எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 19 பிப்ரவரி, 2020

இது அடாவடித்தனம்! அக்கிரமம்!! அநியாயம்!!!

//செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட, சுமார் ‘22 மடங்கு’ கூடுதலாக, சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது// -இது, 18.02.2020இல் வெளியான ‘இந்து தமிழ்’ நாளிதழ்ச் செய்தி.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சில நூறு பேர்கள் பேசுகிற மொழி சமஸ்கிருதம். எந்தவொரு மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும் இது இல்லை; அறிவியல் வளர்ச்சிக்குக் கிஞ்சித்தும் பங்களிப்புச் செய்யாத மொழி. இதை வளர்ப்பதாகச் சொல்லி இந்த நிதியாண்டில்[1919 - 20] ரூ231.15 கோடி ஒதுக்கியுள்ளார்கள். 

காலங்காலமாய் நாட்டை ஆண்ட மன்னர்களைத் தம் வசப்படுத்தி, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று அவர்களையெல்லாம் நம்ப வைத்து, அதை வளர்த்து, தாமும் வளர்ந்து, கோயில்களின் வழிபாட்டு மொழியாகவும் ஆக்கியவர்கள் மகா புத்திசாலிகள்.

அன்றெல்லாம் ஆளும் மன்னர்களைத் தம் அடிமைகளாக்கி வைத்திருந்த ‘அவர்கள்’ இன்றைக்கெல்லாம் ஆளுவோரைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பது சிந்திக்கத் தக்கது. 

இது போன்ற, ‘சமஸ்கிருத வளர்ச்சி’குறித்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? 

இந்த நாட்டை ஆளுகிற பிரதமர் மோடி அவர்களும், அமைச்சர் ..... அவர்களும் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தம் தாய்மொழியைக்கூடப் புறக்கணித்து சமஸ்கிருத வளர்ச்சியில் இவர்கள் மிகுந்த அக்கறை காட்டுவது புரிந்துகொள்ள இயலாத புதிராக உள்ளது.

‘மற்ற செம்மொழிகளைக் காட்டிலும் சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி வெளியாகிச் பல மணி நேரம் ஆன பிறகும், பிற மொழி பேசும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த நிதியாண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

2017 - 18..........ரூ198.31 கோடி.
2018 - 19..........ரூ214.38 கோடி

கோடி கோடியாக நிதி ஒதுக்கி வளர்க்கிறார்களே, இந்தத் தெய்வீக பாஷை வளர்ந்ததா?

இதன் வளர்ச்சி நம் நாட்டு வளர்ச்சிக்கு எவ்வகையிலெல்லாம் பயன்பட்டது?

எவரேனும் போதிய ஆதாரங்களுடன் புள்ளிவிவரம் தருவார்களா?
=======================================================================