எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 1 நவம்பர், 2024

இந்தியா ஒரே நாடு! ‘ஒரேஏஏஏ ஒரு’ தேர்தல் போதும் மோடிஜி!!

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ஐ விரைவில் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” -மோடி[ஊடகச் செய்தி.

“இப்படியும் ஒரு பிரதமரா!” என்று வியந்து ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பார்க்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு நம் பணிவான விண்ணப்பம்:

ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கம் இனி வேண்டாம். 'ஒரேஏஏஏ ஒரு தேர்தல்'[இதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடத்தக்கூடாது] மட்டும் நடத்துங்க மோடிஜி!! 

காரணங்கள்:

*உலக வரலாற்றில், கற்பனையான புராணக் கதைமாந்தர்க்கு உயிரூட்டிப் பக்தி வளர்த்து அதற்கு உரம் சேர்த்த பிரதமர் உங்களைப் போல் வேறு எவருமில்லை. 

*அத்தனை உலக நாடுகளுக்கும் உலா சென்றுவந்து, அவற்றுடனான ஒட்டுறவை மேம்படுத்திய உங்களை எத்தனைப் பாராட்டினாலும் அதற்கான தகுதி படைத்தவர் தாங்கள்.

*உலக நாடுகளின் தலைவர்களில், நாளும் வேளைக்கொரு ஆடை(விலைமதிப்பற்றவை) உடுத்து உலகச் சாதனை நிகழ்த்தியவர் தாங்கள் மட்டுமே.

*கோடானுகோடி செலவு செய்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளரக்கத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தாலும், பிற இந்திய மொழிகளையும்(குறிப்பாகத் தமிழ்) உயிருக்குயிராய் நேசிப்பது போல் 'பீலா' விடுவதில் உங்களுக்கு இணை நீங்களே. 

*உலக அளவில் 110 கோடிப்பேர்[ஐ.நா.அறிக்கை] வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க[இந்தியாவில் அதிகம்], உங்களின் ஆட்சியில் இந்தியா பிரமிக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது என்று கூச்சநாச்சமே இல்லாமல், பீத்திக்கொள்ளும் உங்களின் துணிச்சல் வியக்கத்தக்கது.

இப்படி, இன்னும் பல அசாத்தியத் திறமைகளின் இருப்பிடமான தாங்களே தங்களின் ஆயுட்காலம்வரை இந்தியாவை ஆண்டு இதற்கு மேலும் மேலும் பெருமை சேர்த்திடல் வேண்டும் என்பதால்.....

இந்தியாவில் ‘ஒரேஏஏஏ ஒரு’ தேர்தலை மட்டும் நடத்தி, பிற கட்சிகளின் தயவு இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றி[அதற்கான உத்திகளையும் உபாயங்களையும் அத்துபடியாய்த் தெரிந்துகொண்டிருப்பவர் நீங்கள்] அதன் பிறகு இங்குத் தேர்தலே நடைபெறாத நிலையைத் தாங்கள் உருவாக்கிட வேண்டும்[நடந்தாலும் தங்கள் கட்சியே வெற்றி பெறுதல் வேண்டும்]; தாங்களே ஆயுட்காலப் பிரதமராக இருந்து இந்தியாவை உலகின் நம்பர் 1 வளர்ந்த நாடாக மேம்படுத்த வேண்டும்.

வாழ்த்துகள் ஆயுட்காலப் பிரதமர் ஆகவிருக்கும் இந்தியப் பிரதமர் அவர்களே!

https://tamil.samayam.com/latest-news/india-news/pm-narendra-modi-says-we-are-now-working-on-one-nation-one-election-scheme/articleshow/114818583.cms