புதன், 29 ஏப்ரல், 2020

நான் ‘பரமசிவம்’ ஆன கதை!

முன்னிரவு.

நான்[‘பசி’பரமசிவம்] அப்போது ஒரு மாதக் குழந்தை.

வயிறு முட்டத் தாய்ப்பால் குடித்து அவர் மடியிலேயே உறங்கிக்கொண்டிருக்கிறேன்.

வாசல் பக்கமிருந்து, “பசிக்குது தாயே. எதுவும் தர்மம் பண்ணுங்க” என்ற குரல். 

என்னைத் தரையில் கிடத்திவிட்டு, அன்று மீதமாகியிருந்த கொஞ்சம் கம்மஞ்சோற்றுடன் வெளியே போகிறார் என் அன்னை. தூக்கம் கலைந்து வீறிட்டு அழுகிறேன் நான்.

“தாயே, குழந்தை அழுகிறதே. ஆணா, பெண்ணா? மாசம் எத்தனை?” என்று விசாரிக்கிறார் நெற்றி நிறையத் திருநீர்ப் பட்டையும், கழுத்து கொள்ளாமல் உருத்திராட்சக் கொட்டையுமாகக் காட்சியளித்த சாமியார்.

“ஆண் குழந்தை. பொறந்து ஒரு மாசம் ஆச்சு” என்கிறார் அன்னை.

“சந்தோசம் தாயே. நான் சிவபக்தன் சொல்லுறேன், குழந்தைக்குப் ‘பரமசிவம்’னு பெயர் வையுங்க” என்கிறார் சாமியார். அம்மா அளித்த சோற்றை உண்டுவிட்டு, “ரொம்பக் களைச்சுப்போயிருக்கேன். இன்னிக்கி ராத்திரி இந்தத் திண்ணையில் படுத்துக்கலாமா?” என்கிறார். 

அம்மா “சரி” சொல்கிறார். விடியற்காலையில் வெளியே வந்து பார்த்தபோது சாமியாரைக் காணவில்லை.

நடந்ததை அம்மா அப்பாவிடம் சொல்கிறார். இருவருமாக, “கடவுளே வந்து எங்க பிள்ளைக்குப் பெயர் சூட்டினார்”னு ஊர் முழுக்கச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள்.

‘பரமசிவம்’ என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி இது.

நீங்கள் நம்பவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
இவரும் அவதாரம்தான்!
[ரிஷிகள்: இவர்கள் பிரம்மனின் i. கடவுளிடமிருந்து வரும் ஒலிகளைக் கிரஹிச்சி வேதத்தை வடிவமைத்தவர்களாம். முக்காலமும் உணர்ந்தவர்களாம்!]. 

“ஐயா, தங்களுக்கு ‘வேதாத்திரி’ என்ற பெயர் பெற்றோர் வைத்ததா, ஆன்மிகத் துறைக்கு வந்த பிறகு நீங்களே வைத்துக்கொண்டதா?”[நூல்: ‘அருள்தந்தையின்   பதில்கள்’, வேதாத்திரி பதிப்பகம், 2ஆம் பதிப்பு, 1997] என்னும் கேள்விக்கு ‘வேதாத்திரி மகரிஷி’ அளித்த பதில் கீழே.

“ஒரு நாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார். ஏழ்மையிலும் தங்களுக்கு இருந்த உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளார்கள் என் பெற்றோர். அப்போது உள்ளே குழந்தை அழுவது கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம், ஒரு வாரத்துக்கு முன்பு ஆண் மகவு பிறந்துள்ளதை என் தாயார் கூறியுள்ளார். குழந்தைக்கு ‘வேதாத்திரி’ என்று பெயர் வைக்குமாறு அவர் கூறினார்; திண்ணையில் படுத்துறங்கினார். காலையில் அவரைப் பற்றி விசாரிக்க முனைந்தபோது திண்ணையில் அவரைக் காணவில்லை. அவர் சொன்னபடியே வேதாத்திரி என்று எனக்குப் பெயர் சூட்டப்பட்டது.”

கடவுள் ஒரு சாது வடிவில் வந்து தனக்குப் பெயர் சூட்டிப் போனதாகச் சுற்றிவளைத்துச் சொல்லியிருக்கிறார் வேதாத்திரி. [மகான்கள் குறித்த இம்மாதிரிக் கதைகள் ஏராளம்]. இதை நம்மவர்கள் நம்புகிறார்கள். நான் சொன்ன கதையை[உண்மைக் கதைங்க] நம்ப மாட்டார்களா என்ன?!

நன்றி.
========================================================================



   




செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கால்களிலும் தோள்களிலும் விலங்கு சுமந்த பெரியார்!!!

‘பெரியார் பற்றிப் பெரியார்’[திராவிடர் கழக வெளியீடு] என்னும் நூலிலிருந்து பதிவு செய்த ஒரு நிகழ்வு. படியுங்கள். பெரியார் மீதான உங்களின் மதிப்பு பல மடங்கு உயரும்.

'என் வாழ்நாளில் எப்போதாவது ஜாதிமதத்தையோ கடவுளையோ உண்மையாக நம்பினேனா என்று இப்போதும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை.

என் ஆறாவது வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அது, ஈரோடு டவுனுக்குச் சற்று விலகியே இருந்தது. அதைச் சுற்றி வாணியச் செட்டிமார்களும், வேதக்காரர்களும், மூங்கிலில் பாய், முறம் பின்னுகிறவர்களும், சாயபுகளும் வசித்தார்கள். அந்தக் காலத்தில், இவர்களின் வீடுகளில் மற்ற ஜாதிக்காரர்கள் உணவு உண்ண மாட்டார்கள். ஆகையால், நான் பள்ளிக்கூடம் போகும்போது, “பொழங்கக்கூடாத ஜாதியார் வீடுகளில் தண்ணீர்கூடக் குடித்துவிடாதே” என்று சொல்லி அனுப்புவார்கள்.....

.....நானோ மேற்குறிப்பிட்ட, ஒதுக்கப்பட்ட ஜாதியார் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடிப்பேன்; அவர்கள் வீட்டுப் பண்டங்களையும் வாங்கிச் சாப்பிடுவேன்.

இந்த விசயம் எங்கள் வீட்டை எட்டியது. “சீ சீ...இனிமே அங்கெல்லாம் சாப்பிடாதே” என்பதோடு அப்பா நிறுத்திக்கொண்டார். தாயாரோ, குடியே முழுகிவிட்டது போல் துயரப்பட்டார். 

அப்புறமும் குறிப்பிட்ட அந்த ஜாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதும் பள்ளிக்குப் போவதும் தொடர்ந்தது.

என் பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்காததால் ஒரு காலில் விலங்கிடப்பட்டேன். அதன் பிறகும் நான் மாறவில்லை. ஒரு கால் விலங்குடன் அந்த ஜாதிப் பிள்ளைகளுடன் சுற்றினேன். என்னுடைய இன்னொரு காலுக்கும் விலங்கு பூட்டினார்கள். தோள்களிலும் விலங்கு. அவற்றைச் சுமந்துகொண்டே நான் விளையாடப் போவதும் தொடர்ந்தது.

அப்புறம் சர்க்கார் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன்.

படிப்பு முடியாத நிலையிலேயே கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார் என் தாப்பனார்.'
========================================================================


திங்கள், 27 ஏப்ரல், 2020

கவர்ச்சிப் பெண்களும் கரோனா வைரசும்!![மறுபதிப்பு]

பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து  நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு பேசினார்.
அப்போது அவர், “பெண்கள் செய்யும் தவறுகளால் தான் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் நாட்டை பற்றிக்கொண்டுள்ளதாக சர்ச்சையாக பேசினார்.. ஆனால் பிரதமர் இம்ரான் கான் எதுவுமே சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். இதனால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது.. ஆம்,  அவரது பேச்சை பிரதமர் இம்ரான் கான் தடுத்திருக்க வேண்டும் எனக் கூறும் பெண்கள் அமைப்புகள், அதுகுறித்து எந்த கருத்துமே பிரதமர் கூறாமல் சென்றது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சர்ச்சை தொடர்பாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைச் சாடிய மவுலானா, பின்னர் அதற்காகத் தான் வருந்துவதாகக் கூறினார். இருப்பினும், இதுவரையில் பெண்கள் குறித்துச் சர்ச்சையாகப் பேசியதற்கு மவுலானா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிரபல செய்தித்தாள் நிறுவனமான ‘டான்’ தன் தலையங்கத்தில், இது போன்ற அறிக்கைகள் கவலையாக இருக்கிறது. அவை, ஒரு உயர் மட்ட மேடையிலிருந்து வெளிவருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளான காரியம் என்று கூறியுள்ளது. பெண்களைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துக்களை கூறிய மதகுரு மேடையிலேயே திருத்தப்படவில்லை என்பது ஒரு “அவமானம்” என்றும்  டான் சுட்டிக்காட்டி கூறியுள்ளது.. மேலும் இந்தச் சர்ச்சைக்குப் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் மதகுருவான  மவுலானாவுக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
[செய்தி வெளியிட்ட ஊடகம்: https://www.updatenews360.com/world/their-wrongdoings-pakistan-cleric-blames-scantily-dressed-women-for-coronavirus-pandemic-270420/

புரியாததும் புரிந்ததும்[எனக்கு]

மதகுரு ஜமீல், குறைந்த அளவில் ஆடை உடுத்துவதால், கரோனா பரவுகிறது என்று பேசியிருக்கிறார்[இதுவும் ஒரு ஊடகச் செய்திதான்]. ஊடகங்கள் அதைச் செய்தியாக வெளியிட்டன. மனித உரிமை ஆணையம் மதகுருவைக் கண்டித்துள்ளது.

இது செய்தி, சரி.

பெண்கள் குறைவாக ஆடை உடுத்துவதற்கும் கரோனா பரவுவதற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. புரியும் வகையிலான விளக்கத்தை ஊடகங்களோ, மனித உரிமை ஆணையமோ வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இரண்டுக்குமான தொடர்புதான் என்ன? கொஞ்சம் யோசித்ததில் புரியவில்லை. சற்றே ஆழ்ந்து யோசித்தபோது கீழ்க்காணும் வகையிலான ஒரு விளக்கம் என்னுள் உதித்தது.

*குறைந்த உடையுடுத்து[கவர்ச்சியாக] கடைவீதி போன்ற இடங்களுக்குச் செல்லும் பெண்களைக் கண்டு ரசிக்க ஆண்கள் பெருமளவில் திரள்வார்கள். அதன் விளைவாக நெரிசல் ஏற்பட்டு, கரோனா விரைந்து பரவுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்னும் அர்த்தத்தில் மதகுரு ஜலீல் பேசியிருக்கக்கூடும்*

மதகுருவுக்கும் மனித உரிமை ஆணயத்துக்குமான விவகாரம் இது. நமக்கு ஏன் வம்பு என்று நினைத்து எழுதிய பதிவை[இதே தலைப்பில்] நீக்கிவிட்டேன். தற்செயலாகத் தமிழ்ச்சரத்தில் நுழைந்தபோது, நீக்கப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுவிட்டதை அறிய முடிந்தது. குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, முன்பு எழுதியதையே மீண்டும் பதிவாக்கியிருக்கிறேன்.

நன்றி.
======================================================================


ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அனைத்துக்கும் ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ்!!!

[ஒரு கையால் ஆசீர்வாதம் பண்ணுகிறவர் ‘மகான்’. இரண்டு கைகளாலும் பண்ணுகிறவர் ‘அவதாரம்’!]

கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பலர். அதே கடவுளை வைத்து உலகளவில் பிரபலம் ஆனவர்கள் மிகச் சிலர். அந்தச் சிலரில் நம்ம ஊர் ஜக்கி வாசுதேவும் ஒருவர். சுயம்புவாக, ‘சத்குரு’ ஆனவர்.

‘அனைத்துக்கும் ஆசைப்படு’ என்னும் தலைப்பில், ஆனந்த விகடனில் இவர் எழுதிய தொடர் கட்டுரையை அதே விகடன் 2005இல் நூலாகவும் வெளியிட்டது. அது, பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

அனைத்துக்கும் ஆசைப்படு என்று ஜக்கியார் சொன்னது தனக்கும் சேர்த்துத்தான் என்பதை, அதில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்[கூகுளில் ஜக்கி வாசுதேவ் என்று தட்டச்சுங்கள்; பிரமிப்பீர்கள்!].

வாழும் வகை குறித்துத் தன் ரசிகர்களுக்கு ஏராள அறிவுரைகள் வழங்கும் ஜக்கி வாசுதேவ், கடவுள் குறித்த தன் எண்ணங்களையும் பதிவு செய்திருக்கிறார். வழக்கம்போல, நானும் என் சந்தேகங்களைக் கேள்விகளாக்கியிருக்கிறேன்.

‘இயற்கைச் சீற்றங்களால் உயிர்கள் பலி வாங்கப்படுவதை வேடிக்கை பார்ப்பாரா கடவுள்?’ என்று ஓரிடத்தில் கேள்வி எழுப்பி, அவர் கருணை வடிவானவர் என்று பதில் தருகிற ஜக்கியார், பிறிதோரிடத்தில், ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களுக்காகக் கடவுள் தன் சுண்டுவிரலைக்கூட நகர்த்த மாட்டார்’ என்று சொல்லி நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறார்.

‘கால்களையும் கண்களையும் உங்கள்[மனிதர்களை] உடம்பில் வைத்துப் படைத்து உங்களைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார் கடவுள்’ -ஜக்கி

எதற்கு அனுப்பினார்? -நான்.

‘உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். கடவுள் கையில் கொடுக்காதீர்கள்’ -ஜக்கி

கை கொடுக்க நீங்கள் இருக்கும்போது கடவுளிடம் ஏன் கொடுக்கிறோம்?!

‘கடவுளை நீங்கள் வளர்க்கும் நாயைப் போல நினைத்துவிட்டீர்கள். நாய்க்குப் போடும் பிஸ்கட்டைப் போல ஆண்டவனுக்கு எதையோ எறிவீர்கள். அவரிடம் ‘அதைக் கொடு, இதைக் கொடு’ என்று மனசுக்குத் தோன்றியதையெல்லாம் கொண்டுவரச் சொல்வீர்கள்[இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ வார்த்தை ஜாலம் புரிகிறார்].’ -ஜக்கி

நீங்கள் எதையும் கேட்பதில்லையா? அப்புறம் எதற்குப் பிரமாண்டமான  ஆதியோகி சிலை? பூஜை, ஆட்டம் பாட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம்?

உங்களுக்குப் பிரியமான காரியம் எதுவோ அதை முழுமையாகச் செய்தால் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்’ -ஜக்கி 

கடவுளை நெருங்கிட்டா கேட்பதெல்லாம் கொடுப்பாரா அவர்?

‘உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்தான் கோயிலுக்குப் போகிறீர்கள். நேர்மையாக இருங்கள். கடவுளிடம் பேரம் பேசாதீர்கள்’ -ஜக்கி

படைச்சவர் அவர். அவரிடம் பேசாம உங்களிடமா பேரம் பேசுவது?

‘தெய்வச் சக்தியைத் தேக்கி வைக்க மற்ற வடிவங்களைவிட லிங்கம்தான் சிறந்தது. தியான லிங்கம் வெறும் கற்சிற்பமல்ல. அதில் அளப்பரிய சக்தி உயிரோட்டத்துடன் இயங்குகிறது. மதங்களுக்கும் இதற்கும் தொடர்பு ஏதுமில்லை’ -ஜக்கி

நிறையவே தேக்கி வைத்திருக்கிறீர்களா? அந்தச் சக்தியை வைத்து மக்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன?
=======================================================================


சனி, 25 ஏப்ரல், 2020

கண்ணதாசனின் புண்மொழிகள்!!!

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ இவர் படைத்த, பல்லாயிரக் கணக்கில்
விற்பனையான ஒரு நூல். அதில், ’நாத்திகவாதம்’ என்னும் தலைப்பிலான பகுதியை மீண்டும் படிக்க நேர்ந்தது.

அதன் விளைவாக என் மனதில் முகிழ்த்த சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்பதிவை எழுதக் காரணம்.

‘கடவுள் இல்லை என்று மறுப்பவன் காலகாலங்களுக்கு உயிரோடு இருப்பானானால், ‘இல்லை’ [கடவுள் இல்லை] என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்’ என்று கட்டுரையின் தொடக்க நிலையிலேயே  திருவாய் மலர்ந்தருளுகிறார் கவிஞர்.

‘அனைவரும் [நாத்திகர்கள்] பெறவேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்கிறார், இந்தச் சாகாவரம் பெற்ற கவிஞர்.
நாத்திக வாதம் பேசியவர்கள் போய்விட்டார்கள், சரி. ஆத்திகர்கள்? யோசித்தாரா இந்தத் தத்துவ மேதை?

ஆத்திகராய் வாழ்ந்த  உத்தமர்கள் எல்லாம் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இன்னும் சாகாமல் நம்மில் ஒருவராய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர், நம்முன் தோன்றி, அந்தப் புண்ணியவான்களையெல்லாம் கண்ணாரக் காணச் செய்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாரா?

‘மேற்கத்திய நாடுகளில், கிறித்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறித்துவ மதம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது  என்கிறார்[உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் கடவுள் மறுப்பாளர்கள், அல்லது, அவரை ஏற்காதவர்கள் என்பதை அறியாத கவிஞர் பரிதாபத்துக்குரியவர்].

மேலும் சொல்கிறார்: ‘இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம், அது சாத்விக மதம்’.

பல்லவர் காலத்தில், ஆயிரக் கணக்கில் சமண மதத்தவரை கழுவில் ஏற்றிக் கொன்றது இந்துமதம்தானே என்ற உண்மையை, எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞரைக் கண்டு பிடித்து யாரேனும் எடுத்துச் சொல்வார்களா? 

நாத்திகத்தின் முக்கிய நோக்கமே கடவுள் மறுப்புதான் என்ற உண்மையையும் அவர்கள் அவரிடம் கூறுவார்களா? 

ஏற்கனவே நாத்திகர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிற கவிஞர், நாத்திகத்தில் போற்றத் தக்க புத்தகம் இல்லை என்றும் சாதிக்கிறார்.

’போற்றத்தக்க’ புத்தகம்தான் இல்லை என்கிறாரா, இல்லை, நாத்திகம் பற்றிப் ‘புத்தகமே இல்லை’ என்கிறாரா? அவரைக் காணக் கொடுத்து வைப்பவர்கள் கேட்டுச் சொல்வார்களா?

இங்கர்சால் போன்றவர்கள் நாத்திக வாதத்தில் உறுதியாக இல்லையாம்.
அது என்ன உறுதியாக இருப்பது? அவர் நாத்திகர் என்பதிலும் கவிஞருக்குச் சந்தேகமா?

கடவுளை உறுதியாக மறுப்பவர்கள் என்று, பெர்னார்டு ஷா, சிக்மண்ட் ஃபிராய்டு, ரஸ்ஸல், நேரு, பெரியார், கோவூர் என்று நிறைய அறிஞர்களைச் சொல்கிறார்களே, அவர்களில் சிலரையாவது இந்த உத்தம சீலருக்குத் தெரியுமா?

நாத்திகனாக இருந்தவரை என்னால் அதிகம் பாட முடியவில்லை என்கிறார்!

ஓ.........கவிஞரே, கவிதை எழுதுவதற்கும் ஆத்திக நாத்திகம் பேசுவதற்கும் என்னய்யா சம்பந்தம்?
அர்த்தமுள்ள இந்துமதம் | தினகரன்
ஆத்திகன் மனசு மலர் போல மென்மையானது; கலையுணர்வு மிக்கது. நாத்திகன் மனது கருங்கல் பாறை போன்றது; உணர்ச்சியற்றது என்கிறீரா? நீர்தான் இன்னும் உயிர் வாழ்கிறீரே, நேரில் வந்து சொல்லுமய்யா.


கவிஞர் இன்னும் என்னவெல்லாம் திருவாய் மலர்கிறார் பாருங்கள்.....

‘நாத்திகன் பண்பாடு அறியாதவன்; பவித்திரமில்லாதவன்; யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்துவிடுவான்’, வாய்ப்புஅமைந்தால்

‘எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன் நாத்திகன்’

இதற்கு மேலும் இந்த மனிதர் போதையில் [புகழ் போதை என்று வைத்துக் கொள்ளுங்கள்] கிறுக்கியிருப்பதையெல்லாம் எடுத்துக் காட்டி விமர்சனம் செய்ய என் மனம் இடம் தரவில்லை.ந்த ஆள் உயிரோடு இல்லை என்பது முக்கியக் காரணம்

வாய்ப்பு அமைந்தால், இவர் மனம் போனபடியெல்லாம் கிறுக்கிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை இனியொரு முறை  படித்துவிடுங்கள்.
========================================================================

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஒரு வேளை உணவுக்குப் பாத்திரம் கழுவிய ஜவஹர்லால் நேரு!!!

காந்தியடிகள் நடத்திய ‘வார்தா’ ஆசிரமத்தில் எவரும் உழைக்காமல் ஒரு பிடி உணவுகூட உண்ண முடியாது. அப்படி உழைத்து உண்பதற்குச் ‘சிரமதானம்’ என்று பெயர்.

காந்தியைப் பார்ப்பதற்காக, அன்னிப்பெசண்ட் அம்மையார், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய்ப் படேல், பாபு ராஜேந்திரப் பிரசாத், ஜவகர்லால் நேரு, கான் அப்துல் கபார் கான் போன்ற தேசத் தலைவர்கள் பலரும் வந்துபோவார்கள்.

அவர்களில் எவராயினும், ஆசிரமத்தில் உணவு உண்ண வேண்டுமாயின், ஏதாவது ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்பது நடைமுறை.

ஒருமுறை காந்தியைச் சந்திக்க வந்த நேரு, பசி காரணமாக நேராக உணவருந்தும் பகுதிக்குச் சென்றுவிட்டார். “ஏதாவதொரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உணவுண்ண வர வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா” என்றார் ஆசிரமப் பணியாளர் நேருவிடம்.

“அடடே, மறந்துவிட்டேனே” என்ற நேரு, ஆசிரமத்தின் பின்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த, சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களையெல்லாம் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி வைத்தார். அதன் பிறகே ஆசிரமத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

இது, காந்தியடிகள் தாம் மேற்கொண்ட கொள்கையில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

அடுத்து.....
உழைப்பின் அருமையையும் அதன் அரிய பயனையும்  வலியுறுத்தும் வகையிலான, டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.

ரஷ்ய நாட்டு அறிஞர் டால்ஸ்டாயைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். “நான் சுயமாகத் தொழில் செய்து பிழைக்க விரும்புகிறேன். பண உதவி செய்யுங்கள்” என்றான்.

சற்றே யோசித்த டால்ஸ்டாய், “உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். உனது வலது கையை வெட்டித் தர முடியுமா?” என்றார் அந்த இளைஞனிடம்.

“கையையா? ஐயோ...இது எப்படி முடியும்?” என்று அலறினான் அவன்.

“சரி, ஆயிரம் ரூபிள் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை மட்டுமாவது வெட்டித் தர முடியுமா?” என்றார் அறிஞர்.

“என்ன நீங்கள். கையைக் கொடு, காலைக் கொடு என்கிறீர்கள். இன்னும் அதிகம் ரூபிள் தருகிறேன், ஒரு கண்ணைக் கொடு என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்று மிகுந்த பதற்றத்துடன் கேட்டான் அவன்; அங்கிருந்து மெல்ல நகரத் தலைப்பட்டான்.

அவனைத் தடுத்து நிறுத்திய டால்ஸ்டாய், “இளைஞனே, உன்னிடம் எத்தனை விலை மதிக்க முடியாத உறுப்புகள் இருக்கின்றன என்பது புரிந்ததா? இவையே நீ வாழ்க்கையில் உயர்வதற்கான அரிய மூலதனம். இவற்றை உரிய முறையில் பயன்படுத்தி உழைத்திடு. நிச்சயம் முன்னேறுவாய்” என்றார்.
========================================================================
05.01.2020 ‘ராணி’ வார இதழில், முனைவர் ‘இளசை சுந்தரம்’ அவர்கள் எழுதும் தொடரிலிருந்து எடுத்தாண்டவை இந்நிகழ்வுகள். 


புதன், 22 ஏப்ரல், 2020

தாஜ்மகால் இடியும்! பாகிஸ்தான் மூன்றாக உடையும்!! இன்னும்.....

ஜோதிடம் பற்றி அறிந்தவர்களில் பெரும்பாலோருக்கு, பிரபல ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலனைத் தெரிந்திருக்கும். 1999இல் வெளியான ‘தினமணி’ தீபாவளி மலரில் ‘வானியலில் வரும் நூற்றாண்டு’ என்னும் தலைப்பில் நீண்ட பெரிய கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.
‘இந்நூற்றாண்டு காணப்போகும் சில முக்கிய நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். விஞ்ஞானப்பூர்வமாகவும், இணையற்ற பண்டைய ஜோதிட நூல்களின் துல்லிய விதிகளின்படியும் பலன்களை நாம் கணித்துள்ளதால் கண்டறியப்பட்ட முடிவுகளில்[நிகழ்வுகள்] தவறு நிகழ வாய்ப்பே இல்லை’ என்று குறிப்பிட்டு, இந்நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளுக்கான பட்டியலைத் தந்துள்ளார்.

அவர் முக்கிய நிகழ்வுகள் என்று குறிப்பிட்டவற்றுள் எனக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

1.உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் தில்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழும்.

2.பாகிஸ்தானில் உள்நாட்டுப் பூசல்களும், அமைதிக் குறைவும் அதிக அளவில் ஏற்பட்டுப் பாகிஸ்தான் மூன்று பகுதிகளாகப் பிளவுபடும். ஒரு பகுதி ஈரான், ஆப்கானிஸ்தான்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கடவுளின் படைப்பும், மதவாதிகள் போட்ட ‘தப்புக் கணக்கு’ம்!!!

உலக உயிர்கள் படைக்கப்பட்ட முறை குறித்து மதங்கள் பலவும் தத்தம் கொள்கைகளை எடுத்துரைத்துள்ளன.

முதல் இரண்டு நாட்களில் பகல் இரவு, வானம், பூமி ஆகியவற்றையும், மூன்றாம் நாளில் புல்பூண்டுகள், மரங்கள் போன்றவற்றையும், நான்காம் நாளில் ஊர்வனவற்றையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறவைகள் ஆகியனவற்றையும், ஆறாம் நாளில் முதல் மனிதனையும் மங்கையையும் கடவுள் படைத்தார்’ என்கிறது கிறித்தவ மதம்.

நீர், காற்று, பூமி ஆகியவற்றை முதலிரண்டு நாட்களிலும், கடல் வாழ் உயிரினம், ஊர்வன முதலானவற்றை மூன்றாம் நாளிலும், ‘ஜான்’ என்னும் தேவதையை நான்காம் நாளிலும், மற்ற இரு நாட்களில், முதல் மனிதன் ஆதாமையும், முதல் மங்கை ஏவாளையும் அல்லா படைத்தார் என்று இஸ்லாம் கூறுகிறது.
இந்த ‘நாள்’ கணக்கையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பரமாத்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட ‘பிரஹிமா’ 16 லட்சம் கோடி ஆண்டுகள் வாழ்ந்து அனைத்து உயிர்களையும் படைத்ததாக இந்து மதம் சொல்கிறது[இது, தனி ஆய்வுக்கு உட்பட்டது].

கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் குறிப்பிடுகிற ‘முதல் இரண்டு நாட்கள்’ நம் மனதில் மிகப் பெரியதொரு சந்தேகத்தை எழுப்புகின்றன.

பூமி, சூரியன் ஆகியவற்றின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் நாள் கணக்கிடப்படுகிறது.

கடவுள், தம் படைப்புத் தொழிலை மேற்கொண்ட தருணத்தில் நாள் கணக்கே இல்லை[பூமி இல்லாததால்]. உண்மை இதுவாக இருக்கையில்.....

மேற்கண்ட இரண்டு மதங்களும், ‘இரண்டு நாட்களில்’ என்று சொன்னது எந்த அடிப்படையில்?

ஈடுஇணையில்லாத மாபெரும் சக்தி வடிவம் கடவுள் என்கிறார்கள். அவர் நினைத்தால் நொடியினும் நொடிப்பொழுதில் எதையும் ஆக்கவோ அழிக்கவோ முடியும். ரெண்டு நாளில் இதைப் படைத்தார், நாலு நாளில் அதைப் படைத்தார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது எள்ளி நகையாடற்குரியது.
=======================================================================

திங்கள், 20 ஏப்ரல், 2020

இதோ ஒரு கரோனா மாந்திரீகர்! அடுத்து...

உத்தரப் பிரதேசம், வாரணாசி பகுதியில் வாழும் ‘சஞ்சய் திவாரி’ என்னும் ஜோதிடர், ரூ11/= கட்டணத்தில், மந்திரம் சொல்லிக் கரோனா நோயை விரட்டியடிப்பதாகக் கூறிவந்துள்ளார். தன் கைபேசி எண்ணை இணைத்து விளம்பரமும் செய்துள்ளார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படவே, செய்தியறிந்த காவல்துறையினர் இவரைக் கைது செய்து, காவலில் வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இது, இன்றைய ‘செய்திப்புனல்’ செய்தி. [https://www.seithipunal.com/india/fraud-man-arrest-when-corona-virus-complete-solution-of\

இவர் ஒரு ஜோதிடர்.

கரோனாவின் கோரதாண்டவம் தொடருமேயானால்.....

இதைக் குணப்படுத்துவதற்கென்றே பெரிய பெரிய மகான்களெல்லாம் வருகைபுரிய இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் காவல்துறையால் கைது செய்ய முடியாது. காரணம்.....

அவர்கள் கடவுளின் அவதாரங்கள்!

corona-comedies
இந்த ஆள் https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_28.html கைது செய்யப்பட்டாரா?
========================================================================

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பிரதமர் ‘மோடி’க்குக் கல்கி பகவான்[மகா விஷ்ணு] எழுதிய கடிதம்!

corona-comedies
'பாரதப் பிரதமர் மோடிஜியின் கவனத்திற்கு, அவசர, அவசிய செய்தி! கரோனா என்னும் கொடிய விஷக் கிருமியை உலகம் முற்றிலும் ஒழிப்பதற்கு மகா விஷ்ணுவின் கலியுக அவதாரமான தெய்வீக மகாகுரு ஸ்ரீ சுவாமிகள் (கல்கி அவதாரம்) இறை நிலையில் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடிஜியை நேரில் சந்திக்க விரும்புகிறார். அழைக்கின்றார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லவும், தீர்வு செய்யவும் தயாராக இருக்கிறார். மோடிஜி இந்த[த்] தெய்வீக மகா குருவை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கும்படி உலக மக்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

மேலும் விவரங்களுக்கு, ஏ.எஸ்.எஸ்.ஸ்ரீராஜராஜேஸ்வரி (ஜோதிடரின் மனைவி), சிவகாசி" -இவ்வாறான ஒரு கடிதத்தை இந்த ஆளின் சீடர் ஒருவர் பிரதமருக்கு அனுப்பியிருக்கிறாராம்[இந்து தமிழ், 19.04.2020]

//எண்கணிதப்படி இதோட (CORONA) கூட்டு எண் 7. உயிர் பலியும், கட்டுக்கு அடங்காத நிலையையும் கொடுக்கும் என்பதே அதன் பலனாகும்.

அதுவே, கரோனா ( KOROONAA) என்று எழுதினால் கூட்டு எண் 5 வரும். சாந்த நிலையை, உயிர்[ப்] பலி இல்லாத நிலையை உருவாக்கும் என்பதே இதன் பலன். எனவே, இந்தியாவில் அதன் பெயரை கரோனா என்று மாற்றி, அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வேண்டும். 130 கோடி மக்களும் புதிய பெயரை உச்சரித்து, கோடிக்கணக்கான பத்திரிகை[ப்] பிரதிகளிலும் அந்தப் பெயர் அச்சிடப்படும்போது அதன் பலனை நாம் கண்கூடாகப் பார்ப்போம். கரோனாவின் ரத்த வெறியும் அடங்கி, பரமசாதுவாகிவிடும்// என்கிறானாம் இந்த ஆள்.

கடவுளின் பெயரால் எதைச் சொன்னாலும் நம்புகிற மூடர்கள் நிறைந்த நாடு இது என்பதால், தன்னைக் கல்கி அவதாரம் என்று சொல்லி, இந்த நாட்டின் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறான்ர் இந்த ஆசாமி.

பிரதமர் விரும்பினால்.....

ஒரு தேதியை அறிவித்து,  "எண் கணிதம் ஒருபுறம் இருக்கட்டும், கல்கி அவதாரம்னு சொல்லிக்கிற நீ, முதலில் கரோனாவைப் பூண்டோடு அழித்துக் காட்டு"  என்று இந்த நபருக்கு அறிவுறுத்தலாம். அதைச் செய்யத் தவறினால்.....

கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இந்தப் பொய்யனுருக்கு அதிகபட்சத் தண்டனை கிடைக்க வழி செய்யலாம். அது, இம்மாதிரி அண்டப் புளுகர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும்.

இந்த ஆள் கடிதம் எழுதியது உண்மையா? அது பிரதமருக்குக் கிடைத்திருக்குமா? ‘ஆம்’ எனின், நம் பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?

காத்திருப்போம்.

கொசுறுச் செய்தி: கலைஞர் மு. கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, ‘காவிரிப் பிரச்சினை தீர, தமிழ்நாடு மாநிலம் என்பதை, தமிழ்நாடு ஸ்டேட் என்று மாற்ற வற்புறுத்திக் கடிதம் எழுதினாராம் இந்த எண்கணிதப் புளுகன்ர்.

சனி, 18 ஏப்ரல், 2020

ஆண்மை ‘எழுச்சி' பெறாமையும், சிகிச்சை முறைகளும்!!

‘ஆண்மைக் குறைவை எதிர்கொள்ளும் ஆடவரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது’ என்னும் கவலைக்குரிய[?] செய்தியை அவ்வப்போது ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இம்மாதிரிச் செய்தியில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது என்பது குறித்து நான் யோசித்ததுண்டு; பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொழுதைக் கழிப்பதற்காக நான் சேகரித்து வைத்துள்ள பருவ இதழ்க் குப்பையைக் கிளறுவது அன்றாட வழக்கம் ஆகிவிட்டது.

குப்பைக் குவியலிலிருந்து இன்று காலையில் தேர்வு செய்து வாசித்தது, ‘மீனாட்சி மருத்துவ மலர்’[பிப்ரவரி, 2005].

ஆண்மைக் குறைவு ஆடவரிடையே அதிகரித்துவருவது உண்மையாயின், மருத்துவ மலரில் நான் வாசித்த குறிப்புகள் பாதிக்கப்பட்டோருக்குப் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில், அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

ஆண்மைக்குறைவு[Vasculogenic Erectile Dysfunction] ஏன்?
ஆடவனின் மனதில் புணர்தல் வேட்கை உண்டாகும்போது, இயல்பான நிலையில் இருக்கும் ஆணுறுப்பின் ரத்த நாளங்களில் குருதி ஓட்டம் அதிகபட்ச அளவை எட்டுகிறது. அதன் விளைவாக அது எழுச்சி பெறுகிறது. உடலுறவு முடியும்வரை, அந்த எழுச்சி நீடிக்க வேண்டுமாயின் குழாய்கள் புடைக்குமளவுக்கு  நிரம்பிய ரத்தம் வடியாமல் இருத்தல் வேண்டும்.

இதற்கு மாறாக, சில ஆண்களுக்கு ஆணுறுப்புக் குழாய்களில் ரத்தம் விரைந்து பரவுவதில்லை. வேறு சிலருக்கு, ரத்தம் பரவி உறுப்பு எழுச்சி பெற்றாலும் அந்நிலை நீடிப்பதில்லை. உள்ளே பரவிய ரத்தம் அங்கேயே நிலைத்து நிற்காதது காரணம்[நரம்புத் தளர்ச்சியும் காரணமாக இருத்தல்கூடும்]  என்கிறார் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் Dr.முரளி.

சிகிச்சை முறைகள்;
1. மாத்திரைகள் மூலம் சரிசெய்தல்.
2.இண்ட்ரா கேவர்னஸல்[Intracavernosal Injections] ஊசி மருந்தைச் செலுத்துதல்.
3.வாக்குவம் பம்ப்[Vaccum Pump] முறையில் விறைப்பை உண்டுபண்ணுதல். எழுச்சி பெற்ற உறுப்பின் அடிப்பாகத்தில் ரப்பர் பேண்ட்டைப் பொருத்திக்கொள்வதன் மூலம் விரும்பும்வரை புணர்ச்சி செய்யலாமாம். ‘இது போதும்’ என்னும் நிலை வரும்போது அதை அகற்றிவிடலாம் என்கிறார்கள்.

இந்த மூன்று வகைச் சிகிச்சைகளும் பயனற்றுப் போனால்.....

*Penile Prosthesis என்னும் செயற்கை ஆணுறுப்பைப் பொருத்தி உடலுறவுக்குத் தயார் செய்கிறார்கள் மருத்துவர்கள்.

2005ஆம் ஆண்டில் இவ்வகைச் சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. பின்னர், இதனினும் மேம்பட்ட சிகிச்சைகள் இடம்பெற்றிருக்கக்கூடும். சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால், மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்துகொள்ளலாம்.

நலமே விளைக!
========================================================================




வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழை அழித்தவர்கள்...அழித்துக்கொண்டிருப்பவர்கள் தமிழினத் தலைவர்களே!!!

உலகமே ஒரு நாள் அழிஞ்சிடுமாம். இப்போ, மொழி அழிஞ்சா என்ன, இனம் அழிஞ்சா என்ன!!!


தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது என்பது சகித்துக்கொள்ள இயலாத உண்மை. காரணம், யாரெல்லாம் தமிழினத்தின் தலைவர்கள் என்று நம்பினோமோ, அவர்களெல்லாம், நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்ற பிறகும்கூட,  தமிழினத்தின் துரோகிகளாகச் செயல்பட்டதுதான்.

சுற்றி வளைக்காமல் தலைப்புக்கு வருகிறேன்.

ஓமந்தூரார் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஐயா அவிநாசிலிங்கம் செட்டியார் மட்டுமே, செத்துக்கொண்டிருந்த தமிழ் மொழிக்கு உயிர் கொடுத்தார் என்று சொல்லலாம்.

அவர் காலத்தில்தான், உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழிக் கல்வி நீக்கப்பட்டு, தமிழ் பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலப் பயிற்று மொழிக் கல்வி விட்டுவைக்கப்பட்டிருந்தது, வேற்று மாநிலங்களிலிருந்து வரும் தமிழ் தெரியாத அதிகாரிகளின் பிள்ளைகளுக்காக.

மாண்புமிகு பக்தவத்சலனார் முதல்வராக இருந்தபோது, பள்ளியிலுள்ள அனைத்து வகுப்புகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவு தொடங்க அனுமதித்தார். அகற்றப்பட்ட ஆங்கில ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது

1967இல் ஆட்சியைக் கைப்பற்றிய அறிஞர் அண்ணாத்துரை, “Hindi never English ever" என்று சொன்னார். "Hindi never Tamil ever" என்றோ, “English never Tamil ever" என்றோ சொன்னதில்லை. திராவிட இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் ஆங்கில மோகிகளே.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்கிய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், நிர்வாகத் துறைகளில் தமிழைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினாரே தவிர, கல்வி நிலையங்களில் அதிகரித்துக்கொண்டிருந்த ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்திட முயற்சி மேற்கொண்டாரில்லை.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் முதலான அறிவியல் துறைகளில் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்தவில்லை. 

1971இல் எம் ஜி.ஆர். ஆட்சி. “எண்ணுக தமிழில் , எழுதுக தமிழில்” என்று முழக்கமிட்டார். எல்.கே.ஜி., யூ.கே.ஜி என்று ஆங்கில நர்சரிப் பள்ளிகள் வீதிக்கு வீதி காளான்கள் போல் முளைக்கத் தொடங்கியது இவர் காலத்தில்தான். புரட்சித்தலைவியார் ஆட்சியிலும் அது தொடர்ந்தது.

இன்றளவில், தமிழில் பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை அளித்திருப்பது ஆறுதல் தருகிற ஒன்று. இது போதாது.

ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலம் கற்பது தேவைதான்; கட்டாயமும்கூட. தமிழில் படித்தால்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்; மாணவர்கள் பல்துறை அறிஞர்களாக ஆக முடியும் என்பதெல்லாம் ஆளுவோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியும்தான். ஆனால், இடைவிடாத பரப்புரைகளின் மூலம் மக்களை நம்பச் செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதில்லை.

பக்கத்தில் இருக்கிற மலேசியாவில் மலாய் மொழியில் மருத்துவக் கல்வி போதிக்கப்படுகிறது.

சொந்த நாட்டில்[இஸ்ரேல்] வாழத் தொடங்கியவுடன் யூதர்கள் தங்கள் தாய்மொழியான ஹீப்ரு மொழியை வெகு வேகமாக வளர்த்தார்கள். அது அங்கு பல்கலைக்கழக மொழியாக உள்ளது.

உலக நாடுகளில் மிகப் பலவும் தத்தம் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத் தருகின்றன.  கல்வி கற்கவோ, வேலை தேடியோ அயல் நாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் அந்தந்த நாட்டு மொழியைக் குறுகிய காலத்தில் கற்கிறார்கள். அறிவியல் ரீதியாக அதற்கான வாய்ப்புகள் இன்று பெருகியுள்ளன.

இவையெல்லாம், பிள்ளைகளைப் பெற்றெடுத்த புண்ணியவான்களுக்கு உறைப்பதில்லை. ஆளுவோரும் இது குறித்துக் கவலைப்படுவதில்லை.

“தந்தைமார் எல்லாம் தாய்மொழி வேண்டாம் என்றாலும், ‘தாய்மொழியில்தான் படிப்போம்’ என்பதாகப் பிள்ளைகள் சொல்ல வேண்டும்” என்று சொல்லிப்போனார் காந்தியடிகள்.

நம் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் அவ்வாறு சொல்லும் காலம் வருமா?

வராது...வரவே வராது!
========================================================================
‘ஓம்சக்தி’ மாத இதழில்[ஆகஸ்டு, 1998] வெளியான, மறைந்த திரு.நா.மகாலிங்கம் அவர்களின் கட்டுரையிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பு இப்பதிவு.

புதன், 15 ஏப்ரல், 2020

ஒரு ‘கடு கடு’ கடவுள் கதை!!!

இறைவனும் இறைவியும், வாகனங்களின் ஓட்டத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டம் இட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய தெருவில் அரூபமாக நடந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, “அங்க பாருங்க” என்று குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று முகம் சிவக்கக் கடுகடுத்தார்.
“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமா தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க.”

வெகுண்ட இறைவன், கண்களில் கனல் தெறிக்க, "என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்:

“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போனபோது, நான்கு ‘காலிகள்’ இவளைக் கடத்திட்டுப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க..... ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  எழுப்பினா இவ..... இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன்வரல.....

கடவுளே....ஓ.....கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி அபயக்குரல் எழுப்பினா....

துடிதுடிச்சி, ஓடோடிப் போயிக் காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க.....

சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம். முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக் கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல.....

அன்னிக்கி உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி. சூது வாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி, சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத்தெருவில் அலைய விட்டுட்டாங்க.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திடச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நகரத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி,  “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” -உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவத்தை இவ செய்துட்டா?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு நீ.....ண்.....ட சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப்பட்டது. கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. ஒரு விதியை வகுத்து, அதன்படியே எல்லாம் நடக்கணும்னு ஆணையிட்டிருக்கேன். இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறாள். அவ்வளவுதான்.”

மேலும் பேச விரும்பாதவர் போல் நடக்க ஆரம்பித்தார் இறைவன்.

“நில்லுங்க.”

இறைவியிடமிருந்து கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனை மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள், சரி. இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு, அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் என்னய்யா?” -சீறினார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், அதற்குப் பதில் சொல்லும் வகை அறியாமல் நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!
*************************************************************************************************
இது, 2011ஆம் ஆண்டுப் பதிவு. 2013இல் மீள் பதிவாக வெளியானது. இப்போது ‘மீள் மீள்’ பதிவாக.....!
     

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

விரகதாபத்துக்குள்ளான மனைவியும் சாபத்துக்குள்ளான சனியும்!!!

கடவுள்கள் பற்றிய காமவிகாரக் கதைகளில் இதுவும் ஒன்று. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

சூரியனின் மகனாக அவதரித்தவர் சனி[எப்போது பகவான் ஆனார் என்பது தெரியவில்லை]. சித்திர ரதர் என்பவரின் திருக்குமாரத்தி ‘ஜ்யேஷ்டை’யை மணந்தார்.

ஜ்யேஷ்டை நல்ல குணவதி; கற்புக்கரசி. ஆனாலும் ஒரு பலவீனம், கண்ட கண்ட நேரத்தில் காம உணர்ச்சிக்கு ஆளாகிறவள் அவள்.

சனி பகவானை நீங்கள் நன்கு அறிவீர்கள். சர்வ வல்லமை படைத்தவர். இவரிடமும் ஒரு பலவீனம் உண்டு. அது.....

கண்ட கண்ட நேரத்தில் முழுமுதல் கடவுளை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இந்திரலோகத்து மேனகா, ரம்பை, திலோத்தமை போன்ற அதிரூப சுந்தரிகளே வந்து கண் முன்னால் நிர்வாண கோலத்தில் காபரே ஆடினாலும் கண் திறக்க மாட்டார்.

ஒரு நாள் பட்டப்பகலில்[தேவலோகத்தில் இரவுபகல் உண்டா என்று கேட்காதீர்].....

கிஞ்சித்தும் எதிர்பாராத வகையில் அதி தீவிரக் காம இச்சையின் பிடியில் சிக்குண்டாள் ஜ்யேஷ்டை. கணவனான சனீஸ்வரனுடன் புணர்ந்து தன் விரகதாபத்தைத் தணித்துக்கொள்ள முடிவெடுத்தாள்.

கவர்ச்சிகரமான ஆடையுடுத்து, அழகழகான ஆபரணங்கள் அணிந்து கணவன் முன் நின்று, “என் அன்பரே...ஆசை நாயகரே” என்றெல்லாம் இச்சையைத் தூண்டும் வார்த்தைகளால் சனியை அழைத்தாள். அவர் இவளின் அழைப்பைக் கண்டுகொள்ளவே இல்லை.

கடும் சினத்துக்கு உள்ளானாள் ஜ்யேஷ்டை. “பெண்டாட்டியின் மனநிலையைப் புரிந்துகொள்ளாத நீர் ஆண்மகனல்ல. இப்போது முதல் பெண்ணை மருவிச் சுகம் காணும் தகுதியை நீர் இழக்கக் கடவீர்” என்று சாபம் கொடுத்தாள்.

இந்தவொரு சாபத்துக்கு உள்ளானதிலிருந்து சனியின் பார்வை எப்போதும் வக்கிரமானதாக அமைந்துவிட்டதாம். 
=============================================================

மிக முக்கிய வேண்டுகோள்:

இனி ஜோதிடம் பார்க்கப் போனால், “சனியின் வக்கிரப் பார்வை என்றால் என்ன?” என்று ஜோதிடரிடம் கேளுங்கள்.

[இந்தக் கருமாந்தரக் கதை நான் கற்பித்ததல்ல; திருநள்ளாறு தலபுராணம் சொல்லும் வரலாறாக்கும்! பிரபலமான தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்ட தீபாவளி மலரிலும் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. தகவலை அடிப்படையாகக் கொண்டு ‘காலத்துக்கேற்ற நடை’யில் கதை சொல்லியிருக்கிறேன். நன்றி]



திங்கள், 13 ஏப்ரல், 2020

’கிழப்பருவம்’ தவிர்க்க இயலாததா?!

‘இரட்டிப்பு’ ஆவது நம் உடம்பிலுள்ள அனைத்துச் செல்களின் இயல்பு.

இது நிகழ்வது எத்தனை தடவை?

ஐம்பது தடவை. அதன் பின்னர் இரட்டிப்பாகும் நிகழ்வு நின்றுபோகிறது என்கிறது அறிவியல். காரணம் என்ன?

ஒவ்வொரு செல்லின் இயக்கத்தின்போதும், அதனுள்ளிருந்து ‘கழிவுப்பொருள்’ வெளியேறுகிறது.. அந்தக் கழிவுப் பொருளுடன் வெளியிலிருந்து உள்நுழையும் ரசாயனப் பொருள்களும் இணகின்றன.  இரண்டும் இணைந்து நிகழ்த்தும் தாக்குதலால் செல்லில் சேதம் உண்டாகிறது. இதன் விளைவாக செல் இரட்டிப்பாவது தடைபட்டு, அது அழிந்துபோகிறது. இளமைத் தோற்றம் மாறிக் கொஞ்சம் கொஞ்சமாக மூப்படைகிறோம்.

செல்லிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருளை,  ‘free radicals' என்கிறது அறிவியல்.

கழிவுப் பொருள் உருவாவதையும் வெளியிலிருந்து சில ரசாயனப் பொருள்கள் உள்நுழைவதையும் தடுத்துவிட்டால் முதுமை அணுகுவதைத் தடுத்துவிட முடியுமாம்.

இதெல்லாம் சாத்தியப்படுவது எப்போது?

ஹூம்.....இப்போதைக்கு இல்லை!
========================================================================
ஆதாரம்: சுஜாதாவின், ‘கற்றதும் பெற்றதும்’ தொடர்[ஆனந்த விகடன், 27.05.2001]

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

300 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழக்கின் மறுவிசாரணை!!!

நாம் வாசித்தறிந்த, அல்லது கேள்விப்பட்ட சில அதிசய நிகழ்வுகள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நினைவகத்தில் நிரந்தர இடம்பிடித்துவிடுவது உண்டு.

அவ்வாறான நிகழ்வுகளில் கீழ்க்காண்பதும் ஒன்று.

#சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று கிறித்துவ மதவாதிகள் நம்பினார்கள். இது தவறான நம்பிக்கை. உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நிகோலஸ் கோபர்னிகஸ்[15-16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டவர்] சொன்னார்.
கோபர்னிகஸ் சொல்வதே சரி என்று வாதிட்டார் வானிலை ஆய்வறிஞர் கலீலியோ[16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டவர்]. மதத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னமைக்காக, கிறித்தவத் தலைமையகம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அதை வீட்டுச் சிறையாக மாற்றியது.
வாழ்நாளின் இறுதி ஏழு ஆண்டுகளைத் தனிமையில் கழித்தார் கலீலியோ. கண் பார்வை பறிபோனது.

அவர் இறந்தபோது, முறைப்படி அடக்கம் செய்வதற்கு மதக் குருமார்கள் அனுமதிக்கவில்லை.

என்றிவை போன்ற செய்திகள் பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடம் கற்றவர்கள் அனைவரும் அறிந்தவையே. கீழ்வருவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.

கலீலியோ இறந்து 300 ஆண்டுகள் கழித்து, மதவாதிகள் நீதிமன்றம் அவர் வழக்கை மீண்டும் விசாரணக்கு ஏற்றுக்கொண்டு, கலீலியோ குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது!#
=============================================================
தகவல்கள், கூகுள் தேடல் மூலம் சரிபார்க்கப்பட்டன. பிழை காணின் மன்னித்திடுக