Thursday, September 28, 2017

கர்னாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு தமிழனின் பாராட்டும் எச்சரிக்கையும்!

மூடநம்பிக்கைகள் நிறைந்த இந்திய மண்ணில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பகுத்தறிவாளராக இருப்பது அரிதினும் அரிதான ஓர் நிகழ்வாகும்.
மகாராஷ்ட்ராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

மத வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்திரீகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும். குறிப்பாக, மங்களூரு குக்கே சுப்பிரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு[மடே ஸ்நானா], நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்குத் தடை விதிக்கப்படும்  என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2013ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார்.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன; மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டின. எனினும்.....

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முற்போகுவாதியான சித்தராமையாவுக்கு கன்னட எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்தனர்; தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜோதிடம், வாஸ்து உள்ளிட்ட மூடநம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தலைமையில் சட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு இந்தச் சட்டத்துக்கு முழு வடிவம் அளிக்கப்படும். மதப் பெரியோர்கள், அரசியல் கட்சியினர், முற்போக்கு அமைப்பினர், மடாதிபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்” என்று சித்தராமையா அறிவித்துள்ளார்[தி இந்து 28.09.2017].

சித்தராமையாவின் இந்த அறிவிப்பை முற்போக்குச் சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்றுள்ளனர்.

துணிச்சலானதொரு  நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் சித்தராமையாவை மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்தப் ‘புண்ணிய பூமி’[?] யான பாரத தேசத்தில் மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் பகுத்தறிவாளர்கள் கணிசமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இம்மாதிரிப் பழக்க வழக்கங்களை வேரோடு களைந்தெறியச் சட்டம் இயற்றவுள்ள சித்தராமையாவுக்கு, மூடத்தனங்களை நம்பிப் பிழைப்பு நடத்துவோரால் பெரும் தீங்குகள் நேரக்கூடும்; உயிருக்கும் பங்கம் நேரலாம். மிக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
=====================================================================================

தமிழகத்திலுள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள், கர்நாடகா அறிஞர்களை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ்நாட்டிலும் இம்மாதிரி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை இயற்றிடுமாறு தமிழக அரசை வற்புறுத்துதல் வேண்டும்.

செய்வார்களா?

தமிழ்நாடு அரசு செவி சாய்க்குமா? மாறாக, மூடநம்பிக்கைத் திணிப்புச் சட்டத்தை இயற்றுமா?!

நடுவணரசுக்கே வெளிச்சம்!!!
=====================================================================================
மீண்டுமொரு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளுவதால், அவசரகதியில் எழுதப்பட்ட பதிவு இது. பிழை காணின் மன்னியுங்கள்.

கருத்துரை வழங்கும் அன்பு நண்பர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். சில நாட்கள் கழித்து மீண்டும் நன்றி சொல்வேன்.

நன்றி...நன்றி. Saturday, September 23, 2017

'ஷீரடி ஃபக்கீர்’, பகவான் சாய்பாபா ஆனது எப்படி?!

'சாய் பகவான் நல்ல பொன் நிற மேனியும் நீல நிறக் கண்களும் கொண்டவர். இவர் பல் துலக்கியதை எவரும் பார்த்ததில்லை. இவரின் பற்கள் காறை படிந்து நிறம் மாறிக் காட்சியளிக்கும்'.....ஒருவர் எளிய மனிதனாக இருந்து உலகம் போற்றும் பகவானாக உயர்வதற்கு இதுவும் ஒரு தகுதி போலும்!
மழைக்குக்கூட இவர் பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கியது இல்லை. ஆனாலும், பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே யூகித்துவிடும் அபூர்வ ஞானசக்தி இவருக்கு இருந்ததாக ஏராளமானோர் நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள்.

இந்தப் பகவான் சிறு வயதில், அழுக்கு உடையுடன் காடுகளில் திரிவதும் மரங்களின் அடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதுமாக இருப்பாராம். மற்ற சிறுவர்கள் இவரைக் ‘கேணப் பக்கிரி’ என்று எள்ளி நகையாடுவார்களாம். 

ஆனால், பயாஜி என்பவரோ இவரைக் காண நேர்ந்தபோதெல்லாம், ‘இவன் சாதாரணச் சிறுவன் அல்ல. இவனிடம் அற்புதமான சக்தி உள்ளது. தெய்வத்தன்மை நிறைந்திருக்கிறது. கடவுளின் அவதாரம் இவன்’ என்று நினைத்தாராம்; பிறரிடம் சொன்னாராம். 

இவ்வாறே மேலும் பல பேர் நினைத்தார்களாம்; சொன்னார்களாம். விளைவு.....

இளம் பருவத்திலேயே இவருக்குப் பல சீடர்கள் உருவானார்கள். ஞானி என்றும் மகான் என்றும் பலரும் போற்றத் தலைப்பட்டார்கள். ஃபக்கீர், பகவான் சாய்பாபா ஆனார்.

இவர் நிகழ்த்திய அற்புதங்கள் அளவிறந்தவை[ஆதாரம்: ‘சீரடியும் சீடர்களும்’, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.முதல் பதிப்பு: 2011.] என்கிறார்கள். அவற்றில் சில.....

* தனக்கிருந்த ஆஸ்துமா நோயைக் குணப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் செத்த சவமாகக் கிடந்து[பிணத்துக்குக் காவல் இருந்தவர் ஒரு பக்தர்] பின்னர் உயிர்பெற்று எழுந்தாராம்.

* தான் 72 பிறவிகள் எடுத்ததாக இவர் சொல்லிக்கொள்வதுண்டு.

*“நான் புனித நீராடுவதற்காகப் பிரயாகை செல்ல வேண்டும்” என்று சாய் பாபாவிடம் ஒரு பக்தர் சொன்னார்.

“அங்கெல்லாம் எதற்குப் போகிறாய்? இங்கேயே பிரயாகை இருக்கிறது” என்றார் இவர்.

பாபா ஏதோ அற்புதம் நிகழ்த்தப்போவதைப் புரிந்துகொண்ட பக்தர் இவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்போது....

கூடியிருந்தோர் கண்டு வியந்து புளகாங்கிதம் பெறும் வகையில் சீரடி பகவானின் கட்டை விரல்களில் கங்கையும் யமுனையும் பெருக்கெடுத்ததாம். “பாபா...பாபா” என்று பக்தி முழக்கம் செய்த பக்தகோடிகள் புனித நீரைத் தத்தம் தலைகளில் அள்ளித் தெளித்துப் பாவம் போக்கிக்கொண்டார்களாம்[வெள்ளத்தில் முங்கிக் குளித்துப் பரவசப்பட்டார்கள் என்று ஏனோ நூலாசிரியர் குறிப்பிடவில்லை!].

* “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றார் ஒருவர் இவரிடம்.

“உங்களுக்குக் கீழேயே இருக்கிறது” என்றார் சீரடி.

குழப்பமடைந்த அவர், தான் அமர்ந்திருந்த பாறையின் மேற்பரப்பை மெல்லச் சுரண்டினார். என்ன ஆச்சரியம்! பாறையிலிருந்து இளநீர் போன்ற சுவையான நீர் பெருகி வழிந்தது. நீர் கேட்ட ‘நானா’ என்ற அந்தப் பக்தர் தன் தாகம் தீரப் பருகினாராம்.

*தன்னைச் சரணடைந்த பக்தரொருவர் நடைப்பயணம் மேற்கொண்டபோது, வழியிலிருந்த ஒரு தேனீர்க் கடைக்காரரிடம் பயணிக்குத் தேனீர் வழங்குமாறு அசரீரியாகச் சொன்னாராம் பகவான் சாய். பகவானின் அதியற்புத சக்தியை எண்ணி எண்ணிப் பயணி அகமகிழ்ந்தாராம்.

*பிச்சைக்காரராக நாயாக எல்லாம் உருமாறித் தன் பக்தர்களை இவர் சோதித்ததுண்டு.

*இவரின் அருட்பார்வை பட்டு இவரிடம் மேலாளராக இருந்த ஒருவரின் கண் வலி காணாமல் போனது.

*பாம்பு தீண்டி, உடம்பில் நஞ்சு ஏறிக்கொண்டிருந்த ஒருவரை இவரிடம் தூக்கிவந்தார்கள். “ஏறாதே...இறங்கு” என்று இவர் கட்டளை இட்டவுடன், நஞ்சு மேலே ஏறாமல் முற்றிலுமாய் இறங்கிவிட நோயாளி முழுமையாகக் குணமடைந்தார்.

* படிப்பறிவில்லாத பாபா ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார்.

மேற்கண்டவை போல எத்தனையோ  அடுக்கடுக்கான அதிசயங்களை இவர் நிகழ்த்தியதாக நூலாசிரியர் பரவசப்பட்டிருக்கிறார்; சீரடியாரின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஆக,

ஃபக்கீர் என்னும் சாதாரண மனிதரை, மகான் ஆக்கியவை பொய்யும் புனைந்துரையும் விரவிய இம்மாதிரி நூல்களும் இவை போன்ற ஊடகங்களும்தான்.

பிறருக்கு உரியவற்றை அபகரிப்பதும் விபச்சாரம் செய்வதும் போதைப் பொருள்களை விற்பதும் குற்றங்கள் என்று கருதும் அரசு, ஆன்மிகத்தின் பெயரால் அவதாரங்களையும் மகான்களையும் இட்டுக்கட்டுதல் மூலம் உருவாக்கி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும்  செயலைக் குற்றமாகக் கருதுவதில்லை. இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோரைத் தண்டிப்பதும் இல்லை.

இந்த அவல நிலை மாறுவது எப்போது?
=====================================================================================Tuesday, September 12, 2017

டுபாக்கூர் வாஸ்துவும் டூப்ளிகேட் கடவுள்களும்!!!

‘வாஸ்து’வுக்குச் 'சவக்குழி’ தோண்டும் நீண்ட[மிகப் பழைய] பதிவு. பொறுமையுடன் படியுங்கள்.
நவக்கிரகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ’ஜோதிடம்’ கட்டமைக்கப்பட்டது போல, எட்டுத் திசைகளையும் ஆதாரக்  களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாஸ்து என்பது அனைத்து வாஸ்து தோஸ்துகளும் அறிந்ததே.

வாஸ்து பற்றி விஸ்தாரமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ’திசை’யைப் பற்றி அத்துபடியாய் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

திசை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கும் [உயர்திணை அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்] இன்னொரு பொருளுக்கும் இடையிலான நேர்க்கோணத்தைத் [கோடு] திசை என்கிறார்கள். [மன நிறைவு தரும் விளக்கம் ஆங்கில விக்கிபீடியாவில்கூட இல்லை]

'The line along which anything lies, faces, moves etc.....' என்கிறது  www.definitions.net.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகியவற்றை, அல்லது பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான பொருள்களைப் புலன்களால் அறிவது போல, திசையும் அறியத்தக்க ஒன்றா?

இல்லை என்பதே அறிவியல் தரும் பதில்.

ஆயினும், பொருள்கள் நிலைகொண்டிருக்கும் இடத்தை அல்லது அவற்றின் இயக்கத்தின் போக்கை அறிய நாம் கிழக்கு முதலான திசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உருண்டை வடிவத்தில் சுழன்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியில் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

தோன்றி மறைகிற சூரியனை முன்னிலைப்படுத்தி, அது உதயமாகிற நேர்க் கோணத்தைக் கிழக்கு என்றார்கள்.

எனவே, சூரியன் தோன்றுகிற பக்கம் கிழக்கு ஆயிற்று.

கிழக்கில் சூரியன் தோன்றுகிறான் என்பது தவறு. காரணம், உண்மையில் கிழக்கு என்று எதுவும் இல்லை என்பதே. [பாபு என்பவர், ‘செம்புலப் பெயல் நீராவோம்’ என்னும் தலைப்பில், முக நூலில் திசை பற்றி எழுதியிருக்கிறார்]

கிழக்கு என்பதற்கு எதிர்த் திசை மேற்கானது. இடப்பக்கம் வடக்கு. வலப்பக்கம் தெற்கு.....இப்படித் திசைகள் உருவாக்கப்பட்டன.

இரவுப் பொழுதில், வட திசையில் தெரியும் துருவ நட்சத்திரம், வட திசைக்கான அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில், மரக்கலப் பயணங்களில், இந்நட்சத்திரமே திசை அறிய உதவியிருக்கிறது. இன்று புதிய சாதனங்கள் வந்துவிட்டன.

அதே போல, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காந்த சக்தியும் வடதிசைக்கான அடையாளமாக அறியப்பட்டது.

காந்த சக்தி என்பது, புவியீர்ப்பு சக்தி போல பூமியில் இயற்கையாக உள்ள ஒரு ஈர்ப்புச் சக்தி. அதுவும் ஓர் அடையாளம்தான். வடதிசையில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அவ்வளவே. ஈர்ப்புச் சக்தி இருப்பதால் அது வடதிசை ஆகிவிடாது.

ஆக, மேற்கண்ட தகவல்களின் மூலம், இந்தப் பூமி உருண்டையில், ஐம்புலன்களால் அறியத்தக்க வகையில் திசை என்பதே இல்லை; அது இயற்கையானதும் அல்ல; அது, மனித குலம் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்ட குறியீடு[?] என்பதை நம்மால் அறிய முடிகிறது.

திசை இல்லை என்பதை, அகன்று பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் மனதைச் செலுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வானவெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களையும், கோடானுகோடி நட்சத்திரங்களையும் ஒன்று மிச்சமில்லாமல் துடைத்தெறியுங்கள் [கற்பனையாகத்தான்].

இப்போது வெற்று வானம் மட்டுமே உங்கள் கண்முன் விரிகிறது, “கிழக்கே பார்” என்று அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கிறது. பார்க்கிறீர்கள்.

கிழக்கு தெரிகிறதா? இல்லைதானே?

காரணம், ’வெளி’க்குத் திசை இல்லை என்பதுதான்.

மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியில் இடம் கொள்ள வையுங்கள். இப்போது மட்டும் திசை தெரிகிறதா என்ன? இல்லைதானே? துருவ நட்சத்திரத்தை வைத்து ஓரளவு அறியலாம் என்கிறார்கள்.

பூமியில் இடம் கொண்டிருப்பதால், மேல் - கீழ் என்பனவற்றை உணர்கிறோம். உருண்டை உருண்டையாக விண்வெளியில் அலைந்து திரியும் கோள்களுக்கோ பிறவற்றிற்கோ மேல் - கீழ், பக்கவாட்டு என்பனவெல்லாம் இல்லை.

இப்போது, பதிவின் தலைப்புக்கு வருவோம்.

சுழன்று கொண்டிருக்கும் உருண்டை வடிவான இந்தப் பூமிக்கோ, பிரபஞ்ச வெளிக்கோ திசைகளே இல்லாத நிலையில், இந்த வாஸ்துகாரர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கென்று, கட்டுப்பாடுகளை உருவாக்கியது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இதை, இந்திய நாட்டின் அரிய பொக்கிஷம் என்கிறார்கள்.

5000 ஆண்டு பழைமையான விஞ்ஞானம் என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்று சொன்ன அதே வாயால், “தத்துவம் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது” என்கிறார்கள் [ustrology. dinakaran.com/vastu.asp]

விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்ன cosmic force, காந்தசக்தி பற்றியெல்லாம் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

நமக்கு, உடல் நலமும் மகிழ்ச்சியும் மன உணர்வுகளாலோ, உடற்பயிற்சியாலோ கிடைக்காதாம். அவற்றை நமக்கு வாரி வழங்குவது வாஸ்துதானாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ பொய்யுரைகள்; புளுகுகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பழங்காலக் கட்டடக் கலைஞர்கள், மண்ணின் தன்மை, மரங்கள், கற்கள் போன்றவற்றின் உறுதிப்பாடு, கட்டடத்தின் பரப்பளவு, உயரம், வெளிச்சம், காற்று போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கலையம்சமும் நீண்ட ஆயுளும் பொருந்திய அழகிய கட்டடங்களைச் சமைப்பதற்குக் கட்டடக் கலை இயலை உருவாக்கினார்கள். வாஸ்து பண்டிதர்கள் மூட நம்பிக்கைகளைப் அதில் புகுத்திவிட்டார்கள்.

இந்த வாஸ்துகாரர்கள், பொது மக்களிடம் அள்ளிவிடும் பொய்கள் அளவிறந்தவை.

இந்த வாஸ்துவுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறாராம்.

தேவர் அசுரர் போரில், அசுரர்கள் புரிந்த அலம்பல்களை முழுமுதல் கடவுளான சிவனிடம் தேவர்கள் சொல்ல, அவர் கடுங்கோபம் கொள்கிறார். அவர் உடம்பிலிருந்து வேர்வை [நல்ல வேளை, அது வேர்வைதான். வேறெதுவுமில்லை] சுரக்கிறது. [முழுமுதல் கடவுளுக்கும்கூட வேர்க்குமா என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப வேண்டாம்]. அந்த வேர்வைதான் வாஸ்துவாக வடிவம் கொண்டு, அசுரர்களை அழித்ததாம்!

சிவபெருமானின் உத்தரவுப்படி, அசுரர்களின் சடலங்களை அழித்துவிட்டு, இந்த மண்ணுலகிலேயே உறங்க ஆரம்பித்தார் வாஸ்து பகவான். முழுமுதல் கடவுளின் கட்டளைப்படி, ஓர் ஆண்டில் எட்டு நாட்கள் மட்டும் விழித்திருந்து, சிவபெருமானைத் துதி பாடுகிறாராம். [அதென்ன கணக்கு எட்டு? புரிந்தால் சொல்லுங்கள். உங்களுக்குக் கணக்கில்லாமல் திருப்பதி லட்டு வாங்கித் தருகிறேன்!]

ஈசனுக்குச் சொந்தமான வடகிழக்குத் திசையில் தலை வைத்து, தென்மேற்கில் இரு பாதங்கள் நீட்டி சயனம் செய்கிற இவரை [வாஸ்து புருஷன் என்று சொல்கிறார்கள்] மக்கள் வழிபட்டால் நற்பயன் விளைவது நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து மேதைகள்!

வீட்டின் தலைவாசல் அருகே பூஜை அறை கூடாது.

காரணம் என்ன தெரியுங்களா?

சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுமாம்! இழவுக்குப் போய் வர்றவங்களும் வீட்டுக்குத் தூரமான பெண்களும் நுழைவதால் சாமிக்கும் தீட்டுப் படுமாம்!

‘படுக்கை அறையில் தையல் மிஷின் இருந்தால் புருஷன் பெண்ஜாதிக்கிடையே அடிக்கடி சண்டை வரும்.’

ஒன்னுக்கு ரெண்டு பீரோவா வெச்சா, தினசரி சண்டை வருமில்லையா?

வெகு சுளுவா பெண்டாட்டையை கழட்டி விட்டுட்டுப் புதுப் பெண்டாட்டி கட்டிக்கலாம்.

‘நீங்கள் பணம் வைக்கிற பெட்டி அல்லது லாக்கர் தென்திசை அறையில் இருத்தல் குற்றம்.’ ஏன்னா, அந்த திசையில் யமதர்மன் இருக்கிறார்.

யமன் உயிரைத்தான் பறிப்பான்னு நினைச்சிட்டிருந்தோம். பணத்தையும் பறிச்சிடுவான்னு தெரியுது!

அதே போல, குபேரனுக்குச் சொந்தமான வடதிசையிலும் செல்வத்தை வைக்கக் கூடாதாம்.

சாமி இருக்கிற பூஜை அறையில் வைத்தாலும் சேமிப்பு அதோ கதிதான்!

படுக்கையறை, சமையலறை, கக்கூஸ்னு எது எதை எங்கெங்கே வைக்கணும்னு வாஸ்து விஞ்ஞானிகள் அத்துபடியா சொல்லியிருக்காங்க. அதன்படிதான் நீங்க நடந்துக்கணும். மீறினா அதுக்கான தண்டனையை அனுபவிக்க நேரும்.

நீங்க பாட்டுக்கு, கக்கூஸை ஈசான முலையில் அமைச்சிடக் கூடாது. அது ஈசனுக்குரிய மூலை இல்லையா? கக்கூஸ் நாத்தம் அவர் மூக்கைத் துளைக்குமே.

வடக்கு-குபேரன், தெற்கு-யமன் வடகிழக்கு-ஈசன்.....இப்படி எட்டு திக்குகளையும் எட்டு கடவுள்கள் காக்கிறார்கள்!

கடவுள் ஒருவனே. அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்று என்று சொல்லப்படும் நிலையில் திசைக்கொரு குட்டிக் கடவுளை நியமனம் செய்தது யார்?

அந்த முழு முதல் கடவுளேவா?

எட்டு பேரில் ஒரு பெண் கடவுள்கூட இல்லையே? கடவுளர் சமூகத்திலும் பெண் இனத்துக்கு அநீதியா?

‘மாணவர்கள் தெற்கு கிழக்காகப் படுக்க வேண்டும். மாணவியர், கிழக்கு மேற்காக. தம்பதியர் தெற்கு மேற்காக.....’

சின்ன வீட்டோடு படுக்கும் போது......?

‘பிரபஞ்ச சக்தியை வீட்டுக்குள் வரவழைக்கிறது வாஸ்து.’

அந்தச் சக்திதான் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடக்கிறதே, நீங்க என்ன வரவழைச்சிக் கிழிக்கிறீங்க?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைவிட்டு மக்களில் பெரும்பாலோரை வசியம் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாஸ்து விற்பன்னர்கள்.

சிற்பம் மற்றும் கட்டடக்கலை வல்லுநரான கணபதி ஸ்தபதி பற்றி அறியாதார் வெகு சிலரே. நம் பெருமதிப்புக்குரியவர். 2011 ஆம் ஆண்டு காலமானார். அவரிடம், “இன்று பயன்பாட்டிலுள்ள வாஸ்துவும் தாங்கள் அறிந்த வாஸ்துவும் ஒன்றா?” என்று கேட்கப்பட்ட போது, [எழுத்தாளர் திலகவதியின் பேட்டி. ‘இவர்கள் இப்படித்தான் சாதித்தார்கள்’ என்னும் நூலில். அம்ருதம் பதிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு வெளியீடு] “நான் அறிந்த வாஸ்து வேறானது” என்கிறார்.

அவர் குறிப்பிடும் வாஸ்து ஓரளவுக்கேனும் அறிவுபூர்வமாக இருக்கும் என்று நம்பலாம்.

அது எவ்வாறிருப்பினும், இன்று நாம் ஏற்க வேண்டிய தலையாய கடமை, அறியாமை மிகுந்த நம் மக்களை இந்தப் பொய்யர்களிடமிருந்து விடுவிப்பதுதான்.

‘வாஸ்து சம்பந்தமான புளுகுகளை வெளியிட வேண்டாம்’ என்று மனோ டேனியல் என்பவர் ‘இந்து’ஆங்கில நாளிதழுக்கு ஒரு கடிதமே எழுதினாராம்! [www.keetru.com]

'அரசியல் சாசனப்படி, விஞ்ஞானம் அல்லாத இந்த வாஸ்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது நக்கீரன் வார இதழ்ச் செய்தி.

இப்படிச் சிலர் தம்மால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
********************************************************************************************************************


Sunday, September 10, 2017

கர்னாடகாவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் 35 பேர்! தமிழ்நாட்டில்.....?!

கர்னாடகாவில் பகுத்தறிவுச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர்கள் 35 பேர் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாளிதழ்ச்[தி இந்து, 10.09.2017] செய்தியால் அறிய நேர்ந்தது. 
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்னாடகாவில் முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளர்களுக்குக் கர்னாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாம்.

’35 பேர்’ என்னும் புள்ளிவிவரம் எம் மனதில் பெருமளவில் பொறாமைத் தீயை மூட்டியுள்ளது.

அங்கே, முற்போக்குச் சிந்தனையுள்ள [பிரபல]எழுத்தாளர்கள் 35 பேர். நம் மாநிலத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்?

ஒத்தைப்படை எண்ணிக்கையைக்கூடத் தாண்டமாட்டார்கள் என்பதே என் எண்ணம்.

இங்குள்ள மிக மிகப் பெரும்பாலான பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து ஆன்மிகத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை  வளர்ப்பவை. இவற்றின் நீடித்த ஆதரவைப் பெறுவதற்காக ஆன்ம நேயராகத் தம்மைக் காட்டிக்கொள்ளவதில் முனைப்புக் காட்டுவார்களே தவிர மறந்தும் ஆன்மிகத்தின் பெயரால் வளர்க்கப்படும் மூடநம்பிக்கைகளைச் சாட மாட்டார்கள் இவர்கள்.

விதிவிலக்காகச் சிலர் இருத்தலும்கூடும்.

அந்தச் சிலரை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நம் மாநில அரசு உறுதி செய்திடல் வேண்டும். செய்யுமா?

‘ஆம்’ எனில், அத்தகையோர் பற்றிய பட்டியலையும் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றிய விவரங்களையும் உடனடியாக வெளியிடுதல் வேண்டும்.

கோவையில் முற்போக்குச் சிந்தனையாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தமிழ்மக்கள் அறிவார்கள். அவ்வாறான அவலங்கள் இனியும்  இங்கே நிகழ்ந்துவிடாமல் தடுத்திட இது உதவும்.

அரசு நிகழ்வுகளில்கூடத் தம்மைப் பழுத்த ஆன்மிகவாதிகளாகக் காட்டிக்கொள்ளத் தவறாத நம் ஆட்சியாளர்கள், கொஞ்சமேனும் நடுநிலை உணர்வுடன் கர்நாடகா அரசை முன் உதாரணமாகக்கொண்டு செயல்படுதல் வேண்டும். 

செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை!

Wednesday, September 6, 2017

மகா புஷ்கரமும் மகா மகா துஷ்டத்தனமும்!!!

குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறாராம். அதற்குக் காவிரி நீரை வீணடித்து ஒரு விழாவாம். பக்தியின் பெயரால் இங்கே இதுவும் நடக்கும்; இன்னும் எதுவேண்டுமானாலும் நடக்கக்கூடும்!

இன்றைய[06.09.2017] நாளிதழ்களில் மனம் பதறத் தூண்டும் ஒரு செய்தி.....

#144 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்வதை முன்னிட்டு நடைபெறவுள்ள காவிரி மகா புஷ்கரம் திருவிழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 தினங்களுக்குக் [12ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை] தினம் தினம் 10000 கன அடி வீதம்[குறைந்தபட்சம்] தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளனர்#

வற்புறுத்தியவர்கள் சாமானிய பக்தர்கள் அல்ல; காஞ்சி காமகோடி பீடாதிபதியும் அவரின் பரிவாரங்களும்தான்.
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

பிரபஞ்சப் பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கும் இயங்குவதற்கும் ஆதாரமாக இருக்கின்ற மூலப் பொருள்களுள்[பஞ்ச பூதங்கள்] நீரும் ஒன்று. அவ்வளவுதான். நீர்[கங்கை, காவிரி...] புனிதமானது. அதில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதெல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் கட்டிவிட்ட கதை. மகா புஷ்கரம்[புனித நீராடிப் பாவங்களைப் போக்குதல்] மகா மகா புஷ்கரம் என்றெல்லாம் பொய்யுரைத்து இனியும் மக்களை அறிவிலிகள் ஆக்க வேண்டாம்’ என்று எம் போன்றவர்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லி அவர்களைத் திருத்துமா இந்த அரசு?

குரு பகவான்   இடம்பெயர்கிறாரா? பெயர்ந்துவிட்டுப் போகட்டும். அதற்கு எதற்கு  ஒரு விழா? என்று கேள்வி எழுப்ப வேண்டும். எழுப்புமா?

வானில் சுற்றுபவை[நவக்கிரகங்கள்] உயிரற்ற கோள்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவற்றைக் கடவுள்கள் என்று சொல்லுவீர்கள்? திருந்தவே மாட்டீர்களா?என்று கேட்கலாம். கேட்குமா?

மக்கள் குடிக்கவும் குளிக்கவும் போதிய நீரில்லை; பாசனத்துக்கும் வழிபிறக்கவில்லை[ஓரளவு மழை பெய்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் பாதி அளவே நீர் உள்ளது. முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு{குறைந்தபட்சம் 80 அடியைக் கடந்த பின்னர்} பயன்படுத்துதல் வேண்டும்]. இந்நிலையில், ‘பகவானுக்குப் பத்து நாள் விழா. பெருமளவில் நீர் வேண்டும்’ என்கிறீர்களே,  பாவிகளா! இது அநியாயம் அல்லவா! என்று சாடலாம். சாடுமா?

குருபகவானைக் கடவுள் என்கிறீர்கள். அவர் நினைத்தால், காவிரியில் வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடச் செய்யலாம். மகா புஷ்கரம் என்ன, மகா மகா மகா புஷ்கர விழாகூட எடுக்கலாம். அவரிடம் சொல்லிக் கொட்டோ கொட்டென்று மழை கொட்டச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தலாம். செய்யுமா?

மேற்குறிப்பிட்ட  எதையும் செய்யாமல்..... 

குடிக்க நீரில்லாமலும், கும்பி நிரப்ப உணவில்லாமலும் வாழப் பழகிவிட்டவர்கள் நம் மக்கள். மக்களைக் காட்டிலும் மகேசன்களுக்குப் பணி செய்வதே முக்கியம். குருபகவான் மட்டுமா, இன்னும் சனி, ராகு-கேது என்று பல பகவான்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கும் விழா எடுங்கள். தினம் தினம் பத்தாயிரம் கன அடியென்ன  அதற்கு மேலும் தண்ணீர் திறந்துவிடக் காத்திருக்கிறோம் என்று காஞ்சி காமகோடி பீடப் பரிவாரங்களின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு இந்த அரசு செயல்படவும் கூடும்.

என்னதான் செய்யப்போகிறது இந்த அரசு?!

புஷ்கரம் விழாவின் தொடக்க நாளான 12.09.2017 வரை காத்திருப்போம்.
=====================================================================================

Sunday, September 3, 2017

இதுவும் கடவுளின் கொடைதான்!!!

“நான் தூங்கும்போது என்னைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொள். நான் விழித்திருக்கும்போது என்னிடம் பேசிக்கொண்டிரு” என்றாள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த தேவதை போன்ற அந்தப் பெண்.
அவள் இருந்தது  ஒரு புற்றுநோய் மருத்துவமனையில்.  அங்கே இடம்பெற்ற நான்கு நாள் நிகழ்வைக் காட்சிப்படுத்துகிறது கீழ்வரும் கட்டுரை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அத்தையைச் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டிவரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்னும் உறுதி அவர்களுடைய கண்களில் தென்பட்டது.

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பதுபோல் எங்கள் அத்தனைபேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர்.

பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்துவந்து என் அத்தையின் கை பற்றித் தைரியமாய் இருக்கும்படி ஊக்கமளித்தனர். “நாலு நாள் கீமோதெரபி இருக்கும். அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு” என்றனர்.

“முடி கொட்டிடும். கொட்டுனா என்ன மசுரு போனாப்போகுது” என்று ஒரு மூதாட்டி என் அத்தையிடம் சொல்லியதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

என் அத்தையின் பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற சுமார் இருபது வயதுப் பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் அவளின் கால்கள் வீங்கியிருந்தன. அவளின் அம்மா அவளின் வீங்கிய கால்களைத் தடவியபடியே, கையில் புத்தகத்துடன் கண்களில் கண்ணீர் வழிய, தேவதையின் நோயைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார்.

“அம்மா, நான் விழிச்சிருக்கும்போது என்னோட பேசிட்டிரு. தூங்குனப்புறம் கடவுளை நினைச்சிக்கோ” என்றாள் அந்தப் பெண்.

கடவுளை நினைத்து முணுமுணுத்துக்கொண்டிருந்த அம்மா இப்போது அழ ஆரம்பித்தாள்.

“ஏன்மா அழறே? அழுவதால் ஏதும் மாறப்போகுதா” என்றாள் மகள், சலனமற்ற குரலில்.

மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவருக்கு அருகிலிருந்த தேவதைப் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அம்மா வைத்திருந்த புத்தகம் மட்டும் படுக்கையில் சீந்துவாரற்றுக் கிடந்தது.

அந்த அறையில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடனும் பலர் துணையற்றும் இருந்தனர்.

வலிகளும் இழப்புகளும் அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. பிறருடைய ஆதரவோ அனுதாபமோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அதை அவர்கள் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை.

மற்ற நோயாளிகள் சொன்னபடி, முதல் ஊசியை ஏற்றுக்கொள்ள அத்தையின் உடம்பு சிரமப்பட்டது. பின்னர், போடப்பட்ட இரண்டு ஊசிகளைச் சற்றே சிரமத்துடன் ஏற்றுக்கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் சென்றபோது பல படுக்கைகளில் புதியவர்கள் நிறைந்திருந்தார்கள். ஏற்கனவே இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று?

மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. “வெளியே இருக்கிறவங்க எல்லாம் ஆயிரம் வருசமா வாழ்ந்துடப்போறாங்க. இங்க வர்றவங்கள்ல பல பேர் கொடுத்து வச்சவங்க. சீக்கிரமே போய்ச் சேர்ந்துடுறாங்க” என்று யாரிடமோ ஒரு  நர்ஸ் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது.

அத்தை உற்சாகமாகவே இருந்தார். அவ்வப்போது அழுத மாமாவைத் தேற்றும்படி சொன்னார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். கொண்டுவந்து கொடுத்தேன். வாசித்தார்.

கைபேசியிலிருந்த அவரின் சிறுவயதுப் படங்களை என்னிடம் காட்டி அந்த வயதில் நடந்த சுவையான சம்பவங்களைக் கதை போலச் சொன்னார். சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு. நீ கிளம்பு. நாளை காலையில் பார்ப்போம்” என்றார்.

அடுத்த நாள் காலையில் அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

வாழ்க்கை விசித்திரமானது; மர்மங்கள் நிறைந்தது. மனிதர்களின் ஆசைகள் கணக்கில் அடங்காதவை. இந்தப் புற்று நோயாளிகளின் ஒரே ஒரு ஆசை உயிர்வாழ வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், பாவம், இவர்களில் பெரும்பாலோர் கொடுத்துவைக்காதவர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: சாந்தி[திருச்சி] எழுதிய கட்டுரை[‘பெண் இன்று’, ‘தி இந்து’[03.09.2017] நாளிதழ்.

கட்டுரைக்குச் சாந்தி கொடுத்த தலைப்பு: ‘அந்தக் கடைசி நான்கு நாட்கள்’. 

இந்தப் பதிவின் தலைப்பு அடியேனின் கைங்கரியம்! கட்டுரையின் அளவையும் சற்றே குறைத்திருக்கிறேன். சாந்தி மன்னிப்பாராக.
Friday, September 1, 2017

பாலுணர்வு நோயாளிகளுக்கு ஒரு பரிகாரம்!!!

‘தோசம்’ இல்லாத ஜாதகம் இல்லை[பெரும்பாலும்] என்பார்கள் சோதிடர்கள். அவர்களின் கணிப்பின்படி நம்மைப் பாதிக்கும் தோசங்கள் மிகப் பலவாக உள்ளன.
ராகு-கேது தோசம், சர்ப்ப தோசம், செவ்வாய் தோசம், சனி தோசம், பித்ரு தோசம் என்று வெகுவாக நீளுகிறது இந்தத் தோசங்களின் பட்டியல்.

நமக்கான தோசத்தைக் கணித்துச் சொல்வதோடு அதற்கான பரிகாரத்தையும் சொல்லி நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள் சோதிடர்கள்.

தோசங்களால் விளையும் தீங்குகள் மிகப் பல.

எடுத்துக்காட்டாகச் சில:

சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்களாம்[இதுக்கு ஜோதிடம் பார்க்கணுமா என்ன!]. ரகசிய உறவுகளுக்கும் கள்ளக்காதல்களுக்கும் இவர்கள் சித்தமாகிவிடுவார்களாம். இவர்கள் நிலை இருபுறம் எரியூட்டப்பட்ட மெழுகு வர்த்தி போன்றது. சீக்கிரமே அதில் ஆர்வமிழந்து இழந்த சக்தியை மீட்க வைத்தியர்கள் பின்னால் திரிய வேண்டி வரும்.

இதற்கு என்ன பரிகாரம்? ராகு, கேதுக்களை வழிபட்டால் போதுமாம்[அப்பாடா, கவலை தீர்ந்தது].

சந்திரனும் சுக்கிரனும் சேர்க்கை[?!] கொள்வதான ஜாதகப்பலன் கொண்ட பெண்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள். ஏனென்றால், இவர்களை மிக எளிதாக வசியம் செய்துவிட முடியுமாம். வளைத்துப்போட முயலும் ஆடவர்களிடமிருந்து அவர்களால் தப்ப முடியுமா?

முடியும். நெற்றியில் குங்குமம்[நாள் தவறாமல் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்கள் புத்திசாலிகளோ!] வைத்துக்கொண்டால் போதும் என்கிறார்கள் சோதிடக்கலை வல்லுநர்கள். சிவப்பு நிறம் அதிக அலைநீளம்[?] கொண்டதாம்.

உங்களுக்கு ராகு-கேது தோசம் இருந்தா, ஒரு நடை திருப்பாம்புரம்[கும்பகோணம் பக்கம்] போகும்படி பரிந்துரைக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.

‘பிதுர் தோசம்’[பித்ரு தோசம்னும் சொல்வாங்க] பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வயதான பெற்றோர்களை உபசரிக்கத் தவறினால் வரும் தோசம் இது. இதற்கும் பரிகாரம் உண்டு. மகாளய பட்சத்தின்[அமாவாசை] 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்தத் தர்ப்பணத்தைப் பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தோசம் நீங்கும் என்கிறதாம் சாஸ்திரம்.

தோசம் மிகக் கடுமையாக இருந்தால் இராமேசுவரம் சென்று ‘திலா ஹோமம்’[?] செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை வேதம் கற்ற பண்டிதர்களால்தான் செய்ய முடியும் என்கிறார்கள்.

சனி தோசம் ரொம்பவே பொல்லாதது என்கிறார்கள் ஜோதிடக்கலை ஏந்தல்கள். பரிகாரம் தேட மிகவும் சிரமப்பட வேண்டும். கீழே ஒரு பட்டியல[எந்தவித ஆதாரமும் இல்லாதது] காத்திருக்கிறது.

சனி தோசம் நீங்க.....

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2.சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

3.கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்குத் தொடர்ந்து அர்ச்சனை செய்யவும்.

4.வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5.சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது[மற்ற நாட்களில் எவ்வளவும் வெட்டலாம்].

6.சனிக்கிழமைதோறும் நல்லெண்ணைக் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7.ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. கோமாதா பூஜை செய்யணும்

பட்டியல் நீளுகிறது.

பிரமஹத்தி தோசம் தெரியும்தானே?

பிராமணனைக் கொன்றால் வருவது. அதென்ன பிரமஹத்தி?

திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து  முழங்கால் மேல்  முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.

இந்தத் தோசம் நீங்க.....

பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை  செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றிக் குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபிடக் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் எல்லாம் பிரம்மஹெத்தியிடம் போய்ச் சேர்கின்றனவாம்.

நீங்கள் சோதிடத்தை நம்பாதவர் எனின், மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் உங்களை வெகுவாகச் சினம் கொள்ளச் செய்திருக்கும்.

31.08.2017 நாளிட்ட ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பாக, 12 ராசிகளுக்கான பலன்களும் தோசங்களும் பரிகாரங்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பலன்களையும் தோசங்களையும் ஒதுக்கி, பரிகாரங்களை மட்டும் கீழே தந்திருக்கிறேன். அவற்றை வாசித்தால் உங்களின் சினம் சற்றே தணியும் என்பது என் நம்பிக்கை.

12 ராசிகளுக்கான பரிகாரங்கள்:

மேசம்: வேர்க்கடலை தானம் [மக்களுக்குச் செய்தல்].
ரிசபம்: பச்சரிசி தானம்.
மிதுனம்: ரோஸ் நிறத் துணிகள்.
கடகம்: துவரம் பருப்பு.
சிம்மம்: கோதுமை.
கன்னி: கண் தானம்.
துலாம்: ஊனமுற்றோருக்கு உதவி.
விருச்சிகம்: திருநங்கைகளுக்கு உதவி.
தனுசு: புற்றுநோயாளிகளுக்கு உதவி.
மகரம்: ரத்ததானம்.
கும்பம்: ஆதரவற்ற முதியோருக்கு உதவி.
மீனம்: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி.

இல்லாத தோசங்களைப் பட்டியலிட்டு, தொலைதூரக் கோயில்களுக்குச் சென்று, கற்பனையான சனி முதலான சாமிகளுக்கு நெய் விளக்கு ஏற்று, நல்லெண்ணெய் விளக்கேற்று, தர்ப்பணம் பண்ணு, ஹோமம் நடத்து, வடைமாலை சாத்து என்றிப்படிப் பொழுதையும் பணத்தையும் வீணடிக்கத் தூண்டும் சோதிடர்களுக்கிடையே.....

கண் தானம் செய், உணவுப் பொருள்களைத் தானம் செய், ஊனமுற்றோருக்கு உதவு, ரத்ததானம் செய் என்றெல்லாம் மக்களுக்கு நல்லன செய்யத் தூண்டுகிற ஒரு சோதிடரைக் கொஞ்சமே கொஞ்சமேனும் பாராட்டலாம்தானே?
======================================================================================
சோதிடக் கருத்துகளுக்கான ஆதாரங்கள் உள்ளன. தரப்படவில்லை.