வெள்ளி, 29 ஜனவரி, 2016

பஞ்சாப் மாநிலத்துக் காட்டுமிராண்டிக் கும்பலும் கடமை தவறிய மாநில அரசும்!

மாரடைப்பால் செத்துப்போனார் ஒரு சாது. அவரின் ஆன்மா, கண்டம்விட்டுக் கண்டம் சென்று தியானம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லி, சவத்துக்கு இறுதிச் சடங்கு செய்யாமல், இரண்டு ஆண்டுகளாக 'உறைநிலைப் பனி'யில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள் அவரின் பக்தர்கள்.

இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது, பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம், நூர்மகால் கிராமத்தில் உள்ள ‘திவ்ய ஜோதிஜாக்ரதி சன்ஸ்தான்’ என்னும் பெயர் கொண்ட ஆன்மிக மடத்தில்[தி இந்து, ஜனவரி 29, 2016].
மடத்தின் நிர்வாகிகள், சாதுவின் மகனிடம் உடலை ஒப்படைக்க மறுத்துவிட்டார்களாம். அவர்கள் சொல்லும் காரணம்.....

“கண்டம் விட்டுக் கண்டம் சென்று ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சாது என்றேனும் ஒருநாள் திரும்பி வந்து, தன் பிணத்துடன் ஐக்கியமாகி, எழுந்து நடமாடி, இந்த உலகை உய்விக்க இருக்கிறார்.”

சாமியார் ‘அசுதோஷ் மகராஜ்’ மகன் ’திலீப் குமார் ஜா’வை, சாமியாரின் மகனாக ஏற்க மடத்தின் நிர்வாகம்[மூடர் குழு] மறுத்துவிட்டதாம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் அவர்.

2014, ஜனவரி 29ஆம் தேதி இறந்துபோன சாது அசுதோஷ் மகராஜ் பெயரில் ரூ1500 கோடிக்கும் மேலாக, சொத்துகள் உள்ளனவாம். அவற்றை அபகரிக்க, அறங்காவலர் குழுவிலுள்ள சிலர் திட்டமிட்டு, அவரின் ஆன்மா நாடுவிட்டு நாடு சென்று தியானம் செய்வதாகப் புருடா விட்டுப் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பதுகூடச் சாத்தியம்தான்.

இந்நிலையில், இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு எடுத்திருக்கவேண்டிய நடவடிக்கை என்ன?

மருத்துவர் குழுவை அனுப்பி, சாதுவின் மரணம் இயற்கையானதுதான் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

சட்ட ரீதியாக, மரபணுச் சோதனை நடத்தியோ வேறு ஆதாரங்கள் மூலமோ, சாதுவின் மகன்தான் திலீப் குமார் ஜா என்பதை உறுதி செய்வதோடு, சடலத்தை அவரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

தடை செய்வோரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

இவற்றில் எந்த ஒன்றையும் பஞ்சாப் அரசு செய்யவில்லை. மாறாக.....

பக்தர்கள் 24 மணி நேரமும் சவத்துக்குக் காவல் புரிய, பஞ்சாப் அரசின் 40 போலீசார் மடத்தின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

“அயலிடத் தியானத்திலிருந்து அவர்[சாமியார்] மீண்டு வருவார். அதற்காக நாங்கள் எத்தனை காலமும் காத்திருப்போம்” என்று மூடர் குழுவின்/மடத்தின் செய்தித் தொடர்பாளர் விஷாலானந்த் ‘தி இந்து’விடம் கூறியிருக்கிறார்.

செத்த மனிதனின் பிணம் மீண்டும் உயிர் பெற்று எழும் என்று மடத்தின் நிர்வாகிகளும் பக்தர்களும் நம்புவதில் தவறில்லை. ஏனெனில், அவர்கள் அத்தனை பேரும் முழு மூடர்கள்.

இம்மாதிரி மூடநம்பிக்கைகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்களே மாநில ஆட்சியாளர்கள், அவர்களை  என்ன சொல்லி அழைப்பது?!
=============================================================================================









வியாழன், 28 ஜனவரி, 2016

முதலிரவை மறந்து ஆய்வுக்கூடத்தில் தஞ்சம் புகுந்த அதிசய விஞ்ஞானி!

“மதம் சொன்னாலும் சரி, மனிதன் சொன்னாலும் சரி ஆய்வு செய்யாமல் எதையும் ஏற்க மாட்டேன்” -இப்படிச் சொன்னதோடு நில்லாமல், சொன்னபடி வாழ்ந்து காட்டியவர் அவர்; "மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் நான் கண்டுபிடிக்க மாட்டேன்" என்று சபதம் செய்தவர்.

பருமனான தலை உடையவர்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்ற மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கியவர்.

தன்னுடைய பதினோராவது வயதிலேயே, ‘தி ரைஸ்அண்ட் ஃபால் ரோமன் எம்பயர்’, ‘ அனாட்டமி ஆஃப் மெலங்கலி’, ‘உலக அறிவியல் அகராதி’ போன்ற சிறந்த நூல்களைப் படித்துவிட்டாராம்.

சொற்களைத் தனித்தனியே பிரித்துப் படிக்காமல் ஒட்டுமொத்த வாக்கியத்தையே படித்துவிடும் திறன் படைத்தவராம் அவர்.

‘வீக்லி ஹரால்டு’ என்னும் பத்திரிகையின் ஆசிரியர் அவர். வெளியிடுபவர், அச்சுக் கோப்பவர், நிருபர், விற்பனையாளர் என்று எல்லாம் அவரே. உலக வரலாற்றில் ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை இதுதானாம்.

“நான் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கிறது. என் வாழ்நாளோ கொஞ்சம். எனவே, என்னை நானே முடுக்கிவிட்டுக் கொள்கிறேன். முடங்கிக் கிடந்தால் முன்னேற முடியாது” என்று தன்னிலை விளக்கம் தந்து, உலக மக்களை விழிப்படையச் செய்தவர் அவர்.

முதல் ஊதியம் பெற்றபோது, 30 டாலர் கொடுத்து சூட்  தைத்தார். ஆய்வுக்கூடத்தில் அமிலம் கொட்டி அது தீய்ந்துபோனது. அன்று முதல் சாதாரண உடைகளையே உடுக்கலானார்.

ஒர சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார். ஒரு கண்டுபிடிப்பிலிருந்து விடுபட்டு ஓய்வுகொள்ள இன்னொரு கண்டுபிடிப்பில் ஈடுபடுவது அவர் வழக்கம்.

ஆராய்ச்சியே கதி என்று சோதனைச் சாலையில் காலம் கழித்த அவர், தம் தாய் இறந்த துக்கத்திலிருந்து விடுபட, நண்பர்களின் ஆலோசனைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மணம் முடிந்ததும் சோதனைச் சாலைக்குள் புகுந்துவிட்டார்.

அவருக்கு மணம் முடிந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தி, சக ஊழியர்கள் அவருடைய இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

பேச்சைப் பதிவு செய்து வெளியிடும் கருவியை அவர் கண்டுபிடித்தபோது, அதைக் காண, மக்கள் வந்துகொண்டே இருந்தார்களாம். போக்குவரத்துக்காக, ரெயில்வே நிர்வாகம் தனி ரயில்களை விட்டதாம்.

“நான் மிகவும் மலிவான விலையில் மின்விளக்குகள் தயார் செய்தபின் ஏழைகளின் வீடுகளிலும் மின் விளக்குகள் எரியும்" என்றாராம் அந்த ஏழைகளின் பங்காளர்.

கல்வி நிலையங்களில் மதக் கல்வியே கூடாது என உறுதிபடச் சொன்னவர் அவர்.

அவர் யார்?
அவர் 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மாபெரும் சாதனை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

இன்று காலையில் வாசித்த, எம்.ஏ.பழனியப்பன் எழுதிய ‘தாமஸ் ஆல்வா எடிசன்’[ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பாண்டி பஜார், சென்னை] என்னும் நூலிலிருந்து சுவையான சில தகவல்களை உங்களுடன் பகிரவே இந்தப் பதிவு.

வருகைக்கு நன்றி.
***************************************************************************************************************************************************** 






வியாழன், 21 ஜனவரி, 2016

‘அதுக்கு’ ஏது காலமும் நேரமும் !.....இளசுகளுக்கான கலக்கல் ஒரு பக்கக் கதை!!

தூக்கம் கலைந்து புரண்டு படுத்தான் தங்கராசு. அவனுடைய ஒரு கை, முந்தானை விலகிய மருக்கொழுந்துவின் மார்பகத்தின் மீது விழுந்தது.

மனதில் காமம் துளிர்விட, கையைச்  சுதந்திரமாகப் புழங்கவிட்டபோது....
“எடுய்யா கையை.” -மருக்கொழுந்து அதட்டினாள்.

கையைப் பின்னுக்கு இழுத்தான் தங்கராசு.

‘என்னய்யா நடு ஜாமத்தில் சேட்டை பண்றே?”

“அது வந்து மருக்கொழுந்து.....தூக்கக் கலக்கத்தில்.....” -வாய் குழறியது தங்கராசுக்கு.

“உன் கை பட்டவுடனே எனக்கு விழிப்பு வந்துட்டுது. மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் தூங்குற மாதிரி நடிச்சேன். இதோ பாருய்யா, இந்த மாதிரி கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் இது வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லியா?”

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாத நிலையில், “மருக்கொழுந்து, மண்டியில் மூட்டை சுமக்கிறவன் நான். சில சமயம் சீக்கிரம் வேலை முடிஞ்சி வந்துடுவேன். சில நாட்கள்ல  ராத்திரி மணி ஒன்பது பத்துன்னு ஆயிடும். வந்ததும் சுடு தண்ணியில் குளிச்சுட்டு, சுடச்சுட ருசியா நீ போடுற சாப்பாட்டை வயிறு முட்டத் தின்னதும் அடிச்சிப் போட்ட மாதிரி படுத்துத் தூங்கிடுவேன். இன்னிக்கும் அப்படித்தான். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் படுத்துத் தூங்கி நடு ராத்திரியில் முழிச்சபோது, பக்கத்தில் உன்னைப் பார்த்ததும் ‘அந்த நினைப்பு’ வந்துட்டுது. என்னை மன்னிச்.....”

அவன் பேசி முடிப்பதற்குள் அவசரமாய் அவனை இழுத்து அணைத்து, “நீ தப்புப் பண்ணல. நான்தான் உன்னைப் புரிஞ்சுக்காம தப்பாப் பேசிட்டேன். இனி, உன் மனசறிஞ்சி நடந்துக்குவேன்” என்றாள்  ’புதுசு’ மாறாத மருக்கொழுந்து!
=============================================================================================




திங்கள், 18 ஜனவரி, 2016

மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா?

மனித உடலின் ‘ஸ்டெம் செல்’[Stem Cell - 'an undifferentiated cell of a multicellular organism that is capable of giving rise to indefinitely more cells of the same type, and from which certain other kinds of cell arise by differentiation.
Each of the stem cells then divided into two cells - a stem cell and a nerve cell...']களைக் கையாள்வதில் முழு வெற்றி கண்டால், ஆயிரம் ஆண்டுகள் என்ன அதற்கு மேலும் வாழ்ந்து காட்டலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்!
நம் விரல் துண்டானால் திரும்ப வளர்கிறதா? இல்லை. ஆனால், ஒரு பூவரச மரத்தையோ வேப்ப மரத்தையோ வெட்டினாலும் அது துளிர்த்துவிடுகிறது. ரோஜாச் செடியைப் பதியன் போட்டால் அதிலிருந்து புதிய செடி முளைக்கிறது. 

இந்த அதிசயம் நிகழ்வதற்குக் காரணம் தாவரங்களின் ‘ஸ்டெம் செல்’தானாம்.

தாவரங்களைப் பொருத்தவரை, புதிய புதிய செல்கள் உருவாவதும் அழிவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும்  தாய் அணுக்களுக்கு[?] எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லையாம். இது, தாவர ஸ்டெம் செல்களுக்குரிய தனிச் சிறப்பு.

மனிதர்களின் கண் செல்கள் மற்றும் தோல் செல்களை வெளியே எடுத்து, தாவரங்களின் ஸ்டெம் செல் டெக்னாலஜியைப் பயன்படுத்தி வளரவைக்க முடியுமா என்று ஆராய்ந்து வெற்றி கண்டிருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். இதன் விளைவாக..........

ஆரோக்கியமான கண்ணிலிருந்து ஸ்டெம் செல்லை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில், ரசாயன திரவத்தில் வைத்து வளர்த்து, அது நன்கு வளர்ந்ததும்..........

மனிதனின் பார்வை இழந்த கண் செல் நீக்கப்பட்டு. வளர்க்கப்பட்ட செல் அங்கே பொருத்தப்பட்டால் பார்வை கிடைக்கும் என்று நம்புகிறார்களாம் விஞ்ஞானிகள்.

தீ விபத்தில் தோல் பாதிக்கப்பட்டால், இதே முறையில் அதைப் புதுப்பிக்க முடியுமாம்; இவ்வாறே, சேதமடைந்த எந்தவொரு உறுப்பையும் புதுப்பித்தல் சாத்தியம் என்கிறார்கள். 

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இதையெல்லாம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டார்களாம் விஞ்ஞானிகள். ஆயுளை நீட்டிப்பதற்கான ஆய்வில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்களாம்.

முதுமை ஏன் வருகிறது?

பார்வை அணுக்களின் வீரியம் குறைந்தால்...சுவை அணுக்களின் வீரியம் குறைந்தால்...இப்படி, உடலின் எல்லா அணுக்களின் வீரியமும் குறைந்தால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டு நாம் முதுமை எய்துகிறோம். 

அறுபது வயதான ஓர் ஆளின் எல்லா அணுக்களும் வீரியம் குறைந்து அவர் உடம்பு வத்தலும் தொத்தலுமாக இருக்கையில், நலிந்துபோன அத்தனை அணுக்களையும் தூக்கி வெளியே கடாசிவிட்டு, புதிய செல்களை உடம்பு பூராவும் நிரப்பிவிட்டால், அந்தக் கிழவர் 30 வயது இளைஞனாக மாறிவிடுவார்.

அந்த மாற்று அணுக்களுடன் சுமார் 30 ஆண்டுகளை ஓட்டினால், அவற்றின் வீரியமும் குறைந்துவிடும். இந்நிலையில் மீண்டும் செல் மாற்றம் நிகழ்த்தப்பட்டால், கிழவனாக மாறிய அவர் மீண்டும் இளைஞர் ஆவார். இப்படித் திரும்பத் திரும்ப, செல் மாற்றம் செய்வதன் மூலம் அவரால் ஆயிரம் ஆண்டுகளோ அவற்றிற்கும் மேலோ வாழ்ந்துவிட முடியுமாம்.

ஆனால்...ஆனால் என்ன.........

எல்லாம் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளன. வெற்றிக்கோட்டைத் தொடுவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லி அசடு வழிகிறார்களாம் விஞ்ஞானிகள்!
==================================================================================================================================
இப்பதிவுக்கான சாரம், பத்தாண்டுகளுக்கு முந்தைய தினமலர்[10.04.2005] வாரமலரிலிருந்து சுட்டது .

இந்த இதழில், ‘நிதி’ என்னும் தலைப்பிலான என் கதையும் வெளியானது என்பது கொசுறுச் செய்தி. கதை, அத்தனை சுவையானதாக இல்லை என்பதால் அதைப் பதிவு செய்யவில்லை.

பிழை காணின் பொறுத்தருள்க.


வியாழன், 7 ஜனவரி, 2016

பேய்...பில்லி...சூனியம்...ஆவி...மதங்கள்!!!

ந்து, இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட பல மதத்தவரும் பேய், பிசாசு, ஆவி போன்றனவற்றை நம்புகிறார்கள்.
இந்து மதத்தில் பேய்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் ஜாதிமதப் பாகுபாடும் உண்டு. பூசாரிகளைக் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்கள்.

கிறித்துவ மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இசுலாம் மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் உள்ளன.

இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்துவ மத போதகர்களால், ‘சரீர சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கத்தோலிக்க மதத் தலைவர் ‘போப்’, பேய் விரட்டலுக்கான நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி என்னும் ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் புகழ் பெற்ற இடமாகும்.

தற்கொலை செய்துகொண்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேயாகவும் ஆவியாகவும் உலவுவதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆடு, மாடு கோழி போன்றவை ஆவியாய்ப் பேயாய் அலைவதில்லையா? ஆவி&பேய் நம்பிக்கையாளர்கள் ஏனோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பேய், பிசாசு ஆவிகளெல்லாம் இருப்பது உண்மையா?

இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலான காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் பேய் பிடித்தது போன்ற மயக்க உணர்ச்சிகளுக்கு மக்கள், குறிப்பாகப் பெண்கள் ஆளாகிறார்கள் என்கிறது அறிவியல்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம், மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு, சினம், அச்சம், பசி, வருத்தம், காதல், காமம், ஆர்வம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றை நடைமுறை வாழ்வில் உணர்வதுபோல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில் வெற்றி பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.

மனித மனமானது கருத்தேற்றங்களினால்[suggetions] பாதிக்கப்படக்கூடும் என்பது உளவியல் உண்மையாகும்.

மதக் கருத்துகளை ஊட்டுதலும், மூளைச் சலவை[Brain Washing] செய்தலும் மெதுவான, தொடர்ச்சியான மன வசிய முறைகளாகும். பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துகள் / எண்ணங்கள் இம்முறையில் சிறு வயதிலிருந்தே மனதிற்குள் திணிக்கப்படுகின்றன.

பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில் பேசுதல், சாமி ஆடுதல் போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின் விளைவே ஆகும்.

பேய் பிடித்து அயல்மொழியில் பேசுபவர் குளோசோலேலியா[Clossolalia] என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் பேசுவது உண்மையில் அயல்மொழி அல்ல என்பதை அந்தக் குறிப்பிட்ட மொழி தெரிந்தவரை அருகில் வைத்து நிரூபிக்கலாம்.

படிப்பறிவில்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றின் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களைப் ‘பேய் பிடிப்பதற்கு’  குறிப்பிடத்தக்க சில காரணங்கள் உள்ளன. பருவம் அடையும் பெண்ணுக்குத் தன் உடலிலும் உணர்விலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிச் சரியான புரிதல் இருப்பதில்லை. பாலியல் உறவு, குழந்தை பிறப்பு ஆகியவை பற்றியெல்லாம் போதுமான அறிவும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கணவனால் அதீத காம இச்சையுடன் புணரப்படுவதாலோ, உடலுறவில் போதிய திருப்தியைப் பெற இயலாததாலோ பேய் பிடித்தல் போன்ற மன நோய்க்கு அவள் ஆளாகிறாள்.

மனநோய் மருத்துவரை அணுகிக் குணப்படுத்தக்கூடிய இம்மாதிரி கோளாறுகளைப் பேய் பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் இம்மண்ணில் இடம்பெறாமல் தடுப்பது நம் அனைவருடைய கடமையும் ஆகும்.
=============================================================================================
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு.

புதன், 6 ஜனவரி, 2016

‘குமுதம்’ இதழில் ஒரு ‘குலுக்கல்’ கதை!!! [புதிய பதிவு]

கதை எழுதியவன் நான். தலைப்பில் கவர்ச்சி சேர்த்தவர் ‘குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்!
குமுதம் ஆசிரியருக்கு நன்றி!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


செவ்வாய், 5 ஜனவரி, 2016

நன்றி கெட்டவரா நடிகர் டி.ராஜேந்தர்?!

“பெண்களை சிம்பு மதித்து நடக்க வேண்டும்” - உயர் நீதிமன்றம்.
‘பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ் நீதிமன்றத்தை அணுகி [முன்]ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் பெற சிம்பு அனுமதிக்கப்பட்டுள்ளாரே தவிர வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. வழக்கு விசாரணைக்குப் பிறகு வழங்கப்படவிருக்கும் தீர்ப்பில் அவர் விடுவிக்கப்படலாம்; தண்டிக்கவும் படலாம். இந்நிலையில்.....

மகன் மீதுள்ள பாசம் காரணமாக, தன்னிலையிழந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காஞ்சிபுரம் கோயில்களுக்குப் போனேன்; யாகம் செய்தேன்; கிறித்தவ தேவாலயங்களுக்கும் தர்காவுக்கும் போய் வழிபட்டேன். எனக்கு நீதி கிடைத்துள்ளது. கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது.....கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”[05.01.2016 நாளிதழ்கள்] என்று கூறியிருக்கிறார் நடிகர் டி. ராஜேந்தர்.

ஜாமீன் பெற்றுத் தந்த கடவுளுக்கு நன்றி சொன்ன ராஜேந்தர், வழக்கு வி்சாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் சிம்பு தண்டிக்கப்பட்டால்[பெண்களை மதித்து சிம்பு நடக்க வேண்டும் - நீதிபதி] தன்னைக் கைவிட்ட கடவுளுக்கு நன்றி சொல்வாரா?

ராஜேந்தர் கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டிருக்கலாம்.

கடவுள்களிடம் இவர் வைத்த கோரிக்கையாலும் நடத்திய யாகத்தாலும் “இதுவொரு சாதாரண வழக்கு. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல” என்று நீதிபதி ஜாமீன் வழக்கில் தீர்ப்பளிக்கவில்லை; தனக்குள்ள சட்ட அறிவால் அவர் எடுத்த நடுநிலை முடிவு இது. 

ராஜேந்தர் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவர், நீதிபதிக்குத்தான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும்.

சொன்னாரா? இல்லையெனில் இனியேனும் சொல்வாரா?

நல்லது செய்யும் மனிதர்களுக்குச் சேரவேண்டிய நன்றிகளையும் பெருமைகளையும் கடவுளுக்கு உரித்தாக்கிக் கொண்டாடுவதே மாந்தர் பெரும்பாலோரின் வழக்கமாக இருக்கிறது.

இவர்கள் திருந்துவது எப்போது?!?!? 
=============================================================================================









திங்கள், 4 ஜனவரி, 2016

பெண் புத்தி ‘நுண் புத்தி’!...ஒரு பக்க ‘நட்சத்திர’க் கதை!![இடுகை புதுசு]

பெண்கள் ஆண்களைவிடவும் அறிவில் சிறந்தவர்கள். அவர்கள் அடக்கப்பட்டதும் அவர்தம் அறிவு முடக்கப்பட்டதும் எழுதப்படாத சோக வரலாறு.

குமுதமே, உனக்கு என் நன்றி...நன்றி!

சனி, 2 ஜனவரி, 2016

முன்னணி ‘குமுதம்’ இதழில் ஒரு ‘பின்னணி’ எழுத்தாளனின் கதை!!!

பழைய கதை [28.11.2007 குமுதம்]. புத்தம் புதிய இடுகை. படிக்கலாம்; பரிந்துரைக்கலாம்!
நன்றி: குமுதம்