.....
மனித நேயம் [சிறுகதை]
அன்றைய அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கடைவீதியில் நண்பன் வினோதனைச் சந்தித்தேன்.
“காபி குடிச்சிட்டே பேசலாம் வா.” என்று அழைத்தேன்.
”விரதம் இருக்கேன். நீ மட்டும் சாப்பிடு” என்றான்.
எனக்குள் ’குபீர்’ ஆச்சரியம்.
விரதம் பற்றிப் பேச நேர்ந்தால், காக்கா குருவி, ஆடு மாடு விரதம் இருக்கான்னு குதர்க்கம் பேசுவான் வினோதன். இவன் ‘பக்கா’ நாத்திகன் என்பதால் சாமியை வேண்டிட்டு விரதம் இருப்பது சாத்தியம் இல்லை.
மிதமிஞ்சிய ஆர்வத்துடன், “விரதமா! நீ இருக்கியா?” என்றேன்.
“ஆமா. ஒரு நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாடு மட்டும்” என்றான்.
“எத்தனை நாளா இருக்கே?”
“நாலு நாளா.”
“இன்னும் எத்தனை நாளைக்கு?”
“என் எதிர் வீட்டுக்காரன் சாகிறவரைக்கும்”
எனக்குள் ‘பகீர்’!
“என்னடா உளர்றே?”
“உயிர் கொல்லி நோயால் இம்சைப்பட்ட அவன், இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவோடு போராடிட்டு இருக்கான். அவனின் கடந்த கால ‘நடத்தை’ பிடிக்காத அவனோட சொந்த பந்தங்கள், எப்போ மண்டையைப் போடுவான்னு எட்ட நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. நான் மட்டும், “நீ குணமடையற வரைக்கும் நான் விரதம் இருக்கப் போறேன்னு சொன்னேன்.
வறண்டு சிறுத்துப் போயிருந்த அவன் முகத்தில் சின்னதாய் ஒரு மலர்ச்சி!
’எனக்காக அனுதாபப் படவும் ஒருத்தர் இருக்கார்’கிற அற்ப சந்தோஷத்தோட அவன் வாழ்க்கை முடியட்டுமே”
வினோதன் சொல்லி முடித்த போது, என்னுள் ஒருவித சிலிர்ப்பு பரவுவதை உணர முடிந்தது.
வினோதன் என் கண்களுக்கு விநோதமானவனாகத் தெரிந்தான்!
