சனி, 30 நவம்பர், 2024

அல்லா[ஹ்] மட்டுமல்ல எல்லாக் கடவுள்களும் இப்படித்தான்!!!

//பாகிஸ்தான்: போராட்டத்தின்போது, மிக உயரமான கன்டெய்னரில் அமர்ந்து மத வழிபாடு செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை, பாதுகாப்புப் படையினர் இரக்கமின்றிக் கீழே தள்ளிவிடும் காட்சி[காணொலி முகவரி கீழே] இணையத்தில் வைரலாகி வருகிறது// -செய்தி. https://www.puthiyathalaimurai.com/world/pakistan-forces-pushing-praying-protester-off-containers-goes-to-v

படம்: 

‘பெரிய போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது கடவுள் ‘அல்லா’விடம் கையேந்திப் பிரார்த்தனை செய்யத் தூண்டியது ‘பரம பக்தியா’, பித்துக்குளித்தனமா?’ என்னும் விவாதம் இப்போது வேண்டாம்.

போராட்டம் வெற்றி பெறுதல் வேண்டுமென்றோ,  பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை அல்லா தடுத்து நிறுத்துதல் வேண்டும் என்றோ அந்தப் பக்தர் பிரார்த்தனை செய்திருப்பார்.

அவரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து அவருடையக் கோரிக்கையைக் கடவுள் அல்லா[ஹ்] நிறைவேற்றியிருத்தல் வேண்டும்[பாவம், பக்தர் அத்தனை உயரத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதைக்கூடத் தடுக்கவில்லை; அந்த நபர் இறந்திருக்கவும்கூடும்]; செய்யவில்லை[தள்ளிவிட்டவனையாவது தண்டிப்பாரா?!].

இவர் என்றில்லை, வேறு எந்தவொரு கடவுளும்[இருந்தால்] பக்தர்களின் வழிபாட்டைப் பொருட்படுத்துவது இல்லை என்பதே உண்மை.

இது அல்லாவையோ, எல்லாக் கடவுள்களையுமோ இழிவுபடுத்துவதற்கான பதிவு அல்ல; அல்லவே அல்ல.

இதன் நோக்கம் நம் உள்மன உறுத்தலை  வெளிப்படுத்துவது மட்டுமே.
                                     
                        *   *   *   *   *

வெள்ளி, 29 நவம்பர், 2024

'அது’[மட்டுமே] அந்திமக்கால ஆசை!!!


*** காணொலி வாசகத்தில் திருத்தம்:

‘என்னும்’ > ‘என்று எண்ணும்’

வியாழன், 28 நவம்பர், 2024

சபரிமலைப் படிகள்... நின்றபோது கெடாத புனிதம் குழுவாய்ப் படம் எடுத்தபோது கெட்டது எப்படி!?

சபரிமலை ஐயப்பன் கோயிலின் 18 படிகளில்[படிகள் புனிதமானவையாம். சரி என்றே கொள்வோம்]  நின்று படம் எடுத்துக்கொண்டதற்குப் பந்தளம் மன்னர் குடும்பம், தந்திரி, கண்டகறு, குண்டகறு, நீதிபதி என்று ஆளாளுக்குக் கண்டனம் தெரிவித்ததால் காவல்துறையினர் 30 பேரும் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதித் தந்திருக்கிறார்களாம்.

கேரளக் காவலர் சங்கத்தினரிடம் கலந்தாலோசிக்காமல்[அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்] எதிர்ப்பாளர்களிடம் சரணடைந்தது மிகவும் வருந்தத்தக்கது.

படிகளில் நின்று[அமர்ந்தல்ல] படம் எடுத்துக்கொண்டவர்களுக்குக் கொஞ்சமேனும் புத்தி இருந்தால், “புனிதமான படிகளில் குழுமிப் படம் எடுத்தது குற்றம் என்றால், நெரிசலைக் கட்டுப்படுத்த நாங்கள் அந்தப் படிகளில் நிறுத்தப்பட்டது[நகல் பதிவின் முதல் பத்தி காண்க] குற்றம் இல்லையா? படிகளில் நின்று பணி செய்தபோது கெடாத புனிதம் வரிசையில் நின்று படம் எடுத்தபோது கெட்டழிந்தது எப்படி?” என்றிப்படிக் கேட்டிருப்பார்கள்.

ஒருவர்கூடக் கேட்கவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, கற்றவர்கள் மிக அதிகமாக உள்ள கேரள மக்களில் வேறு எவருமே கேட்டதாகத் தெரியவில்லை.

இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்தால், கடவுள் தேசமான கேரளா முட்டள்களின் தேசம் என்று அழைக்கப்படக்கூடும்!


புதன், 27 நவம்பர், 2024

இவன்களால்[இந்து பரிஷத் & இ.முன்னணியினர்] இந்துமதம் அழியும், வெகு விரைவில்!!!

 ‘புனிதம்’ என்பதே பக்தி வேடம் புனைந்தவர்கள் கட்டிவிட்ட கதை.

பொது இடங்களாகட்டும், கோயில்களாகட்டும் அசுத்தம் நீக்கித் தூய்மை பரமரிக்கப்படுதல் மிக அவசியம்.

மனித மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. 

மனத் தூய்மை இல்லாதவர்கள் கறுப்பு, காவி என்று ஆடை உடுத்துவதால் பயன் ஏதும் இல்லை. 

கறுப்பும் காவியுமாக ஆடை உடுத்துவதால் கொஞ்சமேனும் மனம் தூய்மை பெறும் என்றால் அது வரவேற்கத்தக்கதே.

எம்மதத்தவராயினும், எவ்வினத்தவராயினும் மனத்தில் களங்கம் படியாமல் தன்னை வழிபட வருபவர்களை அய்யப்பன்[இருந்தால்] வரவேற்கவே செய்வான்.

இதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமே இல்லை.

மலை உச்சியில் வாசம் செய்பவன் ஐயப்பன். மேலே சென்று சிரமமின்றி அவனைத் தரிசிப்பதற்காகவே கல்லால் ஆன படிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் விரதம் இருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏறிச் செல்லலாம் என்பதற்கு என்ன அடிப்படை உள்ளது?

பக்தி இல்லாதவர்கள் மிதித்து ஏறினால் படிகள் மாசுபட்டுவிடுமா?

படிக்கற்களில் ‘புனிதம்’ புகுந்தது எப்படி?[படியேறிச் சென்ற பக்தர்கள் முதுகு காட்டி இறங்கக் கூடாதாம். தந்திரிகளும், மேல்சாந்திகளும், அரசப் பிரதிநிதிகளும் இறங்கலாமாம். அவர்கள் என்ன ஐயப்பசாமியின் செல்லப்பிள்ளைகளா?!]

புகுத்தியவர்கள் யார்? யாரெல்லாம்?

மனிதர்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து ஆதாயம் தேட முனைந்தவர்களின் கைங்கரியம் இது.

படியேறுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டிருத்தல் வேண்டும்.

நல்ல மனமுள்ள சபரிமலைக் கோயில் நிர்வாகிகள் எப்போதோ இதைச் செய்திருப்பார்கள். அதற்கு முட்டுக்கட்டை போடும் கும்பல்கள்தான் ஆர்.எஸ்.எஸ்., இந்து பரிஸத்., இந்துமுன்னணி.

இவர்களை அடையாளம் கண்டு இவர்கள் செய்யும் அடாவடித்தனங்களைப் பக்தர்கள் தடுத்து நிறுத்தாவிட்டால், அய்யப்பசாமி மட்டுமல்ல, இன்னும் பல இந்துமதக் கடவுள்களையும் வழிபடுவோர் எண்ணிக்கை வெகு வேகமாகச் சரியும்; ஒரு காலக்கட்டத்தில் இந்துமதமே முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பது உறுதி!

                                           *   *   *   *   *

!!!!! ‘கடவுள் எங்கும் இருக்கிறார்; எதிலும் இருக்கிறார்’ என்கிறார்கள். ஐயப்பனும் ஒரு கடவுளே. இந்தக் கடவுளைக் கண்டு வழிபட எத்தனைக் கட்டுப்பாடுகள்!

கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் மனிதர்கள்! அதைக் கண்டும் காணாமலும் இருப்பவர்கள்தான் கடவுள்கள்!!

செவ்வாய், 26 நவம்பர், 2024

உருமாறும் தண்ணீரும் கண்ணீரை வரவழைக்கும் கடவுள் ஆராய்ச்சியும்!!!

“கடவுள் எங்கே இருக்கிறார்?” -இது பொதுவாகக் கேட்கப்பட்ட/படும் கேள்வி.

இதற்கான ஒரு பதில்[இணையத் தேடலில் சில நாட்களுக்கு முன்பு வாசித்தது]:

1.கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றுங்கள்.

முடிவு - தண்ணீர் கோப்பையின் வடிவத்தைப் பெறுகிறது.

2.அதே தண்ணீரைக்  குளிர்சாதனப் பெட்டியின் உறையும் தட்டில்[ஐஸ் ட்ரே] ஊற்றுங்கள்.

விளைவு - நீர் ஐஸ் கட்டிகளாக மாறுகிறது.

3.இப்போது ஐஸ் கட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க வையுங்கள்.

விளைவு - நீர் நீராவியாக மாறுகிறது.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர் வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. 

இந்த உதாரணத்தின் மூலம், “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்னும் கேள்விக்கு, “கடவுள் நாம் காணும் பொருளிலெல்லாம் இரண்டறக் கலந்திருக்கிறார்” என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது..

காணும் பொருள்களில் எல்லாம் அவர் கலந்திருப்பது இருக்கட்டும், கடவுள் என்றொருவர் இருப்பது[தண்ணீர் இருப்பது போல்] உண்மை என்பதை இதைப் போன்றதொரு பரிசோதனையின் மூலம் நிரூபித்தவர் உண்டா?

“இல்லை... இல்லை... இல்லவே இல்லை.

கடவுள் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எங்கும் இருக்கிறார்; எதிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்; அருள் வடிவானவர் அவர்; அனைத்தையும் இயக்குபவரும் அவரே என்பவை போல் ஆளாளுக்குக் கதையளப்பதால் அணுவளவும் பயனில்லை.

“அவர் தோன்றியது எப்படி? அனைத்தையும் படைத்து இயக்குகிற ஆற்றல் அவருக்கு மட்டும் வாய்த்தது எப்படி?” 

இப்படியெல்லாம் எத்தனைப் பேர் கேட்டாலும், எத்தனை யுகங்களுக்குக் கேட்டாலும் விடை கிடைக்காது.

விடை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டால், கண்களில் கண்ணீர்தான் வழியும்! ஹி... ஹி... ஹி!!!

திங்கள், 25 நவம்பர், 2024

ஐயப்பனுக்கு ஆங்கிலம் அத்துபடி!!!

//'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என்ற கானா பாட்டைப் பாடிய இசைவாணி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது//[தினமலர்].

உலகங்களைப் படைத்து[கடவுள் ஒருவரே என்னும் கொள்கையின்படி], அனைத்து உயிர்களையும் படைத்து, அவற்றில் குறிப்பிடத்தக்க மனித இனத்தை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மொழிகளை மனிதர்களுக்கு வழங்கியருளியவரும் ஐயப்பனே[அனைத்து மொழிகளையும் அறிந்தவர் அவர் மட்டுமே].

உலக மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று.

எனவே, ஐயப்பனை முன்னிலைப்படுத்தித் தமிழில் கானாப் பாடல் பாடும்போது, “ஐ யாம் சாரி ஐயப்பா” என்று ஆங்கிலத்தில் தொடங்கியிருப்பதைக் குற்றம் சொல்பவர்கள் சிறுமதியாளர்கள்.

‘என்னப்பா’ என்னும் சொல்லாட்சியும், கடவுள்களை நினைவுகூரும்போதெல்லாம் பக்தர்கள் பயன்படுத்துகிற ஒன்றுதான்.

எடுத்துக்காட்டு.....

“கடவுளே நான் என்னப்பா[‘என்னய்யா என்பதும் வழக்கில் உள்ளது] பாவம் பண்ணினேன்.”

“அடக் கடவுளே” -துயரத்தின் எல்லையைக் கடக்கும்போது அவரை இப்படி அவமரியாதைக்கு உள்ளாக்குவதும் உண்டு.

ஆகவே.....

கானாப் பாடல் பாடிய இசைவாணியை இழித்துரைப்பவர்கள் இழிகுணத்தவர்கள் என்பது அறியத்தக்கது!


“ஐயப்பா நீ பொய்யப்பா? என்று கடவுள் மறுப்பாளர்கள் ஐயனை மட்டம்தட்டியபோதும் அவர் கோபித்துக்கொண்டது இல்லை!!

வாழ்க இசைவாணி! என் அப்பன் ஐயப்பனும் வாழ்க!!

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/ghanaian-singer-kusumbu-controversy-over-dragging-ayyappan-into-a-frenzy-/3789194


ஸ்டாலின் ஆணவப் பேச்சும் அன்புமணியின் அடங்காத கடுங்கோபமும்!!!

“ஸ்டாலின் அதானியைச் சந்தித்தது ஏன்?” என்று வன்னியர் குலக் காவல் தெய்வம் ராமதாஸ் கேட்டாராம். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை” என்று ஸ்டாலின் ஆணவமாக[ஆணவமா?!]ப் பதில் சொன்னாராம்.

பொங்கியெழுந்தார் ராமதாஸின் தவப்புதல்வன் அன்புமணி. “சமூகச் சீர்திருத்தவாதியாம் ராமதாசை அசிங்கப்படுத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ‘பாமக’ தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது” என்று சீறியிருக்கிறார்[‘news தமிழ்’ செய்தி. 25.11.2024 பிற்பகல் 2.45].

அன்புமணியை ஆதரிப்பதோ கண்டிப்பதோ நம் நோக்கமல்ல.

‘தொண்டர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருத்தல் வேண்டும்.

“ஸ்டாலினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புங்கள்; ஊரூருக்குப் போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்குங்கள்[கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிக்கு உள்ளானவர்கள் செய்யும் செயல் அடித்து நொறுக்குவதுதான்]” -அன்புமணி இப்படிச் சொல்ல நினைத்திருப்பாரோ? சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.....

அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதால் தொண்டர்களைத் தூண்டிவிடுவதோடு நிறுத்திக்கொண்டார்.

தொண்டர்கள் தடியடிபடலாம்; சிறைக்குச் சென்று வதைபடலாம். அவையெல்லாம் ‘பாமக’வின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தியாகம்.

தொண்டர்களின் தியாகத்தில்தானே கட்சிகள் வளர்ச்சி அடைகின்றன! தலைவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்!!

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டது ‘பாமக’. அன்புமணி அதன் தலைவர்[அறிக்கைவிடுவது மட்டுமே ராமதாஸின் பணி].

அவர் வாழ்க! வளர்க!!

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஏழுமலையானுக்கு இங்கு நிகரில்லை கண்டீர்!!!

திருப்பதியின் உலகப் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோயிலின் நிகர மதிப்பு ₹2.5 லட்சம் கோடி(சுமார் 30 பில்லியன் டாலர்). ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு&குளிர்பான நிறுவனமான நெஸ்லே, அரசுக்குச் சொந்தமான எண்ணெய்&இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சந்தை மூலதனத்தைவிட இது அதிகம். 

சுமார் இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பைவிட பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

ஏழு மலைகளில் உள்ள குடிசைகள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற சொத்துக்கள்&பழங்கால நகைகள்[சரியாக மதிப்பிடப்படவில்லை] நீங்கலாக.

பிரமிப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்ட நிலையில், நாம் எழுப்பும் கேள்வி.....

உலக அளவில், பல்லாயிரக்கணக்கான கடவுள்கள்[இஸ்லாம், கிறித்தவம், இந்து, பிற மதங்கள் சார்ந்தவை; ‘கடவுள் ஒருவரே’ என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தை] மக்களால் வழிபடப்படுகின்றன.

அக்கடவுள்களுக்குக் கோடி கோடி கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் திறமை திருப்பதி ஏழுமலையான் அளவுக்கு இல்லாமல்போனது எப்படி?

கடவுள்களுக்குள் ஏன் இத்தனைப் பிரமாண்ட ஏற்றத்தாழ்வுகள்?

ஏன்? ஏன்? ஏன்?

***நம்புங்கள், நம் கேள்வி மனப்பூர்வமானது; உள்நோக்கம் ஏதும் இல்லை! ஹி... ஹி... ஹி!!!

                          *   *   *   *   *

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.ndtv.com/andhra-pradesh-news/tirupati-temple-worth-over-rs-2-5-lakh-crore-is-richer-than-wipro-nestle-3496660

சனி, 23 நவம்பர், 2024

சிறுநீர் பெய்து மலம் கழித்து.....

னிதன் பல்லாயிரம் கோடி உயிரினங்களில் ஒருவன்.

உணவுண்டு நீர் அருந்திப் பின்னர் அவற்றை மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றுதல் அவனின் மிக முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று.

மூடனோ, அறிஞனோ, மேதையோ, இவர்களில் மேற்கண்ட செயலைச் செய்பவர்கள் அனைவரும் மனிதர்களே.

தெய்வம் என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள்; சொல்கிறார்கள்.

தெய்வம் ஒன்றோ பலவோ, இப்போதைக்கு அது ஒன்றே என்று கொள்வோம்.

அது எப்படியிருக்கும், எப்படி இயங்கும் என்பது பற்றியெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாத நிலையில், அந்த ஒரு தெய்வத்திற்கும் பசி எடுக்கும்; அது உணவு உண்ணும்; நீர் அருந்தும் என்று சொன்னால் அதை ஏற்போமா?

மாட்டோம். சொல்பவனை அயோக்கியன் என்றோ, அறிவிலி என்றோ வேறு அடுக்கடுக்கான இழி சொற்களாலோ சாடுவோம் என்பதில் மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை.

இந்நாள்வரை இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த கோடி கோடி கோடானுகோடிப் பேரும் உண்டு கழித்து வாழ்ந்தவர்களே; விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

ஆக, மனிதர் எவரும் தெய்வம்[இருந்தால்] ஆக இயலாது; இயலவே இயலாது என்பது நூறு விழுக்காடு உறுதி.

இது தெரிந்திருந்தும்.....

திருவண்ணாமலை ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களைக் கடவுள் அவதாரம் என்று போற்றி வழிபட்டது... வழிபடுகிறது எண்ணிலடங்காத பக்தர் கூட்டம்.

எண்ணிலடங்காத இந்த மூடர் கூட்டத்திடம் நாம் முன்வைக்கும் கேள்வி.....

உயிர் வாழ்ந்தவரை இந்த அவதாரங்கள் உணவுண்டு மலம் கழித்ததில்லையா? நீர் அருந்திச் சிறுநீர் பெய்ததில்லையா? 

“மலம் கழித்தார்கள். ஆனால் நம்மவருடையதைப் போல அதில் கெட்ட வாசனை இருக்காது; சந்தனம் போல் கமகமக்கும். அவர்களின் சிறுநீர் சுவைநீர் போல இனிக்கும்” என்கிறார்களா அவதாரங்களின் விசுவாசிகள்?

“ஆம்” என்பது அவர்களின் பதிலாயின், வர்களின் இந்த முட்டாள்தனத்தைப் பயன்படுத்தித்தான், ஜக்கி வாசுதேவன், நித்தியானந்தன்,  பாபா ராம்தேவன், குர்மித் ராம் ரஹீம், நிர்மல் பாபா, ஓம் சுவாமி, சுவாமி அஸீமானந்தா, ராதே மா போன்றவர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு கோடிகளில் புரண்டு சொகுசாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வாழ்க அவதாரங்கள்! வளர்க பக்தி!!

                                               *   *   *   *   *

அவதாரம் குறித்த ஒரு கட்டுக்கதை:

இந்துப் புராணங்களின்படி, இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால், நல்லவர்கள் மற்றும் பக்தியுள்ளவர்கள் துன்பப்படும்போது கடவுள் மனிதனாகப் உருவெடுத்துப் பூமிக்கு இறங்குகிறார். அவதார் என்ற சொல்லுக்கு இறங்குதல்(பூமிக்கு) என்று பொருள். கடவுள் காலத்தின் தேவையின் அடிப்படையில் பூமியில் இறங்குகிறார், நல்லவற்றைப் பாதுகாக்கிறார், தீமையை அழித்துத் தர்மத்தை(நீதியை) மீட்டெடுக்கிறார். அவதாரங்கள் பற்றிய கருத்து இதிஹாஸ் மற்றும் புராணங்களின்(வேத புராணங்கள்) பிற்கால, வரலாற்றுk காலங்களில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. அது வேதங்களில் காணப்படவில்லை[https://hinduismwayoflife.com/hinduism-avatar-saints-3/]

* * * * *

  புட்டபர்த்தி சாயிபாபா பற்றிய புருடாக்களில் ஒன்று:

     [பக்தர்கள் கொட்டிக்கொடுத்த பணத்தை நல்ல வழிகளிலும் செலவழித்தார் என்பது பாராட்டுக்குரியது]

                                

வெள்ளி, 22 நவம்பர், 2024

ஒரு தட்டாம்பூச்சி[தும்பி]யின் மரணமும் புரியாத படைப்புத் தத்துவமும்!!!

மொட்டைமாடியில் சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியபோது அந்தத் தட்டாம்பூச்சி கண்ணில் பட்டது.

முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாகப் பறந்துகொண்டிருந்த அது, ஒரு கட்டத்தில் சுழன்று சுழன்று கீழ் நோக்கிச் சரிந்து தரையில் விழுந்தது.

ஒரே இடத்தில் சிறிதும் அசைவின்றிக் கிடந்ததால் கை விரலால் அதைத் தொட்டுப்பார்த்தேன்.

சலனம் சிறிதுமில்லை; இறந்துபோயிருந்தது.

‘விகாரம்’ ஏதுமின்றி முன்பிருந்த தோற்றத்துடனேயே அது இருந்தது. மரணிப்பதற்குத் தேவைப்பட்ட நேரம் மிகவும் சொற்பம். எனவே, மரண வேதனைக்கு உள்ளாகித் துடி துடித்துச் சாகும் அவலமும் அதற்கு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.


மனிதர்களின் நிலை இதற்கு நேர்மாறானது.

வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிக மிக அதிகம். இவரா அவர் என்று கேட்டுப் பிரமிக்கும் அளவுக்கு அது நிகழ்ந்துள்ளது.

மேலும்.....

தட்டானுக்கு வாய்த்தது போல வலியில்லாத[சில வினாடி நேரம் மிகச் சிறிய அளவில் இருந்திருக்கலாம்] மரணமும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை; மரணிப்பதற்கு முன்பும்[வாழும் காலம்] அதைத் தழுவும் நேரத்திலும் அனுபவிக்கும் வலியின் அளவு விவரிக்க இயலாதது. வயது ஆக ஆக அவர்களின் உருவம் அழகும் கவர்ச்சியும் இழந்து காணச் சகிக்காததாக மாறுகிறது.

மனிதர்களுக்கு ஆறறிவு வாய்த்து, அதனால் அவர்கள் இன்பங்களைக் காட்டிலும் அதிகத் துன்பங்கள் அனுபவிப்பதைக் கருத்தில் கொண்டால், மனித வாழ்வைவிடவும் தட்டாம்பூச்சி போன்ற பூச்சி&உயிரினங்களின்[வலியற்ற இயற்கை மரணமும், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகாத தோற்றமும் பறவை, விலங்கு, நீர்வாழ்வன போன்ற உயிரினங்களுக்கும் வாய்க்கிறது; இரைக்காகவோ பிற காரணங்களுக்காகவோ தம்மினும் வலியயனவற்றால் தாக்கப்படுபவை விதிவிலக்கு] வாழ்வே விரும்பத்தக்கது எனலாம்[வாழும் கால அளவு ஒரு பொருட்டல்ல. எத்தனை எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு].

இந்நிலையில்.....

உயிரினங்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள் மனித இனத்துக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தது, அந்த இனத்தைப் பெருமைப்படுத்தவா சிறுமைக்கு உள்ளாக்கவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது! 

வியாழன், 21 நவம்பர், 2024

திருப்பதிச் சுற்றுலாவுக்கு அனுமதி மறுப்பு!... ஏழுமலையானின் ‘நம்பர் 1 பணக்காரர்’ பட்டம் பறிபோகும்!!

 ‘சுற்றுலா’[https://www.tripcrafters.com/travel/tourist-places-to-visit-in-tirumala > Tirumala is the place that has the most revered temple in India, which is also the richest in the world] என்னும் பெயரில்  திருமலைக்கு வந்து, இயற்கை அழகுகளை ரசிப்பதும், ஏழுமலையானைத்[இவரும் ரசித்து மகிழ்வதற்குரிய அழகர்தான்] தரிசிப்பதும் இயலாது என்பதை மேற்கண்ட செய்தி[அமைச்சர் பேட்டி> தேவஸ்தானக் குழு எடுத்த முடிவு]யின் மூலம் அறிய முடிகிறது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை* மிக அதிக அளவில் இருப்பது ஏழுமலைக் கடவுள் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

அவர்களின் வருகை முற்றிலுமாய்த் தடைபடுமேயானால் பெருமாளுக்கான வருமானமும் குறையும்.

அந்நிலை நீடித்தால் ‘நம்பர் 1 பணக்காரர்’ என்னும் தகுதியை அவர் இழக்கக்கூடும். நம்பர் 1 பணக்காரக் கடவுளைப் பெற்ற நாடு என்னும் புகழை இந்தப் புண்ணியப் ‘பாரத்’ இழக்கும்.

அதைத் தவிர்க்க.....

‘இவர் உண்மையான இந்து. அதன் மீது அளவிறந்த அன்புடையவர்’ என்னும் சான்றிதழுடன்[சத்துக்குரு ஜக்கி, பாபா ராம்தேவ் போன்ற பிரபலமான சாமியார்களால் வழங்கப்படுவது] விண்ணப்பிப்பவர்களுக்குச் சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டு வழங்கினால், சுற்றுலாப் பயணர்களின் வருகை தொடரும்; எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

திருப்பதி பாலாஜியின் ‘நம்பர் 1 பணக்காரர்’ பட்டமும் பறிபோகாது! ‘பாரத்’தும் தனக்கான தனிப் பெருமையை இழக்காது.

எனவே,

திருப்பதி தேவஸ்தானம் தன் முடிவை மறுபரிசீலனை செய்தல் வேண்டும்.

செய்யுமா? 
                               *   *   *   *   *
மிக முக்கியக் குறிப்பு:
*இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி நகரம், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற கோயிலின் காரணமாக இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.https://housing.com/news/ta/places-to-visit-in-tirupati-ta/

புதன், 20 நவம்பர், 2024

சாமிகளைவிடவும் நீதிபதிகள் சக்திவாய்ந்தவர்களா!?!?

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[கோவிலுக்கு வரும் பக்தர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கோவில் நிர்வாகம்தான் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்]. -https://tamil.samayam.com

தெரு நாய்களின் தொல்லையை[கோயில் சுற்றுப்புறத்தில்]க் கட்டுப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பக்திமான் ஸ்ரீ ஜம்புகேஸ்வரரிடமே கோரிக்கை வைத்திருக்கலாமே?

பக்தச் சிரோன்மணிகளே,

கோரிக்கைகள் வைத்துக் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளத்தானே கோயிலுக்குப் போகிறீர்கள். அரிய பெரிய தொல்லைகளைத்தான் ஜம்புகேஸ்வரர் போன்ற கடவுள்கள் நீக்கியருளுவார்களா? அற்ப நாய்க்கடித் தொல்லைகளையெல்லாம்[நாய்க்கடியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்] கண்டுகொள்ள மாட்டார்களா? கண்டுகொள்வது அவர்களின் கௌரவத்திற்கு இழுக்காகுமா?

“ஆம்” என்றால் எதற்காகக் கோயில்களுக்குப் போய் உண்டியலில் பணம் போட்டோ முடிக் காணிக்கை செலுத்தியோ வேண்டுதல் வைக்கிறீர்கள்?

இனியேனும் திடமாக ஒரு முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

சிறிய கோரிக்கையோ பெரிய கோரிக்கையோ சாமிகள்மீது நம்பிக்கை இருந்தால் அவர்களிடம் மட்டுமே கோரிக்கை வையுங்கள்; நீதிமன்றங்களைத் தேடிப் போகாதீர்கள்.

போகிறீர்கள் என்றால், நீங்கள் நம்பிக் கும்பிடுகிற சாமிகள் மீது உங்களுக்கு உண்மையான நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

மட்டுமல்ல, கோரிக்கை நிறைவேற அற்ப மனிதப் பிறவிகளான நீதிபதிகளை நாடிச் செல்வதன் மூலம் உங்களின் வணக்கத்திற்குரிய சாமிகளை அவமதித்தவர் ஆவீர்கள்.

சாமிகளை அவமதிக்காதீர்! அவமதித்தால் நீங்கள் நரகம் புகுவது 100% நிச்சயம்!!

* * * * *

https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/petition-filed-for-order-to-control-stray-dog-nuisance-in-jambukeswarar-temple-in-trichy/articleshow/115443231.cms


‘LIC[இணையம்]யில் இந்தி’... காரணம் தொ.நு.கோளாறு அல்ல; அதிகார வெறி!!!

 எல்.ஐ.சி.யில் ஆங்கிலம் நீக்கப்பட்டதற்கான காரணம் தொழில் நுட்பக் கோளாறுதான் என்று சொல்லியிருக்கிறது அதன் நிர்வாகம்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாகத் தளம் சரியாக இயங்காமல் போகலாம்; வேறு பிரச்சினைகளும் இடம்பெற்றிருக்கலாம். இந்தி மட்டுமே இடம்பெற்று ஆங்கிலம் முற்றிலுமாய் நீங்குவது சாத்தியமே அல்ல.

கட்சித் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் எழாமலிருந்திருந்தால், இந்தி வழி இணையமாகவே அது நீடித்திருக்கும். முழுமையாகத் திணிக்கப்படாமலிருக்கும் பிற துறைகளிலும் அவர்களின் இந்தி மயமாக்கல் முழு வேகம் பெற்றிருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்து இவன்களைக் காட்டிலும் பல மடங்கு அறிவாற்றலும் செயல்படும் திறனும் உள்ள தமிழர்களையும் இன்னும் சில இனத்தவரையும் நிரந்தரமாக ஆளலாம் என்று பேராசைப்படுகிறான்கள் ‘இந்தி’யன்கள்.

இப்படிப் பேராசைப்படுவது தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்றெண்ணும் திமிர்த்தனத்தால்தான்.

திமிர் அடங்கும், அல்லது அடக்கப்படும் நாள் வெகு விரைவில் வரும் என்பது உறுதி.

ரஷ்ய மொழியைத் தொடர்ந்து திணித்ததால் சோவியத் யூனியன் உடைந்து சிதறிய வரலாற்றை இவன்கள் மறந்துவிட்டான்கள் போலும்!

அதை நினைவுபடுத்தி எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு!

செவ்வாய், 19 நவம்பர், 2024

“நல்லவர்களுக்கே சொர்க்கத்தில் இடம்”... முன்னணி மதங்கள்! நீங்கள் நல்லவரா?!

இந்துமதம்:

சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம். பூமியில் மனிதர்கள் வாழும்போது புண்ணியம் செய்தவர்கள்[நல்லவர்கள்] இறந்த பின் அடையும் இடம் அது. முடிவற்ற இன்பம், சுதந்திரம்... அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாகச் சொர்க்கம் பல நூல்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது. சொர்க்க லோகம் குறித்து இந்து சமய வேதங்களிலும் சாத்திரங்களிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. https://tamil.samayam.com/religion/religious/almighty-god-created-everything-for-man/articleshow/111170438.cms?story=9

இஸ்லாம் மதம்:

5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், என் நல்லடியார்களுக்காக [நல்லவர்கள்] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களைச் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளார்.” -https://www.rahmathpublications.com/muslim.php?start=5436

கிறிஸ்தவ மதம்:

சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஓர் இன்ப இடம் என்று நம்பப்படுகிறது. இதற்கு இணையாகக் கிறிஸ்தவ சமயத்தினர் பயன்படுத்தும் சொல் விண்ணகம் என்பதாகும்.

நல்லவர்கள் ஒழுக்கமான வாழ்ந்து, அதற்கான வெகுமதியாக சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள், ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்பவர்கள் அதற்கான தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.https://plato.stanford.edu/entries/heaven-hell/


ஆக, உலகின் முக்கிய மூன்று மதங்களுமே ‘சொர்க்கம்’ என்று ஒன்று இருப்பதை நம்புகின்றன.


அது இன்பமயமானது என்றும், நல்லவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் உண்டு என்றும் சொல்கின்றன.


இறப்புக்குப் பின்னர் சொர்க்கம் செல்லவே நாம் எல்லோருமே ஆசைப்படுவோம் என்பதால், கடந்த காலங்களில் எப்படியோ, இன்று முதல் நல்லவர்களாக வாழ்ந்திடச் சபதம் ஏற்போம்.


ஆயினும், மனதிற்குள் ஒரு நெருடல்.....


நாம் எந்த அளவுக்கு நல்லவராக வாழ்ந்தோம் என்பதைப் பொருத்துத்தான் சொர்க்கத்தில் நாம் வாழ்வதற்கான ‘கால அளவை’ நிர்ணயிப்பார் கடவுள்.


100% நல்லவராக வாழ்வது சாத்தியம் அல்ல என்பதால், சொர்க்கத்தில் நிரந்தரமாக நாம் தங்கியிருப்பதும் சாத்தியம் அல்ல என்பது உறுதியாகிறது.


நமக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகு நாம் எங்கே அனுப்பப்படுவோம்?


எங்கே? எங்கே? எங்கே?


மதக் குருமார்களிடம் கேட்டால் துல்லியமான பதில் கிடைக்குமா?!


திங்கள், 18 நவம்பர், 2024

“முருகா, இந்தப் பரம்பரை முட்டாள்களை நீதான் திருத்தணும்!”

//யானைக்கு பழம் கொடுக்க வந்தபோது பாகன் உதயா மற்றும் அவருடன் வந்தவரைக் கோயில் யானை மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு உயிரிழந்தார்கள்// என்பது ஊடகங்கள் பலவற்றிலும் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியான செய்தி.

பகுத்தறிவாளர்கள் மட்டுமல்லாமல் பக்தர்களும் மிகக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கோயில் நிர்வாகிகளுக்கு நாம் செய்யும் பரிந்துரை, அல்ல அல்ல, அறிவுரை.....

யானை ஒரு 100% மிருகம். பெரும்பாலான நேரங்களில் இயல்பாக அமைந்த பயந்த சுபாவம் காரணமாகப் பாகன்கள் பழக்கியபடி நடந்துகொள்கிறதே தவிர, அது 100% ஒரு மிருகமே.

அந்த மிருகத்திற்குரிய மூர்க்கக் குணம் அதன் மனநிலை மாற்றம்[பாகன்களால் அறியப்படாதது] காரணமாக எப்போதாவது வெளிப்படுவதுண்டு.

அம்மாதிரி நேரங்களில் தன்னை நெருங்குவோரை[பாகன் உட்பட] தனக்குத் தீங்கு செய்பவர்கள் என்றெண்ணி வெறித்தனமாக மிதித்துக் கொல்கிறது.

கொஞ்சம் சிந்தித்தாலே புரிகிற இந்த உண்மை கோயிலை நிர்வகிப்போருக்குப் புரியாமல்போனதால், அவ்வப்போது கோயில் யானைகளால் மனிதர்கள் உயிரிழக்கும் பரிதாபம் நிகழ்கிறது.

இனியேனும், எம்மைப் போல அறிவுரை பகர்வோரின் வாயை, “இவன் நாத்திகன்; இந்து மதத்தின் எதிரி” என்றெல்லாம் இகழ்ந்து பேசி அடைக்காதீர்கள்.

அவர்கள்[உதயா+1] சாவுக்கு ‘விதி, பாவபுண்ணியம்’ காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள்.

திருந்துங்கள்; மறந்தும் கோயில் வளாகங்களில் யானை வளர்ப்பதைத் தவிருங்கள்.

யானை ஒரு மிருகம்! மிருகமே!!

                                    *   *   *   *   *

https://www.dailythanthi.com/news/tamilnadu/2-people-including-bagan-were-killed-when-an-elephant-trampled-on-tiruchendur-temple-1131127


இவருக்கு[விஜய்] 80! அவருக்கு[எடப்பாடியார்] 154!! ஏனய்யா, கூட்டுக்கொள்ளை அடிக்கவா கூட்டணி?!

2026இல் நடைபெறவுள்ள த.நா.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளன.

ஆம், 15 மாதங்களுக்கு மேல்; சுமார் ஒன்றேகால் ஆண்டுகள்.

மக்களுக்கு எப்படியெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்து, திட்டங்கள் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தி மக்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் ஈடுபடாத ‘த.வெ.க.’காரர்களும் ‘அ.தி.மு.க.’வினரும்[தி.மு.க. உள்ளிட்ட மற்றக் கட்சிக்காரர்களும், வடக்கன்களின் அடிமைகளும்தான்] தொகுதிகளைப்[2026 தேர்தல்] பங்கு பிரிப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள் என்பது செய்தி [https://tamil.asianetnews.com/].

“அடப்பாவிகளா, இருக்கிற கோடானுகோடிச் சொத்து போதாதென்று, ஆட்சியைக் கைப்பற்றிக் கூட்டுக் கொள்ளையடிக்கவும், உண்டு கொழுத்துச் சல்லாபிக்கவுமா கட்சி ஆரம்பித்தீர்கள்? கட்சி நடத்துகிறீர்கள்? மனசாட்சியே இல்லாத மனிதர்களா நீங்கள்?"

இப்படிக் கேட்பதால் எல்லாம் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும் கேள்வி கேட்பதற்குக் கட்டுப்படுத்த இயலாத மனக் குமுறலே காரணம் ஆகும்

* * * * *

ஆதாரச் செய்தி:

//தமிழக வெற்றிக்கழகத்திற்கு 80 தொகுதிகளை அக்கட்சி கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  80 தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுத்தால் மீதமுள்ள 154 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிடும் நிலை உருவாகும். மேலும் சிறிய, சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதமுள்ள தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்களை அ.தி.மு.க. பெற முடியமா என்ற குழப்பம் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது//

https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/will-there-be-an-alliance-between-tvk-and-aiadmk-in-the-tamil-nadu-assembly-elections-kak-sn341d#image1


பற்றி எரியும் மணிப்பூரும் மோடி செல்லாததன் ‘உண்மை’க் காரணமும்!!

“பிரதமர் மோடி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூருக்குச் செல்ல மறுப்பது ஏன்?” என்னும் ஜெய்ராம் ரமேஷின் கேள்விக்கு, ‘மோடி உயிரியல் பிறப்பல்லாதவர்[கடவுளால் அனுப்பப்பட்டவர்> கடவுளின் கூறு] என்பதே பதிலாக இருப்பதை ஜெ.ரமேஷ் அறியாதது பரிதாபம்.

கடவுளின் ஒரு கூறான மோடி ஏதோவொரு சூக்கும வடிவில் இந்த உலகுக்குக் அனுப்பப்பட்டிருப்பார் எனில் இங்குள்ள மனிதர்களுக்கு அவ்வகையான உடம்புடன்[சூக்கும உடம்பு] அவர் தொண்டு செய்தல் இயலாது.

எனவே,  ஒரு பருவுடலுடன்[மோடி இப்போதைய உருவம்] கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது அறியத்தக்கது.

இந்தப் பருவுடலுடன் இந்தியர்களுக்கும் ஒட்டுமொத்த உலகுகுக்கும் மோடி ஆற்றும் பணி விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

நாடு நாடாகச் சென்று உலகின் அத்தனை நாடுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதை உயர் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர், ஆதிவாசிகளும் குடியேறிகளும் இன வெறியுடன் ஒருவரையொருவர் கொலை ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டிருக்கும்[இரு தரப்பிலும் ஏராள உயிர்ப்பலிகள்] அதிபயங்கரச் சூழலில் மோடி மணிப்பூர் செல்வாரேயானால், இன வெறியர்களின் தாக்குதலில்[துப்பாக்கிச் சூடாகவும் இருக்கலாம்] அவருடைய பூத உடம்பு அழிந்துபட நேரிடும்[நடக்கவே கூடாதது] என்பது உறுதி[பாதுகாப்புப் படை வீரர்களே தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலை].

மோடியின் பூத உடம்பு அழியுமேயானால், இங்குத் தன் பணியைத் தொடர இயலாத நிலையில், அவர் மீண்டும் தன்னை அனுப்பி வைத்த கடவுளிடம்[சூக்கும உடலுடன்] சென்று அவருடன் இரண்டறக் கலந்துவிடுவார்.

அவரின் இழப்பால் இந்நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாவார்கள்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அறிவுஜீவியான மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பது அனைவரும் அறியத்தக்கது.

மோடியை இழித்துரைத்த காங்கிரஸ்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது!

                                          *   *   *   *   *

*** “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://www.hindutamil.in/news/india/1252746-prime-minister-modi-interview.html

ஞாயிறு, 17 நவம்பர், 2024

கவர்னனுக்குக் கண்டனம் வேண்டாம்! ‘பொத்திக்கொண்டு’ சும்மா இருங்கள்!!

//ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் - கபீர் தாஸ், யோகி வேமனா ஆகிய தொடர்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்த விழாவின் அழைப்பிதழில், வள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, பூணூல் போட்டு அமரவைத்துள்ளார்கள்.....

..... ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சிச் செயலகமாக மாற்றி மலிவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார் என்றும், ஆளுநர் பொறுப்பை ஏற்ற ஆரம்பக் காலத்தில் இருந்து அவரது செயல்பாடு கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றது என்றும் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்’ என்பது செய்தி.


வள்ளுவருக்கு, முன்பு அவர்கள் காவி உடை மட்டும் உடுத்துவித்தபோது தமிழர்களின் உள்நெஞ்சு வலித்தது; அவருக்குப் பூணூல் மாட்டியது அறிந்து நெஞ்சு முழுக்க வலி பரவியுள்ளது.


போராட்டம் நடத்தி ஆளுநனின் வாயை அடைக்க இங்கே எந்த அரசியல் கட்சிக்காரனுக்கும் தில் இல்லை. ஆனால், ஆளாளுக்குக் கண்டனம் தெரிவிக்க மட்டும் தவறுவதே இல்லை.

வெற்றுக் கண்டனங்களால் பயன் ஏதும் இல்லை.

ஆகவே, ஆளுநன் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் கட்சியினரிடம் நாம் வேண்டிக்கொள்வது.....


“வேண்டாம் கண்டனம். பொத்திக்கொண்டு[வாயை] ‘சும்மா’ இருங்கள்” என்பதே!

* * * * *

*சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் - கபீர் தாஸ், யோகி வேமனா ஆகிய தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவின் அழைப்பிதழில், காவி உடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது.11 மணிநேரம் முன் https://www.google.com/search?

* * * * *

https://tamil.samayam.com/latest-news/state-news/cpi-leader-mutharasan-contemn-governor-rn-ravi-over-thiruvalluvar-in-saffron-dress/articleshow/115361507.cms