புதன், 8 ஜூலை, 2026

‘அந்த’ 41 பேர்களுக்கு அரசு வேலை வேண்டாம்; கட்சிப் பதவி தாருங்கள் ஜோசப்!

ரூரில் தவெக(TVK) தலைவரின் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வரும் 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில், தலா ஒருவருக்குத் தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கும் உத்தரவையும் அவர் வழங்க உள்ளார்[கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு ... - Dinamalar].

முதல்வரின் இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சில அரசியல் கட்சிகள் நீதிமன்றத்திலும் முறையிடவுள்ளன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், முதல்வர் ஜோசப் அவர்களுக்கு நாம் வழங்க விரும்பும் ஆலோசனை.....

“தங்களின் ‘தவெக’ கட்சியிலேயே இந்த 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்குங்கள்{தேவைக்கேற்ப மாவட்டங்களைப் பிரித்து[அரசியல் கட்சிகள் இப்படிச் செய்வது வழக்கத்தில் உள்ளது]க் கூடுதல் பதவிகளை உருவாக்கலாம்}. 

அடிதடி, கொள்ளை, கொலை வழக்குகளில் சிக்கி, புகலிடம் தேடி வருவோருக்கு, காவல்நிலையம் சென்று தங்களின் பவரைப் பயன்படுத்தி, அவர்களை விடுவிப்பது, இயலாவிட்டால் ஜாமீன் பெற்றுத்தருவது  போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் பணம் பண்ணலாம்.

அரசுப் புறம்போக்கு நிலங்களில் சில/பல நபர்களைக் கடைபோட வைத்து ‘மாமூல்’ வசூல் செய்யலாம்.

உதவி வேண்டி வருவோரை அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று அரசு வேலை பெறுவதற்கோ, அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவதற்கோ சிபாரிசு செய்து, வரும் வருமானத்தில் கணிசமான தொகையைக் கமிசனாகப் பெறலாம்.

இப்படியாக, அரசு ஊழியராக மாத ஊதியம் பெறுவதைக் காட்டிலும், பல மடங்கு சம்பாதிக்க இயலும் என்பதால், அந்த 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், நாம் குறிப்பிட்டவாறு கட்சிப் பதவிகள் வழங்குவது ஏற்புடையதாக அமையும் என்பது நம் நம்பிக்கை; பரிந்துரையும்கூட.