சனி, 30 ஜூன், 2018

காவேரிக் கதைகள்!!!

காவிரியைப் 'புண்ணிய நதி' என்கிறது பழம் புராணம். 'தேவலோகக் கன்னியர்கள் கொஞ்சிக் குலாவி நீராடிய நதி' என்கிறார் வால்மீகி. 'கங்கையினும் புனிதமானது' என்றும், 'தமிழ்ப் பாவை' என்றும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.
குடகு மலையில் பிறக்கிறது காவிரி. ஊற்றாக உருவெடுத்து, பூமிக்கடியில் நகர்ந்து, சில இடங்களில் ஆடு தாண்டுகிற அளவுக்கு அகலம் குறைவாகவும், சில இடங்களில் மிக அகன்றும், சில இடங்களில் அருவியாகவும், மேலும் சில இடங்களில் நீர்த் தேக்கங்களாகவும் உருமாறி நெடுந்தொலைவுக்குப் பயணிக்கிறது இந்தக் காவிரி. 

இதன் தோற்றம் குறித்து, நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற கதைகள், நம்ப முடியாதவை என்றாலும் வெகு சுவாரசியமானவை.

முன்னொரு காலத்தில், சூரபத்மன் என்னும் அசுரனின் அடாவடித் தனங்களிலிருந்து தப்பிக்க எண்ணிய தேவேந்திரன், தமிழகத்தின் சீர்காழியில் வந்து தங்கினான்; சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்த நந்தவனம் அமைத்தான்.

போதிய தண்ணீர் இல்லாமையால், நந்தவனச் செடி கொடிகள் செழிப்பாக வளரவில்லை. விசாரித்ததில், அகத்தியரின் கமண்டலத்தில் எடுக்க எடுக்கக் குறையாத நீர் இருப்பதாக நாரதர் சொன்னார்.

தேவேந்திரன் விநாயகரைப் வழிபட, அவர் குடகு மலைக்குச் சென்று அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அது ஆறாகப் பெருக்கெடுத்து வந்து இந்திரனின் 'கா'[நந்தவனம்]வில் பாய்ந்து அதைச் செழிக்கச் செய்தது. இவ்வகையில்தான் இந்த ஆறு 'காவிரி' என்று பெயர் பெற்றது.

அடுத்த கதை.....

பிறிதொரு காலத்தில், குடகு நாட்டின் 'பிரமகிரி' மலையில் காவேரி முனிவர் அவரின் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பிள்ளைப் பேறு இல்லாததால், பிரமனை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி நேரில் காட்சியளித்த பிரமன், ''போன பிறவியில் நீர் செய்த பாவங்கள் காரணமாகத்தான் உமக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. எனினும், இப்போது நீர் செய்த தவத்தை ஏற்று என் வளர்ப்பு மகளான லோப முத்திரையை உமக்குப் பரிசாகத் தருகிறேன்'' என்று சொல்லி, சொன்னபடியே தன் மகளை ஒப்படைத்துவிட்டு மறைந்தார்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, காவேரி முனிவரும் அவரின் மனைவியும் இறந்தார்கள். காவேரி முனிவர் வளர்த்ததால், 'காவேரி' என்று பெயர் பெற்றாள் லோப முத்திரை.

இச்சமயத்தில், அகத்தியரானவர் தவம் புரிவதற்காகப் பிரமகிரி வந்தார் காவேரியைக் கண்டு காதல் கொண்டார்[இதுதான் தவம் புரியும் லட்சணம் போலும்!].

''என்னை ஒரு கணமும் பிரியாதிருந்தால் உங்களை மணப்பேன்'' என்றாள் காவேரி. சம்மதித்தார் அகத்தியர். திருமணம் நடந்தது. இருவரும் சுகித்திருந்தார்கள்.

ஒரு நாள்.....

சற்றுத் தொலைவிலிருந்த 'கனிகை' என்னும் நதியில் தனியே நீராட ஆசைப்பட்டார் அகத்தியர்[இளம் மனைவி அருகிலிருக்க இப்படியும் ஓர் ஆசையா?!] காவேரியை ஒரு பாத்திரத்தில் அடைத்து[?!], ஒரு பிராமணச் சிறுவனிடம் கொடுத்துவிட்டு நீராடச் சென்றார்.

சினம் கொண்ட லோப முத்திரை, சிறுவனைத் தவறிக் கீழே விழும்படிச் செய்தாள். பாத்திரம் உடைந்து சிதற, வெளிப்பட்ட லோப முத்திரை  காவேரி நதியாக ஓட ஆரம்பித்தாள். [நிகழ்வை அறிந்து அகத்தியர் காவேரியிடம் மன்னிப்புக் கேட்டதும், அவள் ஒரு பாதி காவிரியாகவும் மற்றொரு பாதி அவருக்கு மனைவியாகவும் இருக்கச் சம்மதித்தது தனிக் கதை]

இன்னுமொரு கதை.....

தேவகாந்தன் என்னும் அரசன், தன் நாட்டில் மழை பொய்த்ததால், உமையம்மையை நோக்கித் தவம் புரிய, அம்மையும் ஒரு நாள் அவன் கனவில் தோனறி, ''வலம்புரி[குடகுக்கு] வந்து சேர்'' என்று சொல்ல, அவனும் அங்கு செல்ல, சென்ற பொழுதே காவேரி ஆறு உற்பத்தி ஆகிப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

இக்கதைகள் மூலமாக நாம் அறியத்தக்கது என்னவென்றால்.....

நம் மூதாதையர்களில் சிலர், இப்படி இன்னும் எப்படியெல்லாமோ கதைகள் சொல்லிச் சொல்லி மக்களைச் சிந்திக்க விடாமல் தடுத்துவிட்டார்கள் என்பதும், அவர்கள் விட்டுச் சென்ற பணியை இன்றளவும் நம் ஆன்மிகவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதும்தான்.
*************************************************************************************************






வெள்ளி, 29 ஜூன், 2018

தங்க மீசையும் தனித் தமிழ்நாடும்!!

போராட்டம் நடத்திப் போலீசிடம் லத்தி அடி வாங்காமல், மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு, தீவைப்பு அது இதுன்னு கலவரம் செய்து சிறையில் கம்பி எண்ணாமல் 'தனித் தமிழ்நாடு' பெறுவது எப்படி என்று நான் நீண்ட நாட்களாக யோசித்ததில் இன்றுதான் அதற்கொரு வழி பிறந்தது.

ரொம்ப ரொம்பச் சுளுவான வழி அது. கூடக்குறையப் பணம் செலவாகும்...அவ்வளவுதான்.

இந்த வழியை நான் கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆண்டவனின் அருளும் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இன்று காலை வழக்கம்போல, 'தி இந்து[29.06.2018]' நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தபோது.....

#'ரூ. 1.37 கோடியில் வைர மூக்குத்தி காணிக்கை' என்னும் தலைப்பின் கீழ், 'தனித் தெலங்கானா மாநிலம் அமைந்தால், பல்வேறு கோயில்களுக்குத் தன் குடும்பத்துடன் நேரில் சென்று 'நேர்த்திக் கடன்' செலுத்துவதாக, தெலங்கானா 'ராஷ்ட்ரீய சமிதி' கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக்கொண்டிருந்தார்.

தனித் தெலங்கானா அமைந்ததைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பில் சாலிக்கிராம ஹாரத்தை சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு காணிக்கையாக வழங்கினார். திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைர மூக்குத்தியைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

இவை தவிர, வாரங்கல் பத்ரகாளி அம்மனுக்குத் தங்கக் கிரீடம், குருவி பகுதியில் உள்ள வீரபத்திர சாமிக்குத் தங்க மீசை போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தித் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மனுக்குப் பட்டு வஸ்திரங்களையும், ரூ 1.37 கோடி மதிப்பிலான வைர மூக்குத்தியையும் காணிக்கையாக வழங்கினார். மொத்தம் 11.290 கிராம் எடை கொண்ட இந்த வைர மூக்குத்தியில் விலை உயர்ந்த 57 வைரக் கற்களும், நீலம், கெம்பு போன்ற விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளவாம்!#

இந்தச் செய்தியைப் படித்தவுடன், கத்தியின்றி ரத்தமின்றி வெகு சுலபமாகத் தனித் தமிழ்நாடு பெறுவதற்கான வழியை நான் கண்டறிந்தேன்.

சக்தி வாய்ந்த கடவுள்களுக்கான பட்டியலைத் தயாரித்தேன். அவர்களுள் அதி அபூர்வ சக்தி வாய்ந்த எங்கள் ஊர் 'தலைவெட்டி முனியப்பன்' சாமியைத் தேர்வு செய்தேன்; முனியப்பனுக்கு, ஏற்கனவே இருக்கும் 'மண்ணாலான கிடா மீசை'யைப் பெயர்த்து எடுத்துவிட்டு, தங்கத்தால் ஆன மீசையைப் பொருத்துவதாக நேர்ந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தக் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம் என்பதால் 'தங்க மீசை'க்கான பணத்தைத் திரட்ட முழு மூச்சுடன்  நன்கொடை வசூலில் இறங்கியுள்ளேன். உங்களின் உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பணமும் மனமும் உள்ளவர்கள் என் மின்னஞ்சலுக்குத் தகவல் அனுப்புங்கள். தொடர்பு கொள்கிறேன்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------






புதன், 27 ஜூன், 2018

[வாலிபப்] பருவம் படுத்தும் பாடு!!! [சிற்றின்பக் கதை]

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. மதுபானக்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், அவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“ஒரு மணி நேரத்துக்குப் பத்தாயிரம். ஒரு ராத்திரிக்கு அஞ்சு லட்சம், பத்து லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. பெரிய இடத்துப் பொண்ணுகளும், சினிமா ஸ்டார்களும், வி.ஐ.பி.களும் வந்து போற இடம் சார் அது. வர்றீங்களா?”  ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஆள் நானல்ல; பெரிய இடத்துச் சகவாசம் உள்ளவன்  என்பதாகப் பந்தாக் காட்டினான் பட்டாபி.
“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா.”

முகம் சுழித்தான் பட்டாபி.

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு ஐநூறு ஆயிரம் ரேட்ல லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நான்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க. விடியறதுக்குள்ள ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட..... போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் ‘தொழில்’ கூடத்திற்கு அவரை அழைத்துப் போனான்.

‘பலான’ தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பெரிய புள்ளிகளின் தொடர்பும் உண்டு. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் எடுபிடியாய்ச் சேர்த்துவிட்டான்.

வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான் பட்டாபி. பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்குப் வயது பதினாறு முடிந்திருந்தது.

“பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.
“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்குப் பயங்கரப் ‘பசி’.

இரவு நேரச் சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில் இன்னும் பசிப்பது போல உணர்ந்தான். அது வேறு பசி என்பது வெகு சீக்கிரத்தில் புரிந்தது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மங்கம்மா குப்பத்து வாலைக் குமரிகள் அவன் மனக்கண் முன் வந்து வந்து போனார்கள்.

சட்டைப் பையைத் துழாவினான் பட்டாபி. ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. கடைக்காரர் பழக்கப்பட்டவர் என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “அது மாதிரி இடத்துக்கெல்லாம் போக வேண்டாம். அது புதைகுழி. விழுந்தால் எழ முடியாது” என்று சொல்லித் திருத்தவோ, புது வழி காட்டவோ யாருமில்லாத நிலையில் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடந்தன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

குமுதம் வழங்கிய, அப்துல் ரகுமானின் 'கவிதை'க் கதை!

கதையின் முடிவை அனுமானிக்க முடிகிறது என்றாலும், கவிக்கோவின் இந்தச் சிறுகதையில், நிகழ்வுகளினூடே பின்னிப் பிணைந்து கிடக்கும் கவித்துவ வரிகள் படைப்பின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கின்றன.

உங்களின் தேடலைத் தவிர்க்கும் வகையில், அவ்வகையான வரிகளுக்கு வண்ணம் சேர்த்திருக்கிறேன்.

எவ்வகையிலும் என் குறுக்கீடு இல்லை. நீட்சிக்கு அஞ்சி ஆங்காங்கே சிற்சில வரிகளை மட்டும் நீக்கி, குமுதத்தில்[04.07.2018] உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். குமுதத்திற்கு நன்றி.
கதை.....

புதிதாகக் கட்டப்பட்ட அந்தப் பல்பொருள் வணிக வளாகம், புதுப் பெண் போல் வண்ண விளக்குகளால் ஊதாரித்தனமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் அந்த அழகான வளாகக் கட்டிடம் வெடித்துச் சிதறப்போகிறது.

அந்தக் கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்தவன் எதிர்ப்புறம் பாதுகாப்பான தூரத்தில் ஒரு தேனீர்க் கடையில் அமர்ந்தவாறு அந்தக் கட்டிடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

கண்காணித்த இவன் பரபரப்பாகக் காணப்பட்டான். இவனின் கண்கள் தூண்டிலில் சிக்கிய மீனைப் போல் சஞ்சலத்துடன் அசைந்து துடித்துக்கொண்டிருந்தன. இவனுக்கெதிரே தேனீர் வைக்கப்பட்டிருந்ததை இவன் மறந்திருந்தான்.

பார்வை தடுமாறிக் கோப்பையில் விழுந்தபோது இவன் கோப்பையைக் கையில் எடுத்தான்.

விரல்களின் நடுக்கத்தில் கோப்பை தேனீரோடு ஆடி ஒலியெழுப்பியது.

அந்த வணிக வளாகத்துக்குள் மனிதர்கள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரம். அதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால்தான் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, சேதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக.

அங்கே மரணம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்பது வாங்க வந்தவர்களுக்கோ விற்பவர்களுக்கோ தெரியாது.

தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்தது போல் காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது.

இவனுக்கிருந்த ஒரே அடையாளம் இவனின் பெயர் மட்டும்தான். அதுவும் ஒரு காலி பாட்டிலின் மேல் ஒட்டிய லேபுளைப் போல.

இவன் இவனுடைய பெற்றோருக்குப் பதினோராவது பிள்ளை. பிள்ளைகளைப் பெறுவதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் இவன் தந்தைக்கு இருந்ததாக இவன் அறிந்திருக்கவில்லை.

இவனின் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்காது. ஆனாலும், வறுமை இவனைத் தினம் தினம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

வீட்டைவிட்டு வெளியேறி, பசிக்காகத் திருடத் தொடங்கினான்.

ஒருமுறை ஒரு ரொட்டியைத் திருடிக்கொண்டு ஓடினான். கடைக்காரனும் இவன் பின்னால் ஓடி வந்தவர்களும் இவனைப் பிடித்துச் செம்மையாக உதைத்தார்கள். 

மனிதர்களை வெறுத்தான்; திருடினான்; குடித்தான்; சூதாடினான்; விபச்சார விடுதிகளுக்குச் சென்றான். மொத்தத்தில் திருத்த முடியாத ஒரு அச்சுப்பிழை ஆனான்.

ஒரு விபச்சார விடுதிக்குச் சென்றபோதுதான் அவளைச்[விபச்சாரி] சந்தித்தான். மனம் விட்டுப் பேசி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களை இணைத்தது காதல் அல்ல; தேவை.

இவர்களுக்கு ஒரு பெண் பிறந்தாள் நான்கு வயதுவரை நன்றாகத்தான் இருந்தாள். பின்னர், அடிக்கடி சோர்ந்து படுக்கத் தொடங்கினாள். 

மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் அவளின் இதயத்தில் வால்வு பழுதாகியிருப்பது தெரிந்தது. சரி செய்ய மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றார் மருத்துவர்.

மூன்று லட்சத்துக்கு இவன் எங்கே போவான்? அப்போதுதான் இவன் யாரென்றே அறியாத ஓர் அந்நியன் இவனைச் சந்தித்தான்; மூன்று லட்சம் தருவதாகச் சொன்னான்.

''நீ யார்? எனக்கு எதற்கு நீ மூன்று லட்சம் தரவேண்டும்?'' என்று இவன் கேட்டான்.

''முட்டாள். உனக்குப் பணம் வேண்டுமா? உன் கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா?'' என்றான் அவன். 

தான் செய்ய வேண்டியது என்ன என்று இவன் கேட்க, அவன் சொல்ல, இவன் முதலில் மறுத்துவிட்டான். மகள் மீதான பாசத்தால் பின்னர் ஒத்துக்கொண்டான்.

தெரு விளக்குகள் உற்சாகமின்றி எரிந்துகொண்டிருந்தன. எத்தனை விளக்குகள் எரிந்தென்ன, இருட்டை அழிக்க முடிவதில்லையே. இறுதியில் அதுதானே வெல்கிறது.

இவன் அடிக்கடி கடிகாரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தன.

பள்ளிச் சிறுமிகள் சிலர் வளாகத்தில் நுழைந்துகொண்டிருந்தார்கள். 'என் மகளைக் காப்பாற்ற இவர்களை நான் கொல்ல வேண்டுமா? என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் சிறுமிகளின் நினைவு என்னைச் சித்ரவதை செய்யுமே' என்று எண்ணி மனம் நொந்தான்.

செத்துப்போயிருந்த இவனின் மனசாட்சி உயிர் பிழைத்து எழுந்தது.

இவனை வெடி வைக்கத் தூண்டியவனுடன் தொடர்பு கொண்டு, ''வைத்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய இருக்கிறேன்'' என்றான்.

''உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ அப்படிச் செய்தால் அடுத்த வினாடியே கூண்டோடு உன் குடும்பத்தை அழிப்போம்'' என்றான் அவன்.

இவனின் இதயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதுபோல் அது அதி வேகமாகத் துடித்தது.

செய்வதறியாது எதிரே இருந்த வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

புதுமணத் தம்பதியர் இருவர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள். 'பாவம், முன்னுரை எழுதும்போதே முடிவுரையா?' என்று வருத்தப்பட்டான் இவன்.

உள்ளேயிருந்து ஒரு கர்ப்பிணி தன் கணவனுடன் வெளியே வந்துகொண்டிருந்தாள். வாழ்க்கையும் மரணமும் காலமெல்லாம் கண்ணாமூச்சி ஆடுவதாகத் தோன்றியது இவனுக்கு.

தொடர்ந்து வணிக வளாகத்தையே பார்த்துக்கொண்டிருந்த இவன் திடுக்கிட்டான். இவனுடைய மகளும் மனைவியும் உள்ளே நுழைந்துகொண்டிருந்தார்கள்.

அவர்களின் பெயர்களைக் கூவியபடியே இவன் எழுந்து ஓடினான். இவன் அவர்களை நெருங்குவதற்குள் அது நடந்து முடிந்துவிட்டது.
========================================================================


















திங்கள், 25 ஜூன், 2018

கடவுள் இங்கே...இதோ இங்கே...இங்கே...இங்கே!!!

மனித மூளையில் கடவுள் பற்றிய சிந்தனை அரும்பிய நாளிலிருந்து இந்நாள் வரை, ‘கடவுள் உண்டா, இல்லையா?’  என்னும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அனைவரும் ஏற்கும்படியான ‘முடிவு’ இதுகாறும் எட்டப்படவில்லை.

“அனைத்தையும் இயக்கவல்ல, ஆறறிவைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு படைத்த,  ’விவரிப்பு’க்கு அப்பாற்பட்ட  ஏதோ ஒன்றன் 'இருப்பை’க் 'கடவுள்’ என நான் ஏற்கிறேன்; அவரை வழிபடுகிறேன். அதனால் விளையும் பயன் பற்றி நான் கவலை கொள்ளவில்லை” என்று ஒரு கடவுள் நம்பிக்கையாளர், அதாவது ஓர் ஆத்திகர் சொன்னால், அவர் மீது எவ்வகையிலும் நாம் குற்றம் சுமத்த இயலாது.

அவர் பிறரிடம்,  ''சிந்தியுங்கள். உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கலாம்” என்று பரிந்துரை செய்யும் போதும் அவர் குற்றமிழைத்தவர் ஆகமாட்டார். “கடவுளை  வழிபடாவிட்டால் துன்பங்களிலிருந்து விடுபட முடியாது; பல பிறவிகள் எடுத்துப் பாவங்கள் இழைத்து இறுதியில் நரகம் சேர்வாய்” என்பதான பிரச்சாரங்களில்  இறங்குகிறபோது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரி ஆகிறார் அவர்.

“கடவுளை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர்களுக்கும் காட்ட முடியும்” என்று மக்களிடம் அப்பட்டமாகப் பொய்யுரைக்கும்போது அவர் மக்களுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளி ஆகிறார்.

பொய்யை மெய் போலச் சொல்லிச் சொல்லி, பிறர் மூளையில் அதைப் பதியச் செய்து, அறிவை ஊனமுறச் செய்வதும் ஒரு குற்றச் செயல்தான்.

இம்மாதிரிக் குற்றச் செயல் புரிந்தோர் இம்மண்ணில் கணிசமாக வாழ்ந்திருக்கிறார்கள்; அவர்களும் 'மகான்கள்' என்று போற்றப்பட்டவர்களே.

பாரத தேசத்தின் மிகப் பெரிய மகானாகப் போற்றப்பட்டவர் அவர். ''விழிமின்! எழுமின்!” என்று இளைஞர்களிடையே விழிப்புணர்வைத் தூண்டிய அவரின் சீடரைக் கொண்டு அவரை நினைவு கூர்வது மிக எளிது. அவர்.....
ராமகிருஷ்ண பரமஹம்சர்.

அவர் நல்ல பல வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தந்தவராக இருக்கலாம். ஆனால், அவர் கடவுளைக் கண்டவர் என்றும், பிறனொருவனுக்குக் காட்டியவர் என்றும் சொல்லப்படுகிற கதை ஏற்கத்தக்கதன்று.

அவ்வாறானதொரு கதையை, அவரைப் பின்பற்றுவோர் இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கடவுளை மனதில் இருத்தி, தன்வயம் இழந்த நிலையில் அவர் தியானத்தில் மூழ்கியிருந்த போது, ஒரு குதர்க்கவாதி அவர் தொடை மீது நெருப்புத் துண்டத்தை வைத்துச் சோதிக்க, சிறிது நேரம் கழித்தே அவர் விழித்துப் பார்த்தாரென்று சொல்லி, அவரின் ஆழ்ந்த பக்தியுணர்வை இன்றளவும் சிலாகிப்பவர்கள் உண்டு!

அவரைச் சந்தித்த ஒரு நாத்திகன், [‘குதர்க்கவாதி’ என்றே வைத்துக் கொள்ளுங்களேன்] ''நீங்கள் கடவுளைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா?” என்றான்.

“ஆம்” என்றார் மகான்.

“எனக்குக் காட்ட முடியுமா?”

“முடியும். என் பின்னால் வா.”

அவர் முன்னே செல்ல, குதர்க்கவாதி பின்னால் சென்றான்.

இருவரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஓர் ஆற்றை அடைந்தார்கள்.

ஆற்றுக்குள் இறங்கினார் மகான்.

அவரைப் பின் தொடர்ந்த குதர்க்கவாதி, “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி ஆற்றுக்குள் இறங்குகிறீரே?” என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினான்.

”கடவுளை ஆற்று நீருக்குள் பார்க்கலாம்” என்ற மகான், “நீருக்குள் முழுகிப் பார்” என்றார்.

மிரட்சியோடு நீருக்குள் மூழ்கிய அவனை மேலே எழ முடியாதவாறு அமுக்கிப் பிடித்துக் கொண்டார் மகான்.

நேரம் செல்லச் செல்ல குதர்க்கவாதிக்கு மூச்சு முட்டியது. தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினான். மகானோ தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.

'இந்நிலை இனியும் நீடித்தால் இவன் உயிர் பிரியும்’ என்று நினைத்த அவர், தன் பிடியைத் தளர்த்தினார்.

'குபீர்’ என்று மேலெழும்பிய குதர்க்கவாதி, சிறிது நேரம் பெருமூச்செறிந்து ஆசுவாசப் படுத்திக்கொண்ட பின்னர், “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி என்னைக் கொன்றுவிடப் பார்த்தீரே?” என்றான் குரலில் சூடு பறக்க.

அவன் கேள்வியை அலட்சியம் செய்த மகான், “நான் உன்னை விடுவித்ததும் அசுர வேகத்தில் மேலெழும்பினாயே, அது ஏன்?” என்றார்.

“தாமதித்திருந்தால் என் உயிர் போயிருக்கும்” என்றான் அவன்.

“நீ உன் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இத்தனை வேகம் காட்டினாய். இல்லையா?”

“ஆம்”

“இதே வேகத்தைக் கடவுளைக் காணும் முயற்சியில் நீ காட்டினால் அவரைக் காணலாம்” என்றார் அவர்.

குதர்க்கவாதி தலை குனிந்து நின்றான் என்றோ, மகானிடம் மன்னிப்புக் கோரினான் என்றோ உண்மைச் சம்பவம் என்று சொல்லப்படுகிற இக்கதை முற்றுப் பெறுகிறது.

இக்கதை மிகப் பல முறை மேடைகளில் சொல்லப்பட்டது. மிகப் பலர் கேட்டு ரசித்தார்கள். மகானின் மதி நுட்பத்தைப் போற்றினார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

குதர்க்கவாதிக்குக் கடவுளைக் காட்டுவதாகச் சொன்ன மகான்  ஏன் காட்டவில்லை?

மிகக் கடுமையாக முயற்சி செய்தால் கடவுளைக் காணலாம் என்று சொல்வதற்கு ஒரு மகான் தேவையா?

அவ்வாறு முயன்று யாரேனும் கடவுளைக் கண்டதுண்டா? மகான் அதற்கு ஆதாரம் காட்டினாரா?

''ஓர் அடர்ந்த காட்டுக்குள் தனியாகச் செல்கிறாய். ஒரு புலி விரட்டுகிறது. தப்பி ஓடுவதில் நீ எத்தனை வேகம் காட்டுவாய்? அப்படியொரு வேகத்தைக் காட்டினால்........”

''அருகில் யாருமில்லை என நினைத்து ஓர் இளம் பெண்ணைக் கட்டியணைத்துவிட்டாய். அவள் அபயக்குரல் எழுப்ப, எங்கிருந்தோ பத்து பேர் வந்துவிட்டார்கள். அவர்களிடம் பிடிபடாமலிருக்க நீ ஓடுகிறாய். அப்போது காட்டுகிற வேகத்தை..............”

இப்படி இன்னும் நிறைய நிகழ்வுகளைச் சொல்லி, முயன்றால் கடவுளைக் காண இயலும் என்று பொய்யுரைக்கலாம். உண்மையில்.....

கடவுளைக் கண்டதாகச் சொன்னவர்கள் இருக்கலாம்; காட்டியவர்கள் எவருமில்லை. உணர்ந்ததாகச் சொன்னவர்கள் இருக்கலாம்; உணர்த்தியவர்கள் எவருமில்லை. என்றேனும் ஒரு நாள் கடவுளைக் காணவோ உணரவோ இயலுமென்றால் அது வரவேற்கத்தக்கதே.
########################################################################
08.08.2012இல் என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியான பதிவு இது.

ஞாயிறு, 24 ஜூன், 2018

'தள்ளாட்டம்' வேண்டாம் தளபதி அவர்களே!

தளபதி அவர்களே,

தாங்கள் நாத்திகரா, ஆத்திகரா என்பதை நான் அறியேன். அது குறித்தான கவலையும் எனக்கில்லை. கடவுள் குறித்த தங்களின் நம்பிக்கை எதுவாகவும் இருக்கலாம். எனினும், தாங்கள் தவிர்க்க இயலாத அரசியல்வாதி என்பதால், தங்களின் அன்றாட நடவடிக்கை களை அறிவதில் எனக்கு நாட்டம் உண்டு.

நேற்றைய[23.06.2018] நாளிதழ்கள் மூலம் தங்களைக் குறித்ததொரு பரபரப்பான செய்தியை அறிய நேரிட்டது.

#ஸ்டாலின் காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. 

பின்னர், ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. 

பின்னர், வெள்ளைக் கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, பூரண கும்ப மரியாதை அளித்தனர்#

என்றிவ்வாறான செய்திகளோடு,

'பெருமாள் பிரசாதமான மஞ்சள் பொட்டை அர்ச்சகர் ஸ்டாலின் நெற்றியில் வைத்தார். அவர் முதல்வராக வேண்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள வேணுகோபாலன் சன்னதியில் நேற்று முன்தினம் இரவு சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்தப்பட்டது. 60 பிராமணர்களுக்குப் புத்தாடைகளும், யானைகளுக்குத் தலா 60 கிலோ வெல்லம், கரும்பு ஆகியவையும் வழங்கப்பட்டன' என்பன போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

தங்களின் நெற்றியில் வைக்கப்பட்ட மஞ்சள் பொட்டை உடனடியாக நீங்கள் அழித்துவிட்டதாகவும் நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன,
இவ்வாறான செய்திகள்தான், மேலே நான் குறிப்பிட்டதுபோல, நீங்கள் நாத்திகரா ஆத்திகரா எனும் ஐயத்தைத் தோற்றுவித்தன.

நீங்கள் ஆத்திகர் என்றால் பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டதில் தவறேதுமில்லை. நாத்திகராயின் மரியாதையை ஏற்றுக்கொண்டது தவறு என்றாகிறது.

மரியாதையை ஏற்பதானது, கடவுள் மறுப்புக் கொள்கை மீது நீங்கள் கொண்ட உறுதியைக் குலைக்கும் என்று  கருதியிருந்தால்,  வாயார நன்றி சொல்லி, கும்ப மரியாதையைத் தவிர்த்திருக்கலாம்.

ஆத்திகமோ நாத்திகமோ மதிக்கப்படவேண்டியது மனிதப் பண்பாடுதான். நமக்கு மரியாதை செய்ய நினைப்போரை நோகடித்தல் கூடாது என்று எண்ணும் இரக்க குணம் கொண்டவர் நீங்கள் எனின், அர்ச்சகர் வைத்த திலகத்தை அழித்திருக்கக் கூடாது. விரும்பியிருந்தால், நிகழ்வுகள் முடிந்த பிறகு அந்த அழிப்பு வேலையைச் செய்திருக்கலாம்.

மேற்கண்டவற்றில் எந்தவொரு நெறிமுறையையும் பின்பற்றாமல் மனம் தடுமாறியிருக்கிறீர்கள்; தள்ளாடியிருக்கிறீர்கள்.

கடவுள் மீது கொண்ட நம்பிக்கையாலோ, மக்களைக் கவர வேண்டும் என்னும் எண்ணத்தாலோ, பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டு, நெற்றியில் மஞ்சள் பொட்டு வைக்கவும் அனுமதித்த நீங்கள்.....

'ஸ்டாலின் ஒரு நாத்திகன்' என்று பகுத்தறிவாளர்களால் குத்தப்பட்ட முத்திரைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்று கலக்கமுற்று அதை அழித்திருக்கிறீர்கள்.

ஆக,

இதற்கு முன்னர் எப்படியோ, இந்த நிகழ்வின்போது மனம் தடுமாறியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

நம் மக்களைப் பொருத்தவரை, நல்லாட்சி தருபவரையே தம் தலைவராக ஏற்பார்கள்; முதல்வராகவும் ஆக்குவார்கள். அவர் ஆத்திகரா நாத்திகரா என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே.....

தளபதி அவர்களே,

தாங்கள் ஆத்திகரா நாத்திகரா என்பதை வெளிப்படுத்துவதில் இனியும் கவனம் செலுத்தாமல், மக்களைக் கவருவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------




வெள்ளி, 22 ஜூன், 2018

மாசேதுங் சொன்ன கடவுள் கதை!!!

சீனாவில், பல ஆண்டுகள் அதிபராக இருந்தவர் மாசேதுங். ஆலய வழிபாடுகளைத் தடைசெய்து பெரும் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். 

அவர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, கீழ்க்காணும் சுவையான கதையைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பது வழக்கமாம்.


கதை.....

#ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள்.

இவர்களுடைய இருப்பிடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு நகரம் இருந்தது. குறுக்கே ஒரு மலையும் இருந்ததால், மலையைச் சுற்றித்தான் நகரத்துக்குச் செல்லவேண்டும். அதனால் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது.

''இந்த மலை நமக்கு இடையூறாக இருக்கிறது. இதை உடைத்து ஒரு பாதையை ஏற்படுத்தினால், நம்மால் சுருக்காக நகரத்துக்குச் சென்றுவர முடியும். மூவரும் சேர்ந்து வேலையைத் தொடங்குவோம்" என்றான் விவசாயி. மகன்களும் சம்மதித்தார்கள்.

மூவரும் கடப்பாறைகளையும் பிற தளவாடங்களையும் பயன்படுத்தித் தினமும் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மலையை உடைக்க ஆரம்பித்தார்கள்.

இவர்களின் இந்தச் செயலைக் கண்ணுற்ற ஒருவர், ''நீங்கள் செய்யும் செயலைக் கவனித்தால் சிரிப்புத்தான் வருகிறது. வெறும் கடப்பாறையையும் சில கருவிகளையும் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய மலையை உடைக்க முடியுமா? உருப்படியா வேறு வேலை இருந்தால் பாருங்கள்'' என்றார்.

''இந்த வேலையை நாங்கள் நிறுத்திவிடப் போவதில்லை. எங்களுக்குப் பிறகு எங்களின் வாரிசுகளும் இதைத் தொடருவார்கள். என்றாவது ஒரு நாள் இந்த மலையை உடைத்து நகரத்துக்குப் பாதை போடப்படும். இந்தப் பாதை என் குடும்பத்துக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயன்படும்'' என்று உறுதிபடச் சொன்னான் விவசாயி. சொன்னதோடு நில்லாமல், தன் மகன்களுடன் மலையை உடைக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

''புத்தி சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டேன்'' என்று முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார் அந்த ஆள். இதன் பிறகும், இரவு பகல் பாராமல் மூவரும் மலையை உடைக்கும் பணியில் மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

இவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்த கடவுள், இரண்டு தேவதைகளை அனுப்பினார்.

இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த இரவு நேரத்தில் தமக்குள்ள அபூர்வ சக்தியால் மலையைத் தரைமட்டம் ஆக்கினார்கள் தேவதைகள்.

விடிந்ததும், இக்காட்சியைக் கண்ட தந்தையும் மகன்களும் அளவிறந்த மகிழ்ச்சிக்கு ஆளானார்கள்#

கதையைச் சொல்லி முடித்ததும் கதை குறித்த விமர்சனத்தையும் தருவாராம் மாசேதுங். 

''இன்றளவும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால், விவசாயக் குடும்பத்துக்குக் கடவுள் உதவி செய்ததாக ஒரு கற்பனைக் கதையைச் சொன்னேன். இதையோ, இம்மாதிரிக் கதைகளையோ இனியும் நீங்கள் நம்புதல் கூடாது. 

உண்மையில் மக்களாகிய நீங்கள்தான் கடவுள்.

இந்த விவசாயியைப் போல உயர்ந்த குறிக்கோளும் தளராத நம்பிக்கையும் கடின உழைப்பும் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவிட வேண்டும். இதன் மூலம் தனி மனிதன் மட்டுமல்ல, இந்த நாடே பயன் பெறுகிறது.''

மாசேதுங் மகா புத்திசாலி.
========================================================================
பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு பருவ இதழில் வாசித்த கதை இது[இப்போது என் மொழிநடையில்]. இதழின் பெயரோ எழுதியவர் பெயரோ நினைவில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.






புதன், 20 ஜூன், 2018

உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம்...! உடல் முழுதும் பரவசம்!!

#சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே சமயம்.....

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?' என்னும் கேள்வியும் ஓட ஓட என்னை விரட்டியது. அதன் விளைவாக.....

அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் கடவுள் கொள்கைகளை ஆழ்ந்து கற்றேன். கடவுளைக் காண்பதற்குப் போராடினேன். பலன் கிட்டவில்லை.

கல்லூரியில் படித்த காலத்தில் 'தியானம்' குறித்து அறிய நேர்ந்தது. தீவிர தியானப் பயிற்சியில் ஈடுபடலானேன். அதன் மூலம் புதிய சில அனுபவங்களைப் பெற்றேன்.

ஒரு நாள், கடினமான தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணுக்குள் பளீர் வெளிச்சம். அதில் மிதந்தேன். உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம் சுரந்து உடம்பெங்கும் பரவுவது போல் இருந்தது. உடம்பு முழுக்கப் பரவச உணர்வு பரவியது.

இப்படியே சில மாதங்கள் கடந்தன. ஒரு கட்டத்தில், அருகிலிருக்கும் எதைத் தொட்டாலும் கடவுளைத் தொடுவது போலவே தோன்றும். எல்லாமே எனக்குக் கடவுளாகத் தெரிந்தன. ஆனால், அதற்கப்புறம், அடுத்தடுத்துக் குழப்பங்களை ஏற்படுத்தும் கேள்விகள் என்னுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

விடுதிக்குச் சென்று சாப்பிடும்போது சாப்பாடும் எனக்குக் கடவுளாகத் தெரிந்தது. கூடவே, கீழ்க்காண்பவை போன்ற   கேள்விகளும் எழுந்தன. 

'சாப்பாடும் கடவுள். நானும் கடவுள். கடவுள் தன்னைத்தானே சாப்பிடுவது எவ்வகையில் சரி, அல்லது சாத்தியம்? நானும் கடவுள்; விக்கிரகமும் கடவுள். கடவுள் கடவுளைத் தொழுவது தேவைதானா?

இவ்வாறான கேள்விகளால் மனம் நாளும் குழம்பியது. பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். உடம்புக்கு முடியாமல் போனது.

எங்கள் வீட்டிலோ,  என்னை 'மோகினி' அடித்துவிட்டதாக நினைத்தார்கள்; கவலைப்பட்டார்கள்.

இந்நிலையில், தாகூரைப் படிக்க நேர்ந்தது. எனக்கிருந்த குழப்பமும் நீங்கியதுபோல் உணர்ந்தேன்.

தாகூர் சொல்கிறார்: ''இயற்கை மட்டுமே உண்மை. கடவுள் என்று ஒருவர் இல்லை.''

அதன் பின்னர், ''கடவுள் உண்டா?'' என்று யாரேனும் கேட்டால், ''இல்லை. கடவுள் என்பது மக்களுக்குப் போதையூட்டும் ஓர் அழகான கருத்தாக்கம்'' என்றே பதில் சொன்னேன்[தி இந்து, 20.06.2018].#

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வு.....

இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகக் கருதப்படும் கோவை ஞானியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகும்.
வயது 80ஐக் கடந்துவிட்ட இவர், 50களில் கடுமையான நீரிழிவு  நோய் காரணமாகக் கண்பார்வையை இழந்துவிட்டவர். ஆனாலும், திடமனதுக்காரரான இவர், வாசிப்பையோ, எழுதுவதையோ பேசுவதையோ நிறுத்திவிடாதவர். இன்றளவும், காலை 11 மணி தொடங்கி, மாலை 08 மணிவரை மீனாட்சி என்பவர் வாசிக்க, இவர் கேட்கிறார்; எழும் சிந்தனைகளுக்கு அவர் மூலம் எழுத்து வடிவம் தருகிறார்; பல நல்ல நூல்களின் ஆசிரியர்[பள்ளி ஆசிரியராக இருந்தவர்].

ஞானி அவர்களுக்கும் 'தமிழ் இந்து'வுக்கும் நம் நன்றிகள்.
------------------------------------------------------------------------------------------------------------------











செவ்வாய், 19 ஜூன், 2018

'அது' கடவுளிடம் பேசுவதற்கு மட்டும்!!!

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் மீது இந்தியையும், அனைத்திந்திய மக்கள் மீதும் சமற்கிருதத்தையும் வலிந்து திணிக்கும் முயற்சியில் நடுவணரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நடுவணரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கேந்திர வித்தியாலயாபள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட நடுவணரசுப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு, 'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிபிஎஸ்இ ஆண்டுதோறும் இந்தத் தேர்வை நடத்திவருகிறது. இத்தேர்வில், மொழித்தாள் - 1இல் இதுவரை இடம்பெற்றிருந்த தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டு, ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகிய மூன்று மட்டுமே இடம்பெற்றிருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் தகவல் வெளியானது.

'மொழித்தாள் -1 பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த 17 மொழிகளை மீண்டும் சேர்க்க வேண்டும். தவறினால், மிகப் பெரும் போராட்டம் நடைபெறும்' என்று 'பாமக' தலைவர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தி.மு.க. எம்.பி. கனிமொழியும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், 'மொழித்தாள் -1 தேர்வுப் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்['தி இந்து', 19.06.2018].

நடுவணரசு, இந்தச் சமற்கிருதத் திணிப்பு முயற்சியை விடாப்பிடியாகத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது. மக்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லையெனில், கடவுள் மொழி எனப்படும் 'தேவ பாஷை'யாம் சமற்கிருதத்தை மக்கள் பாஷையாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிடலாம் என்று கனவு காண்கிறது.

சில நூறு பேர்கூடப் பேசாத இந்த மொழியைத் திணிக்கும் எண்ணத்தை அறவே துடைத்தெறிந்து, ஆங்கிலம், இந்தி ஆகியவற்றிற்கு இணையாகத் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளையும் அது வளர்த்திட வேண்டும். 

முடிவாக நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

சமற்கிருதத்தைக் கடவுள் மொழி என்கிறீர்கள். அதை மக்கள் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலுமாய்க் கைவிட்டு, கடவுளுடன்  நீங்கள் உரையாடுவதற்கு வேண்டுமானால் சமற்கிருதத்தைப் பயன்படுத்துங்கள். மறுப்பேதுமில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




ஞாயிறு, 17 ஜூன், 2018

'இது'க்கு மட்டும்தான் பட்டியலா? 'அது'க்கு.....?!

*உடலுறவில் முழு மன நிறைவு பெறுபவர்களுக்குப் பிறரைக் காட்டிலும், 'இம்யூனோக்ளோபுளின்[IgA]' என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் உடம்பில் அதிகரிக்கிறது.

*உற்ற துணையுடன் அடிக்கடி கட்டில் சுகம் அனுபவிப்பவர்கள்,  'எனக்கு உடம்பு சரியில்லை' என்று  அலுவலகத்தில் அடிக்கடி விடுப்புக் கேட்பதில்லை.

*உடலுறவு இன்பத்தின் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டுபவர்களுக்கு, உச்சசுகம் பெருகுவதற்குக் காரணமான 'டோபமைன்', 'என்டார்ஃபின்','ஆக்ஸிடோசின்' ஆகியவை இயல்பைவிடவும் ஐந்து மடங்கு அதிகம் சுரக்கிறது.

*மனம் கவர்ந்த மனையாளின் தேன் ஊறும் இதழ்களில் ஆழப்பதித்திடும் ஒரே ஒரு முத்தம்கூட ஆக்ஸிடோசின் சுரப்பை அதிகரிக்கிறது.

*இம்மாதிரியான சுகபோகிகளுக்குத் தலைவலியே வருவதில்லையாம்; வந்த தலைவலியும் சுகபோகத்திற்குப் பிறகு பஞ்சாய்ப் பறந்துவிடுமாம்.[உங்களின் மனம் கவர்ந்தவள், ''தலை வலிக்குதுங்க'' என்று சொன்னால் 'தேமே' என்று இருந்துவிடாதீர்கள்].

*தினசரி நடைப்பயிற்சியை மறந்தாலும், வாரம் ஒருமுறையோ இருமுறையோ இந்தப் பயிற்சியைத் தவறவிடாமல் செய்தால், மருத்துவச் செலவை முற்றிலுமாய்த் தவிர்த்துவிடலாம்.

*உடல் தகுதிக்கேற்ப முறையான உடலுறவு வைத்துக்கொண்டால், 'சிக்ஸ்பேக்' உடம்பு வாய்க்கவில்லை என்றாலும் அதைச் 'சிக்'கென்று வைத்துக்கொள்ளலாம்.

*மாதத்தில் ஒருமுறை புணர்வதை விடவும் இருமுறை புணர்வோரை இதய நோய் நெருங்காது.

*அடிக்கடி விந்தை வெளியேற்றுவோரின் 'பிராஸ்டேட்' சுரப்பி வீங்காது; அதில் புற்று நோய் தொற்றாது.

*பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை தலைகாட்டாது; வலியும் தென்படாது.

*சிறப்பான உடலுறவு, சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*நீண்ட நேர உடலுறவில் சுரக்கும் வேதிப்பொருட்கள் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்; நினைவுத்திறன் கூடும்.

*குறைந்த இடைவெளியில் தொடரும் உடலுறவு, செரட்டோனின் என்னும் 'ஹேப்பி ஹார்மோனை'ச் சுரக்கச் செய்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும்.

*உற்சாகமான உடலுறவு, தனிமை, பாதுகாப்பின்மை, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை ஓட ஓட விரட்டியடிக்கும்.....['பெண் இன்று', தி இந்து, 17.06.2018]
இவையும் இவைபோன்ற இன்னும் ஏராள நன்மைகளும் இணக்கமான இணையுடன் அடிக்கடி புணர்ச்சி கொள்வதால் விளைகின்றன என்னும் உண்மையை மனிதவள மேம்பாட்டு  நிறுவனம் ஒன்று, பன்னாட்டு நிறுவனப் பணியாளர்களிடையே நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறதாம்.

''ஆகா, என்ன அருமையான ஆராய்ச்சி!'' என்று பாராட்டத் தோன்றுகிறதா, கொஞ்சம் பொறுங்கள்.

ஜோதிடம், வரதட்சணை, சாதிமத வேறுபாடுகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டித் துணை தேடிக்கொள்ள வக்கில்லாமல், நாளும் ஏங்கித் தவிக்கும் முதிர்கன்னிகள், முதிர்காளையர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது.

கல்யாணம் ஆகியும், உடல் பொருத்தமும் மனப் பொருத்தமும் இல்லாமையால் உடலுறவுக் குழறுபடிகளுக்கு ஆளாகி மனம் சோர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளும் கணவன் - மனைவியர் எண்ணிக்கை கணக்கு வழக்கில்லாமல் பெருகிக் கிடக்கிறது.

அனைத்துப் பொருத்தங்களும் இருந்தும், தீராத நோய் ஆறாத மனத் துயரம் என்று அல்லல்பட்டு ஆற்றாத கவலையுடன் காட்சிதரும் காளையர், கன்னியர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

விட்டுக்கொடுத்து வாழும் மனப் பக்குவமோ, பாசத்தைக் கொட்டி உறவாடும் நேச உணர்வோ இல்லாத காரணத்தால், மணமான குறுகிய காலத்திலேயே மணவிலக்குப் பெற்று மாளாத துன்பங்களுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் பல்கிப் பெருகுகிறது.

கட்டுப்பாடில்லாத சம்போகத்தால் நாடி தளர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளுவோரையும் கணிசமாய்க் காண முடிகிறது.

மனத்தளவில் ஏராள ஆசையிருந்தும் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் ஓயாது புலம்பித் திரியும் கிழடுகளுக்கும்[கிழவிகள்?] பஞ்சமில்லை.

இங்கே குறிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பெருக்கிக் கழித்துவிட்டு, மனம் ஒத்த தம்பதியராய் உடலுறவு சுகம் துய்ப்போரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்.....

லட்சத்தில் ஒன்று தேறுமா?

லட்சத்தில் ஓர் இணைதான் மேலே பட்டியலிடப்பட்ட பயன்களைப் பெற முடிகிறது என்னும்போது, மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பாராட்ட முடியுமா?

முடியாது. மாறாக.....

'ஆராய்ச்சியாளர்களே,

நீங்கள் மனித நலனை மேம்படுத்தப் பாடுபடும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். உங்களால் முடிந்தால் மக்களிடையே பெருகிக் கிடக்கும் பல்வேறு மனநோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப்படுத்த உதவுங்கள். 

இவர்களின் நிலை மேம்படட்டும். நீடித்த உறவுக்குத் தகுதி படைத்தவர்களாக  இவர்கள் மாறட்டும். அதன்பிறகு.....

நீடித்த உறவால் விளையும் பயன்கள் குறித்த உங்களின் ஆராய்ச்சி முடிவை இவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்.'
------------------------------------------------------------------------------------------------------------------










சனி, 16 ஜூன், 2018

அறிவை முடக்கும் ஆன்மிக நாளிதழ்க் கதைகள்!!

தமிழ் நாளிதழ்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. வாரம்தோறும் போட்டிபோட்டுக்கொண்டு ஆன்மிகச் செய்திகளை[இணைப்பின் மூலம்] வெளியிடுகின்றன. அவற்றில் மிகப் பல, சிந்திக்கும் அறிவைச் சிதைக்கின்ற பழைய மூடநம்பிக்கைக் கதைகள். அண்மையில் வாசித்த ஒரு கதை கீழே[வார இதழ்கள் வெளியிடும் இம்மாதிரிக் கதைகளுக்கான விமர்சனம் இனி அவ்வப்போது தவறாமல் வெளிவரும். வாசிக்கத் தவறாதீர்].

கதை:

#ஒரு ஜென் துறவி. பெயர் 'நான்சன்'.

அவருக்கு ஒரு மாணவன். பெயர் 'ரிகோ'.
ஒரு நாள்.....

நான்சனிடம்  ரிகோ ஒரு  புதிரை முன்வைத்தான்.. 

'ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவு கொடுக்கிறான். வாத்து வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒரு கேள்வி.....

வாத்து வளர்ந்து பெரிதாகிவிட்ட நிலையில், அதைக் கொல்லாமல் புட்டியையும் உடைக்காமல்.  முழுமையாக உயிருடன் வெளியே கொண்டுவர வேண்டும். எப்படி?' என்பதே அந்தப் புதிர்.

குரு நான்சன் புதிரை விடுவிக்க முயன்றார். இயலவில்லை. எத்தனை சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை.

வெறுமனே சிந்தித்தால் விடை கிடைக்காது என்று நினைத்தவர் தியானத்தில் ஆழ்ந்தார்.

விடை கிடைத்தது!

'ரிகோ'வை விளித்து,  ''புட்டிக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லாமலே. வளர்ந்து பெரிதாகிவிட்ட வாத்து உயிருடன் இப்போது வெளியே வந்துவிட்டது'' என்றார், மிகுந்த உற்சாகத்துடன்.

ரிகோ வாய் பிளந்தான். தன் கேள்விக்குத் தத்துவார்த்தமான ஒரு விடையை எதிர்பார்த்த அவன் நான்சனை உற்று நோக்கினான்.

நான்சன் தொடர்ந்தார்.

''இயல்பு நிலையில், வாத்தைச் சேதாரமில்லாமல் வெளியே கொண்டுவர இயலாது. தியானத்தால் மட்டுமே முடியும். வாத்து வெளியே வந்துவிட்டதை நீ அறிய வேண்டுமானால் நீயும் தியானத்தில் மூழ்குதல் வேண்டும்.''

குருவின் அறிவுரைப்படியே ரெகோவும் தியானத்தில் ஆழ்ந்தான்.

எல்லாத் திரைகளும் அகன்றுவிட்ட நிலையில் அவன் இருந்தான். சொன்னான்:

''நான் புட்டியை உடைக்கவில்லை. அது அங்கேயேதான் இருக்கிறது. நான் வாத்தையும் கொல்லவில்லை. ஆனால், அது உயிரோடு வெளியே வந்துவிட்டது.''#

இந்தக் கதையைச் சொன்னவர், பத்திரிகைகளால் 'செக்ஸ் சாமியார்' என்று சிறப்புப் பட்டம் சூட்டப்பட்ட 'ஓஷோ'.

கதையின் கருதுகோள் புரிந்ததா? ''புரியவில்லை'' என்பவர்களுக்காகக் கதையை எடுத்தாண்ட ஆன்மிக எழுத்தாளரே விளக்கம் தருகிறார்.

'வாத்து', ஆன்மாவுக்கான குறியீடு. 'புட்டி', வாழ்க்கையின் மீதான பற்றுதல். பற்றுதல் காரணமாக இன்பதுன்பங்களுக்கு ஆளாகிறோம். அவற்றிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது நம் குறிக்கோள்[புட்டியிலிருந்து வாத்து விடுபடுதல்].

ஆன்மாவைச் சிதைத்துவிடாமல் ஆசாபாசங்களையும் அறுத்துவிடாமல் விடுபடுவதற்கான ஒரே வழி.....

தியானம். 

வாழ்க்கையின் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டே தியானம் செய்வதன் மூலம் ஆன்மா விடுதலை பெறுவது சாத்தியம் என்று ஓஷோ சொல்வதாகச் சொல்கிறார் ஆன்மிக எழுத்தர்.

ஓஷோ சொன்ன கதையும் ஆன்மிகர் தந்த விளக்கமும் பகுத்தறிவுக்கு உகந்தனவா?

சற்றே சிந்திப்போம்.

'ஆன்மா' என்பதே நம் முன்னோர்களால் அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். அறிவுபூர்வமாக அதை நம்புவது சாத்தியமே அல்ல[தனித்து ஆராயப்படவேண்டிய ஒன்று அது. நான் சில பதிவுகள் எழுதியிருக்கிறேன்].

தியானம் தியானம் என்று பரப்புரை செய்து மக்கள் மனங்களில் அதைப் பதியச் செய்துவிட்டார்களே தவிர, தியானம் செய்யும் முறை குறித்தோ அதன் பயன்கள் குறித்தோ நம்பத்தகுந்த விளக்க உரைகளை எவரும் தந்தாரில்லை.

இந்த வாத்து கதையையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

இதைச் சேதாரமில்லாமல் வெளியே கொணர, குருவும் சீடனும் செய்த தியானங்கள் எவை?

மூடிய கண்களுடன் குந்திக்கொண்டு[மனதையும் ஒருமுகப்படுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்],....

''கடவுளே...கடவுளே...என் ஆன்மாவை விடுவிப்பாயாக... சேதாரமில்லாமல் விடுவிப்பாயாக. கடவுளே[விரும்பிய சாமி பெயரைச் சொல்லலாம்]...கடவுளே...உன் தாழ்பணிந்து இறைஞ்சுகிறேன்... எவ்வாறேனும் என் ஆன்மாவுக்கு விடுதலை வழங்கு...கடவுளே...வழங்கு...வழங்கு...'' என்றிப்படி நெடுநேரம் முணுமுணுப்பதுதான் தியானமா?

இவ்வாறு தியானம் செய்து ஆன்மாவை விடுவித்தவர் யாரெல்லாம்?

விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் எங்கே?

விடுவித்தவர்கள் எங்கே?

செத்துத்தொலைத்து, உடல் என்னும் பிண்டம் அழிந்த பிறகும் ஏதேனும் ஓர் உருவில் வாழ்ந்துகொண்டே இருத்தல் வேண்டும் என்னும் பேராசையில் கட்டிவிடப்பட்ட இம்மாதிரிக் கதைகளை இன்னும் எத்தனை காலங்களுக்குச் சொல்லிச் சொல்லிச் சொல்லி நம் முட்டாள்தனங்களைத் தக்கவைக்கப் போகிறோம்?

நம் கேள்வி இது.  பதில்.....?!?!
========================================================================
குறிப்பு:
கருத்துப்பெட்டியை அழகுபடுத்த முயன்றதில் அது பழுதடைந்துவிட்டது. மீட்டெடுக்கும் முயற்சி தொடர்கிறது. பொறுத்தருள்க.









வியாழன், 14 ஜூன், 2018

ஓர் அறிஞனும் ஆயிரம் முட்டாள்களும்!![கதைப் பித்தர்களுக்கு]

''நீ இந்த ஊரைவிட்டே ஓடிப்போகணும். அப்பத்தான் மழை பெய்யும்னு மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. திரும்பிப் பார்க்காம ஓடு. ஊர் எல்லையைத் தாண்டிப் போயிடு.”

“சாமி இல்ல பூதம் இல்லன்னு பிரச்சாரம் பண்றவன் நீ. நல்ல நேரம் கெட்ட நேரம்னு எதுவும் இல்ல; சகுனம் பார்க்குறது தப்பு; சாந்தி கழிக்கிறது தப்புன்னு என்னென்னவோ சொல்லிட்டுத் திரிஞ்சே. நாங்க கேட்டுட்டுச் சும்மா இருந்தது தப்பாப் போச்சி. இந்த ஊர் தெய்வக் குத்தத்துக்கு ஆளாயிடிச்சி. நீ வெளியேறினாத்தான் மழை பெய்யும். இப்பவே நடையைக் கட்டு.”

ஒட்டு மொத்த ஊரும் பிறப்பித்த உத்தரவை மீற முடியாத நிலையில், அந்த அந்தி நேரத்தில், புதுப்பாளையத்துலிருந்து வெளியேறி, ஊரின் மேற்கு எல்லையில் உள்ள பெரிய ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தான் மணிமொழியன்.

“சே, இந்தக் கணினி யுகத்திலும் இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டமா? இந்த முட்டாள்களை மூடநம்பிக்கைச் சேற்றிலிருந்து ஈடேத்த நான் பட்ட பாடெல்லாம் வீணாயிடிச்சே. நல்ல வேளை.....சாமியாடி சொன்னா, கனவில் வந்து சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சின்னு என்னையே அம்மனுக்குப் பலி போடாம விட்டாங்களே!” என்று சொல்லி வாய்விட்டு நகைத்தான் மணிமொழியன்.

அவன் நகைப்புக்கு எதிர் நகைப்புப் போல வானம் ‘கடகட’ என முழங்கியது.

அவன் அண்ணாந்து பார்த்தான்.

இது என்ன விந்தை! வானமெங்கும் கறுத்து, கைக்கெட்டும் தூரத்தில் சூல் சுமந்து மிதக்கிறதே மேகக் கூட்டம்!

மழை பெய்யப் போகிறதா?

முட்டாள் மனிதர்களின் முடக்கு வாதத்தை இயற்கையே நியாயப்படுத்தப் போகிறதா?

மணிமொழியன் ஆச்சரியப்பட்டான். கூர்த்த பார்வையால் இருண்ட வானத்தைத் துழாவினான்.

எங்கிருந்தோ மிதந்து வந்த ‘மழை வாசம்’ ஒரு பேய் மழைக்கு முன்னோட்டம் தந்தது.

“பட்...பட்” ஓசையுடன் சடசடவென இறங்கிய மழைத் துளிகள், மணிமொழியனின் மண்டையைப் பதம் பார்த்தன.

அது செம்மண் பூமி. ‘குப்’ பென எழுந்த மண் வாசனை காற்றில் மிதந்து வந்து கமகமத்தது.

நனைந்து கொண்டே சிறு பிள்ளைகள் போல ஆடிப்பாட அவனுக்கு ஆசைதான். அப்போதிருந்த மன நிலையில் அது சாத்தியப்படவில்லை. வேகமாக ஓடி, ஏரியை ஒட்டியிருந்த எல்லையம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தான்.

மழை வலுத்தது. வருணனுடன் வாயுபகவானும் களத்தில் இறங்கினான்.

”சளேர்...சளேர்” என்று தரையில் அறைந்து ஆக்ரோசத்துடன் மழை கொட்டியது. கோயில் கூரை மீதும் அதனை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.

பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. மேகக் கூட்டம் இடித்து முழக்கி டமாரம் கொட்டியது.

இத்தனை ஆரவாரங்களுக்கிடையே அது என்ன ஒரு வித்தியாசமான ஓசை?

மணிமொழியன் உற்றுக் கேட்டான். புதுப்பாளையம் இருந்த திசையில் கவனத்தைப் பதித்தான்.

மழையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் புதுப்பாளையம் வாசிகள், தாம்பாளம், தகரடப்பா என்று எதையெல்லாமோ தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கும்மாளம் போடுகிறார்கள் என்பது புரிந்தது.

மணிமொழியன் சிந்தனை வசப்பட்டான். சில சந்தேகங்கள் அவன் முன்னே விஸ்வரூபம் எடுத்தன.

‘நான் ஊரைவிட்டு வெளியேறிய கொஞ்ச நேரத்தில் வானம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதே, இது எப்படி?

தற்செயலா அல்லது என் மீது சுமத்தப்பட்ட பழியை நியாயப்படுத்த அம்மன் நிகழ்த்தும் அதிசயமா? இது அவளின் செயல்தான் என்றால், மனித மிருகங்களின் இந்த மூட நம்பிக்கைக்கு, காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு  அவள் அங்கீகாரம் தருவதாகத்தானே அர்த்தம்?

நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்த மணிமொழியன், அன்று எதிர்கொண்ட பிரச்சினையாலும் மனக் குழப்பத்தாலும் உண்டான அயர்ச்சி காரணமாகத்  தரையில் நீட்டிப் படுத்தான். அவன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து நடந்து முடிந்த முக்கிய நிகழ்ச்சிகளை அசை போடலாயிற்று அவன் மனம்.

பள்ளி ஆசிரியனான மணிமொழியன், புதுப்பாளையத்திற்கு மாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே, படிப்பறிவில் மட்டுமல்லாமல் பகுத்தறிவிலும் புதுப்பாளையம் பழையபாளையமாகவே இருப்பதைக் கண்டு வருந்தினான்.

படிப்பகம், வாசகர்வட்டம், நற்பணி மன்றம் என்றெல்லாம் படிப்படியாகச் சில அமைப்புகளை ஏற்படுத்தி, உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை எழுப்பி உட்கார வைத்தான். கருத்தரங்குகள்,கவியரங்குகள், பட்டிமன்றங்கள், மேடை நாடகங்கள் என்று நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

இளைஞர்கள் சிலரிடம் ஓரளவு மாற்றம் தெரிந்தது. அவர்கள் வரதட்சணையை மறுத்தார்கள்; சாதி வேறுபாட்டை அலட்சியம் செய்தார்கள். விதவையருக்கு வாழ்வு தர முன்வந்தார்கள்.

ஆயினும் என்ன? எஞ்சியிருந்தவர்கள் மாறவே இல்லை. பழைமையில் ஊறிப்போனவர்கள் அவனை வெறுத்தார்கள். அவனை ஊரைவிட்டு வெளியேற்றும் நாள் வருமா என்று காத்துக் கிடந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல அந்த ஆண்டு மழை பொய்த்தது.

மழைக்கஞ்சி காய்ச்சினார்கள். மழை பெய்யவில்லை.

சாமியாடியைக் கும்பிட்டு, அம்மனை வரவழைத்து முறையிட்டார்கள். சாமியாடி சொன்னதை அம்மனின் அருள்வாக்காகக் கொண்டு மணிமொழியனை வெளியேற்றினார்கள்.

சிறிதும் மட்டுப்படாமல், கட்டுப்பாடின்றிப் பெய்து கொண்டிருந்தது மழை.

நேரம் பின்னிரவைக் கடந்து கொண்டிருந்தது.

ஒரு பெரிய ராட்சத மதகை உடைத்துவிட்டால், ‘குபீர்’ என்று வெள்ளம் வெளியேறும் போது வெளிப்படுவது போன்ற ஓசை கேட்டுத் திடுக்கிட்டான் மணிமொழியன்.

எழுந்து வெளியே பாய்ந்தான்.

புது வெள்ளம் ததும்பி வழியும் அந்தப் பிரமாண்ட ஏரியின் அகன்ற கரை மீது கவனமாக நடந்தான்.

நடுக்கரையில் உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது! ஏரியில் சிறைபட்டுக் குமுறிக் கொண்டிருந்த புது வெள்ளம், புதுப் பாதை போட்டு மூர்க்கத்தனமாய் வெளியேறத் தொடங்கியிருந்தது.

உடைப்பு பெரிதாகி, இந்த ஊழி வெள்ளம் காட்டாறாக உருக்கொண்டு பாயும் போது எதிர்ப்படும் ஊர்கள் சிதைந்து சிதறி உருத்தெறியாமல் போகும் என்பது அவனுக்குத் திட்டவட்டமாகப் புரிந்தது.

முதல் பலியாய் முன்னால் நிற்பது புதுப்பாளையம்.

’ஊரா அது? காட்டுமிராண்டிகளின் சரணாலயம். தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய அத்தனை முட்டாள்களும் மூச்சுத் திணறிச் சாகட்டும்’ -இப்படியொரு வக்கிர சிந்தனைக்கு ஆளாகவில்லை அவன்.

ஏரிக்கரையிலிருந்து புதுப்பாளையம் நோக்கிப் புயலாகப் பாய்ந்தான்.

“ஏரி உடைப்பெடுத்திடிச்சே.........வெள்ளம் வருது..........வெள்ளம் வருதே.........ஏரி உடைப்பெடுத்திடிச்சே..........”

உரத்த குரலில் கூவியபடி ஓடினான் அவன்.

ஊரை நெருங்க நெருங்க அவன் குரல் உச்சகதியில் ஒலிக்கலாயிற்று.
*************************************************************************************************