எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 23 ஆகஸ்ட், 2023

’பெரிய்ய்ய்ய’ கவலையும் சின்னஞ்சிறுசுகளும்!!!

நான் நகர்ப்புறவாசி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வேலை பார்க்கும் மகன் வீட்டில் அடைக்கலம்.

உறவினர் இல்லத்துத் திருமண விழாவுக்காகப் பிறந்த ஊருக்கு வந்திருந்தேன்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அன்று மாலை சம வயதுக்காரனும், பள்ளியில் உடன்பயின்றவனுமான நண்பன் நவநீதனைச் சென்று பார்த்தேன்.

உடம்பு வெகுவாகத் தளர்ந்துபோய், கவலை அப்பிய முகத்துடன் காட்சியளித்தவனைத் தோள் வருடி, “ஏன் இப்படி ஆகிட்டே?” என்றேன்.

“நீ மட்டுமென்ன, என்னை மாதிரிதான் இருக்கே” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்:

“மருமக மட்டுமல்ல, மகனுமே என்னை ஒரு சுமையாக நினைக்கிறான். ரொம்ப அவசியபட்டாலொழிய என்கூடச் சரியாப் பேசுறதே இல்ல; என்னைக் கண்டுக்கிறதும் இல்ல. எப்போ ஒழிவான்னு இருக்காங்க. தூக்குல தொங்கிடத்தான் விருப்பம். அதுக்கான தைரியம் இல்ல. எது எப்படியோ, வயித்துக்கு மூனு வேளையும் சோறு போட்டுடறாங்க” என்றான் நண்பன்.

கண் கலங்கியிருந்தான். 

அவன் முகத்தை நிமிர்த்தி, “உனக்கு வயசு என்ன?” என்றேன்.

“உன் வயசுதானே எனக்கும். என்பது முடியப்போகுது.”

“அப்பப்போ வயசை நினைச்சுக்கோ. அடிக்கடி நினைச்சா, இன்னிக்கோ நாளைக்கோ எப்போ சாகப்போறமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடுவே. அது தீரவே தீராத பெரிய கவலை. அந்தக் கவலைக்கு முன்னால நீ இப்போ படுறது மாதிரியான கவலையெல்லாம் ரொம்ப அற்பமானதா ஆயிடும்..... 

பெருசாக் கவலைப்படுடா. நான் அதைத்தான் செய்துட்டிருக்கேன்” என்று சொல்லி முடித்ததும் என்னை ஆரத் தழுவிக்கொண்டான் நவநீதன்.

மிகப் பல நாட்களுக்குப் பிறகு, என் மனதுக்குள் இதமானதொரு சுகம் பரவுவதை உணர முடிந்தது.

                   *   *   *   *   *

***முதியவர்களுக்காக ‘பெரிய’ எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஒரு நாளுக்கான திருமணமும் ஒரு முறை[மட்டும்] உடலுறவும்!!!

//ஒரு நாள் திருமணங்கள் சீனாவின் பழம்பெரும் பாரம்பரியத்தில் இல்லை என்றாலும், சமீபத்தில் அத்தகைய திருமணங்கள் அந்நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. திருமணம் ஆகாமல் இளைஞர்கள் இறப்பது ‘சுப நிகழ்வு’ அல்ல என்னும் மூடநம்பிக்கையின் காரணமாக உருவானது இந்த ‘ஒரு நாள்' திருமணம்.

 ஏன் ஒரு நாள் திருமணம்? இந்த திருமணங்களின் பின்னணியில் உள்ள நிபுணர்கள், சீனாவில் பல இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை என்று நம்புகின்றனர். உண்மையில், அந்த இளைஞரின் குடும்பமும் திருமணத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் திருமணமாகாமல் வாழ்கின்றனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், சீனாவில் சிறுவர்கள் திருமணமாகாமல் இறப்பது சுபமாக கருதப்படவதில்லை. ஆகையால், ஒரு நாள் மட்டும் திருமணம் செய்துகொள்ள, தனிமையில் இருக்கும் அடையாளத்தை துடைத்தெறிய, இளைஞர்கள் இதுபோன்ற திருமணம் செய்ய விரும்புவதற்கு இதுவே காரணம். சீனாவின் சில பகுதிகளில், ஒரு இளைஞர் திருமணமாகாமல் இறந்துவிட்டால், கடைசியாக பிரியாவிடை கொடுக்கும் போது திருமணம் செய்துவைக்கப்படும் பாரம்பரியம் உள்ளது.

திருமணத்தன்று மட்டும் அவன் மணமகனாக இருப்பான்.//

மணமகளும் அவ்வாறே. அதன் பிறகு இவன் யாரோ, அவள் யாரோ என்னும் நிலைதான். 

இந்தத் திருமணத்திற்காக, இளைஞர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பணம் செலவழிக்கிறார்களாம். 

பொதுவாக, இளைஞர்களுக்குத் திருமணம் செய்விப்பதில் பெற்றோர்களுக்கு நிறையவே செலவாவதால், பல இளைஞர்கள் மணமாகாமலே வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘ஒரு நாள் திருமணம்’ செய்வதற்குக் காரணமாக அமைந்தது என்கிறார்கள் நிபுணர்கள். இந்நிகழ்வுகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நம் நாட்டில் ‘ஒரு நாள் திருமணங்கள் நடைமுறையில் இல்லை[உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை] என்றாலும், ஒரு பெண் மணமாகாமலே இருந்து இறக்க நேரிட்டால், அவள் கழுத்தில் ஓர் ஆடவனைக்கொண்டு தாலி கட்டும் சடங்கு இன்றளவும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது[தாலி கட்ட ஆட்கள் கிடைப்பது எளிதா என்பது தெரியவில்லை].

ஒரு நாட்டவருக்குரிய நாகரிகம் பிற நாடுகளுக்கும் பரவுவது வெகு இயல்பாக உள்ள நிலையில், சீனர்களிடமுள்ள இந்தத் திருமண முறை நம் நாட்டிலும் பரவினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

ஆனால், இதன் தொடர்ச்சியாக…..

மணமாகாமலே செத்துப்போவது நல்லதல்ல என்னும் மூடத்தனத்துக்கு மக்கள் ஆளாக நேர்ந்தது போலவே, ஒரு நாள் திருமணம் முடிந்து, அன்றிரவே உடலுறவுச் சுகம்[முதலிரவு] அனுபவிக்காமல் செத்துப்போவதும் நல்லதல்ல என்று நம்ப ஆரம்பித்தால்….. 

ஒரு முறை திருமணமும், ஒரு முறை உடலுறவும் கொள்வதற்குப் பெரும் செலவில் பெண்களை ஏற்பாடு செய்ய நேரிடும்.

ஆண்கள், மணமாகாமலோ, முதலிரவுச் சுகம் அனுபவிக்காமலோ சாகக் கூடாது என்பதாக நம்புவது போலவே, ஒரு பெண்ணும் அவ்வாறான நிலையில் சாகக் கூடாது என்று நம்பும் காலம் வருமேயானால் மக்கள் படும்பாடு விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால், நம் மக்களுக்கு நாம் சொல்ல விரும்பும் புத்திமதி….. 

“பையன்களைப் பெற்றெடுக்கும் அளவுக்கு நிறையப் பெண்களையும் பெறுங்கள். ஆண் பெண் எண்ணிக்கை சம விகிதத்தில் இருப்பது மிக மிக அவசியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்பதே!

* * * * *

https://india.postsen.com/world/931912.html