எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 11 ஜூலை, 2018

குமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா?!

குமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[???] வார இதழின் 'உள்நோக்கம்' பற்றியும் நாம் ஆராயவில்லை. வாசகனின் சிந்திக்கும் அறிவை இவை முடமாக்குகின்றன என்பதே நம் குற்றச்சாட்டு.

குமுதம், தொடர்ந்து எழுதிவரும் 'மகா பெரியவா' குறித்த 'மிகைக் கற்பனை'க் கதைகளுள் கீழ்வருவதும்[குமுதம், 18.07.2018]  ஒன்று.

திருவானைக்காவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் தலைவர் 'மகா பெரியவா'வைச் சந்திக்கிறார். ''எங்க ஊரில் மாரியம்மன் கோயில் கட்டியிருக்கோம். கும்பாபிசேகம் நடத்தப் போதுமான வசதியில்லை. பெரியவா உதவணும்''னு கோரிக்கை வைக்கிறார்.

ஒரு வேதியரை அழைத்து, ''நீ போய்க்  கும்பாபிஷேகம் செய். அவங்க கொடுக்கிறதை வாங்கிக்கோ''ன்னு சொல்றா பெரியவா.

கிராமம் சென்று அதை நடத்தி முடித்த வேதியர், பெரியவாவின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அதிகமாகப் பணம் கேட்கிறார். தலைவர் தன் மனைவியின் கழுத்து நகையை அடமானம் வைத்துப் பணம் கொடுக்கிறார். 

வேதியர் வீடு திரும்புகிறார். அன்றைய தினத்திலிருந்தே, அவர் மனைவியின் கனவில் அம்பாள் சூலாயுதத்தோடு தோன்றிப் பயமுறுத்தவே, அந்த அம்மாவின் பல நாள் தூக்கம் பறிபோகிறது.

செய்வதறியாது கலக்கமுற்ற வேதியர், மனைவியை அழைத்துக்கொண்டு மகா பெரியவாவைத் தரிசனம் பண்ணுகிறார்.

இவர்[வேதியர்] ஏதும் சொல்லாத நிலையில்[!!!], ''அம்பாள் சூலத்தோடு தொறத்திண்டு வராளா? வழிப்பறிக்காரன் மாதிரி நீ கழுத்துச் சங்கிலியைப் பறிச்சுண்டு வந்தா அம்பாள் சும்மா இருப்பாளா? போயி, யார் உனக்குச் சங்கிலியை அடகு வெச்சிப் பணம் தந்தாரோ, அந்தச் சங்கிலியை அவர் மீட்டெடுக்க வழி பண்ணு''ன்னு பெரியவா கட்டளை பிறப்பிக்கிறார்.

வேதியர், கிராமத் தலைவரிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார். தலைவரும் நகையை மீட்கிறார்.

வேதியர் மீண்டும் பெரியவாவைச் சந்திக்கிறார். ஒரு தாம்பாளத்தில் பட்டு வஸ்திரம் கனி வர்க்கம் எல்லாம் வைத்து, பணமும் வைத்து வேதியருக்குக் கொடுக்கச் சொல்றா பெரியவா.

வேதியர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது. கிராமத் தலைவரிடம் எவ்வளவு வாங்கித் திருப்பிக் கொடுத்தாரோ அவ்வளவு பணமும்[இதுவும் வேதியர் சொல்லாமலே பெரியவாவுக்குத் தெரிந்திருக்கிறது!!!] இருந்ததாம். அதற்கப்புறம் வேதியரின் மனைவிக்கு வழக்கம்போல நல்ல தூக்கம் வாய்த்ததாம்.

பெரியவாவின் கட்டளையை மீறியவர் வேதியர். அம்பாள் அவருடைய கனவில் தோன்றி அச்சுறுத்துவதாகக் கதையமைப்பதே முறையாகும்[இரண்டு கண்களையும் குத்துவதாகக்கூடக் கற்பனை செய்திருக்கலாம்]. அவர் மனைவியைத் துன்புறுத்தியது நியாயம் அல்லவே. கருணைக் கடலான அம்பாளுக்கு இது தெரியாமல் போனது எப்படி? இன்னும் சில குறைகளைச் சுட்டிக்காட்டலாம். இது போதும்.

கல்கி, 'தமிழ் இந்து' போன்ற இதழ்கள், மகா பெரியவாவின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், அவர் சொல்லிச் சென்ற அறவுரைகளைப் பதிவு செய்கின்றன. குமுதம் போல் புதிது புதிதாய்ப் பொய்க் கதைகள் கற்பித்து, அமைதியாய் வாழ்ந்து முடித்த அந்த  ஆன்மிகப் பெரியவருக்கு அவமரியாதை ஏதும் செய்வதில்லை.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களே முகம் சுழிக்கும் வகையில் தொடர்ந்து இட்டுக்கட்டிய கதைகளைக் குமுதம் வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது.

குமுதம் திருந்த வேண்டும். தவறினால், பெரியவாவைப் பெரிதும் மதித்துப் போற்றுபவர்களால் அது திருத்தப்பட வேண்டும்.

 காத்திருப்போம்; நல்லது நடந்தால் வரவேற்போம்.