திங்கள், 31 அக்டோபர், 2022

கடுப்பேற்றும் 'பாஜக' அண்ணாமலையாரின் கடவுள்[ஈஸ்வரன்] பக்தி!!!

'கார் வெடிப்புச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது. வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்றுத் தங்களது கடையடைப்புப் போராட்டத்தை அவர்கள் ஒத்திவைத்தனர்'

இது இன்றைய மாலைச் செய்தி[மாலைமலர் 31 அக்டோபர் 2022 11:42 AM].

இன்று வெளியான பலதரப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று. விவாதிப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ இதில் யாதொன்றும் இல்லை.

ஆனால், இதே இதழில் வெளியான வேறொரு செய்தியோ வெறுப்பேற்றுகிறது; எரிச்சலூட்டுகிறது.

'கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தைக் கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்திவிட்டதாகவும்[கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ஆம் தேதி இடம்பெற்ற கார் வெடிப்பு நிகழ்வை மனதில் கொண்டு இப்படிப் பேசியிருக்கிறார் அவர்]. இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனைத் தரிசிக்கக் கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தெரிவித்தபடியே கோட்டை ஈஸ்வரனைத் தரிசித்தார்' என்பதே அந்தச் செய்தி.



அண்ணாமலையாருக்குச் சிந்திக்கும் பழக்கமே இல்லையோ என்று எண்ண வைக்கிறது அவரின் இம்மாதிரியான பேச்சும் செயலும்.

இவருடைய கட்சி ஆட்சி நடத்துகிற குஜராத் மாநிலத்தில், ஒரு தொங்கு பாலம் அறுந்து விழுந்து 141 மனித உயிர்கள் பலியாயினவே, அந்தத் தொங்கு பாலத்தை ஓடோடிப் போய், விழாமல் தாங்கிப் பிடித்துப் பலியான உயிர்களை ஈஸ்வரன் காப்பாற்றியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?[அது அங்குள்ள வேறொரு கடவுளின் கடமை என்று அண்ணாமலை நினைத்துவிட்டாரோ?].


கொலை, கொள்ளைச் சம்பவங்களை விடுங்கள், சிறுமிகளும், இளம் பெண்களும் வன்புணர்வு செய்து வதைக்கப்படும் நிகழ்வுகள் தினம் தினம் இந்த நாட்டில் நடக்கின்றன.


அவர்களில் எத்தனைப் பேரைப் பாதிப்புக்கு உள்ளாகாமல் காப்பாற்றியிருக்கிறார் இவரின் ஈஸ்வரக் கடவுள்?


மத்தியில் ஆளுகிற பலம் வாய்ந்த கட்சிக்காரர் என்பதால் மனம் போன போக்கில் அரசியல் பேசுகிறார் தமிழ்நாடு 'பாஜக' தலைவரான இவர்.


அரசியல் யார் வேண்டுமானாலும் பேசலாம். கடவுள் குறித்தும், அவருடைய செயல்பாடுகள் குறித்தும் பேசுவதற்குக் கொஞ்சமேனும் சிந்திக்கும் அறிவு தேவை.


அரசியல்வாதி அண்ணாமலை அவர்கள் இனியும் கருணை வடிவானவன் என்று சொல்லப்படும் கடவுள் குறித்துப் பேசாமலிருப்பது, அவருக்கு நல்லதோ அல்லவோ இந்த நாட்டுக்கு நல்லது.

===================================================================

தமிழ் வழியில் மருத்துவக் கல்வி! மு.க.ஸ்டாலின் வாழ்க!! தமிழ் வளர்க!!!

சென்னையில், ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ள பேருவகை அளிக்கும் ஒரு செய்தி:

#புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ளன. அவற்றிற்கு நடுவணரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், தமிழில் மருத்துவம் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஓராண்டாகத் தமிழ் மொழியிலான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது# https://www.dinamani.com/tamilnadu/2022/oct/31/ma-subramanian-press-meet-3940968.html  31.10.2022.

***மருத்துவக் கல்வி தமிழில் பயிற்றுவிக்கப்படும் அதே வேளையில், தேவைப்படும்போதெல்லாம், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழியையும் கையாளுவதில் தவறேதும் இல்லை.


கல்வி கற்பிப்பது தமிழ்வழியிலாயினும், மாணவர்களின் ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துதல் வேண்டும்.


தமிழ் வாயிலாகக் கற்று மருத்துவராகும் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றியும் அரசு இப்போதிருந்தே திட்டமிடுதல் அவசியம்.


ஆங்கில வழிக் கல்வியே வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பெற்றோரைக் கருத்தில்கொண்டு, தமிழ்வழியில் மருத்துவம் பயில்வதால் விளையும் நற்பயன்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிடுதல் மிகவும் பயனளிப்பதாக அமையும்.


தமிழ்நாடு அரசுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.



ஞாயிறு, 30 அக்டோபர், 2022

லட்சுமி தேவியும் பிள்ளையார் சாமியும் இனி நம் சட்டைப் பைகளில்!!!

'நாடு முன்னேற ரூபாய்த் தாள்களில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும்' என்று டெல்லி முதல்வர் அரவிந்து கெஜ்ரிவால் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பது செய்தி.

நாடு முன்னேற, சரியான கொள்கையும் உழைப்பும் இருந்தால் போதாது; மேற்கண்ட கடவுள்களைத் தினசரி வழிபடுவது அவசியம். ரூபாய்த் தாள்களில் அவர்களின் படங்களை அச்சிடுவது[குறைந்த பட்சம் கந்தலாகிப்போன ஒரு பத்து ரூபாய்த் தாளாவது தினமும் நம் பார்வையில் படுவது உறுதி] அதற்கு ஏற்ற வழிமுறையாக அமையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும்.

ஒரு பக்கம் காந்தி படத்தையும் மறுபக்கம் மேற்கண்ட சாமிகளின் படங்களையும் அச்சிடலாம் என்கிறார் கெஜ்ரி. 

கொஞ்சம் யோசித்திருந்தால், நாடு முன்னேற ஒரு தியாகியாக வாழ்ந்து மரித்த காந்தியின் ஆசி அவ்வளவு முக்கியமில்லை என்பதும், சாமிகளுக்குச் சமமான இடம் அவருக்கு வழங்கப்படக் கூடாது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும். காந்தி படத்துக்குப் பதிலாக[ஒரு பக்கத்தில்] லட்சுமிதேவியின் படத்தையும், மறு பக்கத்தில் விநாயகப் பெருமான் படத்தையும் அச்சிடலாம் என்ற அரிய யோசனையும் அவரின் மூளையில் உதித்திருக்கும்.

மேலும், நம் சிந்தனையில் உதித்த சில திட்டங்கள்:

ரூபாய்த் தாளின் இரு பக்கங்களிலும் உள்ள எழுத்துகளின் வடிவத்தை மிகவும் சிறியதாக்கினால்[மக்கள் ஆளுக்கொரு லென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்று சட்டம் பிறப்பித்துவிடலாம்] அங்கே அளவில் பெரிதான சாமிகளின் படங்களை அச்சிடலாம்.

அல்லது,

ரூபாய்த் தாளின் அளவை[Size]ப் பெரிதாக்கி, ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்துகளை இடம்பெறச் செய்து, மறுபக்கம் முழுதும் சாமிகளுக்கு ஒதுக்கலாம்.

அல்லது,

தாளின் இரு முழுப் பக்கங்களிலும்[ஒரு பக்கம் லட்சுமியும் அடுத்த பக்க விநாயகரும்]  அவர்களின் உருவம் பதித்து அவற்றின் மேல், சாமி படங்களைப் பெரிதும் மறைக்காத வகையில் எழுத்துகளை அச்சிடுவது  சாலச் சிறந்த செயல்பாடாகும்.

மேற்கண்ட இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல சக்தி வாய்ந்த சாமிகளையும் மக்கள் மதித்துப் போற்றி வழிபடுகிறார்கள். அவர்களின் மனம் கோணாதிருக்க, ரூபாய்த் தாள்களில் அவர்களுக்கு இடம் வழங்குவதற்கான வழிவகைகள் பற்றியும் கெஜ்ரிவால் அவர்களும், பிரதமர் மோடி அவர்களும் ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!

=========================================================================

வெள்ளி, 28 அக்டோபர், 2022

காமம் கொடியது! எந்தவொரு நோயினும் வலியது!!

து ஒரு கள்ளக் காதல் கதை. பெங்களூருவில் நேற்று[27.10.2022] நடந்த இந்தக் கதை நிகழ்ச்சி ஒரு மர்மக் கதையைப் போல் சுவாரசியமானது.

கல்யாணம் ஆன ஒரு வயசுப் பொண்ணு அவள். புருசன் தர்ற புணர்ச்சி சுகம் கட்டுபடி ஆகாததால் ஒரு கள்ளப் புருசனைத் தேடிக்கொள்கிறாள்.

அவனிடம் அவள் எதிர்பார்த்தது கிடைத்தது. ஆனாலும் என்ன, நினைத்த நேரங்களில் நினைத்தபடியெல்லாம் அனுபவிக்க விடாமல் புருசன்காரன் இடையூறு பண்ணுகிறான்.

பாவம் அவள். புருசனை அடக்க வேறு வழி எதுவும் தென்படாத நிலையில், அவனைப் போட்டுத்தள்ளிவிட முடிவெடுக்கிறாள். ஒரு நல்ல நாளும் அதுவுமாக கள்ளக் காதலனை மாடியில் தங்கவைத்து மணாளன் வந்ததும் அவனை மாடிக்கு அழைத்துச் செல்கிறாள்.

காதலனிடம் ஒரு மரக் கட்டையைக் கொடுத்துத் தாலி கட்டியவனைத் தாக்கச் சொல்லுகிறாள். அவனும் தப்பாமல் அதைச் செய்து முடிக்கிறான்.

அடுத்து நிகழவிருப்பது எவரும் எதிர்பாராதது.

கணவனை அடித்து வீழ்த்தக் கள்ளக் காதலனிடம் மரக்கட்டையைக் கொடுத்த காரிகை[Shwetha என்பது அவள் பெயர்] கூரிய ஒரு கத்தியையும் கொடுத்தாள். அந்தக் கத்தியால்.....

'நறுக்'கென்று சந்துருவின் அந்தரங்க உறுப்பை வெட்டித் தள்ளினான் க.காதலன் சுரேஷ் dnawebdesk@gmail.com (DNA Web Desk) - Yesterday 9:45 pm].

கட்டிய புருசன் வேண்டாம் என்றால் விவாகரத்துச் செய்யலாம். அது சாத்தியப்படாமல், கள்ளக் காதலனுடனான சல்லாபத்துக்கு அவன் இடையூறாக இருந்தால் கொலையும் செய்யலாம் என்பது எழுதப்படாத கள்ளக் காதலர் நீதி.

கள்ளக் காதலர்களில் ஒருத்தியான இந்த ஸ்வேதா வேண்டாத புருசனைக் கொலை செய்தாள், சரி. அவனுடைய ஆணுறுப்பை வெட்டி எடுக்கச் செய்தாளே, அது ஏன்?[இன்று அதிகாலை முதல் சற்று முன்னர்வரை யோசித்தும் விடை கிடைக்கவில்லை].

"காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே" என்கிறார் ஒரு சங்க காலப் புலவர்.

'காமம் அச்சுறுத்துப் பேயல்ல[அணங்கு>பெண் தெய்வம்]; வருத்தும் நோயும் அல்ல' என்று தேற்றும் அளவுக்குக் காம உணர்ச்சி அக்காலத்தில்[மக்களை நோகடித்திருந்தாலும்] ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது.

ஆனால் இக்காலத்தில், "காமம் கொடியது; எந்தவொரு நோயினும் வலியது" என்று எச்சரிக்கும் அளவுக்கு இது பெரும் தீங்குகளை விளைவிக்கிறது என்பதற்கு ஸ்வேதாவின் குரூரச் செயலும் ஓர் எடுத்துக்காட்டாகும்!

* * * * *

#..... Chandru had moved his wife to Yelahanka following this occurrence. Her lover Suresh continued to contact her in the meantime. Then, finding it difficult to carry on with her affair, Shwetha asked Suresh to kill her husband. When Chandru arrived home on October 21, Shwetha led him to the rooftop, where Suresh was hiding, and assaulted him there.

According to the police, Shwetha gave her lover a wooden log to hit Chandru with. Police claimed that she had also given him a knife and used it to hack her husband's private area. After killing Chandru, Shwetha pretended that nothing had happened and asserted that Chandru hadn't come home from work. Family members started looking for Chandru when he didn't come home, and they eventually found him on the rooftop.....#

https://www.dnaindia.com/india/report-bengaluru-woman-gets-lover-to-cut-off-
husband-s-private-part-both-arrested-for-murder-2996468 [copy&paste]

வியாழன், 27 அக்டோபர், 2022

ஓர் எளிய கேள்வியும் நாம் அறிந்திராத அரிய பதிலும்!


"இறந்த உடலில் உள்ள 'உடலுறுப்புகள்' எவ்வளவு மணி நேரம்வரை உயிர் வாழ்கின்றன? விளக்கம் தருக"[ta.quora.com].

பதில்:

ஒரு மனிதன் இறந்த பிறகு அதிகப்படியாக நான்கு நிமிடங்கள்வரை சில உறுப்புகள் செயல்படும். பிறகு அவையும் செயலிழந்துவிடும்.


முதலில் இதயம் செயலிழக்கிறது. அதன் விளைவு மூச்சுவிடுதல்[சுவாசம்] நின்றுபோகிறது.


இதயம் இயங்காததால் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து செல்லும் இரத்தம் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.


மூச்சு நின்றுவிடுவதால், தூய 'உயிர்க்காற்று'[ஆக்ஸிஜன்] உடம்புக்குள் செல்வது தடைப்படுகிறது. எனினும்.....


மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தங்கள் வசம் ஏற்கனவே உள்ள இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நான்கு நிமிடங்கள்வரை வேலை செய்யும்[நன்றி: விஸ்வநாதன் இராமசேசன், பொது மருத்துவ நிபுணர்]. 


அதன்பிறகு.....


ஒட்டுமொத்த உறுப்புகளும் செயலிழக்க, உயிர் என்றோ, ஆன்மா என்றோ, ஆவி என்றோ ஒன்று இருந்தால் அது, 'பிணம்' என்று புதிய நாமகரணம் சூட்டப்பட்ட உடம்புக்கு 'Bye' சொல்லிப் பிரியா விடை பெற்றுவிடும்.



* * * * *

புதிய பதிவு தயாரானதும் மீண்டும் சந்திப்போம்.


"Bye... Bye... Bye"


குறிப்பு:

'பசி'பரமசிவம் 'முனைவர்'[மருத்துவம் படிக்காத 'டாக்டர்'!] பட்டம் பெற்றவராம்; முன்னாள் தமிழ்ப் பேராசிரியராம். 'Bye'க்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் தெரியல. வெட்கக்கேடு!

===============================================================================


புதன், 26 அக்டோபர், 2022

அழியும் தமிழும் ஐயோ பாவம் தமிழர்களும்!!

*17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆங்கிலம் பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகின்ற அரசுப் பள்ளிகளில் தமிழும் பயிற்றுமொழியாகக் கொண்டு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளாக அவை மாற்றப்பட்டுள்ளன என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துப் பள்ளிக் கல்வித் துறையிடம் விளக்கம் கேட்டபோது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் ஒன்றுகூட இல்லை என்று சொல்லியிருக்கிறது[சமாளித்திருக்கிறது] அரசு[www.thanthitv.com].

தமிழ்நாட்டில் 54 அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?

தமிழர்கள்தான். தமிழர்களான தமிழ்ப் பெற்றோர்கள்தான். 

*தமிழ்நாட்டில் 34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக உள்ளன[இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது].

வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழியில்தான் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள். உலக நடப்பை அறியாத ஏழைகள்தான் தமிழ்ப் பயிற்றுமொழியைத் தேர்வு செய்கிறார்கள்.

தாய்மொழி வழியில் கல்வி பெறுவதே குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது என்று மிகப் பல ஆண்டுகளாக அறிஞர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசோ பெற்றோர்களோ இதைச் செவிமடுப்பதில்லை.

*மருத்துவக் கல்வியைக் கற்பிக்க அமித்சா இந்தி மொழியிலான பாட நூல்களை வெளியிட்டார் என்பது செய்தி. தமிழில் பாட நூல்களை உருவாக்கும் முயற்சி மன நிறைவு தரும் வகையில் இல்லையே. 

மாநில மொழிகளைப் புறக்கணித்து, இந்தி வளர்ச்சிக்காகக் கோடானு கோடிக் கணக்கில் நடுவணரசு ஆண்டுதோறும் செலவழிப்பதை நம்மால் தடுக்க முடியாதது ஏன்?

*இந்தியை நுழைய விடமாட்டோம் என்று கூக்குரல் எழுப்புபவர்களுக்கு, தமிழ்நாட்டில் நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ள, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே போன்றவற்றில்[படிவங்கள், பெட்டிகள், பெயர்ப் பலகைகள் என்றிவற்றில்] இந்தி கோலோச்சுவது தெரியாதா?

*பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுதாத கடைகள்[எழுதினாலும் ஓர் ஓரத்தில் துக்கிளியூண்டு எழுத்தில்...] ஏராளமாக உள்ளன. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

*நெடுங்காலமாக இந்திப் பிரச்சார சபா மூலமாகவும், தனியார் தம் வீடுகளிள் நடத்தும் தனிப்பயிற்சி மூலமாகவும், அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகள் வாயிலாகவும் லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தி படித்திருக்கிறார்கள் என்பது "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!!" முழக்கம் செய்வோருக்குத் தெரியாதா?

இந்தக் கேள்விகள்.....

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்புச் சார்பில் நடந்த இந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்துவையும் உள்ளடக்கியவைதான்.

"ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது. 85 ஆண்டுகளாக ஒரு மொழியைத் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை அலுவலக மொழியாகக் கொண்டுவர மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது. அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குள் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி இந்தி மொழியால் புறந்தள்ள முடியும்? தமிழ் மொழி பீனிக்ஸ் பறவைபோல. அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும். அதோடு சட்டத்தால் தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள், இதைச் சரித்திரத்தாலும் அழிக்க முடியாது; சட்டத்தாலும் அழிக்க முடியாது. முந்திரிகள் இருக்கும் மூட்டைக்குள் வண்டுவை நுழையவிட்டால் அது முந்திரியை அழித்துவிடும். அதேபோல் இந்தியை நுழையவிட்டால் அது தமிழ் மொழியை அழித்துவிடும். சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்து, நுழைந்ததுதான் இந்தி மொழி. நேற்றுப் பிறந்தது இந்தி மொழி, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள்." -இது வைரமுத்து வழங்கிய கருத்துகளின் தொகுப்பாகும்.

அதிகாரம் மிக்க நடுவணரசின் ஆதரவால் வெகு வேகமாக இந்தி வளருவதையோ, தமிழரின் போலித் தமிழ்ப்பற்று காரணமாக மெல்லத் தமிழ் அழிந்துகொண்டிருப்பதையோ எப்படித் தடுத்திட முடியாதோ அப்படி, அவ்வப்போது நம்மவர்கள் எழுப்பும் "தமிழ் வெல்லும்" முழக்கத்தையும் தடுக்க இயலாது.

முழங்குங்கள். தமிழ் முற்றிலுமாய் அழிந்து ஒழியும்வரை முழங்கிக்கொண்டே இருப்போம்!

"வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!"

===============================================================================

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வன்புணர்வு நிகழ்வுகளைக் காணொலியாக்கும் கயவர் கூட்டம்!!!

#த்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டைவிட்டுக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்துகிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு சிறுமி ரத்தக்காயங்களுடன் காணப்படுகிறாள்; கைகளை நீட்டித் தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி உதவி கேட்கிறாள். ஆனால் சிறுமியைச் சுற்றி நிற்கும் ஆண்கள் அவளுக்கு உதவுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் தங்களின் செல்போனில் சிறுமியைப் படம் எடுப்பதில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர்.

இடையில், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்றும், போலீஸ் உயர் அதிகாரியின் எண் என்ன என்றும் சிலர் விசாரிக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்குப் பதில் தராமல் தொடர்ந்து படம் பிடிப்பதிலேயே அக்கறை செலுத்துகின்றனர். அந்த இடத்திற்குப் போலீஸார் வந்துசேரும்வரையில் சிறுமிக்கு யாரும் உதவவில்லை. 

இந்தச்சம்பவம் குறித்து வெளியான இரண்டாவது வீடியோ ஒன்றில், போலீஸ்காரர் ஒருவர் சிறுமியைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடுகிறார்# https://www.hindutamil.in/news/india/887219-up-shock-injured-girl-seeks-help-people-busy-filming-her.html  -25 Oct, 2022 12:37 PM

வன்புணர்வோ வேறு வன்முறையோ, மனம் பதறச் செய்யும் அவல நிகழ்வு எதுவானும், அதைக் காணொலியாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து இன்புறும்[பணம் சம்பாதிப்பவர்களும் உண்டோ?] மனிதாபிமானம் இல்லாத குரூரப் புத்தி படைத்தோர் எண்ணிக்கை நாளும் பெருகிவருகிறது.

இவர்களும் ஒருவகையில் வன்புணர்வாளர்கள்தான்; வன்முறையாளர்களும்கூட. உதவும் முயற்சி சிறிதுமின்றி, படம் பிடித்துப் பகிர்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு கைபேசியும் கையுமாக அலையும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

அரசு உரிய முறையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உடனடித் தேவை ஆகும்!

***'வன்புணர்வு குறித்த செய்தி வராத நாளே இல்லை' என்று பழைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். "வன்புணர்வு குறித்த செய்திகளே இப்போதெல்லாம் வருவதில்லை" என்று சொல்லி மகிழும் நாள் எப்போது வரும்?! 

மனிதர்கள் தாமாகத் திருந்துவார்களா, இல்லை, இவர்கள் நம்பும் கடவுளே நேரில் வந்து சொன்னால்தான் திருந்துவார்களா?




திங்கள், 24 அக்டோபர், 2022

ஆண் கொசுக்களுக்கு 'மரபணு' மாற்றம்! பெண் கொசுக்களுக்கு?!

கொசுக்களில் 3000க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும், நோய்க் கிருமிகளைச் சுமந்து திரியும் சில குறிப்பிட்ட இனக் கொசுக்களே மனிதர்களுக்கு நோய்களைப் பரப்புகின்றன. இதனால், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.


ஆண் கொசுக்களின் மரபணுவை மாற்றி அமைப்பதன் மூலம் இதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள். ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். 

2020 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிறுவனமான 'Oxitec', 2021ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் புளோரிடாவிலும், கலிபோர்னியாவிலும் 750 மில்லியன் மரபணு மாற்றப்பட்ட[ஆய்வகங்களில்] கொசுக்களை வெளியிட உள்ளது உரிய வகையிலான ஒப்புதல் கிடைத்ததால்.

மாற்றியமைக்கப்பட்ட இனங்களின் குறியீட்டுப் பெயர் OX5034 என்பதாகும்.

ஏடிஸ் ஈஜிப்டி கொசுக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் கொசுக்களுக்கு இந்த மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றம் செய்யப்பட்டதால், இவ்வகை ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணைந்து உற்பத்தி செய்யும் லார்வாக்கள்[குஞ்சுக் கொசுக்கள்] வயதுக்கு வருவதற்கு முன்பே இறந்துவிடுமாம்.  

அது மட்டுமல்லாமல், மாற்றப்பட்ட புதிய மரபணுவானது, லார்வாக்கள் உருவாவவதற்குத் தேவையான அத்தியாவசியப் புரதங்களின் உற்பத்தியைச் சீர்குலைத்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் லார்வாக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.

பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து நோய்களைப் பரப்புபவை. மரபணு மாற்றப்பட்டவை உட்பட ஆண் கொசுக்களால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவதில்லை; சுற்றுச்சூழலுக்கும் மாசு உண்டாவதில்லை.

கொசுக்களைப் போலவே, நோய் பரப்பும் மற்றப் பூச்சி இனங்களுக்கும் மரபணு மாற்றம் செய்வது குறித்து அறிவியல் அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இவை எல்லாம் நல்ல செய்திகளே.

நற்செயல் புரியும் அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆண் கொசுக்களுக்குச் செய்தது போலவே, பெண் கொசுக்களுக்கும் மரபணு மாற்றம் செய்து, கோடி கோடி கோடியாய் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குங்கள். அந்தக் கொசுக்கள்.....

கட்டிய பெண்டாட்டி போதாதுன்னு, கள்ளக்காதல், வன்புணர்வுன்னு[வன்புணர்வுச் செய்தி வெளியாகாத நாளே இல்லை] அலைகிற ஆண்களின் காம வெறி கலந்த குருதியை மட்டுமே விரும்பிச் சுவைக்கணும். அந்தக் கொசுக்கள் கடிச்ச உடனே அவங்க புத்தி பேதலிக்கணும், அல்லது மண்டையைப் போடணும். இப்படியான மரபணு மாற்றப் பெண் கொசுக்களை நீங்கள் உற்பத்தி செய்தால் உங்களுக்கு ரொம்பவே புண்ணியம் சேரும்.

செய்வீர்களா விஞ்ஞானிகளே?

===========================================================================

https://bgr.com/science/2-billion-genetically-modified-mosquitos-are-about-to-be-released-in-the-us/

-மார்ச் 10, 2022 பிற்பகல் 3:52

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

கரப்பான்... குதிரை லாட நண்டு... ஜெல்லி மீன்... மனிதர்கள்!!!

410 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் உயிரினங்கள் தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஐந்து முறை[முறையே 44 கோடி ஆண்டுகள், 41 கோடி ஆண்டுகள், 29 கோடி ஆண்டுகள், 20 கோடி ஆண்டுகள், 1/2 கோடி ஆண்டுகள்] நிகழ்ந்த பேரழிவுகளால் பல உயிரினங்கள் அழிந்துபோயினவாம்.

அழிந்த உயிரினங்களில் குறிப்பிடத்தக்கது 'டைனோசர்'.

கடலில் பெரும் பகுதி பனியால் மூடப்படுதல், அஸ்டிராய்டு[குறுங்கோள்கள்] தாக்குதல், பருவ நிலை மாற்றம், ராட்சத விண்கற்கள் பயங்கர வேகத்தில் வந்து பூமியில் மோதுதல், எரிமலை வெடிப்பு போன்றவற்றால் தூசுப் படலம் உருவாகி பூமியை மறைத்தல் என்றிவ்வாறான காரணங்களால் இந்தப் பேரழிவுகள் நிகழ்ந்தன என்கிறார்கள்.

சில வகை உயிரினங்கள் தப்பிப் பிழைத்திருக்க, புதிய உயிரினங்களும் தோன்றியுள்ளன.

அவற்றிடையே குறிப்பிடத்தக்கது மனித இனம்.

மனித இனம் தோன்றியது சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்.

பேரழிவுகளுக்கிடையே அழிந்துபோன உயிரினங்கள் பலவாயினும், அழியாத உயிரினங்களில் மிக மிக மிகப் பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவைகளில் கரப்பான் பூச்சி, குதிரை லாட நண்டு, ஜெல்லி மீன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கரப்பான் இனத்தின் ஆயுள் 32 கோடி ஆண்டுகள்.

குதிரை லாட நண்டு... 44 கோடி.


ஜெல்லி மீன்... 55 கோடி.

நம் மனித இனம் தோன்றி 20 லட்சம் ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், மேற்கண்ட மூன்று உயிரினங்களைப் போல மனித இனமும் மிக நீண்ண்ண்ண்ட காலம் வாழுமா?

வாழ்ந்தாலும், "தனி மனிதர் என்ற வகையில், பிறக்கிற அத்தனை பேரும் செத்துத்தானே போகிறார்கள். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற நாமும் அழியத்தான் போகிறோம். நம் இனம் வாழ்வதால் தனி மனிதரான நமக்கு என்ன பயன்?" என்று கேள்வி கேட்டு எவரும் கவலைப்படத் தேவையில்லை.

மனித இனம் அழியாமலிருந்தால்.....

ஆன்மிகவாதிகளால் என்றுமே அழியாதது என்று சொல்லப்படுகிற நம் ஆன்மா, மீண்டும் மீண்டும் பல பிறவிகள்[நிறையப் புண்ணியம் செய்தால் மனிதராகவே பிறக்கலாம்] எடுத்துச் சுகபோகங்களை அனுபவிக்கலாம்; அனுபவித்துக்கொண்ண்ண்ண்ண்டே இருக்கலாம். இது நம் ஆசை.

நம் ஆசைக்கிணங்க மனித இனம் நீண்ட காலம் அழியாமலே இருக்குமா?

மறைந்த ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாய் பாபா, ரமண மகரிஷி, பகவான் ரஜினீஷ் எனப்படும் அவதாரங்களில் எவரேனும் உயிருடன் இருந்தால் இதற்கான பதிலை அவர்களிடம் கேட்டுப் பெறலாம். சொர்க்கத்தில் சுகித்திருக்கும் அவர்களுடன் நம்மால் தொடர்பு கொள்ள இயலாது என்பதால் அது சாத்தியமில்லை.

ஆனாலும், முற்றும் துறந்தவரும், முழுதும் அறிந்தவரும், தன்னில் தானே அவதரித்தவருமான பகவான் ஜக்கி வாசுதேவ்[முப்பிறவி கண்டவர்] இன்று நம்மோடு இருக்கிறார். இந்தக் கேள்வியை அவரிடம் சமர்ப்பிப்போம்.

"மனித இனத்துக்கு என்றென்றும் அழிவு இல்லைதானே பகவான் 'ஜக்கி' அவர்களே?!" 

பதிலுக்காகக் காத்திருப்போம்!

                                              *   *   *   *   *

அறிவிப்பு: பகவான் ரஜினீஸ் அவர்களின் 'வழித்தோன்றல்' என்பதால் ஜக்கி அவர்களுக்குப் 'பகவான்' என்னும் சிறப்பு அடமொழி சேர்க்கப்பட்டுள்ளது!

==========================================================================

*** "ஜக்கியை வம்புக்கு இழுக்காவிட்டால் உனக்கு உறக்கம் வராதா?" என்று எவரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு நாம் தரும் பதில்:

"தன்னைத்தானே அவதாரம் ஆக்கிக்கொண்டு அவர் செய்யும் 'அழும்புகள்' தொடரும்வரை நம் வம்புக்கிழுத்தலும் தொடரும்!"

சனி, 22 அக்டோபர், 2022

போற்றி போற்றி! 'மோடிஜி'யின் வழிபடு கடவுள் சிவபெருமான் போற்றி!!

'பிரமதராகப் பதவியேற்ற பின், மோடி தற்போது ஆறாவது முறையாகக் கேதர்நாத்திற்கும், இரண்டாவது முறையாகப் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்றுள்ளார்' என்பது அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி.

'அவரின் வருகையைத் தொடர்ந்து இருகோயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது[கடவுள்கள் கண்டுகொள்வதில்லையா?!]. மேலும், பூக்களால் அக்கோயில்கள் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  இன்று காலை கேதர்நாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. அங்கு எடுத்த புகைப்படம் அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  பகிரப்பட்டுள்ளது' -இவை கூடுதல் செய்திகள்.

பயணத்தின்போது, "மிகப்பெரும் மலையோரங்களை ரசித்தேன். அங்கிருந்த முனிவர்களையும் வணங்கினேன். தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் ஆகியோராலும், பெரும் பாம்புகளாலும் சூழப்பட்ட கேதாரப் பெருமானான சிவபெருமானையே நான் வணங்குகிறேன்" என்று சொன்னது சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.

பிரதமர் 'மோடி' பெரும்பான்மை இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பிரதமர் என்ற முறையில் இந்திய மக்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர்.

எனவே, தம் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட, அனைவராலும் அவர் மதிக்கப்படும் வகையில் வாழ்ந்துகாட்டுவது நல்லது.

அதற்கான வழி.....

மதம், மொழி, இனம், ஜாதி என்னும் எந்தவொரு கட்டுக்கும் உட்படாதவராகத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதே ஆகச் சிறந்த வழியாகும்.

அவர் அந்த வழியைப் பின்பற்றினால் அவரையடுத்து வரும் பிரதமர்களும் அவரைப் பின்பற்ற முயல்வார்கள். அமைச்சர்களும் அதே வழியில் செல்வார்கள்.

இது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கும் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பது உறுதி.

அப்படிக் கலந்துகொள்வது தவிர்க்க இயலாதது என்றால், அம்மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்வது எந்தவொரு ஊடகத்திலும் செய்தியாக வருவதைத் தடுப்பது அவசியம்.

ஆகவே, கேதர்நாத் சென்ற பிரதமர் அவர்கள், "தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், உள்ளிட்டவர்களாலும், பாம்புகளாலும் சூழப்பட்ட கேதாரப் பெருமானான சிவபெருமானையே நான் வணங்குகிறேன்" என்று சொன்னது தவிர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதே அறிஞர் உலகில் தீவிர ஆய்வுக்கு உள்ளாகியிருக்கும் இந்த அறிவியல் யுகத்தில், தேவர்களாலும், அசுரர்களாலும், யக்ஷர்களாலும், பாம்புகளாலும் சூழப்பட்ட சிவபெருமானே என் கடவுள்" என்று உலகறிய அறிவிப்புச் செய்தது முகம் சுளிக்கச் செய்வதாக உள்ளது.

இச்செயலை இவர் செய்ததால் சிவபெருமானை வழிபடுவோர் எண்ணிக்கை அதிகரிக்குமா?

இந்து மதம் மேலும் மேலும் வளர்ச்சி அடையுமா?

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்!

================================================================

வெள்ளி, 21 அக்டோபர், 2022

'மடிக்கும்' மடிக்கணினி 10.11.2022 முதல் விற்பனைக்கு!


  • *தொழில்நுட்ப நிறுவனமான 'ஆசஸ்' இந்தியாவில் முதன் முதலாக, மடிக்கக்கூடிய மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது[https://zeenews.india.com/technology/asus-launches-first-foldable-laptop-asus-zenbook-17-fold-oled-in-india-check-specs-price-more-2524948.html].

  •  *நவம்பர் 10 முதல் இந்த லேப்டாப் ரூ.3,29,290க்கு விற்பனைக்கு வரும்.

  •  

  • *இது 17.3 இன்ச் ஓஎல்இடி திரை, 12வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7, விண்டோஸ் 11 போன்றவற்றைக் கொண்டுள்ளது.

  • காணொலி:



=========================================================================


வியாழன், 20 அக்டோபர், 2022

'தற்காலிக மறதி நோய்'[Transient global amnesia]..... ஓர் அறிமுகம்!

'தற்காலிக உலகளாவிய மறதி நோய்'(TGA) உலக அளவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்படுகிறது.


பொதுவாக, இது 2மணி முதல் 8 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது[அதிகபட்சம் 24 மணி]; நோயாளி பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவார்; மறதியைத் தவிர மற்ற அறிவாற்றல் குறைபாடு ஏதும் நேராது; குவிய நரம்பியல் கோளாறுகளுக்கு வாய்ப்பில்லை[Transient global amnesia(TGA) is a sudden, temporary interruption of short-term memory. Although patients may be disoriented, not know where they are or be confused about time, they are otherwise alert, attentive and have normal thinking abilities].


நோய்க்கான காரணங்கள்:

  • குளிர்ந்த அல்லது சூடான நீரில் திடீரென மூழ்குதல்

  • கடுமையான உடல் உழைப்பு

  • உணர்ச்சிவசப்படுதல், அல்லது, மன அழுத்தத்திற்கு உள்ளாதல்

  • சில தீவிர மருத்துவச் சிகிச்சைகள்

  • உடலுறவு

  • அதிகமாக மது அருந்துதல்

  • சில மயக்க மருந்துகள் அதிக அளவில் செலுத்தப்படுதல்

  • சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்துதல்


நோய்ப் பாதிப்பு...
இரு நிகழ்வுகள்:


*'ஜான் பர்மிங்காம்' என்பவர் பத்திரிக்கை ஆசிரியர். அவர் மனைவி 'லோலா'. சற்று முன்னர் ஒரு பிறந்த நாள் நிகழ்வுக்குச் செல்லத் தன்னை அலங்கரித்துக்கொண்டார் அவர். ஆனால், அப்போது உடை மாற்றியது[அலங்கரித்துக்கொண்டது] எதற்கு என்பது மறந்துபோகக் குழப்பமான மன நிலையில் இருந்தார். கணவர் நடந்ததை விவரித்தும்கூட அது அவரின் நினைவுக்கு வரவில்லை.


நினைவு திரும்பச் சில மணி நேரங்கள் ஆயின.



*அயர்லாந்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் உடல் உறவு கொண்டார். பின்னர், 10 நிமிடம் கழித்து, கைபேசியில் முந்தைய நாள் தன் திருமண நாள் என்பதை அறிந்து, மனைவியிடம், "நேற்று நம் திருமண நாள் என்பது மறந்தேபோனது. நீயாவது நினைவுபடுத்திருக்கலாமே" என்றார்.

இதைக் கேட்டு அவர் மனைவி அதிர்ச்சியடைந்தார். காரணம், முந்தைய நாளில் அவர்கள் திருமண நாளைக் கொண்டாடியிருந்ததுதான்.

அவரின் பேச்சு அவரின் மனைவிக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவருக்கு 'டிரான்சிட் குளோபல் அம்னீசியா'[தற்காலிக மறதி நோய்] இருப்பதும், அதற்கான காரணம் அவர் மனைவியுடன் உடலுறவு கொண்டதுதான் என்பதும் கண்டறியப்பட்டன.


இவர் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோல், மனைவியுடனான உடலுறவுக்குப் பிறகு, தற்காலிக மறதி நோய் ஏற்பட்டுப் பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் அதிக அளவில் பாதிப்புகளை உண்டுபண்ணுமா என்பது குறித்து மருத்துவ வல்லுனர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்களாம்.

முக்கியக் குறிப்பு:

இந்த நோய் நம் ஊர்களிலும் உள்ளதா, அல்லது, எப்போது வருகை புரியும் என்பது குறித்தத் தகவலைத் தேடிப் பெற்றிட இயலவில்லை.

எதற்கும், 60 வயதைக் கடந்த கிழங்கள் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. கிழவிகள் எஞ்சிய வாழ்நாளை நிம்மதியாகக் கழிப்பதற்கும் அது வழிவகுக்கும்!

===================================================

https://www.mayoclinic.org/diseases-conditions/transient-global-amnesia/symptoms-causes/syc-20378531

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK442001/


https://www.msdmanuals.com/home/brain,-spinal-cord,-and-nerve-disorders/brain-dysfunction/transient-global-amnesia


https://emedicine.medscape.com/article/1160964-overview