எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 23 ஆகஸ்ட், 2025

அனுமானக் கடவுளும், நிரூபிக்க அல்லாடும் அரைவேக்காடு விஞ்ஞானியும்!!!

ஹார்வர்ட் விஞ்ஞானியான டாக்டர் வில்லி சூன்(Dr Willi Soon) (பிறப்பு 30-9-1965) கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு கணிதச் சூத்திரம் நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்[கணிதச் சூத்திரங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்பு. இதன் மூலம் கடவுளின் ‘இருப்பை’ உறுதிப்படுத்துவதாகச் சொல்லி, சாமானியர் காதுகளில் பூச்சுற்றுகிறார். கடவுளின் ஆயுளைக் கண்டறிவதற்கோ, அல்லது அவர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கோ கணிதச் சூத்திரம் உதவுமா?].

விஞ்ஞானத்தின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டு[கவனத்தில் கொள்க] பிரபஞ்சம் இருப்பதை க்ளோஸ்ட் ஸ்பேஸ்டைம் கர்வேச்சர்* நிரூபிப்பதாகச் சூன் கூறியுள்ளார்[பரிந்துரைக்கிறது என்பதை இவர் ‘நிரூபிப்பதாக’க் கூறியிருக்கிறார். கர்வேச்சரை உருவாக்கிப் பயன்படுத்திக் கடவுள் இருப்பதையும் நிரூபித்தவர் யார்? எப்போது?]

டாக்டர் வில்லி சூன் ஒரு வான் இயற்பியல்(Astrophysicist) விஞ்ஞானி. மலேசியாவைச் சேர்ந்த இவர் ஹார்வர்ட் ஸ்மித்ஸோனியன் செண்டர் ஃபார் அஸ்ட்ரோ பிஸிக்ஸ் பிரிவில் நீண்ட காலம் ஆய்வு நடத்தியவர்.

நாம் நினைப்பதைவிட அறிவியலும் இறை நம்பிக்கையும் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன என்றும் இவர் கூறியிருக்கிறார்[‘அறிவியல் விளக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பது பிரபஞ்சம்’ என்று மேலே குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்சமே அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கையில், அறிவியலும் இறை நம்பிக்கையும் மிக நெருங்கிய தொடர்புடையவை என்று இவர் கூறியது எப்படி? முற்றிலும் முரண்பட்ட கூற்று இது.

டக்கர் கார்ல்ஸன் நெட்வொர்க்(Tucker Carlson Network) தளத்திற்குக் கொடுத்த ஒரு பேட்டியில், அவர் “கணிதக் கொள்கைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் பிரபஞ்சமானது ஒரு குறிக்கோளுடனேயே படைக்கப்பட்டிருக்கிறது[என்ன குறிக்கோள்?] என்ற கருத்தை ஆதரிக்கின்றன” என்று கூறியிருப்பதாக இவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியான பால் டிரக்(Paul Dirac), 1928இல் ஆண்டி-மேட்டர்[மேட்டர்>பொருள்; ஆண்டி> எதிரானது. எதுவும் இல்லாமலிருப்பதா? அதாவது, வெற்றிடமா? இப்படியான ஒரு நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?]  இருப்பதாகக் கணிதத்தின் வாயிலாகக் கூறி இருப்பதையும்[இவருடைய கூற்றே குழப்பமானது. இந்த லட்சணத்தில் சப்பைக்கட்டு வேறு] இவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இவர் தரும் கூடுதல் ஆதாரங்கள் விஞ்ஞானிகளுக்கே புரியுமா என்பது சந்தேகம். 

சாமானியர்களைக் குழப்பத்தை ஆழ்த்தும் இம்மாதிரிக் கருத்தாக்கங்களை ஊடகங்கள் மொழியாக்கம் செய்து வெளியிடுவதால், அவற்றிற்குப் பயனுண்டோ இல்லையோ[பார்வை எண்ணிக்கை கூடாது; குறையும்], சில அரைவேக்காடு விஞ்ஞானிகள் பிரபலம் ஆகிறார்கள் என்பது மறுக்க இயலாதது.

*(Closed Spacetime Curvature> பிரபஞ்சம் ‘முடிவு இல்லாதது’ அல்ல; மாறாக ஒரு குறிப்பிட்ட அளவும்  வடிவமும் கொண்டுள்ளது என்பதை பரிந்துரைக்கிறது)

          https://kalkionline.com/science-and-technology/god-exists-scientist-explains-with-mathematical-proof