ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பொருமியிருக்கிறார் மோடி.
நம்மைப் போன்ற சாமானியர்களாயின், மேற்கண்டவாறு பொத்தாம்பொதுவாகப் பேசுவது ஒரு பொருட்டல்ல.
மோடி இந்த நாட்டின் பிரதமர். கடைக்காரரைத் தாக்கியவர்கள் யார் என்னும் விவரம் அவருக்கு முழுமையாகக் கிடைத்திருக்கும் என்பதால், தாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினராக இருந்திருந்தாலோ, நாத்திகர்களாக இருந்திருந்தாலோ அவர்களை ஆதாரங்களுடன் அடையாளப்படுத்தியிருத்தல் அவசியம்.
அதை விடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் இது நடைபெற்றது என்று ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் மீது பழி சுமத்தியதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.
மோடி சொல்வது போல், கர்னாடகக் கடைக்காரர்[அனுமன் பாடல் கேட்டவர்] மீதான தாக்குதலுக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்பது உண்மையானால்.....
இவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதும் சரி, பத்தாண்டுக்காலம் இந்தியப் பிரதமராக இருந்து பதவியில் நீடிக்கும்போது சரி, குஜராத்திலும், அதை உள்ளடக்கிய இந்தியாவிலும் பல வன்புணர்வு அட்டூழியங்கள்[பிற குற்றங்களும்தான்] நிகழ்ந்திருக்கின்றன. அந்த அட்டூழியங்கள் நிகழக் காரணமாக இருந்தவர்[மிக மோசமான நிர்வாகியாக] மோடி என்று சொல்லலாமா?
இந்த நிகழ்வுக்குப் பொறுப்பு யாராகவோ இருக்கட்டும், உலகறியக் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிப் பேசும் அளவுக்கு இது முக்கியமானதா என்றால் இல்லை.
மிகக் கொஞ்சமாகச் சிந்திக்கும் அறிவுள்ளவர்கள்கூட, ஐந்தறிவு ஜீவனான குரங்கு கடவுள் ஆக்கப்பட்டதை ஏற்கமாட்டார்கள்[இந்தக் குற்றத்தைச் செய்ததற்காகவே வால்மீகி, கம்பன் ஆகிய புலவர்களின் ராமாயணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டிருத்தல் வேண்டும். பெரியாரின் முயற்சியும் தோல்வியில் முடிந்ததது].
தனிப்பட்ட முறையில், குரங்கையோ, கோட்டானையோ, பாம்பையோ, பல்லியையோ, பன்றியையோ மோடி கடவுளாக்கி வழிபடட்டும். அது அவர் விருப்பமாக இருக்கலாம்; தடுப்பாரில்லை.
தன்னைப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்ளும் மோடி, ஒரு பெரிய கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் இருந்துகொண்டு, குரங்கைக் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதும், குரங்கின் மீதான பாடலைக் கேட்டவர் தாக்கப்பட்டதாகச் சொல்லி அதை அரசியல் ஆக்குவதும் வெட்கக்கேடானது.
மனம்போன போக்கில் மதச் சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசுவதும்[குற்றம் புரிபவர்கள் முஸ்லிமாயினும் வேறு மதத்தவராயினும் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை], ராமன், அனுமன் என்று 100% கற்பனைக் காவியப் பாத்திரங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் இந்த நாட்டின் நலனுக்கு நல்லதல்ல.
ஓர் அறிவுஜீவியாக, நல்ல புதிய திட்டங்கள் தீட்டி, செயல் வடிவம் கொடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்பவனே மக்கள் தலைவன் ஆவான்.
மோடி மக்கள் தலைவனல்ல!