புதன், 30 நவம்பர், 2016

காதலும் உடலுறவும்!

‘தன் காதலை எதிர்த்ததால் தாய், தந்தை, சகோதரி என மூவரைக் கொன்ற இளைஞன்...’ - இது, இன்றைய பத்திரிகை[30.11.2016 தி இந்து]ச் செய்தி. காதல் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைப் படித்துவிட்டு மேலே தொடருங்கள்.

1. காதலைப் புனிதம் என்றவன் முட்டாள்! அதை நம்புகிறவன் அடிமுட்டாள்!! http://kadavulinkadavul.blogspot.com/2015/03/blog-post_57.html

3.காதல்...கொலைகள்...தற்கொலைகள் http://kadavulinkadavul.blogspot.com/2015/07/blog-post_4.html

4. தேவதைகள் வேண்டாம்! தேவலாம்கள் போதும்!!  http://kadavulinkadavul.blogspot.com/2015/07/blog-post_17.html

மனித குலத்தில், ‘காதல்’ என்று தனியான உறவு ஏதுமில்லை; தூய அன்பும் காமமும் காதல் என்னும் பெயரிலும் அழைக்கப்பட்டன. காதல், பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தப்பட்டது...படுகிறது.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும், காதல் போதைக்கு அடிமை ஆகிறவர்கள் திருமணம் ஆகாதவர்கள். தெள்ளத் தெளிவாகச் சொன்னால்.....

‘உடலுறவு’ சுகத்தை அனுபவித்திராதவர்களே காதல் என்னும் புதைகுழியில் வீழ்ந்து மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஒருமுறை உடலுறவு இன்பத்தை நுகர்ந்த ஒருவர், மீண்டும் அவ்வின்பத்தைப் பெற முனைவாரே தவிர,  காதல் என்னும் பொய்யுணர்ச்சிக்கு அடிமையாக மாட்டார். சில நேரங்களில் காரியம் ஆவதற்காகக் காதலிப்பது போல் நடிக்க மட்டுமே செய்வார்.

மிகப் பழைய ஆனந்த விகடன் வார இதழில்[கையடக்க வடிவம்] படித்த ஒரு சிறுகதை  என் நினைவுக்கு வந்தது. அதன் சாரம்.....

காதலில் தோற்ற ஓர் இளைஞன் சித்தம் கலங்கிப் பித்துப் பிடித்தவனாக அலைந்துகொண்டிருப்பான். அவனின் உற்ற நண்பன் ஒருவன் நிறையப் புத்திமதிகள் சொல்லி எதார்த்த வாழ்வைப் புரிய வைக்க முயல்வான். முயற்சி தோல்வியில் முடிகிறது. இடையறாது வற்புறுத்தி, ஒருவகையாக உடன்பட வைத்து ஒரு விலைமகளிடம் அனுப்பி வைப்பான். இந்தக் கிறுக்கன் அவளோடு உடலுறவு கொள்கிறான். உறவு தொடர்கிறது. காதல் பித்தம் தெளிகிறது. படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறான். 

விலைமகளுடனான தகாத உறவை நியாயப்படுத்துவது இக்கதையின் நோக்கமன்று; எதார்த்த வாழ்வைப் புரிந்துகொள்ள வைப்பது மட்டுமே என்பது என் எண்ணம்.

மணமாகாத ஆணும் பெண்ணும் பழகலாம். உணர்வுகளும் பழக்கவழக்கங்களும்[பெரும்பான்மை] ஒத்திருந்தால் நண்பர்கள் ஆகலாம். இருவரின் குடும்பச் சூழலும் ஒத்தமைந்தால் மணம் புரிந்து ஆசை தீர உடலுறவு சுகத்தை அனுபவிக்கலாம். 

இதைத் தவிர்த்து, காதல் புனிதமானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் பிணாத்திக்கொண்டு அலைவது தவிர்க்கப்படவேண்டிய, தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
===============================================================================






ஞாயிறு, 27 நவம்பர், 2016

எங்க ஊர்க் கருப்பாயி கதை!...பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

இந்த முரட்டுப் பெண்ணின் கதை, சில முன்னணி இதழாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை!

ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது. அவள் கணவன், சந்தை சந்தைக்குக் கால்நடைகளை வாங்கி விற்கும் ‘தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி..... 
எருமை & மாடு[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்குச் சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள். முதல் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

“எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ளே வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழி விடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  “உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம். அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு ஒத்துழைக்கவில்லை.

அவளிடமிருந்து ‘அவற்றை’ விடுவிக்க நினைத்தான். அதுவும் சாத்தியப்படவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, “பிழைச்சிப்  போடா நாயே” என்று சொல்லிக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்.
=============================================================================================
பழைய கதைதான். கொஞ்சம் மெருகேற்றப்பட்டது.




வெள்ளி, 25 நவம்பர், 2016

வெங்காய விதி!!!

ஆகம விதிகளை மீறினால் ஆபத்து நேருமா? யாருக்கு?  ஆளுபவருக்கா, நாட்டுக்கா, கடவுளுக்கா?! கொஞ்சம் யோசனை பண்ணுங்கய்யா.

#திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் 108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில் மட்டும்தான் கோயிலில் மூலவருக்கு 5 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த நேரத்தில் மற்ற யாக பூஜைகள், அதுவும், நல்ல நேரம் பார்த்துதான் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

ஆனால், கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில்  ஆகம சாஸ்திர விதிமுறைகளை மீறி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கூடுதல் ஆணையர் கவிதா,  ஜோதிடர் ஒருவர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் கோயில் நடையில் உள்ள சிறிய பாதையைத் திறந்து கோயிலுக்குள் சென்று யாக சாலை பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் நலம்பெற வேண்டி இந்தப் பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் 3 மணிவரை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.

கோயிலில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோயில் நடையைத் திறந்தது உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது மட்டுமின்றி நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்#

மேற்கண்டது, சற்று முன்னர் இன்றைய தினகரன்[25.11.2016] நாளிதழில் நான் படித்த செய்தி.
இதைப் படித்தவுடன் என் மனத்திரையில் ஓடிய எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

கடவுள் உண்டு என்று சொன்னவர்கள் மனிதர்கள். கோடி கோடியாய்ப் பணத்தையும் உடல் உழைப்பையும் வீணடித்துக் கோயில்களைக் கட்டியவர்களும் இவர்களே. தாங்களே எழுதி வைத்துக்கொண்ட வேத ஆகமங்களின் பெயரால்,  இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன விதமாய்ப் பூஜைகள் நடத்தவேண்டும்; இன்ன இன்ன நேரத்தில்தான் கோயிலைத் திறக்க வேண்டும்; சாத்த வேண்டும் என்றெல்லாம் விதிகள் செய்ததும் இவர்களே. இந்த விதிகளை மீறுபவர்களும் இவர்களே.

இந்த விதி மீறல்களால் தலைவர்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளையும் என்று அபாயச் சங்கு ஊதுவோரும் இவர்களே.

என்ன கூத்துடா இது!

கடவுளின் பெயரால் இவர்கள் நடத்தும் கூத்துகளால் தலைவர்களுக்குக் கேடு விளையுமோ இல்லையோ, மக்களின் சிந்திக்கும் அறிவு சிதைக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சீரழியும் என்பது சர்வ நிச்சயம்.
***********************************************************************************************************************


வியாழன், 24 நவம்பர், 2016

ஜோதிடம்...கொஞ்சம் புரிதல்! கொஞ்சம் ஆராய்ச்சி!!

வானில் உள்ள கோள்கள் பலவும்[துணைக்கோள்கள் உட்பட] குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய 9 கோள்களும் [இவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்து 15.11.2016 தேதியிட்ட என்  பதிவில் http://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post.html குறிப்பிடப்பட்டுள்ளன] அடங்கும். அவற்றிற்குப் பின்னால் பெரும் எண்ணிக்கையில் நிலைகொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டத்தை 12 பகுதிகளாகப் பிரித்தார்கள் ஜோதிட முன்னோடிகள்[9 க்குப் பதிலாக 12 ஆக ஏன் பகுத்தார்கள் என்பது புரியவில்லை!]. 12 பகுதிகளையும் 12 ‘வீடுகள்’ என்று அழைத்தார்கள். ஆக, ஒவ்வொரு கோளின் பின்னாலும் ஒரு வீடு இருப்பது அறியத்தக்கது[ஒரு கடிகாரத்தில் 12 முட்களும் 12 எண்களும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். 12 முட்களின் பின்னணியில் 12 எண்கள் இருப்பது போல]   . இந்த வீடுகளைத்தான், ‘ராசி’, ‘ஓரை’, ‘மடம்’ என்று வேறு வேறு பெயர்களில் அழைத்தார்கள்; அழைக்கிறார்கள் ஜோதிடர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெயரும் சூட்டினார்கள்.

மேஷம்.   ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றிவ்வாறு. 

பெயர் சூட்டியது எப்படி?

நட்சத்திரக் கூட்டங்கள் மனதில் எழுப்பிய கற்பனைகளுக்கு ஏற்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். எடுத்துக்காட்டு.....

மேஷம்[ஆடு என்று பொருள்.] 

பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் நம் தலைக்குமேல் சூரியன் வரும் நாள் மார்ச் 23 ஆகும். அன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் இரவும் பகலும் ஒரே அளவாக இருக்குமாம். அன்றுதான், ஆடுகளின் உணவான இலைகள் தளிர்க்கக்கூடிய ‘தளிர் காலம்’[Spring Season] தொடங்குகிறதாம். அதனால் மக்கள், ஞாயிறு[சூரியன்] தங்கியிருக்கும் வீட்டையே முதல் வீடாக[மேஷ ராசி]க் கொண்டார்களாம். இவ்வாறாக, மற்ற ராசிகளுக்கான பெயர் சூட்டுதலுக்கும் மனம்போனபடி கற்பனை செய்திருக்கிறார்கள்[பல முறை படித்தும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை].

12 பிரிவுகளாகப் பாகுபடுத்தப்பட்டு, வீடுகள் அல்லது ராசிகள் என்று அழைக்கப்பட்டு, மேஷம் முதலாகப் பெயரும் சூட்டப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் இருந்த இடத்திலேயே நிலைகொண்டிருக்கின்றன[ஜோதிட முன்னோடிகள்  நட்சத்திரங்கள் எல்லாம் ‘வானக் கூரையில்’ ஒட்டப்பட்டிருப்பதாக நம்பினார்கள்; எல்லா நட்சத்திரங்களும் ஒரே தொலைவில் இருப்பதாகவும் எண்ணினார்கள்]. 

பூமி சுழன்றபடி இருப்பதால், இந்த மேஷம் முதலான ராசிகள்[வீடுகள்] ஒன்றன்பின் ஒன்றாகக் கீழ்த் திசையில் எழுந்து உயர்ந்து, பின்னர் மேற்றிசையில் தாழ்ந்து மறைகின்றன[மறைவதுபோல் தோன்றுகின்றன].

ஒவ்வொரு ராசியும் எழுச்சிக் காலத்தில்[மேலே எழும்பும்போது] மிகுந்த ஆற்றல் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு குழந்தை பிறக்கும்போது, எழுச்சி பெற்றிருக்கும் ராசி எது என்று ஜோதிடர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

எழுச்சியில் இருக்கும் ராசியைத்தான் ‘லக்கினம்’ என்கிறார்கள்.

லக்கினத்தைப் பொருத்து, பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் அமையக்கூடும். ஒரே நேரத்தில் சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் கன்னி லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் வேறு வேறு குண நலன்கள் அமையக்கூடும் என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பிறக்கும் பல ஆயிரம் குழந்தைகளின் லக்கினத்தைக் கணிப்பதில் பிழைகளே நேராமலிருக்குமா என்பதும் ஆய்வுக்குரியது.

கோள்கள் வட்ட வடிவில் சுழன்றுகொண்டிருக்கின்றன. சுழலுகிற ஒவ்வொரு கோளும் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கேற்ப[ராசி] பூமியில் பிறக்கும் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதா என்பது தவிர்க்க இயலாத கேள்வியாகும்.

அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை வளர்ந்துகொண்டிருக்கும் அறிவியலை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்க இயலுமா?

முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

“ஜோதிடம் என்பது விஞ்ஞானம் அல்ல. அறிவியல் பூர்வமாக இதை ஏற்க முடியாது” என்று கூறுகிறார்கள். பிரபஞ்சக் கதிர்களிலுள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள் போன்ற கதிரியக்கக் கதிர்கள் மனித செல்களைப் பாதிக்கின்றன என்பதை ஒத்துக்கொள்கிற  அவர்கள், “சூரியனைத் தவிர பிற கோள்களிலிருந்து எவ்விதமான சக்தி அலைகளும் வருவதில்லை. அவற்றிற்கு ஈர்ப்பு விசை மட்டுமே உள்ளது. எனவே, கோள்களின் இயக்கம் எவ்விதத்திலும் மனிதரைப் பாதிப்பதில்லை” என்றும் சொல்கிறார்கள்.

வானக் கூரையில் விண்மீன்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றும், கோள்கள் வீடுகளில்[ராசிகளில்] தங்குகின்றன என்று ஜோதிடர்கள் சொல்வது நகைப்புக்கிடமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வியாழன் கோள் நன்மை பயக்கும் தன்மையுடையது. சனி தீமை செய்வது என்றிவ்வாறாக, ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு குணத்தைக் கற்பித்திருப்பதும் அறிவுடையார் செயலல்ல என்றும் அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

ஆக, கோள்களையும் நட்சத்திரங்களையும் வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் மக்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள்; விளையாடுகிறார்கள் என்பதே அறிவியலாளரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
===========================================================================================================

‘சோதிடம் அறிவியல் ஆகுமா?’ என்னும் தலைப்பில் k.s.மகாதேவன்,B.Sc., M.A. அவர்கள் எழுதிய கட்டுரை வாயிலாக ஜோதிடம் குறித்து நான் அறிந்தவற்றை எளிமைப்படுத்தி என்னுடைய நடையில் பதிவிட்டிருக்கிறேன்.

என் எழுத்து உங்களுக்குப் புரியும் வகையில் அமைந்தால் மகிழ்வேன். மற்றபடி, என்னை ‘ஜோதிடத்தில் புலி’ என்று நினைத்துக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

புதன், 23 நவம்பர், 2016

வெங்காயப் பதிவு!

  1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீர்த் தொற்றால் அவதிப்பட்டேன். மருத்துவரைச் சந்தித்து, 'complete urine test', 'urine culture test'  ஆகிய பரிசோதனைகள் செய்து, மருந்து மாத்திரை சாப்பிட்டும் நோயிலிருந்து விடுதலை பெற ஒரு மாதத்திற்கும் மேல் ஆயிற்று. இதே நோய் கடந்த ஆண்டும் என்னைத் தாக்கித் துன்புறுத்தியது. கூகுளாரின் உதவியால் சிறுநீர்த் தொற்று தொடர்பான பதிவுகளைப் படித்தேன். அவற்றுள் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். இப்போதெல்லாம் என் தினசரி உணவுப் பட்டியலில் வெங்காயம் இடம்பெறத் தவறுவதே இல்லை. பதிவர் மோகன் குமாருக்கு நன்றி.
  2. வெங்காயம்:
  3. வெங்காயம் காரத்தன்மை மிக்கது. அதற்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
  4. * முருங்கைக்காயைவிட அதிகப் பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
  5. * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளையும் சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
  6. * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பழக்கத்தைத் தொடர்பவர்களுக்குச் சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்துக் கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
  7. * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
  8. * முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
  9. * செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
  10. * சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
  11. * புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
  12. நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  13. * வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
  14. * வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
  15. * வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
  16. * அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.









    வெள்ளி, 18 நவம்பர், 2016

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமும் அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பேட்டியும்!

    “கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும் மருத்துவர்களின் சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்.....” என்று முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்[பாலிமர் தொலைக்காட்சி; 17.11.2016, பிற்பகல் 02.15] கூறியிருக்கிறார்.

    நம் முதல்வர் அவர்கள் முழுமையாகக் குணமடைந்ததில் மெத்த மகிழ்ச்சி.
    நன்றி:Oneindia Tami
    இப்பதிவின் நோக்கம், மருத்துவர் பிரதாப் சி. ரெட்டியின் பேட்டியில் இடம்பெற்றுள்ள தவற்றினைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

    பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர், ஜாதி, மதம், இனம், மொழி, கடவுள் நம்பிக்கை, நாத்திகம் என எந்தவொரு வரையறைக்கும் கட்டுப்படாதவர் ஆவார்[தனிப்பட்ட வாழ்க்கையில் இது பொருந்தாமலிருக்கலாம்]. 

    தம்மிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை குறித்து அறிவிப்புச் செய்யும்போது, முந்தைய பத்தியில் குறிப்பிட்டவாறு தாம்  சார்பும் அற்றவர் என்பதை மறத்தல் கூடாது. ஆனால் ரெட்டியோ.....

    தாம் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    சொந்தபந்தம் என்று எந்தவொரு நாதியும் இல்லாத அனாதை நோயாளிகளுக்கு எவரும் பிரார்த்தனை செய்வதில்லை; செய்யப்போவதும் இல்லை. அத்தகையவர்களைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சை மட்டும் போதாது என்று நினைக்கிறாரா ரெட்டி?

    பணம் படைத்தவர்கள் எப்படியோ, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடுகிற ஏழை எளியவர்கள்,  நோயைக் குணப்படுத்த அல்லும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தித்துப் பலன் கிடைக்காத நிலையில்தான் மருத்துவர்களை நாடுகிறார்கள் என்பதை பிரதாப் சி .ரெட்டி போன்ற மருத்துவர்கள் மறந்துவிடக் கூடாது.
    ===============================================================================











    செவ்வாய், 15 நவம்பர், 2016

    நம்பாதீர், நம்பாதீர்.....ஜோதிடத்தை நம்பாதீர்!

    http://naanmaanudan.blogspot.com என்னும் ஒரு புதிய வலைப்பக்கத்தில் வெளியான பதிவின் நகல் இது. அதன் உரிமையாளருக்கு நன்றி.


    விண்ணில் உலவும்  கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை பற்றிய தங்களுக்குள்ள அரைகுறைப் புரிதலுடன் நீண்ட நெடுங்காலமாய் மக்களை ‘அறிவிலிகள்’ ஆக்கிகொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

    நீங்கள் ஜோதிடம் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடம் கேட்டுவையுங்கள். சிலரேனும் திருந்தக்கூடும்.


                                                            கேள்விகள்:
    ஒன்று:
    கோள்கள் வரிசையில் உள்ள ராகுவையும் கேதுவையும் ‘நிழல் கோள்கள்’ என்கிறீர்கள். அவை பூமி, சந்திரன் ஆகியவற்றின் நிழல்கள்தான்.  நீங்கள் சொல்வதுபோல், ‘நிழல் கோள்கள்’ என்று எவையும் இல்லை. அவற்றையும் கணக்கில் கொண்டு நீங்கள் பலன் சொல்வது தவறு அல்லவா? 

    இரண்டு:
    பூமியும் ஒரு கோள்தான். இதைக் கணக்கில் கொள்ளாமல் மக்களுக்குப் பலன் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்குப் பெரும் தீங்குகள் விளையும் என்பதை அறிவீர்களா?

    மூன்று:
    திங்கள்[சந்திரன்] என்பது பூமியைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். அதை முதன்மையான ஒரு கோளாகக் கருதிப் பலன் சொல்லுகிறீர்கள். இது தவறு என்பதை நீங்கள் உணர்ந்தது உண்டா? இல்லையெனில், இனியேனும் உணர்வீர்களா?

    நான்கு:
    மற்ற கோள்கள் தெறித்து விலகித் திசை கெட்டு ஓடிவிடாதவாறு அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது ஞாயிறு[சூரியன்],  அந்த ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்று ஜோதிட முன்னோடிகள் அறியாமையால் சொன்னதையே இந்த அறிவியல் யுகத்திலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். திருந்தவே மாட்டீர்களா? ஜோதிடத் தொழிலைக் கைவிடவே மாட்டீர்களா?

    ஐந்து:
    யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. உங்கள் ஜோதிடக் கணக்கில்  இவை இடம்பெறவில்லை.  இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் எப்படி ஜாதகம் கணிக்கிறீர்கள்?

    ஆறு:
    செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்வதில்லை.

    உங்களின் ஜோதிடக்கலை முன்னோடிகள் தங்களுக்கிருந்த அரைகுறை வானிலை அறிவைப் பயன்படுத்தித்தான் ஜோதிடக் கணக்கை வகுத்துவிட்டுப் போனார்கள் என்னும் உண்மை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இனியும் பொய்யான பலன்களைச் சொல்லி மக்களின் வாழ்க்கையை வீணடிக்கப் போகிறீர்களா?

    இக்கேள்விகளை என் கணினியிலேயே நகல்கள் எடுத்து அவ்வப்போது, அறிந்தவர் அறியாதவரிடமெல்லாம் வினியோகித்து வருகிறேன். எனக்கான பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று!
    ===========================================================================================================
    உதவி: ‘பெரியார் சாத்தித்ததுதான் என்ன?’, தமிழ்க்குடி அரசுப் பதிப்பகம், சேப்பாக்கம், சென்னை - 600 005.