வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிசயம் நிகழ்த்திய பிரபல எழுத்தாளர்!

#எழுத்துகள், படைப்புகள் ஆகியவை வாசகர், இரு மகன்கள் என மூவருக்கே சொந்தம் என, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அறிவித்துள்ளார்.

கி.ரா. என்றும் தாத்தா எனவும் அன்பாகப் பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ஆம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958ஆம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். இவரது இலக்கியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பில் ஒரு வீட்டை அரசு ஒதுக்கியுள்ளது.

தற்போது 99 வயதுடைய கி.ரா. கூறியதாவது:

"எழுத்தாளர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் ஆகிய நான் சுய நினைவுடன் சொல்வது என்னவென்றால் எனது எழுத்துக்கள், படைப்புகள் எல்லாம் டிசம்பர் 26ஆம் தேதி முதல் சங்கர் என்ற புதுச்சேரி இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், எனது இளைய மகன் பிரபி என்ற பிரபாகரன் ஆகிய மூன்று பேரையே சாரும். இவர்கள் மூவருமே எனது படைப்புகளுக்கு முழு உரிமை பெற்றவர்கள். இதை நான் முழு மனதுடன் எனது வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

எனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும், எனது படைப்புகளைத் திரைப்படங்களுக்குப் பயன்படுத்துவோரும் உரிய ராயல்டியை மூவருக்கும் அளிக்க வேண்டும். எனது படைப்புகள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியைக் கொண்டு 'கரிசல் அறக்கட்டளை'யை நிறுவி எழுத்தாளர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் எனது பெயரில் பண முடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், அதைத்தொடர்ந்து, தனது இரு மகன்களுக்கும் எழுத்தாளர் கி.ரா. அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#

குறிப்பு:

கி.ரா.வின் வாசகரை மதிக்கும் அருங்குணம் மட்டுமல்ல, 99 வயதில், தெளிந்த அறிவாற்றலுடன் செயல்படும் அவரின் மனத்திட்பமும் நம்மை மிகுவியப்பில் ஆழ்த்துகிறது.

அவர் இன்னும் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டு புரிந்திட மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

===============================================================

நன்றி: 'இந்து தமிழ் திசை' https://www.hindutamil.in/news/literature/616706-ki-rajanarayanan-announcement-on-royalty-about-his-books.html




புதன், 30 டிசம்பர், 2020

'பலான' இடத்தில் 'அவன்' கற்ற பாடம்!!!

போன காரியம் முடிந்து அறையிலிருந்து அவன் வெளியேற முற்பட்டபோது, அவனை அவள் வழிமறித்துக் கை நீட்டினாள்.

"வரும்போதே உன் முதலாளி அம்மாகிட்ட ஆயிரம் ரூபா கொடுத்துட்டேன். ஒரு மணி நேரம் இருக்கலாம்னாங்க. அஞ்சு நிமிசம் இருக்கும்போதே முடிச்சுட்டுக் கிளம்பிட்டேன். இன்னும் எதுக்குப் பணம் கேட்குறே?" என்றான் அவன்.

"முதல் தடவையா என்கிட்டே வந்தீங்க. முழுத் திருப்தியோட உங்களை அனுப்பி வைக்கிறேனில்ல. டிப்ஸ் கொடுத்துட்டுப் போங்க" என்றாள் அவள்.

"ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாயே அதிகம். இதுல, டிப்ஸ் வேறயா" என்று நக்கலடித்தான் அவன்.

"நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய்ல, முதலாளி அம்மா பங்கு, புரோக்கர் கமிசன், காவல்துறை மாமூல்னு எல்லாம் கழிச்சா எனக்கு ஒரு இருநூறு ரூபா கிடைக்கும். இந்தப் பொல்லாத கொரோனா தொற்றால வருமானம் இப்போ குறைஞ்சி போச்சு. அன்றாடம் வயித்துப்பாட்டுக்கே திண்டாட்டமா இருக்கு. ஓட்டலுக்குச் சாப்பிடப் போனா சர்வருக்கு டிப்ஸ் தற்றதில்லையா, அது மாதிரிதான் இதுவும்" என்றாள் அந்த விலைமாது.

"நான் ஓட்டலுக்குப் போனா பில்லுக்கான பணத்தை மட்டும்தான் தருவேன். டிப்ஸ் எல்லாம் தர்றதில்ல."

"கோயிலுக்குப் போவீங்களா?"

"போவேன்."

"சாமிக்கு அர்ச்சனை பண்ணுற பழக்கம் உண்டா?"

"உண்டு."

"தீபாராதனைத் தட்டுல பணம் போடுவீங்களா?"

"போடுவேன்."

"ஏற்கனவே அர்ச்சனைக்குப் பணம் கட்டித்தான் அர்ச்சனைச் சீட்டு வாங்கியிருப்பீங்க. அப்புறம் தட்டுல அம்பது நூறுன்னு போடுறீங்களே, அது நீங்க ஐயருக்குத் தர்ற டிப்ஸ். தெரிஞ்சிக்கோங்க."

"அது டிப்ஸ் அல்ல, காணிக்கை."

"இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை நம்ப வெச்சுட்டாங்க. பணம் கட்டி அர்ச்சனை பண்ணுறீங்க. அதுக்கான பலன் கிடைக்குறது நிச்சயமில்ல. ஆனா, ஒரு விபச்சாரிகிட்ட கொடுக்குற பணத்துக்குச் சுகம் அனுபவிக்கிறது நிஜம். நிச்சயமில்லாத ஒன்னுக்குத் தர்ற மரியாதையை மனுசங்க நிஜத்துக்குத் தர்றதில்ல...

அந்த மனுசங்கள்ல நீங்களும் அடக்கம். அர்ச்சகர் கேட்காமலே, கணக்குப் பார்க்காம தட்டுல பணம் போடுற நீங்க, ஒரு விபச்சாரியான நான் பரிதாபமா கை நீட்டி டிப்ஸ் கொடுங்கன்னு கேட்டும் கொடுத்துப் பழக்கம் இல்லேன்னு சொல்லிட்டீங்க. பரவாயில்லை. போய்வாங்க." 

ஒதுங்கி நின்று கைகூப்பினாள் அவள்.

"இது டிப்ஸ் அல்ல; ஒரு குருவாக இருந்து எனக்குப் பாடம் கற்பிச்சிருக்கே. அதுக்கான காணிக்கை" என்று சொல்லி இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை அவளின் கையில் திணித்துவிட்டு வெளியேறினான் அவன்.

===============================================================


திங்கள், 28 டிசம்பர், 2020

கொரோனா ஒழிப்பில் மதங்களின் மிக மிக மிக முக்கியப் பங்கு!!!


“தீய சக்திகளை நிர்மூலம் செய்து நல்லவர்களை வாழ வைக்கப் பல அவதாரங்கள் எடுத்தார் கடவுள்; இன்னும் எடுக்க இருக்கிறார்” என்கிறது ஒரு மதம்.
"பாவிகளின் பாவங்களைச் சுமப்பதற்காகவே தேவன் இங்கே மனிதனாகப் பிறக்கிறார். செத்துப் பிழைத்து அதிசயங்கள் நிகழ்த்துகிறார்” என்கிறது மற்றொன்று.

‘நாங்கள் தொழுகின்ற கடவுள் உண்மையானவர். வாருங்கள். வந்து முறையிடுங்கள். நீங்கள் கேட்பதெல்லாம் அவர் தருவார்” -இது இன்னொன்று.

இம்மதங்கள் சொல்பவை உண்மையாக இருக்கக்கூடும் எனினும், இப்போதைக்கு இருக்கிற கடவுள்களே போதும்; புதிய அவதாரம் தேவையில்லை என்பது நம் எண்ணம்.

எந்தவொரு கடவுளும் மனிதனாகப் பிறக்க வேண்டாம்; செத்துப் பிழைத்தலாகிய அதிசயத்தையும் நிகழ்த்த வேண்டாம்.

கேட்பதையெல்லாம் கடவுள் தருவாரென்றாலும், எதையும் கேட்டுப் பெறுகிற மனநிலையில் நாம் இல்லை.

இப்போதைய நம் தேவை ஒன்றே ஒன்றுதான். அது.....

கொரோனா என்னும் கொடுந்தொற்றை முற்றிலுமாய் அழித்தொழிப்பது.

லட்சக்கணக்கில் சக மனிதர்களைக் கொரோனாவுக்குப் பலி கொடுத்துவிட்ட நிலையில், எஞ்சியிருப்பவர்களைக் காப்பாற்றினால்தான் மனிதகுலம் தப்பிப் பிழைக்கும்.

கொரோனாவை அழித்து மனித இனத்தைக் காப்பாற்றும்படி நம் போன்றோர் வேண்டுதல் வைத்தால் அதை மேற்குறிப்பிடப்பட்ட கடவுளோ கடவுள்களோ நிறைவேற்றுவார்களா என்பதில் நமக்கு முழு நம்பிக்கை இல்லை.

இதே வேண்டுதலைக் கடவுள்களுடன் தொடர்பிலுள்ள மதவாதிகள் முன்வைப்பார்களேயானால், வேண்டுதல் நிறைவேறும் என்பது 100% உறுதி.

இது அறிவியல் யுகம். ஒரு நிகழ்வைக் காணொலிக் காட்சி மூலம் உலக மக்கள் அனைவரும் காண முடியும்.

அனைத்து மதத்தலைவர்களும்[கடவுளைப் போற்றுகிறவர்கள்] அவர்களுக்குப் பிடித்தமான ஓரிடத்தில் கூடிக் கூட்டு வழிபாடு நிகழ்த்தி, கொரோனாவை உடனடியாக அழித்தொழிக்க வேண்டும்[இப்படிச் செய்தால்தான், மதங்களின் மீதும் கடவுள்/கடவுள்களின் மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை பிறக்கும்]. 

சாதிப்பார்களா!?!?

===============================================================



ஞாயிறு, 27 டிசம்பர், 2020

'அவாள்'களின் பொற்காலம்!!!

தமிழக வரலாற்றில், பிராமணர்களுக்கு மிக உயரிய பதவிகளும், சலுகைகளும், சர்வ சுதந்திரமும் வழங்கப்பட்டது சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்தான்.

கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றிப் பாதுக்காக்கப்பட்டார்கள் எனின், அது மிகையல்ல.

அன்று பெற்றிருந்த அதே கவுரவத்தை மீட்டெடுக்கத்தான் சில முன்னணி நாளிதழ்க்காரர்களும்,  ராஜாதி ராஜா, மாஜி சிரிப்பு நடிகர் போன்றோரும் கனவு காண்கிறார்கள்; கனவை நனவாக்க, ஒன்றிணைந்து அதிதீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு அன்று இவர்கள் பெற்றிருந்த அளப்பரிய செல்வாக்கை நினைவுகூரும் வகையில், 'கீற்று' தளத்தில் வெளியான கட்டுரையொன்றின் நகலைப் பதிவு செய்கிறேன்[கீற்றுக்கு நன்றி].

#"தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி" "தமிழர்களின் பொற்காலம்" என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!

Rajaraja_chozhan_640

பார்ப்பனர்களைச் சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்! வரலாற்றுப் பெருமையாகச் சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில்தான் புண்ணியம் தேடிக்கொள்வதற்காக இராஜராஜன் அப்பாவி மக்களை வாட்டி வதைத்திருக்கிறான்!.

அடிமைகள்!

சோழர்காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான அடிமைகள்!. பொருளைப்போன்றே இந்த அடிமைகளும் விற்பனை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். விற்கப்படும் அடிமைகளுக்கு மாட்டைப்போல் சூட்டுக்கோல் அடையாளங்கள் இடப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் "ஆள்விலை பிரமான இசைவுச்சீட்டு" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி அவர்கள் உழைப்பில் தஞ்சைப் பெரிய கோவிலை எழுப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டான் இராஜராஜன்! .

கோவிலில் பணிபுரிந்தவர்களின் நிலங்கள் கூடப் பறிமுதல் செய்யப்பட்டு கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தங்கள் நிலங்களை பறிகொடுத்தவர்கள் அரசை எதிர்த்துத் தீ குளித்த செய்தியைப் புஞ்சை செப்பேடுகள் கூறுகின்றன. 

தேவரடியார்கள்!

கோவிலில் பணிபுரிவதற்கென்று பெண்களை நியமனம் செய்தான் இராஜராஜன். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை நியமித்திருந்தான். அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோவில் தளத்தைச் சுற்றித் தேவரடியார்களுகென்று தனிக்குடியிருப்புப் பகுதியை ஏற்படுத்தி அவை தளிச்சேரி என பெயரிடப்பட்டன. 

உலகமகா தேவியார், சோழ மாதேவியார், அபிமான வல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொடங்கியார், கூந்தன் விரானியார், இளங்கோன் பிச்சியார், என 15 க்கு மேற்பட்ட மனைவிமார்களை வைத்திருந்தவன் இராஜராஜன்!. 

வடமொழிக்கு வாழ்வு!

சோழர் காலத்தில் தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரம் எனும் ஊர் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டு அங்கு வடமொழிகென்றே தனிக்கல்லூரி உருவாக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து செலவுத்தொகையும் அரசால் மான்யமாக வழங்கப்பட்டது. அங்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயின்ற மாணவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இக்கல்லூரிக்கென 300 ஏக்கர் நிலம் தானமாக அரசனால் வழங்கப்பட்டது. 

இதே போன்று வடாற்காடு மாவட்டம் கப்பலூர் கிராமத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் ஆனூரிலும் வடமொழிப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. புராணங்கள், இதிகாசங்கள், சோமசித்தாந்தம், ராமானுஜ பாடியம், மீமாம்ச வியாக்ரணம் போன்ற வடமொழி இலக்கியங்களே அங்கு பயிற்றுவிக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய சூரர்களால் தமிழ்தேசியத்தின் பிதாமகன் என்று சித்தரிக்கப்படும் இராசராசன் காலத்தில் தமிழ் மொழிக்கென எந்த ஒரு தனித்த பாடசாலையும் நிறுவப்பட்டதாக தெரியவில்லை!.

வலங்கை-இடங்கை!

வலங்கை இடங்கை குல வேறுபாடு ராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது. இந்த இரண்டு பிரிவுகளிலும் இம்பெறாத தங்களை மேன்மக்களாக கருதிகொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகதொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை சாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராகப் போர்கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடைபெற்றுள்ளது.

பார்ப்பனர்களை எதிர்த்துக் கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத்தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 குடவோலை முறை!

கிராமங்களில் குடவோலைமுறை இருந்தது. கிராமங்கள் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, குடும்பின் சார்பில் ஒரு ஆண் மகன் பிரதிநிதியாக நியமிக்கப்படுவான். அவனுக்குக் குறைந்த பட்சம் 1/4 வேலி நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். பார்ப்பனர்களுக்கோ 1/8 வேலி நிலம் இருந்தாலே போதும் என சலுகை காட்டப்பட்டது. அப்படிக் குடும்பின் சார்பில் நியமிக்கப்படும் பெயர்கள் தனித்தனியாகத் துண்டுக் காகிதத்தில் எழுதி ஒரு குடத்தில் இட்டு குலுக்கல் முறையில் சபையின் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சலுகையாலும் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் அவ்வப்போது  தானமாக வழங்கப்பட்டு வந்ததாலும், கிராமசபை அங்கத்தினராகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர்.

வேளாண்மக்களும், பார்ப்பனர்களும் அதிகம் வசித்த கிராமங்களில் இரண்டு சபைகள் தனித்தனியாக இயங்கிவந்தன. பார்ப்பனர்களின் விருப்பப்படி அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டான் இராஜராஜன். வேளாண் மக்கள் தங்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டு அதை நிறைவேற்றும் பொருட்டு அதிகாரிகளையும் நியமித்தான்.

 பார்ப்பனர்களின் பொற்காலம்!

பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும், நிலபுலங்களையும் தானமாக வாரி வழங்கினான் இராஜராஜன்! பார்ப்பனர்களுக்கென்றே கிராமங்கள் பிரத்யேகமாகத் தானமாக வழங்கப்பட்டு, அகரம்,அக்கிரஹாரம், சதுர்வேதிமஙகலம், பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டன . அப்படித் தானமாக வழங்கப்பட்ட பகுதியில் வசித்த பார்ப்பனர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

கோவில்களில் பறிமாறப்படும் உணவுப்பந்திகளில் பார்ப்பனர்களுக்கு முதலிடம் தரப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப்பக்கச் சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் "காலம் 1014 சிறீ இராஜராஜன் -தஞ்சைப்பெருவுடையார் கோவிலுக்குச் சோழமண்டலத்திலும், பாண்டிய மண்டலத்திலும், தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழமண்டலத்திலுமுள்ள "பிரம்மதேயங்களை" சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் பண்டாரம் (பூசை) செய்வதற்குப் பிராமனர்களையும், திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளையும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுதக் கரணர்களையும், சந்திர ஆரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் வாழும் பிரம்மதேயத்தில் வசிக்கக்கூடிய பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்குப் பூசை செய்யக் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

கிராமசபைகளிலும் அரசின் முடிவுகளிலும் கூட, பார்ப்பனர்களின் அதிகாரம் கொடிகட்டியிருக்கிறது. அவர்களின் ஆலோசனைப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

சூழ்ச்சியில் ஆட்சி!

இராஜராஜன் சுந்தர சோழனின் இரண்டாவது மகன். தனது சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனின் துணைகொண்டு ஆட்சியில் இருந்த மூத்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் கதையை முடித்திருக்கிறான். அந்தப்பழி தன்மீது விழாமல் இருக்க உடனடியாக தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல், தண்டிக்கப்படவேண்டிய உத்தமசோழன் அரியணை ஏற ஆதரவுக்கரம் நீட்டினான்.

பிராமனர்களுக்கு மரணதண்டனை அளித்தால் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்று சொல்லி ஆதித்ய கரிகாலன் கொலையில் உத்தம சோழனுக்கு உறுதுணையாக இருந்த பார்ப்பனர்களையும் தப்பவிட்டான்.

தான் அரியணை ஏறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்திருக்கிறான் இராஜராஜன்!. பார்ப்பனர்களுக்குப் பொற்கால வாழ்வளித்த சூத்திர இராஜராஜனை அவன் கட்டிய கோவிலுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமல் வெளியேற்றியிருக்கிறது பார்ப்பனீயம்!. இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்குத் தஞ்சைப் பெரியகோவில் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!#

============================================================

http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug19/3659-history1?start=225


வெள்ளி, 25 டிசம்பர், 2020

வலைப்பதிவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் 'தினமலர்'!!!

கற்பனை நிகழ்வுகளுக்குக் கவர்ச்சி முலாம் பூசிச் செய்தி வெளியிடுவதில் முன்னிலை பெற்றிருக்கும் நாளிதழ் தினமலர்.

புளுகுவதையே தொழிலாகக் கொண்டு வயிறு வளர்க்கும் இந்தப் 'புளுகுமலர்' சமூக வலைதளப் பதிவர்களைப் 'புளுகுப் புலிகள்' என்கிறது.

இது, நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றுக்குக் கொடுத்த தலைப்பு, 'கும்பாபிஷேகத்தையும் கேள்விக்குள்ளாக்கி எல்லை மீறும்... சமூக வலைதள புளுகுப்புலிகள்!  https://m.dinamalar.com/detail.php?id=2676910[டிச 24,2020 14:26]

வலைத்தளப் பதிவர்களில் யாரெல்லாம் கும்பாபிஷேகத்தைக் கேள்விக்குள்ளாகினார்கள் என்பதற்கான பட்டியலையோ அதற்கான ஆதாரங்களையோ இது வெளியிடவில்லை.

அவ்வப்போது, மூடநம்பிக்கைகளைச் சாடி எழுதும் பதிவர்ளைத் தரக்குறைவாகத் தாக்குவதற்கென்றே இவ்வாறான பொய்ச் செய்திகளை இது வெளியிடும். இதழ் விற்பனையைப் பெருக்குவதற்கு இது வழக்கமாகக் கையாளும் உத்தியும்கூட.

இச்செய்தியை ஒட்டி இதன் கழிசடை வாசகன் எழுதிய கருத்துரையையும் இது வெளியிட்டிருக்கிறது.

vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

*ஒருமுறையாவது இப்படி இந்து மத வழிபாடு முறைகளில் தலையிடுவோரை இந்துக்களின் எதிரி என்று அடையாளம் கண்டு செம்மையாக புடித்தால் பின்னாளில் இன்னொருவன் தலை இட யோசிப்பான்*

எவனோ ஒரு கூமுட்டையின் பெயரில் இந்தத் தினமலம், பதிவர்களுக்கு எதிராக இப்படியெல்லாம் வன்முறையைத் தூண்டுகிறது.

அவ்வப்போது, பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் எழுதிவரும் இந்த 'அண்டப்புளுகு' இதழ், ஒரு நாறவாயன் பெயரில் பெரியாரையும் அவமரியாதை செய்து குதூகளித்திருக்கிறது.

*'சொரியன் பெரியார் சிலப்பதிகாரம் , திருக்குறளை பற்றிச் சொன்ன வார்த்தைகளை ( டைமோண்ட் முத்து சொன்ன வார்த்தைகளை) இங்கு பிரசுரிக்க இயலாது[பயம் காரணம்]. இவனெல்லாம் தமிழுக்கும் துரோகி'*

தவறில்லாமல் தமிழ் எழுதத் தெரியாத இந்தச் சொறி நாய் பெரியாரைச் 'சொரியன்' என்கிறது.

குடமுழுக்கு தொடர்பான பதிவர்களின் கருத்துகளுக்கு எதிராக மடாதிபதிகளிடமிருந்தும், கோயில் பூசாரிகளிடமிருந்தும் மாற்றுக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது இந்த நாளிதழ். அவற்றில் கீழ்க்காணும் கருத்துரையும் ஒன்று:

'கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 12 ஆண்டுக்கு மேற்பட்ட பராமரிப்பு இல்லாத பாழடைந்த கோவில்களில் இறைவன் இருக்கமாட்டார்[தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்னு காலங்காலமாக ஆன்மிகங்கள் சொல்லிவருவது பொய்யா?!]; கோவிலை விட்டு வெளியேறி, தலவிருட்சத்தில் ஓராண்டு காலம் காத்திருப்பார்.

அப்போதும் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை எனில் அதன் பின்னர் சூரிய மண்டலத்தில் அமர்ந்து கோவிலைக் கண்காணித்து வருவார்[எத்தனை பிரமாண்டமான பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள், ஒரு கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருப்பார் என்பது எத்தனை அபத்தம்! இதைவிடவும் வேறு வகைகளில் கடவுளை இழிவுபடுத்திட முடியுமா என்ன?!].

இறைவனுடன், பரிவாரத் தெய்வங்களும் சூரியமண்டலத்தில் அமர்ந்து யாரேனும் குடமுழுக்குச் செய்ய வருகிறார்களா என கண்காணிப்பர். அதன் பிறகும் குடமுழுக்குச் செய்யவில்லை எனில் தெய்வ சாபம் ஏற்படும். இதனால் நாட்டை ஆள்பவர் முதல் மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர். தண்ணீர்ப் பற்றாக்குறை, இயற்கைப் பேரிடர், பேரழிவு நோய்கள் என துன்பங்கள் வரும். பக்தர்களால் பழைய கோவில் கட்டுமானம் திடீரென புதுப்பிக்கப்பட்டாலும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும், 12 ஆண்டுக்கு முன்னதாகவே கும்பாபிஷேகம் செய்யலாம் எனவும் ஆகமங்கள் கூறுகின்றன.'

இவரைப்  போலவேதான் ஏனைய கருத்துரையாளர்களும் ஏற்கனவே சொல்லப்பட்ட புனைந்துரைகளைச் சொல்லிச் சொல்லிச் சொதப்பியிருக்கிறார்கள்.

கோவை கௌமார மடாலயம் குமரகுருபர சாமி மட்டும் குடமுழுக்கின் தேவை குறித்த, கொஞ்சம் எதார்த்தமான காரணங்களை முன்வைத்திருக்கிறார். அது.....

'பல கோவில் கோபுரங்களில், மரங்கள் முளைத்துச் சிற்பங்கள் அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றிப் பக்தர்கள் அனைவரும், அரசுக்குத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்திக் கோவில்களைப் புதுப்பிக்க வேண்டும். அதிகாரிகளை நியமித்துக் காணாமல் போன கோவில் சிலைகளைத் தேடுகிறோம். அழிந்து கொண்டிருக்கிற கோவில்களைப் புதுப்பிக்கத் தனியாக ஆணையமே அமைக்கலாம்.'

இனியேனும், 'புளுகர் திலகம்' தினமலர் திருந்த வேண்டும். தவறினால், வலைத்தளப் பதிவர்கள் திருத்துவார்கள்!!!

===============================================================


வியாழன், 24 டிசம்பர், 2020

நான் கோழையா புத்திசாலியா?![கற்பனை கலந்த உண்மைக் கதை]

“சேலம் போய் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றாள் என் மனைவி மங்கை.

“எதுவும் நடக்கல. இயல்பாதானே இருக்கேன்.” சிரித்தேன். அது அசட்டுச் சிரிப்பாக வெளிப்பட.....

“முகம், கறுத்துச் சுண்டிப் போயிருக்கு. நாலு நாளா என்கிட்ட சிரிச்சிப் பேசவே இல்ல. எதையோ தீவிரமா யோசிக்கிறீங்க. ஏதோ விபரீதம் நடந்திருக்கு. மறைக்காம சொல்லுங்க.” என் தாடையைப் பற்றி நிமிர்த்திப் பரிவுடன் முன் நெற்றி தடவினாள் மங்கை.

“சொல்றேன். சேலம் போன வேலை முடிஞ்சி, நாமக்கல் வர பஸ் ஸ்டாண்டு போயிட்டிருந்தேன். என் பின்னால பைக்கில் வந்த ஒருத்தன் என் மேல மோதிட்டான்.  கீழே விழுந்தேன். அவன் போதையில் இருந்தான். "நான் ஓராமாத்தானே நடந்து வந்தேன். கண்ணை மூடிட்டா வண்டி ஓட்டினே?’ன்னு கேட்க, ’எடமா இல்ல? இன்னும் ஓரமா போக வேண்டியதுதானே’ன்னான்.”

குறுக்கிட்ட என்னவள், “அவனுக்கு ரொம்பத்தான் திமிர்...கொழுப்பு...” என்றாள் உதடு துடிக்க.

“இடிச்சதும் இல்லாம ரொம்பத் திமிர் பேசுறேன்னு சொன்னேன். ’ஆமா, திமிர்தான் பேசுறேன். என்னடா பண்ணுவே’ன்னு வண்டியை ஸ்டேண்டு போட்டுட்டு வந்தான்.....”

“ஐயோ...அப்புறம்.....”

“கூட்டம் கூடிச்சி. எல்லாரும் வேடிக்கைதான் பார்த்தாங்க. "என்னடா, ‘டா’ போட்டுப் பேசுறே. மரியாதையாப் பேசு"ன்னேன். "மரியாதையாவா?"ன்னு நக்கலா கேட்டுட்டு, அசிங்கமா கொச்சை கொச்சையாத் திட்டினான். என்னால, அவனளவுக்குத் தரம் தாழ்ந்து பேச முடியல. பன்றி...நாய்...கழுதைன்னு ஏதோ உளறினேன்.....”

“என்னங்க ஆச்சு? சீக்கிரம் சொல்லி முடிங்க.”

“வாய்ச் சண்டையோட விவகாரம் முடிஞ்சிடும்னு நம்பி அவனை விட்டு விலகி நடக்க நினைச்சேன். என்னை அவன் போக விடல. சரமாரியா என் நெஞ்சில் குத்தினான். எட்டி உதைச்சான். தரையில் மல்லாக்க விழுந்து உருண்டேன். நான் அடிக்கு அடி கொடுக்கத்தான் நினைச்சேன். அதுக்குள்ள ஆயிரம் யோசனை. ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு, ரத்தக் காயம் பட்டு, போலீஸ், நீதிமன்றம்னு.....இப்படி மனசுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவன் இடத்தைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டான். ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் நான் கூனிக்குறுகி ஒடுங்கி நின்னேன். பதிலடி கொடுக்கலையேங்க்கிற ஆற்றாமை என்னை வதச்சுது. அதுக்கு வழியில்லாம போச்சு. அப்புறம் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன்.”

“தெருவில் திரியற ஒரு சொறி நாய் நம்மைக் கடிச்சுடுது. அதை நாம திருப்பிக் கடிக்கலையேன்னு வருத்தப்படுறோமா? அது அவமானம்னு நினைக்கிறோமா? அது மாதிரிதாங்க இதுவும். ஒரு கனவா நினைச்சி மறந்துடுங்க” என்றாள் மங்கை.

“முடியலையே.”

நாட்கள் சில கழிந்தன.

அன்றையச் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது, ‘பிரபல ரவுடி கைது’ என்ற ஒரு செய்தியின் தலைப்பு கண்ணில் பட்டது. ரவுடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

‘தங்கச் சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கலிவரதன் கைது. காவல்துறையால் தேடப்பட்டு வந்த இவன், தான் களவாடிய பைக்கில் போன போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டான். இவன் மூன்று கொலை, ஏழு கொள்ளை, பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவன். இவனால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களில், காவல்துறை ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.’

மங்கையை அழைத்து, அந்தச் செய்தியைப் படிக்கச் சொன்னேன்.

“ஐயய்யோ.....இன்ஸ்பெக்டரையே வெட்டிக் கொன்னவனா? இவனோடவா நீங்க சண்டை போட்டீங்க?”

“நல்லா ஞாபகம் இருக்கு. இவனோடதான்.”

“பதிலடி கொடுக்கலையேன்னு வருத்தப்பட்டீங்களே. உங்க கை அவன் மேல பட்டிருந்தா உங்களை வெட்டிப் போட்டிருப்பான். நம்ம குல தெய்வம்தான் உங்களைக் காப்பாத்தியிருக்கு.” -மாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் என்னவள்.

'மனதைக் குத்திப் புண்படுத்திக் கொண்டிருந்த வருத்தமெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது' என்றுதான் இந்தக் கதையை முடிக்க நினைத்தேன். மனசாட்சி ஒத்துழைக்கவில்லை!
===============================================================
மறுபதிவு[20.04.2015]

புதன், 23 டிசம்பர், 2020

சொர்க்கம் தேடும் துறவிகள்!!!

கி.பி. 3-7 நூற்றாண்டுகளில் களப்பிரரால் ஆதரிக்கப்பட்ட சமண சமயம்,
சைவ சமயத்தவரின் தூண்டுதலால் தமிழ் மன்னர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாலும், தலைமயிரைப் பிடுங்குதல்[தலைமயிரில் இடம்பெறும் நுண்ணுயிர்களைக் கொல்லாதிருக்க], பட்டினி கிடத்தல், மயிலிறகால் தரையைப் பெருக்கிக்கொண்டே நடத்தல் போன்ற கடினமான கொள்கைகளைக் கொண்டிருந்தததாலும் மக்களின் ஆதரவை இழந்தது.

இருப்பினும், முற்றிலும் அழிந்துவிடாமல், சமணத்தின் திகம்பரப் பிரிவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வட தமிழகத்தின் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில், தமிழ்ச் சமணர்களின் எண்ணிக்கை 85,000 (0.13%) ஆகவுள்ளது. 

அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு,  அவாவறுத்தல் போன்ற உயரிய கொள்கைகளுடன் வாழும் இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். எனினும், ஆன்மாவை நம்புவதோடு மறுபிறப்பிலும், வீடுபேறு[சொர்க்கம், மோட்சம்] எய்துவதிலும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.

மோட்சத்தின் மீது இன்றைய சமணர்களுக்கு நம்பிக்கை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூரில் இடம்பெற்றுள்ளது. அது குறித்த செய்தி.....

#விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூரில், 1,200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ 1008 பார்சுவநாதர் ஜெயின் கோயில் (ஜினலாயம்) மற்றும்  தமிழக ஜைனர்களின் தலைமைப் பீடமான ஜினகஞ்சி சமண மடமும் உள்ளன. தமிழகத்திற்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள், இங்கு வந்து செல்வது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்,  கர்நாடகாவிலிருந்து இரண்டு திகம்பர ஜெயின் துறவிகள் தலைமையில், பெண் துறவிகள் (ஆயிர்கை / ஆர்யாகன்னிகள்) மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்திற்கு வந்தனர். இவர்களுடன், 65 வயதாகும் பிரபாவதி மாதாஜி என்ற பெண் துறவியும் வந்திருந்தார். பிரபாவதி மாதாஜி, ஜெயின் மதக் கோட்பாட்டின்படி மேல்சித்தாமூரிலேயே, உண்ணாநோன்பிருந்து (சல்லேகனை மேற்கொள்ளுதல் / வடக்கிருத்தல்), சமாதி நிலையை அடைய முடிவெடுத்து, 2 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவர், நேற்று இரவு (3.5.19) சமாதி நிலையை அடைந்தார். 

இதுகுறித்து, அங்குள்ள ஸ்வஸ்தி ஸ்ரீ லக்ஷ்மிஷேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மாக இளைய சுவாமி கூறியது:

"ஸ்ரீ பிரபாவதி மாதாஜி அவர்கள், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் நீர் குடிப்பதை நிறுத்திவிட்டு, தொடர் தியானத்திலிருந்தார். அவரது ஆத்மா நேற்று இரவு பிரிந்தது. சல்லேகனை விரதம் இருந்து சமாதி ஆனதால், அவரது உடலைக் கொப்பரைத் தேங்காய், சந்தனக் கட்டை, நெய் ஆகியவை கொண்டு சிதை மூட்டி எரிக்கப்பட்டது. இதன்மூலம், அவர் மோட்சம் அடைவார்” என்று தெரிவித்தார்.  

இவ்வாறு மரணம் அடைந்தவர்கள் நேரடியாகவே மோட்சம் செல்வதால், யாரும் அவர் மரணத்தை முன்னிட்டு அழமாட்டார்கள். அதனால், உண்ணாநிலை மரணத்தை,  ‘மரண உற்சவம்’ என்றே அவர்கள் அழைக்கிறார்கள்.# https://www.vikatan.com/spiritual/news/156685-jain-saint-attains-samadhi-by-fasting [May 2019]

மதங்கள் பலவும் சொர்க்கம் உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், அது குறித்த தெளிவானதொரு கருத்தைச் சமணர் உட்பட எவரும் முன்வைத்ததில்லை['மண்ணுலகிலேயே அனைத்தையும் துறந்துவிட்டவர்களுக்கு மோட்சம் எதற்கு?' என்று உள்மனம் எழுப்பும் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை].

#சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம்... அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது[விக்கிப்பீடியா]# இது, இந்துமதம் காட்சிப்படுத்தும் சொர்க்கம்.

நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்:

"மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுதான் எல்லா மதங்களின் குறிக்கோளும் கூட."  

விடுதலை ஆன பிறகு ஆன்மாவின்[இருந்தால்] நிலை என்ன? அதாவது, அதன் செயல்பாடு என்ன?

வெறுமையில் செயலற்று உழன்றுகொண்டிருப்பதா?

முற்றுப்பெறாத ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதா?

உங்களுக்குச் சத்குருவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இக்கேள்விகளுக்கு விளக்கம் கேட்கலாம்.

"எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது" என்றும் சொல்கிறார் அவர்.

செத்துத் தொலைத்தால் உடம்பென்ன, 'நான்' என்ன எல்லாமே இல்லாமல் போகிறது. அப்புறம் என்ன 'மோட்சம்' வேண்டியிருக்கு?

"மோக்ஷம் என்பது இப்படியா? அல்லது அப்படியா? என்றால், மோட்சம் இது மாதிரியும் அல்ல, அது மாதிரியும் அல்ல. இதுவும், அதுவும், எதுவும் இல்லையென்றால் அதுதான் மோட்சம்" என்று இப்படியும் நம்மைக் குழப்புகிறார் வாசுதேவ்.

ஆக, கடவுளை நம்புகிற அல்லது, நம்பாத எல்லாச் சமயத்தவருக்கும் செத்த பிறகு 'சொர்க்கம் அல்லது மோட்சம் புக வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கிறது/ இருக்கிறது. 

இந்தப் பேராசை நமக்கு வேண்டாம். இந்த உலகத்தில் இருக்கும்வரை குறைவான துன்பங்களுடன் நிறைவான இன்பங்களைப் பெற்று வாழ்ந்து முடிக்க ஆசைப்படுவோம். இது போதும்.

போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து!

=============================================================================



செவ்வாய், 22 டிசம்பர், 2020

விந்தைமிகு 'விந்து'!!!

இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்தும் களவாடிய செய்தித் துணுக்குகளின் தொகுப்பு:

*நுண்ணோக்கி மூலம் தன்னுடைய 'விந்து'வையே ஆராய்ந்த Antony van Leeuwenhoek என்பவர், 1677ஆம் ஆண்டு, முதல் முறையாக விந்தணுக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.

*விந்துத் திரவம் வேறு. உயிரணு வேறு. 

*பிராஸ்டேட் சுரப்பியிலிருந்து உற்பத்தியாவது வழவழப்பான விந்துத் திரவம். அந்தத் திரவத்தில் இடங்கொண்டிருப்பவை[மிதப்பவை] உயிரணுக்கள்; கரு உருவாகக் காரணமானவை; கருமுட்டையை நோக்கி நீந்திச் செல்பவை.  

*தலை, நடுப்பகுதி, வால் என்று மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டது உயிரணு. பரம்பரைக் குணங்கள் இடம்பெற்றிருப்பது தலைப்பகுதியில்.

*சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்துச் செல்கள்[உயிரணுக்கள்] அதில் உள்ளன என்று அர்த்தம். விந்துச் செல்கள் குறைவாக இருந்தால் விந்து மிகவும் நீர்த்துப்போய் இருக்கும்.

*உடம்பின் தட்பவெப்ப நிலையைப் பொருத்து, வெளியேற்றப்படும் விந்து கெட்டியாகவோ வழுக்கும் திரவமாகவோ இருத்தல்கூடும். புகை பிடித்தல், அதிக வெப்பத்தில் புழங்குதல்[மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துதல் உட்பட] போன்ற பழக்கங்கள் நீர்த்துப்போகச் செய்யும்.

*ஒரு சராசரி ஆண் தன் வாழ்க்கையில் சுமார் 17 லிட்டர் விந்தணுக்களை வெளியேற்றுவதற்கான திறன் படைத்தவன் என்று உடல்கூற்று & மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வயதாகும்போது விந்தணு உற்பத்தி குறைகிறது.

*உலகச் சுகாதார அமைப்பு(WHO), மி.லி.க்கு 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது 39 மில்லியன் விந்தணுக்கள் இருப்பதானது ஒரு பெண்ணைக் கருவுறச்செய்து குழந்தை உண்டாக்கப் போதுமானது என்கிறது. 10 மில்லியனுக்கும் குறைவாக இருப்பது மலட்டுத்தன்மையைக் குறிக்கிறது.  தற்போது இந்தியாவில் 27.5 மில்லியன் தம்பதிகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

*ஆஜானுபாகுவான ஆண்கள் எல்லாரிடமும் வீரியம் நிறைந்த விந்து இல்லையாம். கட்டைக் குரல் கொண்டவர்கள் நிலையும் இதுதானாம்.

*புணர்ச்சியின்போது, மிகக் குறைந்த அவகாசத்தில் விந்து வெளிப்படுவதை, 'விந்து முந்துதல்' என்பார்கள். அதற்கான காரணங்களாக அடுத்து வருபவை  சொல்லப்படுகின்றன.

பதற்றம், மிகை வெப்பம், நீரிழிவு, நரம்புக் கோளாறு, பிராஸ்டேட் சுரப்பியில் கோளாறு, பயம் போன்றவை.

*கருவுறாமை நிகழ்வுகளில் ஆண்களின் பங்களிப்பு 50 சதவிகிதம் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*ஓரு முறை வெளியேறும் விந்துவின் அளவு சுமார் 1.5 முதல் 5 மில்லிலிட்டர்[2 முதல்மில்லிலிட்டர் என்றும் சொல்லப்படுகிறது]ஆகும்.

*பாய்ச்சப்பட்ட விந்துவின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (பாய்ச்சப்பட்ட இடத்தைப் பொருத்தது).

*இயல்பான வாழ்க்கைச் சூழலில், ஓர் ஆண் மகன் குறைந்தபட்சம் 5000 முறை விந்துவை வெளியேற்றுகிறான்.

*விந்து உற்பத்தியானது விரைகளில் நிகழ்கிறது. அவை நிறைந்திட 64 நாட்கள் தேவை. பின்னர், குறைவதும் நிறைவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

*உற்பத்தியானதிலிருந்து பாய்ச்சப்படும்வரையிலான அதன் ஆயுட்காலம் 2.5 மாதங்கள்.

*விந்துவுக்கு வாசனை உண்டு; சுவையும் உண்டு. ஆணுக்கு ஆண் அவை மாறுபடும்.

* ஒரு தேக்கரண்டி விந்துவின் பெறுமானம்: 7 கலோரி.

*ஒரு சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் விந்து ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
===============================================================

திங்கள், 21 டிசம்பர், 2020

"போய்யா...நீயும் உன் கடவுளும்"!

அமேசான் கிண்டிலில் இடம்பெற்றுள்ள என் நூல்களில் 'பத்து ரூபாயில் கடவுள்' என்னும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அதிலுள்ள முதல்[முதல் தரமானதும்கூட] கதைக்கான தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. தலைப்பை மட்டும் மாற்றியமைத்து["போய்யா நீயும் உன் கடவுளும்"] ஏற்கனவே வாசிக்காதவர்களின் வாசிப்புக்காகப் பதிவு செய்துள்ளேன்.


பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.

சிக்குப் பிடித்த தலைக்குச் சீகக்காய் தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களில் கணிசமானவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப்போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, இவர்களில் பலரும் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறியவர்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்.

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய்[அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு அவர்கள்  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்கமாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காக முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனைவானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய் கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?

அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலையவிட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நான் நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

''இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

''கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.”[கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே... போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

குற்றங்களும் கடந்த காலக் கொடூரத் தண்டனைகளும்!!!


சிலுவையில் அறைதல்:
சிலுவையில் அறையப்படுவது பண்டைய மரணதண்டனை முறைகளில் மிகவும் கொடூரமானது என்று அறியப்பட்டுள்ளது. இது கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்தது. முக்கியமாக, செலூசிட்ஸ், கார்தீஜினியர்கள், பெர்சியர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்தத்  தண்டனை முறையைப் பின்பற்றி வந்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெரிய மரச் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கவிடப்படுவார். இறக்கும்வரை ஊணுறக்கமின்றிச் சித்ரவதைப்படுவார். ஏசுவுக்கு இததண்டனை அளிக்கப்பட்டதென்பது யாவரும் அறிந்ததே.

தோலை உரிப்பது: 

இது இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனையாகும். தோல் உரிக்கப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல் அகற்றப்பட்ட பிறகு, தண்டனைக்கு உட்படுத்தபட்டவர் தூக்கி எறியப்படுவார்கள். வலியை அதிகரிக்க உப்பு போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இத்தண்டனை வழக்கத்தில் இருந்தது.

நொறுக்கும் சக்கரம்:

இத்தண்டனை மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது. கிரேக்கத்தில் உருவாக்கப்பட்ட இது, அங்கிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவீடன் போன்ற பிற நாடுகளிலும் பரவியதாகச் சொல்லப்படுகிறது. 

நீண்டதொரு மரச் சக்கரத்தில் தண்டிக்கப்படுபவரின் உறுப்புகள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கும். அவருடைய எலும்புகள் அனைத்தையும் உடைக்க, சக்கரத்தின் இடையிடையே சுத்திகளும் இரும்புக் கம்பிகளும் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட நேரம் சித்திரவதைப்பட்டுத்தான் அவர் சாக வேண்டும்.

குடலை உருவுதல்:

திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது. குடலும் மற்ற முக்கிய உறுப்புகளும் ஒவ்வொன்றாக உடலில் இருந்து அகற்றப்படும். இது இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

கழுமரம்:

இது 15ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. கூர்மையான கம்பத்தில் உட்காரும்படி தண்டனைக்குரியவர் கட்டாயப்படுத்தப்படுவார். அது, மலக்குடல் வழியாகவும், யோனி வழியாகவும்,  வாய் வழியாகவும் துளையிட்டு வெளியேறும். இரத்தப்போக்கும் காயங்களும் ஏற்பட்டுத் தண்டனைக்குரியவர்  உயிர் துறப்பார். 

இது ரோமானியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு மிகவும் பிடித்தமான தண்டனை முறையாகும். இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. தமிழகத்தில் சமணர்களையும் பௌத்தர்களையும் சித்ரவதை செய்து கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

யானை மிதித்தல்:

குற்றம் சாட்டப்பட்டவர் கனமான கல்லோடு பிணைக்கப்பட்ட நிலையில், யானையால் மிதிபட்டு உடல் நசுங்கிச் சாவார். இத்தண்டனை முறை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியராலும் வியட்நாமியராலும் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது.

தொங்கவிட்டுத் துண்டித்தல்:

ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் தலைகீழாக தொங்கவிடப்படுவார். ஒரு பெரிய கத்தி கொண்டு அவர் இரண்டாக அறுக்கப்படுவார். இறுதியில் தலையும் பிளக்கப்படும். தலை துண்டிக்கப்படும் வரை அவர் உயிருடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். 

ஆயிரம் வெட்டுகள்:

"நீடித்த மரணம்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் சீனாவில் லிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது கி.பி 900இல் குற்றவாளிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான தண்டனையாகும். இந்த முறையில் ஒருவரின் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு சாகும்வரை வெட்டப்படும்.  வெகுஜனக் கொலை, எஜமானரைக் கொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அரசர்கள் மக்களை அச்சுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர். சில சமயங்களில் சிறு குற்றங்களுக்காகவும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சில பேரரசர்கள் இந்தத் தண்டனையைத் தங்கள் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

நம் கேள்வி:

விதம் விதமானதும் படுபயங்கரமானதும் கொடூரமானதுமான தண்டனை முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்குக் கற்பித்தவர் யார்?

வேறு யார்? அவரேதான்! அவரின்றி அணுவும் அசையாதே!!

ஹி>>>ஹி>>>ஹி!!!

===============================================================

உதவி: https://tamil.boldsky.com/


சனி, 19 டிசம்பர், 2020

சரணம்...சரணம்! ஜெயலலிதா சாமி சரணம்!!

'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் புகழ்சேர்க்கும் வகையில் தஞ்சை மாநகர ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவரும், தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சுவாமிநாதன் மேலவீதியில் கோவில் கட்டி உள்ளார்.'

இது 2016ஆம் ஆண்டுச் செய்தி. [https://www.dailythanthi.com/Districts/Chennai/2016/12/14022336/She-built-a-temple-in-Tanjore-Digg-PersonalityShe.vpf]

“புரட்சித்தலைவி அம்மா ஆலயம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஜெயலலிதாவின் பொன்மொழிகளுள் ஒன்றான “மக்களால் நான்; மக்களுக்காக நான்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்தக் கோவிலில் 24 மணி நேரமும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர் சுவாமிநாதன் கூறுகையில், “ஜெயலலிதா மறைவு என்னை மிகவும் பாதித்தது. நான் 1990ஆம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 19ஆவது வார்டுச் செயலாளர், வட்டப் பிரதிநிதி ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளேன். தற்போது ஜெயலலிதா பேரவைத் துணைத்தலைவராகவும், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி, மாவட்டக் கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் இயக்குனராகவும் உள்ளேன். சாதாரணத் தொண்டனான எனக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகு பார்த்தார். மேலும், ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, மக்களுக்குத்  தொடர்ந்து  நல்லது செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்த எண்ணம் தான் தற்போது அவருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.

இவர் அம்மையாருக்குக் கோயில் கட்டி, உயிர்களைப் படைத்துக் காத்துப் பராமரிக்கிற சக்தி வாய்ந்த தெய்வங்களின் வரிசையில் அவரைச் சேர்த்தது 2016ஆம் ஆண்டில்.

நடப்பில் உள்ளது 2020ஆம் ஆண்டு.

இப்போது, திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அவருக்குக் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. 

இப்பணியை மேற்பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம், "அதிமுகவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள், ஜெயலலிதாவை  அவர்கள் குடும்பத்துக் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். இந்தக் கோயிலில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோாின் முழு உருவ வெண்கலச் சிலைகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இந்தக் கோயிலில் அனைவரும் வழிபடும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது" என்று கூறியிருக்கிறார். https://www.hindutamil.in/news/tamilnadu/612619-temple-for-jayalalithaa.html

சுவாமிநாதன் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் கட்டியது தஞ்சையில். இப்போது அமைச்சர் உதயகுமார் மேற்பார்வையில் அதே சாமிக்கு மதுரை திருமங்கலத்தில் கோயில் கட்டப்படுகிறது.

அமைச்சர் அவர்களே,

"இருக்கிற சாமிகள் போதாதா? இந்த ஜெயலலிதா சாமி வேறயா?" என்று நாத்திகர்கள் நக்கல் செய்யக்கூடும். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.

எத்தனை எத்தனையோ சாமிகள் இருந்தும், இத்தனைக் காலமும் நம் மக்கள் பட்ட/படும் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. அம்மா சாமியாகிவிட்டதால். அத்தனைத் துன்பங்களையும் அவர் தீர்த்து வைப்பார். மக்கள் எல்லா நலமும் பெற்றுச் சுகபோகமாக வாழ்வார்கள். ஆகையினால்.....

தஞ்சையிலும் திருமங்கலத்திலும் மட்டும் கோயில் இருப்பது போதாது. மாவட்டந்தோறும், முடிந்தால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு வட்டத்திலும் ஜெயலலிதா சாமிக்குக் கோயில் எழுப்புங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிட்டும்!

சாமியே சரணம்! ஜெயலலிதா சாமி சரணம்!!

===============================================================


வெள்ளி, 18 டிசம்பர், 2020

'யோகாவும் உடலுறவும்'...ஜக்கி வாசுதேவ்!


ஜக்கி வாசுதேவிடம் 'வலைத்தமிழ்'த் தளம் தொடுத்த வினாவும் அதற்கான அவரின் பதிலும்: அடைப்பு[  ]களுக்குள் நம் விமர்சனம்.

வலைத்தமிழ்:

'யோகா பயில்கிறவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் அறவே கூடாது என்று வற்புறுத்தப்படுகிறதே ஏன்?'

கவனியுங்கள், பாலியல் உணர்வு அறவே கூடாதா என்பது கேள்வி.

ஜக்கி:

உடலியல் சார்ந்த ஒன்றை நீங்கள் புனிதம் என்று போதிக்கவும் வேண்டாம்; ஆபாசம் என்று அவமதிக்கவும் வேண்டாம். அதன் வழியாகவே நீங்கள் வாழ்கிறீர்கள். அதற்குத் தேவையில்லாத அலங்காரங்களையோ, அசிங்கங்களையோ நீங்கள் புகட்டாதிருந்தால் அது அதற்கேயுரிய அழகோடு திகழும்[அழகோடு திகழும், சரி. அதனால், யோகாவுக்கு அது தடையில்லை என்கிறாரா? இல்லை, தடை விதிக்கிறாரா? தெளிவான பதில் இல்லை]

இரு பாலினங்களுக்கும் இடையிலான உடல் தேவை என்பது இனப்பெருக்கத்தைப் பொருத்தவரை சரிதான். ஆனால், அதைக் கடந்து உங்கள் தேடல் இருக்குமேயானால்[உடலுறவு மூலம் இன்பம் கிடைக்கிறது. அதற்கு மேல் யாரும் எதையும் தேடுவதில்லையே. கேள்விக்குத் தொடர்பில்லாத கருத்து]  அது போதாது.

உங்கள் சமூகத்திலேயே சிலர் அறிவு ரீதியாக இயங்கி, அந்த அறிவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய மனிதர்களுக்கு பாலுறவின் தேவை குறைந்துவிடும்['பாலியல் தேவையைக் குறைப்பது எப்படி?' என்பதல்ல கேள்வி]. உடல் ரீதியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு அந்தத் தேவைகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களை எதனுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ அதைச் சார்ந்துதான் அதிகம் செயல்படுவீர்கள்.

மிக அடிப்படையானதும், எளிமையானதுமான ஒன்றைச் சரியென்றும் தவறென்றும் இனம் பிரிக்கிறீர்கள். பாலுறவைத் தவறென்று சொல்வதற்கு ஒரு தத்துவம்[இதனால் பலவகையிலும் தொல்லைகள் நேர்வதால், பல நேரங்களில் இதைத் தவிர்க்கத் தோன்றுகிறது. மற்றபடி, இதில் ஏது தத்துவம்?]  வேண்டும். அதைத் தொடரவும் வேண்டும். இந்தச் சிக்கல்கள் எல்லாம் அவசியமில்லை. அதன் எளிமையான தன்மைகளை நீங்கள் பார்ப்பீர்களானால், அது உங்கள் வாழ்வில் ஒரு சிறிய அம்சம். அதை நீங்கள் பெரிதுபடுத்தினீர்களானால், அதுவே உங்கள் வாழ்வின் முக்கிய அம்சம் ஆகிறது[இவை பற்றி மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. கேள்விக்கான பதில் மட்டுமே தேவை] .

யோகா என்றால் 'ஒன்றாதல்'[உடல், மனம், எண்ணம் ஆகிய மூன்றுமா? வேறு எதனுடனுமா?] என்று பொருள். காதல் என்றாலும் அதுதான் பொருள். பாலுறவு என்றாலும் அதுதான் பொருள்.

உங்கள் உடல், மனம், எண்ணம் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து நீங்கள் தேடும்போது[எதை?] அதனை யோகா என்கிறோம். இந்த ஒருமையை[அதென்ன ஒருமை? யோகாவா, அல்லது, எதையோ தேடும்போதுன்னாரே அதுவா?] நீங்கள் உடலளவில் தேடும்போது நீங்கள் என்ன செய்தாலும் அது இரண்டாகத்தான் தெரியும். பாலுறவு என்கிற பெயரில் மக்கள் செய்யும் அத்தனை விசித்திரங்களுமே[?] ஏதாவது ஒரு விதத்தில் ஒன்றுபட்டுவிட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால், அது நிகழவே நிகழாது. சில விநாடிகளுக்குப் போலியானதோர் ஒருமை நிகழும். பிறகு இருவரும் பிரிந்துவிடுவார்கள்.

வினா எழுப்பிய வலைத்தளக்காரர்கள் என்ன நினைத்தார்களோ, வாசிக்கும் ஜக்கி பக்தர்கள் மெய் சிலிர்ப்பார்கள்!

ஹ...ஹ...ஹ!!!

=============================================================== 

https://www.valaitamil.com/udal-uravu-kuriththa-ungal-paarvai_12223.html

வியாழன், 17 டிசம்பர், 2020

இந்துமதம் வளர்ந்ததா, வளர்க்கப்பட்டதா?!

தமிழர்கள் பௌத்த, சமண சமயக் கொள்கைகளைக் கடைபிடித்து  மனித நேயம் போற்றி வாழ்ந்தவர்கள்.

இந்துமத[அன்றைய சைவ சமயம்]மதத்தின் கொடூர விதிமுறைகளையும், மூடச் செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் அம்மதவாதிகளால், மன்னர்களின் துணையுடன் பல்லாயிரம் பவுத்தம் சமணம் ஆகிய சமயங்களைச் சார்ந்த தமிழர்கள் உயிருடன் கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு.

கழுவேற்றம் என்பது சிலுவையைவிடக் கொடூரமான மரணதண்டனை முறையாகும்.

கூர்மைப்படுத்தப்பட்ட கழுமரத்தில் எண்ணெய் தடவி, கழுவேற்றப்படுபவனைப் பிடித்து நிர்வாணமாக்கி, குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணை தடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலைத் துளைத்துக்கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.

சமணர்களும் பௌத்தர்களும் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது.

இரண்டு நன்னெறிச் சமயங்களும் இறைமறுப்பைக் கொள்கைகளாகக் கடைபிடித்து மனிதர்களை மனிதர்களாக வாழ வழிசெய்தவை.

திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் சமண மதத்தவர் என்பது பெரும்பான்மையான ஆய்வாளர்களின் கருத்து..

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி எனும் மூன்றும் சமண சமயச் சார்புடையவை.

மணிமேகலையும்,குணடலகேசியும் பௌத்த சமய நூல்கள்.

ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமயக் காப்பியங்களே.

எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள். பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை தவிர எஞ்சிய ஒன்பது பாடல்களும் பௌத்த, சமண சமயச் சார்புடையவை ஆகும்.

பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் அனைத்து நூல்களுமே சமண சமயத்தவரால் இயற்றப்பட்டவை.

பழமையான தொல்காப்பியம் சமண நூல்.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.

நீதிநூல்களில் ஏலாதி, சிறுபஞ்சமூலம், நாலடியார் பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும். சமண சமயத்தவர் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை.

இந்து மதம் வர்ணாசிரம முறையில் வாழவேண்டும் என்கிறது. பௌத்தமும், சமணமும், மனிதன் எந்தவொரு பாகுபாடும் இன்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்கின்றன.

மக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சைவ மதத்தவர்கள் மன்னர்களின் ஆதரவுடன், பல்லாயிரக் கணக்கில் பௌத்த, சமணத் தமிழர்களைக் கழுவேற்றியது மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், அவர்களின் உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏவி மிதித்துக் கொல்லுதல் போன்ற பல்வேறு தீமைகளைச் செய்தார்கள்.

இந்துமதத்தை[சைவ சமயம்]த் தழுவாத காரணத்தினால் வழங்கப்பட்ட இம்மாதிரித் தண்டனைகளுக்கு அஞ்சித்தான் அன்றைய தமிழர்களில் பலரும் இந்துமதத்துக்கு மாறினார்கள்.

இந்துமதம் வளர்ந்த/வளர்க்கப்பட்ட லட்சணம் இதுதான்!

==========================================================================================

  நன்றி: 

புதன், 16 டிசம்பர், 2020

தீவிர உடற்பயிற்சியால் விளையும் தீமைகள்!!!

அவரவர் உடல்திறனுக்கு ஏற்ற வகையில், உரிய முறையில் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உண்டு என்பது உண்மை. ஆனால், தேவைக்கு அதிகமான தீவிர உடற்பயிற்சியால் பெரும் தீமைகள் விளைகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும்.

பல்வேறு தளங்களில் தேடிப் பொறுக்கித் தொகுத்த அவ்வகையிலான தீமைகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

தீமைகள்:

*கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம்.

*பெண்கள், கடின உடற்பயிற்சியைத்  தொடர்ந்து செய்தால், மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் உள்ளாக நேரிடலாம்.

*ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு, விந்து ஊற்பத்தியில் குறைபாடு போன்றவை ஏற்பட்டு ஆண்மைத்தன்மை குறைந்துவிடக்கூடும்.

*இம்மாதிரிப் பயிற்சியால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது.

*இதன் மூலம் ஒருவரின் வாழ்நாளே குறைந்துவிடலாம் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

*இதனால் அப்போதைக்குப் பாதிப்பு இல்லையென்றாலும்,  வயது கூடும்போது  மூட்டுகளில் பிரச்சினை, தசை நார் கிழிவு போன்ற கெடுதிகள் உண்டாகலாம்.

*திக உடற்பயிற்சியால் உடலின் சக்தியில் பெரும்பகுதி செலவாகிவிடும். அதன் விளைவாக உடல் சோர்வு உண்டாகும்.  இரவில் 7-8 மணி நேரம் தூங்கி, காலையில் நல்ல உணவு உண்டாலும்கூட இந்தச் சோர்வு நீங்காது. முன்பு 5 நிமிடங்களில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது அதிக நேரம் தேவைப்படும்.

*உடம்பு வலி அதிகமாவதோடு, பயிற்சியை நிறுத்தினால் வலி அதிகரிக்கும். கடுமையான தலைவலியும் தாக்குதல் தொடுக்கக்கூடும்.

*தசைகளில் பிடிப்பு, முதுகு வலி, சுளுக்கு போன்றவையும் ஏற்படும்.

*அதீத உடற்பயிற்சியை மேற்கொண்டால், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியின் அளவு குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றும்.

*பிறப்புறுப்பு சுருங்கும் அபாயமும் உள்ளது. ஆண்களுக்கு விதைகளும் சுருங்கும்.

*பெண்களுக்குக் கருத்தரிப்பதில் பிரச்சனை உண்டாகும். 

*அதிக நேரம் உடற்பயிற்சி மற்றும் ஓட்டத்தில் ஈடுபடுபவர்களின் குடல் பாதிக்கப்பட்டு “என்டோடாக்ஸின்’ எனப்படும் பாக்டீரியாவால் உண்டாக்கப்படும் நச்சுப்பொருள் ரத்தத்தில் கலந்து, அது “செப்சிஸ்’ நோய்க்குக் காரணமாக இருப்பதும் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

*உடற்பயிற்சி அளவுக்கு அதிகமானால், பசியின்மையால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் உடம்புக்குப் போதுமான சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

எது சிறந்த பயிற்சி?

<>சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும கூட, நடந்து செல்வதையும் சைக்கிளில் செல்வதையும் பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். 

<>'நடைப்பயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நடைப்பயிற்சியைப் பழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது; நுரையீரல் சுவாசம் சீராகிறது; செரிமானக் கோளாறு சீராகிறது; உடல் வலுப்படுகிறது' எங்கிறார்கள் மருத்துவர்கள்.

<>நடைப்பயிற்சி என்பது[அவரவர் தேவைக்கேற்ப] நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கும் சமமாகும். ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதும் நல்ல உடற்பயிற்சியே.

<>வீடடு வேலைகளைச் செய்தல், விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடுதல் போன்றவையும் விரும்பத்தக்க பயிற்சிகளாகும்.

<>நடைப்பயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சைச் சற்று அதிகப்படுத்துகிறோம்; இரத்தச் சுழற்சி உடலின் எல்லாப் பாகங்களின் இயக்கத்தையும் அதிகப்படுத்திப் பின் சம நிலைக்கு வருகிறது. 

ஆக, தீவிரப் பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல; சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ் உருவாக்குவதற்கான தேவை இருந்தால் மட்டுமே அதனை மேற்கொள்ளலாம். அதுவும் முறையாக ஒரு பயிற்சியாளரின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.

எனவே, உங்களின் உடல் திறனுக்கேற்ற முறையான எளிய பயிற்சிகளைச் செய்து பயன் மிகப் பெற்றிட வாழ்த்துகள்!

வருகைக்கு நன்றி.

===============================================================