வியாழன், 31 ஜனவரி, 2019

அமேசானில் 'மின் நூல்' பதிப்பித்தல்...ஓர் அனுபவப் பகிர்வு!

நான் 'மின் நூல்'களை மிகக் குறைந்த அளவிலேயே வாசித்திருக்கிறேன். எனினும், அந்த வாசிப்பு 'நாமும் மின் நூல் வெளியிட வேண்டும்' என்னும் ஆர்வத்தைத் தோற்றுவித்தது[இரு சிறுகதைத் தொகுப்புகள், 'பசி.ப.பரமசிவம்'[தன்வரலாறு], ஓர் ஆய்வு நூல் என என்னுடைய நான்கு நூல்கள் மட்டுமே அச்சு வடிவம் பெற்றுள்ளன].

கடவுளின் இருப்பு, மூடநம்பிக்கைகள், தமிழ் மொழி, பெண்ணுரிமை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட 800க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் 'கடவுளின் கடவுள்'[https://kadavulinkadavul.blogspot.com] என்னும் என் வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ள நான், அவற்றுள் கணிசமானவற்றை மின் நூல்களாக உருவாக்க எண்ணினேன்.

அதற்கான சூழலை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் நூல்கள் ஆகியவற்றிற்கான போட்டி[pentopublish2018] ஒன்றை அமேசான் அறிவித்திருப்பதை 'இந்து தமிழ்' நாளிதழ் வாயிலாக அறிய நேர்ந்தது.

எழுத்தாளர்கள், தம் படைப்புகளை[நூலாக வெளிவராதவை] அமேசான் கிண்டிலில், குறிப்பிட்ட கால வரம்புக்குள்[10.11.2018 - 09.02.2019] மின் நூலாக வெளியிடுதல் வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று.

கிண்டிலுக்கு ஏற்ற வகையில் நூலை வடிவமைத்து வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும்[ஆங்கிலத்தில்] அது வகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றை மிகக் கவனமாகப் படித்து நூல் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தொடக்கத்தில் தவறுகள் பல நேர்ந்தாலும் மனம் தளராமல் 12 நூல்களை வடிவமைத்துக் கிண்டிலில் இணைத்தேன். எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கும் வாய்ப்பை அது வழங்கியிருந்ததால், இணைத்த  நூல்களில் நேர்ந்த பிழைகளைத் திருத்தி மீண்டும் இணைத்தேன்.

இதற்கிடையே.....

25 லட்சத்திற்கும் மேலான ஆங்கில மின் நூல்கள் கிண்டிலில் இடம்பெற்றிருக்க, ஏறத்தாழ 8000 தமிழ் நூல்கள் மட்டுமே வெளியாகியிருப்பத்தை அறிந்து மனம் வருந்தினேன்.

தமிழார்வமுள்ள எழுத்தாளர்கள் முயன்றால் இந்த எண்ணிக்கையை மேலும் பல மடங்காக அதிகரிக்க இயலும். என்னுடைய இந்த அனுபவம், இவ்வகை முயற்சியை மேற்கொள்வோருக்குக் கொஞ்சமேனும் உதவும் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் விளைவே, 'அமேசானில் மின் நூல் பதிப்பித்தல்...ஓர் அனுபவப் பகிர்வு' என்னும் இந்த நீள் பதிவு.

தமிழில் மின் நூல்

கடந்த சில ஆண்டுகளில், மின் நூல் வாசிக்கும் பழக்கம் தமிழர்களிடையே அதிகரித்திருக்கிறது. மின் நூல் பதிப்பிக்கும் ஆர்வமும் சற்றே வளர்ந்திருக்கிறது.

பதிப்பிக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற சிலர் குழுவாக இணைந்து, freetamilbooks.com என்னும் தளத்தை உருவாக்கி, எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று, மின்னூலாக்கிப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் செய்துவருகிறார்கள். நூல்களைப் பெருமளவில்  விற்பனை செய்வது அரிய செயல் என்பதால், நூலாசிரியர்களுக்கு  ராயல்ட்டி எனப்படும் 'பங்குத் தொகை'யை இவர்கள் வழங்குவதில்லை.

அதனால்தானோ என்னவோ, ஆர்வம் இருந்தும் மின் நூல் பதிப்பிக்கும் முயற்சியில் அதிக எழுத்தாளர்கள் ஈடுபடவில்லை. வெளியாகும் கணிசமான நூல்களும் ஆங்கில மின் நூல்களைப் போல் பிரபலம் ஆவதில்லை; பெரும் எண்ணிக்கையிலான வாசகரைச் சென்றடைவதும் இல்லை.

இந்நிலையில், லாப நோக்கற்ற சில தன்னார்வ அமைப்புகள், மின் நூல்களை வெளியிட்டு அவற்றை வாசிப்பதற்கு இலவசமாக வழங்குகின்றன.
அவற்றில், கீழ்க்காண்பவை குறிப்பிடத்தக்கவை.

நூலகம்: http://www.noolaham.org/

திண்ணை: http://www.thinnai.com/?module=displaysectionall§ion_id=11&format=html [வார இதழ்]

http://tamilpadhivu.blogspot.com/ [இலவசமாக மின் நூல் தயாரித்தளித்தல்]

http://tamilbookmarket.com/ [விற்பனை]

https://amazon.in [நூல் விற்பனை]


அமேசானின் தமிழ்ப்பணி

ஆங்கிலத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் மின் நூல்களை வெளியிட்டு விற்பனை செய்துவரும் அமேசான் வணிக நிறுவனம், இந்தி மொழியில் மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நூல்களை வெளியிடுவதோடு, பதிப்பகங்களின் நூல்களையும் விற்பனைக்கு ஏற்கிறது.

இந்நிறுவனம் வெளியிட்டுவரும் Best Sellers  நூற்பட்டியல், நூல் வழங்கும் எழுத்தாளர்கள் ஓரளவேனும் பங்குத்தொகை[Royalty] பெறுகிறார்கள் என்று நம்பவைக்கிறது. இந்நிலை, எழுத்தாளர்களைத் தொடர்ந்து மின் நூல்கள் எழுதத் தூண்டும் என்பது உறுதி.

மின் நூல்களை வெளியிட விழையும் எழுத்தாளர்களுக்கு உதவிட எண்ணி, 12 மின் நூல்கள் வெளியிட்ட என் அனுபவத்தை இங்கு பதிவு செய்கிறேன்[நூல்களின் பட்டியல் அடுத்த பதிவில்].

மின் நூல் வெளிடுதல் தொடர்பான கணினி நுட்பங்களை நான் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் அமேசான் வழங்கிய நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றி, கிண்டிலுக்கான நூல்களைத் தயாரித்தேன்.

இனி, என் அனுபவப் பதிவை வாசிக்கலாம்.


படிநிலை ஒன்று:

அமேசான் கிண்டிலில் வடிவமைக்கப்படவிருக்கும் ஆவணம்[document]  குறைந்த அளவாக 2000 சொற்களைக் கொண்டதாக இருத்தல் நன்று. இது 20 பக்கங்களை உள்ளடக்கியதாக அமைய வாய்ப்புள்ளது. இது கிண்டில் பதிப்பில் 25 அல்லது 26 பக்கங்களாக[வரிவடிவ எழுத்துக்கள் சற்றே பெரிதாக இருக்கும்] விரிவடையும்.

ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையை அறிந்திட, 'countofwords.com' என்னும் தளத்தைப் பயன்படுத்தலாம்.

மொத்தப் பக்கங்களை முகப்புப் பக்கத்தில்[home page] இடது மேல் மூலையிலுள்ள 'file' ஐ கிளிக் செய்து, மாதிரி அச்சுப்படிவத்தைத்[print>print preview] தேர்வு செய்து அறிய முடியும்.


படிநிலை இரண்டு:

முழுமையாக வடிவமைக்கப்பட்ட கோப்பை[document], 'DOCX' ஆக மாற்றியமைப்பது[[For English language books, we accept several formats like .doc, .docx, .epub, .pdf but for Hindi and Tamil, we accept only .doc and .docx formats -Amazon]அமேசான் கிண்டிலில் நூலை வடிவமைப்பதற்கான அடுத்த படி ஆகும்.

மாற்றுவதற்கு 'ஆவண மாற்றி'[convert document to docx]யைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்[https://document.online-convert.com/convert-to-docx].

docx ஆக மாற்றப்பட்ட ஆவணம், 'file exploorer' இல் சேமிக்கப்பட்டிருக்கும்.[பின்னர், docx பதிவேற்றம்[upload] செய்யப்படவிருப்பதால், அது சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணக் கோப்புறையை[folder] தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்{Location... OS[C:]>users>flle folder>downloads...} தவறுதலாக வேறொன்றைத் தேர்வு செய்தல் கூடாது.


படிநிலை மூன்று:

கிண்டிலில் வெளியிடுவதற்கு ஏற்ற வகையில், docx ஐ மாற்றி அமைத்திடல் வேண்டும். அதற்கும் அமேசான் கிண்டிலே உதவுகிறது. 

அந்தச் சாதனம்.....

'Kindle Create' ஆகும். அதைப் பதிவிறக்கம் செய்து நிறுவி[install செய்தல்], தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
kindle create free download என்று தேடுபொறியில் பதிவு செய்வதன் மூலம் எளிதாக நிறுவலாம்[Kindle Create | Amazon Kindle Direct Publishing
https://kdp.amazon.com/en_US/.../GHU4YEWXQGNLU94T
Use Kindle Create (PC or Mac) to transform your completed manuscript into a ... Download (MacOS 10.9 or later) ... Reflowable eBooks allow the reader to resize text and are available on all Kindle devices and free Kindle reading applications.
‎Kindle Kids' Book Creator · ‎Building Your Text-Heavy ...]


படிநிலை நான்கு:

மின் நூல் ஆசிரியர்/வெளியீட்டாளர் பற்றிய[வங்கிக் கணக்கு, பெயர்{புனை பெயர் அல்ல} முதலானவை] அனைத்து விவரங்களையும் அதற்கான படிவத்தில் பதிவு செய்தல் வேண்டும்[பணப் பரிமாற்றம் செய்வதற்காக]. பிழை ஏதும் நேர்தல் கூடாது.

தொடரும்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------அன்புகொண்டு, பிழை காணின் தவறாமல் குறிப்பிடுங்கள்.

புதன், 30 ஜனவரி, 2019

அர்ச்சகரைக் காப்பாற்றத் தவறிய ஆஞ்சநேயர்!!!

'நாமக்கல் கோட்டைச் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்['அர்ச்சகர்' என்று தினத்தந்தியும் தினகரனும் குறிப்பிட்டுள்ளன]. நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு மாலை அணிவிக்கும்போது  8 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். சேலத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று செய்தி வெளியிட்டுள்ளது ''தமிழ் இந்து'[29.01.2019] நாளிதழ்.

தினத்தந்தியும் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவே குறிப்பிட்டுள்ளது. தினகரன் நாளிதழ் அவர் 'இறந்துவிட்டார்' என்னும் சோகச் செய்தியைத் தந்துள்ளது.

வெங்கடேசன் குடும்பத்தார்க்கு நம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
மேற்கண்ட செய்தியை உங்களுடன் பகிர்வதற்கு அல்ல இந்தப் பதிவு. வழக்கம்போல, சாமிகள் குறித்த நம் ஐயப்பாட்டை முன்வைப்பதுதான்.

சொந்த வேலைகளை ஒத்திவைத்துவிட்டு, ஆஞ்சநேயருக்குப் பணிவிடை செய்த ஒரு நல்ல மனிதர் இத்தகையதொரு அவல நிலைக்கு ஆளாகலாமா?

தன்னுடைய உண்மையான பக்தன் விபத்துக்கு உள்ளாகவிருப்பது ஆஞ்சநேய சாமிக்குத் தெரியாதா? அவர் ஏன் தன் பக்தனைக் காப்பாற்ற முன்வரவில்லை? 

தனக்கான சேவையில் ஈடுபடுகிற பக்தனையே கண்டுகொள்ளாத ஆஞ்சநேயர் அவ்வப்போது வந்துபோகிற பக்தர்களுக்கு உதவுவார் என்பது என்ன நிச்சயம்?

உடனே, பழம்பிறவி, மறுபிறவி, விதி, அவர் செய்த பாவம், புண்ணியம்,  என்று வெங்கடேசன் அவர்களின் மரணத்திற்கு ஏதேனும் ஒரு காரணம் கற்பிப்பார்கள். இது வழக்கமாக, கடவுள்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம்தான்.

மிகப் பல ஆண்டுகளாக எனக்குள்ளதொரு தீராத ஐயப்பாடு..... 

எந்தவொரு நம்பிக்கையில் லட்சோபலட்சம் பக்தர்கள் இந்த ஆஞ்சநேயரைக் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுகிறார்கள்?!
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மணம் என் பதிவுகளுக்கு நிரந்தரத் தடை விதித்துள்ளதால், இப்பதிவை நான்  தமிழ்மணத்தில் இணைக்கவில்லை.

இப்பதிவு indiblogger  முகப்பில் இடம் பெற்றுள்ளது.

திங்கள், 28 ஜனவரி, 2019

நான் காதல் போதையில் 'கிறுக்கிய' 'கிளு கிளு' கவிதைகள்!!!

நான் காதல் பைத்தியமாய் இருந்தபோது ‘கிறுக்கிய’ காதல் கவிதைகளில் சில கீழே.... ‘கால்கட்டு’க்குப் பிறகு காதல் கசந்தது; எனினும், இன்றுவரை கவிதை  இனிக்கிறது! இது என்ன விந்தை!!

அவள் கொடுத்த அது!

திருமணப் பத்திரிகையோடு வந்தாய்.
திடுக்கிட்டேன்.
“கல்யாணம் அக்காவுக்கு” என்று நீ
சிரித்தபோது
ஆறுதலடைந்தேன்.
எல்லோருக்கும் அதைக் கொடுத்துவிட்டு
எனக்கும் கொடுத்தாய்...
துயரத்தில் சரிந்தேன்.
நீ எனக்குக் கொடுத்தது.....
 அன்றொரு நாள் நான் உனக்குக் கொடுத்த
காதல் கடிதம்!

நீயுமா சிரிக்கிறாய்!?
தேர்வில்
நான் தோல்வியடைந்த போதும்
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினேன்.
ஏளனமாய்ச் சிரித்தார்கள்;
நீயும் சேர்ந்து சிரித்தாய்.
நான் இனிப்பு வழங்கியது
வகுப்பில் முதல் மாணவியாய் நீ
தேர்ச்சி பெற்றதற்காக.
இதை உனக்குப்
புரிய வைப்பது எப்படி?
புரியாமல் பரிதவிக்கிறேன் பெண்ணே.

மழையோ மழை!
மழையில் நீ நனைந்தபோது
குடை கொடுத்தேன்.
வாங்க மறுத்தாய்.
‘என்னவள் மழையில்... நான் குடையிலா?’...
குடையிருந்தும் நனைந்தேன்.
நீயோ கண்டுகொள்ளவில்லை.
என் கண்களில் கண்ணீர் மழை!

ஆஹா...கொண்டாட்டம்!
எனக்கு வயது இருபத்தெட்டு.
இரண்டு வருடமாய்த்தான் பிறந்தநாள்
கொண்டாடுகிறேன்.
காரணம்.....
உன் மீது கொண்ட காதல்.
புரியவில்லையா?
நான் கொண்டாடுவது.....
உன் பிறந்த நாளை!

சொர்க்க ரேகை!
பல நாட்களாய் நான் குளிக்கவில்லை.
அப்பா திட்டினார்;
அம்மா கெஞ்சினாள்.
நான் “லவ் யூ” சொன்னபோது
என் கன்னத்தில் பதிந்த உன் விரல் ரேகைகள்
அழிந்துவிடும் என்று
என்னவளே.....
அவர்களிடம் சொல்ல முடியுமா?!
----------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்மணமே, ஏன் இந்தப் பாராமுகம்?!

கீழ்க்காணும் கதையைப் படியுங்கள். மிக மிக மிகப் பலமுறை முயன்றும், தமிழ்மணம் இதை இணைத்துக்கொள்ள மறுக்கிறது[இது என்னளவில் அவ்வப்போது நிகழ்கிறது].  தமிழ் வளர்க்கும் பணியை மிக மிக மிகச் சிறப்பாகச் செய்துவரும் தமிழ்மணம் இதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏன் இந்தப் பாராமுகம்?[அமேசான் கிண்டிலில் வெளியான என் மின் நூல்களின் பட்டியலைப் பதிவு செய்வது தவறோ?!]

வாழ்க தமிழ்மணம்! 


கதை.....

''மிதுன், நாளை பெண் பார்க்கப் போறோம். இவளுகள்ல ஒருத்தியை செலக்ட் பண்ணு'' என்று சொன்ன மகாலட்சுமி, தன் வசமிருந்த புகைப்படக் கற்றையை மிதுனிடம் நீட்டினாள்.

அதைப் பெற்றுக்கொள்ள மறுத்த மிதுன், ''தமிழரசியை உயிருக்குயிராய் நேசிச்சிக் காதல் கல்யாணம் பண்ணினேன். அவ உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணமா? இனியும் இந்தப் பேச்சை எடுத்தீங்கன்னா நான் பொல்லாதவனா மாறிடுவேன்'' என்று சூடான வார்த்தைகளோடு கனல் கக்கும் பார்வையையும் தன்னைப் பெற்றவளின் மீது வீசினான்.

''ஆறு மாசம் முந்தி நீங்க ரெண்டு பேரும் போன கார் விபத்துக்குள்ளானதில் உன் பெண்டாட்டிக்கு அடி வயித்தில் பலமான அடி. இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால.....''

குறுக்கிட்டான் மிதுன். ''அதனால இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்ல. அனாதை ஆசிரமத்தில் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்.''

''யாரோ பெத்துப்போட்டதை என் பேரப் புள்ளையா என்னால ஏத்துக்க முடியாது.''

''அது உன் விருப்பம். நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தமிழரசியே என்னை வற்புறுத்தியிருக்கா. நீயும் அதைத்தான் சொல்லுறே. இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்துத்தான், தமிழரசிக்குக் கருப்பை சிதைஞ்சிடிச்சுன்னு டாக்டர் சொன்னப்பவே நான் கருத்தடை அறுவை பண்ணிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தான் மிதுன்.

மகாலட்சுமியின் கையிலிருந்த புகைப்படங்கள் நழுவித் தரையில் விழுந்து சிதறின.
------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாதிரிக் கதை ஏதும் வந்ததில்லை என்பது என் நம்பிக்கை. அது தவறுன்னா, தவறாம என்னை மன்னிச்சுடுங்க!



ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஒரு நல்ல மனைவியும் மிக நல்ல கணவனும்![புதியது]

'புருசன் பெண்டாட்டினா இப்படியல்லவா இருக்கணும்' என்று வியந்து சிலிர்க்க வைக்கும் சின்னஞ்சிறு கதை. வாசித்து மகிழுங்கள்.
தத்து க்கான பட முடிவு
கதை.....

''மிதுன், நாளை பெண் பார்க்கப் போறோம். இவளுகள்ல ஒருத்தியை செலக்ட் பண்ணு'' என்று சொன்ன மகாலட்சுமி, தன் வசமிருந்த புகைப்படக் கற்றையை மிதுனிடம் நீட்டினாள்.

அதைப் பெற்றுக்கொள்ள மறுத்த மிதுன், ''தமிழரசியை உயிருக்குயிராய் நேசிச்சிக் காதல் கல்யாணம் பண்ணினேன். அவ உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணமா? இனியும் இந்தப் பேச்சை எடுத்தீங்கன்னா நான் பொல்லாதவனா மாறிடுவேன்'' என்று சூடான வார்த்தைகளோடு கனல் கக்கும் பார்வையையும் தன்னைப் பெற்றவளின் மீது வீசினான்.

''ஆறு மாசம் முந்தி நீங்க ரெண்டு பேரும் போன கார் விபத்துக்குள்ளானதில் உன் பெண்டாட்டிக்கு அடி வயித்தில் பலமான அடி. இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால.....''

குறுக்கிட்டான் மிதுன். ''அதனால இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்ல. அனாதை ஆசிரமத்தில் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்.''

''யாரோ பெத்துப்போட்டதை என் பேரப் புள்ளையா என்னால ஏத்துக்க முடியாது.''

''அது உன் விருப்பம். நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தமிழரசியே என்னை வற்புறுத்தியிருக்கா. நீயும் அதைத்தான் சொல்லுறே. இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்துத்தான், தமிழரசிக்குக் கருப்பை சிதைஞ்சிடிச்சுன்னு டாக்டர் சொன்னப்பவே நான் கருத்தடை அறுவை பண்ணிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தான் மிதுன்.

மகாலட்சுமியின் கையிலிருந்த புகைப்படங்கள் நழுவித் தரையில் விழுந்து சிதறின.
------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாதிரிக் கதை ஏதும் வந்ததில்லை என்பது என் நம்பிக்கை. அது தவறுன்னா, தவறாம என்னை மன்னிச்சுடுங்க!
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


வெள்ளி, 25 ஜனவரி, 2019

'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்!

''தண்டியலங்காரம்' என்னும் பழந்தமிழ் இலக்கண நூலைப் பயில அவர் ஆசைப்பட்டார். ஆனால், முறையாக அந்நூலைக் கற்பிப்பார் எவரையும் கண்டறிய அவரால் இயலவில்லை.

தண்டியலங்காரத்தில் தேர்ந்த ஒருவரைப் பற்றி ஒரு நண்பர் மூலமாக அறிந்தார். அவரோ ஊர் ஊராக அலைந்து திரியும் ஒரு பரதேசி என்பதையும், தீவிரக் 'கஞ்சா' பிரியர் என்பதையும் அறிந்து வருந்தினார்.

ஆயினும், மனம் தளராமல் எவ்வாறேனும் அவரிடமே தண்டியலங்காரம் கற்பது என்றும் முடிவெடுத்தார். விசாரித்ததில், அந்தப் பரதேசி, தாமாக விரும்பினாலன்றி எவருக்கும் தமிழ் கற்பிக்க மாட்டார் என்பது தெரிந்தது.

ஆழ்ந்து யோசித்ததில் ஒரு வழி தென்பட்டது.

பரதேசியைச் சந்தித்தார்; பழகினார்; அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் சென்றார்.

பரதேசி கஞ்சா அடிக்க விரும்பியபோதெல்லாம் தம்முடைய செலவில் அதை வாங்கிவந்து அவருக்குக் கொடுத்து மகிழ்வித்தார். அப்புறம்.....

அப்புறம் என்ன, தம் பிரிய நண்பராக ஆகிவிட்ட இவருக்குத் தண்டியலங்காரத்தை முழுமையாகக் கற்றுக்கொடுத்தார் பரதேசி. பரதேசி யாரோ. இந்தத் தமிழ்ப் பித்தர் யார்?

'மகா வித்துவான்' என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி:  ஆர்.சண்முகம் அவர்களின், 'சிந்தனையாளர்களின் சுவையான அனுபவங்கள்'; நந்தினி நூலகம், சென்னை, 600 088.
------------------------------------------------------------------------------------------------------------------