ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மரண பயம்!

 ஆறறிவு வாய்த்ததால் மனிதனுக்கு நேர்ந்த தீய விளைவுகளுள் தலையாயது
மரண பயம். இது இவனின் தனி உடைமை!

உயிருக்கு ஆபத்து நேரும் சமயங்களில் மட்டுமே பிற உயிர்கள் மரணத்தை உணர்ந்து அஞ்சுகின்றன. மற்ற நேரங்களில் அது பற்றிய சிந்தனை அவற்றிற்கு இல்லை.

மரணம் பற்றிய இடையறாத சிந்தனையால் ஒரு முறை சாவதற்குப் பதிலாகப் பல முறை செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதன் மட்டுமே!

மன நிலை பாதிக்கப் பட்ட மனிதர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

மிகக் குறைந்த அளவில் சிந்திக்கும் அறிவு பெற்ற சாமானியர் முதல் மிகப் பெரிய ஞானிகள் என்று சொல்லப் படுகிறவர்கள் வரை மரணத்தை எண்ணி அஞ்சாதவர் எவரும் இலர்.

“கடவுளைச் சரணடைந்தால்...அவன் கருணைக்கு ஆளானால் ‘மரணமில்லாப் பெரு வாழ்வு’ வாய்க்கும் என்று சொல்லப் படுவதெல்லாம் நிரூபணம் ஆகாத
...சாத்தியப் படாத வெறும் நம்பிக்கைகளே.

அப்படி வாழ்ந்தவர்கள்... வாழ்பவர்கள் எத்தனை பேர்?

எத்தனை நூறு பேர்?

எத்தனை ஆயிரம் பேர்?

லட்சக் கணக்கிலா? கோடிக் கணக்கிலா?

எண்ணிக்கை கடந்தவர்களா?

அவர்களின் உறைவிடம்...வாழ்விடம் எங்கே?

நீண்ட நெடுங்காலமாக.....யுகம் யுகமாக.....காலம் கடந்து கடவுளைப் போலவே[?] அவர்களும் ‘இருந்து’ கொண்டிருக்கிறார்களா?

இவற்றையெல்லாம் அறிந்து சொன்னவர்.....சொன்னவர்கள் யார்?

எவரும் இல்லை...இல்லை...இல்லை...இல்லவே இல்லை.

பகைமை, வறுமை, நோய்மை...என்று எதை எதையோ நினைந்து அஞ்சுவது மனித இயல்பு.

எனினும், எந்த வகையான அச்சத்திலிருந்தும் அவனால் விடுபட முடியும்...
மன வலிமையால்...இடைவிடா முயற்சியால்.

ஆனால், மரண பயத்திலிருந்து விடுபடுவது மட்டும் அவனுக்குச் சாத்தியமே இலலாத ஒன்று.

இந்தச் சாவைப் பற்றிய அச்சம்தான் மனிதன் கடவுளை நம்புவதற்கான தலையாய காரணம்.

கடவுளை நம்பியதால் அந்த அச்சத்திலிருந்து அவன் விடுபட்டுவிட்டானா?

இல்லையே!

கடவுளை நம்புகிற...பிறரையும் நம்பும்படி வற்புறுத்துகிற ’அவதாரங்கள்’ இந்தச் சாவைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாவதில்லையா?

“ஆம்” என்றால், எள்ளளவும் மரண பயத்திற்கு ஆளாகாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறே மரணத்தைத் தழுவியவர்கள் எத்தனை பேர்?

“அவர் அருட்பெரும் ஜோதியில் கலந்தார்!”...”இவர் செத்துப் பிழைத்தார்!”... “இவர் பூத உடலோடு சொர்க்கத்தில் புகுந்தார்!”...என்பன போன்ற கட்டுக் கதைகள் வேண்டாம்.

’உண்மை அறியும்’ நடு நிலை நெஞ்சம் நம் அனைவருக்கும் தேவை.

கடவுளின் பெருமைகளை...அவதாரங்களின் மகிமைகளை வாய் கிழியப் பேசிக்
கொண்டிருப்பது வெட்டி வேலை.

நம்மை நிரந்தரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘மரணம்’ பற்றி ஆராய்ந்து
“உண்மை’களைக் கண்டறிந்து, மரண பயத்தைப் போக்க...அல்லது...குறைக்க
முயல்வது அறிவுடைமை...இன்றியமையாத் தேவையும்கூட.

இந்த அச்சத்தைப் போக்க ‘என்றும் இருப்பவர்’ ஆன கடவுளாலும் முடியாது.
ஏனென்றால்.............................

“நமக்கும் ஒரு நாள் மரணம் சம்பவிக்குமோ?” என்ற அச்சம் அவருக்கும் இருக்கக் கூடும்!

எனவே, நமக்கிருக்கும் ஆறாவது அறிவை நம்புவதே அறிவுடைமை.

அந்த அறிவின் துணையுடன் மரணம் பற்றி ஆராய்வதும் , அது பற்றிய அச்சத்தைப் போக்க, அல்லது, குறைக்க முயல்வதும் மனிதருள் சிந்திக்கத் தெரிந்தவர்களின் கடமை.

******************************************************************************************************************