எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 15 ஜூன், 2017

கூகுளில் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்தவர் யார்?

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!” என்பன போன்ற வெற்றுக் கூச்சல்களால் இனியும் தமிழ் வளராது; அறிவியல் துறையில் தமிழ் வளரவில்லையேல் வெகு விரைவில் நம் ‘தெய்வத்தமிழ்’ அழிந்துபோகும்! அதை அழியாமல் காப்பதற்குக் கடுமையாக உழைத்த ஓர் ‘அறிவியல் தமிழ் அறிஞர்’ பற்றிய பதிவு இது.
கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ்ச் சொற்களைத் தந்த பெருந்தகை இவர்தான். தம் வாழ்நாளில் 8.5 லட்சம் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கினார்!

‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’, ‘அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ ஆகியன இவர்தம் ஆக்கங்கள்.

பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவந்த குழுவுக்குத் தலைமை ஏற்றவர்; ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழைத் தமிழில் வெளியிடுவதில் தீவிர முயற்சி செய்து, 35 ஆண்டுகள் அதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் இவர்.

‘அறிவியல் தமிழ் அறக்கட்டளை’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கி இவர் ஆற்றிய தமிழ்ப்பணி  என்றென்றும் மறக்க இயலாதது. தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டுத் தமிழ் வளர்த்தவர்.

‘கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி’ இவர் உருவாக்கியதே.

தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986இல் முதன்முதலில் சென்னையில் நடத்திய சாதனையாளர். அறிவியல், தொழில்நுட்பம், கணினித்துறை ஆகியன சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்ட அறிவியல் அறிஞர்.

பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகப் பணியாற்றிப் பாராட்டுப் பெற்றவர்.

இவர் ஆற்றிய அளப்பரிய அறிவியல் தமிழ்ப்பணிக்காக, கலைமாமணி, வளர்தமிழ்ச் செல்வர், ‘அறிவியல் தமிழ் வித்தகர்’ போன்ற பல விருதுகளைப் பெற்ற இந்தத் தமிழ்தொண்டர், ‘அறிவியல் தந்தை’ என்றும் போற்றப்படுபவர்.

இத்தனை, இன்னும் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி, தம் 82 ஆம் அகவையில்  காலமானவர் அறிவியல் தமிழ் அறிஞர் ‘மணவை முஸ்தபா’ அவர்கள்.

இன்று அவரின் பிறந்த தினம். அதை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய அரிய பத்து முத்தான தகவல்களை வழங்கியுள்ளார் ‘நாகலட்சுமி சிவலிங்கம்’ அவர்கள்[தி இந்து 15.06.2017]. அவருக்கும் தி இந்துவுக்கும் நம் நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++