முத்தம் ஆசை, பாசம் போன்றவற்றின் உன்னதமான வெளிப்பாடு.
இதனால் ஏராள நன்மைகள் உண்டு; தீமைகளும் உள்ளன.
மூளையில் உள்ள டோபமைன்[Dopamaine] என்னும் சுரப்பிதான் நம்மை மகிழ்ச்சியாக இருக்கத் தூண்டுகிறது. மன அழுத்தம் இதன் இயக்கத்தைப் பாதிப்பதால், நாம் மன அழுத்ததிற்கு உள்ளாகாமல் இருப்பது மிக அவசியம் அல்லவா?
அந்த மன அழுத்தம் முத்தமிடுவதால் குறைகிறதாம். ஆகவே முத்தமிடுவீர் என்கிறார்கள் முத்த ஆராய்ச்சியாளர்கள்..
யார் யாருக்கெல்லாம் எங்கெங்கெல்லாம் என்பது அவரவர் வயதையும், விருப்பு வெறுப்புகளையும் பொருத்தது.
உடம்பின் பிற உறுப்புகளின் தசைகளைப் போல முகத்தின் தசைகள் இயங்குவதற்கான வாய்ப்பு, உணவுண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிகுதியும் அமைவதில்லை. எனவே, முத்தமிடுதல் முகத் தசைகளுக்கான சிறந்த பயிற்சியாகும். அதன் மூலம் முகத் தசைகள் சுருங்காமலும் தொங்கிப்போகாமலும் இருக்கும் என்பதால், முகம் பொலிவு குன்றாமலிருக்கும்.
உமிழ்நீரின் பயன்கள் கணிசமானவை. வாயைச் சுத்தம் செய்வதோடு, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துகள் உமிழ்நீரில் உள்ளன.
ஒரு நல்லிரவு முத்தம் ஆக்ஸிடாஸின் எனப்படும் காதல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெற முடியுமாம்.
ஒரு பிரிட்டிஷ் ‘படுக்கை நிறுவனம்’[படுக்கும் முறைகளைச் சொல்லித்தரும் நிறுவனமா?!] நடத்திய கருத்துக்கணிப்புக்குப் பதிலளித்தவர்களில் 70% பேர் உறங்கச் செல்வதற்கு முன்பு முன் தங்கள் கூட்டாளிகளை முத்தமிடுவதால் நன்றாகத் தூங்குவதாகத் தெரிவித்தனர்.
முத்தம், மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடற்பயிற்சி செய்கிற அளவுக்கு இல்லை என்றாலும், முத்தமிடுதல், கணிசமான அளவுக்குக் கலோரிகளைக் குறைக்கிறது.
“இச்” கொடுப்பதில் இப்படியான பல நன்மைகள் இருந்தாலும், கவனக்குறைவாக இதைச் செய்வதால் பல தீமைகளும் விளையும் என்கிறார்கள் மூத்த ‘முத்த’ஆராய்ச்சியாளர்கள்.
அவைகளில் குறிப்பிடத்தக்கவை:
வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மறக்கவே கூடாதது. தவறினால், உமிழ்நீர் மூலம் கிருமிகள் பரவிட வாய்ப்புள்ளது. எனவே, முத்தப் பரிமாறலுக்குப் பின்னரும் வாயை நன்கு கொப்பளிப்பது நல்லது[புணர்ச்சிக்குப் பிறகு பிறப்புறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல].
வாயில் புண்கள் இருந்தால் முத்தமிடுதல் கூடாது.
மோனோநியூக்ளியோசிஸ், கோவிட்-19, எபோலா, ஜிகா போன்ற சில மோசமான வைரஸ்கள் உமிழ்நீர் மூலம் பரவும்.
இருவரில் ஒருவருக்கு உண்ணும் உணவில் ஒவ்வாமை இருந்தால், அதை ‘அந்த’ நேரத்தில் உண்ணாமலிருத்தல் வேண்டும். அவ்வகை உணவை உண்டிருந்தால், முத்தமிடுவதற்கு 16 முதல் 24 மணி நேரம் காத்திருத்தல்[உருப்பட்ட மாதிரிதான்!] மிக மிக முக்கியம்.
குறைந்தது 10 வினாடிகள் நீடிக்கிற முத்தத்தில், சராசரியாக 80 மில்லியன் பாக்டீரியாக்கள் கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். முத்தமிடுவதால் ஏராளமான கிருமிகள் பரவக்கூடும், எனவே, அவர்களுக்கு முத்தம் தரும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
* * * * *
குறிப்பு: இதெல்லாம் குளிர்ப் பிரதேசவாசிகள் அவ்வப்போது உடம்பைச் சூடேற்றுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். நம் நாடு வெப்பம் மிகுந்தது. கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ‘நச நச’ வேர்வை முகம் சுழிக்க வைக்கும்; உதட்டில் தந்தால் உப்புக் கரிக்கும்.
“அப்புறம் எதுக்கு இந்தப் பதிவு?”ன்னு கேட்குறீங்களா?
வேறென்ன, நல்ல ‘சரக்கு’ எதுவும் கைவசம் இல்லை என்பதே அடியேன் பணிவுடன் உங்கள் முன்வைக்கும் பதில்!
https://www.msn.com/en-gb/health/familyhealth/the-surprising-side-effects-of-kissing/ss-AA1ftOXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=371b0c019f65402dacb01e17f1f84293&ei=18#image=2