வியாழன், 29 ஆகஸ்ட், 2013

'காதல்’ கவிஞர்களும் கண்ணீர் வடிக்கும் கன்னிப் பெண்களும்!

பெண் அழகாக இருந்துவிட்டால், அவள் போடும் ‘குறட்டை’ யையும் ‘குசு’வையும்கூடக் கவிதை’ ஆக்குவார்கள் நம் கவிஞர்கள்!


நீங்கள் ’காதல் கவிதை’ படைக்கும் கவிஞரா?

“ஆம்” என்றால், மெத்த மகிழ்ச்சி. உங்கள் வரவைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

கவிஞரே,

சுற்றி வளைக்காமல் பிரச்சினையை முன் வைக்கிறேன்.

மாம்பழக் கன்னங்களும், மது ஊறிப் பளபளக்கும் உதடுகளும், பருத்துக் கொழுத்த கொங்கைகளும் கொண்ட அழகிய பெண்களைப் பார்க்கும்போதுதான் உங்களுக்குக் கவிதையே பிறக்கிறது என்று நான் சொன்னால், அதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா?


The Dove<sup>®</sup> Campaign for Real Beauty
உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால், இதற்கு ஏராள உதாரணங்களை என்னால் தர முடியும். வேண்டாம், ஆபாசம் கலவாத சில காதல் கவிதைகள் மட்டும் இங்கே.........

 ‘என் இதயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி’   

இது சத்தியசீலன் ராஜேந்திரன் என்ற கவிஞரின் கவிதை  [‘கிறுக்கல்கள்’]

இங்க காதலும் இல்ல, கத்தரிக்காயும் இல்ல. எல்லாம் அழகு தரும் போதை


’நீ உன் பாதம் கழுவிய
நீரைக் கொடுக்கிறாயா?…
அழகின் கடவுளுக்கு
அபிஷேகம் செய்ய வேண்டும்’
[மன்னிக்கவும்...கவிஞர் பெயர் மறந்துவிட்டது]

[கடவுளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீங்களா?

ஒரு கவிஞனின் பார்வையில் ஓர் அழகியின் பாதம் கழுவிய நீர் கங்கையின் புனித நீருக்குச் சமம் ஆகிவிட்டதைக் கவனிச்சீங்களா?

நான் மட்டும் ஒரு கவிஞனா இருந்திருந்தா, அழகியின் சிறுநீரைப் புனிதமாக்கி ஒரு கவிதை பாடியிருப்பேன். முகம் சுழிக்காதீங்க.]

‘பூக்கள் கூட 
உன்னைப்போல் வெண்மை இல்லையே.
உன்னைப் போல் பெண்ணைப்
பூமி பார்த்ததில்லையே!    [’தமிழ், காதல் கவிதைகள் உலகம்’]

[ஆக, இவளைப் பார்க்கணும்னா தேவருலகம் போகணுங்களா? போனா, திரும்பி வருவோமா?]

மேலே குறிப்பிட்ட இவர்களெல்லாம் பிரபலம் ஆகத் துடிக்கும் கவிஞர்கள்.

பிரபலம் ஆன [மிக மிக மிக] ஒரு கவிஞரின் கவிதை கீழே...........

’அன்பே !
அந்த நதிக்கரையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா’


[யாருன்னு தெரியுதுங்களா?

கவிப்பேரரசு வைரமுத்துங்க!

கவனிச்சீங்களா, இவருடைய கவிதைத் தலைவியும் ஓர் அழகு தேவதைதான்]

கவிஞரே, [வைரமுத்து அல்ல; பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் கவிஞர்] 

இப்போ நீங்க, “பிரபலம் என்ன, அல்லாதவர் என்ன, எல்லாக் கவிஞர்களுமே அழகான பெண்களை நினைச்சித்தான் கவிதைகள் படைக்கிறாங்க. அதுக்கென்ன இப்போ?”ன்னு முணுமுணுத்திட்டிருக்கீங்கதானே?

பதில் சொல்றேன். கொஞ்சம் பொறுங்க. அதுக்கு முன்னாடி இன்னொரு கேள்வி..........

நீங்களெல்லாம் காதல் கவிதைகள் எழுதுவது யாருக்காக? யாரையெல்லாம் மனதில் இருத்திக் கவிதை படைக்கிறீர்கள்?

“இளைஞர்களுக்காகவும் இளம் பெண்களுக்காகவும்” என்று நீங்கள் சொன்னால், அது மிகச் சரியான பதில்.

அடுத்து ஒரு கேள்வி..........

உங்களின் படைப்புகள் அவர்களைப் பாதிக்கிறதா?

“ஆம்” என்றுதான் நிச்சயம் பதில் தருவீர்கள்.

எதார்த்த வாழ்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு, மிதமிஞ்சிய காதல் போதையில் மூழ்கி நம் இளைஞர்கள் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. உங்களுக்கும் தெரியும்.

பெண்கள் நிலை?

உங்கள் கவிதைகளைப் படிக்கிற ஒரு பெண், நீங்கள் கண்முன் நிறுத்துகிற தேவதைகள் போல் பேரழகியாக இருந்தால், உள்ளம் மகிழ்வாள்; உச்சி குளிர்வாள்.

ஆனால், நம் பெண்களில் எத்தனை சதவீதம் பேர் பேரழகிகள் அல்லது அழகிகள்?

இது  பற்றி நீங்கள் ஒரு முறையேனும் யோசித்திருக்கிறீர்களா?

இல்லைதானே?

உலகில், ஜெர்மன்காரிகள்தான் பேரழகிகளாம். உலக நாடுகளில் நம்பர் 1 அழகிகள் உலவும் நாடு ஜெர்மனிதான் என்கிறது புள்ளிவிவரம். [www.shareranks.com]

[நம் நாட்டுப் பெண்களின் தரவரிசை என்னன்னு கேட்கிறீங்கதானே?

சொல்லிடுறேன். இல்லேன்னா மேலே படிக்க மாட்டீங்க.

rank:  9     தேவலாம்தாங்க.

இடைப்பட்டதையும் சொல்லிடுறேன்.

2. பிரேஸில், 3. ஸ்வீடன், 4. அமெரிக்கா, 5. ஜப்பான், 6. போலந்து, 7. ரஸியா, 8. ஃபிலிபைன்ஸ். 9. இந்தியா.

இந்தியாவுக்குப் பின்னாடிதான் இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி எல்லாம் வருது.

Hot...Hottest...பிரேஸில்தானாம்.]

இதெல்லார்த்தையும் விட்டுத் தள்ளிட்டு விசயத்துக்கு வருவோம்.....

மானாவாரியா அழகிகள் நடமாடுற இந்த ஜெர்மன் நாட்டுப் பெண்களில், 2% பெண்கள் மட்டும்தான் தங்களை அழகிகள் என்று ஒத்துக்கிறாங்களாம். மற்ற 98% பெண்கள், விளம்பரங்களில் இடம்பெறும் அழகுப் பெண்களோடு தங்களை ஒப்பிட்டு, “நாங்கெல்லாம் ரொம்ப விகாரமா [ugly] இருக்கோம்”னு சொல்லி ரொம்பவே மனசு நொந்துபோய் இருக்காங்களாம்.


இந்த நாடு மட்டுமல்ல, அழகிகள் கொட்டிக் கிடக்கிறதா சொல்லப்படுற முதல் பத்து நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இதே கதியில்தான் புலம்பித் திரியறாங்களாம். [ஆதாரம்: www.prnewswire.com]

அது மட்டுமல்ல, உலகம் முழுக்கவே, 2% பெண்கள்தான் தங்களை அழகிகள்னு நினைக்கிறாங்களாம். [எந்தப் பெண்ணும், தான் அழகி இல்லேன்னு சாதரணமா சொல்ல மாட்டாள். உண்மை அதுதான்னா,, இந்த 2% கூட அதிகம்தான்]

ஆக, உலக அளவில், 98% பெண்கள் தாங்கள் அழகிகள் அல்ல என்று சொல்கிறார்கள். [www.dove.us/compain-for-real-beauty.aspx]

காதல் கவிஞர்களின் கண்கொண்டு ஆராய்ந்து கணக்கெடுத்தா, நம் நாட்டுப் பெண்களில் லட்சத்தில் ஒருவர் தேறுவதே கடினம்தான்.

எனவே, கவிஞரே, மீண்டும் உம்மிடமும் உம்மை ஒத்த காதல் கவிஞர்களிடமும் நான் சொல்ல விரும்புவது........

லட்சத்தில் ஒரு பெண்ணுக்காகவே நீங்கள் காதல் கவிதை எழுதுகிறீர்கள்.

ஏனைய 99999/100000 பெண்கள், உங்களுடைய கவிதைகளைப் படித்துவிட்டு,  ‘நாம் அழகியாக இல்லையே’ என்று ஏங்குகிறார்கள்; மனம் வருந்துகிறார்கள்

கவிஞரே...கவிஞர்களே.

இனியேனும்..........

நம் பெண்களை, இம்மண்ணில் நடமாடும் பெண்களாகவே நினைத்துக் கவிதை புனையுங்கள். அவர்களை ஒரு போதும் தேவதைகள் ஆக்காதீர்கள்.

#####################################################################################



























திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நான் ஏன் சாத்தானை வழிபட நினைக்கிறேன்?

‘பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள், தானாகத் தோன்றினார்’ என்றால், மண்பானை படைத்த குயவன் பரம்பரையும் தானாகத் தோன்றியதுதான்!

“கடவுள் உண்டா இல்லையா?”

‘முடிவு’ஏதும் எட்டப்படாமல், பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் விவாதம் இது.

’பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? [யாராவது படைத்திருந்தால், அவரைப் படைத்தது யார்?]. மரணத்துக்குப் பின் என்ன ஆகிறோம்...ஏதாவது ஒரு தொடர்ச்சி உள்ளதா? இவ்விரண்டு கேள்விகளுக்கும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வெவ்வேறு சிந்தனையாளர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனா சக்தியின் வலிமை, எளிமை...ஏன், அவர்கள் காலத்து அறியாமைகளுக்கு ஏற்ப பதில்கள் வேறுபடுகின்றன............ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது. இது விசயத்தில் no one is sure. அதனால் தைரியமாக இதில் இறங்கலாம்’ என்கிறார்[’கடவுள்’, உயிர்மை பதிப்பகம், மூன்றாம் பதிப்பு 2012] காலஞ்சென்ற புனைகதை & அறிவியல் எழுத்தாளரும், சிறந்த சிந்தனையாளருமான சுஜாதா.

தான் முன்வைக்கும் கருத்துக்குப் போதிய விளக்கம் தர முடியாத போதும், மாற்றுக் கருத்துக்கு ‘மறுப்பு’ச் சொல்ல இயலாத நிலையிலும், “எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லித் தோல்வியை ஒத்துக் கொள்ளும் உயரிய பண்பு, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வோரிடம் எப்போதும் இருந்ததில்லை.

குயவன் பானை செய்யும் தொழிலை உதாரணம் காட்டி, “பானை என்பது படைக்கப்பட்ட ஒரு பொருள். அதைப் படைத்தவன் குயவன் [இந்த உதாரணம் ரொம்பப் பழசு. புது எ.கா. கணினி]. அது போல, இந்தப் பிரபஞ்சம் என்பது ஒரு ’படைப்பு’. இதைப் படைப்பதற்குப் ’படைப்பாளன்’ தேவை. அவனே கடவுள்” என்று வெகு எளிதாகக் கடவுளை மக்கள் முன் நிறுத்தினார்கள் இவர்கள்.

கொஞ்சமே கொஞ்சுண்டு சிந்திக்கத் தெரிந்தவன் எவனோ கேட்டான்; [இதெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளிச்சிப் போன விவாதம். கொஞ்சம் பொறுமையா படிங்க] “கடவுளைப் படைத்தது யார்?"

நம்மைப் போன்றவர்களைப் பார்த்துக் கேட்டிருந்தால் “தெரியவில்லை” என்று அப்பிராணியாய்ச் சொல்லியிருப்போம். ஆனால், கடவுளின் நகலான அவதாரங்களின் ஆசி பெற்ற ஆன்மிகங்களின் அகராதியில் ‘தெரியாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. “முழுமுதல் கடவுளை ஒருவர் படைப்பதாவது? அவர் சுயம்பு. தானாகவே அவதரித்தார்” என்றார்கள்.

ஒரு பொருளைச் சுட்டிக் காட்டி, அதன் தோற்றம் குறித்து ஏதும் தெரியாது என்று சொன்னால் அங்கே விவாதத்துக்கே இடமில்லை.

அதை விடுத்து, “அது படைக்கப்பட்டது” என்று சொன்னால், “படைத்தவன் யார்?” என்ற கேள்வி எழுகிறது.

அடுத்து, “அந்தப் படைத்தவனைப் படைத்தது யார்? அதாவது, குயவனைப் படைத்தது யார்?” என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது.

”குயவனைப் படைத்தது யார்?” என்னும் கேள்விக்குக் ”கடவுள்” என்பது அவர்களின் பதிலாக இருக்கிறது.

இங்கே, படைப்பாளனாக இருந்த குயவன் வெறும் படைப்பாக ஆகிப் போகிறான் என்பது நினைக்கத்தக்கது. குயவனாகிய படைப்பாளனைப் படைத்தது யார் என்று கேள்வி கேட்டு, பதிலும் பெறுகிறவருக்கு, “கடவுளாகிய படைப்பாளனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கவும் உரிமை இருக்கிறது. கடவுளைப் படைத்தது இன்னார் என்று பதில் தர வேண்டிய கடமை ஆன்மிகங்களுக்கு இருக்கிறது.

“அவரைப் படைத்தது அவருக்கும் மூத்த ஒரு கடவுள்” என்று ஏதாவது பிதற்றினால், அந்த மூத்தவரை...அவருக்கும் முந்தினவரை....” என்று கேள்வி கேட்பது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். பதிலும் நீளும்.

எனவே,  “தெரியவில்லை” என்று சொல்வது உத்தமம். “நம்புகிறோம்” என்று சொல்லியிருந்தாலும்கூட அவர்களின் கவுரவத்துக்கு எந்தவிதப் பங்கமும் நேரப் போவதில்லை. ஆனாலும், அப்படிச் சொல்ல மாட்டார்கள். காரணம்.....

”தெரியவில்லை” என்னும் போது, இவர்களும் சாமான்ய மக்களும் சமம் என்றாகிறது. ‘நாங்கள் அப்படி இல்லை.  அவனின் அனுக்கிரகம் எங்களுக்கு இருக்கிறது’ என்று மக்களை நம்ப வைக்க, “அவரை யாரும் படைக்கவில்லை. அவர் எப்போதும் இருப்பவர் “என்று பொய்யுரைத்தார்கள்;

“அவன் எப்போதும் இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்னும் அறிவு பூர்வமான கேள்விக்கு அவர்கள் ஒருபோதும் பதில் தந்ததில்லை.

பதில் தெரியாத பரிதாப நிலையிலாவது, ”தெரியவில்லை” என்று பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டார்களா என்றால், அதுவும் இல்லை. 

இவையெல்லாம் உலகறிந்த உண்மைகள்.

இப்படியொரு கேள்விக்குப் பதில் தெரியாத போதே, கடவுளைப் பற்றிப் பேசுவதற்கான அருகதையை இழந்துவிட்டார்கள் இந்த ஆன்மிகங்கள்.

’முழுமுதல் கடவுள் ஒருவரே’ என்றார்கள். அது ஏன்?

கணக்கு வழக்கில்லாமல் விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்துக்கு ஒரே ஒரு கடவுள்தானா?

அதென்னய்யா கணக்கு? ஒன்னே ஒன்னு......? 

ஆயிரக் கணக்கில் கடவுள்கள் இருந்து, ஆதிக்கப் போட்டியில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டதில் அத்தனை பேரும் மண்டையைப் போட, இந்த ஒருவர் மட்டும்தான் மிஞ்சினாரா?

இந்தக் கேள்விக்கேனும் அவர்களால் பதில் தர முடியுமா?

‘கடவுள் தூணிலும் இருப்பார்...துரும்பிலும் இருப்பார்...அணுவிலும் இருப்பார்’ என்றார்கள்.

தூண் தூணாகவும், துரும்பு துரும்பாகவும், அணு அணுவாகவும் இருந்தால் இவர்களுக்கு ஏன் அடி வயிறு வலிக்கிறது? அங்கெல்லாம் கடவுளைத் திணிக்கிறார்களே, அது ஏன்? ஏன்? ஏனய்யா?

கடவுள் எப்படியிருப்பார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,   “அவன் ஆணோ பெண்ணோ அலியோ அல்லன்; இருப்பவனும் அல்லன்; இல்லாதவனும் அல்லன். அவன் எப்படி இருப்பான் என்ற கேள்விக்கு விடை சொல்வது சாத்தியமில்லை”[நம்மாழ்வார்]என்றார்கள்!

‘அவன் இருப்பவனும் அல்லன். இல்லாதவனும் அல்லன்’ ...இப்படியொரு கடவுளைக் கற்பனை செய்ய முடிகிறதா? அப்புறம் எப்படிக் கடவுளை  நம்புவது?

இப்படி எத்தனையோ கட்டுக் கதைகளைக் கட்டிவிட்டதோடு இந்த அவதாரங்களும் ஆன்மிகங்களும் திருப்தி அடையவில்லை. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி, கடவுளை அத்தனை நற்குணங்களும் நிறைந்த ஓர் உத்தமபுத்திரனாக மக்கள் மனங்களில் சித்திரம் தீட்டிப் பதிய வைத்தார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர் நல்லவர்தானா என்ற கேள்வியையும் தவிர்க்க இயலவில்லை.

கடவுள் ஏன் இந்த உலகில் நம்மை உலவ விட்டார் என்ற வினா, சதா காலமும் நம் மண்டையைக் குடைந்து குடைந்து நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கிறது.

நமதே நமதான இந்த உடம்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனமும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, பாசம், காமம், வெகுளி, பொறாமை, சூது, வாது, வஞ்சகம் போன்றவற்றிலிருந்து தற்காத்து நிம்மதியுடன் வாழ்வதற்கு எத்தனைப் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது?. இப்படியொரு அவல வாழ்க்கை வாழ நம்மைப் பணித்த இந்தக் கடவுளா நல்லவர்?

நோய், வறுமை, முதுமை, இயற்கைப் பேரிடர் என்று எத்தனை எத்தனை அழிவு சக்திகள் நம்மை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு விடுபட முடியாத இடர்ப்பாட்டுக்கு நம்மை உட்படுத்திய கடவுள் நல்லவரா என்ன?

தீமையின் ஒட்டு மொத்த வடிவம் மரணம். மரணத்தைக் காட்டிலும் நம்மைத் தினம் தினம் அச்சுறுத்திச் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறது மரண பயம். மரணமே இல்லாத கடவுள் நம்மை மட்டும் மரணதுக்கும் மரண பயத்துக்கும் உள்ளாக்கலாமா? இவரா நல்லவர்?

செத்த பிறகு என்ன ஆவோம் என்பதும் நமக்குத் தெரியாது. இந்த மர்ம முடிச்சைப் போட்டவரும் இவர்தான். இவரேதான்.

ஆக, நம் ஆன்மிகங்கள் கற்பனை செய்த கடவுளை நல்லவர் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

நம்மினும் மேலான அறிவார்ந்த சக்தி என்று ஒன்று இருந்து நம்மை ஆட்டிப் படைப்பது உண்மையென்றால்[கடவுள்தான் எல்லாம் என்று இவர்கள் சொல்லவில்லையென்றால், எல்லாம் இயற்கை; நடப்பது நடக்கட்டும் என்று துன்பங்களை ஏற்கும் சக்தியை வளர்த்துக்கொண்டு வாழ்நாளைக் கழிப்போம்] அது நம் ஆன்மிகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுளல்ல; தீமையின் மறு உருவம் என்று சொல்லப்படுகிற  சாத்தானே என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.

எனவே, இனி எஞ்சியிருக்கும் வாழ்நாளையேனும் நிம்மதியாகக் கழிப்பதற்குக் கெட்ட சக்தியான சாத்தானை வழிபடுவதே புத்திசாலித்தனம் என்பது என் நம்பிக்கை.

உங்கள் நிலையும் இதுவாகத்தானே இருக்க முடியும்?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பத்து ரூபாய்களும் பத்து பிச்சைக்காரர்களும் கடவுளும்!

பிச்சைக்காரங்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை.  காரணம், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.

சிக்கு பிடித்த தலைக்கு ஷாம்பு தேய்த்துக் குளிக்க வைத்து, ஒரு காக்கி உடுப்பை மாட்டி, ஒரு கம்பெனி கேட் முன்னால் மடக்குச் சேர் போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப் போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, அவர்கள் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறுகிறார்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையை உயர்த்தி,  ’அதோ அந்த வேப்பமரக் கிளையில் உட்கார்ந்திருப்பது குயிலா காக்கையா?’என்று ஆராய்ச்சியில் இறங்கிவிடுவது என் வழக்கம்.

கையேந்துகிறவன் ஒரிஜினல் பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாயோ ரெட்டை ரூபாயோ போடுவேன். அதற்கும், அரை நிமிஷ நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தர்மம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

பிச்சை போடுறதில் சில நாள் முன்பு எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. உடனே கவர்மெண்டு ஆஸ்பத்திரி போவணும். ஆட்டோக்காரர் இருபது ரூபா கேட்குறாரு. என்கிட்டே பத்து ரூபாதான் இருக்கு. ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன். பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி. நான் வழிபடுற  குல தெய்வம்தான் என்னை உங்ககிட்டே அனுப்பியிருக்கு” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான்.

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஒரு அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனுக்கும் அவன் குலதெய்வம்  நினைவுக்கு வந்துவிட்டது.

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?

அறிந்துகொள்வதில் ரொம்பவே ’திரில்’!?

பார்வையை அலைய விட்டதில், பேருந்து நிழல் கூடத்தில் நீண்ட தலைமுடி தாடியுடன், தரையில் துண்டு விரித்து ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க”என்றான்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பியதும் பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து, உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.

பதில் இரண்டு:
‘இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

மூன்று:
“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

நான்கு:
“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

ஐந்து:
‘கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

ஆறு:
”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

ஏழு: ”இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்”

எட்டு:
“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.” [கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறார்].

ஒன்பது:
“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் அம்பது அறுபது ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்காரில்லையா?

ஒரு உணவு விடுதி வாசலில் அந்தப் பேண்ட் போட்ட பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”-நான்.

“தானம் பண்ணுங்கய்யா.” இது அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” இது நான்.

“ஒரு ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே. போய்யா நீயும் உன் கடவுளும்.” முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

=====================================================================================












செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

டுபாக்கூர் ‘வாஸ்து’வும் டூப்ளிகேட் கடவுள்களும்!

#`வாஸ்து`வுக்கு 'சவக்குழி’ தோண்டும் நீண்ட பதிவு இது. பொறுமையுடன் படியுங்கள்.#

நவக்கிரகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ’ஜோதிடம்’ கட்டமைக்கப்பட்டது போல, எட்டுத் திசைகளையும் ஆதாரக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாஸ்து என்பது அனைத்து வாஸ்து தோஸ்துகளும் அறிந்ததே.

வாஸ்து பற்றி விஸ்தாரமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ’திசை’யைப் பற்றி அத்துபடியாய் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

திசை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கும் [உயர்திணை அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்] இன்னொரு பொருளுக்கும் இடையிலான நேர்க்கோணத்தைத் [கோடு] திசை என்கிறார்கள். [மன நிறைவு தரும் விளக்கம் ஆங்கில விக்கிபீடியாவில்கூட இல்லை]

'The line along which anything lies, faces, moves etc.....' என்கிறது  www.definitions.net.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகியவற்றை, அல்லது பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான பொருள்களைப் புலன்களால் அறிவது போல, திசையும் அறியத்தக்க ஒன்றா?

இல்லை என்பதே அறிவியல் தரும் பதில்.

ஆயினும், பொருள்கள் நிலைகொண்டிருக்கும் இடத்தை அல்லது அவற்றின் இயக்கத்தின் போக்கை அறிய நாம் கிழக்கு முதலான திசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உருண்டை வடிவத்தில் சுழன்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியில் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

தோன்றி மறைகிற சூரியனை முன்னிலைப்படுத்தி, அது உதயமாகிற நேர்க் கோணத்தைக் கிழக்கு என்றார்கள்.

எனவே, சூரியன் தோன்றுகிற பக்கம் கிழக்கு ஆயிற்று.

கிழக்கில் சூரியன் தோன்றுகிறான் என்பது தவறு. காரணம், உண்மையில் கிழக்கு என்று எதுவும் இல்லை என்பதே. [பாபு என்பவர், ‘செம்புலப் பெயல் நீராவோம்’ என்னும் தலைப்பில், முக நூலில் திசை பற்றி எழுதியிருக்கிறார்]

கிழக்கு என்பதற்கு எதிர்த் திசை மேற்கானது. இடப்பக்கம் வடக்கு. வலப்பக்கம் தெற்கு.....இப்படித் திசைகள் உருவாக்கப்பட்டன.

இரவுப் பொழுதில், வட திசையில் தெரியும் துருவ நட்சத்திரம், வட திசைக்கான அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில், மரக்கலப் பயணங்களில், இந்நட்சத்திரமே திசை அறிய உதவியிருக்கிறது. இன்று புதிய சாதனங்கள் வந்துவிட்டன.

அதே போல, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காந்த சக்தியும் வடதிசைக்கான அடையாளமாக அறியப்பட்டது.

காந்த சக்தி என்பது, புவியீர்ப்பு சக்தி போல பூமியில் இயற்கையாக உள்ள ஒரு ஈர்ப்புச் சக்தி. அதுவும் ஓர் அடையாளம்தான். வடதிசையில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அவ்வளவே. ஈர்ப்புச் சக்தி இருப்பதால் அது வடதிசை ஆகிவிடாது.

ஆக, மேற்கண்ட தகவல்களின் மூலம், இந்தப் பூமி உருண்டையில், ஐம்புலன்களால் அறியத்தக்க வகையில் திசை என்பதே இல்லை; அது இயற்கையானதும் அல்ல; அது, மனித குலம் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்ட குறியீடு[?] என்பதை நம்மால் அறிய முடிகிறது.

திசை இல்லை என்பதை, அகன்று பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் மனதைச் செலுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வான வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களையும், கோடானுகோடி நட்சத்திரங்களையும் ஒன்று மிச்சமில்லாமல் துடைத்தெறியுங்கள் [கற்பனையாகத்தான்].

இப்போது வெற்று வானம் மட்டுமே உங்கள் கண்முன் விரிகிறது, “கிழக்கே பார்” என்று அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கிறது. பார்க்கிறீர்கள்.

கிழக்கு தெரிகிறதா? இல்லைதானே?

காரணம், ’வெளி’க்குத் திசை இல்லை என்பதுதான்.

மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியில் இடம் கொள்ள வையுங்கள். இப்போது மட்டும் திசை தெரிகிறதா என்ன? இல்லைதானே? துருவ நட்சத்திரத்தை வைத்து ஓரளவு அறியலாம் என்கிறார்கள்.

பூமியில் இடம் கொண்டிருப்பதால், மேல், கீழ் என்பனவற்றை உணர்கிறோம். உருண்டை உருண்டையாக விண்வெளியில் அலைந்து திரியும் கோள்களுக்கோ பிறவற்றிற்கோ மேல், கீழ் பக்கவாட்டு என்பதெல்லாம் இல்லை.

இப்போது, பதிவின் தலைப்புக்கு வருவோம்.

சுழன்று கொண்டிருக்கும் உருண்டை வடிவான இந்தப் பூமிக்கோ, பிரபஞ்ச வெளிக்கோ திசைகளே இல்லாத நிலையில், இந்த வாஸ்துகாரர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கென்று, கட்டுப்பாடுகளை உருவாக்கியது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இதை, இந்திய நாட்டின் அரிய பொக்கிஷம் என்கிறார்கள்.

5000 ஆண்டு பழைமையான விஞ்ஞானம் என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்று சொன்ன அதே வாயால், “தத்துவம் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது” என்கிறார்கள் [ustrology. dinakaran.com/vastu.asp]

விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்ன cosmic force, காந்தசக்தி பற்றியெல்லாம் கதைகதையாகச் சொல்கிறார்கள்.

நமக்கு, உடல் நலமும் மகிழ்ச்சியும் மன உணர்வுகளாலோ, உடற்பயிற்சியாலோ கிடைக்காதாம். அவற்றை நமக்கு வாரி வழங்குவது வாஸ்துதானாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ பொய்யுரைகள்; புளுகுகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பழங்காலக் கட்டடக் கலைஞர்கள், மண்ணின் தன்மை, மரங்கள், கற்கள் போன்றவற்றின் உறுதிப்பாடு, கட்டடத்தின் பரப்பளவு, உயரம், வெளிச்சம், காற்று போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கலையம்சமும் நீண்ட ஆயுளும் பொருந்திய அழகிய கட்டடங்களைச் சமைப்பதற்குக் கட்டடக் கலை இயலை உருவாக்கினார்கள். வாஸ்து பண்டிதர்கள் மூட நம்பிக்கைகளைப் அதில் புகுத்திவிட்டார்கள்.

இந்த வாஸ்துகாரர்கள், பொது மக்களிடம் அள்ளிவிடும் பொய்கள் அளவிறந்தவை.

இந்த வாஸ்துவுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறாராம்.

தேவர் அசுரர் போரில், அசுரர்கள் புரிந்த அலம்பல்களை முழுமுதல் கடவுளான சிவனிடம் தேவர்கள் சொல்ல, அவர் கடுங்கோபம் கொள்கிறார். அவர் உடம்பிலிருந்து வேர்வை [நல்ல வேளை, அது வேர்வைதான். வேறெதுவுமில்லை] சுரக்கிறது. [முழுமுதல் கடவுளுக்கும்கூட வேர்க்குமா என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப வேண்டாம்]. அந்த வேர்வைதான் வாஸ்துவாக வடிவம் கொண்டு, அசுரர்களை அழித்ததாம்!

சிவபெருமானின் உத்தரவுப்படி, அசுரர்களின் சடலங்களை அழித்துவிட்டு, இந்த மண்ணுலகிலேயே உறங்க ஆரம்பித்தார் வாஸ்து பகவான். முழுமுதல் கடவுளின் கட்டளைப்படி, ஓர் ஆண்டில் எட்டு நாட்கள் மட்டும் விழித்திருந்து, சிவபெருமானைத் துதி பாடுகிறாராம். [அதென்ன கணக்கு எட்டு? புரிந்தால் சொல்லுங்கள். உங்களுக்குக் கணக்கில்லாமல் திருப்பதி லட்டு வாங்கித் தருகிறேன்!]

ஈசனுக்குச் சொந்தமான வடகிழக்குத் திசையில் தலை வைத்து, தென்மேற்கில் இரு பாதங்கள் நீட்டி சயனம் செய்கிற இவரை [வாஸ்து புருஷன் என்று சொல்கிறார்கள்] மக்கள் வழிபட்டால் நற்பயன் விளைவது நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து மேதைகள்!

வீட்டின் தலைவாசல் அருகே பூஜை அறை கூடாது.

காரணம் என்ன தெரியுங்களா?

சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுமாம்! இழவுக்குப் போய் வர்றவங்களும் வீட்டுக்குத் தூரமான பெண்களும் நுழைவதால் சாமிக்கும் தீட்டுப் படுமாம்!

’படுக்கை அறையில் தையல் மிஷின் இருந்தால் புருஷன் பெண்ஜாதிக்கிடையே அடிக்கடி சண்டை வரும்.’

ஒன்னுக்கு ரெண்டு பீரோவா வெச்சா, தினசரி சண்டை வருமில்லையா?

வெகு சுளுவா பெண்டாட்டையை கழட்டி விட்டுட்டுப் புதுப் பெண்டாட்டி கட்டிக்கலாம்.

’நீங்கள் பணம் வைக்கிற பெட்டி அல்லது லாக்கர் தென்திசை அறையில் இருத்தல் குற்றம்.’ ஏன்னா, அந்த திசையில் யமதர்மன் இருக்கிறார்.

யமன் உயிரைத்தான் பறிப்பான்னு நினைச்சிட்டிருந்தோம். பணத்தையும் பறிச்சிடுவான்னு தெரியுது!

அதே போல, குபேரனுக்குச் சொந்தமான வடதிசையிலும் செல்வத்தை வைக்கக் கூடாதாம்.

சாமி இருக்கிற பூஜை அறையில் வைத்தாலும் சேமிப்பு அதோ கதிதான்!

படுக்கையறை, சமையலறை, கக்கூஸ்னு எது எதை எங்கெங்கே வைக்கணும்னு வாஸ்து விஞ்ஞானிகள் அத்துபடியா சொல்லியிருக்காங்க. அதன்படிதான் நீங்க நடந்துக்கணும். மீறினா அதுக்கான தண்டனையை அனுபவிக்க நேரும்.

நீங்க பாட்டுக்கு, கக்கூஸை ஈசான முலையில் அமைச்சிடக் கூடாது. அது ஈசனுக்குரிய மூலை இல்லையா? கக்கூஸ் நாத்தம் அவர் மூக்கைத் துளைக்குமே.

வடக்கு-குபேரன், தெற்கு-யமன் வடகிழக்கு-ஈசன்.....இப்படி எட்டு திக்குகளையும் எட்டு கடவுள்கள் காக்கிறார்கள்!

கடவுள் ஒருவனே. அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்று என்று சொல்லப்படும் நிலையில் திசைக்கொரு குட்டிக் கடவுளை நியமனம் செய்தது யார்?

அந்த முழு முதல் கடவுளேவா?

எட்டு பேரில் ஒரு பெண் கடவுள்கூட இல்லையே? கடவுளர் சமூகத்திலும் பெண் இனத்துக்கு அநீதியா?


’மாணவர்கள் தெற்கு கிழக்காகப் படுக்க வேண்டும். மாணவியர், கிழக்கு மேற்காக. தம்பதியர் தெற்கு மேற்காக.....’

சின்ன வீட்டோடு படுக்கும் போது......?

’பிரபஞ்ச சக்தியை வீட்டுக்குள் வரவழைக்கிறது வாஸ்து.’

அந்தச் சக்திதான் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடக்கிறதே, நீங்க என்ன வரவழைச்சிக் கிழிக்கிறீங்க?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைவிட்டு மக்களில் பெரும்பாலோரை வசியம் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாஸ்து விற்பன்னர்கள்.

 சிற்பம் மற்றும் கட்டடக்கலை வல்லுநரான கணபதி ஸ்தபதி பற்றி அறியாதார் வெகு சிலரே. நம் பெருமதிப்புக்குரியவர். 2011 ஆம் ஆண்டு காலமானார். அவரிடம், “இன்று பயன்பாட்டிலுள்ள வாஸ்துவும் தாங்கள் அறிந்த வாஸ்துவும் ஒன்றா?” என்று கேட்கப்பட்ட போது, [எழுத்தாளர் திலகவதியின் பேட்டி. ‘இவர்கள் இப்படித்தான் சாதித்தார்கள்’ என்னும் நூலில். அம்ருதம் பதிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு வெளியீடு] “நான் அறிந்த வாஸ்து வேறானது” என்கிறார்.

அவர் குறிப்பிடும் வாஸ்து ஓரளவுக்கேனும் அறிவுபூர்வமாக இருக்கும் என்று நம்பலாம்.

அது எவ்வாறிருப்பினும், இன்று நாம் ஏற்க வேண்டிய தலையாய கடமை, அறியாமை மிகுந்த நம் மக்களை இந்தப் பொய்யர்களிடமிருந்து விடுவிப்பதுதான்.

’வாஸ்து சம்பந்தமான புளுகுகளை வெளியிட வேண்டாம்’ என்று மனோ டேனியல் என்பவர் ‘இந்து’ஆங்கில நாளிதழுக்கு ஒரு கடிதமே எழுதினாராம்! [www.keetru.com]

'அரசியல் சாசனப்படி, விஞ்ஞானம் அல்லாத இந்த வாஸ்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது நக்கீரன் வார இதழ்ச் செய்தி.

இப்படிச் சிலர் தம்மால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம்மால் முடிந்தது என்ன?

பதிவுகள் எழுதுவதும் பாராட்டிப் பின்னூட்டங்கள் இடுவதும் மட்டும்தானா?

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

குடும்பப் பெண்களைச் சீரழிக்கும் குமுதம் இதழும்[21.08.2013] எழுத்தாளர் இந்துமதியும்!

நீங்கள் நிச்சயம் குமுதம் வாசகராக இருப்பீர்கள் அல்லது இருந்திருப்பீர்கள்.

இதைக் காசு கொடுத்து வாங்குபவர்கள் ஏழெட்டு லட்சங்களுக்குக் குறையாது; ஓசியில் படிப்பவர்கள் பல லட்சங்கள் தேறும்.

இது தமிழில் நம்பர் 1 வார இதழ்.....அன்றும் இன்றும்.

கவர்ச்சி என்ற பெயரில், ஆபாசப் படங்கள் போடுவதிலும் எழுதுவதிலும்கூட இது நம்பர் 1 தான்.

’குமுதமும் ஆபாசமும்’ என்னும் தலைப்பில் ஆயிரம் பக்க அளவில் ஒரு நூலே எழுதலாம்.

நிற்க.

குமுதம் அளவுக்கு எழுத்தாளர் இந்துமதியையும் நீங்கள் அறிவீர்கள்.

‘தரையில் இறங்கும் விமானங்கள்' என்ற நாவலின் மூலம் பெரும் புகழ் சேர்த்தவர் இந்துமதி என்பதையோ, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, ‘Range of Angels' என்னும் ஷிட்னி ஷெல்டனின் ஆங்கில நாவலைக் காப்பியடித்து ‘ராணி’ இதழில் ’நல்லதோர் வீணை செய்தே’ என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதியவர் என்பதையோ, பல ஆண்டுகளுக்கு முன்பு, குமுதத்தில் சிவசங்கரியுடன் இணைந்து, ‘இரண்டு பேர்’ [ஒரே நபரைத் தாயும் மகளும் காதலிப்பது கதை] என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதி வாசகரிடம் ரொம்பவே வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பதையோ இங்கு நினைவு படுத்தி அவர் எழுத்துக்களை விமர்சிப்பது என் நோக்கமல்ல.

இந்த வாரக் குமுதத்தில்[21.08.2013] அவர் எழுதியிருக்கும், ‘தூண்டில் புழுக்கள்’ என்னும் சிறுகதை எத்தனை தரம் தாழ்ந்தது என்பதை, இந்த வலைப் பக்கத்திற்கு வருகை புரியும் உங்களுக்குச் சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.

அதைப் படிக்காத நண்பர்களுக்காகக் கதைச் சுருக்கம்..........

‘மகா’ என்னும் பெயர் கொண்ட ஓர் அழகிய [இந்துமதியின் வர்ணனைப்படி, ‘வேக வச்சு தோலுரிச்ச சேப்பங்கிழங்கு மாதிரி, வெள்ளை வெளேர்னு லட்சணமானவள்’] இளம் பெண், சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலைக்குச் [காரியதரிசி] சேர்கிறாள்.

சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் இக்கதைச் சம்பவம் நிகழ்கிறது.

இரண்டு வாரங்கள் போல, அவள் தவறு செய்யும் போதெல்லாம், சிரித்துக்கொண்டே திருத்திக் கொள்ளச் சொல்லும் சிவகுமார், கடந்த இரு வாரங்களாக, தவறே நிகழாத போதும் கடுமையாகச் சாடுவதோடு ஃபைல் கட்டுகளையும் தூக்கி வீசுகிறார். தினம் தினம் இது நடக்கிறது.

ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் [மூன்று பேர்] தன் மன வேதனையைப் பகிர்கிறாள் மகா.

அவர்களில், ஜானகி என்பவள், “உன்னை அச்சுறுத்திப் பணிய வைக்கத்தான் [அனுபவிக்க] இப்படி நடந்துக்கிறார். எங்களிடமும் இப்படித்தான் நடந்துகிட்டார். வேறு வழியில்லாம நாங்க மூனு பேருமே அவர் ஆசைக்குப் பலியாகிட்டோம். ஆஃபீஸுக்கு ஆஃபீஸ் ‘மகளிர் மட்டும்’ நாஸர்கள் இருக்கிறார்கள். நீ சிவகுமாரை எட்டி உதைக்கப் போறியா, இல்லே, விட்டுக் கொடுக்கிறியா?” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறாள்.

அன்று இரவு முழுக்க மகாவுக்கு உறக்கமில்லை.

விடிந்து அலுவலகம் புறப்படுகிறாள்.

அம்மாக்காரி, “சாப்பாட்டுக்கு அரிசி இல்ல. நாடார் கடையில் பத்து கிலோவுக்குச் சொல்லிடு. உன் சம்பளம் வந்ததும் தந்துடலாம்” என்கிறாள்.

மகாவும், “சரி சொல்லிடறேன்” என்று சொல்லிப் போகிறாள்.

படிக்கும் போதே கதையின் சாராம்சத்தை உள் வாங்கி, அதன் தரத்தையும் நீங்கள் எடை போட்டிருப்பீர்கள்.

உங்கள் நிலை என்னவென்பது எனக்குத் தெரியாது. என் மனதில் எழுந்த சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன்..........

“ஆஃபீஸுக்கு ஆஃபீஸ் ‘மகளிர் மட்டும்’ நாசர்கள் இருப்பதாக, ஜானகி வாயிலாகச் சொல்கிறார் இந்துமதி.

இவரின் எண்ணப்படி, தனியார் நிறுவன உரிமையாளர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றாகிறது.

இந்துமதி அப்படி நினக்கிறார். அது அவருக்குள்ள சுதந்திரம்; உரிமை. இந்தக் கதையைப் பிரசுரம் செய்த குமுதம் ஆசிரியர் இதை அங்கீகரிக்கிறாரா?

இல்லையெனில், இதைப் பிரசுரம் செய்தது ஏன்?

எழுத்தாளர் பிரபலமானவர் என்பதாலா?

மகா, படிப்பிற்குச் சம்பந்தமில்லாத பல வேலைகள் பார்த்தவள். அங்கெல்லாமும் பெண்ணினத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைச் சந்தித்தவள். அந்த வகையில், தான் பணிக்குச் சேரும் நிறுவனத்தின் முதலாளி குறித்து, குறிப்பாக, அவர் நடத்தை குறித்து ஏதும் விசாரிக்கவில்லையே, ஏன்?

இவ்வாறெல்லாம் நம் வாசகர்கள், தோண்டித் துருவி கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்ற எழுத்தாளரின் நம்பிக்கை காரணமா?

பிழைக்க வேறு வழியில்லாமல், முதலாளியின் ஆசைக்குப் பலியானதாக ஜானகி சொல்கிறாளே, சதையை விற்பதைத் தவிர வயிறு வளர்க்க வேறு வழியே இல்லையா?

வீட்டோடு இருந்து துணிமணிகள் தைப்பது; பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்பது; அண்டை அயலவர்க்கு விசேச காலங்களில் பலகாரங்கள் தயாரித்துத் தருவது என்றிப்படிப் பல தொழில்கள் செய்து சம்பாதித்து வசதியற்ற குடும்பப் பெண்கள் மானத்தோடு வாழ்க்கை நடத்துவது ஜானகி முதலானவர்களுக்குத் தெரியாவிட்டால் போகிறது. சமுதாயத்தைப் படித்த மெத்த பெரிய எழுத்தாளரான இந்துமதிக்கும், குமுதம் ஆசிரியருக்கும் தெரியாமல் போனது மகா மகா பெரிய ஆச்சரியம்!

அன்றாடச் சோத்துப் பிரச்சினைக்காக, முதலாளியின் ஆசைக்கு அடிபணிவது என்ற மகாவின் முடிவைச் சொல்லாமல் சொல்லிக் கதையை முடித்திருக்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் இந்துமதி.

இம்முடிவின் மூலம், தான் வாழ [நோகாமல்], தன் குடும்பம் வாழ ஒரு கன்னிப் பெண் தன்னையே அர்ப்பணிப்பதில் தவறேதும் இல்லை என்கிறார் பிரபலம்.

இவருடைய இந்தக் கருத்து, நம் பெண்களை வாழ வைக்குமா? இல்லை.....
சீரழிக்குமா?

முடிவெடுப்பது நம் அனைவரின் கடமை.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆணா, பெண்ணா? விரும்பிய குழந்தை பெற எளிய வழி!

கடைசியாகப் பதிவு எழுதி 20 நாட்கள் ஆகிவிட்டன. வெளியூர்ப் பயணமும் மடிக்கணினிப் பழுதும் தாமதத்திற்கான காரணங்கள்.

மங்களகரமான வெள்ளிக் கிழமையன்று [09.08.13] புதிய பதிவு எழுதியே தீருவது என்று ஏற்கனவே எடுத்த சபதத்தின்படி, ‘வாஸ்து சாஸ்திரம்’ பற்றி, சற்றே நீண்டதொரு பதிவை இன்று அதிகாலையிலேயே எழுதி முடித்தேன்.

திரும்பப் படித்த போது, அடித்தல், திருத்தல், கூட்டல், கழித்தல், இடைச் செருகல் எல்லாம் செய்யாவிட்டால் என்னுடைய அடுத்த பதிவை நீங்கள் சீந்த மாட்டீர்கள் என்பது சந்தேகமறப் புரிந்தது. அதற்குச் சில நாட்கள் தேவை என்பதும் தெரிந்தது.

இருப்பினும், மேற்கொண்ட சபதத்தைக் கைகழுவ என் தன்மானம் இடம் தரவில்லை. உங்களுக்குக் கிஞ்சித்தேனும் பயன் தரும் வகையில் எதையாவது எழுதியே தீருவது என்று முடிவெடுத்தேன். எதை? எதை எழுதுவது?

தீவிரமாய் யோசித்ததில், தனித் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ என்னும் நூலில் எப்போதோ படித்த ஒரு செய்தி இப்போது கை கொடுத்தது.

ஆசைப்பட்ட பிள்ளையை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிவகை அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே என் நடையில் தருகிறேன்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை ‘சூரிய கலை’ என்றும், இடது துவாரத்தில் அது நிகழ்ந்தால், அதைச் ‘சந்திர கலை’ என்றும் சொல்வார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இந்தப் பதிவின் மைய இழையே இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவு கொள்வது மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவளிடமும் சொல்லி வைப்பது மிகவும் அவசியம்.

கீழ்க்காணும் விடயத்தையும் அவர் காதில் போட்டு, மனதில் ‘சக்’கென்று பதிய வைப்பது உங்களின் தலையாய கடமை.

விந்தணுக்கள், வீரியத்துடன் வெளிப்பட்டு, பெண்ணின் யோனிக் குழாயில் பரவி, அவளைச் சிலிர்க்கச் செய்யும் அந்தத் தருணத்தில், உங்கள் நாசியில் ‘சூரிய கலை’ சுவாசம் [நாசியின் வலது துவாரத்தில் மூச்சுக் காற்று உட்புகுந்து வெளியேறுவது] இடம் பெறுமேயானால், கருவில் உருப்பெறும் சிசு ஆணாக இருக்கும்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன?

அது மிக மிக எளிய ஒன்று.

சேர்க்கை கொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் மனைவியின் இடப்பக்கமாக, அவரை எதிர்கொள்ளும் நிலையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். படுத்த சிறிது நேரத்திலேயே, வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை உங்களால் அறிய முடியும். இதுவே சூரிய கலை!

எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவாறு, ஒருக்களித்துப் படுத்த நிலையில் புணர்ச்சி செய்வது சிரமம் ஆயிற்றே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், நீங்கள் மன்மதக் கலையை இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று அர்த்தம்.

தொடர்ந்து முயலுங்கள்; சாதிப்பீர்கள்.

இதே போல, பெண் பிள்ளை பெற விரும்பினால், நாசியின் இடது துவாரத்தில் சுவாசம் நிகழும் வகையில், வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கலவி புரிய வேண்டும்.

ஆரம்ப நிலையில் இம்மாதிரி முயற்சிகள் தோல்வியில் முடியலாம். இன்பம் பெறுதலே நோக்கம் என்றில்லாமல், விரும்பிய சிசுவைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சூரிய கலை, சந்திர கலைன்னு கணக்குப் போட்டிட்டிருந்தா கலவியில் ஈடுபாடு குறைஞ்சிடுமேன்னு நீங்க கவலைப் படுவதும் புரிகிறது. விரக தாபத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுவதன் மூலம் உணர்ச்சி வேகம் தணியாமல் பாதுகாக்கலாம்.

மேற் சொன்ன முறையைக் கையாண்டும் ஆசைப்பட்ட ஆண் குழந்தையைப் பெற இயலவில்லை என்றால், ஆணின் குரோமோசோமில் y இல்லை என்பது அறியற்பாலது.

ஆணின் x ம் பெண்ணின் x ம் சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணின் x ம் ஆணின் y ம் சேர்ந்தால் ஆண் குழந்தை. ஆணிடம் y குரோமோசோம் இல்லையாயின் ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போன்ற உடற்கூற்று உண்மைகளெல்லாம் நீங்கள் அறிந்தவைதாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தரும் என்று நீங்கள் நம்பினால், நன்றி சொல்ல நினைப்பீர்கள். அது இப்போது வேண்டாம். பெண்ணோ ஆணோ விரும்பிய குழந்தையைப் பெற்ற பிறகு சொல்லலாம். அதுவும் எனக்கல்ல; மறைமலை அடிகளாருக்கு!