'சத்குரு' என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட ஜக்கி வாசுதேவின் அதிர்ச்சிதரும் அதிரடி வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள விழைவோர், 'சவுக்கு' இணைய இதழ் வெளியிட்ட இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.
வழக்கமான, 'சுருக்குதல்', 'பிழை திருத்துதல்' எல்லாம் தவிர்த்து, கட்டுரையை உள்ளது உள்ளபடியே வெளியிட்டுள்ளேன்.
'கோடியில் புரளும் கேடி['சவுக்கு' கொடுத்த தலைப்பு]
BY SAVUKKU · 17/02/2015
சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம்
“நாம சொல்லுற ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”.
இது தான் “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். ?
இவரின் அத்தனை வார்த்தைகளிலும் இருக்கும் ஒரே உண்மை “யோகா”. இந்த யோகா என்ற ஒற்றை வார்தையை வைத்துத்தான், இன்று ஜக்கி பல ஆயிரக்கணக்கான கோடிகளை அபகரித்துள்ளார்.
எண்பதுகளில், சத்குரு என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஜக்கி, மைசூர் அருகில் உள்ள கொம்மட்டகிரி என்ற இடத்தில் அமைந்துள்ள ரிஷி சம்ஸ்க்ருதி வித்யா கேந்திரா என்ற யோகா பயிற்சி மையத்தில் ரிஷி பிரபாகர் என்ற குருவிடம்தான் யோகா பயிலுகிறார். பின்னாளில் அவரது குரு ரிஷி பிரபாகர், கோவைப் பகுதியில் ஆசிரமம் அமைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டவர்தான் ஜக்கி. ஆனால் எந்தப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டாரோ, அந்தப் பணியை மறந்து, தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியவர்தான் ஜக்கி. சில நாட்களில் தன்னைத்தானே சத்குரு என்றும் அறிவித்துக் கொண்டார். சரி. சத்குரு என்றால் என்ன என்று விசாரித்தால், ஒரு படிக்காத குருநாதன் என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் ஜக்கி. சத்குரு என்றால் படிக்காத குருஜி என்பதற்கு எந்த சொற்களஞ்சியங்களில் தேடினாலும் விடையில்லை.
யோகா கற்றுக்கொள்ள வரும் அனைவரையும் அடிமைப்படுத்தி தனக்கு அவர்கள் தங்கள் சொத்து சுகங்களை அப்படியே துறந்து, தன்னுடைய நிரந்தர அடிமையாகும் வண்ணம் பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறார்.
1988ம் ஆண்டு கோவைக்கு வந்த ஜக்கி வாசுதேவுக்கு, இது போன்றதொரு பெரிய ஆசிரமம் அமைத்து, வசூல் செய்யும் திட்டமெல்லாம் கிடையாது. இந்த ஆசிரிம பிசினெஸ் இப்படி பணத்தை அள்ளி அள்ளிக் கொட்டும் என்பதை அவர் நினைத்தே பார்த்திருக்கவில்லை. பாரா க்ளைடிங் (Para Gliding) எனப்படும் விளையாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதே இவரது திட்டம். இவரது ஜாவா பைக்கில் அமர்ந்துகொண்டு, இந்த பயிற்சி மையத்துக்கு மலை உச்சிதான் பொருத்தமாக இருக்கும் என்பதா, கோவையில் உள்ள மருதமலை, கணுவாய் அனுவாவி சுப்ரமணியர் கோவில் மலை, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற இடங்களில் பயிற்சி மையத்துக்கான இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது இவர் சிறிய அளவில் தொடங்கியிருந்த யோகா வகுப்புகள், படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது. இதன் பிரபலத்தை நன்றாக உணர்ந்த ஜக்கி யோகா பயிற்சியை வணிகமயமாக்கினால் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் என்பதை உணர்ந்தார். 1989ம் ஆண்டு முதல், ஜக்கியின் யோகா வகுப்புகள் பிரபலமாகத் தொடங்கின.
செல்வந்தர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளில், மன உளைச்சலில் இருந்த தொழில் அதிபர்கள் ஜக்கியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். என்னுடைய சரிபாதி என்று ஜக்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் ஜக்கியின் கையாலேயே உயிரை இழந்த பாரதியின் முன்னாள் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிக்க கம்மவார் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகம், ஜக்கியை ஜாவா மோட்டார் சைக்கிளில் இருந்து மாருதி காருக்கு உயர்த்தியது.
யோகா வகுப்புக்கு வந்தவர்களில் பலர், ஜக்கியின் அடிமையாக மாறியதையும், பணத்தை அள்ளி அள்ளி தந்ததையும் கண்ட ஜக்கி, இதை பல்வேறு இடங்களில் செய்து கொண்டிருப்பதை விட, நிரந்தரமாக ஒரு இடத்தில் ஆசிரமம் அமைத்து செய்தால் உரிய பயனை அளிக்கும் என்று உணர்ந்தார். பயிற்சிக்கு வரும் பணக்கார அமைகளிடம்,
“இந்த அற்புதமான யோகாவை நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நமக்கென ஒரு சொந்த இடம் இருந்தால்தான், நாம் நெடுநாள் இந்த யோக கலையை வாழவைக்க முடியும்”
என்று அடித்த உருக்கமான சொற்பொழிவைக் கேட்டு, பணக்கார ஜக்கி அடிமைகள், நன்கொடையை கொட்டித் தீர்த்தன.
ஜக்கியிடம் உள்ள மிக மிக முக்கியமான திறன் அவரது வசீகரிக்கும் பேச்சுத் திறன். உண்மையில் கடவுள் நேராக வந்து, நம்மிடம் பேசினால் எப்படி கருணையோடு பேசுவார் என்று நாம் கற்பனை செய்து வைதிருக்கிறோமா… அதே போல பேசும் கைதேர்ந்த கேடிதான் ஜக்கி. முதலில் மக்களின் இறுக்க உணர்வை தளர்த்த ஒரு நகைச்சுவையை கூறுவார். இது போன்ற நகைச்சுவை ஜோக்குகளை இவருக்கு எடுத்துத் தர ஒரு தனி டீமே பணியாற்றுகிறது. ஜோக்கை கேட்டு கெக்கே கெக்கே என்று சிரிக்கும் மக்களிடம் பெற்றோர், உறவு, நாடு மக்கள், ஏழ்மை என்று உணர்ச்சி மயமாக பேசுவார். குருவின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்திருக்கும் மக்களை எழுச்சியூட்டுவார். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இதயம் அதிரும் வகையில் ஒலியோடு இறுதியாக நடனமாட வைப்பார். இப்படி உங்கள் மன நிலை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நெகிழ்ந்திருக்கும் நிலையில், நன்கொடை விவகாரத்தை எழுப்புவார். இப்போதெல்லாம், ஜக்கி நேரடியாக எந்த நன்கொடையும் கேட்பதில்லை. அவர் வளர்த்து வைத்துள்ள ஆயிரக்கணக்கான அடிமைகள் அந்தப் பணியை கச்சிதமாக செய்கின்றனர்.
ஆசிரமம் அமைப்பது என்று முடிவானதும், கோவையைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில்உள்ள ஆனைக்கட்டி, பொள்ளாச்சி, வெள்ளியங்கிரி ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் வெள்ளியங்கிரி மலை. ஆனைக்கட்டிக்கு செல்ல மலைப்பாதை வழியாக வர வேண்டும் என்பதால், விலை உயர்ந்த கார்களில் வரும் பெரும் செல்வந்தர்கள் வருவது கடினம் என்பதால் ஆனைக்கட்டி நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நிலத்தின் விலை அதிகம். ஆகையால் அதுவும் நிராகரிக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், வெள்ளியங்கிரியை தேர்ந்தெடுத்ததற்கு இந்த ஆள் விட்டான் பாருங்கள் ஒரு கதை. …..
சிறு வயது முதலே இவரது கண்களில் திரை போல ஒரு மலை தெரியுமாம். இது போலத்தான் மற்றவர்களுக்கும் தெரியும் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தாராம். தன்னோடு இருந்த மற்ற சிறுவர்ளிடம் கண்களில் தெரியும் இந்த மலை எங்கே இருக்கிறது என்று கேட்டாராம். மற்ற சிறுவர்கள் கேலி பேசவும், இவர் அவமானமாக உணர்ந்து அது குறித்து பேசுவதை தவிர்த்து விட்டாராம். இவர் தந்தை ஒரு கண் மருத்துவர். எல்லா குழந்தைகளையும் போல “அப்பா கண்ணு சரியா தெரியலை” என்று கூறியிருந்தால் அப்போதே விஷயம் முடிந்திருக்கும். ஆனால் ஜக்கி அப்படி செய்யவில்லை.
இந்த கண்ணில் தெரிந்த மலையோடே வளர்ந்தார் ஜக்கி. தனது முதல் வயதில் நடந்த சம்பவங்களை கூட துல்லியமாக நினைவில் வைத்திருந்ததாகவும், சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு குழந்தையாக தான் வளர்ந்ததாக அவரே கூறிக்கொள்வார். ஜக்கியின் சுயசரிதையில் தனது ஆசிரியையின் உள்ளாடையின் நிறத்தை தனது ஞானதிருஷ்டியால் கூறி அவரை வியப்படைய வைத்தாக பெருமையாக கூறிக்கொள்கிறார் ஜக்கி. இவரை ஜட்டி வாசுதேவ் என்று அழைப்பது பொருத்தம்தானே ?
சரி. விஷயத்துக்கு வருவோம். இப்போது ஆசிரமம் அமைக்க இடம் வேண்டும். காற்றில் கயிறு திரிக்கும் ஜக்கிக்கா தெரியாது ?
சிலர் வெறும் கையில் முழம் போடுவார்கள். ஆனால் கை கூட இல்லாமல் காற்றிலேயே முழம் போடுபவர் யாரரென்றால் அது ஜக்கிதான். கோவை லட்சுமி மில்ஸ் அதிபரான காலம் சென்ற கரிவரதனுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்தது. பாரதியின் கணவர் சுதர்சன் மூலமாக கரிவரதனின் அறிமுகம் கிடைக்க, மடியில் உள்ள பிள்ளை நழுவி விழும் வகையில் கரிவரதனிடம் பேசினார் ஜக்கி. ஜக்கியின் பேச்சில் மயங்கிய கரிவரதன் தனது 14 ஏக்கர் நிலங்களையும் இலவசமாகவே ஜக்கிக்கு கொடுத்தார். அன்று முதல் இன்று வரை, ஜக்கி வாசுதேவ் ஈஷா மையத்தில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் முதல் பளிங்கு கற்கள் வரை, அத்தனை வேலைகளையும் இது போன்ற உதவிகள் மூலமாகவே முடித்துள்ளார்.
பக்த சிகாமணிகளுக்கு கேட்க வேண்டுமா ? நிதி உதவியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். சரி. இத்தனை விபரங்களும் புட்டு புட்டு வைக்கிறீர்களே… உங்களுக்கு எப்படி இவை அனைத்தும் தெரியும் என்று கேட்கலாம். இந்த அத்தனை விபரங்களும், ஜக்கியின் பல்வேறு ஒலி நாடாக்கள், ஒலி, ஒளி நாடாக்கள் மற்றும் அருளுரைகளில் இடம் பெற்றுள்ளன. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப, ஜக்கியின் தோற்றம் முதல் பொய் புரட்டு, பித்தலாட்டம் இவையே ஜக்கி. இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாகி, வனத்தை அழித்து, ஒரு அரசாங்கத்தையே நடத்தி வரும் ஜக்கி வாசுதேவின் மறுபெயரே பொய் பித்தலாட்டம் ஆகியவையே. ஜக்கியின் வாழ்க்கை சம்பவங்களை முழுமையாக தொகுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த உண்மைகள் அனைவருக்குமே தெரியும். ஆனால் பலர் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க மெனக்கெடுவதில்லை.
சவுக்கு முதன் முதலாக ஜக்கியின் முகத்திரையை கிழித்த பிறகே, சாதாரண மக்களுக்கு லேசாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அடிமையாக உள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தின் உதவியோடு, தனது பித்தலாட்டத்தை தங்கு தடையின்றி அரங்கேற்றி வருகிறார் ஜக்கி.
ஈஷா வகுப்புகளில் ஜக்கியின் சிடி ஒன்று காட்டப்படும். அந்த சிடியில் ஒருவருக்கு வரும் சிரமங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போதிப்பார் ஜக்கி. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். அதாவது அவர் யோகா வகுப்புகள் எடுப்பதற்காக ஜாவா பைக்கில் செல்கையில் விபத்து ஏற்பட்டு கணுக்காலில் காயம் ஏற்பட்டு விட்டதாம். அருகில் இருந்த கிராம மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்குமாறு ஜக்கி கேட்டுள்ளார். தன்னிடம் மரத்துப் போகச் செய்யும் ஊசி இல்லை. ஆகையால் நகர மருத்துவமனைக்கு செல்லுமாறு அந்த மருத்துவர் கூறினாராம். ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதால், ஊசி இல்லாமலேயே தையல் போடுங்கள் என்று கூறினாராம். மருத்துவர் ஒன்பது தையல் போடும்போது, மருத்துவரிடம் சகஜமாக பேசிக்கொண்டே இருந்தாராம். ஆச்சர்யப்பட்ட மருத்துவர், எப்படி உங்களால் இதை செய்ய முடிகிறது என்று கேட்டாராம். உடனே ஜக்கி “வலி நிஜம். ஆனால் பாதிப்பு நீங்கள் உண்டாக்கியது” என்று கூறினாராம் இதை கேட்கும் ஜக்கி அடிமைகள் ஜக்கிக்கு எப்படி இத்தனை வலி தாங்கும் சக்தி, அவர் பிறக்கும்போதே சத்குருவாக பிறந்தார் என்று வாயைப் பிளப்பார்கள். முதல் விஷயம், ஜக்கிக்கு நடந்தது இருதய அறுவை சிகிச்சை கிடையாது. சாதாரண காயத்துக்கு ஏற்படும் தையல். மரத்துப் போகும் ஊசி இல்லாமல்தான் இப்போது பல காயங்களுக்கு தையல் போடுகிறார்கள். சரி. ஜக்கி சொன்னது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஒன்பது தையல் போட்ட இடத்தில் தழும்பு இருக்க வேண்டுமா இல்லையா ? ஜக்கியை தழும்பை காட்டச் சொல்லுங்கள். காட்ட மாட்டார். ஏன் தெரியுமா ? அப்படி ஒரு சம்பவம் ஜக்கிக்கு நடக்கவேயில்லை. ஜக்கியோடு இருந்த மற்றொருவருக்கு நடந்தது. இதை தனக்கு நடந்ததாக சொல்லி ஜக்கி அல்வாவை கிண்டி பக்தர்களுக்குத் தருவார்.
இப்படி பொய்யிலும் பித்தலாட்டத்திலும் நடந்து வரும் ஈஷா யோக மையத்தின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா ? ஈஷா மையத்தின் பெயரில் 200 ஏக்கர் நிலங்களும், பினாமி பெயரில் 270 ஏக்கர் நிலங்களும் உள்ளன. ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு ஏக்கர் நிலத்தைக் கூட இவர்களுக்குத் தெரியாமல் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஈஷா பெயரில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அனைத்திலும் தொண்டாமுத்தூர் ராஜேந்திரன் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருப்பார். இவர்தான், பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் நிலங்களின் விபரத்தை ஈஷாவுக்கு தெரிவித்து, அந்த பதிவை தடுத்து நிறுத்தி, ஈஷா மையத்தினருக்கு விபரத்தை சொல்லுவார். ஈஷா மையத்தினர் உடனடியாக தலையிட்டு, அந்த விற்பனையை தடுத்து நிறுத்தி நிலத்தை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
சென்ற ஆண்டு மட்டும் ஈஷாவின் மொத்த வருமானம் 243 கோடிகள். ஆண்டு வருமானமாக ஜக்கி நியமித்த இலக்கு 400 கோடிகள். தன்னுடைய உள் வட்டாரத்தில் உள்ளவர்களை, இலக்கை அடையத் தவறியதற்காக ஜக்கி கடுமையாக கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக யோகா வகுப்பு நடத்தினால், வசூல் தேவையான அளவில் கிடைக்காது என்பதை ஜக்கி மிகத் தாமதமாகவே உணர்ந்தார். தொடக்க காலத்தில், அதாவது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, யோகம், ஞானம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இந்த அவசர உலகத்தில் இவர்களுக்கு யோகம் ஞானமெல்லாம் அடைவதற்கு பொறுமை இல்லை, குறுகிய காலத்தில் ஞானத்தை டப்பாவில் அடைத்துத் தருகிறேன் என்று தந்திரத்தை மாற்றத் தொடங்கினார்.
தொண்ணூறுகளின் இறுதியில் பக்தி, ஞானம், சக்தி, க்ரியா ஆகியவற்றை கலந்து ஒரு காக்டெயிலாக தருகிறேன் (I AM GIVING YOU THE RIGHT COCKTAIL FOR THIS GENERATION) என்று முதன் முதலாக இந்த தந்திரத்தை “ஞானியின் சந்நிதியில்” என்ற புத்தகத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தினார். இவருக்கு இந்த காலக்கட்டத்தில் பெரும் உதவி புரிந்தது ஆனந்த விகடன். ஆனந்த விகடன் புத்தகத்தில் இவர் எழுதிய “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற தொடர், இவரை மிக மிக பிரபலமாக்கியது. ஒரு வகையில் ஜக்கி வாசுதேவ் போன்ற மிகப்பெரிய சமூக விரோதியை பூதாகரமாக வளர்த்து விட்டதற்கு விகடன் நிர்வாகம் ஒரு வகையில் பொறுப்பாகும். பொறுப்புணர்ச்சி இல்லாமல், வியாபார நோக்கத்துக்காக விகடன், குமுதம் போன்ற ஊடகங்கள், ஜக்கி வாசுதேவ் மற்றும் நித்யானந்தா போன்றவர்களை வளர்த்து விட்டதன் காரணமாகவே, இன்று மிக மிக பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். பகுத்தறிவுவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்ளும், தொல் திருமாவளவன் போன்றவர்களும், ஜக்கியின் வியாபாரத்திற்கு உதவியவர்களே என்பதுதான் வேதனை.
வெறுமனே ஆன்மீகத்தை போதித்துக் கொண்டிருந்தால் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், வசூலும் மேம்படாது என்பதை ஜக்கி உணர்ந்தார். அந்த அடிப்படையில் ஜக்கி கையாண்ட தந்திரம்தான் “பசுமைக் கரங்கள்”. 2007ம் ஆண்டு முதன் முதலாக இந்த பசுமைக் கரங்கள் திட்டத்தை தொடங்கினார். இன்னும் பத்தே வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். உடனடியாக மரங்களை நட வேண்டும். வெள்ளியங்கிரி மலை நான் போன பிறகுதான் பசுமையானது என்று அள்ளி அள்ளி விடுவார். எனது பசுமை கரங்கள் திட்டத்துக்காக நிதி உதவியை அள்ளித் தாருங்கள் என்று கேட்பார். கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்தன. இந்தத் திட்டத்தை பிரபலமாக்கும் நோக்கோடு, மிக மிக தந்திரமாக, கருணாநிதியை வைத்து மரம் நட வைத்து, அதன் மூலமாக பல சலுகைகளை பெற்றதை, சவுக்கு ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஓரளவு நிதியை அள்ளித்தந்ததும், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் ஜக்கி. “ஞானியின் சன்னதியில்” என்ற அவரது நூல் அளித்த வெற்றியின் அடிப்படையில், “ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற தலைப்பில் லிங்க பைரவி குறித்து ஒரு கட்டுரை எழுதினார். தியானலிங்கம் கோவிலில் பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அந்த சக்தி வீணடையக்கூடாது. வருங்கால சந்ததியினருக்கு அதை விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறி, அந்த தியானலிங்கக் கோவிலை பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று அடுத்த திட்டத்தை செயல்படுத்தினார். ?
ஞானத்தை அடைவதற்கான ஒரே வழி பக்தி மார்க்கமே என்று பல்வேறு விளக்கத்தை கூறினார். பரவசமளித்து, தையை சுருக்கும் பக்தி என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்தார். இணைப்பு. லிங்க பைரவியை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் உங்களுக்கும் உங்கள் வீட்டுக்கும் அருள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்றார். அதை நம்பிய பக்தி அடிமைகள், பணத்தை அள்ளி அள்ளி கொட்டினர். கடவுள் உருவாவதைக் காண வாருங்கள் என்று ஒரு விழாவை அறிவித்தார். அந்த விழாவுக்கு கட்டணமாக, 50 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நிர்ணயம் செய்தார். 50 ஆயிரம் கொடுத்தால் ஜக்கியின் அருகிலேயே அமர்ந்து கொள்ளலாம். இந்த விழா மூன்று நாள் நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேர் 50 ஆயிரம் கட்டணம் செலுத்தினர். 2 ஆயிரம் பேர் 25 ஆயிரம் கட்டணம் செலுத்தினர். 10 ஆயிரம் செலுத்தியவர்கள் நாலாயிரம் பேர். மூவாயிரம் பேர் 7000 செலுத்தி இவ்விழாவில் பங்கு கொண்டனர். இதைத்தவிர்த்து, வெளிநாட்டினரின் சொத்துக்களை மொத்தமாக கபளீகரம் செய்ய, கோவில் உருவாகும் பிரகாரத்தினுள்ளேயே அமர்ந்து, நேரடியாக காண்பதற்கு ஒரு நபருக்கு 10 லட்சம் என்று அறிவித்தார். மொத்தம் 42 பேர் இவ்வாறு கட்டணம் செலுத்தினர்.
இந்த இந்த விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், நக்கீரன் காமராஜ், சுதா ரகுநாதன், மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர்.
இந்த லிங்க பைரவி கோவிலை, கடவுளுடன் நேரடி தொடர்புள்ள கோவில் என்றே பிரச்சாரம் செய்தார் ஜக்கி. இந்த கோவில் கட்ட திட்டமிடப்பட்டபோதே, நன்கொடை வசூல் தொடங்கியது. மூன்று கோடியில் திட்டமிடப்பட்டு 4.5 கோடி செலவில் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலை பிரதிஷ்டை செய்கிறேன் பேர்விழி என்று நடத்தப்பட்ட அந்த விழாவின் வசூல் தொகை மட்டும் 20 கோடி. கோவிலுக்கு இவ்வளவு வசூல் என்றால், இதனுள் இருக்கும் லிங்க பைரவி சிலையின் பெயரால் தனி வசூல் நடத்தப்பட்டது. லிங்க பைரவியின் மூன்று கண்கள் வைரத்தில் செய்யப்பட வேண்டும் என்று, அதன் பெயரால் ஜக்கி வசூல் செய்த தொகை 80 லட்சம். லிங்க பைரவிக்கு ஒட்டியாணம் செய்ய வேண்டும் என்று அறிவித்து, அதற்கு நகையாக மட்டுமே நன்கொடை பெறப்படும் என்று கூறி, தங்கமாக வசூலை நடத்தினார். இந்த தங்க வசூலுக்கு எவ்விதமான ரசீதுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, எங்கே சென்றன என்பது யாருக்குமே தெரியாது.
இந்தக் கோவிலின் பெயரால் இத்தனை கோடி வசூல் நடந்தது. ஆனால் இக்கோவிலுக்கான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இலவசமாக கிடைத்தன என்பது உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.
இந்த கட்டுமானத்துக்கு விலை உயர்ந்த க்ரானைட் கற்களை முழுக்க முழுக்க இலவசமாக கொடுத்து உதவியது, காலஞ்சென்ற கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் ட்ரூ வேல்யு ஹோம்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ?
ராமஜெயத்துக்கும், ஜக்கி வாசுதேவுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு சுவையான கதை. ராமஜெயமும், அவர் குடும்ப உறுப்பினர்களும், ஜக்கியின் யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு, உடல்ரீதியாக சில பலன்களை அடைந்தனர். இதனால் ராமஜெயம் ஜக்கியோடு நெருக்கமடைந்தார். இந்த அடிப்படையில், தனது கோயில் கட்டுமானத்துக்கான பல பொருட்களை இலவசமாகவே பெற்றார் ஜக்கி
2011ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினார் ஜக்கி. தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில், She is very arrogant. She should not come back to power என்று கருத்து தெரிவிவித்துள்ளார். பயணிகளுக்கான வனத்துறையின் சுங்கக் கட்டணம் ரத்து, தனிப்பட்ட முறையில் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அடைந்ததன் காரணமாகவே இந்த விருப்பம்.
அதிமுக அரசு அமைந்ததும் உள்ளபடியே ஜக்கி நடுங்கித்தான் போனார். ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ நமது தொழிலுக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சினார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மூலமாக தூது அனுப்பினார். ஆனால் இவரது தூது எடுபடவில்லை. இந்த நேரத்தில்தான், நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய ராமஜெயம் தலைமறைவாக இருந்தார். அப்போது தனக்கு அடைக்கலம் தருமாறு ராமஜெயம் ஜக்கியிடம் கோரியபோது, ஜக்கியின் ஈஷா ஆசிரமத்தினுள் இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிய கட்டிடத்தினுள் தாங்க வைத்தார். ஆனால் தற்போது, மன்னார்குடி மாஃபியாவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தனது சட்டவிரோத கட்டிடங்களை ஒழுங்குமுறைப் படுத்தும் முயற்சியில் ஜக்கி ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் வேதனையான செய்தி.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கு எத்தனை கட்டணம் என்று ஈஷா ஆசிரமத்தில் தொலைபேசி செய்து கேட்கப்பட்டபோது அவர்கள் கூறியது. மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல்பிரிவு 1.25 லட்சம். அடுத்த பிரிவு 1 லட்சம். மூன்றாவது பிரிவு 50 ஆயிரம். 15 நாட்களுக்கு முன்னதாகவே இது குறித்து விசாரித்தபோது, 50 ஆயிரம் பிரிவு முடிந்து விட்டதாகவும் 1 லட்சம் மற்றும் 1.25 லட்சம் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தனர்.
இப்படி நடத்தப்படும் வசூல் அனைத்தும், நன்கொடை என்ற பெயரில் வரவு வைக்கப்பட்டு வருமானவரி விலக்கு பெறப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நன்கொடை சலுகையை ரத்து செய்ய, சவுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சவுக்கில் கட்டுரை வெளிவருவதற்கு முன்பாக, ஜக்கி வாசுதேவை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளே கிடையாது. ஜக்கி வாசுதேவிடமிருந்து விலகி, அவரைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ள முன்னாள் பக்தர்கள் கூட, அவரைப்பற்றி வெளிப்படையாக பேச அஞ்சி நடுங்கிய சூழல் இருந்தது. ஆனால், இன்று நம்மிடம் தொடர்பு கொண்டு, பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜக்கியின் சாம்ராஜ்யத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கிறோம்.
ஜக்கியின் பக்தர்களில் வெறும் 10 பேர், நம் கட்டுரைகளை படித்த பிறகு, விழிப்புணர்வு பெற்றார்கள் என்றாலே நாம் வெற்றியடைந்துள்ளோம் என்பதே பொருள்.
https://www.savukkuonline.com/9401/
======================================================================================
'சவுக்கு'க்கு நம் நன்றி.