எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

அறிவுஜீவி அமலா பாலுக்கு[நடிகை] அன்பானதொரு வேண்டுகோள்!!!


‘தென்னிந்திய நடிகை அமலா பால் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குச் சென்றுள்ளார், மதப் பாகுபாடு' காரணமாக அவரைக் கோவிலுக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.' -இது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் நேற்றையச்[19.01.2023] செய்தி[https://www.thanthitv.com/latest-news/an-upset-amala-paul-162747]

வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களைக் காரணம் காட்டி அதிகாரிகள் தரிசனத்திற்கான அனுமதியை மறுத்திருக்கிறார்கள்.


“இந்தியாவில் இஸ்லாம் வளருது; கிறித்தவம் வளருது” என்று நாளும் ஊளையிடுவோர் மசூதியைத் தேடியோ, தேவாலயத்தைத் தேடியோ செல்லும் இந்துக்களை அம்மதத்தவர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பதைப் பார்த்தும் பாடம் கற்கவில்லை.


தான் அவமதிக்கப்பட்டது குறித்துக் கருத்து தெரிவித்த 'அமலா பால்', 2023ஆம் ஆண்டிலும்[அறிவியல் யுகம்] மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டதன் மூலம், தான் மதச்சார்பற்றவர் என்பதை உலகறியச் செய்திருக்கிறார்.


இந்த அறிவுஜீவிப் பெண்மணியை[இவரைப் போன்றவர்களையும்]ப் புரிந்துகொள்ளும் அறிவு மதவாதிகளுக்கு இல்லை என்பது, இவருக்குக் கோயில் நுழைவுக்கான அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் உறுதியாகிறது.


எனவே, அமலா பாலிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை.....

 

பக்தி நெறி போற்றும் மதங்கள் எல்லாமே ஏதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கையை வளர்ப்பவைதான். இவைகளால் மூடர்களின் எண்ணிக்கை பெருகுமே தவிரக் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.


எனவே, இந்த அறிவியல் யுகத்தில் மதப்பாகுபாடுகளை வேரறுக்க விரும்பும் நீங்கள் எந்தவொரு மதத்தையும் போற்றிப் புகழ்வதையோ, கோயில்களுக்குச் செல்வதையோ அறவே தவிர்த்து, முழுக்க முழுக்க ஓர் அறிவுஜீவியாக வாழ்ந்துகாட்டுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.


இவ்வாறு நீங்கள் வாழ்ந்துகாட்டினால், உங்களுக்குள்ள ஏராளமான ரசிகர்களும்  உங்களைப் பின்பற்றி அறிவுஜீவிகளாக வாழ்வார்கள்; வளர்வார்கள்.


இதன் மூலம் அறிவுஜீவிகளின் என்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி!

===============================================================================