திங்கள், 7 செப்டம்பர், 2026

காலத்தை வென்ற ஒரு கவிதை! கருப்பொருள்: தெருநாய்!!

'கிளு கிளு' கன்னியரை வர்ணித்துக் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. தெரு நாய்களைப் பற்றி யாரேனும் கவிதை படைத்திருக்கிறார்களா?

காசாவயல் கண்ணன் எழுதிய, 'நடைபாதை நண்பர்கள்' என்னும் தலைப்பிலான ஒரு கவிதையை['காமதேனு’, 30 ஜூன் 2019] வாசித்து மனம் நெகிழ்ந்தேன்; கொஞ்சமே கொஞ்சம் புதுப்பித்து உங்களுக்காக இதைப் பதிவு செய்கிறேன்.

வீட்டு நாய்களைப் போல
இதுகளுக்கு
விருப்பப் பெயரெல்லாம் இருக்காது;
தெருநாய் என்ற பொதுப் பெயர்
மட்டும்தான். 

பல நாள் கழித்துப் பார்த்த
பால்ய நண்பனாக
வாஞ்சை காட்டும் ஒரு நாய்.

முன்னாள் காதலியைப் போல்
ஓரக்கண்ணால் பார்த்து
ஒதுங்கிப்போகும் மற்றொரு நாய்.

தாய் நாய் முலையில்
முட்டி முட்டிப்
பால் குடித்த ஞாபகத்தில்.....

என் கால் விரல்களை
விடாமல் சப்பும் குட்டிநாய்.

“என் பசி தணிப்பாய்தானே?” 

என்று 

பார்வையாலேயே கெஞ்சும் 

பாவப்பட்ட பிறவி.


நான்கு கவளம் எச்சில் சோற்றுக்கு

எத்தனை நேரமும் வாலாட்டும் 

நன்றியுள்ள ஜீவன்.


வீடுதோறும்
நாய் இருக்கிறதோ இல்லையோ
தெருநாய்கள் இல்லாத 
தெருக்களே இல்லை!