எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

முக்தி தரும் ஜக்கி வாசுதேவின் காணொலிப் படம்!!!

“தில்லை நடராசனைப் பார்த்தாலே முக்தி கிடைக்கும். திருவாரூரில் பிறந்தாலே முக்தி. காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருவண்ணாமலையைச் சுற்றிவந்தாலே முக்தி[வீடு பேறு, சொர்க்கம்>இவையெல்லாம் எங்கு உள்ளன, எப்படிக் காட்சியளிக்கும் என்றெல்லாம் கேள்வி கேட்காமல் நம்புங்கள். கேட்டால் நரகம் சேர்ந்து அண்டசராசரம் உள்ளளவும் அளவில்லாத துன்பங்களை அனுபவிப்பீர்கள்” என்பார்கள்.

ஏழு மாதக் காலம் அயராது உழைத்து, அமெரிக்காவில் ஒரு யோகா மையத்தை நிறுவி முடித்து நம் ஊர் திரும்பிய ஆதி ஆண்டவர் ஜக்கி வாசுதேவைக் கோவை சென்று தரிசித்து[லட்சக்கணக்கான பக்திமான்களில் ஒருவனாக]ப் புளகாங்கிதம் எய்தியவாறு இருந்த நிலையில்.....

மேற்கண்டவாறு முக்தி அடைதல் குறித்து அருகிருந்தோர் பலரும் செவிமடுத்துப் பயனுறும் வகையில் சொல்லிக்கொண்டிருந்த ஒரு ஜக்கிப் பக்தர், “லட்சக்கணக்கானோர் குழுமியிருக்கும் நிலையில் பகவானை வெகு தொலைவிலிருந்து[மையம் சென்று அருகிருந்து தரிசிக்க லட்சங்கள் கொடுத்து அனுமதிச் சீட்டுப் பெற வேண்டும்] ஆசை தீரத் தரிசிக்கும் பேறு வாய்க்காதவர்கள், அந்த ஆண்டவனின் புகைப் படத்தைத் தரிசித்தாலே முக்தி[இது குறித்துப் பகவான் பதிவுகள் பல எழுதியிருக்கிறார்] கிடைக்கும்” என்று திருவாய் மலர்ந்தருளியது என் வயிற்றில் கோப்பை கோப்பையாக அமுதம் வார்த்தது போலிருந்தது.

பேரானந்தத்தில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்த நான், “தொலைதூரத்திலிருந்து பார்க்கும்போது, மேலங்கி, துப்பட்டா, தலைப்பாகை ஆகியவை ஒத்த நிறத்திலிருப்பது[மேட்சாக] அவருடைய தோற்றத்தை மிகவும் கவர்ச்சிகரமாகக் காட்டுவதை அறிய முடிந்தது. நடு நடுவே முடிச்சுகளுடன்[?] நீண்ட பெரிய மாலையை ஆண்டவர் கழுத்தில் அணிகிறாரே அது எதற்காக?” என்று அந்த அருளுரையாளரிடம் கேட்டேன்.

சற்றே யோசித்த அவர், “முக்கியமான வேலை இருக்கு” என்றவாரே அங்கிருந்து நழுவினார்.

ஜக்கி தேவனின் படத்தை ஒரு முறை அல்ல, மிகப் பல முறைகள் பார்த்து மெய் சிலிர்த்து நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். ஆயினும், அவர் எதற்காக அந்த அபூர்வ ரக மாலையை அணிகிறார் என்னும் கேள்விக்கு இன்றளவும் என்னால் விளக்கம் பெற இயலவில்லை.

இது ஒரு தீராத கவலையாக என் உள்நெஞ்சை உறுத்தினாலும், நான் பார்த்துப் பார்த்துப் பார்த்து வெள்ளியங்கிரிக் கடவுளின் புகைப்படத்தைப் பன்முறை வணங்கியதால் கிடைக்கவுள்ள[இறப்புக்குப் பின்] முக்தியை நினைத்தால், கவலை காணாமல்போகிறது!

“சுதந்திரம் ‘இப்போது’ வேண்டாம்” என்று அப்போது பெரியார் சொன்னது சரியா???

//ஈவெரா அவர்கள் பிரிட்டிஷ்காரனிடம் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டாம் என மண்டியிட்டவர்[கேட்டுக்கொண்டார் என்பதே சரி]. அப்படியும் இந்தியா சுதந்திரம் பெறுவதைத் தடுக்க முடியாததால் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளைத் துக்கத் தினமாக அனுசரித்து கருப்புக் கொடி ஏற்றியவர்.

கட்சியிக்குள்ளேயே பலரும் ஏற்க மறுத்த நிலையில், அவர் விடாப்படியாக, "ஆங்கிலேயர் ஆட்சியில் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே இருப்பவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அவர்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளின்படி மக்களைப் பிரிப்பார்கள். எனவே இந்த விடுதலையைக் கருப்பு தினமாகக் கொண்டாடுங்கள்" என்றார்.

தலைமைப் பதவிகளைக் கைப்பற்றியுள்ள தீய பிராமணர்களிடம் ஆங்கிலேயர்கள் ஆட்சியை ஒப்படைப்பதைப் பெரியார் விரும்பவில்லை. தீய வேத மோசடிக்காரர்களான அவர்கள், சுதந்திர இந்தியாவை அபகரித்து அதை ஒரு வேத பில்லி சூனியமாக மாற்றுவார்கள் என்றும், ஜாதி-வர்ண வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களும் தங்கள் நாட்டின் நிர்வாகத்தின் உரிமை வாரிசுகளாக மாறும் காலம் வரும்வரை சுதந்திரம் வேண்டாம் என்றும் பெரியார் நம்பியது அதற்கான காரணங்கள்// 

மேற்கண்ட கருத்துரைகள் இங்கு மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. 

இன்றளவும் முக்கியப் பதவிகளில்[ஒன்றிய அரசில்] நீடிக்கிறார்கள் பிராமணர்கள் என்பதோடு,  நாட்டை ஆளுகிற ஆதிக்கச் சக்திகளாக இந்து வெறியர்கள்[+இந்தி வெறியர்] இருந்துகொண்டிருப்பதும், பிராமணர்கள் அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்படுகிறார்கள் என்பதும் உண்மையே.

அதன் விளைவுதான் பக்தியின் பெயரால் அளவு கடந்து மக்கள் மீது  மூடநம்பிக்கைளைத் திணித்து[முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு], தங்களுக்கு வாக்களிக்கிற மூடர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் இந்து வெறியர்கள்.

மூடர்கள் மூடர்களாகவே இருந்துகொண்டிருப்பதால், பெரியார் ஆசைப்பட்டபடி, நிர்வாகத்துறையிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் சீரிய சிந்தனையாளர்களால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை.

எனவே, வெறியர் கூட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படும் மாநிலத்தவர் தவிர, ஏனைய மாநில மக்கள் அன்று ஆங்கிலேயருக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள்; இன்று அந்நிலை மாறி ஆதிக்க வெறிகொண்ட இந்து வெறியர்களுக்கு[இந்தி வெறியர்களும்கூட] அடிமைகளாக வாழ்கிறார்கள். இதை உறுதிப்படுத்துகிறது பாஜக அரசின் இந்துத்துவத் திணிப்பும் இந்தித் திணிப்பும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்து&இந்தி வெறியர்களுக்கு எதிரானவர்கள் அன்றும்[ஆங்கிலேயர் ஆட்சியில்] இன்றும் மட்டுமல்ல இனியும் என்றும் அடிமைகளாகவே வாழ்வார்கள்.

ஒரு காலக்கட்டத்தில், இந்த இனத்தவர்களே இங்கு இல்லை என்னும் நிலையும் உருவாகக்கூடும்!