எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 12 செப்டம்பர், 2020

காதல் போதை!!!

ஆணாகட்டும் பெண்ணாகட்டும், காதல் போதைக்கு அடிமை ஆகிறவர்கள் திருமணம் ஆகாதவர்கள்தான். தெள்ளத் தெளிவாகச் சொன்னால்.....

‘உடலுறவு’ சுகத்தை அனுபவித்திராதவர்களே காதல் என்னும் புதைகுழியில் வீழ்ந்து மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஒருமுறை உடலுறவு இன்பத்தை நுகர்ந்த ஒருவர், மீண்டும் அவ்வின்பத்தைப் பெற முனைவாரே தவிர,  காதல் என்னும் பொய்யுணர்ச்சிக்கு அடிமையாக மாட்டார். சில நேரங்களில் காரியம் ஆவதற்காகக் காதலிப்பது போல் நடிக்க மட்டுமே செய்வார்.

மிகப் பழைய ஆனந்த விகடன் வார இதழில்[கையடக்க வடிவம்] படித்த ஒரு சிறுகதை  என் நினைவுக்கு வந்தது. அதன் சாரம்.....

காதலில் தோற்ற ஓர் இளைஞன் சித்தம் கலங்கிப் பித்துப் பிடித்தவனாக அலைந்துகொண்டிருப்பான். அவனின் உற்ற நண்பன் ஒருவன் நிறையப் புத்திமதிகள் சொல்லி எதார்த்த வாழ்வைப் புரிய வைக்க முயல்வான். முயற்சி தோல்வியில் முடிகிறது. இடையறாது வற்புறுத்தி, ஒருவகையாக உடன்பட வைத்து ஒரு விலைமகளிடம் அனுப்பி வைப்பான். இந்தக் கிறுக்கன் அவளோடு உடலுறவு கொள்கிறான். உறவு தொடர்கிறது. காதல் பித்தம் தெளிகிறது. படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறான். 

விலைமகளுடனான தகாத உறவை நியாயப்படுத்துவது இக்கதையின் நோக்கமன்று; எதார்த்த வாழ்வைப் புரிந்துகொள்ள வைப்பது மட்டுமே என்பதறிக.

மணமாகாத ஆணும் பெண்ணும் பழகலாம். உணர்வுகளும் பழக்கவழக்கங்களும்[பெரும்பான்மை] ஒத்திருந்தால் நண்பர்கள் ஆகலாம். இருவரின் குடும்பச் சூழலும் ஒத்தமைந்தால் மணம் புரிந்து ஆசை தீர உடலுறவுச் சுகத்தை அனுபவிப்பது சாத்தியமாகும்!

இதைத் தவிர்த்து, காதல் புனிதமானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் பிணாத்திக்கொண்டு அலைவது தவிர்க்கப்படவேண்டிய, தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
===============================================================