கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஐயோ பாவம் ‘அந்த’ப் பெண்கள்!!!

"இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஆயிரக் கணக்கான பெண்களில் பலரும் சிறு வயதிலேயே தந்தை, தாய்மாமன், மச்சான், சொச்சான் போன்ற மிக நெருங்கிய ரத்த உறவு கொண்டவர்களாலேயே வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டவர்கள்; குடும்ப உறுப்பினர்களாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்கிறார் இந்தத் தொழிலில் ‘முத்துக் குளித்த’ ஒரு ’முன்னாள்’ பிரபலம்! [பெயர் தவிர்க்கப்படுகிறது. interviewed in 'Not For Sale’, 2004]

"இதில் ஈடுபட்டவர்கள் பலரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இத்தொழிலைத் தலை முழுகியவர்கள்.” ['Avaria', Shelly Lubben's Blog, 06.12.2007].

இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் சராசரி வயது 18 ஆகும்.[ABC News quoted on erasethedark.com]

நிறையச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளம் பெண்கள் வருகிறார்கள். ஆனால், உண்மையில் சம்பாதிப்பவர்கள், பேரழகும் கட்டான உடலமைப்பும் அதிர்ஷ்டமும் உள்ள கொஞ்சம் பெண்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தரகர்களும்தான்.

இதில் ஈடுபடும் தொழில்காரிகள், A, B, C என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! மேற்சொன்ன கவுரவங்கள் மிஸ்ஸிங்! [Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].
.
“இது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்”என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஒரு male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005] 

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் , குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளனவாம்.

இளம் பெண்களைக் காவு வாங்கும் ‘அந்த’த் தொழில் எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அது.....

ஆங்கிலத்தில் ‘........phy’ என்று சொல்லப்படும் ஆபாசப் படத் தயாரிப்பு!

இவ்வகைப் படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த மையமாக Hungary- Budapest திகழ்கிறதாம்!

55% நிறுவனங்கள் [Internet Child .... Industry] அமெரிக்காவிலும், 33% நிறுவனங்கள் ரஷ்யாவிலும் உள்ளனவாம். 


இந்தத் தொழிலில் நம் பாரதேசம் பின்தங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது!


ஒரு பக்கத்தில் ஆண் பெண் சமத்துவத்துக்கான ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, வக்கிர புத்தியுடன் பெண்களை உடலுறவில் ஈடுபடுத்திப் படம் எடுத்து உலகம் முழுக்கப் பரவவிட்டுப் பணம் சம்பாதிக்கிறது ஆண் வர்க்கம்.

இணைய வலைத்தளங்களில் உலா வரும் கோடிக்கணக்கான ஆபாசப் படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அவையும் பின்னர் அடங்கிவிடுகின்றன.

ஆபாசப் படங்களுக்கு எதிரான குரல் [anti .... websites] இணையத்தில் ஒலிப்பதே இல்லையா என்னும் ஆதங்கத்தில் தேடுபொறிகள் வாயிலாகத் தேடிய போது பல தகவல்கள் கிடைத்தன. மேற்கண்டவை அவற்றில் சில.

உடலுறவு கொள்ளும் ‘முறைகள்’ குறித்துப் படங்கள் [ஓவியங்களைப் பயன்படுத்தி] தயாரிப்பதும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னரே காண்பித்துப் பாலுறவுக் கல்வி கற்றுத் தருவதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

நடைமுறை சாத்தியம் இல்லாத,  உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கிற படங்களை எடுத்து அவற்றைப் பலரும் பார்க்க வழிவகை செய்வது கண்டிக்கத் தக்க மாபெரும் குற்றம் ஆகும். அக்குற்றங்களை வேரோடு களைவது இன்றைய இளைஞர்களால் சாத்தியப்படும்.

அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மிக மிகச் சிறிய முயற்சியே இப்பதிவு.

தங்களின் வருகைக்கு நன்றி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதன், 25 செப்டம்பர், 2013

சில நூறு ஆண்டுகளில் அனைத்து மதங்களும் அழியும்!!!

#கடவுளிடம் நம்பிக்கை இழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் கடவுளை நம்புகிறவர்கள் அல்ல#


இன்று உலகில், மிகக் குறைவான மதங்களே உள்ளன.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை, கிறித்தவம், இந்து, புத்தம், இஸ்லாம், ஜைனம், சீக்கியம், யூதம், ஷிண்டோ, தாவோ ஆகிய மதங்கள் ஆகும்.

இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, இவை போலப் பிரபலமான பல மதங்கள் இருந்தன. அவை அனைத்தும் செத்து மடிந்துவிட்டன. [‘இறந்து போன மதங்கள்’-ஜோசப் இடமருகு. தமிழில்: த.அமலா, ‘மதமும் பகுத்தறிவும்’, சூலை, 2004].

அவற்றில் ஒன்று..........

அரேபியன் மதம்:

இம்மதம் பற்றிய ஒரு சுவையான தகவல்.....

அரேபியக் கடவுள்கள், பழிவாங்கும் மனப்பான்மை கொண்டவை. ஒருவனை யாரேனும் கொன்றுவிட்டால், கொல்லப்பட்டவனுடைய உறவினர்கள், கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும். தவறினால், இறந்தவனின் ஆவி, ஒரு குள்ளனின் வடிவில் வந்து கல்லறையில் அமர்ந்து, “கொலையாளியின் ரத்தம் வேண்டும். அதைக் குடித்தால் மட்டுமே என் தாகம் தீரும்” என்று மிரட்டுமாம்!

இம்மதம் அழியக் காரணமாக இருந்தது, இஸ்லாம் மதம். இஸ்லாமைத் தோற்றுவித்த முகம்மது ஆற்றிய உரைகளின் மூலம்தான் இது பற்றி அறிய முடிகிறதாம்

இம்மதம் போலவே, மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த எகிப்தியன் மதம், கிரேக்க மதம், வைதிக மதம், அத்வைத மதம், விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், கபாலிக மதம், தாந்திரீக மதம் போன்றவையும் காலப் போக்கில் அழிந்து போயின.

தாந்திரீகம், மிகவும் விநோதமானது.

இம்மதம் சார்ந்தவர்கள், சிவலிங்கத்துடன் பெண்ணின் பிறப்பு உறுப்பையும் வழிபடுவார்கள்.

இவர்களுடைய சக்தி வழிபாட்டில், நிர்வாணக் கோலம் கொண்ட ஆணும் பெண்ணும், தங்களைச் சிவன், சக்தி என நினைத்தவாறு உடலுறவு கொள்வார்களாம்!

முகம்மதியர்கள், எகிப்தைத் தாக்கி அழித்த போது, எகிப்தியர்கள் பின்பற்றிய எகிப்தியன் மதம் பூண்டோடு அழிந்ததாக வரலாறு சொல்கிறது.

கிரேக்க மதத்தை அழித்தவர்கள் கிறிஸ்தவர்கள்.

கிரேக்கர்களை வென்ற ரோமானியப் பேரரசர், கிறித்துவ மதத்தை அரசு மதமாக அங்கீகரித்தாராம்.

இவ்வாறு, அழிந்து போன மதங்கள் பற்றி எத்தனையோ சுவையான செய்திகள்; கதைகள்!

இன்றுள்ள மதம்களும்கூடப் பல உட்பிரிவுகளுக்கு இடம் தந்து,  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு கடவுளின் பெயரால் கணக்கில் அடங்கா உயிர்களைப் பலியிட்ட...இடும் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற காரணங்களால், மக்கள் மீதான இவற்றின் பிடி தளர்ந்து கொண்டிருக்கிறது.

முன்பு போல், கடவுளின் மகிமை பற்றிய பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.

மக்கள், “ஏன்? எதற்கு? எப்படி?” என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பழகிவிட்டார்கள்.

குடும்ப உறுப்பினர்களும் உறவுகளும் தூற்றுவார்களே என்று அஞ்சித்தான் கடவுளை வழிபடுகிறார்கள்; கோயில்களுக்குச் செல்கிறார்களே தவிர, மனப்பூர்வமாகக் கடவுளை நம்புவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

“கடவுளின் கிருபையால், ஊமை பேசினார்; முடமானவர் எழுந்து நடந்தார்; மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய் குணமானது” என்பனவாக இட்டுக் கட்டப்படும் பொய்களை அவர்கள் நம்பத் தயாராயில்லை.

“சாகக் கிடந்தவரைப் பிழைக்க வைத்தார் எங்கள் கடவுள்” என்று ஏதாவதொரு மதவாதி சொன்னால், “தேதி குறிப்பிடு. ‘இவர் செத்துப்போவது 100% உறுதி’ என்று மருத்துவர் குழு சான்றளித்த ஒருவரை உன் கடவுளின் அருளால் பிழைக்க வை. இதை  ஊடகங்கள் வழியாக நாங்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்” என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டினால் ஒழிய, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம் என்று எதையும் இனி மக்கள் நம்ப மாட்டார்கள். அவ்வாறு நிரூபிப்பதும் மிக...மிக...மிக.....மிக... நீண்ட...நீண்ட...நீண்ட..... நெடு...நெடு...நெடுங்கால முயற்சிக்குப் பின்னரும் சாத்தியப்படுகிற ஒன்றல்ல.

எனவே, சில நூறு ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து மதங்களும் அழிவைச் சந்திப்பது உறுதி என்கிறார்கள் நடுநிலைச் சிந்தனையாளர்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

திங்கள், 23 செப்டம்பர், 2013

நீங்கள் ‘சஸ்பென்ஸ்’ கதைப் பிரியரா? புத்திசாலியா? ஒரு ‘டெஸ்ட்’!!!

“இந்தக் ‘குமுதம்’ கதையின் கடைசி இரண்டு பத்திகளைப் படிக்காமல் கதையின் முடிவைச் சொல்ல முடியுமா?” சவால் விட்டாள் என் தோழி. ஒரு வாரம் போல யோசித்தேன். ஊஹூம்...!!! உங்களால் முடிகிறதா பாருங்கள்.


தலைப்பு:                                   கவலை

எழுதியவர்:                              ‘மலர்மதி’

வெளியான இதழ்:                 ‘குமுதம்’ வார இதழ் [28.08.1986].


“என்ன கண்ணபிரான், ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கீங்க? என்ன ஆச்சு?”

“அதை ஏன் கேட்குறீங்க? என் மனைவி, மூனு மாசம் முழுகாம இருக்கும்போதே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைக் காக்கா பிடிச்சேன்!”

“எதுக்கு?”

“வேற எதுக்கு? எல்.கே.ஜி. அட்மிஷனுக்குத்தான்!”

“சரி.....!”

“அந்தக் கான்வெண்ட் பிரின்சிபால் அவருக்கு ரொம்ப தோஸ்து!”

“அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!”

“அவர் என்னை அழைச்சுட்டுப் போயி முதல்வர்கிட்டே அறிமுகப்படுத்தினார்.”

“அப்புறம்?”

“ரெண்டு வருசத்துக்கு மூச்சு விடக் கூடாது. எல்லா சீட்களும் அல்ரெடி ரிசர்வ்டு. மூணாவது வருசத்துக்கு வேணும்னா நீங்க டிரைப் பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லிட்டார்!”

“நல்லதுதானே? உங்க குழந்தைக்கு மூனு வயசு ஆகறதுக்கும் சீட் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்குமே!”

“அப்படித்தான் நானும் நினைச்சி சந்தோசப்பட்டேன். அவர் ரெண்டாயிரம் டொனேஷன் வேறு [இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு!] கேட்டார். சரின்னு சொல்லி, அலைஞ்சி திரிஞ்சி ரெண்டாயிரத்தைத் திரட்டி அவர் கையில் திணிச்சேன். அவரும் 1989ஆம் ஆண்டுக்கான அட்மிஷன் சீட்டைக் கைப்பட எழுதிக் கொடுத்துட்டார். என்னோட சீட்தான் கடைசி. எல்லாம் பூர்த்தி ஆயிடிச்சி!”

“அடடா...! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க!”

“தாய் வீட்டுக்குப் போன என் பெண்டாட்டிக்குப் பிரசவம் ஆயிடிச்சி.....”

“கன்கிராட்ஸ். சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆனா, நானும் வந்ததிலிருந்து கவனிச்சிட்டிருக்கேன், நீங்க ஏன் இப்படி இடிஞ்சி போயி உட்கார்ந்திருக்கீங்க?”

........................................................................................................................................

”அடுத்து, கதையின் முடிவு வரப்போகுது. அட்டகாசமான சஸ்பென்ஸ் காத்திருக்கு. கடைசி ரெண்டு பாரா படிக்காம, ‘முடிவை’ச் சொல். சொல்லிட்டா, நீ  மகா மகா புத்திசாலி”ன்னு குமுதம் இதழைப் பிடுங்கிட்டா என் கேர்ள் ஃபிரண்டு. 

நான் ஏற்கனவே மகா புத்திசாலின்ற மிதப்பில் இருக்கிறவன். “மகா மகா புத்திசாலி நீ”ன்னு அழகான தோழியால் புகழப்படணும்ங்கிற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?

ஒரு நாள் அல்ல; ரெண்டு நாள் அல்ல; ஒரு வாரம் போல,  பசி நோக்காமல், மெய் வருத்தம் பாராமல் சிந்தித்தும் என்னால் கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கவே முடியவில்லை.

உங்களால் முடிந்ததா? நீங்கள் மகா மகா புத்திசாலியா?!

‘முடிவு’ கீழே..........
கதை முடிவு.....

“எல்.கே.ஜி.ல ஒரே ஒரு சீட் பிடிக்க நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. இப்ப என்னடான்னா, என் பெண்டாட்டி ரெட்டைக் குழந்தை பெத்துத் தொலைச்சிருக்கா!”

“அடப் பாவமே!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 20 செப்டம்பர், 2013

சிறுநீரிலிருந்து சொர்க்கத்துக்கு!!!

‘ஓஷோ’[ரஜனீஷ்]வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்னும் நூலைப் படித்ததால் விளைந்த ‘விபரீதம்’தான்  இந்தப் பதிவு!ஓஷோ(1931-1990)
Affect3.jpg
இயற்பெயர்ரஜ்னிஷ் சந்திர மோகன்
பிறப்புடிசம்பர் 11, 1931
குச்வாடா, மத்திய பிரதேசம்
இறப்புஜனவரி 19, 1990 
[நன்றி: தினமணி]


லக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில் ‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று.

அப்படி என்ன இருக்கிறது அந்த நூலில்?

ஓஷோவே [மறைந்த] சொல்கிறார், படியுங்கள்.....

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு,காமத்திலிருந்து கடவுளுக்கு. அதற்கு பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால்,மற்றவற்றை படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக இந்தியாவில் எல்லாரும் படித்ததுகாமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகைத்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள். எதிர்த்தார்கள். இன்னும் அதை பற்றி கட்டுரைகளும்,மறுப்பு நூல்களும் எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்து கொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களை பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான் எழுதியது போல.

மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதை குணப்படுத்தியாக வேண்டும்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை, உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்த சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

அது, அந்த விஷயம் பற்றிய என் அறிவியல் அணுகுமுறை. காரணம், மனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும், காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு, உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது
.
நான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்வதால்தான் உலகமே என்னை கண்டனம் செய்கிறது.

காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு செல்வது பற்றி நான் பேச போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன். கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள்.

இந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்த புத்தகத்திற்கு சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்த புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். காமத்திலிருந்து கடவுளுக்கு. அதை வாங்கி தமது ஆடைக்குள் மறைந்து வைத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்.//     [இடுகை...நந்தன்,மே,2012]


அன்பு நெஞ்சங்களே,

தங்கள் வருகைக்கு நன்றி.

மேலே கண்ட பத்திகளில், அடிக்கோடிட்டவற்றை மீண்டும் படியுங்கள்.

கடவுளை உணர்வதற்கும் அடைவதற்கும் வழிகோலுவது தியானம் என்கிறார்கள்.

தியானம் புரிவதற்கு, மனமற்ற காலமற்ற ஒரு பரவச நிலையை நாம் எய்த வேண்டும் என்கிறார் ஓஷோ. 


இந்த நிலையை எய்த ஒரு முன் அனுபவம் வேண்டும். அந்த அனுபவத்தைக் காம உணர்ச்சி அளிக்கிறதாம்.


உடலுறவில் ஏற்படும் பரவசம், ‘மனமற்ற...காலமற்ற’ ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்குகிறதாம். இது பற்றித்தான் இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் இந்த செக்ஸ் சாமியார்.

காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றுவது குறித்த அற்புதமான நூல் இது என்கிறார்கள் இவரின் சீடர்கள்.

இந்தக் காம குரோத ஆன்மிக தத்துவம் நம்மைப் போன்றவர்களுக்குப் புரியுமா என்று யோசித்திருக்கிறார் இந்தக் காம யோகி.

நமக்கெல்லாம் புரியும்படியாக ஒரு உதாரணமும் தந்திருக்கிறார்.....

//ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்’//

//வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை “நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்தக் கணத்தை நீட்டிக்கமுடியாது. தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும்//

காம சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்றுவது புரிகிறதோ இல்லையோ, பட்டினி கிடந்து வயிறு நிறையச் சாப்பிடும் உதாரணம் நமக்கு நன்றாகவே புரிகிறது.

காம இச்சையைத் தணிக்க வடிகால் இல்லாமல் அலைந்தவன், வடிகால் கிடைத்து அதை அனுபவிக்க நேரும்போது  தன்னை இழந்து,  மனமற்ற காலமற்ற நிலையை எய்துவதற்கு இந்தப் பட்டினி...வயிறு முட்டச் சாப்பிடும் உதாரணம் தரப்பட்டுள்ளது.

ஆக, நாள் கணக்கில் பட்டினி கிடந்த ஒருவன், உணவு கிடைத்து உண்ணும்போது, தன்னை இழந்து மனமற்ற காலமற்ற நிலையை [’நான்’ மறந்த கணம்]எய்துவான் என்பது அறியப்படுகிறது. [இது, ஏற்கனவே நாம் அறிந்ததுதான்]

இங்கே, ‘பசி’ என்னும் சக்தி, ஆன்மிக சக்தியைப் பெறுவதற்கு அடிப்படையாய் அமைகிறது.

இங்கே, அழுத்தமாய் மனதில் கருதத் தக்கது ஒன்று உண்டு. அது..........

கடவுளை நினைந்து தியானம் புரிவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறுவதற்கு, இந்தப் பசி என்னும் ஆற்றலே போதும். காமம் என்னும் ஆற்றலைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

சிறுநீர் வெளியேறும் உணர்வு ஏற்படுகிறது. வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கிறோம்.

வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற உச்சக்கட்ட நிலையில் சிறுநீரை வெளியேற்றுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அது வெளியேறுகிற போது நாம் பெறுகிற பரவச நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

தன்னை மறந்த, ‘நான்’ஐ மறந்த, 'காலத்தை' மறந்த நிலையல்லவா இது!?

சிறுநீரை நெடுநேரம் அடக்கி வைத்து வெளிப்படுத்தும் கலையைக் கற்றால், எளிதில் கடவுளைக் காணலாம்; சொர்க்கம் புகலாம்!

தியானம் புரிவதற்கு முன்னால், தன்னை மறந்த ஒரு பரவச நிலையை அனுபவித்துப் பார்க்க இப்படியான எளிய...இடர்ப்பாடுகள் ஏதுமற்ற வழிகள் இருக்கும்போது “காமமே கடவுளை அடைவதற்கான ஒரே வழி” என்று தன் வாழ்நாள் முழுக்க செக்ஸ் சாமியார் ஓஷோ வாய் கிழியப் பேசித் தீர்த்தாரே; அது ஏன்?

‘காமமும் கடவுளும்’னு நூல் வேறு எழுதிக் கிழிச்சாரே! எதற்கு?

இது, முப்பத்து நான்கு மொழிகளில் வெளியாகி, பன்னிரண்டு பதிப்புகள் [இப்போது இன்னும் அதிகம் விற்றிருக்கும்] வெளியாகி விற்றுத் தீர்ந்துவிட்டதாம். எல்லாச் சாமியார்களும் படிச்சிட்டாங்களாம்.

வெட்கக் கேடு!

இனி இந்த உலகத்தை அந்தக் கடவுள்[?!]தான் காப்பாற்ற வேண்டும்!

**************************************************************************************************************

புதன், 18 செப்டம்பர், 2013

‘சாரு’வின்...தலையைச் சுற்றி ‘ஒளி வட்டம்’ வரையும் கேமரா!!!

பிரபல எழுத்தாளரும்,  சுவாரசியமான விறுவிறு சுறுசுறு நடையைக் கையாளுவதில் கில்லாடியுமான சாரு நிவேதிதாவை விமர்சனம் செய்ய நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்கான தகுதியும் எனக்கு இல்லாமலிருக்கலாம். எனினும், ‘கடவுளும் நானும்’ என்னும் நூலில் அவர் உண்மைச் சம்பவம் என்று குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சி இப்பதிவுக்குத் தூண்டுதலாய் அமைந்துவிட்டது.

நீங்கள், அவர் எழுதிய ‘கடவுளும் நானும்’ என்னும் நூலை முழுதும் படித்திருந்தால், கீழ்க்காணும் இச்சம்பவம் [பக்கம்: 67] நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கும்.....

‘அவர் [அவருடைய குரு] பெயர் சிவஸ்வாமி. ஊர் மலேஷியா. அங்கேயே பிறந்து வளர்ந்தவர். மலேஷியத் தமிழில் பேசுவார். ஆங்கிலம்தான் தாய்மொழி மாதிரி. என்னுடைய கைத்தொலைபேசியால் அவரைப் புகைப்படம் எடுத்தேன். ப்ரிண்ட் போட்ட போது அவர் தலையைச் சுற்றி வெண்ணிற ஒளி வட்டம் [aura] இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கிறேன். எல்லாப் புகைப் படத்திலும் இந்த ஒளி வட்டம் வரத் தவறுவதே இல்லை. நான் எழுதுவதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவரை நீங்களே நேரில் சந்தித்து உங்கள் கேமராவின் மூலம் புகைப்படம் எடுத்துப் பார்க்கலாம்’

தூரிகையால் வரையப்படும் சாமி படங்களிலும், ‘மகான்’கள் என்று சொல்லப்படுபவர்களின் ஓவியங்களிலும் நாம் ஒளி வட்டங்களைப் பார்த்திருக்கிறோம்; பலரும் பார்த்திருக்கிறார்கள்.

கேமராக்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் இதுவரை எவரும் ஒளிவட்டம் பார்த்ததில்லை; பார்த்ததாகச் சொன்னதும் இல்லை.

ஒளி வட்டம் இருந்ததாக இந்தச் சாரு பொய் சொல்கிறாரே!

புளுகுகிறாரே!

‘அண்டப் புளுகு’ என்பார்களே, அது இதுதானா?

‘வேண்டுமானால் அவரை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துப் பார்க்கலாம்’ என்கிறாரே, இப்படியொரு அசாத்திய தைரியம் இவருக்கு எப்படி வந்தது?

நம் எல்லோரையும் அடிமுட்டாள்கள் என்று நினைத்துவிட்டதால்தானே?

சாரு அவர்களே,

நான்கு ஆண்டுகளுக்கு முன் [கடவுளும் நானும், முதல் பதிப்பு, டிசம்பர் 2008. உயிர்மை பதிப்பகம்] இந்நூலை எழுதியிருக்கிறீர்கள்.

இதுவரை, எத்தனை பேர் உங்கள் குரு சிவஸ்வாமியைப் புகைப்படம் எடுத்து, ஒளிவட்டத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றார்கள்?

பட்டியல் தருவீர்களா?

உங்கள் வழிகாட்டியான சிவஸ்வாமி, இப்போதும் தமிழ்நாட்டுக்கு வந்து போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு அவர் வருகைபுரிவது உண்மையாயின், அடுத்து அவர் வரவிருக்கும் தேதியை ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்துவீர்களா? அவரைப் படம் எடுக்க அனுமதி பெற்றுத் தருவீர்களா சாரு? 

ஒரு சந்தேகம்...உங்களைப் போன்ற குருபக்தி உள்ள பிரபலங்கள் பயன்படுத்தும் கேமராக்களில் மட்டும்தானா,  இல்லை, எங்களைப் போன்ற சாமான்யர்களின் படக்கருவிகளிலும் அந்த ‘ஒளி வட்டம்’ பதிவாகுமா?

சாரு சார் அவர்களே,

மேற்கண்ட கேள்விகளில் எதற்கும் நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள்...சொல்லவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.....

‘பிரபல எழுத்தாளர்’ என்னும் அடைமொழியோடு திருப்தி அடையுங்கள்.

‘அண்டப் புளுகன்’,  ‘ஆகாசப் புளுகன்’, ’பிரபஞ்சப் புளுகன்’ என்பன போன்ற அசிங்கமான பட்டப் பெயர்களுக்கெல்லாம் ஆசைப்படாதீர்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

                                 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

காந்தியும் காமமும்!

##காந்தி...‘மகாத்மா’ அல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சாதனைகள் புரிந்த ‘மிகச் சிறந்த’ ஒரு ‘மனிதர்’ மட்டுமே!##


"இளமையில், மிகையான காம உணர்ச்சி உள்ளவர்கள், அதைக் கட்டுப்படுத்தி ஒரு நெறியில் செலுத்தினால், பிற்காலத்தில் சிறந்த சாதனையாளர்களாப் புகழ் பெறக்கூடும்” என்பார் தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசன் [‘கரித்துண்டு’, நாவல்].

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, ‘மஹாத்மா’ என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சொல்லலாம்.

‘மஹா...ஆத்மா’ என்று சொல்லி அவரைக் கடவுளின் அம்சமாக்கி, தீபம் ஏற்றி வழிபடத் தக்கவர் ஆக்கிவிட்டார்கள் கடவுள் பற்றாளர்கள்.

“அவரைப் போல எல்லாம் நம்மால் வாழ முடியாது” என்ற எண்ணத்தை மக்களின் மனதில் ஆழப் பதித்துவிட்டார்கள்.

காந்தி கடவுள் நம்பிக்கை உள்ளவரே தவிர, ஒருபோதும் தன்னைக் கடவுளின் அம்சமாகக் கருதியதில்லை. மிகச் சாதாரண மனிதப் பிறவியென்றே நினைத்தார்; மற்ற மனிதர்களுக்கு உள்ள பலவீனங்கள் தனக்கும் உள்ளன என்றே சொல்லி வந்தார். தன்னுடைய சுய வரலாறான ‘சத்திய சோதனை’யில் தனக்கிருந்த குறை நிறைகளை அப்பட்டமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, இளமையில் தன்னைப் பாடாய்ப்படுத்திய மிகையான காம உணர்ச்சி பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அசாதாரண முயற்சிகள் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

மோக உணர்ச்சி தன்னை ஆட்டிப்படைத்த போதெல்லாம் மணல் மூட்டை சுமந்து உடம்பு சோர்வடையும்வரை ஓடுவாராம்!

குளிர்ந்த நீரில் நேரம்போவது தெரியாமல் அமர்ந்திருப்பாராம்.

'காமம் பொல்லாதது. அதை அடக்கி ஆள்வது அவ்வளவு எளிதல்ல’ என்பதை அவர் எப்போதும் உணர்ந்தே இருந்தார்.

அதனால்தான், தெனாப்பிரிக்கா புறப்படும் போது, “மதுவையும் மங்கையரையும் தீண்ட மாட்டேன்” என்று தன் அன்னையிடம் சத்தியம் செய்துவிட்டுப் போனார்.

சத்தியம் செய்யும் அளவுக்குப் பெண்ணாசை அவரை மருள வைத்திருந்தது!

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பும் நேரம் வரை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

ஆனால், திரும்பும் வழியில், அவர் பயணித்த கப்பல், ஒரு தீவை அடைந்த போது, கப்பல் கேப்டன் ஒரு விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு விலை மகளிடம் அனுப்பி வைக்க, அவர் மனம் சஞ்சலப்படுகிறது.

ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல் தாயிடம் செய்த சத்தியத்தையும் மீற இயலாமல் அவர் மனம் நிலை தடுமாற, சினம் கொண்ட விலைமகள் அவர் கன்னத்தில் அறைகிறாள்! அறையைப் பெற்றுக்கொண்ட அதிர்ச்சியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கப்பலுக்குத் திரும்புகிறார் காந்தி.

கஸ்தூரிபாயை மணந்த பிறகும்கூட, பொல்லாத இந்தக் காம இச்சையைத் தன் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர அவரால் இயலவில்லை.

தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்திலும்கூட, தன் மனைவியை மருவிச் சுகம் கண்ட ஒரு சதைப் பித்தராகவே அவர் இருந்திருக்கிறார்.

இந்தத் தன் பலவீனம் குறித்துப் பின்னர் வெகுவாக வருத்தப்பட்டிருக்கிறார் அவர். [‘சத்திய சோதனை’படியுங்கள்]

உலகமே வியந்து போற்றும் அளவுக்கு உன்னதமான தலைவராக உருவெடுத்த நிலையில், இது போன்ற தன் பலவீனங்களைச் சுயசரிதம் மூலம் உலகுக்கு அறிவித்த ஒரு ’மாமனிதர்’ காந்தியாகத்தான் இருக்க முடியும்.

அதனால்தான், மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான கவியரசு கண்ணதாசன்,  ‘வனவாசம்’ என்னும் தன் சுய வரலாற்றின் முன்னுரையில், ‘எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள காந்தியடிகளின் [‘அடிகள்’, ‘துறவி’ என்னும் பொருளுடைய சொல். ’மஹாத்மா காந்தி’ என்பதற்குப் பதிலாக, ‘காந்தியடிகள்’ எனச் சொல்வது பொருத்தமுடையது என்பார் உளர்]  சத்திய சோதனை படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள என் சுயசரிதை படியுங்கள்’ என்பார்.

காந்தியைப் போலவே, தான் செய்த தவறுகளை மறைக்காமல் சொன்னவர் கண்ணதாசன்.

‘மனித நாகரிகம் கருதி, நான் செய்த அசிங்கங்கள் அவ்வளவையும் எழுத இயலவில்லை’ என்கிறார்.

‘இளம் பருவத்தில், அழகும் கவர்ச்சியும் மிக்க பெண்களைப் பார்த்துவிட்டால், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விரகதாபத்துடன் அவர்கள் பின்னாலேயே அலைந்திருக்கிறேன்’ என்று தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

இத்தனை பெண் பித்துக் கொண்டவராக இருந்தும் எழுத்துத் துறையில் இவர் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைப்பது பேராச்சரியம்!

நாற்பது வயதுக்குள்ளாக, உடலுறவு ஆசையை முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தி, மனைவி கஸ்தூரிபாயின் சம்மதத்துடன் துறவு மேற்கொண்டு நாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் காந்தி.

துறவு மேற்கொள்வது சாத்தியப்படாது என்பது புரிந்த நிலையில், ஒரு வரம்புக்கு உட்பட்டு, மது மங்கை சுகத்தை அனுபவித்துக் கொண்டே எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்தியவர் கண்ணதாசன்.

வரம்பு கடந்த காமம், கால நேரம் கருதாமல் அலைக்கழித்த போதும், மனம் தளராமல் அதனுடன் போராடிக் கட்டுப்படுத்தி, கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிப் புகழ் ஈட்டியவர்கள் இவர்கள்.

காந்தியின் சத்திய சோதனையையும் கண்ணதாசனின் மனவாசத்தையும் படித்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தகவல்களும் தெரிந்தே இருக்கும்.

தெரிந்தவர்களுக்கும் இனிப் படித்துத் தெரிந்துகொள்ள இருப்பவர்களுக்கும் இப்பதிவின் மூலம் நான் முன் வைக்கும் வேண்டுகோள்..........

‘பலவீனங்களுடன் பிறந்து, சாதனைகள் நிகழ்த்திய ஒரு சாதாரண மனிதர் இவர்’ என்று கண்ணதாசனை நம் வருங்காலச் சந்ததியருக்கு அறிமுகப்படுத்துவது போலவே, காந்தியையும், ‘ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து செயற்கரிய செயல்கள் செய்த ஒரு மாமனிதர் இவர்’ என்றே அறிமுகப்படுத்துங்கள்.

மறந்தும் அவரை ‘மஹாத்மா’ என்று போற்றிப் புகழாதீர்கள்.

அவ்வாறு செய்தால், வருங்காலச் சந்ததியினர், அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தீபம் ஏற்றி வழிபட மட்டுமே செய்வார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பெருந்தன்மையுடன் வருகை புரிந்த தங்களுக்கு என் நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கோயில்களில் ‘ஆபாச’ச் சிற்பங்கள் வடிக்கப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

##கோயில்கள் ‘உடலுறவு மையங்கள்’ ஆக இருந்தன என்றால், அதிர்ச்சி அடைய வேண்டாம். மேலே படியுங்கள்##


சிவலிங்க வடிவத்தின் ‘தத்துவம்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இறைவனின் பிறப்பு உறுப்பு இறைவியின் பிறப்பு உறுப்புடன் இணைந்த கோலம் அது.

இது வெறும் ‘புனைந்துரை’;  நாத்திக வாதிகளால் பரப்பப்பட்டது என்று நம் மக்களில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது.

இது, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது என்பது மனம் கொள்ளத்தக்கது.

எகிப்தியர்களின் ‘ஓசிரசு’, ‘ஏசீசு’ போன்ற கடவுள்கள் மனிதப் பிறப்பு உறுப்புகளின் வடிவம் கொண்டவைதானாம்.

சிந்துவெளி நாகரிகத்தின்  பண்பாட்டில், உடலுறவு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய ‘சிஸ்ன’ தேவ வழிபாடுதான் பிறகு சிவலிங்க வழிபாடாக உருமாற்றம் பெற்றது என்கிறார்கள்.

மனிதர்கள், ஆறாவது அறிவு பெற்ற காலக்கட்டத்தில், உலகின் தோற்றம் குறித்துச் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட அவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவு சுகம் அனுபவித்ததன் விளைவே உலகத் தோற்றம் என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் கடவுளை வழிபடுவதற்கு காட்சிப் பொருளாக உள்ள ஓர் வடிவம் தேவைப்பட்டது. இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

உலக மக்களில், அவரவர் சமூக பண்பாட்டு நிலைக்கேற்ப உடலுறவு நடைபெறும் மையங்களாக அக்கோயில்கள் ஆயின.

பாபிலோனியாவில் உள்ள பல பழைய கோயில்களில் உடலுறவு நிகழ்ச்சி விழாவின் முக்கிய சடங்காகவும் ஆக்கப்பட்டது.

நம் நாட்டுக் கோயில்களிலும்  உடலுறவு நிகழ்ச்சிகள்  ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அறிஞர்கள்.[ஆதாரம்: ‘யுக்தி தர்ஷன்’ என்னும் தலைப்பிலான மலையாள நூல். தமிழில், ’ ‘மதமும் பகுத்தறிவும்’, முதல் பதிப்பு ஜூலை 2004, சூலூர் வெளியீட்டகம், கோவை-641402]

கோயில்களில் உள்ள, காம இச்சையைத் தூண்டும் சிற்பங்களும் இசைப் பாடல்களும், முன்பிருந்த தேவதாசி முறையும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன என்று சொல்கிறார்கள்.

ஆக, இறை தரிசனத்திற்காகக் கோயிலுக்கு வருவோருக்குக் காமக் கலையைக் கற்றுத் தருவதற்காகவே, அல்லது கற்றுத் தருவதற்காகவும் ஆபாசச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பது தெரிகிறது. 

எது எப்படியோ, பழங்காலச் சூழலில், பகுத்தறிவு வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில்..........

கற்பனை செய்த கடவுள்களின் பிறப்பு உறுப்புகளை வழிபட்டதும், அவற்றைக் கோயில்களில் இடம் பெறச் செய்து விழாக்கள் எடுத்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கியதும், பெரும் குற்றங்கள் எனக் கூற இயலாது என்பதே என் கருத்து.

உங்கள் கருத்து எதுவாயினும் வருகை புரிந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++சனி, 7 செப்டம்பர், 2013

குமுதம் ஆசிரியருக்கு: “பத்தாங்கிளாஸ் அறிவியல் புத்தகம் படிங்க பாஸ்!”

பதிவின் உள்ளடக்கம்: ‘எழுத்தாளர் ராஜேஷ்குமார் சிறுகதையில் அறிவியல் படும்பாடு!!!’

ணக்கம் நண்பரே...நண்பர்களே,

உங்களிடம் கொஞ்சம் அறிவியல் படிச்சிட்டு, இந்த வாரக் குமுதம் இதழில்[11.09.2013] வெளியாகியுள்ள, பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், ‘ஒரு கிராம் நிலா’ என்னும் சிறுகதையைப் ‘போஸ்ட்மார்ட்டம்’ செய்யப் போறேன்.

நான்:
‘தனிமம்’னா என்னங்க?

நீங்கள்:
 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. எனவே, ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் ஆன பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம்.[www.thiru-science.blogspot.com]

நான்: 
தனிமங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து புதுப்புதுத் தனிமங்களாய் உருவாகும்தானே?

நீங்கள்: 
என்னய்யா உளறுறே? தனிமங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தால் அதற்குத் தனிமம்னு பேர் இல்ல; சேர்மம்’னு பேரு. சேர்மம்(Chemical Compound) அல்லது கூட்டுப்பொருள் என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். அணுக்களின் இடையே உருவாகும் பிணைப்பின் தன்மையைப் பொருத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஹைட்ரஜன்அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். [விக்கிபீடியா]

நான்:
நான் உளறுலீங்க.  ‘ஒரு கிராம் நிலா’ சிறுகதையில் ராஜேஷ்குமார் இப்படிச் சொல்லியிருக்காருங்க. அவருதான், பாறைப்படிவச் சிதறலைத் தனிமம்னு சொன்னதோட, தனிமங்கள் ஒன்னோட ஒன்னு இணைஞ்சி புதுத் தனிமங்கள் உருவாகும்னு சொல்லியிருக்கார்.

நீங்கள்:
இது மாதிரி, தப்புத் தப்பா இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருக்கார்?

நான்:
கோபப்படாதீங்க. சுருக்கமா கதையைச் சொல்லிட்டுச் சொல்றேன்.
‘கிருபா’ன்னு ஒரு புரொஃபசர். நம்ம நாட்டுக்காரர்தான். நாஸா[NASA] நடத்துற ஒரு கல்லூரியில் பணி செஞ்சுட்டு நம் நாடு திரும்புறார்.

அவருக்கு அந்த நாஸா, அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கொண்டுவந்த பாறைப் படிவச் சிதறல்களில் இருந்து ஒரு கிராம் எடையுள்ள கல் தர்றாங்களாம்.

அந்த ஒரு கிராம் கல், நம்ம பூமியில் ஒரு டன் தங்கத்துக்குச் சமமானதுன்னு ப்ரொஃபசர் சொல்றார்.....

நீங்கள்: [குறுக்கிட்டு] ஒரு டன் தங்கத்துக்குச் சமமானதா?!?! அடங்கொப்புறானே, அப்படியொரு மகத்தான பரிசு தர்ற அளவுக்கு இவர் அங்கே என்ன கிழிச்சாராம்...மன்னிக்கணும், சாதிச்சாராம்?

நான்: அதைப் பத்தியெல்லாம் கதாசிரியர் ஒன்னும் சொல்லலைங்க.

நீங்கள்:  சரி, மேலே சொல்லு.

நான்: அந்தக் கல்லை எப்பவும் ஒரு கண்ணாடிப் பேழைக்குள்தான் வெச்சிருக்கணுமாம். ரெண்டு அல்லது மூனு மணி நேரத்துக்கு மேல வெளியில் வெச்சிருந்தா, வாயுக்களோட கலந்து புதிய வைரஸ்களை உண்டாக்குமாம். ஏதாவது உலோகப் பொருளோட ரசாயனக் கிரியை பண்ணி, ஒரு அணுகுண்டு வெடிச்சா, எவ்வளவு சேதம் உண்டாகுமோ அவ்வளவு சேதத்தை இந்தப் பூமிக்கு உண்டாக்குமாம்.

இப்படியெல்லாம் எச்சரிகை பண்ணித்தான்.....

நீங்கள்: [மீண்டும் உங்கள் குறுக்கீடு] இவர்கிட்டே கொடுத்தாங்கன்னு சொல்ல வர்றே. ஏய்யா, கொஞ்சம் அஜாக்கிறதையா இருந்தா இத்தனை பெரிய அழிவை உண்டு பண்ணுற இதை ஒரு தனி மனிதனான இந்தக் கிருபாவுக்குப் பரிசா தருவாங்களா?

ராஜேஷ்குமார்தான் ஏதோ தெரியாம எழுதிட்டார்னா, அதைப் படிச்சுட்டு எங்ககிட்டே கதை சொல்ல வந்துட்டியே, நாங்கெல்லாம் என்ன கூமுட்டைகளா?

நான்: மன்னிச்சுடுங்க. குமுதம் பல லட்சம் வாசகர்களால படிக்கப்படுற வார இதழ். கதையில் தப்பு இருந்தா, ஆசிரியர் பிரசுரிச்சிருக்க மாட்டார்னு நம்பிட்டேன்.

நீங்கள்: முதலில் அந்தக் குமுதம் ஆசிரியரைப் பத்தாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தைப் படிக்கச் சொல்லு. அடிப்படை அறிவியல்கூடத் தெரியாம பத்திரிகை நடத்த வந்துட்டார்.

நான்: போகட்டும். மேலே கதையைச் சொல்லட்டுங்களா?

நீங்கள்: கதையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுபோச்சு. இனி என்ன கதை வேண்டியிருக்கு? நீ ஒரு டென்ஸன் பார்ட்டி. இனி சொல்லாதேன்னு சொன்னா மனசு உடைஞ்சிருவே. சொல்லு. [உங்க மனசுக்குள்: “சொல்லித் தொலை”]

நான்: நாஸாக்காரங்க சொன்னபடியே அந்த ஒரு கிராம் கல்லை[அதுக்குத்தான் ‘ஒரு கிராம் நிலா’ன்னு கவர்ச்சியா பேரு வெச்சிருக்காரு] கண்ணாடிக் குடுவையில் வெச்சி, ஒரு நிலவறைக்குள்ள பாதுகாப்பா வெச்சிருக்கார்.

‘உமாதாணு’ன்னு சி.பி ஐ டைரக்டர். இவருக்குத் தெரிஞ்சவராம்.

“தீவிரவாதிகள் ஒரு கிராம் நிலவை அபகரிக்கத் திட்டம் போட்டிருக்காங்கன்னு தகவல் கிடைச்சிருக்கு. அதனால, இதை, நேஷனல் கெமிக்கல் எலிமெண்ட்ஸ் ரிசர்ச் யூனிட்டுக்குக் கொடுத்துரு” அப்படீன்னு கிருபாவுக்கு அட்வைஸ் பண்றாரு. இவரும் அப்படியே கொடுத்துடுறார்.....

நீங்கள்: கதை முடிஞ்சுதுதானே?

நான்: இல்லீங்களே.

நீங்கள்: [நீங்கள் இறுகிய முகத்துடன் மௌனம் சாதிக்கிறீர்கள்]

நான்: [தொடர்கிறேன்] ஒ.கி.நிலா இவர்கிட்டேதான் இருக்குன்னு தீவிரவாதிகள் நினைப்பாங்களாம். அவங்களால இவர் உயிருக்கு ஆபத்து நேருமாம். அதனால, பிரஸ்காரங்களையும் பெரிய போலீஸ் ஆஃபீசரையும் தன் வீட்டுக்கு வரவழைச்சு [உள்துறை அமைச்சர் காதுல போட்டுட்டுச் சும்மா கிடக்க வேண்டியதுதானே. இந்த ஆளு என்ன கிறுக்குத்தனமா ஏதேதோ பண்றான்னு நினைக்காதீங்க] ஒ.கி நிலவை யாரோ திருடிட்டுப் போய்ட்டாங்கன்னு சொல்றாரு. இதுல என்ன வேடிக்கைன்னா, அவருடை பொண்ணுகிட்டேயும் இதே பொய்யைச் சொல்றாரு.

நீங்கள்: போதும். முடிவை மட்டும் சுருக்கமா சொல்லு.

நான்: தமிழ்நாடு போலீஸையும் பிரஸ்காரங்களையும் நம்ப முடியாதுன்னு, யாரு ஒ.கி நிலவை நே.கெ.எ.ரி.யூனிட்டுக்குக் கொடுத்துருன்னு ஐடியா தந்தாரோ அந்த சி.பி ஐ அதிகாரிகிட்டயே மறுபடியும் போறாரு. போயி.......

நீங்கள்: [படு பயங்கர கோபத்துடன்] யோவ்...போதும் நிறுத்துய்யா. இந்தக் கதையைச் சொன்னதுக்காக இந்த ஒரு தடவை உன்னை மன்னிக்கிறோம். இனியும் இந்த மாதிரி கதையைச் சொன்னீன்னா..... அப்புறம் நடக்குறதே வேற. என்ன, சொன்னது புரிஞ்சுதா?

நான்: புரிஞ்சுதுங்க. ஒரு வேண்டுகோள்...என்னை எச்சரிக்கை பண்ணின மாதிரி அந்தக் குமுதம் பத்திரிகைக்காரங்களையும் எச்சரிக்கை பண்ணிடுங்க.

#####################################################################################

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் பதிவில் நேர்ந்த பெரும் பிழை!...மன்னிப்பு வேண்டல்.

இன்று [05.09.2013] காலை நான் வெளியிட்ட ‘ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தமிழர்’ என்னும் பதிவில்.....

General Relativity Theory [பொதுச் சார்பியல் கொள்கை] என்பதை, Public Relativity Theory என்று தவறுதலாகப் பதிவிட்டுவிட்டேன்.

வெளியூர்ப் பயணத்திற்குப் பிறகு களைப்புற்ற நிலையில் பதிவு எழுதியதால் இப்பிழை நேர்ந்துவிட்டது.

இதை இப்போது சரி செய்துவிட்டேன்.

இது கண்டிக்கத் தக்க மிகப் பெரும் பிழை என்பதால், அனைத்து வாசகரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

இனியும் இம்மாதிரிப் பிழைகள் நேராவண்ணம் விழிப்புடன் செயல்படுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு கொண்டு, இனியும் பிழை தென்பட்டால் திருத்தி உதவுங்கள். பின்னூட்டப் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.

நன்றியுடன்..............................................................................காமக்கிழத்தன்.


ஐன்ஸ்டீனின் ‘சார்பியல் கொள்கையை’க் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தமிழர்!

##விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா? “இதைச் சிந்தனையில் தேக்குவதற்கு விஞ்ஞானிகளே திணறினார்கள்” என்கிறார் சுஜாதா##


“அரிஸ்டாட்டிலின் கொள்கையைக்[theory] கலிலியோவும் கோப்பர்நிகசும் திருத்தினர். நியூட்டனின் கொள்கையை ஐன்ஸ்டீன் திருத்தினார். ஐன்ஸ்டீனின் கொள்கையை ’ஸ்டீபான் ஹாக்கிங்’ மாற்றியமைக்கிறார். அவருடைய கொள்கைகளும் முடிந்த முடிவினவாய் இல்லை. அறிவியலைப் பொருத்தவரை எந்தக் கொள்கையும் நிரந்தரமானதல்ல.”  [’நான் அறிவு ஆன்மா பிரபஞ்சம்’, 2005 ஆம் ஆண்டு வெளீயீடு. கார்த்திகேயன் பதிப்பகம், சென்னை]

பேராசிரியர் கே.என் ராமச்சந்திரன்[இயற்பியல் & அறிவியல் பேராசிரியர்] அவர்களின் மேற்கண்ட கருத்தை மனதில் பதித்து மேலே படியுங்கள்.

[theory என்னும் ஆங்கிலச் சொல்லை, கொள்கை, கோட்பாடு, தத்துவம், சித்தாந்தம் என்று பலவாறாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, இங்கு ‘கொள்கை’ என்னும் சொல்லே கையாளப்படுகிறது]


இயற்பியல், வானவியல் போன்ற விஞ்ஞானக் கல்வி கற்றவர்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களும் ஐன்ஸ்டீனின் ‘பொதுச் சார்பியல் கொள்கையை’[General Relativity Theoryஓரளவேனும் அறிந்திருப்பார்கள்.

‘ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கொள்கை கொஞ்சம் தலை சுற்ற வைக்கும். விண்வெளியே வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 1915ல் அவர் அதை நம்ப வைத்ததுமில்லாமல் 1919ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது அது நிரூபிக்கவும்பட்டது. கிராவிடேஷன் என்னும் ஈர்ப்பு விசையே விண்வெளியின் தன்மை. அதிகக் கனமுள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் அந்த விசை அதிகமிருந்தால், அது ஒளிக்கதிரை வளைத்து உள்ளே இழுத்துவிடும். கரும் பள்ளங்கள் உருவாகும். இதெல்லாம் எந்த வகையிலும் ரீல் அல்ல. ஐன்ஸ்டைனின் ஜெனரல் தியரி சிந்தனைகளின் விளைவாக. சென்ற நூற்றாண்டில் ஐன்ஸ்டைனுக்குப் பின் வந்த விஞ்ஞானிகள். பலமுறை பரிசோதித்துப் பார்த்து நிரூபித்த உண்மைகள். [இந்தப் பத்தி, sree எனபவரின், ‘எல்லாம் இறைவன் செயல் என்பவனைப் பைத்தியம் என்போம்’  {ஜூலை 6,2009} என்னும் பதிவிலிருந்து எடுத்தது]

எழுத்தாளர் சுஜாதா தரும் விளக்கம், இக்கொள்கையை இன்னும் தெளிவாகப் புரிய வைக்கும் என்று எண்ணுகிறேன்............

‘நியூட்டன் விதிப்படி, ஈர்ப்புச் சக்தி என்பது ஒரு பொருளின் ஆதார இயற்கை. ஒரு பொருளின் எதிரே மற்றொரு பொருளை வைத்தால், இரண்டும் ஒன்றுக்கொன்று கவர்ந்துகொள்வது அவற்றின் இயற்கை என்று நம்பினார் அவர். ஐன்ஸ்டீன் அப்படி நம்பவில்லை. அவருடைய சித்தாந்தப்படி[கொள்கை] இந்த ஈர்ப்புச் சக்தி ஜடப்பொருளின் இயற்கை அல்ல. 

வெளியில் பொருள் இருக்கும்போது பொருளைச் சுற்றியுள்ள வெளி வளைந்துவிடுகிறது......


[இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது......‘வெளி வளைகிறது’ என்பதாகும்]

வெளி வளைவதால் ஏற்படும் சரிவு அல்லது வழுக்கல் ‘ஈர்ப்புச் சக்தி’[gravitation]யாக இருக்கிறது. அந்த ஈர்ப்புச் சக்திதான் பொருளைத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது. [நியூட்டன் சொன்னது போல, பொருளுக்கு ஈர்க்கும் சக்தி இல்லை]

இந்த ஈர்ப்புச்சக்தி ஒளியையும் தன்பால் ஈர்க்க வல்லது.

சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நட்சத்திரங்களின் ஒளியானது, வளைந்திருக்கும் வெளி வழியாக [ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு] நம்மை வந்து சேர்கிறது.


இது சூரிய கிரகணத்தின்போது நிரூபிக்கப்பட்டது [கிரகணம் இல்லையென்றால், சூரியனின் அதீத ஒளியில் நட்சத்திர ஒளி நம் கண்களுக்குத் தெரியாது என்பது தெரிந்ததே]

இப்போது, ஐன்ஸ்டீனின் இந்தப் பொதுச் சார்பியல் கொள்கை, அது பற்றி அறியாதவர்களுக்கும் பெருமளவு புரிந்திருக்கும். முழுவதும் புரிய வேண்டுமென்றால் நாம் ஒரு விஞ்ஞானியாக இருத்தல் வேண்டும்.

இக்கொள்கை விஞ்ஞானிகளையே திணறடிப்பதாக சுஜாதா கூறுகிறார். “வளைந்த வெளியைச் சிந்தனையில் தேக்குவதற்கே விஞ்ஞானிகள் திணறினார்கள்” என்கிறார்.

இந்த ஈர்ப்புச் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்பதையும் விஞ்ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். எப்படி?

’ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கொள்கையின்படி, விண்வெளியில் சில இடங்களில் [கவனிக்க...’சில இடங்களில்’. அந்தச் சில இடங்கள்தான் வெளியின் வளைவுகளோ?] பருப்பொருள் முழுதும் ஒரு நுண்ணிய புள்ளிக்குள் சுருங்கி, மகத்தான பொருண்மையும் மாபெரும் ஈர்ப்பு விசையும் கொண்டதாக ஆகிறது. அதை ‘ஒருமை[singularity], கருந்துளை[Black Hole]எனப் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள். [விளக்கம்: பேரா.கே.என் ராமச்சந்திரன்]

இந்தக் 'கருந்துளை' குறித்து ஆய்வு செய்து பிரபலம் ஆனவர் விஞ்ஞானி ‘ஹாக்கிங்’. [இது பற்றி இவர் எழுதிய நூல் பல லட்சம் பிரதிகள் விற்றதாம்!]

ஆனால், இந்தத் துளை பற்றிய தன் கொள்கையை இவரே பின்னர் மாற்றிக்கொண்டுவிட்டாராம்!

“கருந்துளையை ஒரு தூலப் பொருளாகக் கருத முடியாது. அது ஒரு மண்டலம். அதுவும் மெல்ல மெல்லக் கரைந்து போகிற ஒன்று” என்று குழப்புகிறார்!

மேற்கண்ட கொள்கைகளையும், விளக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு, ஐன்ஸ்டீனின் கொள்கையில் உள்ள முரண்பாட்டைத் தைரியமாகச் சுட்டிக் காட்டி, அது பற்றிய நூல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் தமிழரான வ. அழகுமுத்து என்பவர்! [நூல்: ‘நான் அறிவு ஆன்மா பிரபஞ்சம்']

தம் நூலில், ’வெளியும் காலமும்’என்னும் தலைப்பில்..........

’வெளியும் காலமும் ‘தனிமுதல்’ பொருள்களல்ல; ஜட உலகைச் சார்ந்து வெளிப்படுவன. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் இல்லை என்று வைத்துக்கொண்டால், காலமும் வெளியும் இல்லை என்பதை உணர முடியும். ஜடப் பொருள்களின் இருப்பு மற்றும் இயக்கம் காரணமாகத்தான் அவை இருப்பதாகத் தோன்றுகின்றன’ என்பதை முதற்கண் தெளிவுபடுத்திவிடுகிறார்.

ஐன்ஸ்டீன் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘சிறப்புச் சார்பியல் கொள்கை[Special Relativity Theory]யின்படி[காலமும் வெளியும் இயல் உலகப் பொருள்களின் சார்புடையவை] இவ்விளக்கம் உறுதிப்படுவதாகச் சொல்கிறார் அழகுமுத்து.

அதை, ”இயல் உலகப் பொருள்கள் எல்லாம் இல்லாது மறைந்துவிட்டால், காலத்துக்கும் வெளிக்கும் என்ன நேரும்?” என்று கேட்ட ஒரு பெண்ணுக்கு[அவரைச் ‘சீமாட்டி’ என்று குறிப்பிடுகிறார். மேல் விவரம் ஏதும் தரவில்லை] ஐன்ஸ்டீன் தந்த பதிலையும் முன்வைக்கிறார்.

ஐன்ஸ்டீன்: "பொருளியல் உலகம் இல்லாது மறைந்துவிட்டாலும், காலமும் வெளியும் இருக்கும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால், சார்பியல் கோட்பாட்டின்படி, இயல் உலகில் பொருளியல் உலகம் மறைந்துவிட்டால் காலமும் வெளியும் உடனே மறைந்துவிடும்.” என்கிறார்.

"ஐன்ஸ்டீனின் இந்தக் கூற்றைச் சிக்கெனப் பற்றிக்கொண்டுவிட்ட அறிஞர் அழகுமுத்து, “வெளி என்று ஒன்று இல்லை[அது வெறுமையானது; சூன்யமானது] என்ற கொள்கை கொண்ட ஐன்ஸ்டீன், வெளி வளைகிறது என்றும் அங்கே ஈர்ப்புச்சக்தி இருக்கிறது. அதுதான் ஒளி முதலானவற்றைத் தன்பால் ஈர்க்கிறது என்றும் சொன்னது எப்படி?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இல்லாத ஒரு பொருள்[வெளி], வளைகிறது; ஈர்க்கிறது என்று சொல்வது கொள்கை முரண்பாடல்லவா என்றும் கேட்கிறார்.

‘சூரிய கிரஹணத்தின் போது, சூரியனுக்குப் பின்னால் மறைந்திருக்கிற நட்சத்திர ஒளி, ‘வெளி வளைந்திருப்பதால் நம் கண்ணுக்குத் தெரிகிறது என்பது சரி என்றாலும், வெளி வளைந்திருப்பதும், ஈர்ப்புச் சக்தி என்று ஒன்று இருப்பதும் நிரூபிக்கப்படவில்லையே’ என்கிறார். [நட்சத்திர ஒளியானது, வேறு காரணங்களாலும் நம் கண்ணுக்குத் தெரிவதாக அமையக்கூடும்]

இவர் இவ்வாறு கேட்பதைச் ‘சரி’ என்று ஏற்க முடியாவிட்டாலும், ‘தவறு’ என்றும் என்னால் சொல்ல முடியாது என்கிறார் நூலுக்கு கருத்துரை வழங்கியவரும், ‘பிரபஞ்சம் ஒரு புதிர்’ என்ற நூலின் ஆசிரியருமான பேராசிரியர் கே. என்.ராமச்சந்திரன் அவர்கள்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர், டாக்டர் ரமேஷ்குமார் அவர்கள், “காலவெளி பற்றி இதுபோல் ஒரு நூல் வெளிவந்ததில்லை” என்பதோடு, “மேலது கீழாய் கீழது மேலாய் நம் பிரபஞ்ச நோக்கைப் புரட்டிப் போட்டவர் ஐன்ஸ்டீன். நவீன பௌதீகத்தில் அவருடைய தாக்கம் பிரும்மாண்டமானது. அவருடன் குஸ்தி போடுகிறார் அறிஞர் அழகுமுத்து” என்று வியந்து பாராட்டுகிறார்.

ஐன்ஸ்டீனுடன் குஸ்தி போடுவதற்கான தகுதி, அறிஞர் அழகுமுத்துக்கு உள்ளதா என்பதை அறிஞர் உலகம்தான் தீர்மானிக்க வேண்டும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

‘பாவை’யொருத்தி தரும்‘முத்தமும்’ பதிவர் விழாவுக்கு ஈடில்லை!

#“மங்கை யொருத்தி தரும்சுகமும் எங்கள் மாதமிழுக்கு ஈடில்லை”-பாரதிதாசன்.#கைபேசி சிணுங்கியது.

“வணக்கம்...நான் நித்திலன்.”

“நான்...நான்...கவிமலர்.”

[நித்திலனும் கவிமலரும் காதலர்கள்]

“சொல்லு கவி.”

“இப்போ உனக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தரப் போறேன். மனசைத் திடப் படுத்திக்கோ.”

“சஸ்பென்ஸெல்லாம் வேண்டாம். விசயத்தைச் சொல்லுடி.”

“என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஒன்னு கொடு ஒன்னு கொடு’ன்னு கெஞ்சுவியே, அதை இப்போ கொடுத்துடறதா முடிவு பண்ணிட்டேன். உடனே புறப்பட்டு வாடா.”

“வரமாட்டேன்.”

“ஃபூல், உனக்கு என்னடா ஆச்சு?”

“காணொளி மூலமா சென்னையில் நடக்குற பதிவர் திருவிழா பார்த்துட்டிருக்கேன்.”

”நானும் அதைத்தாண்டா பார்த்துட்டிருக்கேன். சும்மானாச்சும் உன்னை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தேன். நம்ம பதிவர்கள் ஆளாளுக்குக் கலக்குறாங்கடா. இந்த மாதிரி விழாக்களால தமிழ் வலைத்தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; தமிழும் வளரும்.”

“சந்தேகமில்ல. ஆனா.....”

“எதுக்குடா இந்த ஆனா போனா எல்லாம்? மனசில் இருக்குறதைக் கக்குடா.”

”என்னால கலந்துக்க முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு கவி.”

”வருத்தப்படாதே கண்ணு. அடுத்த ஆண்டுப் பதிவர் திருவிழாவில் நாம ரெண்டு பேரும் கலந்துக்கலாம். சந்தோசம்தானே?”

“சந்தோசம். ஆனா.....”

“என்னடா மறுபடியும் ஆனா ஆவன்னா? போட்டு உடை.”

“அது வந்து...அது வந்து...”

“போடா தொடை நடுங்கி. நாளை சந்திக்கும்போது, ‘ஒன்னே ஒன்னு கொடு’ன்னு கேக்கப் போறே. ஒன்னென்ன ஒன்பது முத்தம் தர்றேன். சந்தோசமா காணொளியைப் பாருடா ராசா.”

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc 

.

நன்றி:  தமிழ்வாசி பிரகாஸ்
நன்றி: வலையகம் திரட்டி