துக் காட்டில் வாழும்போது தேவைப்படும் அதே அளவு மூளை, நவீன மனிதனுக்குத் தேவையில்லை என்றாகிறது.

சமூக வாழ்க்கை முறை உருவானதன் தொடர்ச்சியாக, எந்தெந்தச் சூழலில் எல்லாம் மூளையின் அளவு அதிகரிக்கும், அல்லது குறையும் என்பதை எறும்புகளின் உலகத்தை ஆராய்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் 'ஜெர்மி டிசில்வா' போன்ற ஆராய்ச்சியாளர்கள்.

எறும்புகள் உலகத்தில் ஒவ்வோர் எறும்பும் குறிப்பிட்ட பணியைச் செய்கிறது. மனிதன் விவசாயம் செய்வது போலவே, சில வகை எறும்புகள் தமது புற்றில் பூஞ்சைகளை வளர்த்துச் சாப்பிடுகின்றன. எறும்புகளின் சமூகத்தில் வேலைப் பிரிவினை காரணமாக அறிவு பகிரப்படுகிறது. ஒவ்வோர் எறும்பும் ஏதோ ஒரு வேலையைச் செய்வதற்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே, எறும்பின் மூளை இந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில், அளவில் சற்றே குறைந்திருக்கிறது. வேலைப் பிரிவினை, கூட்டு முடிவுகளை எடுத்தல் போன்றவை எறும்புகள் உலகத்துக்கும் மனித சமூகத்துக்கும் பொதுவானவை.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய நதிக்கரை நாகரிகம் போன்ற பண்பாட்டு வளர்ச்சியின் காரணமாகத் தனி மனிதர்களின் சராசரி மூளையின் அளவு சிறுத்துவிட்டது. ஆனாலும் அறிவு குறைந்துவிடவில்லை.

காட்டில் வாழ்ந்தபோது ஒவ்வொருவரும் தகவல்களைத் திரட்டி, நினைவில் தக்கவைக்கும் அளவுக்குத் தேவைப்பட்ட பெரிய மூளை இப்போது தேவையில்லை. சமூக அறிவு இருப்பதால் சற்றே சிறிய மூளைகூடப் போதுமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

*****கருத்துப் பிறழ்வு நேராத வகையில், மூலக் கட்டுரையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

==========================================================================

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

நன்றி:

https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/740425-why-is-the-human-brain-shrinking-4.html  - வியாழன், பிப்ரவரி 17 2022


புதன், 16 பிப்ரவரி, 2022

எழுத்தாளர் மாலனின் 'அரைவேக்காடு' ஆங்கில அறிவு!!!

[கலப்பினத் தாவரம்]
'இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது; ஒரு நாடு என்றல்ல' என்ற ராகுல்காந்தி அவர்களின் உரைக்கு[தினசரிகளில் வெளியானது] மறுப்புத் தெரிவிக்கும் வகையில், குமுதம் வார இதழில்[23.02.2022] கட்டுரை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் மாலன்.

'union' என்பதும் 'united' என்பதும் ஒன்றல்ல என்று சொல்லி, அவற்றுக்கிடையே உள்ள வேறுபட்ட அர்த்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருக்கிறார் இந்தக் கட்டுரையில்.

'united' என்றால், தனித்தனி அடையாளங்களுடன் ஒரு பொது நோக்கிற்காக இணைந்து செயல்படல் என்று பொருள் சொன்ன இவர், 'union' என்பதற்கும் 'இணைந்து செயல்படுதல்' என்று பொருள் கொள்ளாமல், 'பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலத்தல்' என்று விளக்கம் தருகிறார். 

மேற்கண்ட 'இரண்டு ஆங்கிலச் சொற்களும் ஒன்றல்ல' என்பதை மிகவும் வலியுறுத்தியிருக்கிறார். இதிலிருந்து இவருக்குள்ள ஆங்கில அறிவு எத்தனை அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது[அடியேனுக்கும் அரைவேக்காடு அறிவுதான். அவருடையதைக் காட்டிலும் என்னுடையது கொஞ்சம் 'உசத்தி'!].

ஆங்கில அகராதிகளின் உதவியுடன் இவ்விரு சொற்கள் பற்றியும் அறிந்துகொள்வது எளிதான செயல்தான்.

'Union' is a noun, describing something made up of united parts; unity... noun.

'unite' is a verb.

United is an adjective, or the past tense of the verb.

ஆக, union என்றாலும் united என்றாலும் பொருள் ஒன்றுதான்.

'indian union' என்றால், 'மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியா' என்பது இதற்கான  தமிழ்.

'ஒன்றியம்'[ஒன்றுதல் > ஒன்று சேர்தல்] என்றாலும் ஒன்றிணைந்த என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும். 

அதற்கு[ஒன்றியம்], 'பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலத்தல்' என்று விளக்கம் தருவது மிகத் தவறானது ஆகும்.

'இரண்டறக் கலத்தல் என்பதற்கு உரிய ஆங்கிலச் சொல். 'merge' என்பதாகும். இதற்கு, 'தங்கத்துடன் செம்பு கலப்பது' என்பது சரியான உதாரணம்.

மாநிலம் என்பது வெறும் நிலப்பரப்பைக் குறிக்கிறது என்பதைவிடவும் அதில் வாழ்கிற மக்களைக் குறிக்கிறது என்று சொல்வதே ஏற்புடையதாகும். 

இந்திய மாநில மக்கள் ஒன்றிணையாமல்[ஒன்றிணைந்து செயல்படுதல்], மாலன் சொல்வது போல், பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலப்பது சாத்தியமா?

அது சாத்தியப்பட வேண்டும் என்று இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆசைப்படுவது போல், மாலனும் ஆசைப்படுகிறாரா? அதாவது, ஏனைய இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லாம் தங்களுடை தாய்மொழிகளை மறப்பதோடு, தத்தம் மாநிலத்தையும்[தமிழ்நாடு, கேரளா.....] மறந்து இந்தி பேசுவோரின் மாநிலத்தவராகவே இரண்டறக் கலந்துவிடுதல் வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா? 'union' என்னும் சொல்லுக்குப் படாத பாடுபட்டு, 'இரண்டறக் கலத்தல்' என்று வலிந்து விளக்கம் தந்தது இதற்காகத்தானா?!

"ஆம்" என்றால், தமிழனாகப் பிறந்த இவர், இதைவிடவும் ஒரு பெரிய துரோகத்தைத் தன் இனத்தவருக்கு இனியும் செய்துவிட முடியாது.

மாலன் செய்யும் இந்தத் துரோகத்தை 'இவர் ஒரு தமிழன்' என்பதற்காகத் தமிழர்கள் மன்னிக்கக்கூடும். இந்தி அல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மன்னிப்பார்களா?

'குமுதம்' ஆஸ்தான எழுத்தாளரான மாலன் இனியேனும் இம்மாதிரியான 'அபத்த'க் கட்டுரைகளை எழுதாமலிருப்பது இவருக்கு மட்டுமல்ல, குமுதம் இதழுக்கும் நல்லது!

==========================================================================


செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

குட்டை ஒன்று! மட்டைகள்[மதங்கள்] இரண்டு!!





'ஆண்டுகள், மாதங்கள், கிழமைகள் என்றிவை எல்லாமே மனிதர்கள், தங்களின் செயல்பாடுகளை ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு நிகழ்த்துவதற்காகவும், கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவும், வருங்காலத்திற்கான பணிகளைத் திட்டமிட்டுச் செய்துமுடிப்பதற்காகவும் சூரியன், சந்திரன், பூமி போன்றவற்றின் இயக்கங்களை அடிப்படையாகக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர, இயற்கையாக அமையப்பெற்றவை அல்ல. 'இது நல்லது, இது கெட்டது' என்று பாகுபாடு செய்வது அறியாமையின் பாற்பட்டது. இந்தவொரு கருத்தாக்கத்தை மனதில் இருத்திக் கீழ்வரும் பதிவைப் படியுங்கள்.  

ஞாயிற்றுக்கிழமை:

இந்துக்களுக்கு இது நல்ல நாள் அல்ல. புதிதாக எந்தவொரு செயலையும் இந்தக் கிழமையில் செய்யத்தொடங்குதல் கூடாது என்பது இவர்களின் நம்பிக்கை. பழங்கள் காய்கறிகள் உட்பட எதையும் 'வெட்டுதல்' கூடாது என்பதும் இவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய நெறியாகும்.

இசுலாமியர்களும்கூட அனைத்து ஞாயிற்றுகளையும் நல்ல கிழமைகள் என்று நம்புவதில்லை. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை மட்டும் சிறப்பானதாகக் கருதுகிறார்கள். மதம் சம்பந்தப்பட்ட, மசூதிகளைப் பெருக்கித் தூய்மைப்படுத்தல் போன்ற முக்கியக் கடமைகளை இந்த நாளில் செய்வார்கள்.

திங்கள்:

இது சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால் இந்துமதம் சார்ந்த பெண்கள் 'ஊசிநூல்' கொண்டு ஆடைகளைத் தைக்கமாட்டார்கள். இந்த நாளில் மாலை நேரத்தில் உணவு உண்டால் ஆண் குழந்தை பிறக்காது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தலைவாரக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இசுலாமியர்களும் இந்தச் செவ்வாயைப் புனிதமற்ற நாளாகவே கருதுகிறார்கள். ஆவிகள் சுறுசுறுப்புடன் இயங்கும் இந்த நாளில், வீடு கட்டத்தொடங்குதல் போன்ற காரியங்களைச் செய்தல் கூடாது என்று எண்ணுகிறார்கள்.

புதன்:

பயணம் மேற்கொள்வது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, அறுவடை செய்வது, தானியங்களை அளப்பது என்றிவ்வாறான சில செயல்களைச் செய்தல் கூடாது என்பது இந்துக்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகளாகும்.

இசுலாமியர்கள் இதை 'லாபம் தரும் நாள்' என்று கருதுகிறார்கள். 'சுன்னத்' என்னும் சடங்கைச் செய்வதற்கு உரிய 'புனித' நாள் என்று நம்புகிறார்கள். புதனில் குழந்தை பெறுவது மிக நல்லது என்றும் நினைக்கிறார்கள்.

வியாழன்:

இந்து, இசுலாம் ஆகிய இரு மதங்களைச் சார்ந்தவர்களுமே, உழவுப் பணிகளை மேற்கொள்ளுதல், பயணம் புறப்படுதல் போன்றவற்றிற்கு உகந்த நாள் வியாழன் என்று கருதுகிறார்கள். இந்த நாளில் இரவு நேரத்தில் பிறக்கும் குழந்தை சிறப்பான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகுமாம்.

வெள்ளி:

இது சக்திக்குச் சிறப்பு வழிபாடு நிகழ்த்துவதற்கான நாள். தானியங்களை அரைப்பது, உரலில் இட்டுக் குத்துவது போன்ற செயல்களைச் செய்தல் கூடாது என்கிறார்கள் இந்துக்கள்.

இந்தக் கிழமையில் பிறப்பது இறப்பது என்னும் இரண்டுமே நற்பேற்றினை வழங்குபவை என்பது இசுலாமியர் நம்பிக்கை. இந்த நாளில் தானதருமங்கள் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்குமாம்.

சனி:

சனிக் கிரகத்துடன் தொடர்புள்ள இந்தச் சனிக்கிழமை தீய சக்திகளுக்குரிய நாளாம். உழுதல், பயணம் போவதெல்லாம் கூடாதாம். புத்தாடை உடுத்துவது, முகச்சவரம் செய்வதெல்லாம்கூடத் தீமை பயக்குமாம். இந்த நம்பிக்கைகள் இந்து மதத்தினர்க்கானவை.

இந்த நாட்கள் திருமணம், சுன்னத் சடங்கு போன்றவற்றிற்கு உரிய நாளல்ல என்கிறார்கள் இசுலாமியர்கள். இந்த நாளில் வேட்டைக்குச் செல்வதுகூடத் தடை செய்யப்பட்டுள்ளதாம்.

                                        *   *   *   *

*****இரண்டு முக்கிய மதங்களின் 'கிழமை' குறித்த நம்பிக்கைகள் மேலே விவரிக்கப்பட்டுள்ளன.

தலைப்பில் உள்ள 'குட்டை' என்னும் சொல் 'மூடநம்பிக்கை'யைக் குறிக்கிறதா, 'அறிவார்ந்த வாழ்க்கை நெறி'யைச் சுட்டுகிறதா என்பதை முடிவு செய்வது அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது!

ஹி...ஹி...ஹி!!!

==========================================================================

குறிப்பு:

'குட்டை ஒன்று! மட்டைகள்[மதங்கள்] மூன்று!!' என்ற தலைப்பில்தான் எழுத இருந்தேன். தகவல் சேகரிப்பதில் நேர்ந்த இடர்ப்பாடு காரணமாக அது இயலாமல்போனது.

பதிவுக்கான தகவல்கள் கொஞ்சம் நாட்களுக்கு முன்பே சேகரித்தவை. உதவிய நூல் குறித்த விவரங்கள் இருப்பில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.


திங்கள், 14 பிப்ரவரி, 2022

வதந்தி... தீ... அணைக்க ஒரு வலைத்தளம்!

'அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் 'YOU TURN'. 'உண்மை கண்டறிதல்' எத்தனைச் சிக்கலான பணி என்பது யாவரும் அறிந்ததே. எங்களுக்கான துணையாக உங்களை அழைக்கிறோம். சந்தா செலுத்தித் தொடர்ந்து 'You Turn' மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்'

என்றிப்படியானதொரு கோரிக்கையை முன்வைத்துத் தமிழில் இயங்கிக்கொண்டிருக்கிறது ஓர் இணையத்தளம். அது.....

அவ்வப்போது, பிரபலமான மனிதர்களைப் பற்றி அவதூறு பரப்பியோ, நடைமுறைச் சாத்தியமில்லாத நிகழ்வுகளை நடந்ததாக வதந்தி கிளப்பியோ குதூகளிப்பவர்கள் உலகெங்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை இயங்கவிடாமல் முடக்குவதென்பது அத்தனை எளிதான செயலல்ல.

ஆனால், வதந்திகளை 'இவை வெறும் வதந்தியே' என்று வதந்தியோடு தொடர்புடையவர்கள் மறுப்பறிக்கை வெளியிடுவதும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அம்மாதிரி அறிக்கைகள் பெரும்பாலும் போதிய பலன்களைத் தருவதில்லை.

இந்த மாதிரியான வதந்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, 'இவை வதந்திகளே தவிர, நம்புதற்குரியனவல்ல' என்று அறிவிப்புச் செய்வதை ஒரு சமுதாயப் பணியாகச் செய்துகொண்டிருக்கிறது  'YOU TURN'[https://youturn.in/] என்னும் தளம்.

இதன் கடின உழைப்பின் மூலம், அண்மைக் காலத்தில் 'பொய்' என்று நிரூபிக்கப்பட்ட சில வதந்திகள் பின்வருமாறு:

*நீட் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவேன் எனக் கூறியதாகச் சொன்ன செய்தியின் உண்மைத்தன்மை என்ன?[February 9, 20220] 

*இந்து இளைஞரை முஸ்லீம்கள் தாக்கிப் படுகொலை செய்ததாகப் பரவும் வீடியோ...  நடந்தது என்ன?[February 12, 2022]

*முஸ்லீம் மாணவிகள் மீது மற்றவர்கள் தண்ணீர் ஊற்றுவதாகப் பரவும் வீடியோ உண்மையானதா?[February 14, 2022]

*'இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்' என்னும், சிவகுமார் பற்றிய அவதூறுத் தலைப்பால் வதந்தி! நடந்தது என்ன?[October 22, 2021]

*இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ... உண்மை என்ன?[October 22, 2020]

*கத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா?[April 22, 2020]

*தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா?[April 16...)

போதிய ஆதாரங்கள் தரப்பட்டு இவையும், இவை போன்ற மேலும் பல வதந்திகளும் பொய்யானவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'YOU TURN' ஒரு சிறந்த குறிக்கோளுடன் செயல்படுவது பாராட்டுக்குரியது.

இடர்ப்பாடின்றி இதன் பயணம் தொடர நம் வாழ்த்துகள்.

==========================================================================

***வதந்திகள் குறித்த முழு விவரங்களையும் அறியும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால், https://youturn.in தளத்திற்குச் செல்க.

'You Turn'க்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் அறிவீராக!


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

வாசிப்பில் சாதனை நிகழ்த்திய என் புதிய நூல்['கிண்டெல்' வெளியீடு]!

அமேசான் கிண்டெலில் வெளியாகியுள்ள கீழ்க்காணும் என் நூலில்[38ஆவது], கடந்த இரண்டு நாட்களில் கிண்டெல் வாசகர்களால் 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன[இது வாசிக்கப்பட்ட பக்கங்களின் கூட்டுத்தொகை. விற்பனை மட்டுமல்லாமல் வாசிக்கப்படும் பக்கங்களையும் கணக்கிட்டுப் பணம் கொடுக்கிறது அமேசான் நிறுவனம்].

என்னுடைய வேறு எந்த நூலும்['காமம் பொல்லாதது' உட்பட] இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.

மேற்கண்ட வாசிப்புக் கணக்கைச் சற்று முன்னர்தான் பார்க்க நேரிட்டது. உடனடியாக உங்களுடன் பகிர்கிறேன்[நாளை காலையில் பகிரலாம் என்றால் 'ஆசை மனம்' அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது!].

இதெல்லாம் ஒரு சாதனையா என்று கிண்டல் செய்திட வேண்டாம். மிக எளிய எழுத்தாளனான எனக்கு இதெல்லாம்தான் சாதனை.

கிண்டெல் சந்தாதாரராக நீங்கள் இருந்தால் இதை வாசிப்பீர்கள என்பது என் நம்பிக்கை.

நன்றி.

கடவுள் கண்ட கனவு!: கட்டுரைகள்&கதைகள் (Tamil Edition) Kindle Edition