எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 23 ஜூலை, 2018

அழித்தலும் அழிதலும்.....!

அணுக்களால் ஆன ஒவ்வோர் உயிரும் அணுக்களால் ஆன பிற உயிர்களை உணவாக்கிக்கொண்டுதான் வாழ்கின்றன; வளர்கின்றன. இத்தகைய ஒரு 'வாழ்வியல் நெறி'யை உருவாக்கியவன் நல்லவனா, கொடியவனா?
மூலக்கூறுகள்[பஞ்ச பூதங்கள்], கோள்கள், விண்மீன்கள், பிற பொருள்கள் என்றிவை மட்டுமின்றி, இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறையும் அனைத்து உயிர்களும் அணுக்களால் ஆனவை என்கிறது அறிவியல்.

அணுக்களால் ஆன ஒவ்வோர் உயிரும் அணுக்களால் ஆன பிற உயிர்களைத் தனக்கு உணவாக்கிக் கொள்வதன் மூலமே தன் இருப்பைத் தக்கவைக்கிறது. பொதுமைப்படுத்திச் சொன்னால்.....

'உயிர்கள் வாழ்வது உயிர்களின் அழிவில்'

அழித்தலைச் செய்யாத உயிர் எதுவும் இல்லை. அழிப்புக்கு ஆளாகாத உயிரும் இல்லை.

அழிவைச் சந்திக்கும்  அனைத்து உயிர்களும் வலியை உணர்வதும் துன்பத்திற்குள்ளாவதும் நிகழ்கிறது. வலியும் துன்பமும் இல்லை என்றால், உயிர்கள், தாம் வாழ்வதற்காகப் பிற உயிர்களை அழிப்பது பற்றி எவரும் கவலைப்படத் தேவையில்லை.

துன்புறுத்தல் காலங்காலமாய்த் தொடர்ந்து நிகழ்வதால்தான், 'துன்புறுத்தித் துன்புற்று வாழும் வாழ்க்கை ஏன்?' என்று மனித மனம்  கேள்வி எழுப்பிகிறது.

இக்கேள்விக்கு இயற்கை என்பது பதிலாக இருப்பின்.....

இந்த இயற்கை நிகழ்வுக்கு மூல காரணம் எது அல்லது எவை, எவர் அல்லது யாவர் என்றெல்லாம்  ஆறறிவு படைத்த மனிதர்கள் ஆராயலாம்; விடை கிடக்கிறதோ இல்லையோ மனிதகுலம் உள்ளளவும் ஆராய்ந்துகொண்டிருக்கலாம்.

காரணம் கடவுள் என்றால்.....

உயிர்களைத் துன்புறுத்தி உயிர் வாழ்வதான ஒரு 'வாழ்வியல் நெறிமுறை'யை வகுத்த அவன் கொடியவன் என்றாகிறது.

ஆனால், 'கடவுள் கருணை வடிவானவன்' என்று இன்றளவும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில்.....

கடவுள் கொடியவனா, கருணை வடிவானவனா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++