வெள்ளி, 20 செப்டம்பர், 2013

சிறுநீரிலிருந்து சொர்க்கத்துக்கு!!!

‘ஓஷோ’[ரஜனீஷ்]வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்னும் நூலைப் படித்ததால் விளைந்த ‘விபரீதம்’தான்  இந்தப் பதிவு!



ஓஷோ(1931-1990)
Affect3.jpg
இயற்பெயர்ரஜ்னிஷ் சந்திர மோகன்
பிறப்புடிசம்பர் 11, 1931
குச்வாடா, மத்திய பிரதேசம்
இறப்புஜனவரி 19, 1990 
[நன்றி: தினமணி]


லக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில் ‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று.

அப்படி என்ன இருக்கிறது அந்த நூலில்?

ஓஷோவே [மறைந்த] சொல்கிறார், படியுங்கள்.....

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு,காமத்திலிருந்து கடவுளுக்கு. அதற்கு பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால்,மற்றவற்றை படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக இந்தியாவில் எல்லாரும் படித்ததுகாமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகைத்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள். எதிர்த்தார்கள். இன்னும் அதை பற்றி கட்டுரைகளும்,மறுப்பு நூல்களும் எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்து கொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களை பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான் எழுதியது போல.

மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதை குணப்படுத்தியாக வேண்டும்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை, உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்த சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

அது, அந்த விஷயம் பற்றிய என் அறிவியல் அணுகுமுறை. காரணம், மனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும், காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு, உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது
.
நான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்வதால்தான் உலகமே என்னை கண்டனம் செய்கிறது.

காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு செல்வது பற்றி நான் பேச போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன். கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள்.

இந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்த புத்தகத்திற்கு சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்த புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். காமத்திலிருந்து கடவுளுக்கு. அதை வாங்கி தமது ஆடைக்குள் மறைந்து வைத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்.//     [இடுகை...நந்தன்,மே,2012]


அன்பு நெஞ்சங்களே,

தங்கள் வருகைக்கு நன்றி.

மேலே கண்ட பத்திகளில், அடிக்கோடிட்டவற்றை மீண்டும் படியுங்கள்.

கடவுளை உணர்வதற்கும் அடைவதற்கும் வழிகோலுவது தியானம் என்கிறார்கள்.

தியானம் புரிவதற்கு, மனமற்ற காலமற்ற ஒரு பரவச நிலையை நாம் எய்த வேண்டும் என்கிறார் ஓஷோ. 


இந்த நிலையை எய்த ஒரு முன் அனுபவம் வேண்டும். அந்த அனுபவத்தைக் காம உணர்ச்சி அளிக்கிறதாம்.


உடலுறவில் ஏற்படும் பரவசம், ‘மனமற்ற...காலமற்ற’ ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்குகிறதாம். இது பற்றித்தான் இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் இந்த செக்ஸ் சாமியார்.

காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றுவது குறித்த அற்புதமான நூல் இது என்கிறார்கள் இவரின் சீடர்கள்.

இந்தக் காம குரோத ஆன்மிக தத்துவம் நம்மைப் போன்றவர்களுக்குப் புரியுமா என்று யோசித்திருக்கிறார் இந்தக் காம யோகி.

நமக்கெல்லாம் புரியும்படியாக ஒரு உதாரணமும் தந்திருக்கிறார்.....

//ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்’//

//வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை “நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்தக் கணத்தை நீட்டிக்கமுடியாது. தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும்//

காம சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்றுவது புரிகிறதோ இல்லையோ, பட்டினி கிடந்து வயிறு நிறையச் சாப்பிடும் உதாரணம் நமக்கு நன்றாகவே புரிகிறது.

காம இச்சையைத் தணிக்க வடிகால் இல்லாமல் அலைந்தவன், வடிகால் கிடைத்து அதை அனுபவிக்க நேரும்போது  தன்னை இழந்து,  மனமற்ற காலமற்ற நிலையை எய்துவதற்கு இந்தப் பட்டினி...வயிறு முட்டச் சாப்பிடும் உதாரணம் தரப்பட்டுள்ளது.

ஆக, நாள் கணக்கில் பட்டினி கிடந்த ஒருவன், உணவு கிடைத்து உண்ணும்போது, தன்னை இழந்து மனமற்ற காலமற்ற நிலையை [’நான்’ மறந்த கணம்]எய்துவான் என்பது அறியப்படுகிறது. [இது, ஏற்கனவே நாம் அறிந்ததுதான்]

இங்கே, ‘பசி’ என்னும் சக்தி, ஆன்மிக சக்தியைப் பெறுவதற்கு அடிப்படையாய் அமைகிறது.

இங்கே, அழுத்தமாய் மனதில் கருதத் தக்கது ஒன்று உண்டு. அது..........

கடவுளை நினைந்து தியானம் புரிவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறுவதற்கு, இந்தப் பசி என்னும் ஆற்றலே போதும். காமம் என்னும் ஆற்றலைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

சிறுநீர் வெளியேறும் உணர்வு ஏற்படுகிறது. வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கிறோம்.

வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற உச்சக்கட்ட நிலையில் சிறுநீரை வெளியேற்றுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அது வெளியேறுகிற போது நாம் பெறுகிற பரவச நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

தன்னை மறந்த, ‘நான்’ஐ மறந்த, 'காலத்தை' மறந்த நிலையல்லவா இது!?

சிறுநீரை நெடுநேரம் அடக்கி வைத்து வெளிப்படுத்தும் கலையைக் கற்றால், எளிதில் கடவுளைக் காணலாம்; சொர்க்கம் புகலாம்!

தியானம் புரிவதற்கு முன்னால், தன்னை மறந்த ஒரு பரவச நிலையை அனுபவித்துப் பார்க்க இப்படியான எளிய...இடர்ப்பாடுகள் ஏதுமற்ற வழிகள் இருக்கும்போது “காமமே கடவுளை அடைவதற்கான ஒரே வழி” என்று தன் வாழ்நாள் முழுக்க செக்ஸ் சாமியார் ஓஷோ வாய் கிழியப் பேசித் தீர்த்தாரே; அது ஏன்?

‘காமமும் கடவுளும்’னு நூல் வேறு எழுதிக் கிழிச்சாரே! எதற்கு?

இது, முப்பத்து நான்கு மொழிகளில் வெளியாகி, பன்னிரண்டு பதிப்புகள் [இப்போது இன்னும் அதிகம் விற்றிருக்கும்] வெளியாகி விற்றுத் தீர்ந்துவிட்டதாம். எல்லாச் சாமியார்களும் படிச்சிட்டாங்களாம்.

வெட்கக் கேடு!

இனி இந்த உலகத்தை அந்தக் கடவுள்[?!]தான் காப்பாற்ற வேண்டும்!

**************************************************************************************************************