எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 23 மே, 2023

இத்தனைக் குரூரமானவரா கடவுள்!?!?!?

வ்வுலகில் வாழும் உயிரினங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் மனித இனமும் ஒன்று.

மனிதன் தனித்து வாழவில்லை. அணுக்களால் ஆன அவனைச் சூழ்ந்து, கண்ணுக்குத் தெரிபவை தெரியாதவை என எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் இருந்துகொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றன.

அவன் முழு உடல்நலத்துடன் வாழும்போதே அவனைத் தாக்கி அணு அணுவாகச் சிதைத்துத் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும் முயற்சியில் அவை எந்நேரமும் ஈடுபட்டவாறு உள்ளன.

அவனின் உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போதெல்லாம் அவை அவனை முனைந்து தாக்குகின்றன.

சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு ஆகியவற்றின் மூலமாகவும் அவனின் உடம்புக்குள் நுழைந்து உறுப்புகளைச் சிதைத்து உண்டு உயிர்வாழ முயல்கின்றன; முயன்றுகொண்டே இருக்கின்றன.

இதன் விளைவாக அவன் நோய்வாய்ப்படுகிறான். உரிய மருத்துவச் சிகிச்சைகளின் மூலம் நோயிலிருந்து விடுபடுதல் உண்டு. அது இயலாத நிலையில் உயிரிழக்கிறான்[மற்ற உயிர்களுக்கும் இதே கதிதான்].

செத்தொழிந்து, சவம் ஆகிவிட்ட நிலையிலும் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளால் தாக்கப்பட்டு, அவறிற்கு இரையாகி முற்றிலும் இல்லாமல் போகிறான்.

இந்த அவலம் வினாடிதோறும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆதி மனிதன் தோன்றிய நாளிலிருந்து இடைவிடாமல் நிகழ்ந்தவாறு உள்ளது.

ஆக.....

கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால், மனித உடம்புக்கு வெளியேயும் உள்ளேயும் எல்லா நேரமும் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருப்பவை தீநுண் கிருமிகள்தான் என்பதை உணர முடியும்.

மனித உடம்பு அணுக்களால் ஆனது. தீய கிருமிகள் உடபட அனைத்து நுண் உயிர்களும்கூட அணுக்களால் ஆனவையே[?]. 

அந்த அணுக்களில் கருணைக் கடலான கடவுள் இருந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரைப் போற்றும் மகான்களும் அவதாரங்களும் மத வெறி பரப்புவோரும்.

“அங்கே இருந்து கொண்டு அவர் ஆற்றும் பணிதான் என்ன?

வெறுமனே வேடிக்கை பார்க்கிறாரா, மனிதர்களும் பிற உயிர்களும் படும் வேதனையைக் கண்டு கண்டு குதூகலிக்கிறாரா?”

இது கொடியதொரு குரூரப் புத்தி அல்லவா?!