எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 13 மே, 2018

''அய்யா, குட்டிக் கதை சொல்லித் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டாம்!''

அய்யா அவர்களுக்கு, வணக்கம்.

சிந்திக்கத் தூண்டும் சின்னஞ்சிறு குட்டிக்கதைகளைத் தங்களின் சொற்பொழிவுகளில் அவ்வப்போது கேட்க முடிகிறது. மகிழ்ச்சி.

நேற்று நடைபெற்ற ஒரு விழாவிலும் குட்டிக் கதை சொல்லி எதிரணியினரைக் கலங்கடித்திருக்கிறீர்கள். அதை, இன்றைய 'தி இந்து'[13.05.2018]வில் வாசிக்க நேர்ந்தது.
முதல்முறை பார்வையை ஓட்டியபோது, ''கதை பரவாயில்லை'' என்று சொல்லத் தோன்றியது. மீண்டும் ஒருமுறை வாசித்து, மனதில் சேமித்து, ஆற அமர அசைபோட்டபோது கதையின் 'உள்ளடக்கம்' பிடிபடாமல் போக்குக்காட்டியது.

''ஒரு விவசாயி, ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் மொண்டுவந்து செடிகளுக்கு ஊற்றுகிறார். குடத்திலிருந்து தண்ணீர் வழிந்து வழியெல்லாம் சிந்துகிறது. பாதையோரமாகப் பயனற்றுக் கிடந்த ஓர் ஓட்டை அலுமினியக் குடம், இந்த நிறைகுடத்தைப் பார்த்து, 'கெக்கேபுக்கே'ன்னு சிரிச்சிட்டு, ''தண்ணியைச் சிந்தாம சிதறாம உனக்கு எடுத்துவரத் தெரியலையே''ன்னு கேலி செய்ததாம். ஓட்டைக் குடத்துக்குப் பதிலடி கொடுக்கும் வழி புரியாமல் வருத்தப்பட்ட தண்ணீர்க் குடம் விவசாயியிடம் நடந்ததைச் விவரித்ததாம்.

விவசாயி, உரத்த குரலில், ''நீ சிந்துற நீர்த்துளியெல்லாம் வழியிலுள்ள பூச்செடிகளுக்குப் பாயுது. அதுகள்ல மலர்கிற பூக்களையெல்லாம் கடைகளில் வித்து நிறையச் சம்பாதிக்கிறேன்''னு சொன்னாராம். கிண்டலடித்த அலுமினியக் குடம் வாயைப் பொத்திகொண்டு பேச்சுமூச்சில்லாம கிடந்ததாம்.'' -இதுதான் தமிழக முதல்வரான நீங்கள் சொன்ன குட்டிக் கதை.

இந்தக் கதையில்  குடங்கள் பேசுகின்றன. ஜடப்பொருள்களான குடங்கள் பேசுமா என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். ஏனென்றால், ஜடப்பொருள்களாகட்டும் வாயில்லா ஜீவன்களாகட்டும் அதுகளையெல்லாம் பேசவிடுவது ஒருவகைக் 'கதை சொல்லும் உத்தி' என்பது எனக்குத் தெரியும். 

இங்கே, உண்மையில் குடங்கள் பேசவில்லை. குடங்களைப் பேசவிட்டு நீங்கள் உங்களின் சொந்த அரசியலைப் பேசுகிறீர்கள்..

உங்கள் எதிர்[ரி]க்கட்சியான தி.மு.க.வைத்தான் பயனற்றுக் கிடக்கிற அலுமினியக் குடம்[ஓட்டை அலுமினியக் குடம்னு இன்னொரு நாளிதழில் வாசித்த ஞாபகம்] என்று உருவகம் பண்ணியிருக்கிறீர்கள். உபயோகமில்லாத என்பதற்கு மாறாக, சீந்துவாரற்றுக் கிடக்கும் என்று நீங்கள் வர்ணித்திருந்தாலும் பொருத்தமே. இதன் மூலம், தி.மு.க., மக்களால் சீந்தப்படாத கட்சி என்பதை வெகு சிறப்பாகப் புரியச் செய்திருக்கிறீர்கள்.

ஓட்டை அலுமினியக் குடம் தி.மு.க.வைக் குறிக்கிறதென்றால் தண்ணீர் நிறைந்த குடம் எதைக் குறிக்கிறது? நிச்சயம் உங்களையோ உங்கள் கட்சியையோ அல்ல. குடத்தில் நீர் எடுத்துச் சென்று தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிற விவசாயி நீங்கள் என்பதால்.

நீங்கள் விவசாயி. நீங்கள் பயன்படுத்துகிற குடம் உங்கள் ஆட்சியா, நீங்கள் வகுக்கும் திட்டங்களா?

ஆட்சி என்பதே இங்கு பொருந்தி வருகிறது. அதாவது.....

விவசாயி ஆன நீங்கள், உங்களின் ஆட்சி என்னும் குடத்தில், நீர் என்னும் நலத்திட்டங்களை எடுத்துச் சென்று மக்களிடம் சேர்க்கிறீர்கள்.

அய்யா, நீங்கள் சொல்ல வந்தது இதுதானே?

இப்போது சில சந்தேகங்கள்.....

வழிய வழிய குடத்தில் நீர் எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது நீர் சிந்துவதாவும் அலுமினியக் குடம் கிண்டலடிப்பதாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

நிறைகுடத்தில் நீர் சிந்துவது இயல்பு. அவ்வாறு சிந்துகிற நீர் உங்கள் நலத்திட்டங்களில் சிலவோ பலவோ[சில என்றே வைத்துக்கொள்வோம்] வீணாவதைத்தானே குறிக்கிறது?

சிந்துகிற நீர், மலர்ச்செடிகளுக்குப் பயன்படுகிறது. அதுபோல், வீணடிக்கப்படும் திட்டங்களால் பயன் விளைவதில்லையே? இங்கு உருவகமும் அது உணர்த்தும் பொருளும் முரண்படுகின்றனவே.

நீர் சிந்துவதைப் பார்த்து அலுமினியக் குடம் எள்ளிநகையாடுகிறது. அதாவது, உங்களின் நலத்திட்டங்களில் உள்ள தவறுகளைப்[ஊழல்களை என்பார்கள் எதிரணியினர்] பார்த்து தி.மு.க. நகையாடுகிறது. சரிதானே?

அன்புள்ள அய்யா,

குட்டிக் கதையோ நெட்டைக் கதையோ, சொற்பொழிவில் கதைகளைக் கையாள்வது மிக எளிது. ஆனால் அந்தக் கதைகள் உங்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளைத் தந்துவிடவும்கூடும் என்பதை ஒருபோதும் மறத்தல் கூடாது. இது அறிவுறுத்தல் அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே.

நன்றி.
=================================================================================