எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 3 மே, 2018

கன்னடர் வாட்டாள் நாகராஜ் வாழ்க...வாழ்கவே!!!

கர்னாடகத் தமிழர்களை எதிர்த்து அரசியல் நடத்தியே பிரபலம் ஆனவர் கன்னடரான வாட்டாள் நாகராஜ். திராவிட இனத்தவராயினும், இன்றளவும் அவர் தமிழகளுக்கு எதிரிதான். அவரை வாழ்த்தலாமா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம்! வாட்டாளை வாழ்த்துவதற்காகவே இந்தப் பதிவு!

கர்னாடகத்தில் உள்ள 'சாம்ராஜ் நகர்' ஒரு ராசியில்லாத ஊராம். அங்கு சென்று திரும்பிய ஒரே காரணத்தால், முன்னாள் முதல்வர்களான தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, வீரேந்திர பாட்டீல், குமாரசாமி உள்ளிட்டோர் ஆட்சியை இழந்தார்களாம். அதன் விளைவாக.....

முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவ கவுடா, ஜேஹெச் படேல், எஸ்.எம்.கிருஷ்ணா முதலானவர்கள் சாம்ராஜ் நகர் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லையாம்.

கர்னாடகாவின் மிகப் பல அரசியல் தலைவர்களும் பித்துக்குளித்தனமான இத்தகையதொரு மூடநம்பிக்கையில் புதையுண்டு மூச்சுத் தினறிக்கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பரப்புரைக்காகக் கர்னாடகா சென்ற பிரதமர் மோடியும் சாம்ராஜ் நகருக்குள் செல்வதைத் தவிர்துவிட்டாராம்.

விடுவாரா சித்தராமையா? ''தைரியம் இருந்தால், மோடி சாம்ராஜ் நகருக்குள் காலடி வைக்கட்டும் பார்ப்போம்'' என்று சவால் விட்டிருக்கிறார்.

இவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையறியாமல் மனம் குழம்பிக் கிடக்கும் மோடியை, அனைத்துக் கர்னாடக அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையான வாட்டாள் நாகராஜ் வேறு கதிகலங்க வைத்திருக்கிறார். 
''சாம்ராஜ் நகர் என் பிறந்த ஊர். இங்கு நுழைந்தால் பதவி பறிபோய்விடும் என்பதான ஒரு மூடநம்பிக்கையை இங்குள்ள அரசியல்வாதிகள் மக்கள் மனங்களில் வேரூன்றச் செய்திருக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் இங்கு வருவதில்லை.....

.....2013ஆம் ஆண்டு, முதல்வர் சித்தராமையா இங்கு வராவிட்டால் அவர் மீது வழக்குத் தொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தேன். அதற்குப் பிறகு அவர் சாம்ராஜ் நகருக்கு 11 முறை வந்திருக்கிறார்.

இப்போது, இந்த மாவட்டத்திற்குத் தேர்தல் பரப்புரை செய்ய வந்திருக்கும் பிரதமர் மோடி, சாம்ராஜ் நகருக்கு  வருகை தராமல் வெந்த புண்ணில் வேல் சொருகியிருக்கிறார்; எங்கள் அத்தனை பேரையும் அவமானப்படுத்தியிருக்கிறார். இவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்'' என்று சூளுரைத்திருக்கிறார் வாட்டாள் நாகராஜ்.

வாட்டாளின் துணிவும் மூடநம்பிக்கை எதிர்ப்புணர்ச்சியும் நம்மை வியக்க வைக்கிறது.

நம் இனத்தவர் மீது பகைமை பாராட்டுபவர் ஆயினும், மூடநம்பிக்கை ஒழிப்பில் முழுமூச்சுடன் களம் இறங்கியிருக்கும் அவரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறோம்.

பாராட்டுகள் சகோதரர் வாட்டாள் நாகராஜ் அவர்களே.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000