வியாழன், 31 ஆகஸ்ட், 2017

“இந்தியத் திணிக்காதே”-சீறுகிறார் சித்தராமையா!

“நாட்டின் மதச்சார்பற்ற நிலையை அழித்துவரும் ஒரு மதவாதக் கட்சி ‘பாஜக’. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயல்கிறது அது. திணிப்பை எதிர்த்துக் கர்நாடக மக்கள் போராடுகிறார்கள்” என்று, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா[‘தி இந்து’{தமிழ்}, 29.08.2017].
தாமும் தம் மக்களும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கான காரணங்களையும் அவர் விவரித்திருக்கிறார். 

= இந்த நாட்டில் பேசப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.

= இது இந்தியாவின் தேசிய மொழி அல்ல.

= இது தேசிய மொழியாக ஆகவும் முடியாது.

=ஒரு மொழியைக் கற்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

=‘பாஜக’வினர் அனைத்து மக்கள் மீதும் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்.

தம் நேர்காணலில், கர்நாடக மாநிலத்தின் தனிக்கொடிக்கான தேவையையும் வலியுறுத்தியிருக்கிறார் தாய்மொழிப் பற்றாளர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து இந்தி அல்லாத பிற மொழி பேசும் மாநில முதல்வர்களும் இந்தித் திணிப்பை எதிர்த்து முழக்கமிடுதல் வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு; பேரவா.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

ஒரு ‘குடுகுடுகுடு’ கிராமத்துக் கிழவியின் கதை!

‘கிளுகிளு’ பருவக் குமரிகள் குறித்த காதல் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இது சாவோடு ‘சடுகுடு’ விளையாடிக்கொண்டிருந்த ஒரு கிராமத்துக் கிழவியின் கதை. வாசிப்போர் எண்ணிக்கை ஒரு 100 தேறுமா?!
சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் ஊராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.

கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.

அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.

பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.

சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.

சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.

“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.

ரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.

நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.

கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி. 

கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.

“ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற  இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.

கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.

மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.

“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.

அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!
____________________________________________________________________________________________________
சேலத்திலிருந்து வெளியான, ‘தேனமுதம்’ என்னும் சிற்றிதழில் வெளியானது.

குறிப்பு: ‘டெம்ப்ளே’ட்டை மாற்றியமைத்திட முயன்றபோது நேரிட்ட குழறுபடியில் ‘கருத்துப் பெட்டி’ காணாமல் போனது. தேடுகிறேன்...தேடிக்கொண்டே இருக்கிறேன்!

புதன், 23 ஆகஸ்ட், 2017

தமிழன் ஏ.ஆர்.ரகுமான்!

தமிழன் பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே[பெரும்பாலும்] பழக்கப்பட்டவன். இது தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு சொல்லும் உண்மை. இன்றளவும் அடிமை வாழ்வுதான்.
“தமிழ் வளரணும்; தமிழன் ஆளணும்[தமிழ் மண்ணைத்தான்]” என்று ஒரு சில தமிழ் இன உணர்வாளர் அவ்வப்போது கூக்குரல் எழுப்புவதைத் தமிழராய்ப் பிறந்த பலரும் பொருட்படுத்துவதில்லை.  பாரதி குறிப்பிட்டாற் போல, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’[தமிழ் இனமும்தான்] என்று எவனோ ஒரு பேதை[அறிஞன்!] சொன்னது நடைமுறை சாத்தியம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஏ.ஆர். ரகுமான், சில நாட்கள் முன்பு சென்னையில் நடைபெற்ற ‘மெர்சல்’ பட விழாவில், என் திரையுலக வாழ்வில் 25 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறேன். இப்போது உள்ள ரசிகர்கள் புதிய தலைமுறையைச் சார்ந்தவர்கள். எனவே எனக்கு வயது குறைந்துவிட்டது.....

.....‘ஆளப்போறான் தமிழன்’ என்று இப்படத்தில் பாடல் உள்ளது. தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தமிழன் அதை ஆள வேண்டும் என்று பேசியிருக்கிறார்[மாலை மலர், கோவை 21.08.2017].

அவரின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டியதாக மாலை மலர்ச் செய்தி குறிப்பிடுகிறது.

கை தட்டுவதும் ஆரவாரிப்பதும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும் கைவந்த கலை. அதை மட்டுமே செய்து பழக்கப்பட்டவர்கள் இவர்கள். ‘தமிழன் ஆள வேண்டும்’ என்னும் ரகுமானின் பேச்சை அப்புறம் அடியோடு மறந்துவிடுவார்கள் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை!

எது எப்படியோ, கோடி கோடியாய்ப் பணம் குவிப்பதிலும்,  புகழைத் தக்க வைத்துக்கொள்வதிலும், இளிச்சவாய்த் தமிழனுக்குத் தலைவன் ஆவதிலும் கருத்துச் செலுத்தும் திரைப்படப் பிரபலங்களுக்கிடையே,  உள்நோக்கம் ஏதுமின்றி உலகறியத் தன் இன உணர்வை வெளிப்படுத்திய தமிழன் ஏ.ஆர். ரகுமானை  மனதாரப் பாராட்டுவோம்.
=====================================================================================================








திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கணினியுகக் காதல்!!!.....சிரிப்புக் கதை!

விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஒரு வார இதழில் வெளியான கதை இது. இப்போது ‘அது’, ‘தடை செய்யப்பட்ட எழுத்தாளர்’ பட்டியலில் என்னைச் சேர்த்திருக்கிறது!
ழைப்பு மணி இடைவிடாமல் ஙணஙணத்தது.

எரிச்சலுடன் ஓடிப்போய்க் கதவைத் திறந்த கேசவன், எதிர்த்த வீட்டு வேலப்பன் உருவத்தில் வேட்டியும் தொளதொள பனியனுமாய், இரணியனைச் சம்ஹாரம் செய்த நரசிங்கமூர்த்தியே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

“வாருமய்யா ஓசி......இப்பத்தான் முதல் தடவையா அழைப்பு மணியை அடிச்சிப் பார்க்குறீரா?”

”ஆமா. அதோட முதல் தடவையா ஒரு கொலையும் செய்யப்போறேன்.”

வெலவெலத்துப் பின்வாங்கினார் கேசவன். “என்னய்யா சொல்றீர்?" என்றார்.

“உம்ம மகன் என் பொண்ணுக்கு உயிரையே தர்றதா காதல் கடிதம் எழுதியிருக்கான். அந்த உயிரைத்தான் வாங்கிப் போக வந்தேன்” -உரமேறிய வார்த்தைகளை உதிர்த்தார் வேலப்பன்.

“ஏய்யா கத்தறீர்?.” -அவரை இழுத்துப் போய் இருக்கையில் அமர்த்திவிட்டுக் கதவையும் அடைத்துவிட்டுச் சொன்னார் கேசவன், ‘உம்ம பையன் என் மகளைக் கணக்குப் பண்றான். இனியும் நாவல் கீவல்னு இரவல் கேட்டு என் வாசல்படி மிதிச்சான்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்’னு நீர் எச்சரிக்கை பண்ணினதிலேயிருந்து என் மகனோட பார்வைகூட உம் வீட்டு மேல படியறதில்ல. அதோ பாரும், மூடிய எங்க வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து ஆறு மாசம் ஆச்சு. பூச்சி கூடு கட்டியிருக்கு. என் மகன் கண்டிப்பா காதல் கடிதம் கொடுத்திருக்க மாட்டான்.”

“கொடுத்திருக்கான். இதோ பாரும் அவன் நேத்துக் கொடுத்த கடிதம்.”

“தபாலில் அனுப்பியிருப்பானோ?”

“தபாலில் அனுப்பிப் பிடிபட உம்மை மாதிரி உன் மகன் கூமுட்டையா என்ன? அவன் புத்திசாலி. நீர் என்கிட்டே ஒசி வாங்கிப் படிச்சிட்டுத் திருப்பித் தர்ற புராண இதிகாசப் புத்தகங்களில் உன் புத்திரசிகாமணி கடிதம் வெச்சி அனுப்பியிருக்கான். நேத்து என் மகள்கிட்டே கொண்டு வந்து கொடுத்தீரே வியாசர் பாரதம், அதை நான் வாங்கிப் புரட்டினப்போ இந்த ரகசியம் அம்பலமாச்சு. மிரட்டி விசாரிச்சதில் என் மகள் உண்மையை ஒத்துட்டா. கண்ட கண்ட கழுதைப் பயல்களின் வலையில் விழுந்துடக் கூடாதுன்னுதான் என் மகளுக்கு செல்ஃபோன்கூட வாங்கித் தராம இருந்தேன். அப்படியும் உன் மகன் என்னை முட்டாள் ஆக்கிட்டான். நல்ல வேளை என் மகள் சியாமளா உன் மகனுக்குக் கடிதம் ஏதும் எழுதல.”

அவமானத்தால் தொங்கிப் போனது கேசவன் முகம். “வெரி சாரிப்பா. இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்” என்றார்.

“உம்ம வாக்குறுதியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு வாரம் அவகாசம் தர்றேன். உம்ம மகனை எங்காவது அனுப்பி வெச்சிடணும். அது ஆகாத காரியம்னா, ஒரு மாசம் டைம் தர்றேன். மரியாதையா நீரே வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடும். உம்ம மகன் எழுதின அத்தனை கடிதங்களும் என்கிட்டே இருக்கு. அவனையும் அவனுக்கு உடந்தையா இருந்ததா உம்மையும் கம்பி எண்ண வெச்சிடுவேன்.” -கையிலிருந்த கடிதக் கற்றையை விசிறி போல விரித்துக் காட்டிவிட்டுப் புயலாய் வெளியேறினார் வேலப்பன்.

ன்னலருகே அமர்ந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த வேலப்பன், கேசவன் தன்னைத் தேடி வருவதைக் கண்டார். அவர் பின்னால் அவர் மகன் பாலன், ஒரு தோல்பையுடன் வந்து கொண்டிருந்தான்.

‘பயல் வெளியூர் கிளம்பிட்டான் போல’ என நினைத்தார் வேலப்பன்.

அவரை அணுகிய கேசவன்,  “நீர் சொன்னபடியே இவனைச் சேலத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு அனுப்பறதா முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முந்தி உம்மகிட்டே இவன் எதோ பேசணும்னு சொன்னான். அதான் அழைச்சுட்டு வந்தேன்” என்றார்.

“ஓ, தாராளமா...”

பாலன் சொன்னான்:

“நீங்க அடிக்கடி, பாட்டுக் கேட்க எங்க வீட்டிலேயிருந்து ‘பென்டிரைவ்’ இரவல் வாங்கிட்டு வருவீங்க இல்லியா? நீங்க திருப்பித் தர்ற ‘பென்டிரைவ்’ களில் பாடலை அழிச்சிட்டு யாரோ புதுக்கவிதை பதிவு பண்ணியிருக்காங்க. போட்டுக் காட்டுறேன். குரலை வைத்து அது யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க” என்று சொல்லிக்கொண்டே, தோல்பையிலிருந்து ஒரு மடிக்கணினியை எடுத்து வைத்து இயக்கினான்.

திகைத்து, திராவகத்தில் விழுந்துவிட்டவர் போல, வேலப்பன் துடித்துப் போனார்.

பாலன் மீது கொண்டிருந்த அதீத காதலால், பென்டிரைவில் கவிதைச் சரம் தொடுத்திருந்தாள் அவர் மகள் சியாமளா!

“நான் போறேங்க” என்ற பாலனின் குரல்தான் அவரைத் திகைப்பிலிருந்து விடுவித்தது. அவன் தோல்பையுடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை... போகாதிங்க...நில்லுங்க...” என்று கூவிக்கொண்டே அவனை நெருங்கினார் வேலப்பன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

‘மகா பெரியவா’[பரமாச்சாரியார்] உயிருடன் இருந்திருந்தால்.....!

‘குமுதம்’ வார இதழ் தன் இணைப்பு இதழான ‘லைஃப்’இல், காஞ்சி பரமாச்சார்யாவின் வாழ்வில் இடம்பெற்ற அதிசயங்களென,   இட்டுக்கட்டிய நிகழ்வுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறது. 
வங்கி அலுவலர் ஒருவர், உடம்பெங்கும் கொப்புளங்கள் உண்டாகிக் குணப்படுத்த இயலாத[?!] நிலையில், காஞ்சி பரமாச்சாரியாரைத் தரிசிக்க வருகிறார்.

தகவல் அறிந்த ‘மகா பெரியவா’ தேடி வந்தவரிடம் ஏதும் விசாரிக்காமலே தம்மைப்  பின் தொடரச் சொல்லிவிட்டு, ‘அனுஷ்ட்டானத்துக்கு’[?] அருகிலுள்ள ஆற்றுக்குச் செல்கிறார். அதில் வாய்க்கால் மாதிரி ஜலம் ஓடிண்டிருந்தது.

ஸ்நானம் பண்ண ஆரம்பித்த பெரியவா, வந்தவரையும் வற்புறுத்தித் தன்னை அடுத்து நீரில் இறங்கி ஸ்நானம் பண்ணச் சொல்கிறார்.

‘பெரியவா’ மீது பட்ட ஜலம் அவர் மீதும் பட்டு ஓடியது. விளைவு.....

வந்தவரின் உடம்பில் பரவியிருந்த கொப்புளங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயினவாம்![குமுதம் லைஃப் 23.08.2017]

இது போன்ற பல அற்புதங்களை[!?] ‘மகா பெரியவா’ தம் வாழ்வில் நிகழ்த்தியதாகப் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளது குமுதம்[இனியும் தொடரக்கூடும்].

குமுதம் குறிப்பிடும் சம்பவங்கள் உண்மையானவையா என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் ஏதுமில்லை. இவை உண்மை எனின், தாம் வாழ்ந்த காலத்தில் தம்மைத் தேடிவந்தோர் மட்டுமின்றி வராத ஏனையோர் குறைகளையும் அவர் போக்கியிருத்தல் வேண்டும். செய்தாரில்லை.

பரமாச்சாரியாரைப் பொருத்தவரை, உண்மையான இறைப்பற்றும் புலனடக்கமும் உதவும் மனமும் கொண்ட நல்ல ஆன்மிக நெறியாளர் என்றே மக்கள் கருதினார்கள்; கருதுகிறார்கள்.

அவர் தம் வாழ்நாளில் அளப்பரிய நற்காரியங்கள் செய்திருக்கக்கூடும். குமுதம் உண்மையாகவே அவர்தம் புகழை நிலைநாட்டிட / மக்களிடையே பரப்பிட விரும்பியிருந்தால்.....

அவர் ஆற்றிய நற்பணிகள் குறித்துத் தொடர் கட்டுரைகள் எழுதியிருத்தல் வேண்டும். அதற்கு மாறாக, நடைமுறை சாத்தியமே இல்லாத கற்பனை நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியிருப்பது மகா பெரியவரின் புகழுக்கு மாசு கற்பிக்குமே தவிர அப்புகழை நிலைநாட்டிட உதவாது.

பரமாச்சாரியார் உயிரோடு இருந்திருந்தால் குமுதத்தின் இச்செயலைக் கண்டிக்கவே செய்திருப்பார்[?].

இந்த உண்மைகளை இனியேனும் குமுதம் உணருமா?
===================================================================================================== 


புதன், 16 ஆகஸ்ட், 2017

இந்து மதவா[விரோ]திகள் சிந்திப்பார்களா?!

வரவிருக்கும், ‘பிள்ளையார் பிறந்த நாள்’ஐ[சதுர்த்தி] முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்புப் பதிவு இது!
இஸ்லாமிய மதம் வன்முறையால் பரப்பப்பட்டது என்பார்கள். “இல்லை...இல்லை. இங்கே நிலவும் சமத்துவம்தான் பிற மதத்தவர் எம் மதத்தைத் தழுவக் காரணம்” என்கிறார்கள் இஸ்லாம் மதவாதிகள்

‘கிறித்தவம் பணபலத்தால் விரிவுபடுத்தப்பட்டது’ என்பதை மறுத்து, “ஏழை எளியவர்களுக்கு நாங்கள் பலன் கருதாமல் செய்யும் தொண்டுதான் எங்கள் மதம் வளரக் காரணம்” என்கிறார்கள் கிறித்தவ மதபோதகர்கள்.

இவர்களின் நிலை இவ்வாறாக  இருக்க, ஜாதிமத வேற்றுமைகள் குறித்தோ, பொதுத் தொண்டு குறித்தோ பெரிதும் கவலை கொள்ளாமல், பல்லாயிரக் கணக்கில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பது, ஆண்டு தவறாமல் ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது, அறிவுக்கொவ்வாத, கடவுளர் பற்றிய ஆபாசக் கதைகளை மேடைகளிலும் ஊடகங்களிலும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருப்பது என்றிவ்வாறு மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்துமதவாதிகள். இவர்கள்..... 

மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம் தம் மதத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறார்களா?
*****************************************************************************************************************************************

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

இந்த இருவரில் ‘அறிஞன்’ யார்? ‘அறிவிலி’ யார்?


லட்சோபலட்சம் மக்களால், ‘கடவுள் அவதாரம்’ என்று போற்றப்படும் அந்த மகான், அலங்கரிக்கப்பட்ட அரியணையில் வீற்றிருந்தார்.
அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் முரட்டுச் சீடர்கள்.

அருளாசி பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம் அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; யாருடைய வரவுக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த மனிதன். பலமுறை வேண்டுகோள் வைத்து, மகானைச் சந்திக்கச் சிறப்பு அனுமதி பெற்றவன் அவன்.


நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை மகானின் திருப்பாதங்களில் விழுந்து எழுந்தான்.

சொன்னான்: “தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். அந்தக் கடவுளை அற்ப ஜீவிகளான என் போன்றவர்களுக்குக் காட்ட முடியுமா?” என்றான்.

“காட்ட முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. ஆறாவது அறிவால் உணர மட்டுமே முடியும்” என்றார் மகான்.

“கடவுளின் ஒரு கூறான ஆன்மாவை...?”

“உணர மட்டுமே முடியும்.”

“கடவுளை உணரத்தான் முடியும் என்கிறீர்கள். தங்களைப் போன்ற மகான்களால்கூடவா பிறருக்கு உணர்த்த முடியாது?”

“யாரும் யாருக்கும் உணர்த்த முடியாது. அவரவர் உணர்வது மட்டுமே சாத்தியம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?”

“நிச்சயமாக.”

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து நம்புவது எப்படி மகானே? நம்பினால்தானே தங்களை மகான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றான் அந்த மனிதன் வெகு பவ்வியமாக.

மகானின் வதனம் சிவந்தது; உதடுகள் துடித்தன.

“நீ ஒரு குதர்க்கன்...கசடன்...நாத்திகன்...சாத்தானின் வாரிசு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, பக்த கோடிகள் அந்த மனிதனின் மீது பாய்ந்தார்கள்.

ஆக்ரோஷமாய்த் தாக்கினார்கள்; ஆடை கிழித்துத் தரையில் தள்ளிப் புரட்டியெடுத்தார்கள்; அவனின் உடம்பெங்கும் வீக்கங்கள்; ரத்தக் காயங்கள்.

“தொலையட்டும்... அவனை விட்டுவிடுங்கள்” என்றார் மகான்.

பிறந்த மேனியாய்த் தள்ளாடியபடியே வெளியேறினான் அந்த மனிதன்!

#####################################################################################################




வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கவிஞர் வைரமுத்துவின் கடவுள்!!!

ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘அறிவே கடவுள்’ என்னும் தலைப்பில் உரையாற்றியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து[’தி இந்து’ 09.08.2017]. உரையின் தலைப்பிலேயே நம்மைக் குழப்புகிறார் கவிஞர்!
‘கடவுள் என்பவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதாவது எப்போதும் இருந்துகொண்டே இருந்தவர்; இருக்கிறவர்; இனியும் இருப்பவர். அவர் ஒப்புமைக்கு அடங்காத பேராற்றலும் பேரறிவும் வாய்ந்தவர். அன்புருவானவர்; அருள் வடிவானவர்.....’ என்றிப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அவருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் ஆன்மிக நெறியில் ஊறித் திளைத்தவர்கள்.

கடவுளுக்கான விளக்கம் இவ்வாறு மிகப் பரந்து விரிந்த ஒன்றாக இருக்கையில், கவிஞர் வைரமுத்து அவர்கள், “அறிவே கடவுள்” என்று வெகு சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். 

அறிவு மட்டுமே கடவுளாக முடியுமா என்று அவர் கிஞ்சித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

[‘மொழியைக் கண்டறிந்தவனே உலகின் முதல் கடவுள்” என்றும் சொல்லியிருக்கிறார். மனிதன் கடவுள் ஆனது எப்படி என்று புரியவில்லை].

அறிவு என்பது சிந்திக்கப் பயன்படுவது. அது பிற உயிர்களுக்கும் வாய்த்திருக்கிறது. மனிதன் அதைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறான். 

இந்த அறிவை, ‘அறிவு’ என்றே குறிப்பிடலாமே? அதை ஏன் அவர் ‘கடவுள்’ ஆக்கினார்? கடவுள் என்று உருவகம் செய்யாமல் ‘அறிவு’ என்று மட்டும் குறிப்பிட்டால் அதன் தகுதி அல்லது தரம் குறைந்துவிடுமா? மக்கள், அறிவு என்று ஒன்று இருப்பதை ஏற்க மாட்டார்களா?

தொடரும் தம் உரையில், “மனிதர்களின் கேள்விக்கு விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்” என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களின் கேள்வி என்ன? ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்பதுதானே? ‘விடை கிடைக்காத இடத்தில் கடவுள் இருக்கிறார்’ என்று சொல்வதன்[சொல்பவர் அவர்தான்] மூலம் அந்தக் கேள்விக்கான விடையை மனிதனால் கண்டறிய இயலாது என்பதுதான். ஆக, கடவுளின் ‘இருப்பை’ மனிதனால் புரிந்துகொள்ள இயலாது என்கிறார்.

இப்படிச் சொன்ன அவர், தொடர்ந்து, “மனிதன் தன் அறிவுப் பூட்டைத் திறக்கும்போது கடவுள் புன்சிரிப்புடன் நகர்ந்துகொள்கிறார்” என்றும் குறிப்பிடுகிறார். 

மனிதன் மிக ஆழமாகச் சிந்திக்கும்போது, கடவுள் புன்சிரிப்புடன் காணாமல் போகிறாராம். இதற்கு என்ன பொருள்?

‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். மனிதனின் அறிவால் அவரை அறிய முடியாது’ என்பதா? அல்லது, கடவுளே இல்லை என்பதா?

‘கடவுள் இல்லை’ என்பது அவருடைய கொள்கை என்றால், ‘கடவுள் இல்லை’ என்று அப்பட்டமாகச் சொல்ல வேண்டியதுதானே? ‘மறைகிறார்[அதுவும் புன்சிரிப்புடன்] என்று மூடுமந்திரமாகப் பேசியது ஏன்?

இவரின் இந்த நிலையை, ‘இரட்டை வேடம்’ என்று சொல்லலாமா? “ஆம்” என்றால்.....

யாரைத் திருப்திபடுத்த இந்த இரட்டை வேடம்? ஆத்திகர், நாத்திகர் என்னும் இரண்டு தரப்பினரையுமா?

வைரமுத்து நல்ல கவிஞர்; எழுத்தாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தங்குதடை இல்லாமல் பேசுவதில் வல்லவர். 

‘பேசட்டும். எவ்வளவும் பேசட்டும்; எதைப் பற்றியும் பேசட்டும். அந்தப் பேச்சு மக்களுக்குப் பயன்படுதல் வேண்டும்; அவர்களின் நேரத்தை வீணடிப்பதாக இருத்தல் கூடாது’ -இது நம் விருப்பம்.
=====================================================================================================

புதன், 9 ஆகஸ்ட், 2017

என் கதை முன்னே! ‘நோட்டா’ பின்னே!!

தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of The Above NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘நோட்டா (NOTA)’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2013 டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது.
1993ஆம் ஆண்டில் ‘செல்லாத வாக்கு’ என்னும் தலைப்பில், ‘ராணி’ வார இதழில்[17.10.1993] ஒரு கதை எழுதினேன். இந்த ‘நோட்டா’ அறிமுகத்துக்கு மூல காரணமே நான் எழுதிய இந்தக் கதைதான்[ஹி...ஹி...ஹி!] என்று நான் சொன்னால் நகைப்பீர்களா, ஆமோதிப்பீர்களா?!
கதை:  
முதல் ஓட்டுப் போடலாமென்று ஆறு முப்பதுக்கே வாக்குச் சாவடிக்குப் போனான் கணேசன். 
நீண்ட வாக்காளர் வரிசை அவனுக்குப் ‘பெப்பே’ காட்டியது. ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு வரிசையில் நின்றான்.
சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ‘வரிசை’ உயிர் பெற்று நகரலாயிற்று.
எதேச்சையாக வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறிய அந்த உருவத்தைப் பார்த்ததும் கணேசன் அதிர்ச்சியடைந்தான்; ஆத்திரப்பட்டான்.
அந்த உருவம்.....
மூர்த்தி!
“நம் தொகுதியில் போட்டியிடும் அத்தனை பேருமே ஊழல் பேர்வழிகள்; அயோக்கியர்கள். நம் தொகுதி வாக்காளர்கள் இவர்களில் எவருக்கும் வாக்களிக்கக்கூடாது. ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என்று நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு முந்தா நாள்வரை தெருத்தெருவாய் முழக்கம் செய்தானே அந்த மூர்த்திதானே இவன்?
இன்று முதல் ஆளாய்த் தன் ஓட்டைப் போட்டுவிட்டு வருகிறானே. ஓட்டுக்கு எவ்வளவு வாங்கியிருப்பான்? எத்தனை பேரிடம் வாங்கினான்? இவனைச் சும்மா விடக்கூடாது.’ -கணேசன் மனதுக்குள் கருவினான்.
‘அரசியல்வாதிகளே, கள்ளச் சாராயப் பேர்வழிகளையும் கோயில் கொள்ளையர்களையும் விபச்சார்த் தரகர்களையும் எங்கள் தொகுதியின் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறீர்கள். இவர்களைத் திரும்பப் பெறுங்கள். நல்லவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். மறுத்தால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று சுவர் சுவராய் அறிக்கை ஒட்டிய அந்த மூர்த்திதான் இவன். இவனை உண்டு இல்லயென்று ஆக்கிவிட முடிவெடுத்தான் கணேசன்
வரிசையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மூர்த்தியை எதிர்கொண்டான்.
“மூர்த்தி எங்கே இந்தப் பக்கம்?” -குரலில் கிண்டல்.
”ஓட்டுப் போடத்தான் வந்தேன். வந்த வேலை முடிந்தது” என்றான் மூர்த்தி.
“ஓட்டுப் போடவா? நீயா?”
“ஆமா. நானேதான். என் கோரிக்கை எதுவும் நிறைவேறல. வாக்குச் சாவடிப்பக்கம் வரக் கூடாதுன்னுதான் இருந்தேன். அரசியல்வாதிகள் கள்ள ஓட்டுப் போட ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதாக் கேள்விப்பட்டேன். என்னுடைய ஓட்டையும் எவனாவது போட்டுட வாய்ப்பிருக்குன்னு நினைச்சேன். விலை மதிப்பற்ற என் வாக்கு காசுக்கு விலை போவதை நான் விரும்பல. தகுதியில்லாத ஒரு வேட்பாளருக்கு அது போடப்படுவதையும் தடுக்க நினைச்சேன். முதல் ஆளா வரிசையில் நின்னு என் வாக்கைச் செல்லாததா ஆக்கிப் போட்டுட்டேன். சொல் ஒன்னு செயல் ஒன்னுன்னு ஊரை ஏமாத்துற ஆள் நான் இல்லை.”
இடத்தைக் காலி செய்தான் மூர்த்தி.
திகைப்பிலிருந்து விடுபடச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன கணேசனுக்கு!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
     

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இழி தமிழ்!!!

இந்தப் பதிவைப் படித்த[தமிழ்மணத்தில் இணைப்பதற்கு முன்] உள்ளூர் நண்பரொருவர், “தமிழில் பெயர் வைக்காததால் எல்லாம் தமிழ் அழிந்துவிடுமா?” என்று என்னிடம் கேட்டார். “இதனால் மட்டும் அழிந்துவிடாது; இதனாலும் அழியும்” என்றேன்.
கதை:                                       க்ருஷிஹா

“அப்பா, உங்க பேத்திக்கு நல்ல பேர் சொல்லுங்க.” -அயலூரில் வேலை பார்க்கும் சிவக்குமார் கோவையிலுள்ள தன் தந்தைக்குத் தொ.பே. செய்தான்.

“வான்மதின்னு வெச்சுடலாம். அழகான தமிழ்ப் பேரு” என்றார் மயில்சாமி.

“இது வேண்டாம். யாரும் வைக்காத பேரா இருக்கணும்.”

“எனக்குத் தெரிய யாரும் இந்தப் பேரை வைக்கல.”

“வெச்சிருக்காங்க. வேற பேர் சொல்லுங்க.”

“யோசிக்கணும்.....”

சிறிது நேரம் யோசித்த பின்னர் மகனுடன் தொடர்பு கொண்டார் மயில்சாமி. “கவிமுகில் புதுமையான பேரு. குழந்தையைக் கவின்னோ முகில்னோ கூப்பிட்டுக்கலாம்” என்றார் குரலில் குதூகலம் பொங்க. 

“அப்பா, சொல்ல மறந்துட்டேன். நியூமராலஜிபடி கூட்டினா மூனு வரணும்” வெறுமனே சொல்லி வைத்தான் சிவக்குமார்.

ஆங்கில எழுத்து மதிப்பின்படி கூட்டினால் மூன்று வருகிற தமிழ்ப் பெயர்களை அப்போதே பட்டியலிட்டு, ‘நாவுக்கரசி’ என்னும் பெயரைத் தேர்வு செய்தார் மயில்சாமி; மகனிடமும் சொன்னார்.

அப்பா பரிந்துரைத்த பெயர்களை மனைவி நிதர்ஸனாவிடம்  ஒப்பித்தான் சிவக்குமார்.

“வான்மதி...கவிமுகில்...நாவுக்கரசி...கர்மம்...கர்மம்... இதெல்லாம்தான் புதுமையான பேர்களா? அவர்கிட்ட எதுக்குக் கேட்டீங்க?” -சுடச்சுட வார்த்தைகளைச் சிதறவிட்டாள் நிதர்ஸனா.

“அது வந்து... குடும்பத் தலைவராச்சேன்னு ஒரு ஃபார்மாலிட்டுக் கேட்டுத் தொலைச்சிட்டேன்.”

“சரி விடுங்க. ‘க்,ஷ்,ஹ்’ இல் ஆரம்பிக்கிற பேர்தான் வைக்கணும்னு குடும்ப ஜோதிடர் சொல்லிட்டார். அதனால, ‘க்ருஷிஹா’ங்கிற பேரை செலக்ட் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க” என்றாள் நிதர்ஸனா.

சற்றே யோசித்தவள், “சொல்லி முடிச்சதும் ஃபோனைக் ‘கட்’ பண்ணிடுங்க” என்றாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
2013ஆம் ஆண்டு, ‘நான்...நீங்கள்...அவர்கள்!!!’ என்னும் வலைத்தளத்தில் வெளியானது இப்பதிவு. 

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

‘அது’ விசயத்தில் மீண்டும் ஒரு ‘அறுப்பு’ச் சம்பவம்!!

கேரளாவில் சட்டக் கல்லுரி மாணவி ஒருவர், தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 52 வயதான சாமியாரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் அகில உலகமும் அறிந்த ஒன்று. இன்றைய நாளிதழ்ச்[‘தி இந்து’ 03.08.2017] செய்தியின்படி, அதே கேரள மாநிலத்தில், கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைப் பலவந்தமாக[பாலியல் பலாத்காரம்] முத்தமிட்ட 30 வயதான ஒரு காமுகனின் நாக்கு நுனியை[2செ.மீ]க் கடித்துத் துண்டித்துள்ளார்.

துண்டித்த நுனி நாக்கைக் காவல்துறையினரிடம் காட்டியுள்ளார். காவல்துறை அந்த நடுத்தர வயதுக் காமுகனைக் கைது செய்திருக்கிறது.
[பதிவுக்குத் தொடர்பில்லாதவர்!]
இம்மாதிரி, மனோதைரியம் வாய்த்த பெண்களுக்கு நான் மனப்பூர்வமாய் வழங்கும்  ஆலோசனை ஒன்று உண்டு.

பெண்களே,

மேற்கண்டது போன்ற கெட்ட நிகழ்வுகளுக்கு நீங்கள் உள்ளாக நேரிட்டால்[நேரவே கூடாது], நாக்கு நுனியைக் கடித்தெடுப்பதைக் காட்டிலும், உங்களைக் கற்பழிக்க முயலும் காமுகனுடைய உதட்டின் ஒரு கணிசமான பகுதியையாவது கடித்தெடுங்கள். அவனின் மூக்கைத் துண்டிப்பது அதனினும் சிறந்த செயலாகும்.

துண்டிக்கப்பட்ட நாக்கை எதிர்ப்படுகிற எல்லோரும் காணும் வாய்ப்பு இல்லையாதலால் காமுகனின் இழிசெயலையும் பெற்ற தண்டனையையும் அவர்கள் அறிவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. 

துண்டிக்கப்பட்ட உதடுகளோ மூக்கோ அவன் புரிந்த ஈனச் செயலையும் பெற்ற தண்டனையையும் எளிதில் பிறர் அறியப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.

ஆகவே, நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன், மேற்கண்டது போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரும்போது நான் வழங்கிய ஆலோசனையை மறவாமல் நடைமுறைப்படுத்துங்கள்.
==============================================================================

புதன், 2 ஆகஸ்ட், 2017

இது ஜோதிட யுகம்!!!

கண்ணுக்குத் தெரியாத கடவுளைக் காட்டிலும் தம் கண்ணெதெதிரே தோன்றும் ஜோதிடரை நம்புவோர் நம்மிடையே மிக அதிகம்!

ந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள் பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; மனுசங்க திருந்தி வாழலேன்னா பூலோக அழிஞ்சிடும்னு யாரோ புரளி கிளப்பியிருக்காங்க” என்றார் இறைவன், வதனத்தில் குறும்பு மிளிர.

“புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” -சந்தேகம் எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று  சொன்னார் இறைவன். 

அதிர்ச்சிக்குள்ளான இறைவி, “ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க, மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமா யிடிச்சி. எதிரியை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கிறான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்லுகிறான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

பேசுவதை நிறுத்தி நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “மகான்கள், அவதாரபுருஷர்கள்ங்கிற பேருல அப்பப்போ சிலரைப் பூமிக்கு அனுப்பி, ‘பாவம் பண்ணினா நரகத்துக்குப் போகணும், புண்ணியம் செஞ்சா சொர்க்கம் கிடைக்கு’ம்கிற மாதிரி விதம் விதமாய்ப்  பிரச்சாரம் பண்ண வைச்சேன். எவனும் திருந்தல. இப்போ, திருந்தி வாழலேன்னா கூடிய சீக்கிரம் பூமி அழிஞ்சிடும்னு ஜோதிடர்கள் மூலமா புரளி கிளப்பி விட்டிருக்கேன். மக்கள் திருந்திடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.”

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க. ஆறறிவு படைச்ச மனுசங்க அவ்வளவு சுலபமா இந்தப் புரளியை நம்பிடுவாங்களா என்ன?”

“என்ன இப்படிக் கேட்டுட்டே? அவதாரபுருஷர்களையும் பெரிய பெரிய மகான்களையும் என்னையும் நம்புறதைவிட ஜோதிடர்களைத்தான் மனுசங்க அதிகம் நம்புறாங்க” என்று சொல்லி முடித்த கடவுள்.....

“ஜோதிடர்கள் வாழ்க! ஜோதிடக்கலை வளர்க!!” என்று ஓங்கிய குரலில் முழக்கமிட்டு, விரிந்து பரந்த அண்டவெளி அதிரும்படியாக ஊழிக்காலத்தில் சிரிப்பது போன்ற அதிபயங்கரச் சிரிப்பொன்றை வெளிப்படுத்தினார்! 
***********************************************************************************************************************



செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அண்டவெளியில் ஒரு நீ...ண்...ட பார்வை!!!

#பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கின்றன. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது#[விக்கிப்பீடியா]. 
இவ்வகையில் விரிவடைந்துகொண்டே போகும் அண்டம்/பிரபஞ்சம் ஏதோவொரு காலக்கட்டத் 
தில் படிப்படியாய்ச்சுருங்கிச் சுருங்கி அழிந்துபோகும் என்பதைக் கீழ்க்காணும் அறிவியல்
செய்தி உறுதிப்படுத்துகிறது.

#உலகின் மிகவும் சக்தி மிக்க தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களைக் கண்காணித்த விஞ்ஞானிகள் கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாகக் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்து வருவதாகக் கூறும் பழைய ஆய்வுகளையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

14 பில்லியன் ஆண்டுகள் பழமையான எமது பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது#[www.bbc.com/tamil/science/2015/08/150811_universe]

ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளடங்கிய பூமியும்  அழிந்துபோகும் நிலையில் மனித 
இனமும் பூண்டோடு அழியும் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை.

மீண்டுமொரு பெரு வெடிப்பு அல்லது அதிரடி வெடிப்பு காரணமாகப் புதிய பிரபஞ்சம் தோன்றக் 
கூடும். அது எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. நிகழ்ந்தாலும், மனித இனமும் பிற 
உயிரினமும் வாழ்வதற்கு உகந்த ஒரு பூமியோ அது போன்றதொரு கோளோ அதில் உள்ளடங்கி 
இருக்கும் என்பது நிச்சயமில்லை.

ஆகவே, உலகோருக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்றுண்டு. 

‘மனித இனம் இருக்கும்வரை, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய குறுகிய வாழ்
நாளைத் தமக்கும் பிறருக்கும் பயன் தருவதாய் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும். 
அத்தகையதொரு வாழ்வுக்கு ஆறாவது அறிவை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம்.
அதை விடுத்து, மகான் சொன்னார்; அவதாரம் சொன்னார்; அவர் சொன்னார், இவர் சொன்னார்
[அண்டசராசரமே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் நிலையில் அவதாரமும் இல்லை; 
மகானும் இல்லை; ஒரு புடலங்காயும் இல்லை] என்று கடவுளை நம்பி, மூடநம்பிக்கைகளை 
வளர்த்து மூடராய் வாழ்வது வருந்துதற்குரியது.
=============================================================================================
சில நூறு பேர் வாசிக்கவிருக்கும் ஒரு பதிவின் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் அறிவுரை வழங்கும்
நான் எத்தனை பெரிய புத்திசாலி! ஹ...ஹ...ஹ!!