எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 23 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டுப் பிராமணர்களின் சிந்தனைக்கு.....!

ஆரியர்கள், வந்தேறிகள், பார்ப்பனர்கள், நால்வகை வர்ணம் கற்பித்தவர்கள், ஜாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டவர்கள், கற்பிக்கப்பட்ட கடவுளரின் பெயரால் ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள் என்றெல்லாம் தமிழ் இன உணர்வாளர்களால்  சாடப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றாலும்கூட, அந்த இனத்தில் தோன்றித் தமிழ் வளர்த்தவர்களும் தமிழ் இனத்துக்காகப் பாடுபட்டவர்களும் இல்லாமலில்லை.

பாரதியின் தமிழ்ப்பற்றையும் தமிழினப் பற்றையும் இங்குள்ள தமிழ்/இனப் பற்றாளர்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

தந்தையார் கண்டித்தும்கூட, தம் இளம் வயதில் சம்ஸ்கிருதம் கற்காமல், தணியாத ஆர்வத்துடன், மீனாட்சிசுந்தரம் என்னும் தமிழ் அறிஞரைக் குருவாக ஏற்றுப் பணிந்து போற்றித் தமிழ் கற்றதோடு, பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து திரட்டிய ஏட்டுச் சுவடிகளை அச்சேற்றுவதற்கென்றே தம் வாழ்வை அர்ப்பணித்த உ.வே.சாமிநாத ஐயர், தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றவர்.

கி.வா.ஜகன்னாதன் என்னும் தமிழ் அறிஞரின் தமிழ் இலக்கியப்பணியும் புறக்கணிக்கத்தக்கதல்ல.

வை.மு.கோதைநாயகி, கல்கி, சாண்டில்யன் என்று தமிழ் மொழிப் பற்றுடன் தமிழ்ப் புதின வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களுக்கென்று ஒரு பட்டியல் உருவாக்கலாம்.

தினமணி நாளிதழில், இயன்றவரை தூய தமிழ்ச் சொற்களைக் கையாள்வதோடு, செல்லுமிடமெல்லாம் தமிழ் முழக்கம் செய்துவரும் அதன் ஆசிரியர் கே.வைத்தியநாதனின் தமிழ்ப்பற்றும் பணியும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.

சௌராஷ்ர மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர் ஆயினும், ''தமிழைத் தவிர வேறொரு மொழியில் பாட மாட்டேன்'' என்று சொன்ன திரைப்படப் பாடகர் டி.எம்.சௌந்திராஜன் தமிழ் உள்ளங்களில் நிரந்தரமாத் தங்கிவிட்டவர்.

யோசித்தால், இப்பட்டியலில் இன்னும் சிலர் இடம்பெறக்கூடும்.

மொழி, இலக்கியம் குறித்த பிராமணர்களின் பணி ஒருபுறம் இருக்க, அரசியலில் அவர்கள் தமிழர் நலன்களுக்காக ஆற்றிய பணி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.

ராஜாஜியைப் பொருத்தவரை அவர் ஒரு தேசியத் தலைவர். மூதறிஞர் என்று பாராட்டப்பட்டாலும், அவர் தமிழக[சென்னை மாகாணம்] முதல்வராயிருந்த குறுகிய காலத்தில் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டமும், பள்ளிகளில் இந்தியைத் திணித்ததும் தமிழர்கள் அவர்மீது கொண்டிருந்த மதிப்பு சற்றே குறைந்திடக் காரணமாக அமைந்துவிட்டன.

எது எப்படியோ,  மொழி & இலக்கியப் பணிகளில் பிராமணர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்காற்றியும்கூட, பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழுக்கு உரிய மரியாதை அளிக்கத் தவறியதாலோ என்னவோ, தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிரானவர்கள் அவர்கள் என்ற எண்ணம் தமிழர் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இந்நிலையில்.....

'தமிழால் இணைவோம்' என்று உரத்த குரல் எழுப்பி, பிழையற்றதும் தரமானதுமான தமிழில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவரும் 'தி இந்து'[தமிழ்] நாளிதழின் தமிழ்ப்பணி, பிராமணர்களின் மீதான அபிப்ராயத்தைச் சற்றே மாற்றியிருக்கிறது எனலாம்.

ஆனந்த விகடன் ஆற்றிவரும் தமிழ்ப் பணியும் தமிழ் இனத்தின்[குறிப்பாக, இலங்கைத் தமிழர்] நலம் குறித்தான அதன் பங்களிப்பும் பிராமணர்கள் மீதான மதிப்பைச் சற்றே கூட்டுவனவாக உள்ளன.

''நான் தமிழன்; பகுத்தறிவாளன்; தமிழினத்துக்காக உழைப்பேன்'' என்று கனத்த குரலில் முழக்கமிடுகிறார் நடிகர் கமலகாசன்.

இவ்வகையில் பிராமணர்களில் சிலரின் ஆக்கபூர்வமான இச்செயல்கள் ஆரியர் என்றழைக்கப்பட்ட அவர்களுக்கும் ஏனைய தமிழர்களுக்குமான இடைவெளி குறைந்துவருதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இது வரவேற்கத்தக்க நல்லதொரு சூழல் ஆகும். இந்நிலையில்.....
ஆண்டாள் குறித்த சிறப்புரையில் ஆண்டாளை அவமதிக்கும் நோக்கம் தனக்கு அணுவளவும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கவிஞர் வைரமுத்து விளக்கம் தந்த நிலையில், ஜீயர் தலைமையில், திருவரங்கத்துப் பிராமணர்கள் ஒருங்கிணைந்து [ஒருங்கிணைத்தவர்கள், விசு, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள்] போராட்டம் நடத்தியது, கவிப்பேரரசு வைரமுத்துவை மட்டும் சிறுமைப்படுத்துவதற்காக அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களையும் சிறுமைப்படுத்தி, மொழி மற்றும் இனத்தின் மீதான அவர்களின் பற்றுதலைப் பலவீனப்படுத்துவதற்காகவே என்று நம்பத் தோன்றுகிறது.

எஸ்.வி.சேகரும் ஹெச்.ராஜாவும் மனம்போன போக்கில் வெளிட்டுவரும் அறிக்கைகள் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவனவாக உள்ளன; பிராமணர்களையும் தமிழர்களையும் பிரித்து வைத்திருக்கும் இடைவெளி, இனிக் குறைவதற்கு மாறாக அதிகரிக்குமோ என்னும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன.

தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிராமணர்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது.

சிந்திப்பார்களா?!
=================================================================================